பரீட்சை – 50
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மேலும் மேலும்
என்னாலேயே
மீண்டும் மீண்டும் உனக்கு
ஆபத்து வர
துடிக்கும் மனதின்
தத்தளிப்பை
அடக்க முடியா
பாவியாய்
ஆகிப்போனேனே
நான்..!!
உனக்கு ஒரு
துன்பம் என்று
உணர்ந்த பின்பு
தன்னிச்சையாய்
தன்னிலை மறந்து
தாவி ஓடும்
கால்களை
தடுக்க முடியவில்லையடி
என்னால்…!!
என்
தளிர் கொடியே…!!
##################
என் தளிர் கொடியே…!!
ஹாஸ்டலில் மகியின் அறையில் இருந்த தேஜு கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.. அந்த கண்ணாடியில் அவள் உருவத்திற்கு பதிலாய் அருணின் பிம்பம் அவளுக்கு தெரிந்தது..
அவன் பிம்பத்தை பார்த்த அந்த நொடி அவள் அப்படியே உருகிப் போய்விட்டாள்..
“என்னடா செஞ்ச என்னை? கண்ணாடியில் பார்த்தா கூட என் முகமே எனக்கு தெரிய மாட்டேங்குதுடா.. நீ தான் முழுக்க முழுக்க என்னை அப்படியே முழுங்கி வச்சிருக்கே உனக்குள்ள.. எந்த நேரமும் உன் ஞாபகமாவே இருக்குது.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து நான் இப்படி இருப்பேன்னு சொல்லி இருந்தா சொன்னவங்களை யோசிக்காம அறைஞ்சிருப்பேன்.. என்னை நெனச்சா எனக்கே ஒரே சிரிப்பா வருதுடா.. என் மனசுல முழுசா பட்டா போட்டு உட்கார்ந்து இருக்கே.. இந்த பக்கம் அந்த பக்கம் அசைய மாட்டேங்குற..”
சிணுங்கினாற்போல் சொல்லியபடி கண்ணாடியில் இருந்த அருணின் உருவத்தை தன் கையால் வருடினாள்..
அடுத்த நொடி அருணின் உருவம் மறைந்து தன் உருவம் அதில் தெரிய “ஓடி ஒளிஞ்சுக்கிட்டியா? உன் நம்பரிலிருந்து இன்னைக்கு மெசேஜ் வந்தப்போ மனசுல இருந்த சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல டா.. இந்த மெசேஜ் பார்த்ததும் நீ நிச்சயமா என்னை ஏத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு.. உன்கிட்ட என்னை ஏத்துக்கோன்னு என் காதலுக்காக கெஞ்சறது கஷ்டமா தான் இருக்கு… ஆனா உன்கிட்ட கெஞ்சினாலும் தப்பு இல்லன்னும் தோணுது.. ஏன்னா நீ இல்லைனா இந்த உயிரையே விட்டுடுவேன்டா.. இன்னைக்கு என் காதலுக்கு பாசிட்டிவா பதில் சொல்லுடா செல்லம்.. உனக்கு எப்படி எல்லாம் தோணுதோ அப்படியெல்லாம் மாத்திக்கடா முரடா என்னை..” என்றவள் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது..
“இன்னிக்கு நீ என்னை விரும்பல.. ஏத்துக்க முடியாதுன்னு சொல்றதை விட உன் கையாலே என்னை கொன்னு போட்டுடுடா.. நிம்மதியா செத்துப் போவேன்.. நீ இல்லைன்ற நினைப்பை தாங்கிகிட்டு என்னால உயிரோட வாழ முடியாது டா… புரிஞ்சுக்கோடா.. அழகான ராட்சசன்டா நீ… என் உயிரை எடுத்து எங்கேயோ கொண்டு போய் ஒளிச்சு வச்சுட்டே.. ஏதோ கோபப்படுறதுக்குனே பொறந்த மாதிரி எப்பவும் உர்றுன்னு மூஞ்சை வெச்சுக்கிட்டு இருக்கே.. இன்னைக்கு என் காதல ஏத்துக்கும் போதாவது உன் கண்ணில ஒரே ஒரு செகண்ட் எனக்கான காதலை.. அன்பை.. அரவணைப்பை காட்டி என்னை உன் மனசுல ஒரு ஓரத்துல வச்சிருக்கேன்னு சொல்லிடுடா.. அது போதும்டா எனக்கு… எனக்கு வேற எதுவுமே வேண்டாம்..” என்று சொன்னவள் இதோடு 100வது முறையாக கண்ணாடியில் தன் முகத்தை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள்..
