அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥

5
(9)

பரீட்சை – 53

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

நீ என்னை

பிரிந்து சென்றால்

சுவாசம் செயலற்று

போகுமடி

என் சாரல் பெண்ணே..!!

 

நயனங்கள்

நடனமிட

பார்வையால் நீ

பேசும்

பல கதைகள்

கேளாமல்

பாவி எனக்கு 

ஒரு நாளும்

நகராதடி என்

நறுமுகையே….!!

 

உன்னை தேடி

வரக்கூடாது என

ஓராயிரம் கட்டுக்கள் 

வைத்தும்

உன் கால்தடம் 

தேடியே

என் உள்ளம்

செல்லுதடி

இளமானே…!!

 

###############

 

நறுமுகையே..!!

 

“என்ன பாக்குற? நேத்து நிலவழகனும் நீயும் தான் வந்து என்னை காப்பாத்தினீங்கன்னு எனக்கு தெரியும்.. அது மட்டும் இல்லாம அந்த சரணை நீ தான் அடிச்சு போட்டேன்னும் எனக்கு தெரியும்..” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் அருண்.. ஒருவேளை நிலவழகன் அவளிடம் ஏதாவது உளறி கொட்டி விட்டானோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது..

 

அவன் பார்வை மாற்றத்தின் அர்த்தத்தை உணர்ந்தவள் “அந்த நிலவழகன் என்னடான்னா உனக்கு சாதிக்னு ஒரு புது பேர் கொடுத்து என்னென்னமோ கதை எல்லாம் சொல்லி நேத்து நீ அந்த சீன்லையே இல்லன்னு மறைக்கணும்னு ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருக்கான்.. ஆனா அவனுக்கு தெரியாத ஒரு விஷயம் என்ன தெரியுமா?” 

 

தன் புருவத்தை உயர்த்தி கேட்டவள் “நான் மயக்கமா இருக்கறப்பவும் என் மனசு உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கும்.. நீ என்னை தொட்டு தூக்கிட்டு போயிருக்க.. அது எப்படி எனக்கு தெரியாம போகும்..? இது தெரியாம அவன் என்ன என்னவோ கதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கான்..” அவள் சொன்னதை கேட்டு அருணுக்குள் ஒரு நிம்மதி படர்ந்தது…

 

“ம்ம்..ம்ம்.. உன் இஷ்டத்துக்கு எது வேணாலும் கற்பனை பண்ணிக்கோ.. கனவு கண்டுக்கோ.. ஆனா அதுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை.. நேத்து மதியமே என் ஃபோனை காணோம்.. நான் மெக்கானிக் ஷெட்டுக்கு போனவன் தான்.. அப்புறம் ஷெட்டுல தான் இருந்தேன்.. இதை உன்கிட்ட ப்ரூவ் பண்ணனும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்லை.. அதனால அனாவசியமா இந்த மாதிரி இல்லாத நினைப்பை எல்லாம் வளர்த்துக்கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்காத..” என்றான் அவன் இறுக்கமாய் முகத்தை வைத்துக்கொண்டு..

 

“நீ எவ்ளோ சீரியசா வேணும்னாலும் மூஞ்சியை வச்சுக்கிட்டு என்ன வேணா சொல்லு.. எனக்கு உன்னை தெரியும்..” தன் இதயத்தை காட்டியவள் “இந்த மனசுக்கு நீ என்னை தொட்டா புரியும்.. உன் அருகாமை தெரியும்.. அதனால நீ என்னை ஏமாத்தவே முடியாது.. நீதான் என்ன காப்பாத்துனேன்னு 100% இல்லை 150% உறுதியா சொல்றேன்.. ஆனா இதுக்கெல்லாம் நான் தேங்க்ஸ் சொல்ல போறது இல்ல‌‌.. ஏன் தெரியுமா?” என்றாள் அவனிடம் கேள்வியாக..

