பரீட்சை – 35
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சதி மேல் சதி
பின்னி
சதிகாரி அவள்
என்னை நீ வெறுக்க
ஏதுவாய்
ஏதேதோ சொல்ல..
மதிமுகம் கோபத்தில்
மின்ன
வதனமலர்
வேதனையில்
வாட..
தீச்சுடர் பார்வையால்
என்னை
தீய்த்து எரித்து
விட்டாய்..
#################
சுடும் விழிச்சுடரே..!!
அருணின் சட்டையை உலுக்கி தேஜூ கேள்வி கேட்க அவனோ அவள் கேட்பது எதுவும் புரியாமல் கண்கள் நிறைய கோபத்துடன் அவளையே பார்த்து நின்று கொண்டிருந்தான்..
“ஏய்.. என்ன உளர்றே? உனக்கு ஏதாவது மூளை கீளை கழண்டுருச்சா? நான் என்ன பண்ணேன்?”
அவன் புரியாமல் விழித்தான்..
“ம்ம்ம்ம்.. நீ என்ன பண்ணலே..? வாழ்க்கையில என்னல்லாம் பண்ணக்கூடாதோ அது அத்தனையும் தான் பண்ணிக்கிட்டு இருக்கியே..” என்றாள் அவள் ஆத்திரத்தோடு..
அவனோ “இதை பாரு.. நான் ரொம்ப பொறுமையா இருந்துட்டிருக்கேன்.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கற நீ.. எதையுமே புரியற மாதிரி பேசமாட்டியா?” என்றான்..
“ஆமா.. அப்படியே இவருக்கு ஒன்னும் புரியாது.. அதான் பிளான் பண்ணி காலேஜ்ல இருக்குற அத்தனை சுவத்திலயும் என் பேரையும் உன் பேரையும் சேர்த்து வெச்சு அசிங்கமா எழுதி வச்சிருக்கே.. அதை பத்தி கேள்வி கேட்டா கேக்குறவங்களையும் அடிப்பியா நீ..? உன்னை எல்லாம் சும்மாவே விடக்கூடாது.. இரு.. நான் உடனே பிரின்ஸ்பல் மேம் கிட்ட போய் உன்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்றேன்” அவன் சட்டையில் இருந்து கையை எடுக்காமலே பேசிக்கொண்டு இருந்தாள்..
“இந்த நல்லவங்க எல்லாம் சேர்ந்து உன்கிட்ட இப்படி ஒரு கதை சொல்லி வச்சிருக்காங்களா? நீயும் நம்பிட்டே.. சரி அப்படியே இருக்கட்டும்.. ஆமாம் நான் தான் எழுதினேன்.. இப்போ உன்னால என்ன பண்ண முடியும்? என்ன..? பிரின்சிபல் கிட்ட போய் சொல்ல போறியா..? வா.. போலாம்.. நானும் வரேன் உன்னோட.. ரெண்டு பேருமா போய் சேர்ந்து பேசலாம்..”
அவள் கையை இறுக்க பிடித்தவன் தரதரவென அவன் கையில் இருந்து அவள் தன் கையை விடுவிக்க முயன்று திமிறிக் கொண்டே நடக்க அவளை இழுத்துக்கொண்டு கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றான்..
அவன் அப்படி செய்வான் என்று எதிர்பார்க்காதவள் அவன் முகத்தையே முறைத்து பார்த்துக் கொண்டு அவன் நடப்பதற்கு ஈடாக வேக வேகமாக நடையும் ஓட்டமுமாய் அவனோடு சென்றாள்..
கல்லூரி முதல்வர் அறையின் கதவை தட்டியவன் அவர் அனுமதி கிடைத்தவுடன் அவள் கையை விடாமலேயே இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்..
“அருண்.. என்னது இது? முதல்ல விடு அவ கைய.. இப்ப எதுக்கு தேஜஸ்வினியை இந்த மாதிரி கையை புடிச்சி இழுத்துட்டு வர.. நீ..?” அவர்களைப் பார்த்த அதிர்ச்சியில் கேட்டார் கல்லூரி முதல்வர்..
