பரீட்சை – 92
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உயிர் விட்டுப்
போகும் முன்னே
உள்ளதெல்லாம்
உன்னிடம்
உரைத்து விட
வேண்டும் என
ஏனோ என் மனம்
எனக்கு சொன்னது..
உளம் திறந்து
உன்னிடம்
பேச பேச
எனக்குள் ஏதோ
ஒரு சொல்ல முடியா
நிம்மதி
உறைவது போல்
தோன்றியது..
#####################
உயிரின் உயிரே..!! கேள்..!!
அருண் சொன்னதை கேட்ட ராம் “மாமா சொன்னாரு நீங்க பொழச்சாலும் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டீங்கன்னு டாக்டர் சொன்னதனால ஹாஸ்பிடல்ல அப்படி ஒரு பொய் சொல்ல சொல்லிட்டீங்கன்னு.. ஆனா எனக்கு என்ன தோணுது தெரியுமா? நீங்க உங்க அஸ்வினி கிட்ட உண்மையை சொல்லி ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ அவளோட வாழ்ந்து இருக்கலாம்.. உங்களோட இருந்து உங்களோட விலைமதிப்பில்லாத காதல் கிடைக்கிற வரத்தை அவ கிட்ட இருந்து பறிச்சுட்டீங்க நீங்க.. எப்படி உங்க காதல் உங்களை கோமாலருந்து வெளியில கொண்டு வந்ததோ அதே மாதிரி ஒரு வேளை உங்க காதலே உங்க உயிரையும் காப்பாத்தி இருக்கலாம்..” என்றான் ராம்..
“ம்ம்ம்ம்.. இருக்கலாம்.. ஆனா உங்க தேஜுக்கு உங்களோட அன்பு கிடைக்காம போயிருக்குமே.. இதெல்லாம் அந்த விதி செய்ற விளையாட்டு.. தேஜூ உங்களுக்கு மட்டுமே சொந்தமானவ..” என்றான் அருண்..
“சரி ப்ரோ.. நீங்க எப்படி பொழைச்சு வந்தீங்க? டாக்டர் நீங்க பொழைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொன்னப்பறம் என்ன அதிசயம் நடந்து நீங்க பொழச்சிங்க?” என்று கேட்டான் ராம்..
” ஆக்சுவல்லா நான் கோமால இருந்து கண்ணு முழிச்சப்புறம் டாக்டர் கூட நான் பொழச்சிட்டேன்னுதான் நெனச்சாரு.. கொஞ்சம் கொஞ்சமா நான் எழுந்தேன்.. எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியானாலும் என் தலைவலி மட்டும் போகவே இல்லை.. டாக்டர் மறுபடியும் ஸ்கேன் பண்ணி பார்த்து என்னோட ப்ரைன் ஹீமேரேஜ் கம்ப்ளீட்டா க்யூர் கல.. அது சர்ஜரி பண்ணியும் மோசமா தான் ஆயிட்டு இருக்கு.. அதனால என் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு சொன்னாரு.. எப்படி இருந்தாலும் மேக்சிமம் ஒரு வருஷம் இல்லனா ரெண்டு வருஷம் அதுக்கு மேல நான் உயிரோட இருக்க மாட்டேன்னு சொன்னாரு..
என் கை கால்ல பட்டு இருந்த அடி எல்லாம் சரியாக ஒரு மூணு நாலு வாரம் எடுத்தது.. இந்த நிலைமையில நான் எப்படி என் அஸ்வினி கிட்ட உண்மையை சொல்லி அவளோட வாழ நினைக்க முடியும்..? ஒருவேளை என் கை கால் சரியாகாம நான் ஒருத்தரை சார்ந்தே இருக்கிற நிலைமை எனக்கு இருந்ததுன்னா என்னை பத்தி நினைவே இல்லாத அஸ்வினிக்கு பழசை எல்லாம் ஞாபகப்படுத்தி மேல மேல கஷ்டத்தை கொடுக்குறதுக்கு எனக்கு இஷ்டம் இல்லை.. ஒரு மாசம் அந்த ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன்.. அப்பதான் சின்ன பையன் என்கிட்ட அஸ்வினியோட அப்பா ஒரு வேளை கோமால இருந்து நான் வெளிய வந்துட்டா அவருக்கு சொல்ல சொன்னதா சொன்னான்..
