பரீட்சை – 59
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
எனக்கு மணவாளன் என
ஏற்கனவே ஒருவன்
என்னுடனே வாழ்ந்து
அன்பை பொழிந்து
கொண்டிருக்க..
எங்கிருந்தோ வந்த நீ
எடுத்த எடுப்பிலேயே
என்றும் நானே
உன் கணவன் என
உரைத்திருக்க..
என் கதை
என்று நீ
எழுதி வைத்த
பொய்யுரையில்
இருவருமே இன்றி
இன்னொருவன்
கையால்..
என் கழுத்தில் தாலி
ஏறியது என்று
எளிதில் சொல்லி
விட்டாய்..
அதை எப்படியடா
நான் தாங்குவேன்..?!
###################
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!
கோபம் வந்த சரண் தேஜூவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.. அதில் அவள் உதட்டில் இருந்து ரத்தம் வந்தது..
இதுவரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அருணுக்கு அதற்கு மேல் தன் பொறுமையை காக்க முடியவில்லை.. ஓடி சென்று சரணை அடிக்க போக இரண்டு அடியாட்கள் ஓடி வந்து அருணை சரமாரியாக தாக்கலானார்கள்..
அருண் உதவிக்கு நிலவழகனும் ஓடி வர அவனையும் இரண்டு பேர் தாக்கினார்கள்..
அந்த இடைவெளியில் ஓடிப் போய் கீழே கிடந்த தாலியை எடுத்த சரண் ஒரு அடியாளுக்கு கண்ணை காட்ட நித்திலாவை பிடித்துக் கொண்டு இருந்த அந்த அடியாள் அவளை விட்டுவிட்டு தேஜுவின் கைகள் இரண்டையும் இறுக்க பிடித்தான்..
சரண் அவள் கழுத்துக்கு அருகில் தாலியை எடுத்துக் கொண்டு போக அவள் அந்த அடியாளின் கையில் இருந்து திமிறி சரண் முகத்திலேயே காரி உமிழ்ந்திருந்தாள்.. “தூ.. நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா.. என்னை ஏமாத்தி இப்படி கட்டாய தாலி கட்டறியே.. உனக்கு வெட்கமா இல்ல..?” என்று கேட்டாள்..
அவள் கேள்வி தந்த கோபத்தில் அவன் கொடுத்த இன்னொரு அடியில் அப்படியே மயங்கி சரிந்தாள்..தேஜூ.. ஒரு குரூர புன்னகையுடன் “இப்ப நீ என் பொண்டாட்டியா ஆகறதை எந்த ரோமியோ வந்து தடுக்கறான்னு நானும் பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு சரண் அவள் கழுத்தில் தாலி கட்ட போனான்..
###################
தன் மயக்கத்தில் இருந்து விழித்த தேஜூ தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றிமுற்றி பார்த்தவள் தான் மருத்துவமனையின் ஒரு அறையில் இருக்கிறோம் என்று தெரிந்தவுடன் நடந்ததெல்லாம் நினைவுக்கு வர தன் கழுத்தைப் பார்த்தாள்.. அவள் கழுத்தில் புத்தம் புது தாலி கட்டி இருந்தது..
அதை பார்த்து ஓவென கதறி அழுதவள் “ஐயோ இந்த தாலியை யார் கட்டியிருப்பாங்க..? நிச்சயமா அந்த சரண் கட்டி இருக்க கூடாது.. ” என்று நினைத்தவள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு கொஞ்சம் தெளிவாக “இல்லை.. அந்த இடத்தில என் அருண் இருந்தான்.. அவன் நிச்சயமா இன்னொருத்தரை எனக்கு தாலி கட்ட விட்டு இருக்க மாட்டான்..” என்று எண்ணியவள் அங்கு ஒரு செவிலி வர அவளிடம் “என்னை இங்க கூட்டிட்டு வந்தது யாரு?” என்று கேட்க “உங்களை இங்க கூட்டிட்டு வந்தது உங்க ஹஸ்பண்ட்.. உங்களை தூக்கிட்டு வந்து இங்க அட்மிட் பண்ணாரு.. அவருக்கு அடிபட்டு இருக்கிறதுனால நெக்ஸ்ட் ரூம்ல அவருக்கு ட்ரீட்மென்ட் நடந்துகிட்டு இருக்கு..” என்றாள்..
