அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 26🔥🔥

4.9
(11)

பரீட்சை – 26

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

தனியனாய் இருந்த

எனக்கு

துணையாய் வந்த

சின்ன பூவடா நீ…!!

 

நான் கொண்ட

ஆசைகளை

நிறைவேற்ற

இவ்வுலகில்

நினைவுக்கு

நெருக்கமாய்

யாருமில்லை..

 

நீ கொண்ட

கனவுகளை

நனவாக்க

உன்னுடனே

நிழலாய்

இருப்பேனடா

நாளும்..

 

குறையாத

செல்வமது

நான் கற்ற

கல்வியை

குறைவில்லாமல்

உனக்களித்து

 

வாழ்வில் நீ

வானம் தொட்டு

வளர்ந்து

வையகம் வெல்வதை

காண

வேட்கை

கொண்டேனடா..

 

###########

 

வழித்துணை…!!

 

அருண் எழுதி இருந்த கவிதையைப் படித்த தேஜூ அதிலிருந்த வார்த்தைகளின் கனத்தை எண்ணி வியப்பில் ஆழ்ந்து போயிருந்தாள்..

 

அப்போது வைஷு “அக்கா.. நெஜமா சொல்றேன்கா.. இவரு அச்சு அசல் உங்களை மாதிரியே இருக்கிற வேற ஏதோ பொண்ணை லவ் பண்ணி இருக்கிறார்.. அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சோ தெரியல.. அவளை மாதிரியே இருக்குற உங்கள பார்த்த உடனே தூக்கிட்டு வந்துட்டாரு.. அவ்ளோ லவ் அவங்க மேல..” என்றாள்..

 

“அது எப்படி அவ்ளோ கன்ஃபர்ம்டா சொல்றே அது அக்கா இல்ல.. வேற பொண்ணு தான்னு.. அக்கா மேல அவ்வளவு நம்பிக்கை வந்துடுச்சா உனக்கு?”

 

யோசனையாக விஷ்வா கேட்க “ஐய.. அப்படில்லாம் இல்ல..” வைஷூ சட்டென சொல்ல தேஜு அவளை முறைத்தாள்..

 

“அப்போ நான் அருணை லவ் பண்ணலன்னு பொய் சொல்றேன்னு நினைக்கிறியா?” கோபமாக கேட்டாள் தேஜூ..

 

“இல்ல இல்ல..  அப்படி நான் சொல்ல வரல.. உங்கள நம்பறேன்.. ஆனா நான் இப்படி சொல்றதுக்கு என்ன காரணம்ன்னா இப்படி உருகி உருகி லவ் பண்ண ஒருத்தரை வேணாம்னு சொல்லிட்டு எந்த பொண்ணும் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க மாட்டா.. ஆனா நீங்கதான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி இருக்கீங்க இல்ல..? அப்படின்னா இவர் லவ் பண்ணது உங்கள இல்லன்னு தானே அர்த்தம்?” அடித்து சொன்னாள் வைஷு..

 

“உன் லாஜிக் எல்லாம் கரெக்டா தான் இருக்கு..” விஷ்வா சொல்ல இன்னும் தீவிரமாய் இருவரையும் முறைத்தாள் தேஜஸ்வினி..

 

“உங்க ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா எப்படி தெரியுது? யாரு என்னை எவ்வளவு லவ் பண்ணி இருந்தாலும் என் ராம் என்னை லவ் பண்ற அளவுக்கு யாருமே யாரையுமே லவ் பண்ணி இருக்க முடியாது.. அதனால ஒரு வேளை இந்த பொண்ணு நானா இருந்திருந்தாலும் சரி.. இல்லாம போனாலும் சரி.. என் ராமை மட்டும் தான் என் மனசு எப்பவுமே லவ் பண்ணிட்டு இருக்கும்.. ஆனா நீ சொல்ற மாதிரி அந்த பொண்ணு வேற யாரோ தான்.. ஏன்னா இந்த ஜென்மத்துல இதுக்கு முன்னாடி.. இந்த ஆளை பார்த்ததா கூட எனக்கு ஞாபகமே இல்லை ..” உறுதியாக சொன்னாள் தேஜூ…

 

“சரிக்கா வாங்க.. டைரிய பார்த்து என்னதான் நடந்துச்சு இந்த க்யூட் பையன் வாழ்க்கைலன்னு தெரிஞ்சுக்கலாம்..” வைஷூ சொல்ல இந்த முறை விஷ்வா அவளை தீவிரமாய் முறைத்தான்..

