பரீட்சை – 89
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
துப்பறிவாளனாய் மாறி
எங்களை
தொடர்ந்து வந்து
மறைத்து வைத்த
உண்மையை
தோண்டி எடுத்து
விட்டாய்..
அரைகுறையாய்
தெரிந்ததை
முழுவதுமாய்
அறியாமல் நீ
அடங்க போவதில்லை..
இனிமேல் உன்னிடம்
மறைத்து பயனில்லை
என்று
மனம் சொல்கிறது..
ஆனால்
மறைக்க சொன்னவன்
விஷயம் அறிந்தால்
முறைத்தே எங்களை
எரித்து விடுவானே
என்ற
மரண பயம்
தடுக்கிறது..
#####################
மறைத்த உண்மை..!!
விஷ்வாவை பின் தொடர்ந்து சென்ற ராம் அவன் புகுந்த அறையின் கதவை தட்ட அந்தக் கதவை திறந்து எதிரே நின்றிருந்த ராமை பார்த்து திகைத்து நின்றாள் வைஷு..
வைஷூவை பார்த்தவன் “விஷ்வா உள்ள இருக்காரா?” என்று கேட்டான்..
அவன் அங்கு வந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அவளோ விழி விரித்து ஆமாம் என்று தலையாட்டியவள் பிறகு அவசர அவசரமாக “இல்லை இல்ல” என்று சொல்லி இடவலமாக தலையாட்டினாள் வேகமாக..
“தலையை ஏதாவது ஒரு பக்கமா ஆட்டுங்க.. எல்லா பக்கமும் ஆட்டாதீங்க..”
அதற்குள் “யார் வைஷூ வந்திருக்கா?” என்று கேட்டபடி அவள் பின்னே விஷ்வா வந்து நிற்க ராமை பார்த்தவன் அப்படியே அரண்டு போய் நின்று விட்டான்..
“ஐயோ ராம் சார்.. நீங்களா..?” என்று கேட்க “நான் உங்களை வைஷூ பத்தி கேட்டப்ப நீங்க… நானே இப்பதான் அந்த ட்ரக் டீலர் கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இருக்கேன்.. எனக்கு எப்படி வைஷ்ணவி இருக்கற இடம் தெரியும்னு ஏதோ சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம்.. அப்படின்னா இங்க இதோ உங்களுக்கு முன்னாடி நிக்கறது யாரு சார்? வைஷூ இல்லையா..? அவங்களோட ஆவியா..?”
“ஐயோ சாரி சார்… தெரியாம உங்க கிட்ட பொய் சொல்லிட்டேன்.. ஆக்சுவலா வைஷு இதில் எல்லாம் ரொம்ப பட்டுக்க வேணாம்னு சொல்லி கிளம்பி வந்துட்டா.. என்னையும் கிளம்பி வர சொன்னா ஃபோன் பண்ணி.. அதான் நான் இப்போ இங்க வந்தேன்..”
“பொய் சொன்னாலும் ஏதாவது நம்பற மாதிரி சொல்லுங்க.. நீங்க ரெண்டு பேரும் ஜர்னலிஸ்ட்.. இந்த மாதிரி க்ரைம் நடக்கிற இடத்தை தேடிப்போய் இன்வெஸ்டிகேட் பண்றவங்க.. அப்படி இருக்கும்போது இந்த விஷயத்தை பார்த்து பயந்து நீங்க ரெண்டு பேரும் மாட்டிக்க கூடாதுன்னு சொல்லாம கொள்ளாம போகணும்னு நினைச்சீங்க.. இப்படி நீங்க சொல்றதை நான் நம்பணும்…”
“நெஜமா தான் சார் சொல்றேன்.. இவ அங்கே இருந்து தப்பிச்சு வந்துட்டா… என்னையும் ஃபோன் பண்ணி இவளோட வர சொன்னா.. அதான் சார் நான் வந்தேன்..”
“அப்படியா..?” புருவத்தை கையாலா நீவி விட்டவன் விஷ்வாவை “ஆமா இவங்க எப்ப ஃபோன் பண்ணாங்க உங்களுக்கு?” என்று ஒரு புருவத்தை உயர்த்தியபடி கேட்டான் ராம்..
