அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 63🔥🔥

5
(15)

பரீட்சை – 63

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

உன்னோடு கைப்பிடித்து 

தோள் சாயும் 

அந்த 

ஒரு நொடி 

போதுமடா

உலகத்தையே 

மறந்திடுவேன்..

உனக்குள்ளே 

கலந்திடுவேன்..

 

கட்டியணைக்க 

வேண்டாமே 

அனைவருக்கும் 

தெரிய 

காதல் சொல்ல 

வேண்டாமே..

 

பார்வை தழுவல் 

ஒன்றே 

போதுமடா 

என் காதல் 

பல காலம் 

வாழ்வதற்கு..

 

உன்னை எப்போதும் 

பார்த்திருக்கும் 

ஒரு வரம் 

நீ எனக்கு

பரிசாய் கொடுத்திடடா..

 

பின்னை வரும் 

அத்தனை 

துன்பங்களையும் அந்த 

விழி வருடல் 

பின்னுக்கு 

தள்ளி விடுமே..

 

##################

 

விழி தீண்டல் போதுமடா..!!

 

தேஜூவுக்கும் அருணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்று தெரிந்தவுடன் ராம் அவளை பற்றி தவறாக நினைத்து அவளை பிரிந்துவிடும் முடிவை எடுத்து விடப்போகிறாரே.. என்று நினைத்து அழகப்பனின் முகம் இருண்டது..

 

ஆனால் ராம் அவர் கையை ஆதுரமாய் பிடித்து “மாமா.. யாரு என்ன சொன்னாலும் என் தேஜூ மேல எனக்கு இருக்கிற நம்பிக்கை கொஞ்சம் கூட குறையாது.. அவ எனக்கு பொண்டாட்டியா இவ்வளவு வருஷம் என்னோட வாழ்ந்து இருக்கா.. ஒரு நாள் கூட அவ காதல்ல ஒரு சதவீதம் குறை கூட நான் கண்டதில்லை.. இப்ப அவ அருணோட இருக்கும்போது கூட அவ என்னை பார்க்குற பார்வையில அவ்வளவு காதல் தெரியுது எனக்கு.. என்னோட இல்லன்னாலும் என்னால அவ காதலை உணர முடியுது.. அதனால அவ காதலை நான் என்னிக்குமே சந்தேகப்பட மாட்டேன் மாமா.. ஆனா இந்த விஷயம் எல்லாம் அவ வாழ்க்கையில நடந்ததுன்னு அவளுக்கு தெரியாதுன்னு நீங்க சொல்றீங்க.. இப்ப அவளுக்கு அது தெரிஞ்சதுன்னா அவ நிலைமை என்ன ஆகும்னு நினைச்சாலே எனக்கு மனசு பதறுது மாமா..” என்றான்..

 

அழகப்பன் அவனை இழுத்து இறுக்க அணைத்து கொண்டு கண்ணீர் விட்டு கதறினார்..

 

 “மாப்பிள்ளை.. உங்களை மாதிரி ஒருத்தர் எனக்கு மாப்பிள்ளையா கிடைக்கிறதுக்கு நான் போன ஜென்மத்துல ஏதோ தவம் பண்ணி இருக்கணும் மாப்பிள்ளை… இவ்வளவு கேட்ட பிறகும் என் பொண்ணு மேல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கீங்க.. அவளை இன்னும் உயிரா நினைக்கிறீங்க.. அவளை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசல.. நீங்க வச்சிருக்கற இவ்வளவு காதலுக்காகவும் உங்க நம்பிக்கைக்காகவுமே என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது மாப்பிள.. அவ நிச்சயமா உங்களோட நல்லபடியா 100 வருஷம் வாழ்வா.. உங்க காதல் அவளை வாழ வைக்கும்..” உணர்ச்சி பெருக்கில் தழுதழுத்து சொன்னார் அழகப்பன்..

