பரீட்சை – 67
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உனக்குள் இருக்கும்
வேதனை உணர்ந்து
உருகி போனேனடா
என் ஆருயிர் காதலா..
எனக்கும் உனக்கும்
இருக்கும் உறவு
இதனால் உடையாதடா
என் அன்பின் நாயகா..
உன் வேதனை
எனக்குள் உயிர்ப்பித்த
கண்ணீர்
உனக்கும் எனக்கும்
நடுவில் இருக்கும்
உடையாத பந்தத்தை
உரக்கச் சொல்லுமடா
என் ஆசை மன்மதா..!!
##############
என் ஆருயிர் காதலா..!!
“அருண்..!!” என்று நடுங்கும் குரலில் அழைத்த தேஜூவை முகத்தில் அருவருப்புடன் பார்த்தவன்.. அடுத்த நொடி அவள் கழுத்தில் கை வைத்து வேகமாக அவளை சுவற்றோரமாக தள்ளி சென்று அப்படியே சுவற்றில் அவளை தூக்கி பிடித்து “என்னடி.. என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு உன்னை உண்மையா காதலிக்கிறவனுடைய உயிரை எடுக்கலான்னு பாக்குறியா? அவன் ஒருத்தனுடைய உயிர் போனது பத்தாதா? இன்னும் எத்தனை பேரோட உயிரை எடுக்க போறீங்கடி? உன்னை உயிரோட விட்டா தானடி அவன் உயிரை எடுப்பே.. உன்னை உயிரோட விட மாட்டேன் டி..” என்று சொன்னவன் அவள் கழுத்தை இன்னும் இறுக்க கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க அவளோ உயிர் போய்விடும் நிலையில் கத்த கூட முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..
அப்போது உள்ளே நுழைந்த சின்ன பையன் இந்த காட்சியை கண்டு “அண்ணே.. அவங்களை விடுங்கண்ணே.. விடுங்க..” என்று ஓடி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்தபடி சொல்ல அவனோ தன் பிடியை இறுக்கிக் கொண்டே போனான்.. அப்போது அங்கே மூலையில் இருந்த கட்டையை பார்த்த சின்ன பையன் அதை எடுத்து அவன் கையில் அந்தக் கட்டையால் ஓங்கி அடித்தான். அடுத்த நொடி அவன் தன் பிடியை விடுவிக்க மேலிருந்து அப்படியே கீழே விழுந்தாள் தேஜு..
கோபத்தில் கண்கள் சிவந்து இருக்க நரசிம்ம மூர்த்தியாய் நின்றவனை பார்த்து தேஜு சின்ன பையன் இருவருமே அரண்டு போனார்கள்.. தேஜு கழுத்தில் அவன் கொடுத்த அழுத்தத்தினால் இருமிக்கொண்டு மூச்சுக்கு திணறிக் கொண்டிருக்க சின்னப்பையன் சட்டென சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து “அண்ணி.. இந்த தண்ணியை குடிங்க..” என்று அவளுக்கு தண்ணீரை கொடுத்துவிட்டு அருணை அழைத்து வந்து மின்விசிறியை போட்டு நாற்காலியில் அமர வைத்தான்..
“என்னண்ணே ஆச்சு..? அண்ணியை எதுக்கு அண்ணா அப்படி அடிச்சீங்க? அவங்க என்ன தப்பு பண்ணாங்க?” என்று சின்ன பையன் கேள்வி கேட்க கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலைக்கு வந்தான் அருண்..
தலையில் அடித்துக் கொண்டு ஓவென அழ ஆரம்பித்தான்.. தேஜுக்கும் சின்ன பையனுக்கும் ஒன்றும் புரியவில்லை.. தன் சிரமத்தையும் பாராது கையை ஊன்றி எழுந்து கொண்டு ஓடி வந்தாள்..
“அருண்.. என்ன ஆச்சு? அழாதீங்க அருண்.. இட்ஸ் ஓகே.. எனக்கு புரியுது.. பாத்துக்கலாம்… நீங்க அழாதீங்க.. எனக்கு ஒன்னும் ஆகல.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. இங்க பாருங்க என்னை..” என்று சொன்னவளை நிமிர்ந்து கூட பாராமல் “ஐயோ அஸ்வினி.. முதல்ல நீ இங்கிருந்து போ.. நான் எது நடக்க கூடாதுன்னு பயந்தேனோ அது நடந்துரும் போல இருக்கு.. உன்னை நானே கொன்னுடுவேன்.. ப்ளீஸ்.. இங்கே இருந்து போ..” என்று கெஞ்சினான் அருண்..
