பரீட்சை – 36
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மனதில் வஞ்சம்
வைத்து
மாதுருவில் வந்த
அரக்கி அவள்..
இல்லாததும்
பொல்லாததும்
சொல்லி
என்னவளை மயக்க..
இதயத்தில்
இருப்பவளும்
அவள் பின்னிய
சதி வலையில்
எளிதாய்
விழுந்து
சிக்கி
மாட்டிக் கொண்டு..
தீயாய்
என்னை
பார்வையால்
தீண்டி எரித்து
தண்டனை
வாங்கி
தந்துவிட
துடித்தாள் பாவை…
###############
எரிக்கும் பார்வை..!!
கண்களில் முதலை கண்ணீரோடு அழுது அழுது நடக்காததை நடந்தது போல் சொல்லி முடித்த நித்திலா நிமிர்ந்து பார்க்க தேஜூவின் பின்னே நின்று அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் அருண்..
“என்ன.. கதை சொல்லி முடிச்சாச்சா? இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? இன்னும் எவ்வளவு தண்ணி கண்ணுக்குள்ள ஸ்டாக் வச்சிருக்க..? அத்தனையும் வெளியில விட்டுடு..”
அவன் சொல்ல அப்போதுதான் அவன் குரல் கேட்டு அவன் தன் பின்னே இருப்பதை உணர்ந்து தேஜூ திரும்பி அவனை பார்த்தாள்..
“ஓ.. உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துல ஏறுதுன்னு உனக்கு கோபம் வேற வருதா? எவ்ளோ கேவலமா இருந்து இருக்க? இதுல இந்த வீராப்புக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.. முதல்ல பொம்பளைங்களை எல்லாம் கொஞ்சம் மதிக்க கத்துக்கோ.. பெண்களை மதிக்கறவன்தான் சரியான ஆம்பளை..” என்றாள் தேஜு..
“ஆமா.. நான் கேவலமானவன் தான்.. கேவலமானவனாவே இருந்துட்டு போறேன்.. நீ இந்த உத்தமி.. உண்மை விளம்பி.. தியாகத்தின் மொத்த உருவம்.. இந்த நித்திலாமணி பேச்சுக்கு ஜால்ரா அடிச்சிட்டு திரிஞ்சிட்டு இரு.. ஏன் நித்திலா? இதோட நிறுத்திட்ட… நீ சொல்றது எல்லாத்தையும் அப்படியே நம்பறதுக்கு தான் உனக்கு ஒரு அடிமை சிக்கிட்டா இல்ல.. ஒரு நாலு ரேப்.. நாலு மர்டர்.. அப்புறம் நாலு கிட்னாப்ன்னு அதையும் நான் செஞ்சதா சேர்த்து சொல்லி நல்லா போட்டு கொடு.. நீ ஒரு ஜான்சி ராணி.. இவ பெரிய கண்ணகி.. நீ வந்து இவ கிட்ட சொன்ன உடனே அப்படியே கண்ணாலயே எரிச்சிடுவா என்னை.. போய் உருப்படியா வேற ஏதாவது வேலை இருந்தா பாரு.. இவ என்னை பத்தி என்ன நினைச்சா எனக்கென்ன வந்தது? இவ கிட்ட நல்லவன்னு சர்டிஃபிகேட் வாங்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. அதனால நீ இவ்ளோ எனர்ஜி எல்லாம் வேஸ்ட் பண்ணாத.. என்ன..?” நக்கலாக சிரித்தபடி நித்திலாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டான் அருண்..
அவன் தன்னை திட்டாமல் அடிக்காமல் அங்கிருந்து சென்றது நித்திலாவுக்கு ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது..
“பாத்தியா தேஜூ.. எவ்வளவு திமிரா பேசிட்டு போறான்னு.. என்ன செஞ்சாலும் இவனை எல்லாம் திருத்தவே முடியாது..” என்றாள் நித்திலா..
“சரி விடுங்க நித்திலா.. அவன் என்னைக்காவது ஒரு நாள் நிச்சயமா மாட்டுவான்.. அன்னைக்கு அவனுக்கு உதவி பண்றதுக்கு யாருமே இருக்க மாட்டாங்க.. கண்டினியூயசா ஒருத்தர் தப்பு செஞ்சிட்டு நல்லவங்க மாதிரி நடிச்சு ஏமாத்திட்டே இருக்க முடியாது” என்று சொன்னாள் தேஜு..
அவள் சொன்ன விஷயம் அருணுக்காக இல்லாமல் தனக்காக சொன்னது போல் உணர்ந்தாள் நித்திலா..
“அதெல்லாம் எப்பவுமே மாட்ட மாட்டேன்.. நாங்க எல்லாம் மாட்டிக்காத மாதிரி தான் புத்திசாலித்தனமா பிளான் பண்ணி தப்பு பண்ணுவோம்” தனக்குள்ளேயே பெருமையாக எண்ணிக் கொண்டாள் அவள்..
