அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 28🔥🔥

5
(10)

பரீட்சை – 28

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

பச்சிளம் குழந்தை 

போன்ற 

மென்மையான 

பெண் அவளின் 

பஞ்சு போன்ற 

கன்னத்தை 

என் கை 

பதம் பார்த்து 

விட்டதென்று நானே

புலம்பிக் கொண்டிருக்க

 

அழகுத் தாரகை

அஸ்வினியின்

தந்தை அவர்

அருகே வந்து 

அந்த அழகியலாளின் 

அப்பன் நானே 

அழகப்பன்

என்று சொல்ல

 

பாழும் மனமோ 

அவரிடம்..

பெண்ணை பெறவில்லை 

நீங்கள் 

தங்கப் பேழையைப் 

பெற்று

இருக்கிறீர்கள் என்று 

புகழ்ந்து பேசிக் 

கொண்டிருந்தது..

மொனமாய்..

மானசீகமாய்..

 

################

 

உள்ளிருக்கும் மனமே…!!

 

என் காதல் தேவதை எப்படி புத்தகம் படித்துக் கொண்டிருந்த என்னை வந்து அழைத்தாளோ அதே போலவே அவள் தந்தையும் என்னை வந்து “தம்பி..” என்று அழைத்தார்..

 

இப்படி அருணின் டைரியில் எழுதி இருக்க அதை படித்த வைஷு, “அக்கா உங்களுக்கு அப்பா இருக்காங்களா?” என்று கேட்டாள் தேஜூவை பார்த்து..

 

“இது என்ன கேள்வி..?” என்பது போல் அவளை முறைத்து பார்த்தாள் தேஜூ..

 

“அப்படி இல்லக்கா… யாருமே அப்பா இல்லாம பொறக்க மாட்டோம்.. நான் அந்த அர்த்தத்துல கேட்கல.. இப்போ உங்க அப்பா.. உயிரோட.. இருக்கிறாரான்னு…”  

 

அவள் தயங்கி தயங்கி கேட்க “அப்படியே அறைஞ்சேன்னா பல்லு எல்லாம் கொட்டி போய்டும்.. எங்க அப்பா நல்லாத்தான் இருக்காரு.. எங்க அப்பாவும் இருக்காரு… எங்க அம்மாவும் இருக்காங்க..” 

 

“ஓ.. அப்படியா..? நான் எதுக்கு கேட்டேன்னா ஒருவேளை உங்களுக்கு அப்பா இல்லைன்னா இந்த டைரியில இருக்கிறது நீங்க இல்லன்னு இப்பவே கன்ஃபார்ம் ஆயிடும் இல்ல..? அதுக்காக தான் கேட்டேன்.. ஆனா அப்பா இருக்காருன்னு சொல்றீங்களே.. அப்படின்னா அருண் லவ் பண்ணின பொண்ணு நீங்களா இருக்க இன்னும் சான்ஸ் இருக்கு.. பாப்போம்.” என்று வைஷு சொல்ல விஷ்வா “பாத்தீங்களா அக்கா.. ஒரு நாளைக்கே நீங்க இவ்ளோ வெறி ஆயிட்டீங்க.. நான் இதோட தினமும் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.. எனக்கு எப்படி இருக்கும்? தெனம் தெனம் இந்த க்ராக்கோட இருந்து இதே மாதிரி கொடுமையை தான் நான் அனுபவிச்சிட்டிருக்கேன்.. ஆனா இவளுக்கு மட்டும் என் மேல கருணையே வரமாட்டேங்குது.. என்னை ஏதாவது சிக்கல்ல எப்பவும் மாட்டி விட்டுட்டே இருக்கா” விஷ்வா அழுதுகொண்டே சொல்ல அவன் பின்னந்தலையிலேயே தட்டினாள் வைஷு..

