அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥

5
(7)

பரீட்சை – 38

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

பிழையில்லாத 

உன்னை

பழி சொன்ன

பாவியவளின்

பேச்சை நம்பி

 

கோவம் கொண்டு

குற்றம் சாட்டி

கடும் தண்டனை

கிடைக்க

செய்தேன்..

 

மன்னிப்பாயா

சொல்லடா

முரடனே

என்னை..!!

 

##################

 

நல்லவன்..!!

 

சரண் “மேடம்.. உங்களுக்கு ஆதாரம் தானே வேணும்..? இவன் கேர்ள்ஸோட சேஞ்சிங் ரூமுக்கு போனது அங்கே இருந்த சிசிடிவி கேமராவில ரெக்கார்ட் ஆயிருக்கும்.. நீங்க வேணா அதை பாருங்க.. அவன் போனதை பார்த்து சந்தேகப்பட்டு தான் அவன் பின்னாடி நான் போனேன்.. நீங்க அந்த கேமராவை செக் பண்ணிக்கலாம்..” என்று சொல்ல 

“ஓகே.. நீ சொல்ற படி ஒருவேளை அருண் அந்த ரூமுக்கு முதல்ல போய் இருந்தான்னா நிச்சயமா அவன் மேல நான் ஆக்சன் எடுக்கிறேன்..” என்று சொன்ன கல்லூரி முதல்வர் அந்த காணொளியை எடுத்து பார்த்தார்..

 

அருண் அந்த பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் முதலில் நுழைவதை பார்த்த எல்லோருடைய விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தன.. சுமியால் அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.. அருண் அப்படி செய்ய மாட்டான் என்று அத்தனை நாள் நம்பியவள் ஒரு வெறுப்போடு அவனை பார்த்தாள்..

 

தேஜூ “உங்க கண்ணாலேயே பாத்துட்டீங்களா மேடம்? இவன் வெளியே எல்லார்கிட்டயும் நல்லவன் மாதிரி வேஷம் போட்டு கிட்டு இருக்கான் மேடம்.. இவனோட இன்டென்ஷன்ஸ் எல்லாமே ரொம்ப கேவலமா இருக்கு.. தயவு செஞ்சு இப்பயாவது இவன் மேல ஆக்சன் எடுங்க மேடம்..” என்று சொன்னாள்..

 

நித்திலாவும் அவளோடு சேர்ந்து ஒத்து பாடினாள் “நான் அன்னிலேருந்து சொல்லிட்டு இருக்கேன் மேடம்.. இவன் நடவடிக்கை எல்லாம் சரியில்லன்னு.. நீங்கதான் என்னை நம்ப மாட்டேங்கறீங்க.. இப்ப நீங்களே பாத்துட்டீங்களா?” அவள் பங்குக்கு அவளும் ஏற்றி விட்டாள்..

 

கல்லூரி முதல்வர் அருணிடம் “அருண்.. உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை… இப்ப கூட இவங்க சொல்ற தப்பை நீ பண்ணி இருப்பியான்னு எனக்கு சந்தேகமா தான் இருக்கு.. ஆனா எனக்கு வேற வழி இல்ல… இப்போ கையும் களவுமா சாட்சியோட உன்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க.. நீ இதுக்கு என்ன பதில் சொல்லப் போற..? நீ என்ன சொன்னாலும் நீ அந்த ரூம்க்குள்ள போனது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.. என்ன காரணமா இருந்தாலும் நீ இங்க என்கிட்ட வந்து ரிப்போர்ட் பண்ணிட்டு அப்புறம் என்னையும் கூட்டிட்டு தான் அங்க போயிருக்கணும்.. அதனால எனக்கு இப்போ வேற வழி இல்ல.. நான் உன்னை இந்த காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்றேன்..” என்று சொன்னார்..

 

நித்திலா இதழில் ஒரு வில்லத்தனமான சிரிப்போடு அருணை பார்க்க தேஜுவோ அருணை கோபமாக முறைத்து அவன் செய்ததற்கு எல்லாம் சரியான தண்டனை கிடைத்து விட்டது என ஒரு வெற்றி புன்னகையை உதிர்த்துக் கொண்டே போனாள்..