 

அவரை தன்னிடமிருந்து விலக்கியவன் “மாமா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. எந்த நேரத்திலும் நான் தேஜூ மேல சந்தேகப்படவே மாட்டேன்.. ஏன்னா அவ மேல சந்தேகப்பட்டா நான் என் மேலேயே சந்தேகப்படுற மாதிரி.. அவளை விட்டு பிரியவே மாட்டேன்.. அவ எந்த தப்பும் பண்ணமாட்டான்னு எனக்கு உறுதியா தெரியும்.. அவ தப்பே பண்ணி இருந்தா கூட நான் அவ மேல வச்சிருக்கற காதலுக்காக அவளை விட்டு என்னைக்கும் பிரிய மாட்டேன்.. ஏன்னா அவளை பிரிஞ்சன்னா என் உயிர் என்கிட்ட இருக்காது மாமா..” என்றான் அவன் தீர்க்கமாய்..

 

அவனை கையெடுத்து கும்பிட்டார் அழகப்பன்.. அவனோ பதறிப்போய் அவர் கையைப் பிடித்து இறக்கி “இல்ல மாமா.. நான் தான் உங்களை கையெடுத்து கும்பிடணும்.. இப்படி ஒரு பொண்ணை எனக்கே எனக்குன்னு கொடுத்ததுக்கு..  இப்பவும் என் தேஜூ எந்த நிலைமையிலயும் சந்தோஷமா இருக்கணும்னு நெனைக்கிறேன்.. ஒருவேளை இந்த கதை எல்லாம் தெரிஞ்சு அருணோட வாழணும்னு அவ முடிவு பண்ணிடுவாளோனு பயமா இருக்கு மாமா.. என்கூட என் தேஜூ இல்லன்னா என் வாழ்க்கையே வெறுமையா தான் இருக்கும்.. ஆனா அவ சந்தோஷத்துக்காக அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்கிறது என்னால முடியாது மாமா.. ஏன்னா அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்.. அவ அந்த அருணோட தான் வாழ்வேன்னு அடம் புடிச்சான்னா என்னால அதை மட்டும் ஏத்துக்க முடியாது மாமா.. அவ மனசுல எனக்காக இருக்கற உண்மையான காதலை புரிய வச்சு அவளை எனக்கே சொந்தமானவளா என்னோட இருக்க வச்சுக்கணும்னு தான் நான் நினைப்பேன்.. ” என்றான் ராம் சரண் உறுதியான குரலில்..

 

“நிச்சயமா அப்படி நடக்க வாய்ப்பே இல்ல மாப்ள.. உங்களை தவிர அவ மனசுல வேற யாரையும் அவ நினைக்கல இது எனக்கு தெரியும்.. அந்த அருணை அவ மனசுல இருந்து என்னிக்கோ அழிச்சிட்டா.. அவ மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க.. நீங்க இல்லனா அவ இல்ல மாப்ள..” 

 

“எனக்கு தெரியும் மாமா.. அவ இப்ப கூட என்னைத்தான் தேடறா.. இதை என்னால உணரமுடியுது” என்ற ராம் மல்லியை பார்த்து “மல்லி.. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.. அதை சொன்னா தான் மேற்கொண்டு இந்த பிரச்சனையை எல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு நான் யோசிக்க முடியும்” என்றான் ராம்..

 

மல்லியும் தொடர்ந்து நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்..

 

###################

 

சார்பதிவாளர் அலுவலகத்தில் அருண் கையெழுத்திட்டுக் கொண்டிருந்ததை பார்த்த தேஜூ முகம் மலர்ந்து சிரித்தாள்..

“என்ன அருண் சார்.. உங்க ஃப்ரெண்டு தாலி கட்டி கல்யாணம் பண்ண பொண்ணை நீங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கீங்க? இது எந்த விதத்தில நியாயம்?” என்று கேட்க அங்கிருந்த பதிவாளரோ இன்னும் திடுக்கிட்டு போனார்..

 

“ஏன் சார்? இங்க என்ன நடக்குது? அவர் மாப்பிள்ளைன்னு இவங்க சொன்னாங்க.. இப்ப என்னடான்னா நீங்க வந்து மாப்பிள்ளைன்னு கையெழுத்து போடுறீங்க.. ஏம்மா நீ என்னம்மா கோபப்படாம இவ்வளவு கூலா பேசிகிட்டு இருக்க? ஒருத்தருக்கு பதிலா இன்னொருத்தர் சைன் பண்றாரு.. இது நிஜமான கல்யாணம் தானே? இல்ல இது ஏதாவது பிராங்க் ஷோவா?” என்று கேட்டார் அந்த பதிவாளர்..