“அது ஒன்னும் இல்ல மேடம்.. இந்த மேடம் உங்க கிட்ட ஏதோ கம்பளைண்ட் பண்ணனுமாம்.. அதான் நானே கூட்டிட்டு வந்தேன்.. சொல்லுங்க அஸ்வினி மேடம்.. உங்களுக்கு என்னை பத்தி என்னென்ன கம்ப்ளைன்ட் பண்ணனுமோ அத்தனையும் பண்ணிருங்க.. எதையும் விட்டுறாதீங்க..”
அவன் நக்கலாய் சொல்ல கல்லூரி முதல்வர் தேஜஸ்வினியை பார்த்து “என்ன சொல்லணும் மிஸ்.தேஜஸ்வினி..? அருண் என்ன பண்ணான்?” என்று கேட்டார் தேஜுவை..
“மேடம்.. இந்த காலேஜ் வால்ஸ்ல எல்லாம் எங்க ரெண்டு பேர் பேரை எழுதினது வேற யாரும் இல்லை மேடம்.. இந்த அருண் தான்.. அப்படி எழுதிட்டு ஏன் அப்படி செஞ்சான்னு கேட்க போன என் ஃப்ரெண்ட்ஸையும் போட்டு ரொம்ப அடிச்சிருக்கான்..” என்று புகார் சொன்னாள் தேஜு..
“அருண்.. தேஜஸ்வினி சொல்றது உண்மையா? நீ யாரையாவது அடிச்சியா?” அருண் பக்கம் திரும்பி கேட்டார் கல்லூரி முதல்வர்..
“அடிச்சேன் மேடம்.. அவங்க தப்பா பேசினாங்க.. நான் அடிச்சேன்.. என்னையும் இதோ இந்த ராங்கிக்காரியையும் இணைச்சு பேசினாங்க.. எனக்கு கோவம் வந்தது.. அதனாலதான் அடிச்சேன்..” என்றான் அருண்..
அதற்குள் தேஜூ இடை புகுந்து, “பொய் சொல்றான் மேடம்.. இந்த காலேஜ் சுவத்துல ஃபுல்லா என் பெயரையும் இவன் பெயரையும் சேர்த்து எழுதினது இவன் தான்னு இவனே சொல்லி இருக்கான்.. ஏன் அப்படி பண்ணனு கேட்டதுக்கு தான் சரணை போட்டு இவன் அடிச்சிருக்கான் மேடம்.. இவனை நல்லா பனிஷ் பண்ணுங்க மேடம்.. முடிஞ்சா இந்த காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிடுங்க மேடம்.. ”
கல்லூரி முதல்வர் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார்..
“நான் எதுக்கு உன் பேரோட என் பேரை இணைச்சு எழுத போறேன்..? எனக்கு வேற வேலை இல்ல பாரு.. என்னிக்குமே என் வாழ்க்கையில் எந்த ஒரு பொண்ணுக்கும் இடமே கிடையாது.. அப்படி இருக்கும்போது உன் பேரையும் என் பேரையும் சேர்த்து எழுதறதுக்கு எனக்கு என்ன திடீர்னு பைத்தியமா புடிச்சிருக்கு?”
இதழ் ஓரமாய் ஒரு ஏளன புன்னகையை சிந்தி கொண்டே கேட்டான் அவன்..
“கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? மிஸ்.தேஜஸ்வினி.. நீ சொல்றதெல்லாம் உண்மைங்கறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? ஆனா அருண் சொல்றது உண்மைதாங்கறதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு” என்றார் அவர்..
“என்ன சொல்றீங்க மேடம்?” என்று கேட்டாள் தேஜஸ்வினி..
