அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 48🔥🔥

5
(9)

 

பரீட்சை – 48
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

மலர் அவள்
தன் உயிரையும்
மதிக்காது
துச்சமாய் நினைத்து

மாண்டாலும் கவலை
இல்லை என
மரணத்தை
நோக்கி போக

எனக்காக சிறிதும்
யோசிக்காமல்
இறக்கவும்
உயிர்
துறக்கவும்
துணிந்தவளை..

எப்படி இழப்பேன்
நான்
என்னுடைய
இன்னுயிரை…?!

################

உயிர் காவலனோ? காதலனோ?

“அந்த வண்டியை விட்டுட்டு போக சொல்லு நானே ரிப்பேர் பண்றேன்” என்ற அருணை ஆச்சரியமாக பார்த்தான் சின்ன பையன்..

“அண்ணே.. நெஜமாவா சொல்றீங்க.. நீங்களே ரிப்பேர் பண்ண போறீங்களா?” என்று கேட்க “ஆமாண்டா நானே ரிப்பேர் பண்றேன்.. அவங்களை போயிட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சு வர சொல்லு..” என்றான்..

“அதெல்லாம் வேண்டாம்.. நான் இங்கேயே உக்காந்து காத்துகிட்டு இருக்கேன்.. அவரை ரிப்பேர் பண்ணி தர சொல்லு.. அரை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை..” என்று சொன்னவள் அங்கேயே அமர்ந்து விட்டாள் சுமியோடு..

அவன் மும்முறமாய் அவள் பார்வையை தவிர்த்து வேலை செய்து கொண்டிருக்க அவனை ரசனையாய் உருகி உருகி பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சின்ன பையன் “அக்கா நிறைய பேரு இப்படித்தான் அவருக்கு ரூட்டு விட்டுட்டு இருக்காங்கக்கா… ஆனா இவர் மசியவே மாட்டாரு..” அவள் அருகில் குனிந்து ரகசியமாய் சொன்னான்..

“நீ சொன்ன நிறைய பேரு என்னை மாதிரி இருந்தாங்களாடா? உங்க அண்ணன் அந்த நிறைய பேர்ல யாரோட வண்டியையாவது ரிப்பேர் பண்றேன்னு சொல்லி இருக்காரா?”

“அதுதான்கா எனக்கும் ஆச்சரியமா இருக்கு.. அவரு இதுவரைக்கும் எந்த பொண்ணோட வண்டியையும் ரிப்பேர் பண்ணது இல்ல.. சட்டுனு உங்க வண்டியை ரிப்பேர் பண்றேன்னு சொல்லிட்டாரு.. என்னால நம்பவே முடியலக்கா..”

“டேய்.. இனிமே என்னை நீ அண்ணின்னு தான் கூப்பிடனும்.. அக்கான்னு கூப்பிட்ட பல்ல பேத்துருவேன்” என்று தேஜூ சொல்ல “அப்படியா.. அண்ணின்னு கூப்பிட்டா போச்சு..”  சந்தோஷத்தில் சத்தமாக சொன்னவனை திரும்பிப் பார்த்தான் அருண்..

“கொஞ்ச நேரத்துல வேலையை முடிச்சிட்டு வரேன்னா அதுக்குள்ள நீ தேவையில்லாத கதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கியா? இதோ வரேன்..” அந்த காரில் இருந்து கையை எடுத்து துடைத்துக் கொண்டு தேஜுவின் வண்டிக்கருகில் வந்தான் அருண்..

“அண்ணே.. அண்ணி வண்டிய ரிப்பேர் பண்ண வந்துட்டீங்களா? பாருங்க.. வண்டியில என்ன கோளாறுன்னு..”

“கோளாறு வண்டியில இல்ல.. அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்.. இப்ப சரி பண்ணிடறேன்”

தேஜூவை புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவள் வண்டியில் இருந்த பிரேக் ஒயரை ஒரு கத்திரிக்கோல் வைத்து அப்படியே அறுத்து விட்டான்..

