பரீட்சை – 8
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
இன்னொருவனை
என் கணவன்
என்று சொல்லும்
முன்னே …
என் நாக்கு
அறுந்து போயிருக்கவும்
கூடாதோ…?
எப்போதும்
இன்முகம் காட்டும்
என்னவனின்
உயிருக்காக
இந்த இழிவான
செயல் செய்ய
துணிந்து விட்டேன்
நான்..
இறைவனே
இன்னும் என்ன
கொடுமைகள்
என்னவனுக்கு
செய்ய வேண்டுமென
என் எழுத்தில்
எழுதி இருக்கிறாயோ..?
இப்படி செய்வதற்கு
என் உயிரை
எடுத்துக்கொண்டு
இறப்பென்னும்
விடுதலை தந்துவிடு…
#############
இறைவன் எழுதிய எழுத்து…!!
“நீ இங்க சோஃபால படுத்து இருக்கும் போது நான் எப்படி கட்டில்ல நிம்மதியா தூங்க முடியும்?” என்று தேஜூ கேட்கவும் “ஓ.. சாரி அஷ்ஷூ பேபீ.. நீ இவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியவே தெரியாது அஸ்வினி டியர்.. நான் வேணா உன் பக்கத்திலேயே வந்து கட்டில்ல..” என்று அவன் ஆரம்பிக்க “அ…ர்ரூஊஊ…ண்…ண்ண்ண்…!!!” என்று கத்தினாள் அவள் அவனைப் பார்த்து தீயாய் முறைத்துக் கொண்டு..
“மரியாதையா இப்ப நீ இந்த ரூமை விட்டு வெளியே போறியா? இல்ல நைட் ஃபுல்லா நான் இப்படியே உட்கார்ந்து இருக்கட்டுமா?”
“அஸ்வினி செல்லம்.. இந்த மாதிரி அடங்காம திமிரா பேசுற பாரு.. இது தாண்டி உன் மேல எனக்கு இருக்கற காதலை இன்னும் அதிகமா ஆக்கிக்கிட்டே போகுது.. அப்படியே இருக்கடி நீ..”
” ஏய்.. இந்த டீ போட்டு கூப்பிடற வேலை எல்லாம் வேண்டாம்..” என்று அவள் சொல்லவும் “ஓ..சாரி அஷ்ஷு பேபி.. உன்னை பேபி செல்லம்ன்னு ஆசையா கூப்பிட்டா தான் உனக்கு பிடிச்சிருக்கா? அப்ப உன்னை அப்படியே கூப்பிடுறேன்” என்று அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்..
அவளுக்கோ உடம்பெல்லாம் பற்றி கொண்டு எரிந்தது.. அப்படியே தலையில் அடித்துக் கொண்டவள் “என்ன சொன்னாலும் இவன் அடங்க மாட்டேங்கிறானே” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..
“இப்ப நீ வெளில போறியா இல்லையா?” என்று அவள் கேட்க “ஓகே அஷ்ஷூ டியர்.. நான் வெளில போறேன்” என்று சொல்லி விட்டு அறையின் வாசலில் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டான்..
அப்போதும் அவன் அறைக்கு சென்று அவன் படுக்கவில்லை.. அவளுக்கு அவன் செய்கைகளினால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது..
“ஐயோ இவன் ஏன் இப்படி இருக்கிறான்? என்னையே சுத்தி சுத்தி வரானே? இவனுக்கு பின்னாடி என்ன மர்மம் இருக்குன்னு புரியல.. கண்டுபிடிப்போம்.. அதை கண்டுபிடிச்சா தான் இவன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும்” என்று நினைத்தவள்.. “முதல்ல இவனும் அந்த கல்யாணி அம்மாவும் அசந்த நேரம் பார்த்து இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சு போகணும்” என்று முடிவு செய்து கொண்டாள்..
#############
அடுத்த நாள் காலையில் பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு தன் வங்கிக்கு வேலைக்கு சென்றான் ராம்சரண்.. அப்போது அங்கே வந்த ரக்ஷிகா நேரே அவன் அறைக்கு சென்று “ஹாய் ராம்..” என்றாள்..
அவளை பார்த்ததும் ஒரு பெருமூச்சை விட்டு “ஐயோ வந்துட்டாளா? ஏற்கனவே கஷ்டத்துல இருக்கேன்.. இருக்கிற வேதனை பத்தாதுன்னு இதுல இந்த தலைவலி வேற வந்துடுச்சு தொல்லை கொடுக்க..” தலையில் கை வைத்த படி உள்ளுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான் அவன்..
