அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥

5
(9)

 

பரீட்சை – 51
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

உனக்குத் தெரியாமல்
உன் நலம்
கேட்டே
உள்ளுக்குள்
நிறைவடையும்
உபயோகமில்லா
காதலன் நான்..

மறைந்திருந்தே
உன்மேல்
மாறாத
அக்கறை செலுத்த
முடியுமே தவிர
மறந்தும் உன்னை
நிஜத்தில்
நெருங்க மாட்டேன்..

மனதால் உன் மேல்
மாளாத காதலை
மடை திறந்து
பொழிவேன்
ஆனால் உன்
முகம் பார்த்து
என்னால்
முழு காதல்
சொல்ல முடியாது..

மன்னித்து விடடி
என்
மனம் வென்றவளே..!!

#####################

மனம் வென்றவளே..!!

யாரோ பின்னே வந்து ஒரு மயக்க மருந்து  கொண்ட துணியால் முகத்தை மூட அப்படியே மயங்கி சரிந்தாள் தேஜூ.. மயங்கி கிடந்த தேஜுவை உற்று பார்த்துக் கொண்டிருந்தான் சரண்..

துவண்ட கொடி போல் மயங்கி கிடந்தவளை பார்த்தவன் “நான் உன்கிட்ட எவ்வளவு நல்லவிதமா என்னை லவ் பண்ணுன்னு கேட்டேன்.. ஒழுங்கா அப்பவே நீ என் லவ்வை அக்ஸப்ட் பண்ணி இருந்தா இன்னிக்கு இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது இல்ல? இப்படி உன்னை மயக்கம் போட வச்சு உன்னை அடையணுங்கிற நிலைமை எனக்கும் வந்திருக்காது.. அந்த அருண் தான் உனக்கு மெசேஜ் பண்ணி இருக்கான்னு நினைச்சுட்டு எவ்வளவு அழகா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கே நீ.. அதை நினைச்சாலே எனக்கு உடம்பெல்லாம் எரியுது.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. உன்னை அடையாம நான் விட மாட்டேன்.. ஒருவேளை உன்னை அடைய முடியலன்னா வேற யாரும் உன்னை அடையவும் விட மாட்டேன்..” என்றவன் ஒற்றை காலை மடித்து அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் கன்னத்தில் கையை வைத்தான்..

பிறகு மெதுவாக கையை இறக்கி அவள் தோளுக்கு கொண்டு வந்தவன் அவள் தோளில் இருந்த ஆடையை விலக்கி அங்கே முத்தம் பதிக்க கீழே குனிய அவன் முகத்தை இடி போல ஒரு அடி தாக்கியது..

அப்படியே பின்னால் போய் விழுந்தவன் நிமிர்ந்து பார்க்க அங்கே முகம் நிறைய கோபத்துடன் நின்றிருந்தான் நிலவழகன்..

“டேய் நிலவழகா.. நீயா..?”

அவனை நோக்கி முன்னேறிய சரணின் பின்னந்தலையில் ஒரு கட்டையால் யாரோ அடிக்க வலியில் அப்படியே சுருண்டு மயங்கி விழுந்தான் சரண்..

மயங்கி விழுந்தவனின் கழுத்தில் கையை வைத்து இறுக்கி “பொறுக்கி நாயே.. ஒரு பொண்ணு உன்னை லவ் பண்ண மாட்டேன்னு சொன்னா அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளை வலுக்கட்டாயமா அடைவியா? உன்னை உயிரோட விட்டா தானடா அப்படி எல்லாம் பண்ணுவே? இப்பவே உன்னை கொன்னு போட்டுடறேன்டா..”

மேலும் அவன் கழுத்தை அருண் இறுக்க பதறிய நிலவழகன் ஓடி வந்து “அருண்.. அருண்.. அவனை விடு.. சொன்னா கேளு.. நான் இவனை பார்த்துக்கறேன்.. அங்க பாரு.. தேஜூ மயக்கமா இருக்கா.. ரொம்ப நேரம் இப்படி இருந்தா அப்புறம் அவளுக்கு ஆபத்தாகிடும்.. அவளை உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..   இவனை நான் பார்த்துக்கறேன் ” என்று சொன்னதும் தான் தேஜுவின் பக்கம் திருப்பினான் அருண்..