அதற்குள் சுமி முன்னே வந்து “சரி.. யார் தப்பு பண்ணாலும் மாட்ட போறாங்க.. வெயிட் பண்ணி பார்க்கலாம்.. யார் மாட்டறாங்கன்னு..”
அர்த்தத்தோடு நித்திலாவை முறைத்து சொன்னவள் “வா தேஜூ போலாம்.. கிளாசுக்கு டைம் ஆச்சு..” என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு போனாள்..
####################
அருணின் டைரியில்..
என்னவளே என்னை தவறாக நினைத்துக் கொண்டிருப்பது என் மனதை ரணமாக்கி இருந்தாலும் அவள் என்னை வெறுத்து ஒதுக்குவது தான் அவளுக்கு நன்மையாக இருக்கும் என்று வாய் மூடியே இருந்தேன் நான்..
நித்திலா சொன்னதை எல்லாம் வெள்ளை மனதோடு அப்படியே நம்பியவள் என்னை தீ பார்வை பார்க்க அதில் உண்மையாகவே வெந்து போனேன் நான்..
எனக்கு இருந்த ஒரே கவலை அந்த நித்திலா அவளோடு கூட இருப்பவர்களுக்கே நன்மை செய்பவள் கிடையாது… அப்படி இருக்க என்னை பழி வாங்குவதற்காக என் அஷ்வினியை கை பாவையாய் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பவள் சமயம் வரும்போது அவளுக்கும் ஏதாவது தீமை செய்து விடுவாளோ என கவலை கொண்டேன் நான்..
ஆனால் அஷ்வினியுடன் இருக்கும் அவள் உற்ற தோழி சுமி அவளை கண்ணும் கருத்துமாக எப்போதும் பார்த்துக் கொண்டாள்.. அவள் அந்த நித்திலாவால் என் அஸ்வினிக்கு எந்த தீங்கும் ஏற்பட விட மாட்டாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது..
என்னதான் என் தேவதை என்னை வெறுத்தாலும் அவள் எப்போதும் என் கண் பார்வையிலேயே இருந்தாள்.. அவள் பாதுகாப்பாக இருப்பதை எப்போதும் உறுதி செய்வதே என் முதல் கடமையாக இருந்தது..
நித்யா அவளிடம் பொய்யாக அள்ளி விட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து அவளைக் கொன்று போடும் அளவிற்கு கோபம் வந்தது எனக்கு.. ஆனால் நித்திலாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று நான் அங்கிருந்து அமைதியாக வந்து விட்டேன்..
அவள் அஸ்வினியிடம் கதையாய் சொல்லிக் கொண்டிருந்த அந்த நிகழ்வு அன்றைக்கு நடந்த வேளையில் நடந்ததே வேறு.. அன்றே அந்த கல்லூரியை விட்டு வெளியே சென்று இருக்க வேண்டிய நித்திலா அங்கு இன்னமும் இருப்பதே என்னால்தான்.. அவள் செய்த ஒரு தவறினால் அவள் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்று அவளை மன்னித்து விட சொல்லி நான் சொன்னது தான் இப்போது வினையாக வந்து நிற்கிறது..
என்னை பற்றி என் அழகியிடம் அவள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.. ஆனால் என் அஸ்வினிக்கு ஏதும் துன்பம் கொடுக்க அவள் நினைத்தாலும் அவளுக்கு நரகத்தை காட்டுவேன் நான்..
அன்று உடையை மாற்றிக்கொண்டு ஆண்கள் உடைமாற்றும் அறை பக்கம் வந்த நித்திலா அந்த அறையில் நான் தனியாக நின்றிருப்பதை பார்த்து உள்ளே வந்து “ஹே.. அருண்.. இந்த டிரஸ்ல ரொம்ப ஹான்ட்சமா இருக்க நீ..!!” என்று சொல்ல “இப்ப உன்னை கேட்டாங்களா? நீ எதுக்கு இந்த பாய்ஸ் ரூமுக்கு வந்த? முதல்ல வெளியில கிளம்பு..” என்றேன் நான் அவள் பக்கம் திரும்ப கூட மனமில்லாமல்..
ஆனால் அதை தொடர்ந்து என் நெஞ்சில் கை வைத்தவள் “என்ன அருண்? உன்னை பார்த்த நாள்ல இருந்து நீ தான் என் உயிர்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட என் மனசை புரிஞ்சுக்காம இப்படி தள்ளி தள்ளி போறியே..” என்று சொல்லிக்கொண்டு என்மேல் அப்படியே அவள் முழு பாரமும் விழுமாறு சாய்ந்தாள்..
