பரீட்சை – 25
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மாற்றான் ஒருவன்
மார்பில்
முகத்தை புதைத்து..
அணைத்து இருப்பதை
பார்த்து
அதிர்ந்து நின்றேன்..
இமைக்கவும் மறந்து..
அதிர்ச்சியில்
இதழ்களை பிளந்து…
நானா இப்படி
நின்று
இருக்கிறேன் என்று..
நயனங்களில் கண்ட
என்
நிழற்பட காட்சியை
நம்பவும் முடியவில்லை
இந்த
நங்கையின் நெஞ்சத்தால்..!!
என்னை போல
இன்னொருத்தி
இருக்கவும் கூடுமோ..
இவ்வையகத்தில்
என்றே
ஐயம் தோன்றியது
இந்த
பேதை உள்ளத்தில்…!!
###############
நானா.. அது..!!
அழகப்பன் நேரே நடந்து அருணிடம் சென்றார்..
புத்தகம் படித்துக் கொண்டிருந்த அவனிடம் சென்று “தம்பி.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்..
அருணோ அவன் காதில் எதுவுமே விழாதது போல் புத்தகத்தை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.. அவன் தோளை தொட்டவர் அவனை லேசாக திருப்பி “தம்பி.. உன் கிட்ட தான் சொல்றேன்.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார் அழகப்பன்..
புருவத்தை சுளித்து புத்தகத்தை மூடியவன் அப்படியே அவரை திரும்பி பார்த்தான்.. ஒற்றை காலை மடித்து அந்த மரத்தின் மேல் சாய்ந்த படி வைத்து அவரை அலட்சியமாய் பார்த்தவன்.. மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு புருவத்தை சுருக்கி “என்ன..?” என்பது போல் அவரை பார்த்துக் கொண்டு நின்றான்..
அழகப்பன் பேச தொடங்கினார்.. “ஆமா.. உன் பேரு என்னப்பா தம்பி?” என்று கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
அப்போது அவன் பார்வை அவர் தலையின் பின்னே செல்ல அங்கு சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த தேஜுவின் மேல் படிந்தது..
அவளை முறைத்துப் பார்த்தவன் ஒருமுறை கண்ணை மூடி திறந்து பெருமூச்சு விட்டு எதுவும் பேசாமல் அப்படியே நின்றிருந்தான்..
“தம்பி.. உன்கிட்ட தான்பா நான் கேட்கிறேன்.. உன் பேர் என்ன?” மறுபடியும் கேட்டார் அழகப்பன்..
“நீங்க யா…ரு..? உங்க கிட்ட எதுக்கு நான் என் பேரை சொல்லணும்? திடீர்னு வந்து என்கிட்ட பேசணும்ங்கறீங்க.. என் பேரை கேக்குறீங்க.. கண்டவங்க கிட்டல்லாம் என் பேரை சொல்லணும்னு எனக்கு அவசியம் கிடையாது..” என்றவன் அவர் பக்கத்தில் இருந்து முகத்தை திருப்பிக் கொண்டான் அலட்சியமாக..
“நீ கேக்கறது நியாயம் தான்.. என் பேர் அழகப்பன்.. அதோ அங்க நிக்கிறாளே தேஜஸ்வினி.. அந்த பொண்ணோட அப்பா”
“ஓ.. அப்படியா..? நைஸ் டு மீட் யு.. நான் வரட்டா?” நக்கலாக சொன்னவன் அங்கிருந்து கிளம்பி போக எத்தனிக்க “ஒரு நிமிஷம் பா.. நான் எதுக்கு உன்கிட்ட பேசணும்னு சொன்னேன்..? என்ன பேசணும் வந்தேன்னு.. நீ கேட்கவே இல்லையே..,” அவனை அப்படி போக விடாமல் தடுத்தார் அவர்..