 

இந்த முறை நித்திலா தன்னை மாட்ட வைக்க சரியான சதிவலை பின்னி விட்டாள் என்று அருணுக்கு புரிந்தது.. தான் உழைத்து கஷ்டப்பட்டு அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.. அது பாதியிலேயே கைவிட்டு போகிறது. என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது.. ஆனால் இப்போது வேறு வழி இல்லை.. தன்னை தேஜூ தவறாக புரிந்து கொண்டாளே என்ற மனவருத்தமும் சேர்ந்திருக்க முகத்தை தொங்க போட்டுக் கொண்டே அங்கு இருந்து வெளியே சென்றான் அவன்..

 

நிகழ்ந்ததத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தான் நிலவழகன்.. அவனுக்கு எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்பது புரிந்தது..

 

அன்று கல்லூரி நேரம் முடிந்ததால் எல்லோரும் போக அடுத்த நாளிலிருந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியது..

 

இந்த பிரச்சனையை இப்படியே விடக்கூடாது.. இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று முடிவு செய்த நிலவழகன்  கல்லூரி விடுமுறையாக இருந்ததால் தேஜுவுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.. 

 

தேஜூவிடம் தான் அவளோடு ஒரு சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி ஒரு உணவகத்திற்கு வர சொல்லி அழைத்தான்.. அது அருண் பற்றிய விஷயம் என்று அவன் சொல்ல அருணை பற்றி எதையும் கேட்பதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்று வெறுப்போடு சொன்னாள் தேஜு..

 

இந்த ஒரு முறை அவனுக்காக வந்து தன்னோடு பேசவேண்டும் என்றும் அதனால் அவள் இழக்கப்போவது ஒன்றும் இல்லை என்றும் அவன் கூற அவன் சொல்வதில் இருந்த உண்மையை உணர்ந்தவள் அடுத்த நாள் அவன் சொல்லிய நேரத்துக்கு அந்த உணவகத்திற்கு சுமியோடு சென்றாள்..

 

அங்கு அவர்களுக்காக காத்திருந்த நிலவழகன் அவர்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை அருகில் அமர வைத்து “நேத்து நீங்க அருண் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணப்போ அங்க என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது.. ஆனா நீங்க சொன்ன மாதிரி அருண் எதுவும் பண்ணியிருக்க மாட்டான்னு எனக்கு 100% இல்லை 200% தெரியும்.. ரொம்ப நல்லவன் அவன்.. அப்படி ஒரு கேவலமான விஷயத்தை நிச்சயமா பண்ணி இருக்க மாட்டான்.. இது நிச்சயமா அந்த நித்திலா சரணோட சதியா தான் இருக்கும்..” என்றான்..

 

“மிஸ்டர்.நிலவழகன் நீங்க அருண் புராணம் பாடத்தான் என்னை கூப்பிட்டீங்கன்னா ஐ அம் சாரி.. நான் இப்பவே கிளம்பி போறேன்…” 

 

 தேஜூ இருக்கையிலிருந்து எழப்போக “ப்ளீஸ்.. நான் சொல்றதை ஒரு அஞ்சு நிமிஷம் கேளுங்க.. அதுக்கப்புறம் நீங்க என்ன முடிவு எடுத்தாலும் ஓகே தான்..” என்று சொல்லிவிட்டு “இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு கம்ப்ளைன்ட் நித்திலா அருண் மேல பண்ணாங்க” என்றான் அவன்..

 

“அதான் தெரியுமே.. அப்போ அந்த பழியை நித்திலா மேலே போட்டு அந்த அருண் தப்பிச்சுட்டான்.. ஆனா இப்ப அப்படி தப்பிக்க முடியல..”  

 

தேஜூ சொன்னதை கேட்டு புன்னகைத்த நிலவழகன் “உங்ககிட்ட அந்த விஷயத்தை வேற மாதிரி சொல்லி பிளேட்டை திருப்பி போட்டுட்டாளா?” என்று சொன்னவன் “நான் உங்களுக்கு ஒரு வீடியோ காட்டுறேன்.. அதை பாருங்க.. அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்க..” என்று சொல்லி அன்று நித்திலாவுக்கும் அருணுக்கும் இடையில் நிகழ்ந்ததை படமெடுத்து வைத்திருந்த காணொளியை அவளிடம் திரையிட்டு காண்பித்தான்..

