பரீட்சை – 30
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன்னை என்
உயிருக்குள் வைத்து
காப்பது என்
கடமை என்று நான்
அறிந்தாலும்..
தன்னை காத்துக்
கொள்ளத் தெரியாத
தளர்மனம்
படைத்த பெண்ணாய்
நீ இருப்பதை நான்
துளியும்
விரும்ப மாட்டேன்..
உன்னை
சின்னாபின்ன படுத்த
நினைக்கும்
சிறுகுணம் படைத்த
கயவர்களிடமிருந்து
சிங்கப் பெண்ணாய்
உன்னை நீயே
சீறி எழுந்து
காத்துக் கொள்ள..
உனக்குள் அந்த
வீர உணர்வை
விதைக்க வேண்டுமென
தீர்மானித்து விட்டேனடி
என்
விழி அழகியே..!!
காரிகையை
கயவர்களிடமிருந்து
காக்க துடிக்கும்
மனமடக்கி
மறுபுறமாய்
முகம் திருப்பிச்
சென்றேனடி
என் மாயவளே..!!
##############
என் மாயவளே..!!
அருண் சொல்லியிருந்த அத்தனை விவரங்களும் தன் தந்தையின் உருவத்துடனும் குணத்துடனும் அச்சு அசலாய் அப்படியே ஒட்டி இருப்பது எண்ணி உள்ளுக்குள்ளேயே ஆச்சரியமடைந்தாள் தேஜு..
ஏனென்றால் அவன் சொல்லிய ஒவ்வொரு விவரமும் தன் தந்தையோடு அப்படியே சரியாக பொருந்தி போய் இருந்தது..
அவர் மிகவும் பொறுமையாக எல்லா விஷயங்களையும் கையாளுபவர் தான்.. அவரை கோபப்படுத்தும் அல்லது வருத்தப்படுத்தும் ஒரே விஷயம் தன் ஒரே மகளான தேஜு வருத்தப்படும்போது மட்டும்தான்.. அவளுக்கு யாராவது துன்பம் விளைவித்தால் அவர்கள் மீது அதிகமான கோபம் வரும் அவருக்கு..
ஆனால் தன் கோபத்தால் அவளுக்கே ஏதாவது எதிர்காலத்தில் துன்பம் வரும் என்று தெரிந்தால் அந்த கோபத்தை அறவே அடக்கி அந்த விஷயத்தையும் நிதானமாக கையாள்வார்..
அருண் அவன் டைரியில் எழுதி இருப்பது அத்தனையும் நூறு சதவிகிதம் உண்மை தான்.. ஆனால் இது எப்படி நடக்க முடியும் என்று அவளுக்குள் இன்னும் குழப்பமாகவே இருந்தது..
டைரியை முழுதாக படித்து முடித்தால் தான் தன் குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்று எண்ணியவள் வைஷுவை தொடர்ந்து டைரியை படிக்கச் சொன்னாள்..
###################
அருணின் டைரியில்…
அழகப்பன் தேஜுவிடம் என்னை மன்னிப்பு கேட்க சொல்ல என் மனதிலோ வேறு மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது..
“ஐயோ.. என் தேவதையே என்னை அடித்திருந்தால் கூட எனக்கு அவ்வளவு ஆனந்தமாய் இருந்திருக்குமே.. ஆனால் அவளோ மென்மையானவருக்கு பிறந்த அதிமென்மையானவள்.. அதனால்தான் அவளை என்னிடம் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது.. மேலும் மேலும் அவளுக்கு வலியை கொடுக்கக் கூடாது என்று மனதார நினைக்கிறேன் நான்..
ஆனால் மனதில் நான் எண்ணிக் கொண்டிருந்ததற்கு முரணாக இதழோரம் வளைத்து ஒரு சின்ன புன்னகை சிந்தி அவர் பேசியது சிறிதும் என்னை பாதிக்கவில்லை என்பது போல் அங்கிருந்து நகர்ந்து இரண்டு அடி முன்னே எடுத்து வைத்தேன்..
ஆனால் ஏனோ அதற்கு மேலும் அந்த பெரிய மனிதரை அவமானப்படுத்தும் விதமாய் நடந்து கொள்ள மனம் சிறிது உறுத்தியது..
