பரீட்சை – 86
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
என்னவள் மனதில்
எப்போதோ இருந்தவன்
நீ..
அவளுக்காக எனக்கு
அவளையே கொடுத்தவன்
நீ…
உயிராய் நினைத்த
அவளோடு..
உயிர் விட துணிந்தவன்
நீ…
அவளுக்காகவே வாழ்ந்து
அவளை அடைவதற்காகவே
மரணித்தவன்
நீ…
இன்னும் என்னென்ன
தியாகங்கள்
அவள் நினைவில்
செய்தாயோ
நீ…
இன்னுயிர் சென்ற
பிறகும்
அவள் நிழலாய்
வாழ்வாயோ
நீ…
#####################
என்னவளின் நிழலாய்…!!
ராம் யாரையோ கண்களை சுழலவிட்டு இங்கும் அங்கும் தேடிக் கொண்டு அவள் எங்கே போனாள் என்று யோசனையிலேயே காரில் அமர்ந்து இருந்தான்..
நிலவழகன் மயங்கி கிடந்த சரணின் அருகில் வந்து பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த நித்திலாவிடம் “இவனை கூட்டிட்டு போக ஆம்புலன்ஸ்ஸ வர சொல்லட்டுமா? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் இவனை..” என்று சொல்ல “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.. இது எல்லாமே உன்னாலயும் உன் ஃபிரண்டு அந்த அருணாலயும் தானே வந்தது.. அப்புறம் அப்படியே சரண் மேல கரிசனம் இருக்கற மாதிரி இப்ப எதுக்கு உருகி உருகி நடிக்கற? என் ஃபிரண்டு சரணை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. நான் அவனை கூட்டிட்டு போறேன்.. நீ கிளம்பு..” என்றாள்..
“நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..” என்று நிலவழகன் சொல்ல விஷ்வா அவனிடம் “எப்படியும் போலீஸ் வரும்போது ஆம்புலன்ஸோட தான் வருவாங்க.. அதனால நீங்க கிளம்புங்க நிலவழகன்.. அவங்க ஃபிரண்டை அவங்களே பார்த்துக்கட்டும்..” என்று நித்திலாவை பார்த்து முறைத்துக் கொண்டே சொன்னான் விஷ்வா..
அதை கேட்டு ” உன்னை திருத்தவே முடியாது..” என்று நித்திலாவை பார்த்து சொல்லிவிட்டு “ஓகே விஷ்வா.. நான் கிளம்புறேன்.. ஆனா அருணுக்கு என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்ச உடனே எங்களுக்கு இன்ஃபர்மேஷன் கொடுங்க.. நாங்க எல்லாம் அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருப்போம்.. உங்க ஃபோனுக்காக காத்துக்கிட்டு இருப்போம்..” என்று விஷ்வாவின் கைப்பிடித்து சொன்னான்..
“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. நான் பாத்துக்குறேன்.. அருணுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரிஞ்சவுடனே உங்களுக்கும் இன்ஃபார்ம் பண்றேன்..” என்று சொல்ல அங்கிருந்து கிளம்பிய நிலவழகன் தேஜூவும் ராமும் இருந்த காரிலேறி வண்டியை ஓட்டினான்.. கார் கிளம்ப யாரையோ தேடிக் கொண்டு யோசனைகளில் இருந்த ராம் அதிலிருந்து விடுபட்டான் ..
நிலவழகனிடம் “தேஜு எவ்வளவு எழுப்பியும் எழுந்துக்க மாட்டேங்குறா.. எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு.. அவங்க எல்லாம் வீட்டுக்கு போகட்டும்.. நீங்க வண்டிய ஹாஸ்பிடல்க்கு விடுங்க..” என்றான்
நிலவழகனும் தேஜு முன்னால் அந்த மலையிலிருந்து விழுந்த போது அருணோடு அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்தி அவளுக்கு முன்பு மருத்துவம் பார்த்த அதே மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்..
ஏற்கனவே தலையில் அடிபட்டதால் அவள் நினைவை இழந்திருந்தாள்.. அப்போது இந்த மருத்துவர் தான் அவளுக்கு சிகிச்சை அளித்தார் என்பதால் அவருக்கு அவள் உடல்நிலை மற்றும் மனநிலை பற்றி எல்லாம் தெரியும் என்ற எண்ணத்திலேயே அங்கு கூட்டி வந்தான் நிலவழகன்..