சின்ன பையன் பதறி “அய்யய்யோ.. என்னண்ணே.. பிரேக் ஒயரை கட் பண்ணிட்டீங்க? அவங்க ஓட்டிட்டு போனாங்கன்னா எங்கேயாவது போய் முட்டி ஆக்சிடென்ட் ஆயிட போகுது..” என்க “போகட்டும்.. அப்படியாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்.. அதுக்கப்புறம் நல்லா இருக்குற வண்டியை கொண்டு வந்து ரிப்பேர் பண்ணுன்னு நம்மள டார்ச்சர் பண்ணாம இருப்பாங்கல்ல?” அவளை முறைத்துக் கொண்டே சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து போனான்..

“டேய்.. சின்ன பையா.. உங்க அண்ணன் என்ன என்னை கொல்ல பார்க்கிறாரா? கொன்னாலும் ஆவியா திரும்பி வந்து அவர் பின்னாடி தான்டா சுத்துவேன்.. சொல்லி வை அவர்கிட்ட..”

தேஜூ அருணை பார்த்து உதட்டை சுழித்து சொல்ல “அண்ணி இதுக்கே பிரேக் ஒயரை அறுத்துட்டாரு.. நீங்க வேற ஏகத்துக்கு பேசுறீங்க.. வேற ஏதாவது ரொம்ப டேமேஜ் பண்றதுக்கு முன்னாடி வண்டியை தள்ளிட்டு போங்க அண்ணி.. எப்படியும் அதை ஓட்டிட்டு போக முடியாது..” என்றான் சின்ன பையன்..

“உங்க அண்ணன் நான் இந்த வண்டியை இப்படியே ஓட்டிட்டு போகணும்னு தானே ரிப்பேர் பண்ணி கொடுத்தாரு.. இப்படியே ஓட்டிட்டு போறேன்.. எனக்கு என்ன ஆனா அவருக்கு என்ன.. என்ன வேணும்னா ஆகட்டும்.. எனக்கும் அதைப் பத்தி கவலை இல்லை.. அவரு என்ன ஆசைப்படுறாரோ அதுவே நடக்கட்டும் ” என்று சொல்லி வண்டியில் ஏறி அமர்ந்தாள் தேஜு..

அதைக் கண்டு பதறி போன சின்ன பையன் “அண்ணி.. வேணா அண்ணி.. வண்டி எங்கயாவது மோதிரும் அண்ணி.. அண்ணே.. அவங்க வண்டி எடுத்துட்டு போறாங்கண்ணே..”

பதைபதைப்புடன் சொன்னவனிடம் “மெதுவா ஓட்டிட்டு போய் காலை கீழ வச்சு நிறுத்திடுவாடா.. நீ வேலையை பாரு..” என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினான் அருண்..

“ஓ அப்படி நினைச்சுட்டு இருக்காரா உங்க அண்ணன்.. இப்ப பாரு..” என்று சொல்லி “வா சுமி.. போலாம்” என்றாள்..

இதுவரை எல்லாவற்றையும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த சுமி “என்னது வா சுமியா? ஏய்.. அவர் பிரேக் வயரை அறுத்துவிட்டு இருக்காரு.. ஏதாவது ஏடாகூடமா பண்ணி வைக்காத.. நீயும் வா.. நடந்து வீட்டுக்கு போலாம்..” என்று சொல்ல “இப்ப நீ வரியா இல்லையா?” என்று கேட்டாள் தேஜூ..

“என்னடி விளையாடுறியா? உன் காதலுக்காக நீ உயிர் தியாகம் பண்ணு.. நான் எதுக்கு பண்ணனும்? நானெல்லாம் வரல.. நீ மட்டும் போயிட்டு வா.. உனக்கு ஏதாவதுன்னா உன் அருண் வந்து காப்பாத்துவாரு.. என்னை காப்பாத்த யாரும் வர மாட்டாங்கப்பா.. நான் இப்படியே பொடி நடையா நடந்து வீட்டுக்கு போயிடுவேன்.. ஆளை விடு..” என்று சொல்ல அதற்கு மேல் அவள் பேசுவதை கேட்காமல் சின்ன பையனும் சுமியும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தேஜூ வேகமாய் வண்டியை கிளப்பினாள்..

இருவரும் பதறி போக சின்ன பையன் “அண்ணே அண்ணே.. அவங்க வேகமா வண்டி எடுத்துட்டு போறாங்கண்ணே.. எதிர பெரிய பெரிய வண்டியா வேற வருதுண்ணே..!?” என்று கத்த அதைக் கேட்டு சிறிது பதறிய அருண் வெளியே ஓடி வந்தான்..