“ஆமாம்மா.. அந்த கிரவுண்ட்ல மரத்து கிட்ட இருக்குற சிசிடிவி கேமராவில் சுவத்தில எல்லாம் உங்க ரெண்டு பேர் பேரை எழுதும் போது எழுதுனவங்க உருவம் பதிஞ்சிருக்கு.. ஆனாலும் அது யாருன்னு எங்களால கண்டுபிடிக்க முடியல.. ஏன்னா அந்த உருவம் மாஸ்க் போட்டு கருப்பு கோட் போட்டு தலை வரைக்கும் மூடி மறைச்சுக்கிட்டு தான் இந்த வேலையை பார்த்து இருக்கு.. ஆனா அது நிச்சயமா அருண் இல்லன்னு என்னால சொல்ல முடியும்.. ஏன்னா அப்படி எழுதின உருவத்தோட ஹைட்டு அஞ்சு அடிக்கு மேல இல்ல.. அருண் நல்ல ஹைட்.. அதனால இது நிச்சயமா அருண் செய்யலன்னு எனக்கு கன்ஃபார்ம்டா தெரியும்..” என்று சொன்னார் அந்த கல்லூரி முதல்வர்..
“மேடம்.. அது இவன் இல்லைனா என்ன மேடம்..? யாரையாவது வெச்சு எழுதி இருப்பான்.. நீங்க சரண் கிட்ட கூப்பிட்டு கேட்டு பாருங்க மேடம்.. இவனே அவன் கிட்ட நான் தான் எழுதினேன்னு சொல்லி இருக்கான்..” என்று தேஜூ சொல்ல “ஆமா மேடம்.. அந்த சரண் ஹரிச்சந்திரன் வீட்டு பக்கத்து வீடு மேடம்.. நீங்க கேளுங்க.. அவன் சொல்லுவான்..” நக்கலாய் சொன்னான் அருண்..
“இல்ல தேஜு.. அப்படியெல்லாம் சரண் சொல்றதை வச்சு நான் ஆக்சன் எடுக்க முடியாது.. ஏன்னா ஏற்கனவே அந்த சரண் சஞ்சீவ் நித்திலா இவங்க மூணு பேருக்கும் அருணுக்கும் பிராப்ளம் இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும்.. ஒரு தடவை இவங்களுக்குள்ள நடந்த பிராப்ளம் இந்த ஆஃபீஸ் ரூம் வரைக்கும் வந்திருக்கு.. அப்ப நான் இவங்களை வார்ன் பண்ணி அனுப்பிட்டேன்.. அதனால அருண் மேல வேணும்னே பழி போறதுக்கு கூட சரண் அப்படி சொல்லலாம் இல்ல..? அருண் நிஜமாவே அப்படி செஞ்சு இருந்தாலும் வேற ஒரு ஸ்ட்ராங்கான ப்ரூஃப் இல்லாம நான் அருண் மேலே எந்த ஆக்சனும் எடுக்க முடியாது..” என்றார் கல்லூரி முதல்வர்..
“இதே வேலையா தான் திரியுறானா இவன்..? எல்லார் கூடயும் பிரச்சினை பண்ணி எல்லாரையும் அடிச்சுக்கிட்டு.. அடுத்த வாட்டி ஏதாவது ப்ராப்ளம் பண்ணும் போது நான் ஆதாரத்தோட வந்து நிரூபிக்கிறேன் மேடம்.. அப்ப நீங்க ஆக்சன் எடுப்பீங்க இல்ல? இப்ப நான் வரேன் மேடம்..” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து வெளியே சென்று விட்டாள் தேஜு..
“அருண்.. எனக்கு தெரியும் நீ நிச்சயமா இந்த வேலை செஞ்சிருக்க மாட்டேன்னு.. ஏன்னா இதுவரைக்கும் நீ பொண்ணுங்க பக்கம் திரும்பி கூட பார்த்ததில்லை.. போன வாட்டி அந்த நித்திலாவோட வந்த பிரச்சனைல கூட உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு ப்ரூவ் ஆயிருக்கு.. இந்த வேலை யாரு செஞ்சதுன்னு நான் கண்டுபிடிக்கிற வரைக்கும் நீ தயவு செஞ்சு இந்த மாதிரி எந்த கலாட்டாவும் பண்ணாம அமைதியா இருக்க ட்ரை பண்ணு..” என்று சொன்னார் அவர்..