ராம் மருத்துவரிடம் நிகழ்ந்ததை சொல்லி விளக்க “என்ன..? அருண் மறுபடியும் மலை மேலருந்து விழுந்துட்டாரா? ஓ மை காட்.. அப்பவே அவர் உயிர் பிழைச்சது ஒரு மிராக்கிள்.. இப்ப மறுபடியும் விழுந்துட்டாருன்னு சொல்றீங்களே..” என்று முகத்தில் அதிர்ச்சியோடு சொன்னவர் “நான் இவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறேன்.. ஆமா.. இவங்களுக்கு தலையில அடி எதுவும் படலியே..” என்று கேட்க “இல்லை டாக்டர்.. அருண் மலை மேலருந்து விழுந்ததை பார்த்த அதிர்ச்சில அப்படியே அவர் விழுந்த பக்கத்தையே வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தவ மயங்கி விழுந்துட்டா..” என்று சொன்னான் ராம்..
தேஜுவை பரிசோதிக்க உள்ளே சென்ற மருத்துவர் அடுத்த பத்து நிமிடங்களில் வெளியே வந்தார்..
“நீங்க சொன்னது கரெக்ட் தான்.. அவங்க அதிர்ச்சியினாலதான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.. மத்தபடி அவங்களுக்கு வேற எதுவும் பிராப்ளம் இருக்கிறதா தெரியலை இப்போதைக்கு.. நான் இன்ஜெக்ஷன் கொடுத்து இருக்கேன்.. ஆமா அருண் பத்தி ஏதாவது தகவல் கெடைச்சுதா? அவருக்கு என்ன ஆச்சு? அவரு உயிரோட தானே இருக்காரு?” என்று மருத்துவர் கேட்க “தெரியல டாக்டர்.. இவ மயக்கம் போட்டு விழுந்ததுனால நாங்க போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு கிளம்பி வந்துட்டோம்.. இனிமேதான் அவங்களுக்கு ஃபோன் பண்ணி கேட்கணும் என்ன ஆச்சுன்னு..” என்றான் ராம்..
“பாவம்.. அந்த அருணோட லைஃப் ரொம்ப டிராஜிக்கா போயிட்டு இருக்கு.. போன முறை மாதிரி இந்த முறையும் அவர் பொழைச்சு இருக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.. ஆனா இரண்டாவது முறை தலையில் அடிபட்டா..” என்று தயங்கி பிறகு “ம்ம்ம்.. எனிவே காட் இஸ் க்ரேட்.. லெட்ஸ் ஸீ.. அவர் நல்லபடியா இருக்கணும்.. ரொம்ப நல்ல மனுஷன்..” என்று சொன்னவர் “சரி.. நீங்க மிஸ்.தேஜஸ்வினி எழுந்த உடனே அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்” என்று சொல்லிவிட்டு அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்..
அவர்கள் அந்த மலைமுகட்டிலிருந்து கிளம்பி அந்த மருத்துவமனைக்கு வர கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஆகி இருந்தது.. நிச்சயமாய் அதற்குள் அங்கே போலீஸ் சென்று இருப்பார்கள் என்று ஊகித்த ராம் சின்ன பையனுக்கு கைபேசி மூலம் அழைத்தான்…
“சொல்லுங்க அண்ணா.. அண்ணி எப்படி இருக்காங்க?” என்று கேட்க “இன்னும் அரை மணி நேரத்துல கண் முழிச்சிடுவான்னு சொல்லி இருக்காரு டாக்டர்.. ஆமா விஷ்வா கிட்ட இருந்து அருண் பத்தி ஏதாவது ஃபோன் வந்ததா?” என்று ராம் கேட்க “ஐயோ.. இல்லன்னா.. நான் அப்பவே சொன்னேன் விஷ்வா அண்ணன் கிட்ட.. நானே அங்க இருந்து எல்லாத்தையும் பாத்துக்குறேன்னு.. ஆனா விஷ்வா அண்ணன் தான் அப்பப்ப நமக்கு ஃபோன் பண்ணி அருண் அண்ணனை பத்தி இன்ஃபர்மேஷன் கொடுக்கிறேன்னு சொல்லி என்னை அனுப்பி வெச்சார்.. இப்போ அங்கருந்து வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது.. இன்னும் எந்த விஷயமும் தெரியல அண்ணா.. அப்போலேருந்து நானும் விஷ்வா அண்ணன் ஃபோனுக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்.. ஆனா ஸ்விட்ச் ஆஃப்னே மெஸேஜ் வருது.. எனக்கு ஒரே கவலையா இருக்குண்ணா..” என்றான் சின்ன பையன்..