 

அவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு ஏன் என்று கேட்பது போல் பார்க்க  “நீ என்னை உயிருக்கு உயிரா விரும்பற.. உன் காதலியை நீ காப்பாத்தின.. உன் காதலி உயிருக்கு ஆபத்து வந்தாலும் மானத்துக்கு ஆபத்து வந்தாலும் வேற யாரு காப்பாத்துவாங்க? நீ தானே காப்பாத்தணும்.. அது உன்னோட கடமை.. அதே மாதிரி என் மேல கை வைக்கணும்னு மனசால நெனச்ச அந்த சரணை குத்துயிரும் கொலையுயிருமா ஆகுற மாதிரி போட்டு அடிச்சிருக்க.. அது உன் பொருளை உன்கிட்ட இருந்து யாராவது எடுக்க ட்ரை பண்ணா ஒரு கோபம் வரும் இல்ல…? அந்த கோபத்துனால நீ செஞ்சது.. என்னை பொறுத்த வரைக்கும் ஒரு லவ்வரா நீ செஞ்சது கரெக்ட் தான்.. அதனால நான் தேங்க்ஸூம் சொல்ல மாட்டேன்.. நீ செஞ்சதுக்காக வருத்தப்படவும் மாட்டேன்.. ஓகே வா டா புருஷா..?” என்று அவள் கேட்க அவள் புருஷா என்று அழைத்ததில் நிஜமாகவே திடுக்கிட்டு போனான் அருண்..

 

“ஏய்.. இந்த புருஷா கிருஷான்னு கூட்டுட்டு காலேஜ்ல திரிஞ்சிக்கிட்டு இருந்த.. பல்லை ஒடச்சிடுவேன்.. முதல்ல எப்ப பாரு இப்படி வந்து இளிச்சுகிட்டு என் முன்னாடி நின்னுட்டு என்னை எரிச்சல் பண்ணறதை நிறுத்து.. நீ கெளம்பு.. இடத்தை காலி பண்ணு.. கொஞ்சம் காத்து வர விடு..” என்று சொன்னவனை ஒரு மாதிரி ஆசையாய் பார்த்து சிரித்துக் கொண்டே போனாள் தேஜு..

 

அவள் புன்னகையை பார்த்தவனுக்கோ அந்த புன்னகை முகம் மனதிலிருந்து அகலாமல் பதிந்து விட்டது.. 

 

“ஏண்டி இப்படி என்னை டார்ச்சர் பண்ற..? உன் முகத்தை பாக்கலைனா பைத்தியம் ஆயிடுவேன் போல இருக்கே.. உன்னை விலக்கி வச்சுட்டு நான் எப்படி உயிரோட இருக்க போறேன்?” என்று யோசித்துக் கொண்டே தலையில் கை வைத்துக் கொண்டு அந்த மரத்தடியிலே அமர்ந்து விட்டான் அருண்..

 

அப்போது அருகே வந்த நிலவழகன் “டேய் அருண்.. இந்தாடா..” என்று அவனிடம் அவனுடைய கைபேசியை கொடுத்தான்..

 

“உனக்கு எப்படிடா இது கிடைச்சுது..?” என்று அருண் கேட்க “பிரின்ஸி மேம் கூப்பிட்டு சொல்ற வரைக்கும் நேத்து நைட் நீ அந்த சரணை போட்டு வெளுத்து வாங்குனது எனக்கு தெரியாது இல்ல?  ஒரு வேளை அந்த ஆடிட்டோரியத்திலேயே சரண் மயக்கம் போட்டு இருக்க போறான்னு இன்னிக்கு காலையில வந்தவுடனே நான் அந்த ஆடிட்டோரியத்துக்கு போய் பார்த்தேன்.. அங்க தாண்டா இந்த ஃபோன் இருந்துச்சு..” என்றான் நிலவழகன்..

 

“ஆனா.. நேத்து அங்க நம்ம போகும்போது இந்த ஃபோன் இல்ல.. அதுக்கு அப்புறம் அந்த சரணை யாரோ காப்பாத்தி இருக்காங்க.. நைட் நான் அவனை அடிக்க போகும்போது பார்க்கறப்போ அவன் ஏற்கனவே தலையில கட்டு போட்டு இருந்தான்.. அவன் என்கிட்ட கட்டையில அடி வாங்கி மயங்கி விழுந்திருந்தப்போ யாரோ அவனை வந்து கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல கட்டு போட்டுவிட்டு வீட்ல கொண்டு விட்டு இருக்காங்க.. யாரோ என்ன? அந்த நித்திலாவா தான் இருக்கும்.. அவனை காப்பாத்தும் போது அவதான் அந்த ஃபோனையும் அங்க போட்டுட்டு போயிருப்பா..” என்று சொன்னான் அருண்..