“நிச்சயமா ட்ரை பண்றேன் மேடம்.. ஆனா என்னால ப்ராமிஸ் பண்ண முடியாது.. அந்த சரண் நித்திலா குரூப் ரொம்ப லிமிட் தாண்டி போயிட்டு இருக்காங்க மேடம்.. என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியல.. எனக்கும் இதை இவங்கதான் பண்ணாங்கன்னு சொல்றதுக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கல.. ஆனா யார் பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் மேடம்.. அந்த சரண் தான் இதை பண்ணி இருக்கான்.. எனக்கு தெரிஞ்ச இந்த இன்ஃபர்மேஷனை உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு தோணிச்சு.. நான் வரேன் மேடம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அருண்..
முதல்வர் அறையில் இருந்து கோபமாக வெளியே வந்து கொண்டிருந்த தேஜுவை பார்த்த சுமி “என்னடி ஆச்சு? ஏண்டி இவ்வளவு கோவமா வர்ற? ப்ரின்சிபல் மேடம் ஏதாவது திட்டினாங்களா உன்னை கூப்பிட்டு..?” என்று கேட்டாள்..
“அந்த அருண் இருக்கானே.. அவனை.. சரியா சிக்க வைக்கணும் டி.. எல்லா தப்பையும் பண்ணிட்டு எவ்வளவு கூலா சுத்திக்கிட்டு இருக்கான்.. மத்தவங்க எதிரே பொண்ணுங்களையே பார்க்காதவன்னு பேர் வாங்கிட்டு பின்னால என்னென்ன வேலை எல்லாம் பண்றான்னு இப்ப தான்டி தெரியுது” அவள் சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டே போக சுமிக்கோ எதுவும் புரியாமல் தலை சுற்றியது..
“இதோ பாரு.. இப்படி தலையும் புரியாம வாலும் புரியாம பேசாத.. என்ன நடந்துச்சு? ஒழுங்கா சொல்லு..” சுமி கேட்டதும் நடந்த அனைத்தையும் விவரித்துக் கூறினாள் தேஜு..
“ஏய்.. மேடம் தான் சொல்றாங்க இல்ல? சுவத்துல எழுதின ஆளு அஞ்சு அடிக்கும் கம்மியா இருந்தான்னு.. அப்புறம் நீ ஏண்டி அந்த அருண் மேல சந்தேகப்படுற.. எனக்கு என்னவோ அவன் நல்லவன் தான்னு தோணுதுடி..” என்றாள் சுமி..
“இல்லடி.. அவன் முன்னாடியே ஏதோ பிரச்சனை பண்ணி இருக்கான்டி அவங்க கிட்ட.. அப்பவும் பிரின்சிபல் ரூமுக்கு போய் இருக்காங்க.. ஆனா அது என்ன பிரச்சனைன்னு தெரியல.. நாம அதை கண்டுபிடிக்கணும்..” தேஜு சொல்லிக் கொண்டிருக்க அப்போது அங்கே வந்தாள் நித்திலா..
“என்ன ஆச்சு தேஜு..? என்ன சொன்னாங்க மேடம்? அந்த அருண் எப்பவும் போல அங்கேயும் வந்து ரவுடி தனத்தை காட்டினானா?”
சுமி நித்திலாவை ஏகத்துக்கும் முறைத்தாள்..
மனதிற்குள் “இவ என்னவோ ரொம்ப ரவுடித்தனம் கம்மியா பண்ற மாதிரி அவனை சொல்றா..” என்று எண்ணியவள் “நீ எதிர்பாக்குற அளவுக்கு அவ்வளவு மசாலா எல்லாம் இல்லை நித்திலா.. அங்க அப்படி ஒன்னும் சீரியஸா நடக்கல.. மேடம் ரெண்டு பேரையும் விசாரிச்சிட்டு அனுப்பிட்டாங்க..” என்று சொன்னாள் சுமி..