“ஒரு ஹாய் சொன்னா திரும்பி ஹாய் கூட சொல்ல மாட்டியா? காலேஜ் டைம்ல இருந்து உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன்.. என் மேல உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லல்ல? ”
“ரக்ஷிகா எனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் இருக்காங்க..னு எத்தனையோ முறை உன் கிட்ட சொல்லிட்டேன்.. இன்னும் எதுக்கு என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க? உன் பணத்துக்கும் உன் லெவெலுக்கும் உன் ஸ்டேட்டஸ்க்கும் ஏத்த மாதிரி யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.. என்னை மாதிரி ஒரு கல்யாணம் பண்ணவனை எதுக்கு தொந்தரவு பண்ற?” என்று அலுத்துக் கொண்டான் அவன்..
ரக்ஷிகா ஒரு பெரிய கோடீஸ்வரரின் மகள்.. அவள் வீட்டில் தினமுமே 10 வேலைக்காரர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.. அப்படி இருக்கும் அவளுக்கு கல்லூரியில் படித்த நாட்களில் இருந்தே ராம் சரண் மீது ஒரு தீராத மோகம் இருந்தது.. அவளோ அதற்கு காதல் என்று பெயரிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி அப்போது இருந்தே அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்..
ஆனால் ராம்சரணுக்கு அவளுடைய நடை, உடை, பாவனை அவளுடைய பழக்க வழக்கங்கள் இது எல்லாமே தன்னில் இருந்து வேறுபட்டதாய் இருந்தது புரிந்தது.. அதனால் எந்த நேரத்திலும் அவள் தன் காதலை சொல்லும் போதெல்லாம் அவளை பேச்சை மாற்றி தவிர்த்திருந்தான்..
ஆனால் அவன் தேஜஸ்வினியை மணந்த பிறகும் அவள் தொல்லை தீரவில்லை.. அதற்கு பிறகும் அவன் பின்னே சுற்றிக்கொண்டு தேஜஸ்வினியின் காதலை விட தன் காதல் தான் சிறந்தது.. என்று சொல்லி.. தேஜஸ்வினியை விட தனக்கு என்ன குறைச்சல்.. அழகிலும்.. அந்தஸ்திலும்.. என்று ஒவ்வொரு முறையும் கேட்டு.. அவளை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தாள்..
அவனும் பலமுறை திட்டி பார்த்து விட்டான்.. கெஞ்சி பார்த்து விட்டான்.. ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாமல் மறுபடி மறுபடி அவன் அலுவலகத்திற்கு வந்து அதே பழைய புராணத்தை பாடிக் கொண்டிருந்தாள் அவள்.. இப்போதும் அதற்காகவே வந்திருந்தாள்..
“என்னது…பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்களா? பொண்டாட்டி எங்க இருக்கா ராம்..? அவ தான் யாரோடயோ ஓடி போய்ட்டாளாமே..” என்று அவள் கேட்கவும் அப்படியே அவளை எரித்து விடுவது போல் முறைத்தான் ராம்..
“ரக்ஷிகா.. உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. இங்கிருந்து வெளியே போயிரு.. என் பொண்டாட்டி எப்படின்னு எனக்கு தெரியும்.. அவ எங்கேயும் போகல.. அவளை யாரோ கடத்திட்டு போய் இருக்காங்க.. நீ தேவை இல்லாம எதாவது பேசி என் கோபத்தை கிளறாத.. அப்புறம் வேற ஏதாவது அசிங்கமா உன்ன சொல்லிட்டேனா அதுக்கு நான் பொறுப்பில்லை” பல்லை நறநறத்தபடி சொன்னான் அவன்..
“அப்ப கூட உன் பொண்டாட்டி உன்னை அசிங்கப்படுத்திட்டு போனதை விட நீ என்னை அசிங்கப்படுத்திட முடியாது.. ஊரெல்லாம் அவ பேச்சா தான் இருக்குது.. ஆமா.. இன்னைக்கு நியூஸ் பேப்பர் பாத்தியா? அதுல கூட உன் பொண்டாட்டி புகழ் பாடி இருக்காங்க.. அப்படியே அவ சீதை மாதிரி.. கண்ணகி மாதிரி..ன்னெல்லாம் டயலாக் விடுவ.. உன்னோட சீதை ரொம்ப மாடர்னா இருக்காளே பா..” என்று அவள் கிண்டலாக சொல்லவும் அவன் அப்படியே எழுந்து கையை ஓங்கி விட்டான் அவளை அடிக்க..
“வேணாம் ரக்ஷிகா.. இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்ல. இங்க இருந்து நீ வெளிய போறியா? இல்ல நான் லீவு போட்டுட்டு இந்த ஆஃபீஸ்ல இருந்து வெளில போயிடவா?”
