அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 66🔥🔥

5
(12)

பரீட்சை – 66

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என்னை நெருங்க 

விடாமல்

உனக்குள்ளே ஒரு

நெருஞ்சி முள் 

வேலி

ஏனடா போட்டுக் 

கொண்டாய்..?

 

காரணம் தெரியாமல் 

கண்டுபிடிக்கும் வழி 

அறியாமல்

காரிகை நானும் 

தினம் தினம்

குழம்பித் 

தவிக்கின்றேன்..!!

 

உன் மனம் 

படும் பாடு

என்னவென்று 

தெரிந்து கொண்டால்

என்னால் இயன்றதை

செய்து

உன் குறை 

தீர்ப்பேனடா..!!

 

####################

 

நெருஞ்சி முள் காதலன்..!!

 

“நெஜமாவே இப்ப நான் உன் அண்ணி தாண்டா.. இங்க பாரு உங்க அண்ணன் கட்டின தாலி..” என்று தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து சின்ன பையனுக்கு தேஜூ காண்பிக்க அதை பார்த்தவன் வியப்பில் வாயை பிளந்தான்..

 

“அம்மாடியோ.. இது எப்ப நடந்தது? அண்ணன் சொல்லவே இல்ல என்கிட்ட.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இன்னிக்கு அண்ணன் வரட்டும்.. நான் நல்லா வச்சிக்கிறேன்.. ஒரு கல்யாண சாப்பாடு கூட போடாம என்னை ஏமாத்திட்டாரு பாரு.. இவ்வளவு வருஷமா இவரோட இருந்ததுக்கு இவர் கல்யாணத்தை பார்க்கிறதுக்கு கூட என்னை கூப்பிடலை…” என்று புலம்பியவனிடம் “டேய் என் கல்யாணத்த நானே பாக்கல டா.. அப்போ நானே மயக்கத்தில் தான் இருந்தேன்.. மயக்கத்திலே இருந்த எனக்கே தெரியாம உங்க அண்ணன் தாலி கட்டிட்டாரு..” என்று சொல்ல “யாரு? அண்ணனா? இல்லையே.. அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாரே.. அண்…ணீ…ய்…” என்று அவளை சந்தேகமாக முறைத்து பார்த்தான் சின்ன பையன்..

 

“அது ஒரு சின்ன சம்பவத்தினால நடந்ததுடா.. உங்க அண்ணன் மேல எந்த தப்பும் இல்லை.. உங்க அண்ணனை நான் மனசார விரும்புறேன் டா.. அவரும் என்னை காதலிக்கிறார்.. அதனால தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்..” என்று சொல்ல சின்னப் பையன் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனான்..

 

“இந்த நாள் வருமானு எத்தனை நாளா காத்துட்டு இருந்தேன் தெரியுமா அண்ணி…? எனக்கு ஒரு அண்ணி வருவாங்க.. என் அண்ணனோட சேர்ந்து இருப்பாங்க.. அவரை எப்பவும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவாங்க.. இப்படி எல்லாம் நான் யோசிச்சு இருக்கேன்.. ஆனா பாவம் அண்ணனுக்கு சோறு பொங்கி போட கூட வீட்ல ஆள் கிடையாது.. தானே டேஸ்ட்டே இல்லாம எதோ சமைச்சுக்கும்.. எனக்கும் கொண்டு வந்து கொடுக்கும்.. சில நாள் சாப்பிடுவேன்.. சில நாள் வாயில வைக்க கூட பிடிக்காது.. ஆனா அதைதான் அண்ணன் சாப்பிட்டு வரும்.. ரொம்ப கஷ்டமா இருக்கும் அண்ணி.. யாராவது அண்ணனை கவனிச்சுக்க கிடைக்க மாட்டாங்களான்னு நான் ரொம்ப நினைச்சு இருக்கேன்.. இப்போ உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. ஆமா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொன்னீங்க.. அப்புறம் நீங்க ஏன் அவரோட அவர் வீட்டில இல்லாம உங்க வீட்ல இருக்கீங்க? உங்க அப்பா ஒத்துக்க மாட்டாரா? ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸரா?” என்று கேட்க தேஜு சிரித்தாள்..

