பரீட்சை – 71
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
என்னவள்
என்றானவள்
எனக்கே எனக்காய்
உரிமையாக
வேண்டுமென
அவள் தந்தை
அழகி அவளின்
அப்பனிடம்
என் அன்பானவளை
அகிலத்திற்கு பரிசாய்
அளித்தவரிடம்
என்னை பற்றிய
எல்லா உண்மையும்
எடுத்தியம்பி
சம்மதம் கேட்க
எதிர்ப்பதமாய்
எதுவும் பேசாமல்
என் மகளின்
எதிர்கால இன்பமே
எனக்கு முக்கியம்
என்று சொல்லி..
என் தேவதையை
முறையாய் நான்
கைப்பிடிக்க
முழுதாய் தன்
சம்மதத்தை
மனதார
தந்துவிட்டார்..
######################
தேவதையின் குடும்பம்..!!
தன் கை நகத்தை கடித்துக் கொண்டு பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தாள் தேஜு.. அழகப்பனோடு பேச ஆரம்பித்தான் அருண்..
“சார்.. நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.. உங்க பொண்ணும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்.. என்னால அவ இல்லாம இருக்க முடியாது.. அவளுக்கும் அப்படித்தான்.. உங்களுக்கு என் குணம் தெரியும்.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கெல்லாம் காரணம் இருக்கு.. நான் எதையும் உங்க கிட்ட இருந்து மறைக்கவும் விரும்பல. எனக்கு ஒரு சைக்கலாஜ்ஜிக்கல் பிராப்ளம் இருக்கு.. ஒரு சம்பவத்துனால என் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு.. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியில வர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. இப்போ நிறைய மாற்றம் வந்திருக்கு.. தொடர்ந்து நான் கவுன்சிலிங் போனா இன்னும் நிறைய மாற்றங்கள் வரும்னு டாக்டர் சொல்லி இருக்காரு.. நான் என் வீட்டில இருந்து யாரையுமே கூட்டிட்டு வராம தனியா உங்ககிட்ட வந்து பேசறேனேன்னு உங்களுக்கு தோணலாம்.. எனக்கு அப்பா அம்மா கிடையாது.. நான் ஒரு அனாதை.. ஆசிரமத்தில வளர்ந்தேன்… இப்போ அந்த ஆசிரமத்திலயும் நான் இல்லை.. வெளியில வந்து ஒரு மெக்கானிக் ஷெட் வெச்சு அதில் கிடைக்கிற பணத்தில் நானே என் காலேஜ் ஃபீஸ் கட்டி படிச்சுக்கிட்டு இருக்கேன்.. பிஎஸ்சி மேக்ஸ் முடிச்சு எம்பிஏ முடிச்சுட்டு என் சொந்தக்கால்ல ஒரு தொழில் பண்ணி நிலைக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்.. என்னோட கோல் ஆட்டோமொபைல் பிசினஸ் தான்.. என்னை பத்தி உங்களுக்கு தெரிய வேண்டிய அத்தனையும் நான் சொல்லிட்டேன்.. நான் என்னை பத்தி எதையுமே ஒளிச்சு வைக்கல.. உங்க பொண்ணு என்னை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சப்புறமும் என்னை விரும்புறேன்னு சொல்றா.. ஆனா ஒரு அப்பாவா உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும்.. இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்கிறவனோட எதுக்கு உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு உங்களுக்கு தோணலாம்.. அப்படி எதுவும் இருந்தா அதுக்காக வருத்தப்பட மாட்டேன்.. ஆனா நீங்க கல்யாணம் பண்ணி குடுக்கலன்னா என் அஸ்வினியை காலம் பூரா நினைச்சுக்கிட்டே நான் வாழ்ந்துடுவேன்.. அவளும் அப்படித்தான் இருப்பா.. ஓடிப்போய் பெரியவங்க ஆசீர்வாதம் இல்லாம நடக்குற கல்யாணத்தை நம்பாததுனாலதான் தான் உங்ககிட்ட முறையா கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்க வந்திருக்கேன்.. இனிமே நீங்க உங்க முடிவை சொல்லலாம்” என்றான் அருண்..
தன் தொண்டையை கனைத்தவர் அகிலாவை திரும்பி பார்த்தார்.. அவளோ சிறிது பயந்து போயிருந்தாள்..
“தேஜு.. இங்க வாம்மா..” என்று தன் பெண்ணை அழைத்தார்.. “இவர் சொல்றதெல்லாம்..?” என்று கேட்டவரிடம் “அத்தனையும் உண்மை பா.. எனக்கு இவரை கல்யாணம் பண்ணி வைங்கப்பா.. இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்.. இவரை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..” உறுதியாக சொன்னாள் தேஜு..
