அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 91🔥🔥

5
(6)

 

பரீட்சை – 91

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மேலும் மேலும்

என்னவள் மேல் 

அவன் கொண்டிருந்த 

மெய் காதல்

மரணத்தையும் வெல்லும் 

மாயக் காதலாக 

தோன்றியது எனக்கு..

 

நான் அவள் 

மேல் 

கொண்ட காதலே 

நானிலத்திலும் சிறந்ததென 

நினைத்திருந்தேன்

 

அவன் காதலை 

கண்டபோது 

அடி வாங்கித் 

தோற்றது என்னுடைய 

அழகு காதல்..!!

 

################

 

மரணத்தை வெல்லும் காதல்..!!

 

“அவருக்கு முன்னாடி அடிபட்டது உங்களுக்கு தெரியலனாலும் நீங்க அடிச்சது தப்புதான்” என்று ராம் சொல்ல வைஷு அருணையும் ராமையும் மாற்றி மாற்றி பார்த்து திருதிருவென விழித்தாள்..

 

“நாங்க என்ன சார் பண்றது? நானும் விஷ்வாவும் ஜர்னலிஸ்ட்ஸ்.. அருண் சார் ஒரு ஆன்ட்டி ஹீரோ ரேஞ்சுக்கு தேஜூக்காவை கடத்தி வெச்சிருந்தார்.. அதனால சுவாரசியமா ஒரு ஸ்கூப் கிடைக்கும்னு அங்க போனவங்களுக்கு அந்த டைரியை படிச்சா தான் ஏதாவது விஷயம் தெரியும்னும் போது எங்களுக்கு வேற வழி தெரியல.. நீங்க வேற அப்படி என்னை பாக்காதீங்க சார்.. என் அருண் செல்லத்துக்கு என்னால இப்படி ஆயிடுச்சுன்னு நானே ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்..” என்று தன் வருத்தம் மேலிட உணர்ச்சி மிகுதியில் அருண் செல்லம் என்று சொல்லியவள் நாக்கை கடித்துக் கொண்டாள்..

 

கண்களை இறுக்க மூடி தன் பின்னந்தலையில் தட்டிக் கொண்டவள் மெதுவாக கண்ணை திறந்து அருணை பார்க்க அவனோ அவளை தீவிரமாக முறைத்துக் கொண்டு இருந்தான் அவள் சொன்ன வார்த்தைக்காக.. “நீ என்னை அடிச்சது கூட எனக்கு பிரச்சனை இல்லை.. ஆனா இப்போ ஏதோ சொன்ன பாரு.. இன்னொரு முறை சொன்னா நான் போறதுக்கு முன்னாடி ஒன்னை அனுப்பி வெச்சுடுவேன் மேல..” என்றான்..

 

எச்சில் விழுங்கிக் கொண்டவள் ராமை பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு பார்த்தாள்.. ராமோ அவன் சொன்னதை நினைத்து சிந்தனையில் இருந்தான்..

 

“நீங்க எங்க போக போறீங்க அருண்?” என்று கேட்க அருண் அந்தக் கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்தான்..

 

ராம் “எனக்கு ஒரு ஈ எறும்பை அடிச்சா கூட கவலைப்படற என் தேஜூ இவரை தலையில கட்டையால் அடிச்சு மயங்கி கிடக்கிறப்போ அவரை காப்பாத்தணும்னு நினைக்காம டைரியை படிச்சானு சொல்றது ஆச்சரியமா இருக்கு.. அவ ரொம்ப மென்மையான மனசு இருக்கறவ.. அவளால எப்படி ஒருத்தர் அடிபட்டு துடிச்சிட்டு இருக்கும்போது பாறை மாதிரி இறுகி இருக்க முடிஞ்சுச்சுன்னே எனக்கு தெரியல..” என்று ராம் சொல்ல அருண் சிரித்தான்..