அங்கு வந்ததும் ஐந்து முறைக்கு மேல் முகத்தை திரும்ப திரும்ப கழுவினாள்.. அதன் பிறகு தன் தோழி மகி வைத்திருந்த அத்தனை வடிவ பொட்டுகளையும் எடுத்து மாறி மாறி நெற்றியில் வைத்து பார்த்து இறுதியில் முதலில் எடுத்த ஒரு சிறிய திலக வடிவ பொட்டையே வைத்து இருந்தாள்.. கண்களில் மை வைத்தவள்.. உதட்டு சாயம் வேண்டாம் என்று ஏனோ தீர்மானித்தாள்..
தன் தலை முடியை பிரித்து விதவிதமாக ஹேர் பின்களும் க்ளிப்புகளும் பேண்டுகளும் மாற்றி மாற்றி போட்டு பார்த்து இறுதியாக ஒரு அழகான சிகை அலங்காரத்துடன் நிறுத்திக் கொண்டாள்.. அவளின் முன் பக்கம் இருந்த முடியை எடுத்து சுருட்டி அடக்கி பின் குத்தியவள் பின்னால் தன் முதுகு வரை இருந்த முடியை விரித்து அழகாக தோளிலும் முதுகிலும் தவழ விட்டிருந்தாள்..
இதற்குப் பிறகும் நூறு முறை தன் ஒப்பனையை சரி பார்த்துக் கொண்டாள்.. தன் அருணை பார்க்க போகிறோம்.. அதுவும் தன்னந்தனியாய் யாரும் இல்லாத இடத்தில் சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பு அவளுள் ஒரு ஆனந்த படபடப்பையும் தித்திக்கும் துடிதுடிப்பையும் உருவாக்கி இருந்தது.. சிறிது பதட்டத்துடனே அவள் தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அந்த இனிய சந்திப்பிற்காக..
நேரத்தை பார்த்தாள்.. கல்லூரி நேரம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன..
“காலேஜ் முடிஞ்ச உடனே என்னை ஆடிட்டோரியத்துக்கு வர சொன்ன இல்ல.. நான் இன்னைக்கு கரெக்ட் டைம்க்கு வரப்போறதில்லை.. அரை மணி நேரம் கழிச்சு தான் வருவேன்.. இத்தனை நாள் அந்த மரத்தடியில யாருக்கு காத்திருக்கோம்னே தெரியாம தினமும் காத்துட்டு இருந்த இல்ல? இன்னிக்கி நீ எனக்காக.. எனக்காக மட்டும்.. ஒரு அரை மணி நேரம் காத்திருக்கப் போறேங்கிறது எனக்குள்ள எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது தெரியுமா? இந்த சந்தோஷத்துக்காக நான் கொஞ்சம் லேட்டா தான் வருவேன்.. கோவிச்சுக்காத..” என்று சொன்னவள் மறுபடி “ஒருவேளை நம்ம லேட்டா போறதுனால நாம நேரத்துக்கு வரலைன்னு கோச்சிக்கிட்டு அந்த மௌன சாமியார் கிளம்பி போயிருவானோ..? பண்ணாலும் பண்ணுவான் ராட்சசன்..” என்று எண்ணியவள் “சரி.. அரை மணி நேரம் வேணாம்.. பத்து நிமிஷம் கழிச்சு வரேன்.. எனக்காக அந்த பத்து நிமிஷம் கோவப்படாம காத்துட்டிருடா.. ப்ளீஸ்” என்று அந்த பத்து நிமிடத்தை மிகவும் கடினப்பட்டு தள்ளினாள்..
அதன் பிறகு கிளம்பி அந்த ஆடிட்டோரியம் இருந்த இடத்திற்கு சென்றவளுக்கு.. அந்த இடம் யாரும் சீண்டாமல் தனியாக இருந்ததை பார்த்து மனதிற்குள் சிறிது பயம் தொற்றிக் கொண்டது..
அதன் பிறகு யோசித்தவள் “அதனால என்ன? நம்ப அருண் செல்லம் இங்க தான் இருக்கு.. அவன் இருக்கும் போது எனக்கு எந்த பயமும் இல்லை..” என்று சொல்லிக்கொண்டே சென்று அந்த ஆடிட்டோரியத்தின் கதவை திறந்தாள்..