தேஜு கல்லூரி முதல்வர் சொன்ன நிகழ்வைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள் “நித்திலா.. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.. பிரின்ஸ்பல் மேடம் நீங்க சரண் சஞ்சீவ் ஏற்கனவே அருணோட நடந்த ஒரு பிரச்சனைன்னால அவங்க ரூம் வரைக்கும் வந்து வார்னிங் வாங்கி இருக்கீங்கன்னு சொன்னாங்க.. அப்போ என்ன நடந்ததுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” என்று கேட்டாள்..
நித்திலாவின் மனதிற்குள் “நல்லவேளை.. இதை நம்ம கிட்ட வந்து கேட்டா.. வேற யார்கிட்டயாவது கேட்டிருந்தா இவளுக்கு நம்ம மேல சந்தேகம் வந்திருக்கும்.. இப்போ நாம சொல்ற விதத்துல விஷயத்தை சொல்லிடலாம்..” என்று நினைத்தவள் “அது ஒன்னும் இல்ல தேஜு.. போன வருஷத்துல ஒரு முறை நாங்கல்லாம் கல்ச்சுரல்ஸ்க்கு ஒரு ஒரு ரூம்ல ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தோம்.. அப்போ நான் அருண் எல்லாம் ஒரு ப்ளேல பார்ட்டிஸிபேட் பண்ணிட்டு இருந்தோம்.. நான் என் சேஞ்சிங் ரூம்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருந்தேன்.. அருண் பாய்ஸோட சேஞ்சிங் ரூம்ல இருந்தான்.. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ஸ்டேஜ்க்கு போக அந்த பாய்ஸ் சேஞ்சிங் ரூம கிராஸ் பண்ணி போனப்போ அருண் என்னை கூப்பிட்டான்.. அப்போ அவனை பத்தி எனக்கு தெரியாது.. அதனாலே அவன் கூப்பிட்ட உடனே நானும் உள்ள போயிட்டேன்.. அந்த ரூம்ல அவன் மட்டும்தான் இருந்தான்.. அவன் ஒரு செயின் போட்டிருந்தான்.. அந்த செயினுக்கு பின்னாடி ஹூக் போட முடியல.. கொஞ்சம் ஹெல்ப் பண்றியான்னு கேட்டான்.. என்னை அந்த ஹூக்கை போட சொன்னான்.. நானும் அவனுக்கு ஹெல்ப் பண்ணலான்னு போட்டு விட போனப்போ டக்குனு என் கைய புடிச்சவன் என்கிட்ட முரட்டுத்தனமா நடந்துகிட்டு..”
அதற்கு மேல் சொல்ல தயங்கியவள் பிறகு ஏதோ பயந்து எச்சில் விழுங்கி சொல்வது போல் “என் டிரஸ் பின்னாடி இருந்த ஹூக்கை கழட்டிட்டான்.. எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல.. அதுக்கப்புறம் சுதாரிச்சுக்கிட்டு வெளிய இன்னும் ரெண்டு பையன்கள் வந்தப்போ “ஹெல்ப் ஹெல்ப்”ன்னு கத்தவும் அவங்க வந்து என்னை காப்பாத்தி பிரின்ஸ்பல் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க.. கடைசில நான்தான் அவனை அந்த ரூமுக்கு வந்து ஆசை காட்டினதா சொல்லி பழியை என் மேலே திருப்பி விட்டுட்டான்.. எனக்கு ரொம்ப அவமானமா போச்சு.. இப்போ எனக்கு செஞ்ச மாதிரியே உனக்கும் செய்ய பார்க்கிறான்..” அவள் சொல்ல சொல்ல தேஜுவோ அப்படியே பயந்து போய் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள் சொன்னதை..
கண்களில் முதலை கண்ணீரோடு அழுது அழுது சொல்லி முடித்த நித்திலா நிமிர்ந்து பார்க்க தேஜூவின் பின்னே நின்று அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் அருண்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”