 

“ராம் அவ உங்க மேல வச்ச லவ் அப்படி.. ஒவ்வொரு முறையும் அவ நான் சொல்றதெல்லாம் கேட்டு நடக்கணுங்கறதுக்காக உங்க உயிரை தான் நான் பணயமா வச்சேன்.. அந்த பயத்துல தான் அவ நான் சொன்னது எல்லாமே பண்ணா.. எப்படியாவது என்கிட்டே இருந்து விடுதலையாகி உங்களை வந்து சேர்ந்துரணும்கறது தான் அவளோட நோக்கமா இருந்தது.. உங்களை பிரிஞ்சு இருந்தது அவளுக்கு எவ்ளோ பெரிய தண்டனையா இருந்ததுன்னு அவளை அந்த நேரத்துல பார்த்த எனக்கு மட்டும்தான் தெரியும்..” என்றான் அருண்..

 

“அதுதான் எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு.. எனக்காக அவ்வளவு தூரம் ஒருத்தரை கொலை பண்ற அளவுக்கு போவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. அந்த சரண் அன்னைக்கு என்னை அடிச்சப்போ அவனையும் கொலை பண்ண போனா.. ஆனா அவளை சொல்லியும் குத்தம் இல்லை.. அவளை எப்படி எல்லாம் அந்த சரண் கஷ்டப்படுத்தினான்னு தெரிஞ்சப்போ எனக்கே அவனை கொன்னு போடணும்னு ஆத்திரம் வந்தது..  அன்னைக்கு அவனை மலைல பார்த்தப்போ கூட என் தேஜுவை அனாதை ஆக்கிட கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக தான் நான் என்னையே கட்டுப்படுத்தி வெச்சிருந்தேன்.. ஆக்சுவலா அவன் செத்துட்டான்னு தெரிஞ்சப்போ எனக்கு வருத்தத்துக்கு பதிலா கொஞ்சம் சந்தோஷம் வந்தது.. அது என் குணத்துக்கு நேர்மாறா இருந்தது.. ஒரு மனுஷன் இறந்து போனதை நினைச்சு சந்தோஷப்படுற நிலைமை எந்த உயிருக்குமே வரக்கூடாது.. எனக்கு என் நெனைப்பை நெனைச்சு கஷ்டமா தான் இருந்தது.. ஆனா தட் டெவில் டிஸர்வ்ஸ் இட்.. அவனுக்கு கடவுள் சரியான தண்டனை தான் கொடுத்து இருக்கார்னு நான் சந்தோஷப்பட்டேன்..” என்றான்..

 

“க..ட..வு..ளா..?” என்று சத்தமாக சிரித்தான் அருண்..

 

அவனைக் கேள்வியோடு பார்த்த ராமிடம் “சரி.. நம்ம விஷயத்துக்கு வருவோம்.. நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றேன்..” என்று அருண் ஆரம்பிக்க மறுபடியும் வைஷூ இடை புகுந்தாள்.. “அருண் சார்.. நீங்க என்னை திட்டினாலும் பரவால்ல.. நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க.. நானே சொல்றேன்.. நீங்க எமோஷனல் ஆக கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு..” என்று சொல்ல “ஸ்ட்ரெய்ன் பண்ணலேன்னா மட்டும் நான் உயிரோட இருந்துருவேனா?” என்று கேட்டு அருண் ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்க்க ராமுக்கோ அவன் சொன்னதை கேட்டு பகீரென ஆனது..

 

“என்ன சொல்றீங்க அருண்?” என்று அவன் தொண்டை அடைக்க வினவினான்..

 

“அவர் கொடைக்கானல்ல தேஜூக்கா கூட இருக்கும் போது இந்த அடி பத்தி கண்டுக்கல.. ஆனா இப்போ அது கொஞ்சம் சீரியஸா ஆகி இருக்கு.. அவருக்கு தலையில ரெண்டாவது தடவையா அடிபட்டதனால அவர் உயிருக்கு பிரச்சனை இருக்கு சார்.. உங்களுக்கு என்ன தெரியணுமோ அதை நான் சொல்றேன்.. அவரை ஸ்ட்ரெய்ன் பண்ண விடாதீங்க..” என்றாள் வைஷூ.. மறுபடியும்..

 

“நீங்க அடிச்சதுக்கப்பறம் ரெண்டு மூணு நாள் நல்லா இருந்தாரே.. அன்னிக்கு அந்த மலை மேல கூட நல்லா தானே இருந்தாரு.. ஏன் அருண் சார் அப்பல்லாம் உங்களுக்கு வலியே தெரியலையா?” என்று ராம் கேட்க சிரித்தான் அவன்..