அவள் செயல் எனக்கு முழுவதுமாக அருவருப்பையே தந்தது.. அப்படியே அவளை என்னிடமிருந்து விலக்கி பிடித்து தள்ளி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்..
அவளின் ஒரு பார்வையை பெறுவதற்காக அவளின் காலில் விழுந்து சேவை செய்வதற்கு கூட அந்த கல்லூரியில் பல மாணவர்கள் காத்துக் கிடக்க நான் அப்படி செய்தது தன்னால் மயக்க முடியாத ஆண்களே கிடையாது என்று எண்ணியிருந்த அவள் அகந்தையை உடைத்து நாசமாக்கி இருந்தது..
அதில் ஏகத்துக்கும் கோபமடைந்த அவள் “நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்னையே தள்ளி விடுற.. தேடி தேடி வந்து உன் கிட்ட லவ் சொன்னா என்னையே விரட்டி விரட்டி விடுற இல்ல? காலேஜ்ல என் அழகுல மயங்கி பின்னாடி வராதவனே கிடையாதுடா.. ஆனா நீ என்னை ஒவ்வொரு வாட்டியும் அவமானப்படுத்துற இல்ல? இந்த அவமானத்துக்கு நான் பழிக்கு பழி வாங்குறேன்டா உன்னை..” என்று சொன்னவள் தன் உடையை தாறுமாறாக கிழித்துக் கொண்டு தலையை கலைத்துக் கொண்டு வெளிப்புறமாய் பார்க்க சரணும் சஞ்சீவும் உள்ளே வந்தார்கள்..
அப்போது மற்ற ஆண் நண்பர்களும் ஒவ்வொருவராக உள்ளே வர தொடங்க “விடு அருண்.. விடு.. ப்ளீஸ்.. இது தப்பு..” என்று சொல்லி என் கையை பிடித்துக் கொண்டு நான் ஏதோ அவளிடம் முறை தவறி நடந்தது போல் அங்கே ஒரு காட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தாள்..
உள்ளே வந்த சரணும் சஞ்சீவும் அவள் நடிப்புக்கு ஒத்துழைப்பது போல் அவளோடு சேர்ந்து தங்கள் நடிப்பு திறமையை வாரிக் கொட்ட எங்கள் இருவரையும் கல்லூரி முதல்வரின் அறைக்கு அழைத்து போய் நித்திலாவுக்கு நீதி வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது..
ஆனால் இது எல்லாம் நடந்த போது நித்திலா மறந்த ஒரு விஷயம்… கடவுள் இருக்கிறார் என்பது.. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பது.. அந்த உடை மாற்றும் அறை ஒரு பெரிய ஒப்பனை அறை… சிறிய சிறிய நான்கு உடை மாற்றும் அறைகளையும் அதனுள் கொண்டிருந்தது.. அந்த அறையில் அவள் உள்ளே வரும்போது நான் தனியாக இருந்ததை கவனித்தவள் என்னை மயக்க அவள் செய்து கொண்டிருந்த கேவலமான வேலையில் தன் கவனம் முழுவதும் வைத்திருந்தவள் என் நண்பன் நிலவழகன் அங்கிருந்த உடை மாற்றும் அறையில் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து நின்றிருந்ததை கவனிக்கவில்லை..
நிலவழகன் அழகன் தான்.. சுமாரான உயரமும் கட்டுடலும் கொண்டவன்.. ஆனால் கருநிற அழகன்.. நித்திலாவை கண்ட நாளிலிருந்து அவளைப் பிடித்து போய் அவளுக்கு நல்ல நண்பனாய் இருக்க வேண்டும் என்று பேச போகும் போது அவனை அவன் உருவத்தை.. அவன் நிறத்தை பற்றி தரக்குறைவாய் பேசி “நீ எல்லாம் என் பக்கத்துல நிக்க கூட தகுதி இல்லாதவன் உனக்கு என்னை மாதிரி அழகா ஒரு ஃப்ரெண்ட் வேணுமா?” என்று அவன் மனதை புண்படுத்தி எல்லோர் முன்பும் ஆணவத்துடன் பேசினாள் நித்திலா..
அவள் பேச்சில் அவமானப்பட்டு மனம் உடைந்து போனவனுக்கு தான் அவளுக்கு நண்பனாய் ஆக வேண்டும் என்று அவளிடம் கேட்டது போலவே அவள் அருணை கேட்டு அவன் அவளை புறக்கணித்தது அவளுடைய அகங்காரத்தையும் ஆணவத்தையும் உடைத்து எறிந்து இருக்கும் என்று நினைத்திருந்தான்..