அகிலா “ஏண்டி அவர் ஏதோ நிறைய பிரச்சனைன்னு சொல்றாரு.. உன்னால அவரோட சந்தோஷமா வாழ முடியுமா?” என்று கேட்க “ஏம்மா எந்த மனுஷங்க கிட்ட தான் பிரச்சனை இல்லை..? எல்லா மனுஷங்க கிட்டயும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்துட்டு தான் இருக்கு.. இவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை கொஞ்சம் அதிகமா இருக்கு.. அதுக்கும் சரி பண்ண வழி பார்த்துட்டு தான் இருக்காரு.. கூடிய சீக்கிரம் சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவரும் நானும் நல்லா வாழ்வோம்.. இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை..” என்று சொன்னாள் தேஜு..
அதைக் கேட்டு அருண் அழகாய் புன்னகைத்தான்.. “என் பொண்ணு இவ்வளவு தெளிவா பேசும்போது இதுக்கு மேல கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல.. உங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா இப்போ நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. அவ இப்பதான் செகண்ட் இயர் முடிக்க போறா.. நீங்க உங்க பிஎஸ்சி மேக்ஸ் முடிச்சிட்டு எம்பிஏ பண்றதா சொல்லி இருக்கீங்க.. இந்த ஒரு வருஷம் அவளும் படிப்பை முடிக்கட்டும்.. நீங்க எம்பிஏ முடிச்சுட்டு ஒரு நல்ல தொழில் நடத்துற நிலைமைக்கு வாங்க.. அதுக்கு இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்னு நினைக்கிறேன்.. ஏன்னா கல்யாணம் ஆயிடுச்சுன்னா நம்மளோட குறிக்கோள்கள் மாறிடும்.. இவ்ளோ சீக்கிரம் தேஜூக்கு நான் கல்யாணம் பண்றதாவும் இல்லை.. அவளுக்கு இப்பதான் 19 வயசு ஆகுது.. அவளுக்கு ஒரு 23 வயசுக்கு கல்யாணம் பண்றதா தான் இருக்கேன்.. உங்களுக்கும் இப்போ 20 வயசு இருக்குமா?” என்று கேட்டார்..
“ஆமா சார்.. எனக்கு 21 வயசாகுது..” என்று சொன்னவனிடம் “இவ்ளோ சீக்கிரம் நீங்களும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. இந்த படிப்பு எல்லாம் முடிச்சுட்டு உங்க பிசினஸ்ஸை நல்லா நிலைநாட்டிட்டு வாங்க.. என் பொண்ணு நிச்சயமா அதுவரைக்கும் காத்துட்டு இருப்பா உங்களுக்காக.. அதோட உங்க ட்ரீட்மென்ட்டும் முடிஞ்சுடுச்சுன்னா கல்யாணம் ஆனப்புறம் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாம இருக்கலாம்.. நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழறதை பாக்குறதுக்கு எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.. இப்போதைக்கு நீங்க படிக்கிறதுல மட்டும் உங்க கவனத்தை செலுத்துங்க.. நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. நிச்சயமா உங்களுக்கு தான் என் பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பேன்.. ஏன்னா அவ சந்தோஷம்தான் என் சந்தோஷம்.. அவ மனசு வருத்தப்படுற மாதிரி நான் எதையுமே செய்ய மாட்டேன்.. அவ மனசு உடையும்னு தெரிஞ்சுதுன்னா அந்த மாதிரி விஷயத்தோட பக்கமே நான் போக மாட்டேன்.. என்ன மாப்ள.. நான் சொல்றது உங்களுக்கு ஓகேவா?” என்றார் அவர்..
அதைக் கேட்டு முகத்தில் சந்தோஷம் பொங்க “எனக்கு புரியுது மாமா.. உங்க பொண்ணு நெனப்பிலேயே இந்த அஞ்சு வருஷம் எனக்கு சந்தோஷமா போயிரும்.. ரொம்ப தேங்க்ஸ் மாமா..” என்று அருண் கூற அவரும் சிரித்தார்..
தேஜுக்கு உள்ளுக்குள் பூத்த சந்தோஷத்தை சொல்லி முடியவில்லை.. அவள் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து அழகப்பனுக்கோ தன்னுடைய மகள் அருணுடன் சேர்ந்து வாழ்க்கையின் அத்தனை சந்தோஷத்தையும் பெற்று விடுவாள் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை.. தன் இருக்கையை விட்டு எழுந்தவர் அருண் அருகில் வந்து அவனை கட்டி அணைத்தார்..