 

அதைக் கேட்டு சிரித்த தேஜூ அவரிடம் நடந்தது முழுவதையும் சொன்னாள்.. “ஏன் சார் அந்த பொண்ணு மேல இவ்வளவு அக்கறை வச்சிருக்கீங்க.. முதலிலேயே நீங்களே சைன் பண்ணி இருக்கலாம் இல்ல? ஏன் சார் இப்படி பிடிவாதம் பிடிச்சு தேவையில்லாத வேலை எல்லாம் செஞ்சு எங்க டைம வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று சொன்னவர் “சரி உங்க ஐடி ப்ரூஃப் வெச்சி இருக்கீங்களா?” என்று கேட்டார்..

 

தன் சட்டை பையில் இருந்து ஓட்டுநர் உரிமத்தை எடுத்து அவரிடம் தேஜூவை முறைத்தபடியே கொடுத்தான் அருண்..

 

 அதைப் பார்த்தவர் “சரி.. உங்க மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன்‌ பத்தி நோட்டீஸ் போர்டில ஒட்டிடுவேன்.. 30 நாளைக்கு அப்புறம் வந்து சர்டிஃபிகேட் வாங்கிட்டு போங்க.. நீங்க கிளம்பலாம்..” என்றார் அவர்..

 

அதற்குள் தேஜூ “இருங்க.. இருங்க.. இருங்க.. மாலை போட்டுக்கணும்னு சொன்னீங்க இல்ல..? நாங்க மாலையை மாத்திக்கிறோம்.. பாவம் அவர் வேற மாலை எல்லாம் வாங்கிட்டு வந்து வச்சிருக்கறாரு..” என்று சொன்னவளை வினோதமாக பார்த்தார் அந்த பதிவாளர்..

 

அருண் “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.. நான் கிளம்புறேன்..” என்று சொன்னவன் விடுவிடு என்று அந்த பதிவு அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விட்டான்..

 

அவன் பின்னாலே ஓடி வந்த தேஜு அவன் அருகில் வந்து நின்று காலை எக்கி அவன் கன்னத்தில் பளிச்சென்று ஒரு முத்தம் தந்துவிட்டு ஓடினாள்..

 

அந்த ஒரு நொடி அவன் கைகள் இரண்டையும் இறுக்கியவன் அவள் சென்றதும் கையை தளர்த்தினான்..

 

அவனில் அந்த ஒரு நொடியில் நிகழ்ந்த மாற்றத்தை கவனித்த நிலவழகன் அவன் முதுகில் தட்டி “ரிலாக்ஸ்.. வா.. போலாம்..” என்று சொல்லிவிட்டு அவன் தோளில் அணைத்தாற் போல கை போட்டு அழைத்து சென்றான்..

 

வெளியே வந்த அருண் அங்கு நின்ற தேஜூவை பார்த்து “அஸ்வினி.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான்..

 

“நீ தான் என் கழுத்துல தாலி கட்டி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியாச்சே.. இனிமே நீ சொல்றதை கேக்காம வேற யார் சொல்றதை கேட்க போறேன்..? என் புருஷன் சொல்றதை அச்சு பிசகாம அப்படியே கேட்பேன்.. சொல்லு.. என்ன விஷயம்..?” 

 

“நமக்குள்ள நடந்த இந்த கல்யாணம் நம்ம நாலு பேர் அப்புறம் நித்திலா அஞ்சு பேருக்கு தான் தெரியும்.. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நித்திலா காலேஜ்ல இந்த விஷயத்தை சொல்ல மாட்டா.. ஏன்னா இதை சொன்னா சரண் செஞ்சது அப்புறம் அவன் உன்னை கட்டாய கல்யாணம் பண்ண கூட்டிட்டு வந்தது இது எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்.. அவ சரணை காப்பாத்தணும்னு தான் நினைப்பா.. அதனால நம்ம நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்ச இந்த விஷயம் உன் படிப்பு முடியற வரைக்கும் வேற யாருக்கும் தெரிய கூடாது.. இந்த முத்தம் கொடுக்கறது கட்டி பிடிக்கறது இதெல்லாம் நமக்குள்ள வேண்டாம்.. நான் உன்னோட எங்கேயும் வெளியேயும் சுத்த மாட்டேன்.. நான் ஏற்கனவே சொன்னது தான் உன்னை காதலிச்சாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உன்னை என்னால முழுசா மனைவியா ஏத்துக்க முடியாது..