அப்பதான் நான் யோசிச்சேன்.. எப்படி இருந்தாலும் நான் உயிரோட இருக்க போறது இல்ல.. என் அஸ்வினி என்னை பத்தின நினைவே இல்லாம இருக்கா.. அவகிட்ட உண்மையை சொல்லி என் நிலைமையை தெரிஞ்சுகிட்டு அவ மனசு உடைஞ்சு போறதை விட அவளை பொறுத்த வரைக்கும் நான் செத்து போயிட்டதாவே இருக்கட்டும்னு தோணுச்சு.. அவ நினைப்புல இருந்து நான் அழிஞ்சது அழிஞ்சதாவே இருக்கட்டும்னு தோணுச்சு.. அதனால ஹாஸ்பிடல்ல ஒரு வேளை அஸ்வினியோட அப்பா ஃபோன் பண்ணா நான் செத்துட்டேன்னு சொல்லிருங்கன்னு அந்த டாக்டர்கிட்ட சொல்லிட்டு வந்தேன்..
அவரும் எங்க ரெண்டு பேர் விஷயமும் தெரிஞ்சதனால அஸ்வினி அப்பா ஃபோன் பண்ணப்போ நான் செத்துட்டதா சொல்லிட்டாரு..” என்று அருண் சொல்ல ராம் சொல்ல வார்த்தை இல்லாமல் கண்கலங்கி நின்றான்..
“மாமா நீங்க உங்க தாத்தா மேல ரொம்ப கோவமா இருந்ததா சொன்னாரு.. அப்பறம் உங்க தாத்தா மேல இருந்த கோவம் எல்லாம் போயிடுச்சா?”என்று ராம் கேட்க இடவலமாக தலையாட்டினான் அருண்.. “இல்லை.. என்னை பெத்தவங்க மேலயும் அவங்க குடும்பத்து மேலயும் இருக்குற கோவம் இந்த ஜென்மத்துக்கு எனக்கு போகாது..” என்று சொன்னான் அருண்..
“நான்தான் உங்க காதலை பிரிச்சுட்டேன்.. நான் நடுவுல வந்து கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தேன்னா நீங்க ரெண்டு வருஷம் கழிச்சு வந்து மாமாவை கேட்டப்போ அவர் தேஜூவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார் இல்ல..?” என்று ராம் கேட்க அதை கேட்டு சிரித்தான் அருண்..
“அப்போ வேற ஏதாவது நடந்திருக்கும்.. நானும் அஸ்வினியும் சேர கூடாது அப்படிங்கிறதுல கடவுள் ரொம்ப தீர்மானமா இருந்திருக்காரு.. அவரு ஒரு எழுத்தை எழுதி இருக்காரு.. என் அஸ்வினியை உங்க தேஜூவா உங்க கிட்ட கொடுக்கறதில தான் அவருக்கு சந்தோஷம்.. உங்களுக்கு ஒரு தேவதை மனைவியா கிடைக்கணும்னு உங்க விதியில் அவர் எழுதி வெச்சிருக்கும் போது அவ எப்படி எனக்கு கிடைப்பா..?” என்று சொன்னான் அருண்..
“அப்படி இல்ல அருண்.. அவளுக்கு நினைவு இருந்த வரைக்கும் உங்களுக்காக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காம உங்க மேல அன்பு செலுத்தி இருக்கா.. உங்களால ஒரு சராசரி புருஷன் கொடுக்கிற எந்த சந்தோஷத்தையும் கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சும் உங்களை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருந்து இருக்கா.. அப்பேர் பட்டவளோட நினைப்பிலிருந்து உங்களை அழிச்ச அந்த கடவுள் நிஜமா சொல்றேன் ரொம்ப கொடுமைக்காரர்..” என்றான் ராம்..