 

“அவ என்னமோ ரொம்ப மாறிட்ட மாதிரி நடந்துக்கிறா இல்லடா? அவ நடிக்கிறான்னு சொல்றியா?” 

 

அழகன் கேட்க “அவ எல்லாம் மாறுற பிறவியே கிடையாதுடா.. நாளுக்கு நாள் இன்னும் மோசமா வேணா மாறிடுவா… சரி விடு.. இப்பதானே சரணுக்கு தண்டனை கொடுத்து இருக்கேன்.. அவளுக்கும் இருக்கு ஒரு நாள்.. இப்படியே செஞ்சுகிட்டு இருந்தா ஒரு நாள் அவளை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போனாலும் ஆச்சரியபடறதுக்கு இல்ல..” என்றான் அருண்..

 

“அவளைக் கொன்னுட்டு நீ எதுக்குடா ஜெயிலுக்கு போய் உன் வாழ்க்கையை கெடுத்துக்கணும்..? அவளுக்கு நிச்சயமா ஒரு பாடம் கத்துக் கொடுப்போம்.. சரி வா.. கிளாசுக்கு போலாம்..” என்று சொன்னவன் அருணை அழைத்துக் கொண்டு தன் வகுப்பை நோக்கி நடந்தான்..

 

இப்படியே இன்னும் மூன்று மாதங்கள் ஓட அந்த வருடத்தின் கடைசி நாளில் இருந்தார்கள் அவர்கள்.. அன்றைக்குப் பிறகு ஒரு மாதம் விடுமுறையில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியாது என அருண்,தேஜூ இருவருமே தனித்தனியே தங்கள் மனதிற்குள்ளேயே சோகம் நிரம்ப அதை கையாள தெரியாமல் போராடிக் கொண்டிருந்தார்கள்..

 

அன்று மாலை அருணை சந்திக்க வந்த தேஜூ அவனிடம் எப்போதும் போல ரோஜா மலரை கொடுத்து “ஐ லவ் யூ அருண்.. இன்னிக்கும் நீ எனக்கு பதில் சொல்ல மாட்டேன்னு தெரியும்.. இனிமே இன்னும் ஒரு மாசம் நம்ம ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க முடியாது.. ஆனா அதுக்காக என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத.. தினமும் உன்னோட மெக்கானிக் ஷெட்டுக்கு வந்து உன்னை பார்ப்பேன்.. இதே மாதிரி ரோஸ் கொடுத்து என் லவ்வை சொல்லுவேன்..” என்று அவள் சொல்ல அவனும் ஏதோ சலிப்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு “ப்ச்.. ஒரு மாசம் உன் தொல்லை இல்லாம இருக்கலாம்னு நெனைச்சேன்.. நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ?” என்று கேட்டான்..

 

“சும்மா நடிக்காதடா செல்லக்குட்டி.. நீ யாரு.. எப்படி.. என்ன.. எல்லாம் எனக்கு தெரியும்.. எதோ உன்னை தடுக்குது என்கிட்ட உன் காதலை சொல்ல விடாம.. அது என்னன்னு கண்டுபிடிச்சு உன் மனசுல இருக்கறதை நான் வெளியில கொண்டு வரல நான் தேஜூ கிடையாது” 

 

“இப்படியே பேசிக்கிட்டு இரு நீ.. கூடிய சீக்கிரம் பைத்தியமா தான் திரியபோற..

சரி.. உனக்கு எதுவும் வேலை இல்லை போல.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. இந்த லீவுல காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் என் மெக்கானிக் ஷெட்ல வேலை பார்த்தா தான் அடுத்த வருஷத்துக்கு நான் ஃபீஸ் கட்ட முடியும்.. நீ இங்கேயே நின்னு இப்படியே புலம்பிட்டு இரு.. நான் கிளம்புறேன்..” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பி வண்டியை நோக்கி போனான்.. 