“அவன் அந்த ரவுடியிடமிருந்து தப்பி வந்த பிறகு தான் அவள் கைபேசியில் அவனை அழைத்தாள் என்று சொல்ல வேண்டும் இல்லையென்றால் மாட்டிக்கொள்வோம்..” என்று நினைத்த விஷ்வா “இப்பதான் சார்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு கால் பண்ணா..” என்றான்..
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியா? அப்போ உங்க ஃபோன் உங்க கிட்ட தான் இருக்கா? உங்களை கடத்தி வெச்சிருந்த ரவுடி ஏதோ உங்க ஃபோனை எடுத்து சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சுக்கிட்டதா நீங்க போலீஸ்கிட்ட சொன்னதா எனக்கு ஞாபகம்.. அப்போ போலீஸ்கிட்ட பொய் சொன்னீங்களா?” சரியாய் கேட்டான் ராம்..
“ஐயோ மாட்டுனோம் டா.. பேசாம நமக்கு பதிலா இவரு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் பண்ணி இருக்கலாம்.. துருவி துருவி கேள்வி கேட்கிறாரே..” என்று முனகியவன் “சார் அது வந்து..” என்று இழுக்க “அது மட்டும் இல்லாம.. இங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் நான் வைஷூவோட ஃபோனுக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருந்தேன்.. அவங்க ஃபோன் சுவிட்ச் ஆஃப்லேயே தான் இருந்தது.. அப்புறம் உங்களுக்கு மட்டும் அவங்க எப்படி கால் பண்ணி இருக்க முடியும்? அப்படி அவங்க உங்களுக்கு கால் பண்ணி இருந்தாங்கன்னா எனக்கு பிஸின்னுதானே வந்திருக்கும்..?” என்று சரியாக அவன் கேட்க திருதிருவென விழித்தான் விஷ்வா..
வைஷ்ணவியோ அதற்கு மேல் விழியை உருட்டி அவனைப் பார்த்துக் கொண்டு “சார்.. ரொம்ப கேள்வி கேட்காதீங்க சார்.. கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி.. பதில் சொல்லறது தான் ரொம்ப கஷ்டம் சார்.. பதில் சொல்லி பாருங்க அப்ப தான் தெரியும் எங்க கஷ்டம்..” என்றாள் உதட்டைப் பிதுக்கியபடி..
“உண்மையை சொன்னா பதில் சொல்றது ரொம்ப ஈசி.. பொய் சொன்னா தான் பதில் சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அதனால என்கிட்ட உண்மையை சொல்லுங்க.. அருண் எங்க?” என்று கேட்டான் ராம் நேரடியாக..
“எங்களுக்கு எப்படி சார் தெரியும்? அவர் தான் பள்ளத்துல விழுந்து..” என்று வைஷு இழுக்க “சொல்லுங்க.. பள்ளத்தில் விழுந்து.. என்ன.. அப்படியே பாறையில தலை மோதி செத்துட்டாரா?” என்று கேட்க வைஷூ சட்டென “அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்.. அவர் ஒருவேளை பொழச்சிருக்கலாம்..” என்றாள்..
“பொழச்சிருக்கலாம் இல்ல.. பொழச்சி இருக்காரு.. நீங்க பொழைக்க வச்சிருக்கீங்க.. சொல்லுங்க.. அருண் எங்கே?” என்று மறுபடியும் மிரட்டலாய் கேட்டான் ராம்..
“சார் நான் அவரை தேடி போனேன்.. அதுக்கப்புறம் அவரு அங்க எங்கயும் கிடைக்கல.. நீங்க எல்லாம் என்னை ஏதாவது கேள்வி கேட்டு குடைய போறீங்களேன்னு தான் அங்கேருந்து போயிட்டேன். அருண் சாருக்கு ஏதாவது ஆயிருக்குமோனு எனக்கு வேற கொஞ்சம் பயமா இருந்தது சார்.. யாரையும் பார்த்து பேசுற நிலைமையில நான் இல்ல.. அதான் கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்ன்னு இந்த ஹோட்டல்ல வந்து தனியா இருந்துகிட்டு இருக்கேன்..” என்றாள் வைஷ்ணவி..
