பரீட்சை – 85
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உண்மையில்
உனக்காக ஏங்கி
உளம் தவிக்க
உன்னை சேர
முடியாமல்
உயிர் விட்டு
போகிறேனடி
என் உயிரே…
உலகம் விட்டு
போனாலும்
வெளியிலிருந்து
உன்னை
உயிர் காற்றாய்
பின் தொடர்ந்து
உளமாற காதலிப்பேனடி..
உன் புன்னகை
பார்த்து என்
காதல் மனம்
பூரித்து போகுமடி…
உன் உளம்
உடைந்து
நீ வருந்தினால்
உதிர்ந்து போவேனடி
நான் சருகாய்..
#####################
உயிர் காற்றாய்…!!
கையில் தாலியை வைத்துக்கொண்டு மேலிருந்து தேஜுவை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே “அ…ஷ்ஷூ..ம்மா..” என்று அழைத்த படி அருண் கீழே விழ.. அவன் விழுவதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேஜு “அ..ர்ர்…ரு..ரூ..ண்..ண்ண்..” என்று கத்திக் கொண்டே அப்படியே அவன் விழுந்த திசையிலேயே வெறித்து பார்த்துக் கொண்டு சிலையாய் அமர்ந்து விட்டாள்..
அவள் அருகில் ஓடி வந்த ராம் “தேஜூம்மா.. என்னை பாருமா.. தேஜு.. இங்க பாரு..” என்று அவளை உலுக்கிக்கொண்டிருக்க அவளோ அசைவின்றி அமர்ந்திருந்தாள்..
அதற்குள் அங்கு சுற்றி இருந்த அனைவரும் பதறிப் போய் ராமையும் தேஜுவையும் சூழ்ந்து கொண்டு அந்தப் பள்ளத்தாக்கில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன நித்திலாவை தவிர..
அந்த பள்ளத்தாக்கிலே எட்டி எட்டிப் பார்க்க அங்கே பத்தடிக்கு மேல் எதுவுமே அவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை.. முழுவதுமாய் பனிமூட்டமாக இருந்தது அந்த இடம்..
அருண் விழுந்த இடத்தை பார்த்த ராம் “அவசரப்பட்டுட்டியே அருண்..” என்று கண் கலங்க பார்த்து கொண்டே சொன்னான்..
“என்னால உன்னை காப்பாத்த முடியாம போச்சே.. நீ நெறைய வருஷம் இருந்து உன் அஷ்வினி என்னோட நல்லா வாழறதை பார்த்திருக்கலாமே.. இப்படி அவளோட வாழணும்னு நடக்காத விஷயத்துக்கு ஆசைப்பட்டு உன்னை நீயே அழிச்சிக்கிட்டியே..” என்றான்..
அவன் கண்களில் ஏனோ தன் வாழ்வில் மிக முக்கியமான நெருங்கிய ஒரு நண்பனை இழந்தது போல் கண்ணீர் பொழிந்து கொண்டே இருந்தது..
சின்ன பையனும் நிவேதாவும் கத்தி கதறி கதறி அழுது கொண்டு இருந்தார்கள்..
சின்ன பையன் “அண்ணே.. இப்படி என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே.. ஏன்ணே.. ரெண்டாவது தடவையா உங்களை காப்பாத்த முடியாத ஒரு கையாலாகாதவனா நிக்கிறேனே நான்.. ஏன் இப்படி எங்களை விட்டு போனீங்க? அண்ணி இல்லனா என்ன? நாங்க எல்லாம் இல்லையா? அவசரப்பட்டுட்டீங்களேண்ணே.. நீங்க இல்லாம நாங்கள்லாம் என்ன பண்ணுவோம்?” என்று நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அழுது புலம்பி தீர்த்தான் அவன்..