“நீங்க எதுக்கு வந்து இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. என்னை பொறுத்த வரைக்கும் நான் செஞ்சது ரொம்ப சரி.. நான் அதை பத்தி எதுவுமே பேச விரும்பல.. நீங்க கிளம்பலாம்.. உங்களால கிளம்பமுடியாதுன்னா நான் கிளம்புறேன்..” தோளை குலுக்கியவன் திரும்பி நடையை கட்ட தொடங்கினான்…
“இருப்பா.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் என் பொண்ணை பூவாட்டமா வளர்த்து வந்திருக்கேன்.. இதுவரைக்கும் அவமேல என் கை கூட பட்டதில்லை.. நேத்து உன் அஞ்சு விரலும் அவ கன்னத்தில பதியற மாதிரி அவளை அடிச்சிருக்க.. அவளை அடிச்சது மட்டும் இல்ல.. இன்னொரு பொம்பள புள்ளயையும் நீ அடிச்சிருக்க.. ஒரு ஆம்பள புள்ளையா இருந்துகிட்டு உன் வீரத்தை..” அவர் முடிக்குமுன் “யோவ்… அவ்வளவு தான் உனக்கு மரியாதை” என்றான் அருண் தன் சுட்டு விரலை அவர் முன்னே நீட்டிக்கொண்டு..
“என் பொண்ணு கன்னத்துல உன் அஞ்சு விரல் பதிஞ்சு இருக்கிறதை பார்த்தப்போ உனக்கு இப்ப வர்ற கோபத்தை விட பல மடங்கு கோபம் எனக்கு வந்துச்சு.. ஆனா அதெல்லாம் அடக்கி வச்சிட்டு தான் உன்னோட நான் இப்ப பேசிகிட்டு இருக்கேன்.. ஏன் தெரியுமா..? என் பொண்ணு இந்த காலேஜ்ல இன்னும் மூணு வருஷம் படிக்கணும்.. நீயும் ரெண்டாவது வருஷத்துல இருக்கேன்னு நினைக்கிறேன்.. நீயும் இந்த காலேஜ்ல இன்னும் ரெண்டு வருஷம் படிக்கணும்.. அப்படி இருக்கும்போது நீங்க ஒருத்தரை ஒருத்தர் எத்தனை வாட்டி இந்த காலேஜ்ல பார்க்க வேண்டி இருக்குமோ.. தெரியாது.. அப்படி பார்க்கும் போது நான் உன்னை அடிச்சது ஒவ்வொரு முறையும் என் பொண்ணை பார்க்கும்போது உனக்கு ஞாபகம் வரக்கூடாதுன்னு நான் நினைச்சேன்.. ஆனா அதுக்காக உன்னை அப்படியே விடவும் எனக்கு மனசு இல்ல.. அதான் நீ செஞ்ச தப்பு எனக்கு எவ்வளவு கோபத்தை கொடுத்திருக்குன்னு உனக்கு புரிய வச்சுட்டு போலாம்னு வந்தேன்..” பொறுமையாக சொல்லி முடித்தார் அவர்..
“நான் என்ன தப்பு செஞ்சேன்? ஏன்யா.. உன் பொண்ணுக்கு என் பேரே தெரியாது.. பேர் தெரியாத ஒருத்தன் கிட்ட வந்து ஐ லவ் யூ ன்னு சொன்னா வேற என்ன பண்ணுவாங்க.. அதனாலதான் அடிச்சேன் நீ யாருடி எனக்கு ஐ லவ் யூ சொல்றதுக்குன்னு.. இதுல என் தப்பு என்ன இருக்கு? முதல்ல போயி யார் எது சொன்னாலும் அப்படியே எதிர்த்து கேள்வி கேட்காம செய்யற உன் பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணு.. இங்க நின்னுட்டு எனக்கு அட்வைஸ் பண்ணி நேரத்தை வீணாக்காத..” எரிச்சலோடு பேசினான் அருண்..
அவனை பார்த்து புன்னகைத்த அழகப்பன் “அவ செஞ்சது தப்புதான்.. உன்னோட இப்ப எப்படி பேசிட்டு இருக்கேனோ அதே மாதிரி நேத்து ராத்திரி அரை மணி நேரம் அவகிட்டயும் பேசினேன்.. அவ செஞ்சது தப்புன்னு அவ ஒத்துக்கிட்டு அதுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்றதுக்கு ரெடியா இருக்கா.. ஒரு நிமிஷம்..” என்றவர் தேஜுவை தன் அருகில் வருமாறு அழைத்தார்.. அவளும் அருணை பார்த்து பயந்தபடி தயங்கி தயங்கி அவர் அருகில் வந்து நின்றாள்..