 

சின்னப் பையனின் கன்னத்தை கிள்ளியவள்”ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்.. எங்க அப்பா இல்லடா.. உங்க அண்ணன் தான்.. அவர்தான் படிப்பு முடியறதுக்கு முன்னாடி எல்லாத்துக்கும் தடா போட்டுட்டாரு..” என்று சொல்ல “ஆமா அண்ணி.. அவர் சரியான சாமியார்.. இங்க வர பொண்ணுங்க எல்லாம் அவரைப் பார்த்து அப்படி வழியுவாங்க.. ஆனா ஒருத்தியை கூட இவர் திரும்பி பார்க்க மாட்டாரு.. அவர் வச்ச கண்ணு வாங்காம பார்த்த ஒரே ஆளு நீங்க மட்டும் தான் அண்ணி..” என்றான் அவன்..

 

அவனைப் பார்த்து சுட்டு விரலை நீட்டி “இதை பாருடா.. இனிமே அந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் அவரை நிமிர்ந்து கூட பாக்க கூடாது.. அவருக்கு இனிமே நான் தான் எல்லாம்.. வேற எவளாவது வந்து அவரைப் பார்த்தா என்கிட்ட சொல்ல வேண்டியது உன்னுடைய வேலை.. அதுக்கப்புறம் நான் பாத்துக்குறேன் அவளுங்கள” என்று சொன்னவளிடம் “அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க அண்ணி.. இத்தனை நாளு அண்ணன் தான் பொண்ணுங்கள எல்லாம் விரட்டிக்கிட்டே இருக்கும்.. இனிமே அந்த வேலையை நான் கரெக்டா பார்த்துடறேன் அண்ணி.. இங்கே யாராவது பொண்ணுங்க வண்டி ரிப்பேருக்கு வந்தா கூட ரெண்டு தெரு தள்ளி ஒரு மெக்கானிக் செட் இருக்கு.. அங்க அனுப்பிடுவேன்” என்றான் சின்ன பையன்..

 

அவன் தலையை கலைத்து விட்டவள் “சூப்பர் டா.. அக்சுவலா எனக்கு இப்போ ஒரு விஷயம் தோணுது.. நீ இவ்வளவு தூரம் சொன்ன அப்பறம் இன்னிக்கு காலேஜ்க்கு ஹாஃப் டே போகலாம்ன்னு நினைச்சிருந்தேன்.. ஆனா இன்னைக்கு ஃபுல் டே லீவு போட்டுட்டு உங்க அண்ணன் வீட்டுக்கு வந்து உங்க அண்ணனுக்கு வித விதமா சமைச்சு வைக்கிறேன் டா.. இன்னிக்கு ஒரு நாள் அவர் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்” என்றாள் அவள்..

 

“ஆமா அண்ணி.. எனக்கு கூட இது தோணாம போச்சே.. சரி வாங்க.. பத்து நிமிஷம் கடையை அடைச்சிட்டு நான் உங்கள அவர் வீட்ல கொண்டு போய் விடுறேன்.. சமைக்கிறதுக்கு என்ன என்ன வேணும்னு கேளுங்க.. வழியில வாங்கிட்டு போலாம்.. நீங்க அவருக்கு நல்லா சமைச்சு வைங்க.. நான் அவரை ஏதாவது சொல்லி மூணு மணிக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறேன்.. இன்னிக்கி நாமெல்லாம் ஒன்னா சாப்பிடலாம்..” என்று சொன்னவனின் கன்னத்தில் கை வைத்து “நான் விருந்தே பண்ணி போடுறேன் உங்க ரெண்டு பேருக்கும்.. சரி வா.. போலாம்..” என்று சொன்னவள் அவன் கடையின் கதவை அடைத்து விட்டு வந்தவுடன் அவனோடு அருணின் வீட்டிற்கு சென்றாள்..