“நான் போக மாட்டேன்.. உங்களை இந்த மாதிரி நிலைமையில் விட்டுட்டு நான் போகவே மாட்டேன்..” என்று சொன்னவள் அவனை தன் தோளில் சாய்த்து கொண்டு தலையை வருடி விட்டு ஆறுதல் சொன்னாள்.. அவனும் வெகு நேரம் கதறி அழுது கொண்டே இருந்தான்.. சின்னப்பையன் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கண்ணீரோடு தன் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்..
சிறிது நேரம் அழுதவன் பிறகு சமாதானமாகி கொஞ்சம் அமைதியாக இருக்க அவனை தோளில் தாங்கினார் போல் அழைத்துக் கொண்டு போய் படுக்கை அறையில் கட்டிலில் படுக்க வைத்தாள்..
தலையணையை நிமிர்த்தி போட்டு அதில் அவனை சாய்த்து படுக்க வைத்தவள்.. “ஒரு நிமிஷம் சின்ன பையா அண்ணனை பார்த்துக்கோடா..” என்று அவனை பக்கத்தில் அமர்த்தி விட்டு சமையல் அறைக்கு சென்றான்..
ஒரு தட்டில் தான் சமைத்ததெல்லாம் எடுத்து போட்டு சாதத்தை பிசைந்து படுக்கையறைக்கு எடுத்து வந்தாள்.. அருண் கண்ணை மூடி படுத்திருந்தான்.. சின்ன பையனை நகருமாறு கண்ணை காட்டி அவன் நகர்ந்தவுடன் அருண் “சாப்பாடு சாப்பிட்டு தூங்குங்க..” என்று சொன்னவளை கண் திறந்து பார்த்தவன் அவள் கைகளில் சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டு ஒரு கையால் அவன் வாய்க்கு நேரே ஒரு சாப்பாட்டு உருண்டையை நீட்டிக் கொண்டிருக்க அவளைப் பார்த்தவன் கண் கலங்கியது.. அப்படியே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்..
“ஐ அம் சாரி அஸ்வினி.. என்னை மன்னிச்சுடு.. இதற்கு தான் நான் உன்னை ஆரம்பத்தில் இருந்து விரட்டினேன்.. என்னால உனக்கு ஒரு நல்ல காதலனா இருக்க முடியாது.. என்னை விட்டுட்டு போயிரு.. நான் வேண்டாம் உனக்கு.. நீ தேவதை.. உனக்கு இன்னும் நல்ல வாழ்க்கை அமையும்.. நான் இன்னைக்கு உன்னை என்ன பாடு படுத்தினேன்.. இல்ல? தெரியுதுல? என்னோட இந்த பாழாப்போன காதலை வெறுத்துட்டு போயிரு.. நான் இவ்வளவு செஞ்சும் நீ ஏண்டி எனக்கு சாப்பாடு கலந்து கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்கே? இதெல்லாம் வச்சுட்டு இங்கிருந்து போ அஸ்வினி.. சொன்னா கேளு..” என்றான் கதறி அழுது கொண்டே..
அவளோ தீர்க்கமான குரலில் “கொஞ்சம் என்னை பாரு..” என்று அழைத்தாள் அவனை.. அவளிடம் இருந்து விலகி அவளைப் பார்த்தான்..
அவள் திரும்பி சின்ன பையனை “சின்னப்பையா.. நீ கொஞ்ச நேரம் வீட்டுக்கு வெளியில போய் இரு..” என்று சொன்னாள்.. அவனும் பதில் பேசாமல் அங்கிருந்து வெளியே சென்று விட்டான்..