கதவு திறந்து கொள்ள தயக்கமாய் உள்ளே நுழைந்து இரண்டு அடி வைத்தவள் “அருண்.. எங்க இருக்க?” என்று கேட்டுக்கொண்டு இன்னும் இரண்டடி வைக்க அதற்குள் அவள் பின்னே இருந்த ஆடிட்டோரியத்தின் கதவு மூடி தாளிடப்பட்ட சத்தம் கேட்டு திரும்புவதற்குள் யாரோ ஏதோ ஒரு துணியை அவள் வாய் அருகில் எடுத்து வர யார் என்று திரும்பிப் பார்க்க விடாமல் அவனின் இரும்பு கை அவள் கழுத்தை சுற்றி இறுக்க பிடித்திருக்க அப்படியே மயங்கி விழுந்தாள் தேஜூ…
#################
கல்லூரி முடிந்து வெளியே வந்த சுமி தேஜூ சென்றிருந்த அந்த ஆடிட்டோரியம் பக்கம் பார்த்துக் கொண்டே கல்லூரி வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்..
அருண் எப்போதும் அமரும் மரத்தடியில் அவன் இல்லாதது கண்டு “இத்தனை நாள் அவளை திட்டி திட்டி கொடுமைப் படுத்திட்டு இப்ப பாரு இந்த மௌன சாமியார் வழிக்கு வந்துட்டான்.. இனிமே இந்த ரெண்டு அராத்தோட அலம்பல் தாங்க முடியாது காலேஜ்ல.. ஏற்கனவே இந்த தேஜூ அவன் காதலை ஒத்துக்காதப்பவே எப்பவும் அவனை பத்தி பேசி என் காதுல பிளட் வர வைக்கிறா.. இப்ப இன்னும் அவன் வேற இவ காதலை ஏத்துக்கிட்டான்னா நான் என்ன கதிக்கு ஆளாக போறேன்னு தெரியல.. பேசாம தினமும் காதுல பிளாஸ்டர் போட்டு வந்துடலாமான்னு யோசனையா இருக்குது.. என்ன செய்யறது? வேற வழி இல்ல.. இந்த கொடுமையை அனுபவிச்சு தான் ஆகணும்.. ஃப்ரெண்டுக்காக இது கூட செய்ய மாட்டோமா?” என்று நினைத்தபடி நடந்து கொண்டிருந்தவள் அருகில் நிலவழகனை பார்த்து “ஹாய் நிலவழகா..” என்றாள்..
“ஹலோ சுமி.. என்ன இன்னைக்கு உன் கூடயே ஓட்டிட்டு வர்ற உன் ஜிகிரி தோஸ்த்தை காணோம்.. தேஜூ எங்க..?” என்று கேட்க “ஃபிகரை பார்த்தா நீங்க மட்டும் ஃப்ரெண்டை கழட்டி விட மாட்டீங்க.. நாங்களும் அப்படித்தான்.. அவ லவ்வரை பார்க்கணும்னு சொல்லி என்னை கழட்டி விட்டுட்டா..” என்று சொல்ல புரியாமல் புருவத்தை சுருக்கினான் நிலவழகன்..
“என்ன..? லவ்வரை பார்க்கிறாளா? யார் அவளோட லவ்வர்?” என்று கேட்க “ஏன்.. உனக்கு தெரியாதா? அவ லவ் பண்ற ஒரே ஜீவன் அந்த அருண்தான்… அவனுக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி இன்னைக்கு தான் கொஞ்சம் கன்சிடர் பண்ணி இருக்கான்.. ரெண்டு மாசமா பொண்ணு அவன் கால்ல விழுந்து கெஞ்சாத குறைதான்..” என்றாள் சுமி..
“அருணா? ஆச்சரியமா இருக்கு.. ஏற்கனவே இன்னைக்கு மத்தியானம் அவனோட ஃபோனை காணோம்னு சொல்லி டென்ஷனா இருந்தான்.. ஒருவேளை கடையிலேயே விட்டுட்டு வந்துட்டானோன்னு அங்க போய் செக் பண்ணணும்னு சொல்லி மதியமே ஹாஃப் டே லீவு போட்டுட்டு கிளம்பி கடைக்கு போனானே..?!” என்றான் நிலவழகன்..