ஒரு புருஷன் கொடுக்க வேண்டிய எந்த ஒரு சந்தோஷத்தையும் நான் உனக்கு கொடுக்க முடியாது.. அதனால இந்த ஒன்றரை வருஷம் எதை பத்தியுமே பேசாம இத்தனை நாள் நீ எப்படி காலேஜுக்கு வந்து போயிட்டு இருந்தியோ அதே மாதிரி வந்து போயிட்டு இரு..நம்மள பொறுத்த வரைக்கும் இந்த காலேஜ்ல நான் ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்.. நீ செகன்ட் இயர் ஸ்டூடன்ட்.. அவ்வளவுதான்.. உன் படிப்பு முடிஞ்ச அப்புறம் இந்த கல்யாணத்தை பத்தியும் மேற்கொண்டு உன் வாழ்க்கையில் நீ என்ன பண்ண போறேங்கறதை பத்தியும் யோசிக்கலாம்..” 

 

அவன் விளக்கமாய் பேச “ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் உனக்காக எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்துகிட்டு இருப்பேன்.. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சுங்கறதை மறந்துடாத.. மறந்து கூட வேற பொண்ணு பக்கம் உன் கண்ணு போச்சு.. உன் கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன்..” என்று சொன்னவளை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான் அருண்..

 

அவள் கண்ணை உருட்டி உருட்டி ஆர்வத்தோடு பேசும் விதம் அவனை மயக்கி தனக்குள்ளே போட்டுக் கொண்டது.. அந்த நிமிடமே அவளை தன் உரிமையாக்கி தன் மனைவியாக வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போக தோன்றியது.. ஆனால் அதெல்லாம் செய்ய முடியாதவனாக தான் இருப்பது எண்ணி உள்ளுக்குள்ளே மருகினான் அவன்.. 

 

புன்னகை பூத்த அடுத்த நொடியே அவன் முகம் மாறுவதை கண்டவள்.. “அருண் என்னை ஏத்துக்க முடியாதபடி அப்படி என்னதான் விஷயம்? என்கிட்ட சொல்ல கூடாதா? இப்ப நான் உன் பொண்டாட்டி ஆயிட்டேன்.. இப்பவாவது என்கிட்ட உண்மையை சொல்லலாம் இல்ல?” என்று கேட்டாள் தேஜு..

 

“அதை சொன்னா நீ தாங்க மாட்டடி.. ஏன்னா நீ என்னை உண்மையா விரும்புற அஸ்வினி… நீ உடைஞ்சு போறதை பார்க்கற சக்தி எனக்கு இல்ல..” என்று சொல்லி அவள் கன்னத்தில் தன் வலது கையை வைத்தவன் “சொல்ல சொல்ல கேட்காம ஏண்டி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட..? இதனால உனக்கு ஒண்ணுமே கிடைக்கப் போறது இல்ல..” என்று சொல்லிவிட்டு விடு விடுவென நடந்து சென்றான் அங்கிருந்து தன் வண்டியை நோக்கி..

 

அவன் காரில் ஏறி அவன் பக்கத்தில் அமர்ந்தவள் “சரி.. அதெல்லாம் விடு.. அழகா பட்டு புடவை கட்டிக்கிட்டு கல்யாண பொண்ணு மாதிரி வந்து இருக்கேன் இல்ல..? நான் எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தையாவது சொன்னியா? என்னை கட்டிக்க வேண்டாம்.. முத்தம் கொடுக்க வேண்டாம்.. ஆனா நான் இந்த புடவையில எப்படி இருக்கேன்னு ரெண்டு வார்த்தை ஆசையா சொல்லலாம்ல..? அதுக்கு கூடவா உன்னோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஒத்துக்காது..” 

 

பொய் கோபத்துடன் உதட்டை சுழித்து கேட்டவளை அவனுக்கு அன்று முழுதும் பார்த்து பார்த்து அவள் அழகை பருகிக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது..