 

“டேய் அவரை கியூட்னு சொன்னா உனக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வருது?”

 

“ஒரு குடும்ப பொண்ணை கடத்தி வச்சிருக்கான்.. அவனை போய் க்யூட்னு கொஞ்சிக்கிட்டு இருக்க.. அறிவில்ல உனக்கு?” அருணையும் வைஷூவையும் மாறி மாறி பார்த்து முறைத்த படி கேட்டான் விஷ்வா..

 

“அதான்.. ஏன் கடத்தி இருக்கான்னு தெரிஞ்சுடுச்சில்ல.. நான் எப்பவோ அவனுக்கு விழுந்துட்டேன் டா.. என் பேபி.. என் புஜ்ஜு..”

 

கட்டிலில் படுத்திருந்த அருணை தன் வலது கைவிரல்களை குவித்து அவன் முன்னே ஆட்டி ஆட்டி வாயையும் குவித்து வைஷூ கொஞ்ச அவளை தேஜுவும் விஷ்வாவும் சேர்ந்து எரிப்பது போல் பார்த்தனர்..

 

“ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டே இருக்காதீங்க.. டைரியை படிப்போம்” முதல் பக்கத்தை திருப்பினாள் வைஷூ..

 

##############

 

அருணிண் டைரியில்…

 

அன்று காலை கதிரவன் முளைக்கும் போதே என்னுள் விதவிதமான உணர்வுகளை பரப்பி இருந்தான்.. இன்று ஏதோ என் வாழ்வில் முக்கியமான நிகழ்வு ஒன்று நிகழப் போகிறதென்று எனக்கு தோன்றியது..

 

கண் திறக்கும்போதே மனம் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தது.. இன்றைய நாளை எதிர்கொள்ள ஆவல் மேற்கொண்டு படுக்கையை விட்டு எழுந்த நான் காலை வேலைகளை முடித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு டீ கடைக்கு சென்று காலை சிற்றுண்டி முடித்துவிட்டு என்னுடைய மெக்கானிக் கடைக்கு புறப்பட்டேன்..

 

என் கடையில் கதவு பூட்டி இருந்தது.. அதை பார்த்து “இன்னும் இந்த சின்ன பையன் வரலையா? இவனை காலைல வந்து கதவை திறன்னு எத்தனை முறை சொல்றது..? நான் ஒன்பது மணிக்கு கிளம்பி வந்தா இவன் நிதானமா பத்து மணிக்கு வர்றான்.. கொஞ்சம் 8 மணிக்கு சீக்கிரம் வாடான்னு எவ்வளவு சொன்னாலும் புரியறதில்லை…” அவனை திட்டிக் கொண்டே என் கடையின் கதவை திறந்தேன்..

 

நேற்று வேலை முடித்த வண்டிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து வாசலில் வைத்துவிட்டு இன்று வேலை செய்ய வேண்டிய வண்டிகளை அடுத்து நிறுத்தி அதில் வேலை செய்யப் போன என்னை சின்ன பையனின் குரல் இழுத்தது..

 

“அண்ணா வந்துட்டீங்களா?” அவன் கேட்க “டேய் சின்ன பையா.. உன்னை எத்தனை நாள் சொல்லி இருக்கேன்.. முதல்ல வந்து எட்டு மணிக்கெல்லாம் கதவை திறன்னு.. ஆடி அசைஞ்சிட்டு இவ்வளவு நேரம் கழிச்சு வர்ற?” என்றேன்..

 

“இல்லண்ணா.. இன்னிக்கி பக்கத்து வீட்டு பாட்டி சுட சுட ஆப்பம் செஞ்சு குடுக்குறேன்னு சொல்லுச்சா? அதான் நான் ஒரு ஆசையில..”

 

அவன் நாலா பக்கமும் விழியை உருட்டி விழித்துக் கொண்டே சொல்ல “ஏன்டா ஒரு ஆப்பத்துக்காக கடையை பூட்டி வச்சு ஒரு மணி நேரம் கழிச்சு வரியா நீ..? யாராவது கஸ்டமர் வந்திருந்தாங்கன்னா என்னடா பண்ணுறது..? நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல..? கஸ்டமர்ஸ் சில பேர் ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி  வருவாங்க.. அவங்களை அட்டென்ட் பண்ணுறதுக்கு நீ காலைல சீக்கிரம் வான்னு” என்றேன்..

 

“ஏன் அண்ணா.. ஒரு ஒரு நாள் நீங்க வரக்கூடாதா? எப்ப பாரு நான் தான் வரணுமா காலையில எட்டு மணிக்கு?” என்று கேட்டான் அவன்..

