பரீட்சை – 90
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
தேடி வந்து விட்டான்
என்னை
திணற திணற
கேள்விகள்
கேட்டுக் கொண்டு..
என் அஸ்வினியாய்
இருந்தவளின்
அன்பு கணவன்
அவன்..
இப்போது அவனுடைய
தேஜுவாய்
இனிய வாழ்வு
நடத்துகிறாள்
அவள்..
நான் போடும்
புதிரான
முடிச்சுகளை அவிழ்க்க
பேரறிவு வேண்டுமென எண்ணியிருந்தேன்..
அவனோ
என்னுடைய மர்மங்களை
எளிதில் கண்டுகொண்டு
என்னை தேடி
எதிரில் வந்து
நின்று விட்டான்..
####################
என்னை தேடி..!!
“அருண் உயிரோட இருக்காரு.. அண்ட் அவர் இருக்கிற இடம் உங்களுக்கு தெரியும்.. ஆனா அவர் இருக்கிற இடத்தை அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் யார் கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு உங்ககிட்டயும் விஷ்வா கிட்டயும் சொல்லி இருக்காரு.. நான் சொல்றது சரிதானே..?” என்று ராம் கேட்க அதை கேட்ட வைஷூவும் விஷ்வாவும் திடுக்கிட்டனர்…
வைஷு “எ..எ..என்ன சார் சொ..சொல்றீங்க?” என்று தடுமாறவும் “நடந்ததை தான் சொல்றேன்.. அதுவும் நீங்க இப்ப தடுமாறுறதை பார்த்தா நடந்ததை அச்சு பெசகாம கரெக்டா சொல்லிட்டேன்னு தோணுது..” என்றான் ராம்..
“சார்.. அது.. வந்து..” என்று விஷ்வா இழுத்தான்..
“இதுக்கு மேல எதையும் சொல்லி சமாளிக்கலாம்ன்னு நினைக்காதீங்க விஷ்வா.. இனிமே நீங்க உண்மைய சொல்லறதுதான் சரியா இருக்கும்.. அந்த மலை மேல பெரிய சண்டை நடந்தது.. அப்பறம் மலை மேல இருந்து அருண் கீழ விழுந்தாரு.. இந்த கதையை எல்லாரும் நம்புவாங்க.. ஆனா நான் நம்பல.. வைஷூ.. நீங்க வந்து அருண் கையை விலக்கும்போது நீங்களும் அருணும் கண்ணாலேயே ஏதோ பேசிட்டு இருந்ததை நான் கவனிச்சேன்.. ஆனா அப்ப அதை நான் பெரிசா கண்டுக்கல.. இப்ப யோசிச்சு பாக்குறப்போ வேற ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது.. நீங்களா உண்மையை சொல்லிட்டீங்கன்னா நான் தெரிஞ்சுக்கிட்டு போயிருவேன்.. இல்லேன்னா போலீஸ்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி நான் உங்க ரெண்டு பேர் மேலயும் ஆக்சன் எடுக்க சொல்ல வேண்டி இருக்கும்..” என்றான் ராம்..
“சார் அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.. நான் சொல்றேன்.. நான் இப்ப சொல்ல போற விஷயம் நம்ம மூணு பேரு தவிர வெளிய யாருக்கும் தெரிய கூடாது” என்றாள் வைஷூ..
“என்னோட நோக்கம் இந்த விஷயத்தை வெளியில் சொல்றதா இருந்தா இப்படி இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு விஷ்வாவை ஃபாலோ பண்ணிட்டு இருந்திருக்க மாட்டேன்.. போலீஸ் ஸ்டேஷன்ல விஷ்வாவும் நித்திலாவும் வந்தப்பவே எனக்கு இந்த டவுட் வந்துருச்சு.. அங்கேயே நான் சொல்லி இருப்பேன்.. ஆனா என்னோட நோக்கம் அருண் உயிரோட நல்லபடியா இருக்காருங்கறதை தெரிஞ்சுக்கிறது தான்.. அவரை ஒரு முறை சந்திக்கணும்னு நினைக்கிறேன்.. சில கேள்விகளுக்கு அவர்கிட்ட பதில் கேக்கணும்னு நினைக்கிறேன்.. அதனால நீங்க என்ன விஷயம் சொல்றீங்களோ அது என்னை தாண்டி வெளியில போகாது.. இது நான் உங்களுக்கு பண்ணி கொடுக்கற பிராமிஸ்.. இப்ப சொல்றீங்களா.. அருண் எங்க இருக்காரு?” என்று கேட்டான் ராம்..