 

அதைப் பார்த்த சுமிக்கும் தேஜூக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. அந்த நித்திலா என்னவெல்லாம் கதை சொன்னாள் அருணை பற்றி.. இப்போது அருண் மேல் எந்த தவறும் இல்லை என்று தெரிகிறதே என்று யோசித்தவர்கள்.. 

 

“நிலவழகன்.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க..? இப்பவும்..” என்று தேஜூ இழுக்க “அதைத்தான் நான் சொல்ல வரேன்.. இப்பவும் அவங்க ஏதோ சதி பண்ணி அருணை மாட்டிவிட்டு இருக்காங்க.. அருண் நிச்சயமா தப்பு பண்ணி இருக்க மாட்டான்.. இதுக்கப்புறம் உங்க இஷ்டம்.. எனக்கு உங்களை பத்தியும் தெரியும்.. அவனை பத்தியும் தெரியும்.. அதனால் தான் இவ்வளவு தூரம் உங்க கிட்ட வந்து பேசிகிட்டு இருக்கேன்.. இந்த பிரச்சனைனால அவனோட படிப்பு வேற நின்னு போச்சு..இப்பதான் அந்த நித்திலா சரணோட உண்மையான முகம் உங்களுக்கு தெரியுதில்ல.. இந்த முறை என்ன நடந்தது? அவங்க என்ன சதி பண்ணினாங்கன்னு தெரியணும்.. அப்பதான் மறுபடியும் அருண் அந்த காலேஜ்ல தான் படிப்பை கன்டினியூ பண்றதுக்கு நம்ம ஏதாவது வழி செய்ய முடியும்” என்று சொன்னான் நிலவழகன்..

 

“நிலவழகன்..  நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்.. ஆனா இந்த தடவை அவங்க சொல்றது ஒருவேளை உண்மையா கூட இருக்கலாம் இல்லையா.. அவங்க தான் இந்த விஷயத்துலயும் தப்பு பண்ணாங்கன்னு இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வெச்சு நான் எப்படி நினைக்க முடியும்? ஆனா நீங்க சொல்ற மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கு.. ஒருவேளை என் தப்பான அண்டர்ஸ்டாண்டிங்னால அவரு படிப்பு நிந்து போச்சுன்னா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது”  

 

தன் நெற்றியை விரலால் தேய்த்துக் கொண்டே யோசித்தவள் “ஓகே.. நான் இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்றேன்..” என்றாள்..

 

பிறகு ஏதோ தோன்றியவள் “நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே” என்று கேட்டாள்..

 

“என்ன தேஜு.. சொல்லுங்க.. அருண் திரும்ப காலேஜ் வந்து படிப்பார்னா நான் அதுக்காக என்ன வேணா பண்ணுவேன்..” என்று சொன்னான் நிலவழகன்..

 

“நான் சொல்ற மாதிரி நித்திலாக்கு ஃபோன் பண்ணி பேசுங்க.. அதுக்கப்புறம் அடுத்து என்ன செய்யறதுன்னு நான் உங்ககிட்ட சொல்றேன்.. இப்ப நீங்க வீட்டுக்கு போங்க.. நான் உங்களுக்கு எப்போ நித்திலாக்கு கால் பண்ணனும்னு மெசேஜ் பண்றேன்.. அப்ப கரெக்டா நித்திலாக்கு கால் பண்ணுங்க..”  என்று சொன்னாள் தேஜு..

 

“ஓகே தேஜூ..” என்றவன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்..

 

தேஜூ சுமியிடம் “சுமி.. நாம இப்போ ஹாஸ்டல்ல இருக்கிற நித்திலா ரூமுக்கு போறோம்.. வா கிளம்பலாம்..” என்று சொல்ல “எதுக்குடி இப்போ அவ ரூமுக்கு போகணும்?” என்று கேட்டாள் சுமி..

 

“நீ வா என் கூட.. உனக்கே புரியும்..” என்று சொன்னவள் நேரே ஹாஸ்டலில் நித்திலாவின் அறைக்கு சென்று கதவை தட்டினாள்..