அருண் “என்னை பத்தி எவ்ளோ கேவலமாக நினைச்சு வெச்சிருக்கே? உன்னால எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன சுகங்கள் கொடுக்க முடியாதுங்கறதுக்காக உன்னை விட்டு போயிடுவேன்னு நினைச்சியா? நான் உன் மனசை விரும்புறேன் அருண்.. உன் உடம்பை அழகை தான் நான் விரும்பணும்னா முதல் நாளிலிருந்தே உன் பின்னாடி தான் நான் சுத்தி இருப்பேன்.. ஆனா அப்படி இல்லை.. இவ்வளவு நாளா உன் மனசை நான் வேற வேற சிச்சுவேஷன்ல பார்த்து இருக்கேன்.. அதோட அழகை விரும்பி தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் முடிவு பண்ணேன்.. இப்போ நீ என் புருஷன்.. உன்னை இந்த பிரச்னையிலிருந்து எப்படியாவது வெளில கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.. அப்படி கொண்டு வர முடியலனாலும் இதோ உனக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு உன் முகத்தை பார்த்துகிட்டு உன்னோடயே இருந்துகிட்டு உனக்கு கன்னத்துல நெத்தில முத்தம் கொடுத்துகிட்டு உன்னை கட்டி பிடிச்சுக்கிட்டு இது போதும்.. எனக்கு இதை விட சந்தோஷம் தர்ற ஒருத்தன் உலகத்திலேயே இருக்க மாட்டான்.. இதுக்காகவா நீ என்னை விரட்டுற..? நீ முதலிலேயே இதை எனக்கு சொல்லி இருந்தா நான் எப்பவோ எங்க அப்பா கிட்ட சொல்லி நம்ம லவ்வுக்கு ஓகே வாங்கி இருப்பேன்.. இப்ப தேவையில்லாம எங்க அப்பா கிட்ட சொல்லாம உன்னை கல்யாணம் பண்ண வச்சுட்டே..” என்று திட்டினாள் அவனை..
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தவன் “உனக்கு இப்ப காதல் வேகத்தில இதெல்லாம் சரின்னு தோணலாம் அஸ்வினி… ஆனால் நாளடைவில பிராக்டிகலா உனக்கும் சில தேவைகள் இருக்கும்.. நீ ஒன்னும் கிழவி கிடையாது.. சாமியாரும் கிடையாது.. அப்போ என்னை பாக்கவே உனக்கு வெறுப்பா இருக்கும்.. அப்ப நீ என்னை விட்டு போனா எனக்கு இன்னும் வலிக்கும்டி.. அதுக்கு இப்ப நீ என்னை விட்டுப் போனா இதை பத்தி தெரிஞ்ச உடனேவே நீ என்னை விட்டு விலகிட்டன்னு நான் நிம்மதியா இருப்பேன்.. இப்பவே நீ என்னை விட்டு போயிடு..”
“அருண் எனக்கு உன் கிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்.. ஒருவேளை எனக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்தா நீ என்ன பண்ணி இருப்ப..? என்னை விட்டுட்டு போயிருப்பியா அப்படியே எனக்கு என்ன வேணா ஆகட்டும்னு..?” என்று அவள் கேட்க “அது எப்படி உன்னை விட்டு போவேன்.. உன் பிரச்சனையை சரி பண்ண முயற்சி பண்ணுவேன்.. முடியலன்னா அந்த பிரச்சனையோடயே உன்னோட நான் வாழறதுக்கு பழகிக்குவேன்..” என்றான் உடனே அவன் ஒரு நொடி கூட யோசிக்காமல்..
அவன் வாயில் சாப்பாட்டு உருண்டையை கொடுத்தவள் அவன் உண்ண “அப்போ.. சாரோட காதல் அப்படியே அன்பு தியாகம் இதெல்லாம் நிறைந்த சுத்தமான காதல்.. எங்க காதல் எல்லாம் மட்டும் லவ்வருக்கு ஏதாவது பிராப்ளம்னு தெரிஞ்சா விட்டுட்டு அப்படியே ஓடிப் போற கேவலமான காதல் இல்ல? தொலைச்சுடுவேன்டா உன்னை.. நீ என்னை போ போன்னு சொன்ன பாரு.. அதுக்கே உன்னை நாலு நாள் சோறு போடாம பட்டினி போட்டு இருக்கணும்.. ஆசையா சாப்பாடு செஞ்சுட்டு வந்து கொடுத்தா போ போன்னு விரட்டுற.. இதுக்கு மேல என் கோபத்தை கெளராம பேசாம சாப்பிடு.. உன் பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு அப்புறமா பார்க்கலாம்.. இப்ப சாப்பிட்டு அமைதியா தூங்கு..” என்றவள் அவனுக்கு மெதுவாக சாப்பாட்டை ஊட்ட ஆரம்பித்தாள்..