 

அது ஒரு சிறிய வீடாக இருந்தது.. ரொம்பவும் பொருள்கள் இல்லாமல் ஒரு படுக்கை அறை.. ஒரு வரவேற்பறை. ஒரு சமையலறை.. என்று மூன்றே அறைகள் கொண்ட சிறிய வீடு.. “ஆமா உங்க அண்ணனோட அம்மா அப்பால்லாம் எங்க இருக்காங்க டா?” என்று அவள் கேட்க “இல்ல அண்ணி.. அண்ணன் அனாதை இல்லத்தில் வளர்ந்தவரு.. ஒரு வயசுக்கு மேல அனாதை இல்லத்திலேர்ந்து வெளியில வந்துட்டாரு.. இந்த மெக்கானிக் ஷெட்ல வேலை செஞ்சு சம்பாதிச்சு அந்த பணத்தில் வீட்டு வாடகைலருந்து எல்லாத்தையும் கொடுத்துட்டு இருந்தாரு.. இப்போ அவர் வேலை செஞ்சிக்கிட்டிருந்த மெக்கானிக் ஷெட்டையே தனக்கு சொந்தமா வாங்கிக்கிட்டாரு.. நல்ல உழைப்பாளி  அண்ணி அவரு.. ரொம்ப நல்லவரு.. நேர்மையானவரும் கூட..” என்றான் பெருமையாக..

 

“அதான் எனக்கு தெரியுமேடா.. அதனால தானே உங்க அண்ணனை லவ் பண்ணேன்..” என்று சொன்னவளை “நல்ல வேளை லவ் பண்ணீங்க அண்ணி.. இல்லனா காலம் முழுக்க அண்ணியே இல்லாம வெட்டியா இருந்திருப்பேன் நானு.. சரி.. நீங்க போய் சமைக்க ஆரம்பிங்க.. இதோ இதுதான் என்னோட நம்பர்.. நோட் பண்ணிக்கோங்க..” என்று தன்னுடைய கைபேசி எண்ணை அவளுக்கு சொன்னான்.. அவளும் தன் கைபேசியில் அதை பதிவு செய்தாள்..

 

“ஏதாவது வேணும்னா இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க அண்ணி.. நான் உடனே வாங்கிட்டு வந்து கொடுக்கறேன்..” என்று சொன்னான் அவன்..

 

“ஒன்னும் வேணாம் டா.. எல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு.. நீ கிளம்பு..” என்று சொன்னாள் தேஜூ.. அவனை அனுப்பி விட்டு சமையலறை சென்று வேக வேகமாக சமைக்கத் தொடங்கினாள்..

 

அன்று கல்லூரி முடிந்ததும் மரத்தடியில் வந்த அமர்ந்தவன் சுமியுடன் தேஜூ வராமல் போகவே “சுமி என்ன ஆச்சு? இன்னைக்கு அஸ்வினி மதியம் வருவேன்னு ஃபோன்ல சொல்லி இருந்தாளே.. வரலையா?” என்று கேட்க “இல்ல அருண்.. வரல.. என்கிட்டயும் அப்படித்தான் சொன்னா.. ஆனா ஏன் வரலைன்னு தெரியல..” என்று சொல்ல அவனுக்கு மனம் சிறிது சஞ்சல பட்டது‌… “வரேன்னு சொன்னவ ஏன் வரல?” என்று யோசித்தவன் “சரி… நான் அவளுக்கு கால் பண்ணி பார்க்கிறேன்..” என்று சொல்லி தன் கைபேசி எடுத்து அவளை அழைத்தான்..

 

ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை.. மனம் இன்னும் சஞ்சலப்பட தன் மெக்கானிக் ஷெட்டுக்கு கிளம்பலாம் என்று கிளம்பியவனின் கைபேசி ஒலித்தது..