“அவரு ஹாஸ்பிடல்ல இருக்காரு சார்..” என்றான் விஷ்வா..
“என்ன ஹாஸ்பிடல்லையா? ஏன் அன்னிக்கு அவர் குதிக்கும் போது ஏதாவது அடிபட்டுருச்சா?” என்று ராம் கேட்க வேகமாக தலையை இல்லை என்று ஆட்டினாள் வைஷு..
“அது.. நாங்க அருண் சார் வீட்ல இருந்தப்போ அவர் டைரியை படிக்கணுங்கறதுக்காக நான் விஷ்வா தேஜூகா மூணு பேரும் சேர்ந்து அருண் சார் தலையில கட்டையால அடிச்சுட்டோம்.. அவருக்கு வேற ஏற்கனவே தலைல அடிபட்டு இருந்ததா..? இரண்டாவது தடவை அடிபட்டதுனால.. அவருக்கு கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடுச்சு.. அதான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்..” என்று வைஷூ சொல்ல அதைக் கேட்ட ராமுக்கோ குற்ற உணர்ச்சி அதிகமாகியது..
அருணை போன்ற ஒரு நல்ல மனிதனின் இந்த நிலைக்கு தன் தேஜூவும் காரணம் என்று அவனுக்கு புரிந்தது.. அன்றைய தினத்தில் அருண் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறான் என்று அறிந்து கொண்டு தன்னோடு வந்து சேர்வதற்காகவே தேஜஸ்வினி இப்படியெல்லாம் செய்தாள் என்று அவனுக்கு தெரியும்..
ஆனால் இப்போது அருணை பற்றி முழுதாக தெரிந்து விட இவர்கள் செய்த செயலால் அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது எண்ணி சிறிது கவலை கொண்டான் ராம்..
“இப்ப எப்படி இருக்கு அவருக்கு?” என்று சிறிது கலக்கத்துடன் ராம் கேட்க “நான் அவரை பார்க்க உங்களை கூட்டிட்டு போறேன்.. அவர் திட்டுவாரு தான்.. ஆனா நீங்க அவரோட பேசணும்னு சொல்றதனால நான் உங்களை அவர்கிட்ட கூட்டிட்டு போறேன்..” என்றாள் வைஷு..
விஷ்வா “அன்னைக்கு அருண் மலையில இருந்து குதிச்சாரு இல்ல..? அதுக்கு முதல் நாள் என்கிட்ட இந்த விஷயம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த ஹோட்டலில் வந்து மீட் பண்ணனும்னு மட்டும் தான் வைஷூ சொன்னா.. மத்தபடி அருண் இப்ப எந்த ஹாஸ்பிடல்ல இருக்காருன்னு கூட எனக்கு தெரியாது.. அருண் அதை பத்தி என்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு வைஷு கிட்ட சொல்லி வச்சிருக்கார்.. அப்படி இருக்கும்போது உங்களை அங்க கூட்டிட்டு போனா வைஷூக்கு அவர்கிட்ட இருந்து தர்ம அடி கிடைச்சா கூட ஆச்சரிய படறத்துக்கு இல்ல.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து உங்களை கூட்டிட்டு போறேன்னு சொல்றா அவ..” என்றான் விஷ்வா..
“ஆமாம் சார்.. நீங்க அங்க போய் அவரை பார்த்த அடுத்த நிமிஷம் எனக்கு டின்னு கட்டிடுவாரு.. ஆனாலும் நீங்க போலீஸ்க்கு போறேன்னு சொல்றதுனால அவர்கிட்ட நான் உங்களை கூட்டிட்டு போறேன்.. என் அருண் செல்லத்துக்கு எதுவும் ஆகக்கூடாது.. அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போறதெல்லாம் என்னால நெனச்சு பாக்க கூட முடியல..” என்றாள்..
“அடியேய்.. இவர் போலீஸ்க்கு போனா அவரை அரெஸ்ட் பண்ணிட்டு போக மாட்டாங்கடி.. நம்ம ரெண்டு பேரையும் தான் முதல்ல அரெஸ்ட் பண்ணுவாங்க.. பேசுறா பாரு பேச்சு.. நம்ம ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி விசாரிக்கறதுக்குள்ள அந்த மனுஷன் எஸ்கேப் ஆயிடுவாரு..” என்றான் விஷ்வா..