 

வண்டியில் ஏறியவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவன் அமர்ந்த இடத்தில் அமர்ந்தவள் அந்த இடத்தை கைகளால் வருடி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதை பார்த்தவன் கண்கள் கலங்க அவளைப் பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான்..

 

“உன் மனசுல இருக்குறதை நீயா சொல்ல மாட்டே.. நான் உன்னை சொல்ல வைக்கிறேன்.. இன்னும் ரெண்டு நாள்ல உன் மனசுல இருக்குறதை நான் சொல்ல வைக்கல நான் உன்மேல வெச்ச காதல் உண்மை இல்லைன்னு நினைச்சுக்கோ..” என்று சொன்னவள் தான் கொடுத்த ரோஜா மலரை அந்த மேடையில் அவன் வைத்திருக்க அவன் தீண்டிய அந்த மலரை எடுத்து முத்தமிட்டவள் “ஐ லவ் யூ டா அருண்.. ஐ லவ் யூ சோ மச்..” என்று சொல்லி அங்கிருந்து கல்லூரி வாயிலை நோக்கி திரும்ப அங்கு அருண் வண்டியில் இவளையே பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்தவள் புன்னகைத்தபடி அவனை நோக்கி நடந்தாள்..

 

தான் அவளை பார்த்துக் கொண்டிருந்ததை அவள் கவனித்து விட்டாள் என்று தெரிந்து கொண்ட அருண் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவள் அவனை வந்து அடைவதற்குள் அங்கிருந்து வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கி வேகமாக சென்றுவிட்டான்..

 

“போடா போ..  உன்னை என்னை தேடி வர வைக்கிறேன்” என்றாள் தேஜூ அவன் போன பாதையை பார்த்துக்கொண்டே..

 

தேஜூ விடுமுறை தினங்களில் தினமும் அவனுடைய மெக்கானிக் ஷெட்டுக்கு வருவேன் என்று சொல்லி இருந்ததால் அவள் நிச்சயம் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்தவன் விடுமுறை விட்டு இரண்டு நாட்களாகியும் அவள் வராமல் போகவே சிறிது சஞ்சலம் அடைந்தான்..

 

அவனால் அவளை ஏற்கவும் முடியவில்லை.. அவளை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.. இரு தலைக் கொள்ளி எறும்பாய் தவித்தவனின் கைப்பேசி ஒலித்தது..

 

எடுத்து தனக்கு யார் அழைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தவன் நிலவழகனின் பெயர் திரையில் வரவும் அவசரமாய் அந்த அழைப்பை ஏற்று “சொல்லு நிலவழகா.. அஸ்வினி ஏதாவது உனக்கு ஃபோன் பண்ணாளா?” என்று கேட்க “நீ எவ்ளோ பிரியம் வச்சிருக்கே அவ மேல… வேற ஏதாவது பண்ணி அவளோட சேர முடியுமான்னு ட்ரை பண்ணேன் டா..” என்று சொன்னான் நிலவழகன்..

 

“இல்லடா.. அவளை பார்த்த நாளா அதுக்கு முயற்சி பண்ணி பாத்துட்டேன்.. ஆனா அப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிருச்சு.. சரி.. நீ எதுக்கு கால் பண்ண?” என்று கேட்க “தேஜூ விஷயமா தான் கால் பண்ணி இருந்தேன்.. அவ ஃப்ரெண்டு சுமி எனக்கு ஃபோன் பண்ணா..” என்றான் நிலவழகன்..

 

“அஷ்வினி விஷயமாவா? ஏன்டா அவளுக்கு ஏதாவது ப்ராப்ளமா? மறுபடியும் அந்த சரண் ஏதாவது பிராப்ளம் பண்ணிட்டானா?” என்று கேட்டான் அருண்..