வாடிய மலரை போல் அப்படியே சுருண்டு விழுந்து கிடந்தவளை அருகில் சென்று அவள் கன்னத்தில் தட்டி எழுப்பி பார்த்தான்..

  “அஸ்வினி.. அஸ்வினி..” என்று அழைத்துக் கொண்டிருந்தவன் அவள் எழாமல் போகவே சிறிது பதட்டம் அடைந்து “அஸ்வினி.. என்ன ஆச்சு உனக்கு.. எழுந்திரு.. என்னை பயமுறுத்தாதே..” குரலில் படபடப்புடன் சொன்னவன் அதற்கு மேல் தாமதம் செய்யக்கூடாது என்று வெளியே ஓடி சென்று எங்கிருந்தோ ஒரு தண்ணீர் குவளையை கொண்டு வந்து அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான்..

அப்படியும் அவள் எழுந்திருக்காமல் போகவும் .. “டேய் அழகா.. அந்த நாயை அப்படியே விட்டுட்டு வாடா.. இங்கேயே கெடந்து சாகட்டும்.. நம்ப முதல்ல இவளை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் போலாம்.. அஸ்வினி எழுந்துக்கவே மாட்டேங்குறா.. எனக்கு பயமா இருக்குடா..” என்று சொன்னவனை திரும்பிப் பார்த்த நிலவழகனுக்கு அவன் முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்து ஆச்சரியமாக இருந்தது…

அது யாருக்காகவோ அடைந்த பதைபதைப்பு போல் தெரியவில்லை.. தன் உயிரானவர்களுக்கு ஆபத்து வந்தால்.. அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால்.. தன் உயிரே போய்விடுமோ என்று ஒரு பதைபதைப்பு வருவது போன்ற பதட்டமாய் தெரிந்தது அவன் கண்ணுக்கு..

அதுவும் அருணை போன்று மனிதர்களுடன் ரொம்பவும் பழகாத ஒருவனிடம் அவன் இப்படி ஒரு துடிப்பை எதிர்பார்க்கவில்லை..

அப்படியே அவனை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தவனை “டேய்.. என்னடா.. நான் இவ்வளோ சொல்லிட்டு இருக்கேன்.. நீ அப்படியே முழிச்சு பார்த்துட்டு இருக்க.. அவளுக்கு ஏதாவது ஆயிட போகுது.. வாடா.. கூட்டிட்டு போலாம்..” என்றவன் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தி கொண்டு வேக வேகமாய் வாசலை நோக்கி ஓடினான்..

அதன் பிறகு தன் காருக்கு அருகில் அவளை தூக்கிக்கொண்டு சென்றவன் தன் காரின் பின் இருக்கையில் அவளை கிடத்திவிட்டு தானும் அங்கேயே அவள் தலையை தன் மடியில் வைத்து அமர்ந்து கொண்டான்..

அருகே வந்த நிலவழகனை “வண்டியை எடு” என்று சொல்ல அவன் இவன் நடவடிக்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓட்டினான்..

மருத்துவமனை வரும் வரை “அஸ்வினி.. அஸ்வினி.. எழுந்திரு.. எழுந்திரு.. என்னடி ஆச்சு உனக்கு..? இவ்ளோ நேரம் ஆகியும் மயக்கமா இருக்க.. எனக்கு பயமா இருக்குடி..” என்று புலம்பிக்கொண்டே வந்தவனை விழி விரித்து அவ்வப்போது திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் நிலவழகன்..

மருத்துவமனை வந்த உடனே தேஜூவை அப்படியே தன் கைகளில் ஏந்தி உள்ளே ஓடி சென்றவன் “டாக்டர்.. டாக்டர்.. எமர்ஜென்சி.. ப்ளீஸ்.. கொஞ்சம் பாருங்க..” என்று அழைத்துக் கொண்டு அவளை ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்தி தானே அதை தள்ளிக் கொண்டு ஒரு சிகிச்சை அளிக்கும் அறைக்கு சென்றான்..