வண்டியை எடுத்துக்கொண்டு போனவள் எதிரில் பெரிய பெரிய லாரிகளும் பேருந்துகளும் வந்து கொண்டிருக்க அப்படியும் இப்படியும் வேகமாய் வளைந்து நெளிந்து ஓட்டி அவற்றை இடிப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தாள் தேஜூ..

மிகவும் கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிக்கொண்டு போனவளின் பின்னே தன் வண்டியில் துரத்திக் கொண்டு போனான் அருண்..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவள் வண்டியை அவன் எட்டி இருந்தாலும் அவள் சீறிப்பாய்ந்து வேகமாக போய்க் கொண்டிருந்தாள்.. வண்டியின் வேகத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொண்டு இருந்தாளே தவிர குறைக்கவில்லை..

“ஏய் அஸ்வினி.. ஸ்பீடை குறை.. வண்டி ஸ்பீட குறை.. சொன்னா கேளு..” என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னே சென்றவனிடம் “எதுக்கு..? நான் எதுக்கு ஸ்பீடை குறைக்கணும்? நான் போய் சேரணும்னு தானே வண்டி பிரேக் வயரை கட் பண்ணி விட்ட.. நான் போய் சேர்றேன்.. இனிமே என் தொல்லை இல்லாம இரு..” என்று சொன்னவளிடம் “ஆமா.. நீ என்னை எப்படியாவது என்ன லவ் பண்ணி வச்சு காட்டுகிறேன்னு சவால் விட்ட? அவ்வளவுதானா உன் சவாலு.. அதுல தோத்துப்போனதுனால தான் உன் உயிரை விட துணிஞ்சிட்டயா?” என்று கேட்டான் வேண்டுமென்றே அவளை சீண்டும் விதமாக..

“இதோ.. இப்படியே நான் எங்கேயாவது போய் ஆக்சிடென்ட் ஆகி செத்து போயிட்டேன்னா அதுக்கப்புறம் என்னை நெனச்சு நீ ஃபீலாவது பண்ணுவ இல்ல..? அப்போ உன் மனசுல என்னை பத்தி அந்த ஒரு நிமிஷம் நினைப்ப இல்ல? அந்த லவ் ஃபீலிங் போதும் எனக்கு.. நான் இப்படியே போறேன்..” என்று சொன்னவள் பேச்சு சுவாரஸ்யத்தில் வண்டியின் வேகத்தை சிறிது குறைத்திருந்ததை பார்த்தான்..

80 கிலோமீட்டரில் இருந்து வண்டி அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது..

“நான் சொல்றதை கேளு.. கொஞ்சம் வண்டியோட வேகத்தை கம்மி பண்ணு.. நீ செத்துப்போனா உனக்காக எல்லாம் நான் ஃபீல் பண்ண மாட்டேன்.. ஒரு தொல்லை விட்டுதுன்னு நிம்மதியா இருப்பேன்.. இதுதான் உனக்கு வேணுமா..? இப்ப கூட உன் பிரேக் ஒயரை நான் கட் பண்ணி விட்டதனால என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்களேன்னு தான் உன்னை காப்பாத்த வந்தேன்.. ஆனா இப்போ உன்னை காப்பாத்த முடியாம நான் ஜெயிலுக்கு போனாலும் கடைசி வரைக்கும் உன் சேலஞ்சில நீ தோத்துட்டேங்கிற சந்தோஷத்துல நான் ஜாலியா இருப்பேன்.. ஆனா நீ தான் உன் லவ் சேலஞ்சில தோத்து ஆவியா அலைஞ்சுகிட்டு இருப்பே”

பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தவன் அவள் இவன் பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் இன்னும் வேகத்தை குறைத்து இருப்பதை பார்த்தான்..

“அஸ்வினி.. அப்படியே உன் காலை கீழ வச்சு இன்னும் ஸ்பீடை குறை..” என்று அவன் சொல்லும் போது தான் வேகத்தை குறைத்து இருக்கிறோம் என்று உணர்ந்தவள்.. வண்டியின் வேகத்தை ஏற்ற முயல தன் இடது கையால் ஆக்ஸெலரேட்டரில் இருந்த அவள் கையை அசைக்க முடியாமல் பிடித்துக் கொண்டான் அருண்..

