அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥

4.9
(9)

பரீட்சை – 47

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என்னை பார்ப்பதற்கு 

ஏதோ ஒரு 

காரணம் சொல்லி 

தினம் தினம் 

கண் முன் வந்து 

நின்றாள்

காரிகை அவள்..

 

கண்களில் காதலோடு 

நிற்கும் 

உள்ளம் களவாடிய

கள்ளி அவளை

அருகில்

கண்ட பிறகு 

தள்ளி வைக்க

காளை மனம் 

துணியவில்லை..

 

ஆனாலும் வேறு 

வழி இல்லை

ஆடவன் இவனுக்கு.. 

ஆசையோடு

வருபவளை 

அடுக்கடுக்காய் 

வன்மொழிகள் பேசி 

வசை பாடி

வெளியேற்ற முயன்றேன் 

அவளை 

என் 

வாழ்விலிருந்து..

 

##################

 

விழியோடு விளையாடாதே…!!

 

“இவனை இப்படியே விட்டுடுங்க.. செத்து போகட்டும்.. இவன் உயிரோட இருந்தா என்னையும் என் குடும்பத்தையும் நாசம் பண்ணிடுவான்..” 

 

குரலில் சிறிதும் இரக்கமில்லாமல் சொன்ன தேஜூவை நம்பமுடியாமல் வைஷுவும் விஷ்வாவும் விழியை அசைக்காமல் பார்த்திருந்தார்கள்..

 

“அம்மா.. அவ சொல்றான்னு அப்படியே விட்டுடாதீங்கம்மா.. பாவம்மா புள்ள… ஏதாவது பண்ணுங்கம்மா.. ஈரமே இல்லாத கொடுமைக்காரியா இருக்காளே இந்த பொண்ணு..” என்று சொன்ன கல்யாணி அம்மாள் “புள்ளைக்கு ரொம்ப ரத்தம் போகுதும்மா.. ஏதாவது ஆயிடப்போகுது” என்று பரிதவித்து சொன்னாள் வைஷூவின் தோள்களைப் பற்றி..

 

“அம்மா கவலைப்படாதீங்கம்மா.. அவருக்கு கொஞ்ச நேரம் ரத்தம் வந்து இப்போதைக்கு நின்னுருச்சு.. நாங்க பத்திரிகைக்காரங்க.. ஃபர்ஸ்ட் எய்ட் எப்படி பண்ணறதுன்னு எங்களுக்கு தெரியும்.. ஃபர்ஸ்ட் எய்ட் கிட் எங்க இருக்குன்னு சொல்றீங்களா? நான் அவருக்கு முதல் உதவி பண்ணிடுறேன்..” வைஷூ சொல்ல அந்த அம்மாள் வேகமாய் அந்த அறையை விட்டு வெளியே எங்கோ ஓடினார்..

 

வரவேற்பறைக்கு சென்று அங்கிருந்த அலமாரியில் ஏதேதோ அறையை திறந்தவர் ஒரு முதல் உதவி பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து வைஷுவிடம் கொடுத்தார்..

 

“அம்மா தாயே.. முதல் உதவி பண்ணறத்துக்காவது யோசிச்சியே.. அந்த பொண்ணை மாதிரி அந்த புள்ளைய சாக விட்டுடாதே.. எவ்வளவோ பேரு வாழ்க்கைல ஒளி ஏத்தி வச்ச பிள்ளை மா அது.. அதை எப்படியாவது கண்ணு முழிக்க வச்சிடுங்கம்மா..” என்றார் கல்யாணி அம்மாள்..

 

அதன் பிறகு வைஷு வேக வேகமாக அருணுக்கு முதலுதவி செய்யும் வேலையில் இறங்கினாள்.. தலையை சுத்தம் செய்து கட்டு போட்டுவிட்டு மயக்கம் தெளிய வைக்கும் வெவ்வேறு முறைகளை கையாண்டு கண்களை தண்ணீரால் துடைத்துக் கொண்டே இருந்தவள் அருண் லேசாக அசைய தொடங்கவும் “ஆன்ட்டி அவரு கண்ணு முழிக்கிறாரு..” என்று கல்யாணி அம்மாவிடம் சொன்னாள்..

 

கல்யாணி அம்மாள் “அம்மா.. மகமாயி.. கருமாரி.. என் புள்ளைய காப்பாத்திட்ட.. அப்பா அருணு.. தம்பி அருணு.. அருணு.. எழுந்திருப்பா..” என்று சொல்ல அருண் தலையை அசைத்தபடி மெதுவாக கண்ணை திறந்தான்..