“ஓகே கூல்.. உண்மையை சொன்னா உனக்கு கசக்குது.. இப்படியே தாடி வளர்த்துக்கிட்டு ஒரு மாசம் திரி.. அப்புறம் உனக்கு என் அருமை தன்னால புரியும்.. அப்ப தானா என்கிட்ட வந்துருவே” என்றவள்.. “ஓகே.. பை.. சி யூ ஸூன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்..
அவள் ஏதோ செய்தித்தாளில் தன் மனைவி பற்றி வந்திருப்பதாக சொன்னது நினைவு வந்தது.. வெளியில் சென்று கடையில் ஒரு செய்தி தாளை வாங்கி வந்தான்.. அதில் தேஜுவும் அருணும் சேர்ந்து இருந்த புகைப்படத்துடன் நடந்ததை பற்றி செய்தி வெளியாகியிருந்தது.. அதில் தேஜு விரும்பியே அருணுடன் சேர்ந்து விட்டதாக செய்தி போட்டிருந்தார்கள்..
ராம்சரண் உடனேவே இன்ஸ்பெக்டரை அழைத்தான்.. “ஹலோ சார்.. ஏன் சார் இப்படி பண்றீங்க? நியூஸ் பேப்பர்ல எதுக்கு சார் என் வைஃப் பத்தி தப்பு தப்பா நியூஸ் கொடுத்து இருக்கீங்க? உங்களுக்கு நிச்சயமா தெரியுமா அவ விரும்பி தான் அருணோட போயிருக்கான்னு.. என்ன ப்ரூஃப் வெச்சு இருக்கீங்க அதுக்கு?” சரமாரியாக கேள்வி கேட்டான் அவரை..
“கொஞ்சம் பொறுமையா பேசுங்க ராம்.. அந்த நியூஸ் நான் கொடுக்கல.. நேத்து உங்க கேசை நம்ப டீல் பண்ணும் போது இங்க நிறைய பேர் இருந்தாங்க.. நான் மட்டும் இல்ல.. கான்ஸ்டபிள் இருந்தாரு.. அப்புறம் நிறைய போலீஸ்காரங்க இருந்தாங்க.. அது தவிர கைதிங்களை விஸிட் பண்ண வந்தவங்களும் இருந்தாங்க.. நீங்க பாத்துட்டு தானே இருந்தீங்க? அவங்கள்ல யாரோ ஒருத்தர் தான் இந்த நியூஸை கொடுத்து இருக்கணும்.. சத்தியமா நான் கொடுக்கல.. ஆனா அந்த ஃபோட்டோ என் மொபைல்ல இருக்கே தவிர வேற யார்கிட்டயும் இல்லை.. இங்க எல்லா போலீஸ் கிட்டேயும் கேட்டு பாத்துட்டேன்.. யார்கிட்டயும் அந்த ஃபோட்டோ இல்ல.. ஆனா நியூஸ் பேப்பருக்கு எப்படி அந்த ஃபோட்டோ போச்சுன்னு எனக்கு தெரியல… எனக்கு தான் தெரியுமே.. நீங்க உங்க வைஃபை எவ்வளவு நம்புறீங்கன்னு.. எனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் உங்க நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.. அதனால நான் அந்த நியூஸ் பேப்பருக்கு அதை சொல்லல.. ராம்.. நான் சொல்றதை கேளுங்க.. அது ஒரு சின்ன நியூஸா தான் வந்திருக்கு.. அதை அப்படியே விட்டுடுங்க.. இதை நீங்க கேட்டீங்கன்னா இன்னும் பெருசா பூதாகரமா ஆக்கி இன்னும் உங்க வைஃப் பத்தி நிறைய பேர் கேவலமா பேசுறா மாதிரி நிறைய நியூஸ் பேப்பர்ல எழுதுவாங்க.. தயவு செஞ்சு இதை இக்னோர் பண்ணிடுங்க.. இது உங்களுக்கு என்னோட அட்வைஸ் ..” என்றார் இன்ஸ்பெக்டர்..
அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கைபேசியை வைத்துவிட்டு அப்படியே சோர்ந்து போய் தன் முகத்தை கையால் மூடிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தான் ராம்..
##############
அடுத்த நாள் பூஜா அஸ்வினுடைய பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது வரவேற்பு அறையில் அருணும் தேஜுவும் காத்துக் கொண்டிருந்தனர்..
அப்போது அங்கே வந்த பூஜாவும் அஸ்வினும் “ஐ அம்மா..” என்று ஓடிவந்து அவளை கட்டிக் கொண்டனர்..