அப்போது அங்கே ஓடி வந்த செவிலியும் மருத்துவரும் “என்ன ஆச்சு?” என்று கேட்க அப்போது அவசரமாக அங்கே வந்த நிலவழகன் “காலேஜ்ல லேப்ல பை மிஸ்டேக் ஏதோ ஒரு மருந்தை ஸ்மெல் பண்ணி மயக்கம் ஆயிட்டாங்க.. ப்ளீஸ்.. ஏதாவது பண்ணி அவங்களை முழிக்க வைங்க” என்று சொல்ல “ஓகே.. நான் என்னன்னு பாக்குறேன்..” என்று அந்த மருத்துவர் அந்த செவிலியிடம் செய்ய வேண்டியவற்றை சொன்னார்..

அடுத்த ஐந்தாவது நிமிடத்திற்குள் அவளுக்கு சிகிச்சை ஆரம்பிக்க சிறிது நேரத்தில் வெளிவந்த மருத்துவரிடம் படபடப்புடன் சென்ற அருண் “டாக்டர்.. அவளுக்கு எப்படி இருக்கு? ஒன்னும் பிராப்ளம் இல்லல்ல?” என்று கேட்க “ஒன்னும் பிராப்ளம் இல்ல.. ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்.. இன்னும் பத்து நிமிஷத்துல கண் முழிச்சிடுவாங்க..” என்று அவர் சொன்னதை கேட்டு அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது..

“தேங்க்ஸ் டாக்டர்..” என்று சொல்லியவனிடம் “மொதல்ல நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.. ரொம்ப பதறி போயிட்டிங்க போல.. அவங்கன்னா உங்களுக்கு அவ்வளோ இஷ்டமோ?” என்று கேட்க அவர் கேள்வியில் தடுமாறியவன் அவர் பார்வையை தவிர்த்து தலையை குனிந்த படி “அப்படில்லாம் ஒ…ஒன்னும் இல்ல டாக்டர்..” என்றான்..

அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார் அவர்.. அவர் சென்ற அடுத்த நொடி தேஜூவின் அறைக்குள் அடித்து பிடித்து சென்றவன் அவள் அமைதியான முகத்தை பார்த்தபடி அவள் அருகில் சென்று அமர்ந்தான்..

அவள் கன்னத்தை வருடி “நான் வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகியிருந்தா கூட உன்னை அந்த நாய் சரண் என்ன பண்ணியிருப்பான்னு என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலடி.. என்கிட்டருந்து மெசேஜ் வந்தா அதை நான் தான் அனுப்பி இருப்பேனான்னு யோசிச்சு கூட பார்க்க மாட்டியா? நான் தான் உன்னை அவ்வளோ விரட்டறேன் இல்ல? சட்டுனு நான் எப்படி அப்படி ஒரு மெசேஜ் அனுப்பி இருப்பேன்னு உனக்கு தோணவே இல்லையா?” என்று கேட்டுக்கொண்டிருந்தவனை விசித்திரமாய் பார்த்தான் உள்ளே வந்த நிலவழகன்..

“அருண்.. நீ பேசறது எல்லாம் கேட்டாலே நீ தேஜூவை ரொம்ப விரும்பறேன்னு தெரியுது.. அப்ப ஏன் அவளை இப்படி தினமும் விரட்டுற? அவ உன் காதலுக்காக தினமும் ஏங்கி உன்கிட்ட வந்து தன் காதலை சொல்லி பிச்சை கேட்காத குறையா கேட்டுகிட்டு இருக்கா.. ஆனா நீ ஒவ்வொரு நாளும் அவளை விரட்டி அடிக்கிறே.. உன் மனசுல இவ்வளவு காதல் இருக்கு இல்ல அவ மேல.. நீ அவளை ஏத்துக்கலாம்ல? எதுக்கு அவளை விரட்டுற?”