 

“டேய்.. நான் இங்க வேலை முடிச்சுட்டு  நைட் வீட்டுக்கு போறதுக்கே 12.. 12.30.. ஆயிடுது.. உன்னை தான் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு அனுப்பி விடுறேன் இல்ல.. நைட் அவ்ளோ நேரம் உட்கார்ந்து நான் வேலை செய்யறதால தான் வண்டியை எல்லாம் நம்மளால மத்த கடைகளை விட சீக்கிரம் கொடுக்க முடியுது.. நீ என்னடானா சொல்றதை புரிஞ்சுக்காம என்னையே காலையிலே சீக்கிரம் வர சொல்ற..?”

 

நான் கேட்ட கேள்வியில் தலையை சொரிந்து கொண்டு நின்றான்..

 

“சரி சரி.. டென்ஷனாகாதண்ணே.. நாளையிலருந்து கரெக்டா வந்துடுறேன்.. பாட்டிகிட்ட கொஞ்சம் சீக்கிரம் பண்ணி தர சொல்றேன் ஆப்பத்தை..”

 

அவன் சொல்லிவிட்டு போக அவன் இப்போது என் வாழ்வின் ஒரு அங்கமாக ஆகிவிட்டதை எண்ணி நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்..

 

இவன் ஒருவன் தான் என் வாழ்வில் இப்போதைக்கு துணையாய் இருக்கும் ஒரே ஜீவன்.. வேறு யாரையும் மறந்து கூட நான் என் அருகில் சேர்ப்பதில்லை.. ஏனோ இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் சுயநலவாதிகளாகவே இருப்பதாக எனக்குள் தோன்றியது..

 

அந்த எண்ணத்தை என்னால் என் மனதில் இருந்து அழிக்கவே முடியவில்லை..

 

அப்போது ஒரு வண்டியை தள்ளிக்கொண்டு இரண்டு பெண்கள் எங்கள் கடையை நோக்கி வந்தார்கள்.. “வண்டி பஞ்சர் ஆயிடுச்சுடா சின்ன பையா..” என்றாள் வண்டியை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்திய பெண்..

 

“ஏங்க ரெண்டு நாள் முன்னாடிதானே நீங்க  வந்து பஞ்சர் ஒட்டுனீங்க..? இப்ப திரும்பவும் வந்துருக்கீங்க?”

 

சின்ன பையன் கேட்க “அப்போ ஃப்ரண்ட் வீல் பஞ்சர்டா.. இப்போ பேக் வீல்..பஞ்சர் ஆயிடுச்சு..”

 

சின்னப் பையன் கேட்ட கேள்விக்கு அவனை பார்த்து பதில் சொல்லாமல் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த என்னைப் பார்த்தே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்த பெண்..

 

அவள் அப்படி என்னை குறுகுறுவென பார்த்தது என் ஓர விழிகளுக்கு தப்பவில்லை..

 

அதை கவனித்த சின்ன பையனும் “ஓ.. அப்படி போகுதா கதை..? ஏன்கா வண்டிக்கு ரெண்டு வீல் தான இருக்கு.. அடுத்த வாரம் என்ன செய்வீங்க?”

 

சின்ன பையன் கேட்க அவளோ என்னை பார்த்து மெய்மறந்து போயிருந்தவள் “அடுத்த வாரம் பிரேக் ஒயரை கட் பண்ணிடுவேன்” தன்னையும் அறியாமல் பதில் சொன்னாள் அவள்..

 

“என்னது?!” இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தான் சின்ன பையன்.. எனக்கு அந்த பெண்ணின் நடவடிக்கையை நினைத்து கோபம் வந்தாலும் அவள் சொன்ன விஷயத்தை கேட்டு சின்ன பையன் கோவப்படும் அழகை பார்த்து சிரிப்பே வந்தது.. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே என் வேலையை தொடர்ந்தேன்..

 

“அது சரி.. நம்ம கடையில பாதி வியாபாரம் உங்களால தான் நடக்குது..” என்னை பார்த்து சிரித்தபடி சொன்னான் சின்ன பையன்..

 

“ஏன்டா.. எப்ப பாரு நீயே எங்க வண்டிக்கு எல்லாம் பஞ்சர் பார்க்கிறியே.. ஏன் உங்க முதலாளி எங்களோட பேச மாட்டாரா?” என் பக்கம் ஏதோ ஒரு விதமாக பார்வையை வீசியபடி கேட்டாள் அந்த பெண்..