 

நித்திலா கதவை திறக்க “ஹாய் நித்திலா..” என்க அவளோ ஆச்சரியமாக தேஜூவை பார்த்தவள் “நீங்க ரெண்டு பேரும் என்ன இங்க? அதுவும் இப்போ ஹாலிடே டைம்ல? நானே இன்னிக்கு சாயங்காலம் எங்க வீட்டுக்கு கிளம்பலாம்ன்னு இருக்கேன்..” 

 

 “இல்ல.. இங்க ஹாஸ்டல்ல மகி இருக்கா இல்ல..? எங்க கிளாஸ்மேட்.. அவகிட்ட ஒரு நோட்ஸ் கொடுத்திருந்தேன்.. அதை வாங்கிட்டு போகத் தான் வந்தேன்.. அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..”

 

  “ஓ.. உள்ளே வா..” என்று சொன்னவளின் அறையை ஆராய்ந்தாள் தேஜூ..

 

அவள் அறையில் ஒரு குளிர்சாதன பெட்டி ஒரு சிறிய தொலைக்காட்சி பெட்டி எல்லாம் இருந்தன..

 

 “நித்திலா உங்க ரூம்ல எல்லா ஃபெசிலிட்டீஸூம் இருக்கு போல இருக்கு.. வீடு மாதிரி தான் நீங்க இங்கேயும் இருக்கீங்கன்னு சொல்லுங்க..” 

 

 “ஆமா..  எங்க அப்பா ஒரு பிசினஸ்மேன்.. ஒரு இடத்துல இருக்க மாட்டாரு.. ஒரு ஒரு ஊரா போயிட்டே இருப்பாரு.. அதனால எங்க வீட்டுக்கு போனா எனக்கு போர்.. அதனாலதான் நான் ஹாஸ்டல்ல இருக்கனும்னு டிசைட் பண்ணேன்.. ஆனாலும் என்னால மத்தவங்க இருக்கிற அந்த குடோன் மாதிரி ரூம்ல எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னதுனால எங்க அப்பா இதெல்லாம் வாங்கி போட்டாரு.. இதோ இந்த ஹாலிடேஸ்க்கு பத்து நாள் வீட்டுக்கு போனா போர் அடிக்கும்.. யாருமே இருக்க மாட்டாங்க..” 

 

 “ஏன்.. உங்க அம்மா இல்லையா வீட்ல..?” என்று கேட்டாள் தேஜூ.. தேஜூ கேட்ட கேள்வியில் நித்திலாவின் முகம் மாறியது.. 

 

தலையை குனிந்து கொண்டு ஏதோ யோசனையில் இருந்தவள் “எங்கம்மா நான் பொறந்த உடனே இறந்துட்டாங்க.. எங்க அப்பாவும் அவங்க இறந்தப்புறம் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல.. அவர் பிசினஸ் விஷயமா எங்கேயாவது வெளியில ‌நாடு விட்டு நாடு போய்கிட்டு இருப்பாரு.. எப்பவுமே வீட்ல இருக்க மாட்டாரு.. நான் வேலைக்காரங்க கிட்ட தான் வளர்ந்தேன்..” விரக்தியாய் ஒரு பதில் கொடுத்தாள் நித்திலா..

 

அவள் இப்படி ஒரு குணத்துடன் இருப்பதற்கு என்ன காரணம் என்று தேஜூவுக்கு புரிந்தது.. ஏனோ தேஜூவுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.. சின்ன வயதிலிருந்தே அன்னையின் அன்பும் கிடைக்காமல் தந்தையின் அன்பும் கிடைக்காமல் தனியாகவே வளர்ந்தவள்.. அதுவும் வேலைக்காரர்களால் ஒரு இளவரசி போல் வளர்க்கப்பட்டவள் இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்று நினைத்தாள்..

 

“சரி..  கொஞ்சம் இருங்க..” என்று சொன்னவள் எழுந்து போய் தன் அறையில் இருந்த சிறிய குளிர்சாதன பெட்டியில் இருந்து அவர்களுக்கு ஒரு குளிர்பானத்தை எடுத்து கொடுக்க அதை வாங்கி இருவரும் குடித்தனர்.. அப்போது நித்திலாவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..