“என்ன..? விஷ்வா ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருதா? ஒருவேளை சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்குமோ? அதனால தான் நமக்கு தகவல் சொல்ல முடியாம இருக்காரா?” என்று ராம் சொல்ல “இருக்கலாம் அண்ணா.. பேசாமல் நான் மறுபடியும் அங்க போய் பாத்துட்டு வரவா?” என்று சின்ன பையன் கேட்டான்..
“இல்ல இல்ல.. நீ அவசரப்படாதே.. இரு.. நான் நிலவழகன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் பண்ணாரு இல்ல? அந்த இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் பண்ணி கேட்டு பார்க்கிறேன்..” என்றான் ராம்..
“சரிண்ணா.. நீங்க ஃபோன் பண்ணி பாருங்க.. என்ன தகவல் கெடச்சாலும் நீங்களாவது உடனே எனக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்கண்ணா” என்று சொன்னான் சின்ன பையன் குரலில் கவலையுடன்..
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் விஷ்வா சொன்ன படி யாருக்கும் எந்த தகவலும் கொடுக்கவே இல்லை..
அவன் கைபேசிக்கு ராம் பலமுறை அழைத்தும் அது ஸ்விட்ச்ட் ஆஃப் என்றே செய்தி வந்தது…
ராம் தன் கைபேசியில் இருந்து வைஷூவின் கைபேசிக்கு அழைத்துப் பார்த்தான்.. ஆனால் அவள் கைப்பேசியும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்ததாக செய்தி வந்தது..
எங்கேயோ ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்தான் ராம்.. தாமதிக்காமல் நிலவழகனிடம் அவன் அழைத்த இன்ஸ்பெக்டரின் கைபேசி எண்ணை கேட்டான்..
நிலவழகன் அழைத்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தன் கைபேசி மூலம் அழைத்து அருண் பற்றி விசாரித்தான்.. அழைப்பை ஏற்ற இன்ஸ்பெக்டர் அருண் விழுந்த பகுதியில் முழுதும் தேடி பார்த்தும் அங்கு அருண் சம்பந்தமாக எதுவும் கிடைக்கவில்லை என்று சொன்னார்…..
ராம் அவரிடம் “அது எப்படி சார்..? எங்க கண்ணு முன்னாடி தான் அந்த பள்ளத்தாக்கில் அவர் விழுந்தாரு.. அது எப்படி அவர் அங்க இல்லாம இருக்க முடியும்? அடிபட்டு அங்க தானே சார் இருந்திருக்கணும்?” என்று கேட்க “இல்லை சார்.. சில சமயம் அது காட்டுப்பகுதிங்கறதுனால ஏதாவது மிருகங்கள் வந்து பாடியை இழுத்துட்டு போய் வேற எங்கேயாவது போட்டு இருக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு சார்.. நாங்க அந்த ஏரியா முழுக்க ரெண்டு நாள் தேடி பார்க்கிறோம்.. ஏதாவது தகவல் கிடைச்சா நிச்சயமா உங்களுக்கு தகவல் சொல்றேன்..” என்று சொன்னார் அவர்..
அதைக் கேட்ட ராம் மனதிற்கு மிகவும் பாரமாக இருந்தது.. அருணுக்கு அப்படி ஒன்று நடந்திருக்கலாம் என்று அவர் சொல்வதை அவனால் கேட்க கூடமுடியவில்லை..
“சார் அப்பிடிலாம் சொல்லாதீங்க.. அவருக்கு அந்த மாதிரி ஏதும் ஆகி இருக்காது.. அப்படி எதுவும் ஆகியிருக்கக் கூடாது.. ஒரு வேளை அவருக்கு ரொம்ப அடிப்படாம அங்கிருந்து எழுந்து போயிருக்கலாம் இல்லையா? இல்ல ஏதாவது மரக்கிளையை பிடிச்சு வேற பக்கமா ஏறி போயிருக்கலாம்.. அதுக்கும் சாத்தியம் இருக்கு இல்ல?” என்று சொன்ன ராமிடம் இன்ஸ்பெக்டர் “ம்ம்ம்.. அப்படியும் இருக்கலாம்.. நீங்க சொல்றதும் சரிதான்.. நம்ப நல்லதாவே யோசிப்போமே..”என்றார்..