“உங்களை முதல் நாள் பார்த்தப்பவே எனக்கு தெரிஞ்சிருச்சு மாப்பிள்ளை.. நீங்க ரொம்ப நல்லவருன்னு.. எவ்வளவுதான் வெறுப்பா பேசினாலும் என் பொண்ணு கிட்ட நான் சொன்னவுடனே சாரி கேட்டீங்க பாருங்க.. அப்ப தெரிஞ்சிருச்சு நீங்க பெரியவங்களை எவ்வளவு மதிப்பீங்கன்னு.. உங்க நல்ல குணத்தை எவ்வளவு ட்ரை பண்ணியும் உங்களால மறைக்க முடியல..” என்றார் அழகப்பன் சிரித்து கொண்டே..
அவருடைய தெளிவான புரிதலை நினைத்து ஆச்சரியமடைந்தான் அருண்.. “மாமா.. அஸ்வினி அப்படியே உங்க உருவம் தான் மாமா.. இப்பவே அவ வாழ்க்கையை எவ்ளோ தெளிவா பார்க்கறா.. இந்த தெளிவு எனக்கு ஏன் இல்லாம போச்சுன்னு நான் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்திருக்கேன்.. எவ்வளவோ விஷயங்கள் எனக்கு தெளிவா புரிய ஆரம்பிச்சிருக்கு உங்க பொண்ணால.. நிச்சயமா என் பிரச்சனைலேர்ந்து நான் வெளிய வந்துருவேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. இந்த நம்பிக்கைக்கு காரணம் முழுக்க முழுக்க அஸ்வினி தான் மாமா..” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தவர் “நீங்க அவளை அஸ்வினின்னு கூப்பிடுறீங்களா? அப்படி இதுவரைக்கும் அவளை யாரும் கூப்பிட்டது இல்லை.. கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.. இதுல இருந்தே தெரியுது அவ உங்களுக்கு மட்டும் எவ்வளவு ஸ்பெஷல்னு..” சிரித்துக் கொண்டே சொன்னார் அழகப்பன்.
“அஸ்வினி என்னோட தேவதை மாமா.. அவளை பெத்ததுக்காகவே உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்..”
அகிலாவையும் அழகப்பனையும் பார்த்து சொன்னான் அருண்.. அழகப்பனுக்கு அவன் சொன்னதை கேட்டு தன் பெண்ணை நினைத்து பெருமையாக இருந்தது..
அப்போது அங்கே வந்த நிவேதா “இது யாரு.. நம்ம வீட்ல புது என்ட்ரி?” என்று கேட்டாள்..
“இவர் பேர் அருண்.. உங்க மாமா… உங்க அக்காவ கட்டிக்க போறாரு.. ஆனா இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணிப்பாரு..” என்று அழகப்பன் சொல்ல நிவேதா தேஜூவிடம் சென்று “அக்கா.. லவ் பண்ணியா..? நீயா அக்கா?” என்று ஆச்சரியமாக விழி விரித்து கேட்டாள்..
“ஆமாண்டி.. அவரை நான் உயிருக்குயிரா நேசிக்கிறேன்.. அப்பா எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார்..”
வெட்கச்சிரிப்புடன் சொன்னவளை “அய்யய்யோ எங்க அக்கா வெக்கமெல்லாமா படறாளே.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..” என்று அவளுக்கு திருஷ்டி கழிப்பது போல் பாவனை செய்தவளை அகிலா “ஓவரா பண்ணாத.. அவளை ஏண்டி கிண்டல் பண்ற?” என்று கண்டித்தாள்..
“இனிமே உங்க பொண்ணு கிட்ட எல்லாம் நான் வரமாட்டேன்.. எனக்கு என் மாமா இருக்காரு.. அருண் மாமா.. எனக்கு ஊர் சுத்தி காமிக்கிறீங்களா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ஊர்ல இருக்குற தியேட்டர்.. ஹில் வ்யூ பாயிண்ட்ஸ்.. எல்லா இடத்துக்கும் போய் ஜாலியா சுத்தலாம்.. இந்த அழகப்பன் மாமா ரொம்ப போர்.. எங்கயுமே கூட்டிட்டு போக மாட்டார்.. வாராவாரம் வீக்கென்ட்க்கு வந்து இங்கே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காரு..” என்று புகார் வாசித்தாள் நிவேதா..
“நீ ஒன்னும் கவலைப் படாத.. இந்த ஊர்ல எந்த இடமும் பாக்கி இல்லாம எல்லா இடத்துக்கும் உன்னை நான் கூட்டிட்டு போறேன்..” என்று அருண் சொல்ல தேஜூ அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவள் ஏன் முறைக்கிறாள் என்று அர்த்தம் புரியாது விழித்தான் அருண்..