“நல்லா கதை சொல்றீங்க.. ஆனா ஒரு விஷயம் சொல்லுங்க.. விஷ்வாக்கு எப்படி ஃபோன் பண்ணீங்க? அவர் கையில தான் ஃபோனே இல்லையே..” என்று கேட்க “எல்லா கேள்விக்கும் நானே பதில் சொல்லணுமா? இந்த விஷ்வா நாய் கொஞ்சம் சமாளிக்க கூடாதா?” என்று மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தவள் “அது வந்து.. சார்.. விஷ்வா அந்த ஆள் கிட்ட இருந்து தப்பிச்சு வெளில வரும்போது போலீஸ் ஸ்டேஷன் வர வழியில புது ஃபோன் வாங்கிட்டான் சார்.. அதுல தான் ஃபோன் பண்ணி அவனை கூப்பிட்டேன்..” என்று சொன்னாள் வைஷூ..
“ஓ….ஹோ.. அப்படியா..? அது சரி.. அவர் புது ஃபோன் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்? அப்படியே புது ஃபோன் வாங்கினாலும் அதில் ஒரு சிம் கார்ட் போட்டு அதை ஆக்டிவேட் பண்றதுக்கே டைம் ஆகுமே.. அது எப்படி அவருக்கு மட்டும் வாங்கின அடுத்த நிமிஷமே ஃபோன் ஆக்டிவேட் ஆயிடுச்சு..? ஆமா இப்ப அந்த ஃபோனை உங்க கையில வச்சிருக்கீங்களா விஷ்வா?” என்று அவனை கேட்க அவனோ “அ..அ..அது வந்து..” என்று தடுமாறினான்..
“அந்த ஃபோனை மறந்து போய் உங்க வீட்ல வச்சுட்டு வந்துட்டான் சார்.. இல்ல விஷ்வா?” என்று கேட்க “ஓ எங்க..? உங்க ரூம்ல வச்சிருக்கீங்களா?” என்று கேட்டான் ராம்..
“இல்ல சார்.. ஆட்டோல வரும்போது ஆட்டோல மறந்து விட்டுட்டேன்..” என்று சமாளித்தான் விஷ்வா.. “அப்படியா சரி இப்பதான் நீங்க இருக்கிற இடம் எனக்கு தெரிஞ்சிருச்சு இல்ல..? அதனால சும்மா எதுக்கு செலவு பண்ணி ஹோட்டல்ல இருக்கீங்க? வாங்க நம்ம சின்ன பையன் வீட்டுக்கு போலாம்..” என்று அவன் கூப்பிட வைஷுவும் விஷ்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள்..
“என்ன..? வாங்க போலாம்..” என்று அவன் அழைக்க “சரிங்க சார்..போலாம்..” என்று அவன் பின்னே இருவரும் அறையை காலி செய்து விட்டு போனார்கள்.. “அப்புறம் வைஷூ உங்க ஃபோனை எடுத்துக்கிட்டீங்களா ஞாபகமா..? விஷ்வா மாதிரி நீங்களும் மறந்திருக்க போறீங்க?” என்று கேட்டான் ராம்..
“எடுத்துக்கிட்டேன் சார்” என்றாள் அவள்.. வெளியே வந்தவர்களுக்கு சோதனையாக விஷ்வா வந்த ஆட்டோவும் ராம் வந்த ஆட்டோவும் அங்கேயே நின்று கொண்டிருந்தன..
“அட.. பாருங்க விஷ்வா.. உங்க ஃபோன் தொலைய கூடாதுன்னு இருக்கு..” என்று சொன்ன ராம் நேரே அந்த ஆட்டோக்காரரிடம் சென்று “அண்ணா.. உங்க வண்டியில இவர் ஃபோனை விட்டுட்டு வந்துட்டாராம்.. இருக்காண்ணா..?” என்று கேட்க “ஃபோன் எல்லாம் எதுவும் இல்லையே என் ஆட்டோல..” என்று சொன்னார் அவர்..