சரி.. அவருக்காக கேட்பது போல் இந்த ஒரு முறை என் அஸ்வினியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அதன் பிறகு இந்த ஜென்மத்தில் அவளை பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்தவன் அப்படியே இரண்டு அடி பின்னே வைத்து வந்து என்னவள் முகத்தை கூட பார்க்காமல் எதிர்பக்கம் பார்த்தபடியே.. “சாரி.. ஆனா நீயும் இதை ரிப்பீட் பண்ணாத.. நீ இந்த தப்பை மறுபடியும் பண்ணுனா நானும் நான் செஞ்ச தப்பை ரிப்பீட் பண்ண வேண்டி இருக்கும்” என்று சொல்லிவிட்டு வேகமாய் முன்னே நடந்து சென்றுவிட்டேன் கல்லூரிக்குள்..
முன்னே வந்து அவர்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.. அவளிடம் மன்னிப்பு கேட்ட அந்த ஒரு கணத்தில் என் முகத்தில் எவ்வளவு ஆனந்தம் தாண்டவம் ஆடியது என்று.. மன்னிப்பு கேட்டதற்கு ஏதோ நான் அவளிடம் என் காதலையே சொல்லியது போல் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது எனக்கு.. என்னவள் மனதில் ஒரு சிறு துளி என் மீது நல்ல அபிப்பிராயம் வந்திருக்கும் என்ற எண்ணமே என் மனம் எங்கும் பட்டாசு வெடித்தது போல் இன்பத்தை அள்ளித் தெளித்திருந்தது..
###########################
“ஐயோ.. ஏன்டா என்னை இப்படி போட்டு படுத்துற? உன்னோட டைரியோட ஒவ்வொரு பேஜ் படிக்கும் போதும் உன்னோட உயிரை உருக்கிற லவ்வை நெனச்சு அந்த பொண்ணு நானா இல்லையேன்னு என்னை நானே திட்டிக்க ஆரம்பிச்சுட்டேன்.. நான் அந்த அஸ்வினியா இருந்து இருக்க கூடாதா?” மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள் டைரியை படித்த வைஷு..
“ஏன் வைஷு.. அவர் மயக்கமா இருக்கும்போது இப்படி எல்லாம் நீ பேசினா எப்படியாவது அவர் காதுல விழுந்து எழுந்த உடனே ஐ லவ் யூ சொல்லி உன்னை கட்டிப்பார்ன்னு நினைச்சியா.. அவர் நினைவு தெளிஞ்சு எழுந்தா அவர் கொல்ல நினைக்கிற முதல் எதிரி நீ தான்.. அது ஞாபகம் இருக்கட்டும்..” என்றான் விஷ்வா..
“அட ஆமாண்டா விச்சு.. அப்படி ஒன்னு இருக்குல்ல..? சரி விடு.. எழுந்திருக்கற வரைக்கும் என் செல்லத்தோட நான் கற்பனையில வாழ்ந்திட்டு போறேன்…” என்ற வைஷு.. “அக்கா ஒருவேளை நீங்க தான் இந்த பொண்ணுன்னா என்னை மன்னிச்சிடுங்கக்கா.. நான் அந்த பொண்ணா என்னைய கற்பனை பண்ண ஆரம்பிச்சிட்டேன்.. இனிமே என்னால மாத்திக்க முடியாது..” வைஷு பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறியதை கேட்ட தேஜூ தலையில் அடித்துக் கொண்டாள்..
“இந்த அருணும் நீயும் எக்கேடோ கெட்டுப் போங்க.. முதல்ல எனக்கு டைரியை முழுசா படிச்சு இவன் என்னை கடத்திட்டு வந்ததுக்கு காரணம் தெரியணும்.. ஒழுங்கா அதை படி..” என்று சொன்னவள் தானே டைரியின் அடுத்த பக்கத்தை திருப்பவும் செய்தாள்..
######################
தன் மாமனார் சொல்வது எல்லாம் கேட்ட ராம் குழம்பி போனான்.. “மாமா… நீங்க சொல்றது எதுவுமே என்னால நம்பவே முடியல. இப்படியே ஏதாவது தேஜூ வாழ்க்கையில நடந்திருந்தா அவ என்கிட்ட நிச்சயமா சொல்லி இருப்பா..” என்றான் அவன்..