வண்டியை வேகமாக ஓட்டி உயிரை விடுவதில் அவள் தீவிரமாய் இருக்கிறாள் என்று உணர்ந்தவன் சிறிது பதறித்தான் போனான்..

இனிமேல் பேசி வேலைக்காகாது என்று உணர்ந்தவன் தன் வண்டியை அவள் வண்டி அருகில் எடுத்துச் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் இடையில் தன் கையை வைத்து அவளை அப்படியே தன்னோடு சேர்த்துக் கொண்டான்.. அவளை தூக்கிய அந்த நொடி வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேகமாய் சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அப்படியே பின்னால் தூக்கி எறியப்பட்டு விழுந்தது..

அதைப் பார்த்து அதிர்ந்தவள் பயத்தில் உடல் நடுக்கமெடுக்க அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவன் கழுத்து வளைவில் புதைந்து கொண்டாள்..

அப்படியே வண்டியை ஓட்டிக் கொண்டு போய் தூரத்தில் பிரேக் போட்டு நிறுத்தியவன்.. அவள் பயத்தில் நடுங்கியபடி இன்னும் அவனை இறுக்க கட்டிக் கொண்டிருக்க அவள் முதுகில் தன் கையால் வருடி “ஒன்னும் இல்லை.. உனக்கு ஒன்னும் ஆகல.. பயப்படாத..” என்று சொல்ல அவளோ பயத்தில் உடல் நடுங்க அவனோடு தன்னை இன்னும் இறுக்கிக் கொண்டாள்..

அவள் படபடப்பு அடங்கி சற்று ஆசுவாசம் அடைந்தவுடன் அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்..

“அறிவிருக்கா உனக்கு..? உனக்கு அம்மா அப்பா இல்ல? அவங்களை எல்லாம் ஒரு நிமிஷமாவது யோசிச்சு பாத்தியா? பார்த்து கொஞ்ச நாள் தான் ஆன எனக்காக உயிரை விட கிளம்பிட்டே.. இதோட கடைசி.. இனிமே இப்படி ஏதாவது பண்ணின.. அப்புறம் அன்னிக்கு என்கிட்ட வந்து பெருசா வியாக்கியானம் பேசினாரே உங்கப்பா.. அவரை கூப்பிட்டு நானே எல்லா விஷயத்தையும் சொல்லி விருப்பம் இல்லாத என்னை உங்க பொண்ணு தன்னை விரும்ப சொல்லி ஃபோர்ஸ் பண்றான்னு சொல்லிடுவேன்.. இதோட என் பின்னாடி சுத்துற வேலையை நிறுத்திக்கோ.. இப்போ உன்னை காப்பாத்தினேன்னு கற்பனை உலகத்துல சஞ்சரிக்க ஆரம்பிச்சிடாதே.. இப்போ உன்னை காப்பாத்துனதுக்கு காரணம் என்மேல கொலை பழி எதுவும் வந்துடக்கூடாதுன்னு தான்.. இப்ப ப்ரேக் ஒயரை பிடுங்கி விட்டேன் இல்ல.. இதுலேர்ந்தே புரிஞ்சுக்க.. உன் மேல நான் எவ்வளவு வெறுப்புல இருக்கேன்னு…. பார்த்து நடந்துக்க.. சொல்லிட்டேன்..” தன் சுட்டு விரலை அவள் முகத்தின் முன்னாள் காட்டி மிரட்டினான்..

அவன் விரலை தன் கையால் பிடித்தவள் “அருண் கண்ணா.. நீ என்னை காப்பாத்துனதுக்கு என்ன காரணம் வேணும்னாலும் சொல்லி சமாளிச்சுக்கோ.. ஆனா நான் உன்னை லவ் பண்ணது லவ் பண்ணது தான்.. எங்கப்பா கிட்ட வந்து சொல்ல போறியா? சொல்லிக்கோ.. அதை பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்லை.. ஏன்னா நான் ஒருத்தரை விரும்புகிறேன்னு சொன்னா அவர் எப்பேர்ப்பட்ட நல்லவரா இருப்பாருன்னு எங்க அப்பாக்கு புரியும்.. நிச்சயமா அவர் எனக்கு சப்போர்ட்தான் பண்ணுவார்..”