இருவரையும் அள்ளி அணைத்து மாறி மாறி முத்தமிட்டவள். “செல்லக்குட்டி.. எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்? ஒரு நாள் உங்களை பாக்காம அப்படியே கண்ணு பூத்து போச்சுடா.. நல்லா இருக்கீங்களா?” கண் கலங்க இருவரையும் இரு பக்கம் அணைத்தபடி கேட்டாள் தேஜூ..
“நீ ஏம்மா நேத்து வீட்டுக்கு வரவே இல்ல? எங்கம்மா போயிட்ட?” என்று பூஜா கேட்கவும் “பூஜா குட்டி.. அம்மா ஒரு வேலையா ஒரு பத்து நாளைக்கு வெளியில இருக்கேன்.. இந்த பத்து நாளைக்கப்புறம் உங்களை வந்து கூட்டிட்டு போறேன்.. அதுவரைக்கும் அம்மா எங்கன்னு கேட்டு அப்பாவை தொந்தரவு பண்ணாதீங்க..”
அதற்குள் அவள் பின்னால் நின்றிருந்த அருண் அவர்களுக்கு ஏற்றார் போல் தரையில் மடிந்து உட்கார்ந்து “ஹாய் குட்டீஸ்.. எப்படி இருக்கீங்க? அன்னிக்கு கொடுத்த சாக்லேட் சாப்பிட்டீங்களா? இந்தாங்க இன்னைக்கும் ரெண்டு சாக்லேட் வாங்கிட்டு வந்து இருக்கேன்..” அவர்களிடம் தான் கொண்டு வந்திருந்த சாக்லேட்டை கொடுக்க அவர்கள் இருவரும் அவனை முறைத்துப் பார்த்தார்கள்..
“எங்க டாடி உங்க கிட்ட எதுவும் வாங்கி சாப்பிடக்கூடாதுனு சொல்லி இருக்காரு.. நான் உங்ககிட்ட வாங்கிக்க மாட்டேன்..”
அஸ்வின் சொல்லவும் அருண் தேஜூவை திரும்பி பார்க்க அவளும் இந்த குழந்தைகளின் உயரத்திற்கேற்ப கீழே முட்டி போட்டு அமர்ந்து கொண்டு “பூஜா.. அஸ்வின்.. இவரு அம்மாக்கு ரொம்ப வேண்டியவர்.. இனிமே இவர் என்ன சொன்னாலும் நீங்க கேட்கலாம்… அப்பா மாதிரி தான் இவரும்.. இவர்கிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது.. சரியா?” என்று சொன்னாள் தேஜு அருணை அவ்வப்போது திரும்பி பார்த்து முறைத்துக் கொண்டே..
“அப்போ ஏன்ம்மா அப்பா உங்க ஃபோட்டோ காமிச்சா கூட.. அவங்க யாரா இருந்தாலும்.. அவரோட பேசக்கூடாதுனு சொன்னாரு.. நாங்க யாரு சொல்றதைமா கேட்கிறது? நீ சொல்றது கேக்கறதா? அப்பா சொல்றது கேக்கறதா..? எல்லாரும் இவர்தான் எங்களோட நியூ டாடின்னு சொல்றாங்களே.. அன்னைக்கு இவரும் அப்படித்தான் சொன்னாரு.. இவர் எங்களோட நியூ டாடியாம்மா?” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் பூஜா…
அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்த தேஜு அருணை திரும்பி முறைக்கவும் அவனோ கண்ணை மூடி தான் சொன்னது போல் சொல்ல சொல்லி ஜாடை செய்தான்..
“பூஜா செல்லம்.. அஸ்வின் செல்லம்.. இவரும் உங்க அப்பா மாதிரிதான்.. அவங்க சொன்ன மாதிரி இவர் உங்க நியூ டாடியா இன்னும் கொஞ்ச நாள்ல ஆயிடுவாரு..” தன் கண்களை மூடிக்கொண்டு தன் அழுகை அத்தனையும் தன் உள்ளே விழுங்கிக் கொண்டு சொன்னாள் அவள்..
“அதனால இவரை பார்த்து நீங்க பயப்பட வேண்டாம்.. எப்பயாவது இவர் உங்களை மீட் பண்ண வந்தா கூட அப்பாவோட எப்படி பேசுவீங்களோ.. அதே மாதிரி அவரோட பேசுங்க” எந்திர குரலில் அவர்களிடம் சொன்னாள்..
“அப்படின்னா நீ இனிமே நம்ம அப்பாவோட ஒரே வீட்ல எங்களோட இருக்க மாட்டியா அம்மா? எங்களை அப்பா கிட்ட இருந்து கூட்டிட்டு போயிடுவியா? நாங்க அப்பாவோட இருக்கவே முடியாதா?” பூஜா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே சிலை போல அமர்ந்திருந்தாள் தேஜு..
தொடரும்….
வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்
ஸ்) மற்றும் ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!