நிலவழகனின் கையை வந்து பிடித்தவன் “என்னோட கொஞ்சம் வெளியில வா..” என்று சொல்லி அவனை வெளியே அழைத்துக் கொண்டு சென்றான்.. அந்த மருத்துவமனையில் இருந்த ஆள் அரவமில்லா ஒரு இடத்தில் இருந்த மேடையில் இருவரும் அமர்ந்தார்கள்..

“அழகா உன்கிட்ட நான் உண்மையை சொல்றேன்.. ஆனா இந்த விஷயம் உன்னை தாண்டி யாருக்கும் தெரிய கூடாது.. முக்கியமா அஸ்வினிக்கு தெரியவே கூடாது..  நான் என் அஸ்வினி மேல உயிரையே வச்சிருக்கேன்.. ஆனா அந்த காரணத்தினாலேயே நான் அவளை ஏத்துக்க முடியாது..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க “அவளும் உன்னை விரும்புறா.. நீயும் அவளை இவ்வளவு விரும்புற.. அப்புறமும் ஏன் நீ அவளை ஏத்துக்க முடியாதுன்னு சொல்ற?” என்று கேட்டான் நிலவழகன் முகத்தில் குழப்பத்தோடு..

“ம்ம்ம்ம்…” என்று சொல்லி தலையாட்டியவன் “நீ சொல்றதெல்லாம் கரெக்ட் தான்.. அவளும் என்னை விரும்புறா.. நானும் அவளை அவ்வளவு விரும்புறேன்.. ஆனா எங்க காதல் கைகூடறத்துக்கு எங்க ரெண்டு பேருக்கும் கொடுத்து வைக்கல.. நாங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில சேர்ந்தா அஸ்வினி வாழ்க்கையே நாசமா போயிடும்..” என்று சொல்ல ஆரம்பித்தவன் தான் அவளை ஏற்றுக் கொள்ளாததுக்கான காரணத்தை சொல்லி முடித்திருந்தான்..

அதைக் கேட்ட நிலவழகன் கண்களில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தான்..

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அருண்.. புரியுது அருண்.. நீ ஏன் இப்படி பண்றன்னு.. ஆனா இதுக்கு வேற வழியே இல்லையா?” என்று கேட்க “அப்படி வேற வழி இருந்திருந்தா இந்த நேரம் அஸ்வினி எனக்கு மனைவியா இருந்திருப்பா.. என் அஸ்வினியை விட்டு என்னால இப்படி உக்காந்துட்டு இருக்கவே முடியாது..” என்று சொல்லி கண்களில் ஒரு விரக்தியோடு அமர்ந்திருந்தான் அருண்..

அதன் பிறகு தன் கைபேசி எடுத்து நேரத்தை பார்த்தவன் “அஸ்வினி இந்நேரம் முழிச்சிருப்பா.. தயவுசெய்து அவளை போய் பார்த்துட்டு வந்து அவ நல்லா இருக்கான்னு மட்டும் எனக்கு சொல்லிடு.. நான் அதோட நிம்மதியா என் வீட்டுக்கு போயிடுவேன்..” என்றான் அருண்..

“சரி வா.. போலாம்..” என்று சொன்னவன் நேரே மருத்துவமனையுள் சென்று தேஜூ இருந்த அறைக்குள் நுழைந்தான்.. அதற்குள் தேஜஸ்வினி கண் விழித்திருந்தாள்.. நிலவழகனை பார்த்தவள் கேட்ட முதல் கேள்வியில் அதிர்ந்து விட்டான் அழகன்..

“ஆமா.. அருண் எங்க?” என்று கேட்க அவளுக்கு அருண் அங்கு இருந்தது எப்படி தெரியும் என்று சிறிது அதிர்ந்தவன் அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு “அருணா..? அவன் எங்க இங்க இருக்கான்? நான் தான் இருக்கேன்.. நான்தான் உன்னை கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்..” என்று சொன்னவனை நம்பாமல் பார்த்தாள் தேஜூ..