“அது சரி சார்.. அங்க விஷ்வா உங்களுக்கு அருண் விழுந்த இடத்தைக் காட்டி இருப்பாரே.. அந்த இடத்துல நல்லா பாத்தீங்களா சார்? அவரு உங்களுக்கு அங்க நடந்தது பத்தி முழு விவரம்னு சொல்லி உங்களுக்கு அருண் விழுந்த இடத்தை காட்டுறதுக்கு தான் சார் அங்க இருந்தாரு.. அங்க பாத்துட்டு அருண் பத்தி எந்த தகவலும் கிடைக்கலன்னு நீங்க எங்களுக்கு சொல்றீங்க.. ஆனா அவர் எங்களுக்கு ஃபோன் பண்ணி எந்த தகவலும் சொல்லலயே.. அவரு இப்போ உங்க கூட தான் இருக்காரா சார்? அவர் ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப்னு வருது..” என்ற ராம் கேட்டான்..
“என்ன சொல்றீங்க சார்? நாங்க போகும்போது அங்க யாருமே இல்ல சார்.. எனக்கு ஃபோன் பண்ண மிஸ்டர் நிலவழகன் கோவிலுக்கு முன்னாடின்னு சொன்னதுனால அதை வச்சுக்கிட்டு நாங்க அந்த ஏரியா முழுக்க சர்ச் பண்ணோம்.. அவரு அனுப்பிச்ச அருணோட ஃபோட்டோவை வச்சு அங்க முழுக்க முழுக்க தேடினோம்.. ஆனா அவர் பத்தி எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கல..” என்றார்..
“என்ன..? விஷ்வா அங்க இல்லையா..? அவர் தானே உங்களுக்கு வெயிட் பண்ணி அருண் விழுந்த இடத்தை அடையாளம் காட்டுறேன்னு சொன்னார்.. அவர் எங்க போயிட்டாரு.. ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து ஆகி இருக்குமோ?” என்று கேட்டார் ராம்..
அப்போது பக்கத்தில் இருந்த நிலவழகன் “ராம் சார்.. அங்க விஷ்வா மட்டும் இல்ல.. நித்திலா சரண் ரெண்டு பேரும் இருந்தாங்க.. இன்ஃபேக்ட் சரண் மயக்கமா இருந்ததனால அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கு நான் ஆம்புலன்ஸ் கூப்பிடறேன்னு சொன்னப்போ நித்திலா அவளே பார்த்துக்கறேன்னு சொன்னா..” என்று சொல்ல நிலவழகன் சொன்னதை இன்ஸ்பெக்டரிடம் சொன்னான் ராம்..
“நான் தான் சொன்னேன் இல்ல.. நாங்க அங்க போகும்போது யாருமே இல்ல..” என்று சொன்னவர் இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலையும் அவனிடம் சொன்னார்..
அதை கேட்டு ஆடிப்போனான் ராம்..
“சார் அந்த அருண் பத்தி எந்த தடயமும் அங்க எங்களுக்கு கிடைக்கல.. அவர் உயிரோட இருக்காரா.. இறந்துட்டாரா.. அப்படின்னு எந்த தகவலும் இல்ல.. ஆனா அங்க எங்களுக்கு இன்னொருத்தரோட பாடி கிடைச்சது சார்.. நாங்க அந்த பாடியை ஜி.எச் மார்ச்சுவரிக்கு அனுப்பி இருக்கோம்.. அது அருண் இல்ல.. நாங்க அந்த பாடியை ஃபோட்டோ எடுத்து வெச்சிருக்கோம்.. நான் அந்த ஃபோட்டோவை உங்களுக்கு அனுப்புறேன்.. அவர் யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியுதான்னு பாருங்க..” என்று சொல்லி அந்த இறந்தவருடைய புகைப்படத்தை ராமின் கைப்பேசிக்கு அனுப்பி வைத்தார்..
அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் அவர் அனுப்பிய புகைப்படம் ராமின் கைபேசிக்கு வந்திருந்தது.. அதை திறந்து பார்த்த நிலவழகனும் ராமும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.. அங்கே புகைப்படத்தில் சவமாக இருந்தது சரண்..!!
தொடரும்..