இரண்டு கவளம் அவனுக்கு ஊட்டிய பிறகு ஒரு உருண்டை எடுத்து அவனும் அவளுக்கு ஊட்டினான்.. இருவரின் கண்களுமே கலங்கி இருந்தது.. அமைதியாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் சாப்பாட்டை ஊட்டிக் கொள்ள இருவருக்குமே வயிரும் மனமும் நிறைந்திருந்தது..
அவ்வளவு ருசியான சாப்பாட்டை அவன் அதுவரை சாப்பிட்டதே இல்லை.. விருந்து போல சாப்பாடு செய்து வைத்திருந்தாள் அவள்.. அதுவும் அவள் கையால் ஊட்ட ஊட்ட வயிறு முட்ட சாப்பிட்டவன்.. “அஸ்வினி ரொம்ப சூப்பரா சமைக்கிற டி.. உன் சாப்பாட்டுக்காகவே உன்னை இங்கேயே வச்சுக்கணும்னு தோணுது..” என்று சொன்னவனிடம் “இப்ப சொல்லு.. இங்கேயே இருந்திரணும்னு எனக்கும் ஆசை தான்.. நீ தான் என்னவோ போன்னு வெரட்டுற..” என்றவளின் கன்னத்தில் கை வைத்து தாங்கியவன் “வேணாம் அஸ்வினி.. என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது.. இதெல்லாம் நீ செஞ்சனா உன்னை முழுசா என் பொண்டாட்டியா பாக்க ஆரம்பிச்சிடுவேன்.. அது உன் உயிருக்கு ஆபத்தா ஆயிரும்..” என்றவனை “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீயே நினைச்சாலும் உன்னால என்னை கொல்ல முடியாது.. ஏன்னா நீ அவ்ளோ விரும்புறே என்னை.. இன்னைக்கு சின்ன பையன் வந்து அந்த கட்டையால அடிக்கலைனா கூட நீ என்னை கொன்னு இருக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. சரி.. இப்ப அதை பத்தி எனக்கு என்ன பேச்சு.. அதை விடு.. நீ இப்படியே உட்கார்ந்திரு.. நான் போய் சாப்பாட்டு தட்டை கழுவி வச்சிட்டு வரேன்..” என்று உள்ளே சென்றவள் சாப்பாட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு மறுபடியும் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்..
அவன் தலையை தலையணையில் இருந்து எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டவள் அவன் தலையை மெல்லக் கோதி விட அவன் கண்களை மெதுவாக தூக்கம் தழுவியது.. தேஜூவின் மடியிலேயே சிறுபிள்ளை போல் உறங்கிப் போனான் அவன்..
தன்னை ஏன் அவன் இத்தனை நாள் புறக்கணித்தான் என்பது ஓரளவுக்கு அவளுக்கு புரிந்தது.. ஆனால் அவன் இப்படி நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று தான் அவளுக்கு புரியவில்லை.. எப்படியும் அந்த காரணத்தை இன்று தெரிந்து கொள்ளாமல் தன் வீட்டிற்கு போவதில்லை என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள் தேஜூ…
சிறிது நேரத்தில் உள்ளே வந்த சின்ன பையன் அருண் தூங்குவதை பார்த்து அடிமேல் அடி வைத்து வந்தான்.. “தூங்கிட்டாரா அண்ணி? அப்ப நான் கிளம்புறேன்” என்று சொன்னவனிடம் “டேய் சாப்பிடாம போகாதடா.. உள்ள சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.. நீ கொஞ்சம் அதை தட்டில் போட்டு சாப்பிடுடா.. சாரிடா.. நான் இப்ப எழுந்தா அவன் தூக்கம் கலைஞ்சுரும்.. இவன் இப்பதான் நிம்மதியா தூங்குறான்..” என்று சொன்னவளிடம் “அதனால பரவாயில்லை அண்ணி.. இவ்ளோ நல்ல சாப்பாடு கிடைக்கிறதே அபூர்வம்.. அதை விடுவேனா? நான் போய் சாப்பிட்டுட்டு கிளம்புறேன்..” என்று சொன்னவன் சமையல் அறையை நோக்கி சென்றான்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”