 

“டேய்.. இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. அந்த சரணை நீ அடிச்ச அடிக்கு இப்பதான் கண்ணு முழிச்சு லேசா கை காலை அசச்சுக்கிட்டு இருக்கானாம்.. அவன் இன்னும் எழுந்து நடக்கிறதுக்கு மூணு மாசம் ஆகும்னு டாக்டர் சொல்லி இருக்காராம்.. இந்த நிலைமையில அவன் தேஜூவை என்னடா பண்ண போறான்? அது இல்லடா.. தேஜூவோட அப்பா அங்க கம்பெனி வேலையை விட்டுட்டு இங்க வந்து வேலை செய்ய போறேன்னு சொல்லிட்டு இருந்தாரு.. ஆனா இப்போ இங்க இருக்கிற கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க.. அதனால அவர் இங்க வேலை செய்ய முடியாதுன்னு சொல்லி அவங்க ஊருக்கே வீடு மாத்திக்கிட்டு போறாங்க போல இருக்கு.. தேஜுவும் மொத்தமா போகப்போறான்னு சொன்னாடா.. நாளைக்கு காலைல எட்டு மணி பஸ்ல போறாளாம்.. இதுக்கு அப்புறம் தேஜூவை நம்ம காலேஜ்ல பார்க்க முடியாது.. அடுத்த வருஷம் அவங்க ஊர்ல இருக்கிற காலேஜ்லயே சேர போறா.. அதான் அவளை பார்க்க வரியான்னு சுமி என்கிட்ட கேட்டா..” என்று சொன்னான் நிலவழகன்..

 

அருணுக்கு யாரோ தன் இதயத்தை தனியே பிய்த்து கொண்டு செல்வது போல் இருந்தது இந்த செய்தியை கேட்டு.. 

 

“என்னடா திடீர்னு? அவங்க அப்பாவோட ஆஃபீஸ் மாற முடியலன்னா அவர் அங்க போகட்டும்.. எதுக்குடா இவங்களை எல்லாம் அங்க கூட்டிட்டு போகணும்..? டேய்.. என்னால அவளை பார்க்காம இருக்கவே முடியாது டா.. அவளோட சேர முடியல.. ஆனா பாக்குறேங்குற நிம்மதி மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு இருக்குது.. இன்னும் மூணு வருஷம் அவளை தினமும் பார்க்கலாம்கிற ஒரு எண்ணத்தில தான் நான் கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கேன்.. இப்போ அவ ஊருக்கு போயிட்டா இனிமே அவளை பார்க்கவே முடியாதே டா..” புலம்பினான் அருண்.. 

 

“என்னடா பண்றது? அவங்க வீட்டில டிசைட் பண்ணிட்டாங்க.. இதுல நம்ம பண்றதுக்கு ஒன்னும் இல்ல.. நீயும் என் கூட நாளைக்கு எட்டு மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வரியா?” என்று கேட்டான் நிலவழகன்..

 

“நான் வந்தா நான் அவளை விரும்புறேன்னு அவளுக்கு தெரிஞ்சிடும்டா.. வேண்டாம்.. நான் வரல.. நீ போய்ட்டு வா..” 

 

“டேய்.. அதுக்கப்புறம் அவளை பார்க்கவே முடியாது டா உன்னால.. லாஸ்ட்டா ஒரு தடவை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அவளை பார்த்துட்டு போ..” என்று சொன்னவனிடம் “வேண்டாம்டா.. நான் இப்படியே இருக்கிறேன்.. எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்” என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்..

 

நிலவழகனிடம் அப்படி சொல்லி விட்டானே தவிர காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி தேஜூ இருக்கிறாளா என்று பார்த்து தேடிக் கொண்டிருந்தான் அருண்..

 

தொடரும்..

 

வணக்கம்.. அன்பு நெஞ்சங்களே..!!

 

இந்த எபி உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நெனைக்கறேன்.. 

 விமர்சனங்கள் பதிவு பண்ண மறக்காதீங்க.. குறைஞ்ச பட்சம் கதை பிடிச்சிருந்துதுன்னா ரேட்டிங் கொடுங்க.. உங்க ஃப்ரெண்ட்ஸ், மத்த ரீடர்ஸூக்கும் ஷேர் பண்ணுங்க..

 

எப்போதும் போல உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!