 

சின்ன பையன் தான் அழைத்திருந்தான்.. “அண்ணே நம்ம ஷெட் இருக்கற தெருவில ஏதோ கலவரம் போல் இருக்குது அண்ணே.. அதனால நான் ஷெட்ட மூடிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.. நீங்களும் நேரா வீட்டுக்கு போயிருங்க அண்ணே.. அங்க அந்த ரோட்ல ஒரே கலாட்டாவா இருக்கு.. இப்ப போய் கடையை திறந்து வைக்காதீங்க.. வண்டி எல்லாம் உடைச்சுடுவாங்க..” என்று சொன்னான் சின்ன பையன்..

 

“சரிடா நான் நேரே வீட்டுக்கு போறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்றான்..

 

தன் வீட்டிற்கு சென்று இறங்கியவன் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.. திருடன் யாராவது புகுந்து விட்டானா என்று எண்ணி மெதுவாக அங்கு இருந்த ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்..

 

படுக்கை அறை பக்கம் போய் அங்கே யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க அங்கே யாரும் இல்லை என்று தெரிந்து திரும்பி அவன் வரவேற்பறைக்கு வரவும் சமையலறையில் எதோ சத்தம் கேட்க சமையலறைக்குள் நுழைந்து கட்டையை ஓங்கியவன் சமைத்துக் கொண்டு இருந்த தேஜூ திரும்பி அவனை பார்த்து “ஆ.. அடிச்சிடாதீங்க.. நான் தான்..” என்று கண்ணை மூடி கத்தியவள் பயத்தில் அவன் சட்டையை பிடித்து மார்பில் புதைந்து கொள்ள கட்டையை கீழே போட்டுவிட்டு அவள் நாடியை பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் “ஏய் அஷ்வினி. நீயா? நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்க “ம்ம்ம்ம்.. ஒரு பொண்டாட்டி புருஷனுக்கு என்ன பண்ணுவாளோ அதுதான் பண்ணிட்டு இருக்கேன்.. உங்களுக்காக சமையல் செஞ்சு வச்சு இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல சின்ன பையனும் வந்துருவான்.. எல்லாம் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்..” என்று சொன்னவளை அப்போதுதான் கவனித்தான்..

 

திருமணத்திற்கு போய் விட்டு வந்ததால் அவள் புடவை அணிந்திருந்தாள்.. அவள் முகத்தில் அங்கங்கே முத்து முத்தாய் வியர்த்து இருந்தது.. சமையல் மேடையில் எட்டிப் பார்த்தவன் அங்கே விதவிதமாய் குழம்பு கறி  காய் அப்பளம் பாயசம் என்ன பல வகை உணவு அடுக்கி வைக்கப்பட்டிருக்க அதை பார்த்தவன் “நீ எதுக்கு அஸ்வினி.. இவ்வளவு கஷ்டப்படுற?” என்று கேட்டான்..

 

“இதில் என்ன கஷ்டம்? உனக்காக சமைக்கிறேன்னு நினைச்சுகிட்டு சமைக்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? ஆசையா சமைச்சு வச்சா ஏன் செஞ்சன்னு கேட்கிற?” என்று கோவமாய் பேசியவளின் நெற்றியில்  தன் சட்டை பையில் இருந்து கைகுட்டை எடுத்து அவளை நனைத்து இருந்த வியர்வையை ஒத்தி ஒத்தி எடுத்து துடைத்தான்..

 

அவ்வளவு அருகில் அவளைப் பார்த்தவனால் அதற்கு மேல் தன்னையே கட்டுப்படுத்த முடியவில்லை.. அவள் தனக்காக கஷ்டப்பட்டு சமைத்து இருக்கிறாள் என்ற உணர்வே அவனுக்குள்ளும் சொல்லொணா சந்தோஷத்தை அளித்திருந்தது..

 

அதை உணர்த்தும் விதமாக அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான்..