“ஆக்சுவலா நீங்க அவ வாழ்க்கைல வந்ததுனாலதான் அவ எனக்கு கிடைக்கலன்னு நான் உங்க மேல ரொம்ப கோவமா தான் இருந்தேன்.. ஆனா என் அஸ்வினி மனசு முழுக்க நீங்க நிறைஞ்சிருக்கீங்க.. அவ உங்களை உயிருக்கும் மேல விரும்புறான்னு எப்ப எனக்கு தெரிஞ்சுதோ அதுக்காகவே உங்க மேல நானும் பிரியத்தை வளர்த்துக்கிட்டேன்.. எப்போ நீங்க அவளுக்கு அவ்ளோ பிடிச்சவரா ஆனீங்களோ அப்பவே எனக்கும் ரொம்ப பிடிச்சவர் ஆயிட்டீங்க.. நான் உங்களை அதுக்கப்புறம் ஒரு ஃப்ரெண்டா மட்டும்தான் பார்த்தேன்..” என்றான் அருண் ராமின் கையைப் பிடித்த படி..
“உங்க ரெண்டு பேர் காதல்ல எது பெஸ்ட்னு என்னால சொல்ல முடியல.. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுட்டு அன்பு செலுத்தி இருக்கீங்க.. உங்க கிட்ட இருந்து அவளை பறிச்சவன் நான்னு தெரிஞ்சும் அவ என்னை விரும்புகிறான்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை ஃப்ரெண்டா பாக்க ஆரம்பிச்சேன்னு சொல்றீங்க பாருங்க.. உங்களை மாதிரி ஒருத்தரை தேஜூ மிஸ் பண்ணிட்டான்னு தான் நான் சொல்லுவேன்..” என்றான் ராம்..
“அன்பு காட்டும் போது அதிகம் குறைவெல்லாம் கிடையாது ராம்.. அது அன்பு.. அவ்வளவுதான்.. அதுக்கு நாம நேசம் பாசம் காதல் அப்படின்னு விதவிதமா பேரு வச்சாலும் பேசிக்கலி அது அன்பு.. அதை யாரு வேணா எப்படி வேணா காட்டலாம்..” என்றான் அருண்..
“உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. சரி அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..?” என்றான் ராம்..
“அப்புறம் வீட்டுக்கு போன என்னை சின்ன பையன் தான் கவனிச்சுக்கிட்டான்.. அந்த ஹாஸ்பிடலுக்கு யாரு பில்லு கட்டினாங்கன்னு நான் சின்ன பையன் கிட்ட கேட்டப்போ அவன் என்கிட்ட எங்க தாத்தா தான் கட்டினாருன்னு சொன்னான்.. அதை மட்டும் என்னால தாங்கவே முடியல.. தான் பேரன்னு சொல்லிக்கிட்டு தான் வீட்ல வச்சு என்னை வளர்க்க முடியாத என்னோட தாத்தா.. தப்பு பண்ணி என்னை பெத்துட்டு என்னை வீசி எறிஞ்சிட்டு போன எங்க அம்மாவ கேள்வி கேட்க முடியாத என் தாத்தா.. என்னோட ட்ரீட்மென்ட்க்கு செலவு பண்ணறதை என்னால ஏத்துக்க முடியல.. அவர் செலவு பண்ண பணத்தை எப்படியாவது சம்பாதிச்சு மறுபடியும் அடைச்சுடணும்னு முடிவு கட்டினேன்.. முழுசா நான் தேறி என் வேலை எல்லாம் நான் நல்லபடியா எப்பவும் போல செய்ய ஆரம்பிக்கிறதுக்கு மூணு மாசம் ஆச்சு.. அந்த மூணு மாசமா மெக்கானிக் செட்டை சின்ன பையன் தான் பார்த்துக்கிட்டு என் செலவெல்லாம் பாத்துட்டு இருந்தான்.. அதுக்கப்புறம் நான் சரியாயிட்டனே தவிர முழுசா சரி ஆயிட்டேன்னு சொல்ல முடியாது.. அப்பப்போ தலைவலி வரும்.. என் உயிரே போற மாதிரி தலைவலி வரும்.. ஆனா எங்க தாத்தா என் டிரீட்மென்ட்காக செலவு பண்ண பணத்தை அடைக்காம நான் சாகக்கூடாதுன்னு சாமியை வேண்டிக்கிட்டேன்.. அது மட்டும் இல்லாம சின்ன பையனை ஒரு அளவுக்கு படிக்க வைக்கிற வரைக்கும் நான் நல்லா இருக்கணும்னு நான் நினைச்சேன்..” என்று அருண் சொல்ல அவன் ஏதோ மலைபோல் அவன் முன்னே உயர்ந்து நிற்பது போல் ராமுக்கு தோன்றியது..