ஆனால் அவ்வளவு நடந்த பிறகும் அவள் திருந்தாமல் அப்படியே இருப்பது ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.. உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்தவன் அவள் என்னிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து ஏதோ விவகாரமாய் தோன்றவே அங்கு நிகழ்ந்ததை தன் கைபேசியில் படம் பிடிக்க ஆரம்பித்து இருந்தான்..
சஞ்சீவும் சரணும் நித்திலாவையும் என்னையும் மற்ற ஆண் நண்பர்களுடன் கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்துப் போய் அங்கே அவரிடம் விஷயத்தை சொல்லவும்.. நித்திலா ஏதோ தனக்கு மிகப்பெரும் கொடுமை நடந்து விட்டது போல் அழுது அரற்ற கல்லூரி முதல்வரோ எதுவுமே சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த என்னை பார்த்திருந்தார்..
அப்போது அவர் சரண் சஞ்சீவை விட்டுவிட்டு மற்ற ஆண் நண்பர்களிடம் கேட்க அவர்கள் உள்ளே வந்தபோது என்ன கண்டார்களோ அதை அப்படியே சொன்னார்கள் அவரிடம்..
அதை கேட்ட கல்லூரி முதல்வர் “அருண்.. நீ இதை செஞ்சியான்னு நான் கேட்கல.. ஆனா இவங்க சொல்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் உன் சைடுல இருந்து என்ன விளக்கம் கொடுக்கிறேன்னு தான் நான் கேட்கிறேன்..” என்னை அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டே கேட்டார்.. அவர் பார்வையில் என் மேல் அவருக்கு ஒரு துளி கூட சந்தேகம் இல்லை என்று தெளிவாக தெரிந்தது..
அப்போது அங்கே வந்த நிலவழகன் “மேடம்.. அருண் எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு படம் காட்டுறேன்.. அதை பார்த்தீங்கன்னா உங்களுக்கு எல்லாமே புரிஞ்சிடும்.. அப்புறம் அருணுக்கு தண்டனை கொடுக்கிறதா வேண்டாமான்னு நீங்களே யோசிச்சுக்கோங்க..” என்று சொல்லிவிட்டு அவன் படம் எடுத்தவற்றை அங்கு இருந்தவர்களுக்கு திரையிட்டு காண்பித்தான் அவன் கைபேசியில்..
அந்தக் காணொளியை பார்த்த கல்லூரி முதல்வர் கோவமாய் நித்திலாவை பார்க்க நித்திலாவோ அதை பார்த்து அரண்டு போயிருந்தாள்.. சஞ்சீவ் சரணோ அங்கிருந்து அப்படியே நழுவி வெளியே சென்று விட்டார்கள்..
“நித்திலா.. என்ன இதெல்லாம்? நீ இதுக்கு தான் காலேஜுக்கு வரியா? உன்னோட ஆக்டிங் ஸ்கில்ஸை எல்லாம் ஸ்டேஜ்ல அந்த ப்ளேல நடிக்கும் போது மட்டும் காட்டுனா போதும்.. இது காலேஜா இல்ல வேற ஏதாவதா..? நீ இந்த காலேஜ்ல தொடர்ந்து இருந்தா இங்க இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் கெட்டு போயிடுவாங்க.. அதனால உன்னை இப்பவே நான் இந்த காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்றேன்” என்று சொன்னவர் அந்த வேலைகளில் இறங்கினார்..
நித்திலா “மேடம்.. சாரி மேடம்.. நான் அருணோட ஃப்ரெண்டு ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.. ஆனா அவன் என்னை தன் கிட்டயே நெருங்க விடாம விரட்டுனது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆயிடுச்சு மேடம்.. அதனால தான் இந்த மாதிரி பண்ணிட்டேன்.. சாரி மேடம்.. ப்ளீஸ்.. இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க மேடம்..” நீலி கண்ணீர் வடித்து கெஞ்ச ஆரம்பித்தாள் அவள்..
அந்தக் கல்லூரி முதல்வரோ “இல்ல நித்திலா.. நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு.. என்னால உனக்கு தண்டனை குடுக்காம இருக்க முடியாது.. உன்னை மாதிரி எவ்வளவு பெரிய தப்பு பண்ணாலும் கூட காலேஜ்ல ஒன்னும் பண்ண மாட்டாங்கன்னு மத்த எல்லாருக்கும் எண்ணம் வந்துரும்.. அதனால இனிமே நீ இந்த காலேஜ்ல தொடர்ந்து படிக்க முடியாது.. அதுக்கு எந்த வாய்ப்பும் இல்லை..” என்று சொன்னார்..
“மேடம் ப்ளீஸ்.. நித்திலாவை டிஸ்மிஸ் பண்ண வேண்டாம்.. தயவு செஞ்சு அவ இங்க கண்டினியூயஸா படிக்கறதுக்கு நீங்க அலவ் பண்ணனும்..” என்றேன் நான்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”