 

அதற்குள் வைஷு “அவருக்கு எப்படி சார் வலி தெரியும்? அவர் வலியை விட.. அவர் உயிரை விட.. உங்க தேஜூதான்.. அவ வாழ்க்கை தான்.. அவளோட சந்தோஷம் தான்..‌‌ அவருக்கு முக்கியமா இருந்தது.. இப்போ.. அவங்க நிம்மதியா இருப்பாங்கன்னு தெரிஞ்சு போச்சு.. அதான் அவருக்கு அவரோட வலி தெரிய ஆரம்பிச்சிருக்கு” என்றாள் வைஷூ..

 

“எனக்கும் என் அஸ்வினிக்கும் நடுவுல இருக்கிற காதல்னால உங்க தேஜூக்கு எந்த கஷ்டமும் வந்துட கூடாதுன்னு தான் நான் இது எல்லாமே செஞ்சேன்..” என்றான் அருண்..

 

“ஆனாலும் நீங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் நானே பதில் சொல்றேன்..” என்றாள் வைஷூ..

 

அருண் அவளை தடுத்து “இல்ல வைஷு.. அது சரியா இருக்காது.. அவர் கேட்கிற கேள்விக்கு எல்லாம் நானே பதில் சொன்னா தான் சரியா இருக்கும்.. அவருக்கும் திருப்தியா இருக்கும்..” என்றான் அருண்..

 

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு “முதல்ல உங்களோட தேஜூ நல்லபடியா வாழ்ந்துட்டு இருக்கான்னு தெரிஞ்சப்பறம் மாமா கிட்ட நான் அவ வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டேன்.. ஏன்னா எனக்கு அப்போ தெளிவா தெரிஞ்சிருச்சு.. அங்க இருந்தது என்னோட அஸ்வினி இல்ல.. உங்க தேஜூ தான்னு.. என்ன செஞ்சாலும் என்னால என் அஸ்வினியை திரும்பி கொண்டு வர முடியாதுன்னு தெரிஞ்சதுனால தான் நான் உங்க வாழ்க்கையை விட்டு நிரந்தரமா போகணும்னு முடிவு பண்ணேன்.. ஆனா வேற வழி இல்லாம தான் நான் மறுபடியும் உங்க வாழ்க்கைக்குள்ள வர வேண்டியதா போச்சு.. விதி நான் யாரை வாழ்க்கையில சந்திக்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அவங்களை சந்திக்க வெச்சுது.. ஆனா அதுக்காக இப்போ நான் அந்த கடவுளுக்கு நன்றி தான் சொல்றேன்.. ஏன்னா அவங்களை சந்திச்சதுனால தான் உங்க வாழ்க்கையில வர இருந்த ஆபத்தை என்னால நிரந்தரமா விலக்க முடிஞ்சுது..” என்று அவன் சொல்ல “ஆபத்தா.. என்ன ஆபத்து..? யாரை நீங்க சந்திச்சீங்க..?” என்று கேட்டான் ராம்..

 

“சொல்றேன்.. ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை எந்த காரணத்தை கொண்டும் நீங்க உங்க தேஜூ கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க..” 

 

“முதல் தடவையா அவளை என் தேஜூன்னு சொல்றீங்க போல இருக்கு..” என்று ராம் கேட்க “என்னிக்கு அந்த பள்ளத்துல நான் விழுந்தேனோ அன்னிக்கே என் அஸ்வினி செத்து போயிட்டா.. இப்ப இருக்கறது உங்க தேஜூ மட்டும்தான்.. அதான் அப்படி சொன்னேன்.. நீங்க இன்னும் நான் கேட்ட சத்தியத்தை பண்ணல..” என்று சொல்ல “என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன் நான் தேஜூ கிட்ட நீங்க சொல்ற எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னான் ராம்..

 

அருண் சிரித்துக் கொண்டே இடவலமாக தலையை ஆட்டிக்கொண்டு “இந்த சத்தியத்தை நான் ஒத்துக்க மாட்டேன்.. உங்க குழந்தைங்க மேல நீங்க பண்ற சத்தியத்தை என்னால ஒத்துக்க முடியாது.. ஏன்னா அவங்க செத்தாலும் பரவாயில்லை.. ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டோம்னு சொன்னவங்க நீங்க ரெண்டு பேருமே.. அதனால எனக்கு நீங்க உங்க தேஜூ மேல சத்தியம் பண்ணி கொடுக்கணும்..” என்று கேட்டான்..