 

“இப்ப நான் தான்டா வெறி ஆகப் போறேன்.. அப்படி என்னடா செஞ்சுட்டாங்க…? எவ்ளோ இன்ட்ரஸ்டிங்கான ஒரு கேஸ்ல உன்னை இழுத்து உள்ள விட்டு இருக்கேன்..” என்று அவள் சொல்ல “ஆமான்டி. ஒவ்வொரு நிமிஷமும் உயிர் ஊசல் ஆடிக்கிட்டே இருக்கு.. அந்த மனுஷன் எந்திரிக்கட்டும்.. அப்புறம் இருக்கு நமக்கெல்லாம்..” என்றான் விஷ்வா..

 

அவன் சொன்னதை கேட்டு வைஷுவுக்கும் கொஞ்சம் மனம் கலக்கமாய் தான் இருந்தது.. ஏற்கனவே அவன் கோபத்தை பார்த்தவள் ஆயிற்றே.. இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு தொடர்ந்து அந்த டைரியை படிக்கலானாள்..

 

#####################

 

அருணின் டைரியில்..

 

புத்தகம் படித்துக் கொண்டிருந்த என்னிடம் வந்து மிகவும் சாந்தமான குரலில் என்னை அழைத்தார் அந்த பெரிய மனிதர்.. “தம்பி.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்..

 

அவர் என்னை தேடி வரும் முன்னே என் காதல் அழகியுடன் பேசிக்கொண்டு நின்றதை பார்த்து விட்டேன்.. வெள்ளை வேட்டி சட்டையில் நரைத்த தலையுடன் நெற்றியில் சிறு விபூதி கீற்றுடன் அவர் என் தேவதையோடு பேசிக் கொண்டிருக்க பார்த்த உடனே அவர் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் தோன்றியது எனக்கு..

 

அவர் என் அழகியின் தலையை தடவிக்கொடுத்து பேசிக் கொண்டிருந்ததில் இருந்தே என் காதல் மயிலை பெற்றெடுத்த அதிசய மனிதர் அவர் தான் என்று எனக்கு புரிந்தது..

 

அவர்தான் வந்து என்னை அழைத்து பேசுகிறார் என்று தெரிந்தும் என் இறுமாப்பை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் அவர் அழைப்புக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து புத்தகம் படித்துக் கொண்டே இருந்தேன்..

 

அவரோ அப்படி மதிக்காமல் இருந்தும் அங்கிருந்து நகர்ந்து போகாமல் என் தோளை தொட்டவர் என்னை லேசாக அவர் புறம் திருப்பி “தம்பி.. உன் கிட்ட தான் சொல்றேன்.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார்..

 

அவரைப் பார்த்ததும் என் மனத்துள் என் அனுமதியில்லாமல் நுழைந்தவளை பெற்றெடுத்த தெய்வம் என்று கும்பிட வேண்டும் போல் தான் தோன்றியது.. ஆனால் அப்படி செய்தால் அது என்னவளுக்கும் நல்லதல்ல.. எனக்கும் நல்லதல்ல.. என்று உணர்ந்து கொண்டு

புருவத்தை சுளித்து புத்தகத்தை மூடினேன்..

 

ஒற்றை காலை மடித்து அந்த மரத்தின் மேல் வைத்து அதில் சாய்ந்த படி அவரை அலட்சியமாய் பார்த்தேன்.. மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு புருவத்தை சுருக்கி “என்ன..? 

” என்பது போல் அவரை பார்த்துக் கொண்டு நின்றேனே தவிர அப்போதும் என் வாய் திறந்து எதுவும் பேசவில்லை..

 

வாயை திறந்தால் புதிதாய் என் மனதில் தோன்றும் உணர்வினை பிரதிபலிப்பது போல் ஏதாவது அவரிடம் உளறி விடுவேனோ என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது..

 

அவர் மெதுவாக பேச தொடங்கினார்.. “ஆமா.. உன் பேரு என்னப்பா தம்பி?” அவர் நிதானமாய் கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

 

இன்னும் இரண்டு முறை கேட்டிருந்தால் என் வாழ்க்கை ஜாதகத்தை அவர் முன்னால் வைத்து உங்கள் மகள் என் மனதை கவர்ந்து விட்டாள்.. அவளை எனக்கே எனக்காய் கொடுத்து விடுங்கள் என்று கேட்டிருப்பேனோ என்னவோ..