 

அந்த முத்தத்தில் முழுதாய் கரைந்து போனவள் கண்களை மூடி இருந்தாள்.. அவளுடைய மூடிய கண்களிலும் இரு கன்னங்களிலும் முத்தமிட்டவன் அவள் இதழை நோக்கி குனிய ஏதோ நினைவு வந்தவனாய் சட்டென தன் கையை விலக்கி அவளிடம் இருந்து விலகினான்..

 

கண்ணை திறந்தவளுக்கு அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சியை அளித்தது.. “என்ன ஆச்சு..?” என்று கேட்டவளிடம் இருந்து முகத்தை திருப்பி வேறு பக்கமாக பார்த்து நின்று கொண்டவன் “இல்லை அஸ்வினி.. நீ வீட்டுக்கு கிளம்பு.. வேண்டாம்.. இது விபரீதத்தில போய் முடியும்.. நான் சொல்றதை கேளு..” என்றான் அருண்..

 

அவன் எதிரே வந்து நின்றவள் “என்ன பிராப்ளம்? ப்ளீஸ்.. என்கிட்ட சொல்லுங்களேன்..” என்றவளிடம் “இல்ல அஸ்வினி.. இது சரிப்பட்டு வராது.. வேண்டாம்.. ரொம்ப வெனையா ஆயிடும்.. நீ முதல்ல கிளம்பு..” என்று சொன்னவனிடம் “முடியாது.. ஒன்னு நீ உண்மையை சொல்லு.. இல்லன்னா நான் போக மாட்டேன்.. என்ன ஆயிடும் உங்களுக்கு முத்தம் கொடுத்தா? என்ன வேணும்னா ஆகட்டும்.. எனக்கு கவலை இல்லை..” என்று சொன்னவள் அவன் கன்னங்களை தன் கைகளில் பிடித்து நெற்றி.. கன்னம்.. கண்கள்.. என மாறி மாறி முத்தமிட்டாள்..

 

அவன் அவளை விலக்க மிகவும் முயன்று பார்த்தும் முடியாமல் “அஸ்வினி விடு..” என்று சொன்னவனின் கட்டளையை கூட காதில் வாங்காது அவள் அவன் இதழின் அருகே தன் காதலை வெளிப்படுத்தும் முதல் அச்சாரத்தை அவனுக்கு அவளாகவே வழங்க நெருங்கினாள்.. ஆனால் அவள் அவன் இதழை தீண்ட கூட இல்லை.. அவளை ஏதோ மோகினி பிசாசையோ பேயையோ கண்டது போல் வெறித்துப் பார்த்தான்..

 

அவன் அப்படி பார்ப்பதை கண்டவள் பயத்தில் எச்சில் விழுங்கினாள்.. கோபத்தில் அவன் கண்கள் மிகவும் சிவப்பேறி இருந்தது.. அவன் முகத்தில் கொலை வெறி தெரிந்தது.. அவளுடைய உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.. 

 

“அருண்..!!” என்று நடுங்கும் குரலில் அழைத்தவளை முகத்தில் அருவருப்புடன் பார்த்தவன் அடுத்த நொடி அவள் கழுத்தில் கை வைத்து வேகமாக அவளை சுவற்றோரமாக தள்ளி சென்று அப்படியே சுவற்றில் அவளை தூக்கி பிடித்து “என்னடி.. என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு உன்னை உண்மையா காதலிக்கிறவனுடைய உயிரை எடுக்கலான்னு பாக்குறியா? அவன் ஒருத்தனுடைய உயிர் போனது பத்தாதா? இன்னும் எத்தனை பேரோட உயிரை எடுக்க போறீங்கடி? உன்னை உயிரோட விட்டா தானடி அவன் உயிரை எடுப்பே.. உன்னை உயிரோட விட மாட்டேன் டி..” என்று சொன்னவன் அவள் கழுத்தை இன்னும் இறுக்க கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க அவளோ உயிர் போய்விடும் நிலையில் கத்த கூட முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.. 

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!