 

“அவர் எந்த பொண்ணோடயும் பேச மாட்டார்.. பக்கா ஜென்டில்மேன்..” என்றான் சின்ன பையன்..

 

“நீ மட்டும் பொம்பளைங்க கிட்ட எல்லாம் பேசுற.. அப்ப நீ ஜென்டில்மேன் இல்லையா?”

 

“நான் ஜென்டில்மேன் இல்லைக்கா நான் ஜென்டில் பாய்..” என்றான் நறுக்கு தெறித்தாற் போல் சின்ன பையன்..

 

அதைக் கேட்ட அந்த இரு பெண்களும் சிரித்தனர்.. “ஆனா இன்னைக்கு அதெல்லாம் முடியாது.. பங்சர் ஒட்டினதுக்கான பணத்தை நான் அவர்கிட்ட தான் கொடுத்துட்டு போவேன்.. அவரையே என்கிட்ட வந்து வாங்கிக்க சொல்லு.. உன்கிட்ட எல்லாம் கொடுக்க மாட்டேன்..”

 

அந்தப் பெண் சொல்ல “அண்ணே.. காதுல விழுந்துச்சா?” சத்தமாய் என் புறம் திரும்பி கேட்டான் சின்ன பையன்..

 

அப்போது அவர்கள் பக்கம் திரும்பிய நான் “டேய்.. பஞ்சர் ஒட்டிட்டியாடா நீ..?” என்று கேட்க “இல்லண்ணே இன்னும் ஒட்டல.. இப்பதான் பாத்துட்டு இருக்கேன்..” என்றான் சின்ன பையன்..

 

“அப்படின்னா எதுவும் பண்ண வேண்டாம்.. அப்படியே வண்டியை அவங்களை எடுத்துட்டு போக சொல்லு.. வேற ஏதாவது கடையில ரிப்பேர் பண்ணிக்க சொல்லு… இனிமே வண்டியில எந்த ரிப்பேர்னாலும் நம்ம கடைக்கு வர வேண்டாம்னு சொல்லிடு..” சொல்லிவிட்டு என் வேலையை தொடர்ந்தேன் நான்..

 

“டேய் டேய்.. சின்ன பையா.. அப்படி எல்லாம் செஞ்சு விடாதடா.. நான் உன்கிட்டயே பணம் கொடுத்துட்டு போறேன்..”

 

சொன்னபடியே அந்த பெண் சின்ன பையன் வேலையை முடித்தவுடன் அவனிடம் பணத்தை கொடுத்து விட்டு என் பக்கம் ஒரு மார்க்கமாக பார்வையை செலுத்திய படி வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்..

 

சின்ன பையன் என்னிடம் வந்து “ஏண்ணே.. ஏன் இப்படி இருக்கீங்க? அவன் அவன் ஒத்தை ஃபிகரு கிடைக்காம அலைஞ்சுக்கிட்டு இருக்கான்.. இந்த ஊர்ல இருக்கிற முக்காவாசி பொண்ணுங்க அழுக்கு சட்டை போட்டிருக்கிற  உங்களை பாத்து ஜொள்ளு விட்டுட்டு திரியுறாங்க.. ஒன்னுத்தயாவது திரும்பி பார்க்கிறயா நீ..? எவ்வளோ அழகா இருக்காங்க தெரியுமா அவங்கள்லாம்.. யாரையாவது ஒருத்தியை அண்ணியா பிடிச்சு போட வேண்டியதுதானே?”

 

அவன் கேட்ட கேள்வியில் நான் வேலையை நிறுத்திவிட்டு அவனை திரும்பி பார்த்தேன்..

 

“இதை பாரு.. என்னோட எந்த பொண்ணாலேயும் இருக்க முடியாது.. எனக்கு எந்த பொண்ணும் செட் ஆகாது.. எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ தான்.. ஆமா.. நீ எதுக்கு தனி வீட்ல இருக்க? என்னோட என் வீட்லையே வந்து தங்கி இரு..”  என்றேன் நான்…

 

“ஐயையோ.. அது மட்டும் கேட்காதீங்கண்ணே.. அது மட்டும் வேண்டாம்.. இங்க தான் நாள் பூரா என்னை இந்த வேலையை செய்.. அந்த வேலையை செய்.. அங்க என்ன பேச்சுன்னு மிரட்டிக்கிட்டு இருக்கீங்க.. வீட்ல எல்லாம் எனக்கு இது வேலைக்காகாதுண்ணே.. அங்க நான் நிம்மதியா ஜாலியா இருப்பேன்.. அது மட்டும் இல்ல.. நான் இப்ப இருக்கிற இடத்துல பக்கத்து வீட்ல பத்தாவது படிக்கற பொண்ணு ஒன்னு ஊரிலிருந்து வந்திருக்குது.. இப்பதான் குடுத்தனம் வந்து இருக்காங்கண்ணே..” கண்களில் ஆர்வம் மின்ன சொன்னான் பதினைந்து வயது நிரம்பிய சின்னப் பையன்..