அவர்கள் சண்டையை ரசித்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்ட ராம்.. “சரி சரி.. ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க.. அதான் என்னை அருண் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டீங்க இல்ல.. அதனால யாரும் அரெஸ்ட்டாக வேண்டாம்.. ஆனா அருண் ஏன் இப்படி பண்றாரு? தன்னை தானே எல்லார்கிட்ட இருந்தும் ஒதுக்கி வைச்சிருக்கிறாரு.. அவர் ஹாஸ்பிடல்ல இருக்காருங்கற விஷயம் தெரிஞ்சா நாங்களும் அவருக்கு ஹெல்ப் பண்ணுவோம்ல?” என்று ராம் கேட்க “இவ்வளவு நாளா அவர் கூட பழகுறீங்களே.. அவரை பத்தி உங்களுக்கு தெரியாதா சார்?” என்று கேட்டாள் வைஷு..
“ம்ம்ம்ம்.. அதுவும் கரெக்ட் தான்..” என்று சொன்ன ராம் “சரி.. அப்ப நாம கிளம்பலாமா?” என்று கேட்டார் வைஷூவை..
“கிளம்பலாம் ராம் சார்..” என்று சொல்லி அவரோடு அருண் இருந்த மருத்துவமனை நோக்கி ஆட்டோவில் ஏறி சென்றாள் வைஷூ..
முன்பு சிகிச்சைக்காக அருணும் தேஜுவும் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனை முன்னால் தான் ஆட்டோ நின்றது..
“இந்த ஹாஸ்பிடல்ல அருண் இருக்காரான்னு விசாரிச்சதா போலீஸ் சொன்னாங்களே..” என்று ராம் கேட்க இதழ் விரித்து சிரித்த வைஷூ “ஏன் சார்.. இவ்வளவு ப்ளான் செஞ்சவருக்கு.. போலீஸ் எல்லா ஹாஸ்பிடல்லையும் அவர் அட்மிட் ஆயிருக்காரான்னு செக் பண்ணுவாங்கன்னு தெரியாதா? இங்கே டாக்டர் வேற அவருக்கு தெரிஞ்சவரு.. அதனால அவர் இங்க இருக்கறதை சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு.. வெளியில தெரிஞ்சா தன்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதுனால இங்கே யாரும் அவர் இருக்கிறதா சொல்லி இருக்க மாட்டாங்க.. அது மட்டும் இல்லாம இங்க அட்மிஷன்ல அவர் பேரு அருண்னு சொல்லல.. சாதிக்ன்னு சொல்லி இருக்கு.. ” என்றாள் வைஷு புன்னகைத்தபடி..
அதைக் கேட்டு தலையை இடவலமாய் ஆட்டி புன்னகைத்தான் ராம்.. “சிங்கிள் பீஸ் அவரு.. சப்ஸ்டிட்யூட்டே கிடையாது அவருக்கு..” என்று சொல்லிவிட்டு இருவரும் மருத்துவமனை உள்ளே சென்றார்கள்..
ராமை கூட்டிக்கொண்டு அருண் இருந்த அறைக்குள் சென்றாள் வைஷூ..
ராம் உள்ளே வருவதை பார்த்த அருண் பின்னே நின்றிருந்த வைஷ்ணவியை பார்த்து முறைத்தான்.. “இல்ல… அருண் சார்.. நான் எதுவும் சொல்லல.. அவராவே என்னை தேடி கண்டுபிடிச்சு வந்துட்டாரு.. விஷ்வாவை ஃபாலோ பண்ணி என்னை கண்டுப்பிடிச்சிட்டாரு.. உங்களை விட அவர் புத்திசாலியா இருந்தா நான் என்ன பண்ண முடியும்?” என்று சொன்னாள் வைஷ்ணவி..
அதைக் கேட்ட அருண் அவளை இன்னும் தீவிரமாக முறைத்தான்.. “நான் எவ்வளவு முறை சொன்னேன்? விஷ்வாவை இப்போதைக்கு மீட் பண்ண வேண்டாம்னு..?” என்று கேட்டான் அருண்..