அங்கு வந்த அழகப்பன் கண் கலங்க “ஐயோ.. அருண்.. என் பொண்ணு மேல நீ வெச்சிருந்த காதலே உன் உயிரை எடுத்திடுச்சே… எதுக்கு இப்படி பண்ணின அருண்..? தேஜூ மேல உயிரையே வச்சிருக்க.. அவ மேல எங்களுக்கு எல்லாம் இருந்த அன்பை விட நீ அவ மேல வச்சக் காதல் ரொம்ப உசந்தது.. உன் அஸ்வினிக்காக நீ செஞ்ச தியாகத்துக்கு அவ என் மாப்பிள்ளையை விட்டு உன்னோட இருக்கேன்னு சொல்லி இருந்தா கூட எல்லாருக்கும் அது நியாயமா தான் தெரிஞ்சிருக்கும்.. ஆனா நீ அவ மனசுல இப்போ ஒரு துளி கூட ஞாபகம் இல்லை.. அப்படி இருக்கும்போது அவளை உனக்கு சொந்தமாக்கிக்கணும்னு நீ ஏன் நெனச்ச..? அதனால தானே உன்னை மாதிரி ஒரு நல்லவனை நாங்கள்லாம் இழந்துட்டு நிக்கறோம்… இப்ப அவ மனசுல மாப்பிள்ளை மட்டும் தான் இருக்காரு.. என் பொண்ணுக்கு உன் ஞாபகம் ஒரு துளி இருந்திருந்தா கூட இன்னிக்கு நீ குதிக்கும்போது உன்னோட சேர்ந்து அவளும் இந்த பள்ளத்துக்குள்ள குதிச்சிருப்பா.. ஆனா அவ என் மாப்பிள்ளையோட தான் உயிரை விடணும்னு நினைச்சா.. மனசு முழுக்க என் மாப்பிள்ளையோட அவ வாழற வாழ்க்கை தான் நிறைஞ்சிருக்கு.. நீ கொடுக்க நினைச்ச சந்தோஷத்தை மாப்ள அவளுக்கு நிறையவே கொடுத்திருக்கிறார்.. அவ நீ என்கிட்ட எப்படி எல்லாம் சொன்னியோ அதே மாதிரி தேவதையா சந்தோஷமா இருக்கா அவரோட.. அவ மேல நீ வெச்சிருந்த அன்புல எந்த குறையும் கிடையாது.. இந்த ஜென்மத்துல தான் வாழ்க்கை முழுக்க உனக்கு நிம்மதியே இல்லாம போச்சு.. அடுத்த ஜென்மத்துலயாவது நீ விரும்பறவளும்.. உன் காதலும் உனக்கே உனக்குன்னு முழுசா கிடைக்கணும்னு நான் அந்த ஆண்டவன் கிட்ட வேண்டுறேன்.. என்னை மன்னிச்சிடு பா.. என்னால உன்னை மாதிரி ஒரு நல்ல ஜீவனுக்கு வேறு எதுவும் செய்ய முடியலை” என்றார் அழகப்பன்..
அங்கு அவர்களை சூழ்ந்த அனைவர் கண்களிலும் ஆறென கண்ணீர் பொழிந்து கொண்டிருந்தது.. அனைவருமே ஒருவித அதிர்ச்சியோடு அந்த பள்ளத்தாக்கை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. எல்லோருக்குமே இதயத்தில் ஏதோ ஒரு பாறை அழுத்துவது போல் இருந்தது.. ஆனால் அவர்களுக்குள் நித்திலா மட்டும்தான் மனதிற்குள் தான் அருண் மீது கொண்ட வஞ்சம் அருணின் அழிவினால் தீர்ந்துவிட்டது என்று எண்ணி ஆனந்தப்பட்டாள்..
அழகப்பன் சொன்னதை கேட்ட ராம்
“நான் அவளை தேவதை மாதிரி பார்த்துக்கிறேன் மாமா.. உண்மைதான்.. ஆனா அருண் அளவுக்கு என்னால அவளை கொண்டாட முடியுமான்னு தெரியல.. அவன் நினைச்சிருந்தா தான் உயிர் போக போகுதுன்னு தெரிஞ்சி இருந்தாலும் வாழற கொஞ்ச நாள் அவளோட வாழலாமேன்னு தான் உயிர் போக போறதை கூட மறைச்சு அவளோட வாழ்ந்து இருக்கலாம்.. ஆனா அவளுக்கு அப்படி ஒரு கஷ்டத்தை கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சான்.. ஒவ்வொரு நிமிஷமும் அவ மனசை மட்டுமே பார்த்து வாழ்ந்து இருக்கான்… ஆனா இந்த முறை அவன் செஞ்சது தப்பு மாமா.. அவ விருப்பம் இல்லாம அவளை அவனுக்கு சொந்தமாக்கிக்க பார்த்திருக்கான்.. எப்படி பார்த்தாலும் அது தப்புதான் மாமா.. சரி.. இப்ப இது பத்திலாம் பேசி எந்த பிரயோஜனமும் இல்ல.. எல்லாமே தப்பா முடிஞ்சு போச்சு.. இனிமே செய்யவேண்டியதை பார்க்கலாம்.. இந்தப் பள்ளத்தாக்குல ஒரே பனி மூட்டமா இருக்கு மாமா.. பத்தடிக்கு மேல எதுவுமே கண்ணுக்கு தெரியல.. அருணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல மாமா.. முதல்ல போலீசுக்கு ஃபோன் பண்ணா அவங்க வந்து அருணை தேடி அவர் உயிரோட இருந்தா அவரை காப்பாத்துவாங்க.. ஒரு வேளை போன முறை மாதிரி இந்த முறையும் அவர் உயிரோட இருக்கலாம் இல்ல?” என்று சொல்லி தேஜூவை தோளை பிடித்து தாங்கியப்படியே சுற்றி பார்த்தான்..