“என்ன ஃபோனை காணோம்னு சொல்லி போனாரா? ஆனா அவளுக்கு மெசேஜ் கடைசி ஹவர் தானே வந்தது..” என்று சுமி கேட்க “ஓ.. அப்படியா..? ஒரு வேளை கடைக்கு போனான் இல்ல? அங்க அவனுக்கு ஃபோன் கிடைச்சிருக்குமோ.. என்னமோ.. அதை வெச்சு மெசேஜ் பண்ணி இருப்பான்.. சரி.. ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா நல்லது தான்..” என்று நிலவழகன் சொல்ல சிறிது யோசனையுடன் “அதுவும் சரிதான்..” என்று சொன்ன சுமி “சரி அழகா.. நான் கிளம்புறேன்.. இன்னைக்கு தனியா தான் வீட்டுக்கு போகணும்.. போர் அடிக்க போகுது..” என்று சொல்லிவிட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றாள்..
நிலவழகன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல வழியில் வண்டி நின்று போனது..
“அடக்கடவுளே… வண்டி நின்னுடுச்சே.. சரி எப்பவும் போல அருணை கூப்பிடுவோம்.. அவன் வந்து சரி செஞ்சு கொடுப்பான்” என்று யோசித்தவன் அருணுக்கு அழைத்தான்.. ஆனால் அவன் அழைப்பு ஏற்கப்படவே இல்லை.. “ஐயோ.. இப்பத்தானே சுமி சொன்னா.. தேஜூவை பார்க்க போறான்னு.. அவளை பார்க்க போயிருப்பான்.. அதான் ஃபோனை எடுக்க மாட்டேங்குறான்..” என்று யோசித்தவன் “சரி நம்மளே அவன் கடைக்கு போலாம்.. அங்க எப்படியும் அந்த சின்ன பையன் இருப்பான்.. அவன் வண்டியை ரிப்பேர் பண்ணி குடுப்பான்..” என்று சொல்லி அருணின் கடைக்கு செல்ல அங்கே அருண் ஏதோ ஒரு வண்டிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்..
அதைப் பார்த்தவன் “என்ன அருண்..? தேஜூவை பாத்துட்டு வந்துட்டியா? தேஜூவோட லவ்வுக்கு ஓகே சொல்லிட்ட போல இருக்கு..” என்று அவன் அருகில் சென்று முதுகில் கை வைத்து சொல்ல அருணோ ஒன்றும் புரியாதது போல் மெதுவாக அவனை திரும்பி பார்த்தான்..
“என்ன? தேஜூவோட லவ்வுக்கு நான் ஓகே சொன்னேனா? அப்படின்னு உன்கிட்ட யாரு சொன்னா?” என்றவன் தொடர்ந்து வண்டியின் பக்கம் திரும்பி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்..
“சுமி தான் சொன்னா.. நீ ஏதோ தேஜூவோட ஃபோனுக்கு மீட் பண்ணலாம்னு சொல்லி மெசேஜ் அனுப்பினதா.. ஏன் நீ போகலையா?” என்று கேட்க “மெசேஜா? நானா?” என்று யோசித்தவன் “ஏதோ விபரீதமாக நடந்து இருக்கிறது..” என்று உணர்ந்து “முதல்ல என் ஃபோனையே காணோம் மதியத்திலிருந்து.. உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் கடையில இருக்கான்னு பார்க்க வரேன்னு.. கடையில் வந்து பார்த்தா கடையிலயும் ஃபோனை காணோம்.. அதை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.. எங்க தொலைஞ்சு போச்சுன்னு தெரியல..” என்று எரிச்சலோடு சொன்னவனை கலவரமாக பார்த்தான் நிலவழகன்..
“அப்படின்னா தேஜூக்கு நீ மெசேஜ் அனுப்பலையா?” என்று கேட்க “நான் ஏன் அவளுக்கு மெசேஜ் அனுப்ப போறேன்? ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லு..” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கேட்டான் அருண்..
“ஐயோ அருண்.. அவ ஃபோனுக்கு நீ மீட் பண்ணனும் அவளை.. அவ லவ்வை அக்சப்ட் பண்ணறதுக்கு முன்னாடி அவ கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லி மெசேஜ் அனுப்பினதா சுமி சொன்னா.. நீ அனுப்புலன்னா அந்த மெசேஜை யார் அனுப்பி இருப்பாங்க? எனக்கு ஏதோ இதுல தப்பா இருக்கிற மாதிரி தெரியுது அருண்..”