“ஓகே மாமா அப்படின்னா நாளைக்கு என்னை கூட்டிட்டு போறீங்களா? நாளைக்கு ஈவினிங் 4 ஓ கிளாக்” என்று அவள் கேட்க “சரி.. நாளைக்கே கூட்டிட்டு போறேன்…” என்று சொன்னவன் இன்னும் தேஜூ தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து குழம்பினான்..
“சரி மாமா. நான் அப்போ கிளம்புறேன்..” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க அப்போது அழகப்பன் அவனை கூப்பிட்டார் “மாப்பிள்ளை..’ என்று அழைத்தவரை திரும்பி பார்த்தவன் “சொல்லுங்க மாமா..” என்று சொன்னான்..
“நான் உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி இருக்கேன்.. அதுக்கு முன்னாடி நீங்களும் தேஜுவும்….” என்று இழுத்தவரிடம் “எனக்கு புரியுது மாமா.. நீங்க அப்படி எதுவுமே பயப்பட வேண்டாம்.. அந்த மாதிரி எதுவுமே நடக்காது. நான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கலாம்.. ஆனா என்னை வளர்த்தது ஒரு சிஸ்டர்.. அவங்க என்னை நல்லபடியா வளர்த்து இருக்காங்க மாமா.. எனக்கும் ஒரு பொண்ணுக்கு அந்த மாதிரி ஏதாவது நடந்தா ஒரு அப்பாவோட வேதனை எப்படி இருக்கும்னு புரியும்.. நிச்சயமா அந்த மாதிரி தேஜூவுக்கு எதுவும் நடக்க நான் காரணமா இருக்கமாட்டேன்.. இது நான் உங்களுக்கு பண்ற ப்ராமிஸ்.. நான் என் எல்லையை எப்பவுமே தாண்ட மாட்டேன்..” என்று சொன்னவனை முதுகில் தட்டி மெச்சினார் அழகப்பன்..
வீட்டை விட்டு வெளியே வந்தவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்க வந்தாள் தேஜூ..
“அஸ்வினி.. எதுக்குடி இப்படி முறைக்கிற?” என்று கேட்டவனிடம் “மண்டே காலேஜ் வருவ இல்ல..? அப்ப சொல்றேன்..” என்று சொன்னாள்..
“அதெல்லாம் முடியாது.. நான் நைட் ஃபோன் பண்ணுவேன்.. எதுக்கு முறைச்சன்னு எனக்கு தெரிஞ்சாகணும்.” என்று சொன்னான் அவன்..
“நீ ஃபோன் பண்ணிக்க… நான் ஃபோனை எடுக்க மாட்டேன்..” என்று சொன்னவள் “சரி.. போய்ட்டு வா..” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போக திரும்ப அவள் கையை பிடித்து இழுத்த வேகத்தில் அவன் மார்பில் போய் முட்டினாள்..
“ஐயோ விடுங்க.. அம்மா அப்பா யாராவது பார்த்துட போறாங்க..” என்றாள் சிணுங்கலுடன்..
“பார்த்தா பார்க்கட்டும்.. நீ தான் என்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேங்குற இல்ல? அவங்க கிட்ட சொல்லி அது என்னன்னு கேட்டுக்கறேன்..” என்று அவன் சொல்லவும் “விடுங்க..” என்று சொல்லி அவனிடமிருந்து விலகியவள் “அவ தான் கேட்கிறான்னா ஊரெல்லாம் சுத்தி காட்டுறேன்னு சொல்றீங்க..? என்ன விட ரெண்டு வயசு தான் சின்னவ அவ..” என்று கோபமாய் தேஜு சொல்ல அவனோ வாய் விட்டு சிரித்தான்..
“ஏய்.. என்னை பொறுத்த வரைக்கும் அவ குழந்தை டி.. சின்ன பையன் என்னை ஊர் சுத்தி காட்ட சொல்லி கேட்டா என்ன சொல்லுவேனோ அதான் அவகிட்டயும் சொன்னேன்.. பொண்டாட்டின்னு சொன்ன உடனேவே உங்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த பொறாமை வருது?” என்று கேட்டவனிடம் “பொண்டாட்டின்னு சொன்ன உடனே இல்ல.. என்னோட காதல் என்னோட உயிருன்னு சொன்ன உடனேவே அது வந்துரும்..” என்று தலையை குனிந்து கொண்டே சொல்லிவிட்டு சிரித்தவளை இழுத்து அணைத்தவன் “யார் பார்த்தாலும் பரவாயில்லை..” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளை விட்டு விலகினான்..
அவனுக்கு அப்போதே தனக்கு இருந்த பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி தான் இயல்பாக நடக்க தொடங்க விட்டதாய் தோன்றியது..
அஷ்வினியின் அருகாமை தான் அவனுடைய மன பிரச்னைக்கு மருந்து என்று தெளிந்திருந்தான் அவன்..
தொடரும்..
#######################
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”