அங்கே இருந்த நிலவழகனிடம் “நீங்க கொஞ்சம் போலீசுக்கு ஃபோன் பண்ண முடியுமா? அவங்களை உடனே வர சொல்ல முடியுமா? அவங்க எவ்வளவு சீக்கிரம் வராங்களோ அவ்வளவு சீக்கிரம் அருணை காப்பாத்தற சான்ஸஸ் அதிகமா இருக்கும்..” என்றான்..
நிலவழகன் தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு “நான் ஃபோன் பண்றேன்” என்று தன் கைபேசியில் இருந்து போலீசுக்கு அழைத்தான்..
“மாமா நாம இனிமே இங்க இருந்து ஒன்னும் செய்ய முடியாது.. போலீஸ் வந்தா இனிமே அவங்க பார்த்துப்பாங்க.. தேஜூ ரொம்ப அதிர்ச்சில இருக்கா.. கூப்பிட கூப்பிட ரெஸ்பான்ட் பண்ணவே மாட்டேங்குறா.. முதல்ல இங்கேர்ந்து அவளை கூட்டிட்டு போகணும் மாமா..” என்றான் ராம்..
மெதுவாக தேஜூவின் பக்கம் திரும்பி “தேஜு.. தேஜூமா.. இங்க பாருடா என்னை..” என்று சொல்ல அவளோ அவ்வளவு நேரம் அசைவின்றி வேர்த்து விறுவிறுத்து அருண் விழுந்த திசையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே மயங்கி அவன் தோளில் சரிந்து விட்டாள்..
“அவளுக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி இருக்கும் போல மாப்பிள்ளை..” என்று சொன்னவரை பார்த்து “ஆமாம் மாமா.. என்னதான் அவ அருணை மறந்திருந்தாலும் அவரை பத்தின எல்லா விஷயமும் அவளுக்கு இப்ப தெரியுமே மாமா.. அவர் கீழே விழுந்தது அவ மனசுல ஒரு ஆழமான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.. அதான் மயக்கம் ஆயிட்டான்னு நினைக்கிறேன்” என்று சொன்னவன் அவளை அப்படியே கையில் ஏந்தி கொண்டு காரை நோக்கி நடந்தான்..
அப்போது நிவேதாவை அழைத்த சின்ன பையன் “நிவேதா போலீஸ் வரும்போது நானும் விஷ்வா அண்ணாவும் போலீஸை பார்த்து நடந்ததை சொல்லிட்டு வரோம்.. நீ குழந்தைகளை கூட்டிட்டு தேஜூ அண்ணியோட கார்ல போயிரு..” என்று சொன்னவன் நிலவழகன் பக்கம் திரும்பி “அண்ணா தேஜூ அண்ணி மயக்கமா இருக்கறதுனால ராம் அண்ணனால வண்டி ஓட்ட முடியாது.. அதனால நீங்க அவங்க கார்ல வண்டி ஓட்டிட்டு போயிருங்க.. நானும் விஷ்வா அண்ணனும் இருந்து போலீஸை பார்த்து எல்லாம் சொல்லிட்டு கிளம்பி வரோம்” என்றான்..
அப்போது நித்திலாவை பார்த்த நிலவழகன் “நித்திலா.. நீயும் நிவேதாவோட எங்க கூட கார்ல வரதுன்னா வா..” என்று சொல்ல “உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா? சரணை பத்தி யாருமே கவலைப்பட மாட்டேங்கறீங்க.. அவன் என் ஃப்ரெண்ட்.. அவனை இப்படி மயக்கமா விட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்..” என்றாள்..
“சரி… அப்புறம் உன் இஷ்டம்..” என்ற நிலவழகன்.. விஷ்வாவை பார்த்து “ஆமா.. ரொம்ப நேரமா உங்க ஃபிரெண்ட் வைஷூவை காணோம்.. எங்க அவங்க?” என்று கேட்டான்..
“அது.. அவளுக்கு அருண் சார்னா உயிர்.. அவர் கீழே விழுந்த உடனே அவருக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பார்க்க ஓடி இருப்பா.. அவ அப்படித்தான்.. முன்ன பின்ன எதையும் யோசிக்க மாட்டா.. சட்டுனு எதையும் பண்ணிடுவா.. போலீஸ் வரட்டும்.. நான் அவங்களுக்கு இங்க நடந்ததை சொல்லி அருண் சார் விழுந்த இடத்தை காட்டிட்டு அப்புறம் அவளை தேடி கூட்டிட்டு வர்றேன்..” என்றான் அவன்..