“ஆமாம் மாப்பிள்ளை.. அப்படி எல்லாம் அவ வாழ்க்கையில் நடந்ததுன்னு தெரிஞ்சுருந்தா அவ முதல்ல உங்களை கல்யாணமே பண்ணி இருக்க மாட்டா.. ஆனால் அவளை பொறுத்த வரைக்கும் இது எதுவுமே அவ வாழ்க்கையில நடக்கல..” என்று அவர் கூற ராமுக்கோ தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது..
“என்ன மாமா சொல்ல வரீங்க..?” என்றான் அவன்..
“சாரி மாப்ள.. எல்லாத்தையும் சொல்றேன் உங்ககிட்ட..” என்று சொன்னவர் அதன் பிறகு கொடைக்கானலில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்..
“நாங்க கொடைக்கானல் போனப்போ என் ஆஃபீஸ்ல அப்போதைக்கு ஒரு மெடிக்கல் லீவ் தான் சொல்லி இருந்தேன்.. ஆனா நிரந்தரமா அங்க இருக்கணும்னா அதுக்கு என் ஆஃபீஸ்ல வந்து கொடைக்கானல்ல இருக்கிற பிரான்ச்சுக்கு வேலையை மாத்திட்டு போக வேண்டி இருந்தது..
நான் ஃபோன் பண்ணி எங்க மேனேஜர் கிட்ட பேசினப்போ அவரு இன்னும் ஒரு மாசத்துக்கான வேலைகளை செஞ்சு கொடுத்துட்டு அங்க இருக்கிற மத்தவங்க கிட்ட என்னென்ன வேலை எல்லாம் செய்யணும்னு சொல்லிட்டு அதுக்கு அப்புறம் கொடைக்கானல்ல இருக்குற பிரான்ச்சில போய் ஜாயின் பண்ணிக்கோங்கன்னு சொன்னாரு..
அதனால இந்த ஒரு மாசமும் நான் எங்க ஊருக்கு வந்துருவேன்.. சனி ஞாயிறு மட்டும் கொடைக்கானல் போற மாதிரி இருந்தது.. அங்க தேஜூ தான் எல்லாரையும் பார்த்துக்கிட்டா.. அதனால அவளுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுத்தா சரியா இருக்கும்னு அவளுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுத்தேன்..
அன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்தவ வாசல்ல நின்ன புது வண்டியை பார்த்து துள்ளி குதிச்சுக்கிட்டு உள்ள ஓடி வந்தா.. “வாசல்ல புது வண்டி நிக்குது.. நீங்க தான் வாங்குனீங்களா?”ன்னு என்னை கேட்டா..
நானும் “ஆமாம்மா.. நான் இப்போ ஊருக்கு போயிருவேன் இல்ல..? அப்புறம் உனக்கு காலேஜ் போயிட்டு வர்றத்துக்கு கஷ்டமா இருக்குமே.. உன் தங்கச்சி நிவேதாவையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகணும்.. அதான் வண்டி வாங்கி தந்தா உனக்கு சவுரியமா இருக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்”னு சொன்னேன்..
தேஜூ முகத்தில அப்படி ஒரு சந்தோஷம் மாப்பிள்ளை.. அதை என்னால விவரிக்கவே முடியல.. என்கிட்ட சாவியை வாங்கிட்டு வெளிய போனவ உடனேயே வண்டியை எடுத்துட்டு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தா.. ” அழகப்பன் சொல்ல அந்த காட்சி ராமின் கண் முன் விரிந்தது..
அவனுக்கு தேஜூவை பற்றி தெரியும்.. அவள் அப்படித்தான் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டு துள்ளி குதித்து ஆர்ப்பரிப்பாள்..
அப்போது அவள் முகத்தை பார்க்க நமக்கும் அந்த ஆனந்தம் அப்படியே ஒட்டிக் கொள்ளும்..
“அதுக்கப்புறம் நான் எங்க ஊருக்கு வந்துட்டேன்.. அதுக்கப்புறம் அந்த அருணை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.. தேஜூ அந்த காலேஜ்ல படிப்பை முடிச்சப்ப தான் அதோட நான் அந்த அருணை சந்திச்சேன்..” யோசனையில் ஆழ்ந்தார் அழகப்பன்..