 

ஆனால் அந்த தர்ம சங்கடத்திலிருந்து தப்பிக்க என் பார்வையை அவரிடம் இருந்து விலக்கி அவர் பின்புறம் எங்கோ பார்க்க அங்கே என் அழகு தேவதை கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்..

 

இது என்ன எனக்கு வந்து சோதனை.. அவள் தந்தை முன் எதையும் வெளிக்காட்டி விடக்கூடாது என்று தப்பிப்பதற்காக வேறு புறம் பார்க்க அங்கே யாரிடம் என் உணர்வுகளை வெளி காட்டவே கூடாது என்று நான் நினைத்திருந்தேனோ அந்த என் மனத்துக்கினியவளே நின்றிருந்தாள்..

 

என்னை நினைத்து மிகவும் பயந்து போயிருந்தாள் என்பது எனக்கு நன்றாகவே அவளை பார்த்தவுடன் புரிந்தது..

 

அவளின் அந்த எண்ணத்தை அப்படியே அவளிடம் இருத்தி வைக்க வேண்டும் என்று நினைத்து அவளை முறைத்துப் பார்த்தேன்.. ஆனாலும் ஐந்து நொடிகளுக்கு மேல் அந்த முறைப்பை நீட்டிக்க முடியவில்லை.. அவளைக் கண்ட அந்த நொடி என் கண்களில் இருந்து காதல் கொப்பளித்து வெளியே வர தயாராய் இருந்தது.. ஒருமுறை கண்ணை மூடி திறந்து பெருமூச்சு விட்டு எதுவும் பேசாமல் அப்படியே நின்றிருந்தேன்..

 

அதற்குள் அந்தப் பெரிய மனிதரோ “தம்பி.. உன்கிட்ட தான்பா நான் கேட்கிறேன்.. உன் பேர் என்ன?” என்று மறுபடியும் கேட்டார்..

 

இதற்கு மேல் இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் என்னால் தாங்க முடியாது என்று எண்ணி “நீங்க யா…ரு..? உங்க கிட்ட எதுக்கு நான் என் பேரை சொல்லணும்? திடீர்னு வந்து என்கிட்ட பேசணும்ங்கறீங்க.. என் பேரை கேக்குறீங்க.. கண்டவங்க கிட்டல்லாம் என் பேரை சொல்லணும்னு எனக்கு அவசியம் கிடையாது..” என்றேன்..

 

 ஆனால் அதற்கு மேல் அவருக்கு என் முகத்தில் இருந்து வேறு எந்த உணர்வும் தெரிந்துவிடக் கூடாது என்று அவர் பக்கத்தில் இருந்து அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொள்வது போல் திருப்பிக் கொண்டேன் ..

 

“நீ கேக்கறது நியாயம் தான்.. என் பேர் அழகப்பன்.. அதோ அங்க நிக்கிறாளே தேஜஸ்வினி.. அந்த பொண்ணோட அப்பா” என்றார் அழகப்பன்.. என்னவளின் அப்பன்..

 

################

 

வைஷூ படித்துக் கொண்டிருந்ததை கேட்ட தேஜூவுக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது..

 

“வைஷு.. என்ன படிக்கிற? ஒழுங்கா படி.. என்ன பேரு போட்டு இருக்கு..?” என்று அவள் கேட்க “அதில எழுதி இருக்கிறதை தான்க்கா படிக்கிறேன்.. அதுல தான் போட்டு இருக்கு.. “என் பெயர் அழகப்பன்.. அதோ அங்க நிக்கிறாளே தேஜஸ்வினி.. அந்த பொண்ணோட அப்பா..” என்றார் அழகப்பன்.. என்னவளின் அப்பன்..” அப்படின்னு தான் எழுதி இருக்குக்கா..” அவள் மறுபடியும் சொல்ல அப்படியே அந்த கட்டிலில் உறைந்து போய் அமர்ந்தாள் தேஜஸ்வினி..