இவ்வளவு நல்ல மனதுடையவனை கடவுள் ஏன் இவ்வளவு பாடுபடுத்துகிறார் என்று அவர் மேல் ராமுக்கு கோபம் வந்தது… அப்போது அருணின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிய அவன் ஏதோ வலியில் இருந்தது போல் தோன்றியது..
ராம் “ஐயோ.. அருண் சார்.. என்ன ஆச்சு.. என்ன ஆச்சு சொல்லுங்க..” என்று கேட்க வைஷூ அவன் அருகில் வந்து “அருண் சார்.. அருண் சார்.. தலைவலி வந்துடுச்சா மறுபடியும்..? இருங்க.. நான் டாக்டரை கூப்பிடறேன்..” என்று சொல்லி வேகமாக ஓடி சென்றாள் மருத்துவரை அழைக்க..
ராம் அவன் தலையைப் பிடித்துவிட அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் மருத்துவர் வந்து அவனுக்கு ஏதோ ஒரு ஊசியை போட்டார்.. அதில் அருணின் முகம் கொஞ்சம் தெளிவடைய மருத்துவர் அவனிடம் “நான்தான் உங்களை ஸ்ட்ரெய்ன் பண்ண வேண்டாம்னு சொன்னேன் இல்ல? ராம் கிட்ட நீங்க பேசிட்டு இருந்தீங்களாமே.. ஏன் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கிறீங்க?” என்று கேட்டார்..
“ஏன் டாக்டர்.. இப்ப நான் ஸ்ட்ரெய்ன் பண்ணாம இருந்தா… என்ன இன்னும் ஆறு மாசம் உயிரோட இருக்க போறேனா? நீங்க தான் எனக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்குன்னு சொல்லிட்டீங்க இல்ல..? அதுக்குள்ள நான் பேசணும்னு நினைக்கிறவங்களோட எல்லாம் பேசிக்கறேனே.. ப்ளீஸ்..” என்றான் அருண்..
அந்த மருத்துவர் கண்கள் கலங்கின.. “சரி.. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க.. கொஞ்சம் அட்லீஸ்ட் அப்பப்போ பிரேக் எடுத்துட்டு பேசுங்க..” என்றார்..
“அவ்ளோ டைம் இல்ல டாக்டர் எனக்கு.. என்ன.. ஒரு வாரத்தில் போக வேண்டியவன் நாலு நாள்ல போய்டுவேனா? பரவால்ல டாக்டர்.. எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. நான் செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சு முடிச்சிட்டேன்.. இனிமே நான் சந்தோஷமா செத்துப் போவேன்” என்றான் அருண்..
ராமுக்கோ அவன் பேச பேச கடவுள் மேல் கோபம் அதிகரித்துக் கொண்டே போனது.. அவன் சொன்னதை கேட்டு மருத்துவர் தலையை குனிந்து கொண்டே வெளியே போய்விட்டார்..
ராம் பக்கம் திரும்பியவன் “ம்ம்ம்ம்.. அப்புறம் என்ன ஆச்சுன்னா..” என்று ஆரம்பிக்க “வேண்டாம் அருண்.. நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நான் இங்கயே இருக்கேன்.. அட்லீஸ்ட் பிரேக் எடுத்துட்டாவது பேசுங்க டாக்டர் சொன்ன மாதிரி..” என்றான்..
“இல்ல ராம்.. இவ்வளவு நாளா என் மனசுல பொதைஞ்சிருந்த எல்லாத்தையும் உங்க கிட்ட கொட்டணும்னு நினைக்கிறேன்.. உங்ககிட்ட இப்ப பேசும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஏன்னா என்னை மாதிரியே என் அஸ்வினி மேல உயிரையே வெச்சிருக்கிற ஒருத்தர் நீங்க.. என் வலி உங்களுக்கு நிச்சயமா புரியும்.. அதனால தயவு செஞ்சு நான் பேசறதை கேளுங்க..” என்றான் அருண்..
தொடரும்..