“கேளும்மா தேஜூ..” என்று அவர் சொல்ல “சார்.. உங்க பேர் கூட எனக்கு தெரியாது.. ஆனாலும் உங்க கிட்ட வந்து யாரோ சொன்னாங்கன்னு ப்ரொபோஸ் பண்ணது ரொம்ப தப்பு தான்.. ஐ அம் வெரி சாரி.. என்னை மன்னிச்சிடுங்க..” என்றாள் அருணை பார்த்தபடி.. அதே சமயம் அப்படி கேட்டு முடித்த பின் அவன் எவ்வாறு கோபப்படுவானோ என்று கொஞ்சம் மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை..
அவள் பார்வையை பார்த்தவன் “இட்ஸ் ஓகே.. மறுபடியும் இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துக்கோ..” என்று சொல்லிவிட்டு “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.. உங்க பொண்ணை கூப்பிட்டு சாரி சொல்ல வச்சிருக்கீங்க.. நல்ல விஷயம் தான்.. அப்படியே மறுபடியும் இப்படி எதுவும் அவளை பண்ண வேணாம்னு சொல்லி அட்வைஸ் பண்ணி விடுங்க..” என்று அவன் சொல்ல “அவ பண்ண தப்புக்கு அவ சாரி சொல்லிட்டா.. நீ பண்ண தப்புக்கு நீ சாரி சொல்லவே இல்லையே..” என்றார் அழகப்பன்..
“என்ன.. நான் சாரி கேட்கணுமா? எதுக்கு?” துணுக்குற்றான் அவன்..
“உனக்கு எவ்வளவு தான் கோவம் வந்தாலும் அவளை திட்டி கூட நீ சொல்லி இருக்கலாம்.. ஆனா ஒருத்தரை அடிக்கிறது ரொம்ப தப்பு.. அதுவும் பொம்பள பொண்ணை அடிக்கிறது ரொம்ப தப்பு.. அவங்க திருப்பி அடிக்கலைங்கறதுக்காக நீ செஞ்சது சரியாயிடாது.. அவ நினைச்சு இருந்தா அந்த நேரத்திலேயே உன்னை திருப்பி அடிச்சிருக்கலாம்.. அது உனக்கு எவ்வளவு அவமானமாகி இருக்கும்ன்னு யோசிச்சியா? ஆனா நான் என் பொண்ணை அப்படி வளர்க்கல.. அவ யாரையுமே நோகடிக்க மாட்டா.. அவளால யாரையும் நோகடிக்கவும் முடியாது.. அதனாலதான் அந்த இன்னொரு பொண்ணு சொன்ன உடனே உன்கிட்ட வந்து அவ சொன்னதை அப்படியே சொல்லிட்டா.. இப்போ அவ பண்ணது உன் மனசை நோகடிச்சி இருக்குன்னு தெரிஞ்சு அதுக்காகவும் சாரி கேட்டுட்டா.. இப்போ நீ அவளை அடிச்சு நோகடிச்ச இல்ல..? அதுக்கு அவ கிட்ட மன்னிப்பு கேளு..” என்றார் அழகப்பன் தீர்க்கமாய் அவனை பார்த்துக் கொண்டே..
இதழோரம் வளைத்து ஒரு சின்ன புன்னகை சிந்திய அருண் அவர் பேசியது சிறிதும் தன்னை பாதிக்கவில்லை என்பது போல் அங்கிருந்து நகர்ந்து இரண்டு அடி முன்னே எடுத்து வைத்தான்..
பிறகு ஏதோ எண்ணியவன் திரும்பாமல் அப்படியே இரண்டு அடி பின்னே வைத்து வந்து தேஜுவின் முகத்தை கூட பார்க்காமல் எதிர்பக்கம் பார்த்தபடியே.. “சாரி.. ஆனா நீயும் இதை ரிப்பீட் பண்ணாத.. நீ இந்த தப்பை மறுபடியும் பண்ணுனா நானும் நான் செஞ்ச தப்பை ரிப்பீட் பண்ண வேண்டி இருக்கும்” என்று சொல்லிவிட்டு வேகமாய் முன்னே நடந்து சென்றுவிட்டான் கல்லூரிக்குள்..
“அப்பா ஏம்பா.. போனா போகுதுன்னு இந்த விஷயத்தை விடுறது தானேப்பா நீங்க.. ஏன்பா இந்த பிரச்சனையை பெரிசாக்கினீங்க?”