 

“அக்கா.. என்னக்கா ஆச்சு?” அவளை வைஷூ உலுக்க விஷ்வாவும் அவள் நிலை கண்டு பதட்டமானான்..

 

தேஜுவோ அப்படியே எதிர்பக்கம் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் எவ்வளவு அழைத்தும் அசையவே இல்லை..

 

“அக்கா.. அக்கா.. என்னக்கா ஆச்சு..? ஏன்க்கா இப்படி இருக்கீங்க? சொல்லுங்கக்கா..” திரும்பவும் வைஷு அவளை உலுக்கி எடுக்க சட்டென தன் நிலைக்கு வந்தவள் “வைஷு.. எங்க அப்பா பேரு அழகப்பன்… கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட ஃபுல் நேம் தேஜஸ்வினி அழகப்பன்..” எனவும் வைஷுவும் விஷ்வாவும் ஆச்சரியமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்..

 

விஷ்வா “அப்படின்னா நீங்க தான் அந்த பொண்ணுன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சா..?” என்றான்..

 

அவன் கேள்விக்கான பதிலாக தான்தான் அந்த பெண் என்று யாரோ தன் தலைக்குள் சம்மட்டியால் அடிப்பது போல் திரும்பத் திரும்ப அழுத்தமாக சொல்வது போல் உணர்ந்து தேஜூ அப்படியே அமர்ந்திருந்தாள்..

 

அவளுக்கு எதுவுமே புரியவில்லை.. தலையில் கை வைத்து “எனக்கே தெரியாம என் வாழ்க்கையில என்ன எல்லாம் நடக்குது.. இந்த டைரி நிச்சயமா இப்ப எழுதினதா தான் இருக்கும்.. இந்த அருண் ஏதோ என்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டு என் வாழ்க்கையை கெடுக்கிறதுக்குன்னு இப்படி எல்லாம் டைரி எழுதி என்னை நம்ப வைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான்.. நான் நம்ப மாட்டேன்.. அப்படி எல்லாம் எதுவுமே நடக்கல.. இது எல்லாமே இவனோட கற்பனை..” என்றவள் “எனக்கு இனிமே இந்த கற்பனை கதையை மேலே மேல தெரிஞ்சுக்க வேண்டாம்.. நான் கிளம்புறேன்..” என்று எழுந்து வெளியே போக செல்லவும் அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள் வைஷூ..

 

“அக்கா.. அவன் நீங்க சொல்றபடியே இருக்கட்டும்.. ஆனா இவ்வளவு உணர்ந்து ஒரு கற்பனை கதையை எழுத முடியும்னு எனக்கு தோணல.. எனக்கு இன்னும் அருண் வாழ்க்கையில் இது உண்மையா தான் நடந்திருக்கும்னு தோணுது..” என்று சொன்னவளை முறைத்துப் பார்த்தாள் தேஜு..

 

“ஓ..” என்று அவளை முறைத்து பார்த்தபடி அவள் அருகில் வந்தவள் தன் கண்களை சுருக்கி அவள் கண்களுக்குள் பார்த்து “அப்போ.. உனக்கு என்னை பார்த்தா… ஒருத்தனை லவ் பண்ணி ஏமாத்திட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு நல்லா சுகமா வாழ்ந்துட்டு இருக்குற மாதிரி தெரியுதா..?” 