சின்ன பையனை அழைத்த விஷ்வா “சின்ன பையா.. ராம் இருக்கிற காரை நிலவழகன் ஓட்டிட்டு போவாரு.. அழகப்பன் சாரும் நிவேதாவும் போற காரை யார் ஓட்டிட்டு போவாங்க? தேஜூ அக்காவோட பிள்ளைகளையும் நீ அந்த காரிலயே கூட்டிட்டு போ.. நீ அந்த காரை ஓட்டிட்டு போ.. நான் இங்கே இருந்து போலீஸ் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு வரேன்..” என்றான்..
“என்ன அண்ணா சொல்றீங்க? நான் எப்படி போக முடியும்? அருண் அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. அவரை பாக்காம நான் போகமாட்டேன்.. அவர் உயிரோடு இருக்கிறாரா? எப்படி இருக்கிறார்? ஒண்ணுமே தெரியலையே.. அண்ணன் இப்படி பண்ணிட்டாரே.. அவர் இல்லாம நாங்க எல்லாம் என்ன பண்ண போறோம்? போலீஸ் வந்ததும் அவங்களோட இருந்து நானும் அவர் எங்க விழுந்திருக்காரு.. அவருக்கு என்ன ஆச்சுன்னு பாக்கணும்.. அப்படி எல்லாம் என்னால போக முடியாது.. போன முறையே.. போலீஸ் அருண் அண்ணனை தேடும் போது அவங்க கூட என்னால இருக்க முடியலை.. நான் ரொம்ப சின்ன பையன்னு சொல்லி என்னை அவங்களோட கூட்டிட்டு போக மறுத்துட்டாங்க.. ஆனா இந்த முறை நான் இங்கேயே இருந்து அவங்களோட அருண் அண்ணனை தேடி பார்த்துட்டு தான் போவேன்” சின்ன பையன் பிடிவாதமாய் கண் கலங்க சொல்லிக் கொண்டிருந்தான்..
“உங்க அருண் அண்ணனுக்கு ஒண்ணும் ஆகி இருக்காதுன்னு என் மனசு சொல்லுது.. அவர் நல்லபடியா தான் இருப்பாரு.. போன முறை எப்படி அவர் பொழைச்சு வந்தாரோ அதே மாதிரி இந்த முறையும் வந்திருவாருன்னு தோணுது.. நான் இங்கேயே வெயிட் பண்ணி போலீஸோட போய் அவருக்கு என்ன ஆச்சுன்னு பாத்துட்டு அதுக்கு அப்புறம் கிளம்புறேன்.. நீ கிளம்பு..” என்றான் விஷ்வா..
“இருந்தாலும்.. எனக்கு அண்ணனை பார்க்கணும் அண்ணா..” என்று சின்ன பையன் இழுக்க “சொன்னா கேளு சின்ன பையா.. நாங்க எல்லாம் ஜர்னலிஸ்ட்ஸ்… எங்களுக்கு இதெல்லாம் ரொம்ப பழக்கம் தான்.. நான் பாத்துக்குறேன்.. நீ ரொம்ப எமோஷனலா இருக்க.. அருண் எப்படி இருக்காரோ என்னவோ? அவருக்கு ரொம்ப அடிப்பட்டு இருந்து அவரை அப்படி பார்த்தா உனக்கு ரொம்ப கஷ்டமாயிடும்.. நான் அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன அப்புறம் உனக்கு ஃபோன் பண்றேன்.. நீ அங்க வந்து அவரை பாரு.. எனக்கென்னவோ அவர் நிச்சயமா உயிரோட தான் இருப்பாருன்னு ரொம்ப அழுத்தமா தோணுது.. எனக்கு போலீஸ்கிட்ட எப்படி பேசணும்.. அவங்க எங்கெல்லாம் சர்ச் பண்ணுவாங்க..? இந்த விவரம் எல்லாம் நல்லாவே தெரியும்.. நீ கிளம்பு.. நான் அருண் சார் கிடைச்ச உடனே உனக்கு தகவல் சொல்றேன்..” என்றான் விஷ்வா..
அதைக் கேட்ட சின்ன பையன் அரை மனதாக மறுபடியும் மறுபடியும் தன் தலையை திருப்பி பார்த்துக் கொண்டே தன் காரை நோக்கி சென்றான்..
காரில் அமர்ந்த ராம் சுற்றி முற்றி பார்த்த வண்ணம் யாரையோ தேடினான்.. அதன் பிறகு சுருங்கிய புருவத்தோடு தன் மடியில் தலையை வைத்து படுத்திருந்த தேஜூவை கண்டு ஆதூரமாக அவள் தலையை வருடிவிட்டான்.. ஆனால் மனத்தில் ஒரு வித யோசனையுடனேயே இருந்தான்..
“எங்க போனா? காணுமே.. அங்க தானே நின்னுட்டு இருந்தா.. அவ்வளவு நேரம் அங்க இருந்தவ திடீர்னு எங்க காணாம போனா?” என யோசித்துக் கொண்டே இருந்தான்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”