“அவங்களை எதுக்கு முறைக்கிறீங்க அருண்? நானே தான் உங்களை தேடி வந்தேன்.. என்னதான் நீங்க சூப்பரா பிளான் பண்ணி எல்லாம் பண்ணி இருந்தாலும் ஒரு இடத்துல கோட்டை விட்டுட்டிங்க.. என் கண்ணுல படக்கூடாதது பட்டுடுச்சு.. கடைசி நிமிஷம் நீங்க அந்த பள்ளத்தாக்குல குதிக்கறதுக்கு முன்னாடி வைஷூவோட நீங்க கண்ணால பேசுனதை நான் பாத்துட்டேன்.. நீங்க அவளுக்கு எதோ ஜாடை காட்றீங்கன்னு எனக்கு புரிஞ்சுது.. ஆனா அப்போ எனக்கு அது அவ்ளோ பெருசா தெரியல.. நானும் அப்ப இருந்த டென்ஷன்ல அதை கண்டுக்கல.. ஆனா எல்லாம் முடிஞ்சப்புறம் போலீஸ் உங்களை பத்தி எந்த தடயமும் கிடைக்கலைன்னு சொன்னப்போ தான் எனக்கு அது மறுபடியும் ஞாபகம் வந்தது.. நீங்க குதிச்ச அடுத்த நிமிஷம் வைஷூ அந்த ஏரியாலையே இல்ல.. அது மட்டும் இல்லாம வைஷு உங்க கைல இருந்து தேஜு கையை பிடிச்சு இழுத்து விட்ட அப்பறம் நீங்களா எதோ குதிச்ச மாதிரி இருந்துச்சே தவிர தவறி போய் விழுற மாதிரி இல்ல.. எல்லாத்தையும் சேர்த்து பார்த்தேன்.. நீங்க ஏதோ பிளான் பண்ணி பண்ணிருக்கீங்கன்னு எனக்கு புரிஞ்சுது.. ஆனா என்கிட்ட நிறைய கேள்விகள் இருக்கு..உங்ககிட்ட கேக்கறதுக்கு.. அதுக்கு எல்லாம் பதில் கிடைக்கணும்னு தான் உங்களை தேடினேன்.. விஷ்வா கிட்ட வைஷூ எங்க இருக்கான்னு கேட்டப்போ அவரும் சொல்லலை.. அதான் அவரை ஃபாலோ பண்ணி வைஷூ இருக்கற எடத்தை கண்டுபிடிச்சேன்..” என்றான் ராம்..
“சரி.. இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்?”
அருண் கேட்க “அன்னைக்கு அந்த மலையில நடந்த விஷயம் எல்லாம் ஏன் நடந்துச்சு? எதுக்கு நடந்துச்சு? நீங்க அந்த மலை மேல இருந்து குதிச்ச அப்புறம் என்ன நடந்துச்சு? சரண் எப்படி செத்துப் போனான்? இந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியணும்.. அது மட்டும் இல்லாம முதல்ல தேஜூ வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நினைச்ச நீங்க மறுபடியும் அவ வாழ்க்கையில எதுக்கு வந்தீங்க? அதுக்கு நீங்க சொன்ன காரணம் நம்பற மாதிரி இல்ல.. அதுக்கு வேற ஏதாவது ஒரு முக்கியமான காரணம் இருக்கணும்னு என் மனசு சொல்லுது.. அது என்னன்னு நான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்.. இது எல்லாத்துக்கும் பதில் கிடைச்சுச்சுன்னா நான் இப்படியே அமைதியா திரும்பி போய்டுவேன்..” என்றான் ராம்..
“அங்க என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு நான் சொல்றேன் சார்.. அருண் சார் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்.. இவரோட டைரியை படிக்கிறதுக்காக இவர் தலையில அன்னிக்கு நாங்க அடிச்சுட்டோம்.. அவர் தலையில் ரத்தம் வந்திருச்சு.. அப்போ ஒரு கட்டு போட்டு அந்த ரத்தத்தை நிறுத்திட்டோம்.. அவருக்கு முன்னாடியே தலையில அடிபட்டது புத்தி எல்லாம் எங்களுக்கு தெரியாது.. அதான் அடிச்சிட்டோம்..” என்று வைஷூ சொல்ல அவளை தீவிரமாக ராம் முறைத்தான்..
“அவருக்கு முன்னாடி அடிபட்டது உங்களுக்கு தெரியலனாலும் நீங்க அடிச்சது தப்புதான்” என்றான் ராம்..
தொடரும்..