 

 அவளை எரிப்பது போல் பார்த்துக் கொண்டு கேட்டவளை “இல்லக்கா.. உங்களை பார்த்தாலும் ஒழுக்கமா இருக்குற ஒரு குடும்ப பொண்ணு மாதிரி தான் தெரியுது.. என்னால ரெண்டு பேர் மேல இருக்கிற நம்பிக்கையையுமே இழக்க முடியல.. இந்த குழப்பத்துக்கு நம்மளுக்கு ஆன்சர் தெரியணும்னா நம்ம இந்த டைரியை முழுக்க படிக்கணும்க்கா.. ப்ளீஸ்.. உட்காருங்க.. இதை முழுக்க படிக்கலாம்.. நிச்சயமா இது கற்பனை கதையா இருந்தா ஏதோ ஒரு இடத்துல நமக்கு அது கற்பனைன்னு விளங்கிடும்… முழுக்க முழுக்க பொய்யா கற்பனைல நாலு வருஷ டைரியை ஒருத்தரால நிரப்ப முடியாதுக்கா… சொன்னா கேளுங்க..” என்றாள் வைஷு..

 

தேஜு அப்படியே அந்த கட்டிலில் அமர்ந்தாள்.. வைஷூ தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்..

 

###################

 

அருணின் டைரியில்…

 

அழகப்பன் என் அழகு தேவதையை பெற்ற அப்பா.. அதனால்தான் அவர் பெயர் அழகப்பனோ… என்னவளின் பெயர் தேஜஸ்வினி.. எவ்வளவு அழகான பெயர்..?! இந்த அருணனுக்கு ஏற்ற அஸ்வினி நட்சத்திரம் அவள்.. இப்படி என் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க அது ஓடுகின்ற திசையை எண்ணி எனக்கு அதிர்ச்சியாகி போனது..

 

“ஐயோ வேண்டாம்.. பாவம் அந்த பெண்.. அவளைப் பற்றி இப்படி எல்லாம் நினைக்காதே.. அவள் நல்லபடியாக வாழட்டும்..” என்று நினைத்துக் கொண்டு என் மனதை அடக்கி வைத்தேன்..

 

ஆனால் என் மனமோ அவள் அஸ்வினி.. என்னுடைய அஸ்வினி.. என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது..

 

ஆனாலும் என் மனதின் குரலுக்கு செவி சாய்க்காமல் என்னவளின் தந்தையிடம் அவர் சொன்ன விஷயம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது போல்‌ “ஓ.. அப்படியா..? நைஸ் டு மீட் யு.. நான் வரட்டா?” என்று திமிராக அவரைக் கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி போக திரும்பினேன்..

 

எதிர்புறம் திரும்பியவன் “தயவு செஞ்சு இங்கருந்து போயிருங்க.. என்னால இதுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல.. என்கிட்ட இருந்து உங்க பொண்ணை காப்பாத்திக்கங்க..” என்று மனதிற்குள்ளேயே அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்..

 

###################

 

டைரியில் இருந்த விஷயத்தை படித்த வைஷு “என்னக்கா இந்த அருண்..? ஏதோ அவனால உங்களுக்கு ஆபத்துங்கிற மாதிரியே எழுதி இருக்கான்.. உங்களை அவ்வளவு விரும்பினதா எழுதி இருக்கான்.. ஆனா ஒவ்வொரு வரியிலும் அதுக்கப்புறம் உங்களை சந்திக்கக் கூடாது.. அவனால உங்களுக்கு ஆபத்து.. அவன்கிட்ட இருந்து உங்களை காப்பாத்திக்கணும்.. அப்படின்னு எல்லாம் எழுதி இருக்கானே.. ஒரே குழப்பமா இருக்குதேக்கா.. இவன் எழுதினதெல்லாம் உண்மையா இருந்தா அப்போ அப்படி நினைச்சவன் இப்ப ஏன்க்கா உங்களை கடத்திட்டு வரணும்..? இப்படி பண்றது உங்களுக்கு எவ்வளவு மன உளைச்சலை கொடுக்கும்னு அவனுக்கு தெரியும் தானே..? ஐயோ.. என்னடா செல்ல குட்டி.. இப்படி போட்டு குழப்புற..?” என்றாள் வைஷு கட்டிலில் படுத்திருந்த அருணை பார்த்து..

 

கிட்டதட்ட இதே கேள்விகள் தான் தேஜூவின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.. 

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!