 

அவள் அந்த அழைப்பை ஏற்க “ஹலோ நித்திலா.. நான் நிலவழகன் பேசுறேன்..” 

 

 “இவன் எதுக்கு இப்ப எனக்கு கால் பண்ணான்?” என்று யோசித்தவாறே “உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் எனக்கு கால் பண்ணாதன்னு.. உன்னை மாதிரி ஆளுங்களோட எல்லாம் பேச எனக்கு டைம் கிடையாது” 

 

 “அப்படியா.. ஆனா எனக்கு நிறைய டைம் இருக்கு.. அது என்ன விஷயம்னா போன முறை நீ அருணோட ஒரு விளையாட்டு விளையாடுனல்ல? அப்போ ஒரு வீடியோ காமிச்சு நான் கூட உன் விளையாட்டை எல்லாம் தூள் தூளாக்கினேனே.. ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான் நிலவழகன்..

 

எதிரில் அமர்ந்து இருந்த தேஜூவின் முகத்தை பார்த்து தர்ம சங்கடமாக நெளிந்தவள் “எக்ஸ்க்யூஸ் மீ தேஜு.. ஒரு முக்கியமான கால்.. நான் கொஞ்சம் உள்ள போய் பேசுறேன்.. நீ தப்பா நினைச்சுக்காத.. கொஞ்சம் பர்சனல்..” என்று சொல்ல தேஜு தலையாட்ட அவள் அருகில் இருந்த பால்கனிக்கு சென்று பேச்சை தொடர்ந்தாள் நிலவழகனுடன்..

 

தேஜூ பால்கனி அருகே சென்று அவள் பேசியதை அவளுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள்..

 

“நிலவழகா..அதான் இப்ப அந்த அருண் வசமா மாட்டிக்கிட்டானே.. காலேஜை விட்டு துரத்தி விட்டுட்டாங்களே அவனை.. இப்ப எதுக்கு அவனைப் பத்தி பேசுற..?” 

 

 “அந்த அருண் இப்ப மாட்டினதும் நீ செஞ்ச சதினாலதானே.. இந்த முறையும் அந்த சதிக்கான ஒரு ப்ரூஃப்… ஒரு வீடியோ ஆதாரம்.. என்கிட்டே இருக்கு.. அதை காலேஜ்ல வந்து போட்டு காமிச்சேன்னு வையேன்.. அருணுக்கு பதிலா உன்னை காலேஜை விட்டு தொரத்திடுவாங்க.. என்ன.. போட்டு காமிக்கட்டுமா?” என்று கேட்டான் நிலவழகன்..

 

அப்படியே அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் பெரிய கலவரமே நடந்து முடிந்தது..

 

“என்ன சொல்ற நீ? நான் என்ன சதி செஞ்சேன்? ஏதாவது உளறாதே..” என்றாள் அவள்..

 

“உன் ஃப்ரெண்டு சரண் இருக்கானே.. அவன் மூலமா வசமா ஒரு வீடியோ ப்ரூஃப் என் கிட்ட மாட்டிகிட்டு இருக்கு.. அதை எடுத்துட்டு வந்து காமிச்சேனா காலேஜ்ல உன் மானம் காத்துல அப்படியே பறக்கும்..” 

 

 “அப்படி என்ன ஆதாரம் வச்சிருக்கே?” 

 

அவள் அப்படி கேட்டதும் தேஜூவுக்கு நித்திலா மேல் சந்தேகம் வலுத்தது.. அதுவரை ஒருவேளை இந்த முறை நித்திலா தவறு செய்திருக்க மாட்டாளோ என்று நினைத்துக் கொண்டிருந்தாள் அவள்..  ஆனால் இப்போது அவள் கேட்ட ஒரு கேள்வியிலேயே நித்திலா அருணுக்கு எதிராக ஏதோ சதி செய்திருக்கிறாள் என்பது உறுதியாகியது.. தொடர்ந்து அவர்கள் உரையாடலை கேட்க ஆரம்பித்தாள் தேஜூ..

 

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!