####################
அருணின் டைரியில்…
( இனி அருணின் டைரியில் இருக்கும் அத்தனை விஷயங்களும் எழுத்தாளரின் பார்வையில் சொல்லப்படும்.. )
அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு மனதை அடக்கிக்கொண்டு அஷ்வினியை பார்ப்பதை முற்றிலுமாகவே தவிர்த்திருந்தான்.. அருண்.. ஆனால் கடவுள் தான் எத்தனை கொடுமைக்காரர்… என்று அவனுக்கு தோன்றியது.. மனதிற்கு கடிவாளம் இட்டு அவன் மிகவும் கஷ்டப்பட்டு தன்னைத்தானே தேஜுவிடமிருந்து திசை திருப்பிக் கொண்டிருக்க அவர்களுக்குள் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்தியது விதி..
அன்று அருண் தன் மெக்கானிக் கடையை பூட்டிவிட்டு இரவு 9 மணி போல வீட்டுக்கு கிளம்பி விட்டான்.. அவன் வண்டியில் சிறிது பழுது பார்க்கும் வேலை இருந்ததால் அதை மெக்கானிக் ஷெட்டியிலேயே விட்டுவிட்டு அடுத்த நாள் அதை பழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி பேருந்தில் செல்லலாம் என்று பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான்..
அப்போது தேஜூவும் சுமியும் எதிர்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தார்கள் இருட்டில்..
தேஜு “ஏய் சுமி.. அப்பா இப்பதான் புது வண்டி வாங்கி கொடுத்தாரு.. அந்த ரோட்ல அவ்வளவு கிளாஸ் பீஸ்ஸை யாரு கொட்டி வெச்சாங்களோ தெரியல.. வண்டி பஞ்சர் ஆயிடுச்சு.. புதுசா வாங்கி கொடுத்த வண்டி.. அப்பாக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை.. இந்த வீக் எண்ட் அப்பா வரும்போது எனக்கு இருக்கு..” என்றாள் சிணுங்கி கொண்டே..
“ஆமாண்டி.. அங்க பத்து அடில ஒரு மெக்கானிக் ஷாப் கூட இருந்தது.. ஆனா அதுவும் கதவு மூடி இருந்தது.. எல்லாம் நம்ம நேரம்.. அந்த மெக்கானிக் ஷாப் திறந்து இருந்தா நம்ம வண்டியை பஞ்சர் பார்க்க சொல்லி இருக்கலாம்..” என்றாள் சுமி..
“எனக்கு என்னவோ அந்த கிளாஸ் பீஸ் ஒடச்சி போட்டதே அந்த மெக்கானிக் ஷாப்காரனா தான் இருக்கணும்னு தோணுது.. நிறைய வண்டி தன்னோட கடைக்கு ரிப்பேர் பார்க்க வரணும்ங்குறதுக்காக இதெல்லாம் அவங்க யூஸ் பண்ற டெக்னிக்.. இல்லன்னா நீயே யோசிச்சு பாரு.. அங்க அவ்வளவு நேரம் நல்லா க்ளீனா இருந்த ரோட்டில அந்த இடத்தில மட்டும் எப்படி க்ளாஸ் பீஸ் கெடக்கும்.. அதுவும் அந்த மெக்கானிக் ஷாப் எதிரே..” தேஜூ சொல்ல முகத்தை சுருக்கி யோசித்த சுமி “ஓ.. அப்படியும் இருக்குமோ..? இருக்கும் டி..” என்று சொன்னாள்..
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த அருண் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்.. தன்னுடைய மெக்கானிக் கடை பூட்டியிருப்பதை பார்த்து விட்டு வந்தவர்கள் அந்த கடையை பற்றியும் அதை வைத்திருப்பவர் யார் என்று கூட தெரியாமல் தன்னை பற்றியும் தவறாகவே பேசிக் கொண்டு வருவது கேட்டு முதலில் அவனுக்கு கோபம் வந்தாலும் பிறகு அவள் ஏதோ துப்பறிவது போல யோசிக்கும் விதம் அவனுக்கு சிரிப்பையே வரவழைத்தது..