அவனை கடந்து தன் பார்வையை செலுத்தியவள் ஒருவேளை அருண் அவன் பின்னால் மறைந்து நின்று கொண்டிருக்கிறானோ என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..

“இல்ல.. என் அருண் என்னை தூக்கிட்டு வந்தான்.. எனக்கு தெரியும்.. இந்த ரூமுக்கு வெளியில இருக்கானா அவன்?”

அவள் வேகமாக எழுந்து அந்த அறையின் கதவை நோக்கி வந்தாள்.. அந்த அறையின் கதவின் கண்ணாடி வழியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அருணுக்கு அவள் ஏதோ தன்னை பற்றி கேட்கிறாள் என்று புரிந்து அங்கிருந்து நகர்ந்து சென்று பக்கத்து அறையில் ஒளிந்து கொண்டான்..

வெளியே வந்து பார்த்த தேஜூ அங்கு யாரும் இல்லாததை கண்டு “எங்க போனான் அருண்..?” நிலவழகனை திரும்பி பார்த்து கேட்க “நான் தான் சொல்றேன் இல்ல.. அருண் எல்லாம் வரல.. சுமி சொன்னா.. உனக்கு அருண் எதோ மெசேஜ் அனுப்பிச்சான்னு.. நீ அவனை பார்க்க போய் இருக்கேன்னு.. அதுக்கப்புறம் என் வண்டி ரிப்பேர் ஆனதுனால நான் அவனோட கடைக்கு போனப்போ அருண் அங்க இருந்ததை பார்த்து ஏதோ தப்பா இருக்குன்னு சொல்லி தான் சுமியை கேட்டு நீ இருந்த இடத்துக்கு வந்து உன்னை காப்பாத்துனேன்.. அருண் அவன் கடையில தான் இருக்கான்..” சரளமாக பொய் சொன்னான் நிலவழகன்..

தேஜூவோ அவன் சொன்னது எதையும் நம்பியதாக தெரியவில்லை..

அவனை ஒரு நம்பிக்கை இல்லா பார்வை பார்த்துக் கொண்டிருந்தவள் “பொய் சொல்லாத நிலவழகா..” என்று சொல்ல “இல்லை தேஜூ.. நான் உண்மையைத்தான் சொல்றேன்..” என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் மருத்துவர் அறைக்குள் வரவும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்..

அதற்குள் அங்கே வந்த மருத்துவர் “ஓ.. முழிச்சிட்டாங்களா? வெரி குட்..” என்றவர் “உங்க கூட ஒருத்தர் வந்தாரே.. அவர் எங்க?” என்று நிலவழகனை பார்த்து அவர் கேட்க நிலவழகன் திரு திருவென்று விழித்தான்..

“அது.. அது வந்து.. டாக்டர்…” என்று அவன் இழுக்க “இல்ல… இவங்களை கையில தூக்கிட்டு வந்தாரு.. இவங்க மயக்கமா இருக்கறதை பாத்து அவ்ளோ பதட்டமா இருந்தாரு.. நான் கூட அவரு இவங்களோட லவ்வரோன்னு நினைச்சேன்.. இப்ப பார்த்தா அவங்க கண் முழிக்கும் போது அவங்க பக்கத்துல இல்லாம எங்க போயிட்டாரு.. எங்க அவரை காணோம்..?” என்று கேட்டார் மருத்துவர்..

அவர் சொன்னதைக் கேட்டு நிலவழகனை பார்த்து முறைத்தாள் தேஜூ..

தொடரும்..

வணக்கம்.. அன்பு நெஞ்சங்களே..!!

எபி பிடிச்சிருந்ததா? விமர்சனங்கள் பதிவு பண்ண மறக்காதீங்க.. குறைஞ்ச பட்சம் கதை பிடிச்சிருந்துதுன்னா ரேட்டிங் கொடுங்க.. உங்க ஃப்ரெண்ட்ஸ், மத்த ரீடர்ஸூக்கும் ஷேர் பண்ணுங்க..

எப்போதும் போல உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!