 

அவள் அழகான கோபத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தவன்.. “அதை வேற நான் வாய் திறந்து சொல்லனுமாடி? நீ ஒரு தேவதை.. நீ.. உன் மனசு.. ரெண்டுமே அழகுதான்.. என்னோட அழகி நீ.. அதனால தானே உன்னை ஏத்துக்கவும் முடியாம காதலிக்காம இருக்கவும் முடியாம நான் இப்படி அவஸ்தை பட்டு கிட்டு இருக்கேன்.. என் கஷ்டம் உனக்கு எங்கடி புரியுது..?” 

 

“நான் உன்னை கட்டிக்கல.. முத்தம் கொடுக்கல.. உன் கையை மட்டும் பிடிச்சுக்கலாமா?” என்று அவன் கண்ணை பார்த்து கேட்டவளை ஏக்கத்தோடு பார்த்தான் அவன்..

 

“இங்கே வா..” என்று கூப்பிட்டான்.. அவன் பக்கமாய் தள்ளி அமர்ந்தவள் தலையை தன் தோள் மீது சாய்த்து கொண்டு அவள் தோளில் கையை அணைத்தார் போல் வைத்துக் கொண்டு “இப்போ ஓகேவா..?” என்று கேட்டான்..

 

“எனக்கு எல்லாம் ஓகே தான்.. உனக்கு ஓகேவான்னு சொல்லு..” என்று அவள் சொல்ல “எனக்கு டபுள் ஓகே தாண்டி.. என் ரசகுல்லா..” என்றவன் மனமோ தன்னவளுக்கு பட்டும் படாமல் தருகின்ற இந்த அணைப்பை தவிர வேறு எந்த இன்பத்தையும் கொடுக்க முடியாதே என்று கவலைக்குள்ளானது..

 

ஒற்றை கையாலேயே வண்டியை ஓட்டிக்கொண்டு போனவன் அவள் வீட்டு தெருவின் முனையில் அவளை இறக்கி விட வண்டியை சுற்றி அவன் பக்கத்தில் வந்து நின்றவள் அவன் கையைப் பிடித்து “நான் வரேன்.. நாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்..” என்றாள்..

 

“ம்ம்.. பார்க்கலாம்.. அப்புறம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.. இந்த கையை பிடிச்சுக்கறது… தோள்ல கை போட்டுக்கிறது.. இது எல்லாமே இந்த காரோட முடிஞ்சிருச்சு.. நாளையிலிருந்து நம்ம இதுவரைக்கும் காலேஜ்ல எப்படி நடந்து கிட்டோமா அதே மாதிரி தான் நடந்துக்கணும்.. சரியா..?” என்று அருண் கேட்க அவளும் ஆமாம் என்பது போல தலையாட்டினாள்..

 

அதன் பிறகு மனமே இல்லாமல் திரும்பிச் செல்லப் போனவள் அவன் அழைப்பில் நின்றாள்.. 

 

“அஸ்வினி ஒரு நிமிஷம்.. நீ இப்படி அழகா கல்யாண பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கியே.. உங்க வீட்டுல ஒன்னும் கேக்கலையா?” என்று கேட்க “நான் என் ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கு போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. அதனால என் வீட்டில எதுவும் கேட்கல” என்று சொன்னாள்..

 

“சரியான திருட்டு பொண்ணா இருக்கே நீ..” என்று அவன் சொல்ல “அப்படி இல்லன்னா இந்த முரட்டு பையனை சமாளிச்சு கல்யாணம் பண்ணிட்டு இருக்க முடியுமா?” என்றாள் அவள்..

 

“ஒருவேளை இன்னிக்கு நான் அந்த அம்மன் கோவிலுக்கு வரவே இல்லன்னா  என்னடி பண்ணி இருப்ப? தைரியமா அந்த சரண் கூப்பிட்டான்னு போயிருக்கே.. அதுவும் அந்த நித்திலாவோட..” என்று கேட்டான் அருண்.. ‌..

 

தொடரும்…

 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..!!

 

என் கதை நடையில.. கதை போக்குல.. உங்களுக்கு ஏதாவ

து விமர்சனம் இருக்கு.. ன்னா தயவு செய்து பகிரவும்…

 

உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தோழி

❤️❤️சுபா❤️❤️

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!