“ஆமா.. அந்த மெசேஜ்ல எங்க மீட் பண்ணனும்னு போட்டு இருந்ததுன்னு சொன்னாளா சுமி?” என்று அருண் கேட்க “இல்லை.. அதுபத்தி அவ சொல்லல.. ஒரு நிமிஷம்.. நான் சுமியை ஃபோன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன்..” என சொன்ன நிலவழகன் உடனே சுமிக்கு தன் கைபேசியின் மூலம் அழைத்தான்..
கைபேசி ஸ்பீக்கர் மோடில் இருக்க அருண் அவர்கள் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தான்..
“ஹலோ நீயா? என்ன விஷயம்? இப்பதானே பேசிட்டு வந்தோம் காலேஜ்ல.. உடனே ஃபோன் பண்றே?”
சுமிகேட்க “சுமி தேஜூவை அருண் எங்க மீட் பண்றதா சொன்னான்?”
நிலவழகன் கேட்கவும் “உனக்கு அதை தெரிஞ்சுக்கறதுல என்ன இவ்வளவு ஆர்வம்?” சந்தேகத்தோடு கேட்டாள் சுமி..
“இவ வேற.. இந்த நேரத்திலே இம்சை பண்ணிக்கிட்டு..” முணுமுணுத்தவன் சொல்லலாமா வேண்டாமா என்ற கேள்வியோடு அருணை திரும்பி பார்க்க அவனும் சொன்னால் அவள் கவலைப்படுவாள் என்று வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினான்..
“இல்ல சுமி.. என் வண்டி கொஞ்சம் ரிப்பேர் ஆயிடுச்சு.. அவன் கடைக்கு வந்தேன்.. அவன் இல்ல.. இங்க பக்கத்துல எங்கேயாவது இருக்கான்னா அவன் வர வரைக்கும் நான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி வண்டியை ரிப்பேர் பண்ணிட்டு போயிடுவேன்.. இல்லன்னா அவன் தேஜூவை மீட் பண்றதுக்கு வேற எங்கேயோ போய் இருக்கான்னா நான் வேற கடையில ரிப்பேர் பண்ணிட்டு போயிடுவேன்.. அதுக்கு தான் கேட்டேன்..”
நிலவழகன் சாமர்த்தியமாக வேறு விதமாக விஷயத்தை சொல்லி கேட்க “ஓ… அதானா? பேசாம நீ வேற கடைக்கு போயிடு.. ஏன்னா அருண் மீட் பண்ணறேன்னு சொன்னது நம்ம காலேஜோட பழைய ஆடிட்டோரியம்ல.. நீ மறுபடியும் காலேஜ் வரைக்கும் உன் வண்டியை எடுத்துட்டு போக வேண்டி இருக்கும்.. அதுக்கு அங்க பக்கத்துல வேற எதாவது கடை இருந்தா அங்கேயே பார்த்துக்கோ” என்றாள் சுமி..
“ஓ அப்படியா.. சரி.. நான் அப்படியே பண்றேன்..”
அவசர அவசரமாக கைபேசி இணைப்பை துண்டித்தவன் “அருண் நம்ம காலேஜ் பழைய ஆடிட்டோரியத்துல மீட் பண்றதா அவளுக்கு மெசேஜ் வந்திருக்கு..” என்றான்..
“சரி வா.. உடனே போய் யார் அப்படி அனுப்பிச்சாங்க.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..” என்று அருண் பதட்டமாய் சின்ன பையனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் நிலவழகனோடு..
தொடரும்…
வணக்கம்.. அன்பு நெஞ்சங்களே..!!
எபி பிடிச்சிருந்ததா?
இரண்டு நாட்கள் இந்த பக்கமே வராததால் நான்கு அத்தியாயங்கள் சேர்த்து கொடுத்திருக்கிறேன்.. விமர்சனங்கள் பதிவு பண்ண மறக்காதீங்க.. குறைஞ்ச பட்சம் கதை பிடிச்சிருந்துதுன்னா ரேட்டிங் கொடுங்க.. உங்க ஃப்ரெண்ட்ஸ், மத்த ரீடர்ஸூக்கும் ஷேர் பண்ணுங்க..
எப்போதும் போல உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
❤️❤️சுபா❤️❤️