சட்டென கட்டிலில் இருந்து இறங்கியவள் “ஒரு நிமிஷம் நான் அவரை பாத்துட்டு வரேன் சிஸ்டர்..” என்றாள்..
“ஓகே மா.. போய்ட்டு வாங்க.. உங்களுக்கு ரொம்ப அடிப்படல.. இது சாதாரண மயக்கம் தான்.. நீங்க போய் பார்க்கலாம்..” என்று சொல்லி அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்..
அடுத்த அறைக்கு சென்று பார்த்தாள்.. தேஜூ.. அங்கு சரண் உடல் முழுதும் கட்டோடு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க படுத்திருந்ததை பார்த்து அப்படியே சிலையாய் நின்றாள்.. அவள் காலுக்கடியில் இருந்து பூமி நழுவிவிட்டது போல உணர்ந்தாள்..
“ஐயோ கடவுளே.. என் வாழ்க்கையில இப்படி எல்லாமா நடக்கணும்..? போயும் போயும் இந்த பொறுக்கிக்கா நான் பொண்டாட்டியா ஆகணும்? என்னை ஏன் இப்படி சோதிக்கிற? இந்த தாலியை நான் யார்கிட்ட வாங்கணும்னு நினைச்சேன்.. கடைசில இப்படி என் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிட்டியே..?” நடந்ததை ஏற்க முடியாமல் கதறி அழுதவள் அப்படியே மயங்கி சரிந்தாள்..
அப்போது அவள் பின்னே வந்த செவிலி அவளை தாங்கி அங்கே இருந்த பணியாளரின் உதவியோடு அவளை அவள் அறை கட்டிலில் படுக்க வைத்தார்..
####################
அருணின் டைரியிலிருந்து..
சரண் கொடுத்த இரண்டாவது அடியில் மயங்கி விழுந்த என் அஸ்வினி அதன் பிறகு மருத்துவமனையில் இருந்த ஒரு அறையில் கண் விழித்து பார்த்தாள்..
தன் கழுத்தை குனிந்து பார்த்தவள் கழுத்தில் மஞ்சள் தாலி புத்தம் புதிதாக மின்னி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்..
வைஷு படிக்க படிக்க அதைக் கேட்ட தேஜுவுக்கு அதிர்ச்சியில் தலையே சுற்றியது..
கண்களில் பேரதிர்ச்சியோடு அருணை அவள் பார்க்க “என்ன பார்க்கறே அஷ்ஷூ செல்லம்? உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.. இதுதான் உண்மை.. இந்த ராம் உன் லைஃப்ல ரொம்ப லேட்டா தான் வந்தான்.. உன் லைஃப்ல வெறும் சரண்.. ராம் சரண்னு எத்தனை பேர் வந்தாலும் நான் தான் உன் புருஷன்.. இதுல எந்த மாற்றமும் இல்லை.. உன் கழுத்துல தாலி கட்டுறவன் எல்லாம் உன் புருஷன் ஆக முடியாது.. உன் மனசுல யாரு இருக்காங்களோ அவன் மட்டும்தான் உன் புருஷனா இருக்க முடியும்.. உன் அடி மனசுல உன் உயிருக்கும் மேல நீ என்னை தான் விரும்பினே.. விரும்புறே.. இனிமேலும் விரும்புவேன்னு கூடிய சீக்கிரம் நான் உனக்கு நிரூபிக்கிறேன்.. ” என்றான் அருண்..
“நீ சொல்ற இந்த கதையெல்லாம் நம்பறதுக்கு வேற ஆளை பாரு.. நீ எழுதி இருக்கிற இந்த கதையையே நான் நம்பலன்னு சொல்றேன்.. நீ என்னடான்னா இந்த கதையை வெச்சுக்கிட்டு நீ தான் எனக்கு புருஷன்னு சொல்லிக்கிட்டு இருக்கே.. நீ சொல்றபடி பார்த்தாலும் என் மனசுல எப்பவும் இருக்கிறது என் ராம் தான்.. அவர் மட்டும்தான் எனக்கு இந்த ஜென்மத்தில புருஷனா இருக்க முடியும்.. இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் அவர் மட்டும்தான் எனக்கு புருஷனா இருக்க முடியும்..” அவள் உறுதியாக சொன்னாளே தவிர அவள் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தன..