 

தன் எதிரில் அழுதுக் கொண்டிருந்த கல்யாணி அம்மாவை பார்த்து “கல்யாணி அம்மா.. எனக்கு ஒன்னும் இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன்.. பின்னாடி தலையில லேசா வலி இருக்கு.. மத்தபடி ஒன்னும் இல்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்..” என்று சொன்னவன் அப்போதுதான் அங்கே தன் பக்கத்தில் தண்ணீருடன் அமர்ந்து இருந்த வைஷுவை கண்டான்..

 

அவளைக் கண்ட மாத்திரத்தில் அவன் விழிகள் கோவத்தில் விரிந்தன.. 

 

அதைப் பார்த்த விஷ்வா “இன்னிக்கி ரெண்டு பேரும் பலி தான்.. இவனை காப்பாத்துனதுக்கு எங்களை போட்டு தள்ள போறான்..” என்று  எண்ணி அருண் கண்ணில் படாமல் அவன் தலை பக்கமாக அவன் பார்வையில் இருந்து மறைந்து நின்று கொண்டிருந்தான்.. 

 

அருண் கஷ்டப்பட்டு தலையை திருப்பி அங்கே தேஜூ நின்று கொண்டிருப்பதை பார்த்தவன் “அஷ்ஷூம்மா.. நீயும் இங்கதான் இருக்கியா? ஆமா.. என் தலையில கட்டையால அடிச்சாரே அந்த வீரரு.. சூரரு… அவரு எங்க?” என்று கேட்க  விஷ்வா மெதுவாக அவன் முன்னே வந்தான்..

 

“வாடா வா.. என்ன.. நீயும் இந்த வைஷூவும் சேர்ந்து அந்த டைரியை முழுசா படிச்சுட்டீங்களா?” 

 

ஏதோ அதுவரை மயக்கத்தில் இல்லாமல் நேரில் பார்த்தது போல அவன் கேட்க “இல்ல சார்.‌. பாதி தான் படிச்சோம்.. அதுக்குள்ள உங்க தலையில ரத்தம் வர்றதை பார்த்து வைஷூ தான் அதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணா..” என்று சொன்னான் விஷ்வா..

 

மிகவும் கஷ்டப்பட்டு அருண் படுக்கையில் இருந்து எழ முயல அவன் முதுகை பிடித்து தலையணையை நிமிர்த்தி போட்டு சாய்ந்து படுக்க உதவினர் வைஷுவும் கல்யாணியம்மாவும்..

 

தன்னறையை சுற்றி பார்த்தவன் அங்கே தன் டைரி மூலையில் தூக்கி எறியப்பட்டு இருப்பதை பார்த்து புன்னகைத்தான்..

 

பிறகு தேஜுவை பார்த்து “படிக்கிறதுன்னு ஆயிடுச்சு.. முழுசா படிக்க வேண்டியதுதானே அஷ்ஷூம்மா..? ஏன் பாதியில டைரியை தூக்கி எறிஞ்சிட்ட?” 

 

“ஏன்னா.. உன் திட்டமெல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு.. இந்த மாதிரி ஒரு கதை எழுதி என் வாழ்க்கையை கெடுத்து என் மேல இருக்கிற ஆசையை தீர்த்துக்கலாம்னு தானே நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க.. இந்த டைரியில இருக்கறதெல்லாம் உண்மை இல்லை..” வெறுப்பாய் பேசினாள் அவள்..

 

சத்தமாக சிரித்தவன் பின்னந்தலையில் லேசாக வலி எடுக்க முகத்தை சுளித்தான்.. 

 

பிறகு “அஷ்ஷூம்மா.. நீ அந்த டைரியில இருக்கறதை நம்பவே இல்லைன்னு வச்சுக்கோயேன்.. அதை இப்படி தூக்கி எறிஞ்சி இருக்க மாட்டே.. நீ அந்த டைரில இருக்கிறது உண்மைன்னு புரிஞ்சுக்கிட்டதினால தான் அதை தூக்கி எறிஞ்சிருக்க.. நான் உனக்கு ஒன்னு சொல்றேன்.. நீ மிச்ச கதையையும் படி.. அப்புறம் உனக்கே புரியும் அதில இருக்கிற ஒவ்வொரு எழுத்தும் உண்மைனு..” 