“உங்கப்பா உன் காதலுக்கு வேணா பச்சை கொடி காட்டலாம்.. ஆனா விருப்பம் இல்லாத ஒருத்தரை காதலிக்க சொல்றதை உங்க அப்பா நிச்சயம் விரும்பமாட்டார்.. அவரை பார்த்த அன்னிக்கே அவரை பத்தி எனக்கு தெரிஞ்சுடுச்சு..” 

“ஆமா.. நான் எப்போ உன்னை என்னை விரும்ப சொல்லி ஃபோர்ஸ் பண்ணேன்? இன்னிக்கு வரைக்கும் நான் உன்னை விரும்புறேன்னு தான் சொல்லிட்டு இருக்கேனே தவிர.. என்னைக்காவது நீயும் என்னை விரும்பி தான் ஆகணும்னு நான் சொல்லி இருக்கேனா? ஆனா உன் கண்ணுல எனக்கு காதல் தெரியுது.. ஆனா அதை நீ சொல்லித்தான் ஆகணும்னு நான் என்னைக்குமே உன்னை ஃபோர்ஸ் பண்ணதில்லை.. நீ எங்கப்பாவோட பேசினா எங்க அப்பாவுக்கும் உன் கண்ணுல நீ என் மேல வச்சிருக்கற காதல் தெரியும்.. அதனால அவரும் அதை புரிஞ்சுப்பாரு..”

தேஜூ சொல்ல தன் இடுப்பில் கைகளை வைத்து பெருமூச்சு விட்டவன் “உன்னை திருத்தவே முடியாது..” என்று சொல்லிவிட்டு தன் வண்டியில் ஏறி தன் மெக்கானிக் கடை நோக்கி சென்று விட்டான்..

“அருண் செல்லம்.. நீ வண்டி ஓட்டற ஸ்டைலு.. உன் அழகு.. உன் கம்பீரம்.. உன் மிடுக்கு.. உன் திமிரு பேச்சு.. இது எல்லாமே என்னை மயக்குதுடா.. ஐயோ.. என் செல்ல குட்டி..” தன் கைகளை குவித்து அவனை பார்த்து காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டவள் தன் வண்டியின் நிலையை பார்த்து அதை எடுக்க அது இருந்த இடத்தை நோக்கி சென்றாள்..

########################

மறுநாள் கல்லூரிக்கு வந்த அருண் காலையில் அந்த மரத்தடியில் அமர்ந்திருக்க அப்போது தன் வண்டியை நிறுத்தி விட்டு அருணை நோக்கி போய்க் கொண்டிருந்த தேஜுவை பின் தொடர்ந்தான் சரண்.. தன்னவள் வருவதை மனதால் உணர்ந்தவன் அவள் புறமாய் திரும்பி பார்த்தான்.. அவளை சரண் பின்தொடர்ந்து வருவதை பார்த்தவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது..

“தேஜூ ஒரு நிமிஷம்.. நான் சொல்றதைக் கேளு.. ப்ளீஸ்..” என்று சொன்ன சரணை “ஏன்.. நீ எனக்கு பண்ணதெல்லாம் பத்தாதா? இன்னும் என்ன பண்ணனும்னு நினைக்கிறே? பேசாம போயிரு..” என்று சொல்லிதன் பாட்டுக்கு தொடர்ந்து நடந்தாள் தேஜூ..

அவள் கையைப் பிடித்த சரண் “அன்னைக்கு நான் பண்ணதுக்கெல்லாம் காரணம் நான் உன் மேல வச்சிருந்த காதல் தான்.. நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் தேஜூ.. அன்னைக்கு மட்டும் அருண் வரலைன்னா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்.. ப்ளீஸ் தேஜூ.. என் காதலை அக்சப்ட் பண்ணிக்கோ.. அந்த அருண் தான் உன்னை திரும்பி கூட பாக்க மாட்டேங்குறானே.. நீ ஏன் அவன் பின்னாடியே போயிட்டு இருக்கே?” என்று கேட்டான்…

இப்படி பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் வருவதை பார்த்த அருண் அவள் கையைப் பிடித்து இருந்த அவன் கையை வெறித்து பார்த்து பல்லை கடித்து கையை முறுக்கினான்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!