தேஜு கவலையோடு கேட்க “இதை அப்படியே விட்டிருந்தா தான்மா பெருசாயிருக்கும்.. இப்போ நீ வந்து சாரி கேட்டதுல அவன் மனசு நிச்சயமா இறங்கி இருக்கும்.. இனிமே உன்னை தொந்தரவு பண்ண மாட்டான்.. சரி.. நான் கிளம்புறேன்ம்மா.. சுமி பாத்துக்கோம்மா தேஜூவை.. நான் கிளம்புறேன்..” என்று சொன்னவர் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி சென்றார்..
################
தேஜுவின் கல்லூரியில் முதல் நாள் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து அப்படியே சொன்ன அழகப்பன் ராமை பார்த்து “மாப்பிள்ளை.. மொதல் நாளே அவன் நல்லவன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. ஏன்னா தேஜூ சாரி சொன்ன உடனே அவன் முதல்ல அலட்சியமா இருக்குற மாதிரி இருந்தாலும் அப்புறம் திரும்பி வந்து சாரி சொல்லிட்டு போனான்.. அவனால தன்னோட ஈகோவை விட்டுட்டு அவ முகத்தை பார்த்து மன்னிப்பு கேட்க முடியல.. அதே சமயம் மன்னிப்பு கேட்காம இருக்கவும் முடியல.. அப்போ அவன் எதோ மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கான்னு எனக்கு தோணிச்சு.. அப்போதைக்கு அவங்களுக்குள்ள இருந்த மனக்கசப்பை சரி பண்ணிட்டோம்னு நினைச்சுக்கிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்..” என்றார்.
ராமுக்கோ அவர் சொல்லியதில் தேஜூ அந்த அருணிடம் சென்று ஐ லவ் யூ என்று சொன்னாள் என்பது மறுபடி மறுபடி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது..
தேஜூ அப்படி மனதார சொல்லவில்லை என்றாலும் அவள் ஏன் அதை பற்றி தன்னிடம் சொல்லவில்லை.. அவள் ஏன் அதை என்னிடம் மறைக்க வேண்டும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு அவசரப்பட்டு தன் மாமனாரை கேள்வியால் துளைக்க வேண்டாம் என்று பொறுமையாக அவர் மேலே சொல்வதை கேட்க ஆர்வத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
##################
அருண் வீட்டில் தேஜு அந்த டைரியின் முதல் பக்கத்தில் தன் படத்தை பார்த்து கண்ணீர் சிந்திக்கொண்டு அப்படியே நின்றிருக்க அதை பார்த்த வைஷு பொறுமை இல்லாமல் “அக்கா.. எவ்வளவு நேரம் முதல் பக்கத்தை பார்த்து நின்னுட்டு இருப்பீங்க? இல்லை.. நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க.. அதை இங்க குடுங்க..” என்று சொல்லி அவள் கையில் இருந்து டைரியை வாங்கினாள்..
அவள் சட்டென கையில் இருந்து டைரியை பறிக்க அருண் முதல் பக்கத்தில் எழுதியிருந்த வார்த்தைகளில் தன்னை தொலைத்திருந்த தேஜூ கைநீட்டி அவளிடமிருந்து அந்த டைரியை திரும்ப வாங்க பார்த்தாள்..
ஆனால் வைஷூ அதற்குள் அடுத்த பக்கத்தை புரட்டி படிக்க ஆரம்பித்திருந்தாள்..
“நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தால் என் அஸ்வினிக்கு என்னை பற்றி புரிந்தது.. அவள் என்னை பார்க்கும் விதமே மாறி இருந்தது..” என்று சத்தமாக படித்தவள் “இது என்ன..? பாதி கதையிலிருந்து படிக்கிற மாதிரி இருக்கு.. நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தால்ன்னு சொல்லி இருக்காரு..
அப்போ முன்னாள் என்ன சம்பவம் நடந்திருக்கும்? டேய் விச்…சுவா.. என்னடா இப்படி நம்மள சஸ்பென்ஸ்ல வைக்குது இந்த டைரி..?” என்றாள் முகத்தில் வண்டி ஏமாற்றத்துடன் வைஷூ..
அதற்குள் விஷ்வா “அப்படின்னா இதுக்கு முன் வருஷ டைரி ஒன்னு இருக்கணும்.. அதுல தான் இவங்க கதை முதல்ல இருந்து வரும்னு நினைக்கிறேன்.. ஆனா இங்க 2013ல் இருந்து தானே டைரி இருக்கு.. அப்போ இதுக்கு முன்னாடி எழுதின டைரி எங்க இருக்கும்?” என்று யோசித்தான் விஷ்வா..