 

“நீ எவ்வளவுதான் இப்படி உருக்கமா உண்மைனு நம்பற மாதிரியே கதை எழுதினாலும் நான் அந்த கதையை நம்ப மாட்டேன்.. ஏன்னா என் காதல் மேலயும் என் மனசு மேலயும் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு.. உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் காத்திருந்தேன்.. அதான் கண்ணு முழிச்சிட்ட இல்ல..? நான் கிளம்புறேன்.. இனிமே நான் இங்க இருக்க மாட்டேன்..” 

 

“அதான் உன் மாஜி புருஷன் மேல வச்சிருக்கற காதல்ல உனக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்குனு சொல்ற இல்ல? அப்புறம் ஏன் என் டைரியை பார்த்து பயந்து தப்பிச்சு ஓடுற? உனக்கு தைரியம் இருந்தா என் டைரியை முழுசா படி.. அதுக்கப்புறம் உனக்கு நம்பிக்கை வரலைன்னா பார்க்கலாம்..” 

 

“நீ பத்தாயிரம் டைரியை காமிச்சாலும் எனக்கு நம்பிக்கை வராது.. நான் உன்னை பார்த்து உன் டைரியை பார்த்து பயந்து ஓடல.. என் ராம் நான் இல்லாம அங்க எப்படி தவிச்சிட்டு இருக்காரோ? நான் அவரை பாக்கணும்னு தான் ஓடறேன்..” 

 

“அவ்வளவு தானே.. இந்த டைரியை படிச்சு முடி.. நானே உன் ராம் கிட்ட உன்னை கூட்டிட்டு போறேன்.. இந்த டைரியை படிச்சப்பறமும் உனக்கு நம்பிக்கை இல்லைன்னா இந்த டைரியில இருக்கிற அத்தனை இடங்களுக்கும் உன்னை கூட்டிட்டு போய் உண்மை என்னன்னு நான் நிரூபிக்கிறேன்.. ஆனா ஃபேஸ் பண்ண நீ ரெடியா இருக்கியா? உன் காதல் மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்கா? உன் காதல் மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்குன்னா என் காதல் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. நான் எதுக்காக இங்க வந்தேனோ அந்த வேலையை முடிக்காம போக மாட்டேன்..” 

 

“நீ எதுக்காக தான் வந்த? அதையாவது சொல்லி தொலையேன்.. இப்படி ஏன் என் உயிரை வாங்குற?” 

 

“அதை தான் நான் வந்ததிலிருந்து சொல்லிட்டு இருக்கேனே அஷ்ஷூம்மா.. நான் வந்தது உன்னோட வாழறதுக்கு தான்.. நீ என் பொண்டாட்டி அஷ்ஷூம்மா.. உன்னை விட்டுட்டு நான் எப்படி தனியா இருக்க முடியும்? உன் கூட வாழலாம்னு தான் வந்தேன்..” அவன் சொன்னதை கேட்டு தன் தலையில் அடித்துக் கொண்டாள் தேஜு..

 

“சரி.. உனக்கு ஒரு சேலஞ்ச்.. நீ இந்த டைரியை படி.. அப்படியும் உனக்கு நம்பிக்கை வரலைனா நம்ப காதலிச்ச இடங்களுக்கு எல்லாம் உன்னை கூட்டிட்டு போய் நான் காட்டுறேன்.. அதுக்கப்புறமும் நம்பிக்கை வரலைன்னா நானே உன்னை கூட்டிட்டு போய் அந்த ராமோட சேர்த்து வைக்கிறேன்.. ஆனா ஒருவேளை நம்ம காதல் உண்மைன்னு உனக்கு நிரூபிச்சிட்டேன்னா நீ என்ன பண்ணுவ? என்னோடு சேர்ந்து வாழறியா?” 

 

“உன் கனவுல கூட அது நடக்காது.. ஒரு வேளை நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு நிரூபிச்சிட்டேனா அந்த நிமிஷமே நான் என் உயிரை விட்டுடுவேன்.. என் ராமை தவிர வேற யாரு கூடயும் நான் வாழ மாட்டேன்..” 