 

ராம் சிரித்துக் கொண்டே “சரி.. என் தேஜூ மேல சத்தியம் நான் அவகிட்ட இது பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்.. நீங்க தாராளமா என்னை நம்பி சொல்லலாம்.. சத்தியமா சொல்றேன் உலகத்துல எவ்வளவோ காவிய காதல் எல்லாம் இருக்கு.. ஆனா உங்க ரெண்டு பேர் காதலுக்கு முன்னாடி அந்த காவிய காதல் எல்லாம் தோத்து போகுது.. அதுவும் நீங்க அவ உயிரோட இருக்கணும்ங்கறதுக்காக அவ மானத்தோட இருக்கணுங்கறதுக்காக உங்க உடலோட ஒவ்வொரு செல்லாலேயும் யோசிச்சிருக்கீங்க.. பிரேக் பிடிக்காத காரிலிருந்து அவளை தள்ளிவிட்டது அதுக்கப்புறம் சின்ன பையனுக்கு ஃபோன் பண்ணி வர வெச்சது அவ உயிர் போக போகுதுன்னு தெரிஞ்சு அவளுக்காக அவ கழுத்துல நீங்க கட்டின தாலியை அறுத்துக்கிட்டு அந்த பள்ளத்துக்குள்ள விழுந்ததுன்னு சத்தியமா சொல்றேன் உங்க இடத்துல நான் இருந்திருந்தா இதெல்லாம் பண்ணி இருப்பேனான்னு தெரியாது..” என்றான் ராம்..

 

“நிச்சயம் பண்ணி இருப்பீங்க.. அவளுக்காக அந்த மலையிலிருந்து குதிச்சு உயிரை விட போனவர் தானே நீங்க..? என் அஸ்வினியை என்னைக்கு நான் பார்த்தேனோ அன்னைலருந்து எனக்குள்ள ஜீவ நாடியா அவ ஓடிக்கிட்டு தான் இருக்கா.. அவ இல்லன்னா நான் இல்லைன்கிறப்போ அவளுக்காக உயிரை விட்டதுல ஒன்னும் அதிசயம் இல்ல ராம்.. ஹாஸ்பிடல்ல கோமால நான் இருந்தப்போ கூட ஒரு வாரம் என் கிட்ட எந்த அசைவும் இல்லை.. டாக்டர்ஸ் அல்மோஸ்ட் நான் செத்துப் போயிட்டேன்னே முடிவு பண்ணிட்டாங்க…  ஏதாவது அதிசயம் நடந்து நான் பொழைச்சிட மாட்டேனான்ற ஒரு நப்பாசைலதான் என் ட்ரீட்மென்ட்க்கு செலவு பண்ணாரு தாத்தா.. ஆனா அந்த அதிசயம் அப்ப நடந்தது.. அப்போ என் பக்கத்துல இருந்த நர்ஸ் அவங்க பொண்ணு கூட ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்தாங்க.. அந்த சைடு அந்த பொண்ணு எதோ கேட்டுட்டு இருந்தா.. அப்போ அவங்க “அடம் பிடிக்காத அஸ்வினி… ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளு.. உடம்பு சரி இல்லாம போயிடும்.. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது அஸ்வினி .. அஷ்ஷூமா சொல்றதை கேளு”ன்னு பேசிகிட்டு இருந்தாங்க.. அவங்க ஒரு ஒரு முறை அஸ்வினின்னு சொல்லும் போதும் என் கை விரல்கள் ஒன்னு ஒன்னா அசைஞ்சு கொடுத்ததை அவங்க பார்த்ததா சொன்னாங்க.. இந்த அஸ்வினிங்ற பேரு என் ஆழ் மனசுல போய் என்னை அந்த பெரிய தூக்கத்திலிருந்தே தட்டி எழுப்பிருச்சு..” என்று அருண் சொல்ல சொல்ல அவன் காதலை கல்வெட்டில் பொறிக்க வேண்டும் என்று தோன்றியது ராமுக்கு..

 

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!