தேஜூவின் கற்பனை திறத்தை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.. ஆனால் ஊருக்குள் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளாலேயே அவள் அப்படி யோசிக்கிறாள்.. அப்படி யோசிப்பதில் அவள் தவறு ஒன்றும் இல்லை..” என்று எண்ணினான் அவன்..
“இந்த திவ்யா கூப்பிட்டான்னு அவ வீட்டுக்கு படிக்கப் போனோம்.. நான் அப்போலேருந்து “கிளம்பு கிளம்பு.. டைம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டே இருந்தேன்.. நீ தான் அவளோட அரட்டை அடிச்சிட்டு லேட் பண்ணிட்டே.. இல்லன்னா ஒரு 7:00 மணிக்கு கிளம்பியிருந்தோம்னா இவ்வளவு பிரச்சனை ஆகி இருக்காது..” தேஜூ சுமியை திட்டினாள்..
“சரிடி.. இன்னும் உங்க வீட்டுக்கு போறதுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு மேல போகணும்.. வேகமா நடந்து போலாம்..” என்று சொன்ன சுமி தேஜூ கையை பிடித்துக் கொண்டு வேக வேகமாக நடந்தாள்.. அவர்கள் அந்த பேருந்து நிலையத்தை அதற்குள் கடந்திருந்தார்கள்..
அருணுக்கு அந்த இருட்டில் அவர்கள் இருவரும் தனியாக போவதால் அவர்களுக்கு துணையாக தானும் நடந்து வீட்டுக்கு சென்று விடுவோம் என்று எண்ணி அந்த சாலையின் எதிர்பக்கம் தன் வீட்டை நோக்கி நடக்கலானான்..
அவ்வப்போது தன் தேவதையை பார்த்து அவள் பேசும் அழகு கேட்டு ரசித்துக்கொண்டே ஆனால் முகத்தில் அந்த ஆனந்தத்தை காட்டாமல் அவர்கள் நடை வேகத்துக்கு ஈடாகவே நடந்து கொண்டிருந்தான் சாலையின் எதிர்பக்கமாய்..
எதேச்சையாய் திரும்பிய தேஜூ அருணை பார்க்க “ஏய்.. சுமி..அந்த அருண் டி..” சுமியின் முதுகில் தட்டி சொன்னாள்… கல்லூரியில் நடந்த அந்த சம்பவத்துக்கு பிறகு அவன் பேர் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டிருந்தாள்..
ஏனோ அருணை பார்த்து அவள் இன்னும் கூட பயந்த மாதிரி தான் இருந்தாள்.. அருணுக்கு ஒரு பக்கம் அவள் அப்படி பயப்படுவது வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்பு தான் வந்தது அவளின் குழந்தை தனத்தை நினைத்து..
“ஆமாண்டி.. அவன்தான்.. வா.. வேகமா போலாம்..”
நடை வேகத்தை கூட்டியவர்கள் அவனைத் தாண்டி ஒரு பத்தடி முன்னால் சென்று இருப்பார்கள்..
நடுவில் ஒரு சந்தில் இருந்து குடித்திருந்த இரண்டு பேர் தள்ளாடிக்கொண்டே அவர்களுக்கு அருகே வந்தார்கள்..
“ஏ.. பொண்ணுங்களா.. இந்த ராத்திரில எங்க போறீங்க? மாமனை தேடித்தான் வந்து இருக்கீங்களா? வாங்க.. போய் ஜாலியா இருக்கலாம்..” தேஜுவின் கையைப் பிடித்தான் ஒருவன்..
அதைப் பார்த்து அருணுக்கு அவன் மேல் கொலை வெறியே ஏற்பட்டது..
தேஜு அவள் கையை விடுவிக்க போராடிக் கொண்டிருக்க இன்னொருவன் சுமியின் கையை பிடித்தான்..
அப்போது அவர்கள் அருகில் நடந்து வந்த அருணை பார்த்து தேஜு “சார்.. நாங்க உங்க காலேஜ் தானே சார்..? கொஞ்சம் காப்பாத்துங்க ப்ளீஸ்..” என்று கெஞ்ச அவனோ எதுவும் செய்யாமல் அப்படியே அவர்களைக் கடந்து சென்று விட்டான்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு செல்லங்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”