 

“நீ அப்படி சொன்னா உன் உயிரை அவ்ளோ ஈஸியா விட விடுவேனா? உன்னை வாழ வைக்காம நான் போக மாட்டேன்.. நீ நல்லா வாழணும்.. சந்தோஷமா வாழணும்.. நான் உனக்கு உலகத்துல இருக்குற அத்தனை சந்தோஷத்தையும் கொடுக்கணும்.. அதுக்கு தான் நான் இவ்வளவும் செஞ்சேன்.. இதெல்லாம் வீணாகுற மாதிரி உன்னை சாக விடமாட்டேன்.. அப்படியே செத்தாலும் உன் உயிர் போறதுக்கு முன்னாடி என் உயிர் போயிடும்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் உன்னை காப்பாத்திட்டே தான் இருப்பேன் அஷ்ஷூம்மா.. அந்த எமனை கூட உன்னை நெருங்க விட மாட்டேன்.. அப்புறம் உன் ராமெல்லாம் எந்த மூலைக்கு..? அவனெல்லாம் உன்னை தொடவே முடியாது..” திமிராய் சொன்னவனை முறைத்து பார்த்தாள் தேஜூ..

 

“வைஷு அந்த டைரியை எடுத்து படி.. அதுல இன்னும் அப்படி என்னதான் எழுதி இருக்கான்னு நான் பாக்குறேன்..” என்றாள் தேஜூ அவள் பக்கம் திரும்பாமலே அருணை முறைத்தபடி..

 

######################

 

அன்று அருணிடம் காதல் சொல்லிய பிறகு தேஜு தினமும் அவனிடம் சென்று அதே நேரத்தில் அதே போல் ஒரு ரோஜா மலரை கொடுத்து காதல் சொல்வதை வழக்கமாய் வைத்திருந்தாள்.. அருணும் பதிலுக்கு அவளை கன்னத்தில் அடிப்பதை வழக்கமாய் வைத்திருந்தான்.. ஆனால் அந்த அடிகளும் திட்டுக்களும் தேஜுவின் மனதை துளியும் அசைக்கவில்லை..

 

இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் அவளிடம் “உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் எதுவுமே கிடையாதா? தினமும் உன்னை அடிக்கிறேன்.. அப்ப கூட மறுபடி மறுபடி வந்து இதையே பண்ணிட்டு இருக்கே.. காதல் கத்திரிக்காய்னு கிடந்து அலையாம ஒழுங்கா படிக்கிற வழியை பாரு..”  

 

“டேய் அருண் செல்லம்.. நான் இந்த டைம்க்கு வந்து உன்கிட்ட லவ் சொல்வேன்னு உனக்கு தெரியுது இல்ல? அப்போ நீ கிளம்பி போக வேண்டியது தானே.. நான் வந்து லவ் சொல்லுவேங்கறதுக்காகத்தானே நீ இங்கயே உக்காந்து காத்துக்கிட்டு இருக்க.. என்னை அடிக்கிற அளவுக்கு என் மேல வெறுப்பு இருக்கிறவன் எனக்காக எதுக்கு காத்துட்டு உட்கார்ந்து இருக்கணும்?”

 

“நான் இந்த காலேஜ் வந்து சேர்ந்த நாளா இந்த மாதிரி தெனமும் சாயங்காலம் இந்த டைம்ல உட்கார்ந்துட்டு இருக்கேன்.. இப்ப நீ பண்ற பைத்தியக்காரத்தனத்துக்காக நான் எதுக்கு என் பழக்கத்தை மாத்திக்கணும்? சரி தான் போடி.. உனக்கு பயந்துட்டு சீக்கிரம் ஓடி போறதுக்கு வேற யாராவது ஒரு ஆளை பாரு.. நான் யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்..”

 

அவளை முறைத்துப் பார்த்து சொன்னவனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவள் “கோவப்படும்போது கூட ரொம்ப அழகா இருக்கடா.. அதனாலதான் நீ எவ்வளவு கோபப்பட்டாலும் என்னோட லவ் ஏறிக்கிட்டே போகுது..” என்றவள் “லவ் யூ டா க்யூட்டி..” என்று சொல்லிவிட்டு அவனுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தவள் எப்போதும் போல அவன் முறைப்பையே பதிலாக வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

 

அவள் சென்ற பிறகு இதழோரமாய் லேசாக புன்னகைத்தவன் சட்டென அவள் திரும்ப தன் புன்னகையை மறைத்துக் கொண்டான்..

 

ஆனால் திரும்பி வந்த அவளோ “சிரிச்சா எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? அதை எதுக்கு மறைச்சு வைக்கிற? நல்லா தான் சிரியேன்டா..” என்று சொல்ல “சிரிச்சாங்களா? யாரு சிரிச்சாங்க?  நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு சுத்தாத.. உன் மூஞ்சியெல்லாம் பார்த்தா சிரிப்பு வராது.. வெறி தான் வருது.. அப்படியே கொன்னு போடணும் போல..” என்று சொல்லிவிட்டு வேறு பக்கமாக திரும்பி கொண்டு அமர்ந்து விட்டான் அருண்..