“அது எப்படி அண்ணா? புது ஃபோன்.. உங்க ஆட்டோவில் தான் மிஸ் பண்ணேன்னு சொல்றாரு.. அது எப்படி கால் முளைச்சு போகும்..?” என்று அவன் கேட்க அந்த ஆட்டோ ஓட்டுனர் முகத்திலோ கோபம் படர ஆரம்பித்தது.. அதை பார்த்த விஷ்வா “ராம் சார் ராம் சார்.. விடுங்க.. நான் வீட்லதான் விட்டுட்டேன்னு நினைக்கிறேன்.. ஆட்டோல போயிரலாம் வாங்க” என்றான்..
“என்ன தம்பி வீட்டில ஃபோனை வச்சுட்டு நான் ஃபோனை எடுத்தேன்னு சொல்லி வேணும்னே என் மேல பழியை போட்டு என்கிட்ட இருந்து பணம் கறக்க பாக்குறீங்களா? நூதன திருட்டா இருக்கே..” என்று அந்த ஆட்டோ ஓட்டுனர் கேட்க பிரச்சனை பெரிதாகி விடுமோ என்ற கவலையில் “இல்லண்ணா.. நான் ஆட்டோல வரும்போது ஃபோன் எடுத்துட்டு வரல.. 100% வீட்ல தான் நான் விட்டு இருக்கேன்..” என்று சொன்னான் விஷ்வா..
“இப்ப என்ன..? அஞ்சு நிமிஷத்துல ஃபோன் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சிரலாம்.. வைஷு நீங்க தான் உங்க ஃபோன்ல அவரோட புது நம்பர் வச்சிருப்பீங்க இல்ல? புது நம்பர்ல இருந்து தானே உங்களுக்கு கால் பண்ணார்னு சொன்னீங்க..? அந்த நம்பருக்கு நீங்க உங்க ஃபோன்ல இருந்து ஒரு கால் பண்ணுங்க.. ரிங் டோன் அடிச்சா அதை வச்சு கண்டுபிடிச்சிடலாம்..” என்றான் ராம்..
வைஷுவோ “செத்தான்டா சேகரு..” என்று விழியை உருட்டி பார்த்துக் கொண்டிருக்க “என்ன வைஷூ பாக்குறீங்க? ஃபோன் பண்ணுங்க..” என்று சொல்ல அவனுடைய புது எண் இருந்தால் தானே அவள் அழைப்பதற்கு.. புதிதாக அவனிடம் கைப்பேசி இருந்தால் தானே அதற்கு எண் என்று ஒன்று இருப்பதற்கு.. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பதட்டத்தில் தன் கைபேசியை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருந்தாள்..
“என்ன வைஷு..? எவ்வளவு நேரம்..? கொண்டாங்க.. இங்க ஃபோனை” என்று அவள் ஃபோனை அவள் கையில் இருந்து பறித்தவன் சற்று முன் வந்த அழைப்புகளின் பட்டியலில் பார்க்க அதில் விஷ்வாவின் எண்ணும் இல்லை வேறு எந்த புது எண்ணும் இல்லை.. “என்ன விஷயம்? நீங்க சொன்ன டைமுக்கு இதுல எந்த நம்பருமே இல்லையே?” என்று கேட்டான் அவன்..
அதற்கு மேல் வைஷ்ணவியால் தாக்குபிடிக்க முடியாமல் “முடியலை சார்.. நான் அவனுக்கு கால் பண்ணியும் கூப்பிடல.. அவனுக்கு ஏற்கனவே தெரியும் நான் இந்த ஹோட்டலில் தான் தங்கி இருப்பேன்னு” என்று சொன்னாள்..
“அப்புறம் எதுக்கு இவ்வளவு பொய் சொன்னீங்க என்கிட்ட ?”முறைத்து கொண்டே கேட்டான் ராம்…
“அது வந்து..” என்று இழுத்தவளிடம் ராம் “நான் சொல்லவா அருண் உயிரோட இருக்காரு.. அண்ட் அவர் இருக்கிற இடம் உங்களுக்கு தெரியும்.. ஆனா அவர் இருக்கிற இடத்தை அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் யார் கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு உங்ககிட்டயும் விஷ்வா கிட்டயும் சொல்லி இருக்காரு.. நான் சொல்றது சரிதானே..?” என்று கேட்டான் ராம்…
தொடரும்..