அருணுக்கோ அவள் அழுவதை பார்த்து மனதில் ஏதோ செய்தது.. “சரி.. இதெல்லாம் உண்மையா இல்லையான்னு உனக்கு நிச்சயமா தெரிய வெப்பேன்.. இதெல்லாம் உண்மையானு உனக்கு தெரியிற வரைக்கும் அதெல்லாம் பொய்.. கட்டு கதைன்னே நீ நினைச்சுக்கோ.. நீ அழாத அஷ்ஷூமா.. அதை என்னால தாங்கவே முடியல.. உன் கண்ணுல ஒரு சொட்டு தண்ணி கூட வரக்கூடாதுன்னு தான் நான் உன்னை விட்டு பிரிஞ்சு போனேன்.. என் உயிரையே பிரிஞ்சு வெறும் வெத்துடம்பா சுத்திகிட்டு இருந்தேன் இவ்வளவு நாள்.. இப்ப என் உயிரை தேடித்தான் வந்திருக்கேன்.. உன் அடி மனசுல இருக்குற உன்னோட உண்மையான காதலை உனக்கு புரிய வச்சு உன்னை நல்லபடியா வாழ வைக்கிறதுக்காக தான் நான் இங்க வந்து இருக்கேன்.. நிச்சயமா இதை முடிக்காம நான் போக மாட்டேன்.. ஆனா இனிமே நீ அழுதா அதை என்னால தாங்கவே முடியாது.. தயவு செஞ்சு அழாத அஷ்ஷூமா..” கெஞ்சும் குரலில் சொன்னான் அருண்..
“நிஜமாவே நான் அழக்கூடாதுன்னு நீ நினைச்சிருந்தா என் ராம் கிட்ட இருந்து என்னை பிரிச்சிருக்கவே மாட்ட..” என்றாள் தேஜூ..
“இல்ல அஷ்ஷூ செல்லம்.. நீ தயவு செஞ்சு புரிஞ்சுக்க.. நீ ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கே.. உன் வாழ்க்கையில பாதியை தொலைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கே.. அதை மீட்டெடுத்து உனக்கு கொடுத்து உண்மையான முழுமையான சந்தோஷம்ன்னா என்னன்னு உனக்கு தெரிய வைக்கணும்னு தான் நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. உனக்கு அந்த உண்மையான சந்தோஷம் கொடுக்கக் கூடிய ஒரே ஆள் நான் மட்டும்தான்.. இதுல எந்த மாற்றமும் இல்லை..”
“நான் பொய்யான வாழ்க்கை வாழலடா நீதான் என் வாழ்க்கையையே பொய்யாக்க பார்க்கிற..”
அருண் அவள் அருகே வந்து அவள் நாடியை பிடித்து முகத்தை நிமிர்த்தி தன் கண்களை பார்க்க வைத்தவன் “உன் வாழ்க்கையில் நடந்த எல்லாமே உனக்கு தெரியுமா? இதை நீ உறுதியா சொல்ல முடியுமா?” என்று கேட்டான்..
“என் வாழ்க்கையோட எந்த பகுதியையும் யாரும் என்கிட்ட இருந்து மறைச்சு வைக்கல.. என்னை சேர்ந்தவங்க என்னை உண்மையா நேசிக்கறவங்க யாரும் எந்த காரணத்தை கொண்டும் மறைச்சு வைக்கவும் மாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு தெரியும்.. இதை நான் உறுதியா தான் சொல்றேன்..” அவள் குரலிலும் உறுதி தெரிந்தது..