 

“உண்மையான காதலை ரொம்ப நாளைக்கு மறக்க முடியாது மிஸ்டர் அருண்.. என்னைக்காவது ஒருநாள் வெடிச்சு உடைச்சு வருதா இல்லையா பாருங்க.. நான் வர வைக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வேகமாய் கல்லூரி வாசலை நோக்கி சுமியுடன் நடந்தாள் தேஜு..

 

அன்று விடுமுறை நாள்.. அருண் அவனுடைய மெக்கானிக் கடையில் மும்முரமாக ஒரு காருக்குள் தலையை நுழைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான்..

 

அப்போது வெளியே சின்ன பையன் ஒரு இருசக்கர வாகனத்தின் டயரில் பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தான்..

 

அப்போது அவனுக்கு முன்னால் வந்து நின்ற வண்டியை பார்த்தவன் நிமிர்ந்து பார்க்க அந்த வண்டியில் தேஜூவும் சுமியும் அமர்ந்திருந்தார்கள்..

 

“வாங்கக்கா.. எப்படி இருக்கீங்க? இன்னைக்கும் எங்க கடைக்கு முன்னாடி ஆணி போட்டு உங்க வண்டியை பஞ்சர் பண்ணிட்டோமா?” 

 

சின்ன பையன் நக்கலாய் கேட்க “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. வண்டில ஒரு சின்ன ப்ராப்ளம்.. அதான் ரிப்பேர் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்..” 

 

தேஜூ சொல்ல அவள் குரலை கேட்டவன் காருக்குள்ளிருந்து தலையை எடுத்து திரும்பி பார்த்தான்..

 

இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ள அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.. 

 

“வந்துட்டியா? இன்னிக்கு நாள் ஒழுங்கா போனா மாதிரி தான்..” 

 

அவளை முறைத்துக் கொண்டே சொன்னவன் “டேய் சின்ன பையா.. அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டனுப்புடா.. நிறைய வேலை இருக்கு நம்மளுக்கு.. வெட்டியா பேசறதுக்கு நேரம் கிடையாது..” 

 

சின்ன பையனிடம் சொல்லிவிட்டு மறுபடியும் காருக்குள் தலையை புகுத்திக் கொண்டான்..

 

“அதான் கேட்டீங்க இல்ல.. சொல்லுங்கக்கா.. வண்டியில என்ன பிரச்சனை?” 

 

சின்ன பையன் கேட்க “அதுவாடா.. என் வண்டி உங்க அண்ணனை பார்த்தா மட்டும்தான்டா பிரேக் பிடிக்குது.. மத்த எந்த இடத்திலயும் பிரேக் பிடிக்க மாட்டேங்குது.. கொஞ்சம் என்ன பிரச்சனைன்னு உங்க அண்ணனையே பாத்து சொல்ல சொல்லுடா” அர்த்தமாய் அருணை பார்த்து கொண்டே சொன்னவளை காருக்குள்ளே இருந்து தலையை எடுத்து முறைத்தான் அருண்..

 

“ஓ.. அப்படியா எனக்கு புரிஞ்சிருச்சுக்கா.. ஆனா அண்ணன் இந்த மாதிரி வண்டி எல்லாம் ரிப்பேர் பண்ண மாட்டாரு.. நான் தான் பார்க்கணும்.. இந்த வண்டிக்கு பஞ்சர் ஒட்டிட்டு உங்க வண்டியில என்ன பிராப்ளம்னு பார்க்கிறேன்..” என்று சின்ன பையன் சொல்ல அருண் “டேய்.. அந்த வண்டியை விட்டுட்டு போக சொல்லு நானே ரிப்பேர் பண்றேன்” என்றான்.. 

 

அவனை ஆச்சரியமாக பார்த்தான் சின்ன பையன்.. எவ்வளவோ பெண்கள் அவன் பார்வைக்காக ஏங்கி வண்டியை பார்க்கச் சொல்ல அப்போதெல்லாம் முடியாது என்று சொன்னவன் இப்போது இந்த வண்டியை பழுது பார்க்கிறேன் என்று சொல்வதை அவனுக்கு நம்பவே முடியவில்லை..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!