அதற்குள் வைஷு “அய்யய்யோ.. சம்பவம்..சம்பவம்னு மொட்டையா எழுதி இருக்கானே… அந்த டைரியில் என்ன சம்பவம் இருக்குன்னு தெரியலன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடும்.. சரி வா வேகமா அந்த டைரியை தேடலாம்..” அந்த அறையை மறுபடியும் சல்லடை போட்டு தேடத் தொடங்கினார்கள் வைஷ்ணவியும் விஷ்வாவும்..
“நீங்க தேடுற இடத்தில எல்லாம் நான் ஏற்கனவே தேடிட்டேன்.. அங்க எல்லாம் அப்படி எதுவும் டைரில்லாம் இல்ல..” என்றாள் தேஜூ..
“அப்படின்னா மறுபடியும் தேடின அதே இடத்துலயே தேட வேண்டாம்.. நீங்க இந்த ரூம்ல எந்த எந்த இடத்தில பார்க்கலைன்னு சொல்லுங்க.. அந்த இடத்துலல்லாம் நாங்க தேடுறோம்..” என்றான் விஷ்வா..
“டேய்.. இன்னொரு முறை தேடினா என்ன? உன் உடம்பு தேஞ்சிடுமா? சோம்பேறி..!!” என்று வைஷூ சொல்ல “அதில்ல வைஷூம்மா.. அனாவசியமா தேடின இடத்திலேயே தேடி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.. ரொம்ப கம்மியா இருக்குது டைம் நமக்கு” என்றான் விஷ்வா..
“ஆமாண்டா விச்சு.. அதுவும் சரிதான்.. அக்கா நீங்க சொல்லுங்க.. எங்க எங்க இன்னும் நீங்க தேடலை?” என்று கேட்க யோசித்தவள் “இந்த பீரோ பின்னாடி எல்லாம் நான் பார்க்கல.. அதுக்கப்புறம் தலையணைக்கடியில பார்த்தேன்.. ஆனா பெட்டுக்கடியில பார்க்கல.. அங்கெல்லாம் வேணா தேடிப் பாருங்க..” என்றாள்..
விஷ்வா அந்த அலமாரியின் பின் சென்று அங்கு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வைஷு அருண் படுத்திருந்த பக்கத்தை விட்டு இன்னொரு பக்கத்தில் படுக்கையை லேசாக தூக்கி அதன் அடியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்..
அப்போது படுக்கை அடியில் கையை விட்டவள் அங்கிருந்து ஒரு டைரியை எடுத்து “வாவ்..” என்றாள்..
அவள் எதை பார்த்து அப்படி வாயை பிளக்கிறாள் என்று அறிய அவள் அருகில் சென்று பார்த்த தேஜூவும் விஷ்வாவும் அவளுக்கு இணையாக அதிர்ச்சியில் விழிகளை விழித்தனர்..
தானும் அருணும் இறுக்க அணைத்த படி இருக்க அருண் மார்பில் முழுதாய் புதைந்திருந்தாள் தேஜூ.. அந்த டைரியின் அட்டையில் இருந்த படத்தில்..
உள்ளே திறந்து பார்க்கவும்.. ஆகஸ்ட் 11 வரை அந்த டைரியில் இருந்த அத்தனை பக்கங்களும் கிழித்தெடுக்கப்பட்டிருந்தது.. ஆகஸ்ட் 12ம் தேதிக்கான தாளில் ஒரு அழகான கவிதை எழுதி இருந்தது..
எந்திரமாய்
ஏனோதானோ என்று
சென்று கொண்டிருந்த
என் வாழ்வில்..
என்
இனியவளை கண்ட
இந்த நாள் முதலே
இனிக்க
தொடங்கியது என்
இகவாழ்வு..
எனவே
இந்த நாள் முதலாய்
என் இனிய காதலை
இதயம் நிறை காதலோடு
எழுதத் தொடங்குகிறேனடி
என்னவளே..!!
சுற்றும் பூமியது
சொர்க்கலோகமாய் மாறிய
சுந்தர தினம்… இன்று..!!!
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! யூடி போட கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. கோச்சிக்காம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”