“நீ நம்பிக்கிட்டு இருக்கிற படியே இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.. ஆனா அப்படி இல்லைன்னு உனக்கு தெரியுறப்போ நீ ரொம்ப உடைஞ்சு போயிடுவ.. அப்போ உன்னை தாங்கறதுக்கு நான் உன் கூட இருக்கணும்னு நினைக்கிறேன்.. உன்னை ஒரு உண்மையான நிறைவான வாழ்க்கை வாழ வைக்கணும்னு நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. என்னைக்காவது ஒரு நாள் உனக்கு நீ வாழற வாழ்க்கை ரொம்ப பொய்யான வாழ்க்கைன்னு தெரியும் போது உன் உயிரை விடவும் நீ தயங்க மாட்டே.. அப்படி உன் உயிர் போறதை பார்த்துக்கிட்டு ரெண்டாவது முறையா என்னால சும்மா இருக்க முடியாது.. இந்த முறை உனக்கு எதுவும் தப்பா நடக்க நான் விடமாட்டேன்..”
“ஐயோ.. என்னை குழப்பாத.. நான் தெளிவா தான் இருக்கேன்.. எனக்கு குழப்பமே இல்லை.. என் வாழ்க்கை அருவி மாதிரி போயிட்டு இருந்தது… அதில் இப்படி புயல் மாதிரி வந்து எல்லாத்தையும் சிதற அடிச்சிட்டியே.. அதனால உனக்கு என்ன கிடைக்கப் போகுது..?”
“இதனால எனக்கு எதுவுமே கிடைக்காது அஷ்ஷூம்மா.. உனக்கு சந்தோஷம் கிடைக்கும்.. நிம்மதி கிடைக்கும்.. அழகான வாழ்க்கை கிடைக்கும்.. கூடிய சீக்கிரம் யார் வாழ்க்கையை யார் சிதற அடிச்சாங்கன்னு உனக்கு நிச்சயமா புரியும் அஷ்ஷூமா..”
“சரி.. அதெல்லாம் விடு.. நீ அந்த டைரியை தொடர்ந்து படிச்சு முடிச்சா தான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்.. அதுக்கப்புறம் நீ கேக்குற அத்தனை கேள்விகளுக்கும் ஆதாரத்தோட நான் பதில் தரேன்..” என்றான் அருண்..
வைஷு “ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? அக்கா.. உங்க கழுத்துல யார் தாலி கட்டினாங்கன்னு கூட தெரியாம எனக்கு டென்ஷனா இருக்கு.. முதல்ல நான் அதை படிக்கிறேன்” என்று சொன்னவள்.. தொடர்ந்து டைரியை படிக்க தொடங்கினாள்..
“அந்த செவிலி சொன்னபடி போய் பக்கத்து அறையில் பார்க்க அங்கே சரண் இருந்தது பார்த்து மயங்கி விழுந்தாள் அஷ்வினி..” என்று வைஷூ படிக்க அதைக் கேட்ட தேஜு இப்போது நிஜமாகவே மயங்கி விழுந்திருந்தாள்..
அவளை ஓடிவந்து தாங்கி பிடித்த அருண் அவளை தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.. அவன் கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தது..
“ஐயோ.. அருண் சார்.. இதைக் கேட்ட எனக்கே மயக்கம் வரும் போல இருக்கு.. ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்த மாதிரி இருக்கு சார்.. கடைசியில நீங்களும் இல்லாம ராம் சாரும் இல்லாம அவங்க கழுத்துல தாலி கட்டினது சரணா.. என்ன சார் இது அநியாயம்?” என்று கேட்க கண்களில் கண்ணீரோடு புன்னகைப் பூத்த அருண் “நான் முதல்ல அஷ்வினியை எழுப்புறேன்.. அப்புறம் நீ அந்த டைரியை படி..” என்று மட்டும் சொன்னவன் தேஜுவை கன்னத்தில் தட்டி எழுப்பலானான்..
அவள் எழுந்திருக்கும் வழியாக தெரியவில்லை.. கல்யாணி அம்மாள் அதற்குள் உள்ளே சென்று சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தார்.. அதை வாங்கி முகத்தில் தெளித்தவுடன் மெதுவாக கண்ணை திறந்தாள் தேஜூ..
மயக்கத்திலிருந்து விழித்தவளுக்கு வைஷு படித்தது நினைவு வர மறுபடியும் அழத் தொடங்கினாள்..