 

அதைக் கேட்டு சிரித்த நான் “அதுக்குள்ளே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியாடா நீ?” என்று கேட்க “அந்தந்த வயசுல அதெல்லாம் பண்ணிடணும்ணே.. இல்லனா வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது..” என்று அவன் சொல்ல “சரியான வாலுடா நீ.. ” என்று சொல்லி அவன் தலையை தட்டிவிட்டு வேலையை தொடர்ந்தேன்..

 

“சரிடா.. இந்த ஒரு வண்டி ரெடி பண்ணிட்டேன்.. எனக்கு காலேஜ்க்கு டைம் ஆகுது.. நான் கிளம்பறேன்.. நீ கடையை பார்த்துக்கோ.. அப்புறம் அந்த 10த் பப்ளிக் எக்ஸாம் எழுத அப்ளை பண்ண அந்த பேக்ல ஒரு ஃபார்ம் வாங்கி வச்சிருக்கேன்.. அதை ஃபில் பண்ணி கையெழுத்து போட்டு கொடுத்துடுடா.. இன்னைக்கு சாயங்காலம் எடுத்துட்டு போய் ஃபீஸ் கட்டி அப்ளை பண்ணிடறேன்.. இந்த வருஷம் நீ எஸ்எஸ்எல்சி எக்ஸாம் எழுதற..” என்றேன்..

 

அவனிடம் அப்படி சொல்லிவிட்டு அழுக்கான உடையை களைந்து விட்டு கல்லூரிக்கு செல்லும் உடையை அணிந்து கொண்டு புறப்பட்டேன்..

 

அந்த விண்ணப்பத் தாளை பூர்த்தி செய்து கொண்டு வந்து கொடுத்த சின்ன பையன் “அண்ணே எனக்கு இதுவரைக்கும் புக் எல்லாம் வாங்கி தந்து ஒன்பதாவது வரைக்கும் படிக்க சொல்லிக் கொடுத்தீங்க.. இப்போ என்னை பத்தாவது படிக்க வைக்கிறீங்க.. தினமும் சாயந்திரம் நாலிலிருந்து ஆறு எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு நைட்டு 12 மணி வரைக்கும் வேலை செஞ்சிட்டு போறீங்க.. எங்க அம்மா அப்பா இருந்திருந்தா கூட எனக்கு இவ்ளோ செஞ்சு இருக்க மாட்டாங்கண்ணே” என்னை கட்டிக்கொண்டு கண் கலங்க சொன்னான்..

 

“டேய்.. நான் சொன்ன மாதிரி எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ தான்டா.. என்னை மாதிரியே உனக்கும் வேற யாரும் இல்ல.. அதான் உனக்கு ஒரு அண்ணனா இருந்து உன்னை படிக்க வைக்கணும்னு நினைச்சேன்.. நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது.. நல்லா படிச்சு பெரிய இடத்துக்கு வரணும்.. அது வரைக்கும் இந்த அண்ணன் உன்னை பார்த்துப்பேன்.. சரியா?” சின்ன பையன் தலையை தடவியபடி சொன்னேன்..

 

“இந்த முறை பாருங்க.. எஸ்எஸ்எல்சில நான் எவ்ளோ மார்க் வாங்குறேன்னு.. நீங்க தான் எனக்கு சூப்பரா சொல்லி கொடுக்குறீங்களே..” என்று சொன்ன சின்ன பையன் “சரி.. உங்களுக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு.. நீங்க கிளம்புங்க..” என்று சொல்லிவிட்டு வேலை செய்ய தொடங்கினான்..

 

“எங்கிருந்தோ எனக்காகவே பிறந்து வந்தவன்.. என் வாழ்க்கை துணையாகவே ஆகி விட்டான்.. இவனை தவிர எனக்கென்று உறவு யாரும் இதுவரையும் இல்லை.. இனிமேலும் வரப்போவதில்லை..” என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் இந்த நினைப்பில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அன்று என் கல்லூரியில் என்னை சந்திக்க ஒருத்தி  வந்து கொண்டிருந்தாள்..

 

தொடரும்…

 

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!