அருண் “அஷ்ஷூமா அழாதே.. நீ எவ்வளவு போல்டா இருந்தவ.. நீ ஏன் இப்படி ஆயிட்ட..? எதுக்கெடுத்தாலும் அழுதுகிட்டே இருக்க.. உன்னோட மாஜி புருஷன் ஒன்னை வீக்கா மாத்தி வச்சிருக்கான்.. கொஞ்சம் கூட தைரியமே இல்ல..” என்று சொல்ல உடனே பொசுக்கென்று கோபம் வந்தது தேஜஸ்வினிக்கு..
“இன்னொரு வார்த்தை அவரை பத்தி ஏதாவது பேசுன.. உன்னை இங்கேயே அடிச்சு கொன்னுடுவேன் நான்.. அவரை பத்தி தப்பா பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத.. இன்னைக்கு நீ குடுக்கற அத்தனை வேதனைக்கும் உடைஞ்சு போகாம உன்னை எதிர்த்து நிற்கிறேன்னா அதுக்கு காரணம் அவர் கொடுத்த தைரியம் தான்..” என்றாள் அவள்..
“ம்ம்ம்ம்.. இதைத்தான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்..” என்று நமட்டு சிரிப்பு சிரித்தவன்.. “சரி இப்ப ஃபிரஷ் ஆயிட்டியா? ஓகே தென்.. வைஷு.. டைரியில அதுக்கப்புறம் என்ன எழுதி இருக்குன்னு படிக்க ஆரம்பி.. இதை பாரு டைரியை படிச்சு முடிக்கிற வரைக்கும் நீ எமோஷனல் ஆகாத.. முழுக்க படிச்சு முடிச்சப்புறம் மொத்தமா உனக்கு என்னல்லாம் தோணுதோ அதெல்லாம் பண்ணிக்க.. இப்போதைக்கு அவ என்ன படிக்கிறாளோ அதை மட்டும் கேளு..” என்று சொன்னவன் அவளை கேட்காமலேயே அவள் முதுகு புறம் கையை கொடுத்து அவளை நிமிர்த்தி தலையணையை நிமிர்த்தி போட்டு அதன் மேல் சாய்ந்தாற் போல அவளை அமர வைத்தான்..
முதலில் அவன் கையை தட்டி விட முனைந்தவளை “என்னை ஒரு ஹாஸ்பிடலோட வார்ட் பாய்யா நினைச்சுக்கோ..” என்று சொல்லி அவள் தலையை வருடி கொடுத்தான் அருண்..
தன்னை அவன் கையாளும் மென்மையான விதமே அவளுக்குள் பல கேள்விகளை விதைத்து கொண்டிருந்தது.. வைஷூ டைரியை தொடர்ந்து படிக்க ஆரம்பிக்க தேஜூ ஏனோ இருக்கின்ற கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டு அவள் படிப்பதை கேட்க ஆரம்பித்தாள்..
###################
மயங்கிய தேஜூவிற்கு அந்த செவிலி ஒரு ஊசி போட்டுவிட அடுத்த ஐந்தாவது நிமிடம் தேஜு எழுந்தாள்..
செவிலியை பார்த்த தேஜு “ஸிஸ்டர்.. என்னை எதுக்கு எழுப்புனீங்க? ஏதாவது ஒரு விஷ ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க.. நான் உயிர் வாழவே விரும்பல.. அந்த பக்கத்து ரூம்ல இருக்கிறவன் எனக்கு தாலி கட்டினான்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே என் உயிர் போயிடுச்சு..” என்று கதறி அழுதாள்..
தொடரும்..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..!!
தேஜூ நிஜமாவே சரணை கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? அவன்தான் அவ கழுத்துல தாலி கட்டுனானா? அப்படின்னா இப்ப அவன் என்ன பண்றான்? எங்க போனான்? தெரிந்துகொள்ள அடுத்த அத்தியாயத்தை தவறாமல் படிங்க..
மறக்காம ஷேர் பண்ணுங்க..
எப்பவும் போல உங்க கமெண்ட்ஸை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உங்கள் பிரியமான சகி
❤️❤️சுபா❤️❤️