பரீட்சை – 93
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உனக்காக..
உன் துன்பம் போக்க..
உனக்கே தொல்லையாய்..
உன் வாழ்வில்
நுழைந்தேன்..
மீண்டும் மீண்டும்
மர்ம மனிதனாய்
முரண்பாட்டின்
மொத்த உருவாய்
வந்து உன்னை
மிரள வைத்த
இந்த மாயோனை
மன்னித்து விடடி
என் மணிக்குயிலே..!!
#####################
தொல்லையாய் வந்த உதவி..!!
தன் மனதில் இருந்த பாரத்தை முழுவதுமாக ராமிடம் இறக்கி வைக்க வேண்டும் என்று எண்ணிய அருண் மேலும் தொடர்ந்தான்..
“அதுக்கப்புறம் என் தாத்தா கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கறதுக்காகவும் சின்ன பையனை படிக்க வைக்கறதுக்காகவும் எப்படி சம்பாதிக்கறதுன்னு யோசிச்சேன்.. அதுக்காக ஒரு ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஆரம்பிச்சேன்.. சின்னதா ஆரம்பிச்சு அந்த மெக்கானிக் ஷெட் கூடவே அது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துச்சு.. நான் மூணு வருஷம் கிராஜுவேஷன் படிச்சி முடிச்சிருந்ததுனால எனக்கு லோன் ஈஸியா கிடைச்சுது.. அதை வெச்சு தான் இந்த பிசினஸை நான் ஆரம்பிச்சேன்.. முதல்ல அதை ஒரு பெரிய ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியோட சின்ன ஏஜென்சியா தான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் ஆன்லைன்ல அந்த பிசினஸை அப்கிரேட் பண்ணுனேன்.. அந்த பிஸினஸ் நல்லா போச்சு.. ஏஜென்சி நல்லா போனதுனால அந்த ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனிகாரங்க எனக்கு நிறைய பணம் குடுக்க ஆரம்பிச்சாங்க.. அந்த பணத்தை எல்லாம் சின்ன பையனோட படிப்பு செலவு.. என்னோட சாப்பாட்டு செலவு.. என் தலைவலியை குறைக்கறதுக்கு மருந்து செலவுக்கு செலவு செஞ்சது போக மிச்சத்தை எல்லாம் சேர்த்து வச்சேன்..”
அவன் சொல்ல சொல்ல அவன் உடல்நிலை அவ்வளவு மோசமாக இருந்தும் தன்னை பற்றி கவலைப்படாமல் சின்ன பையனுக்காகவும் தான் யாருக்கும் கடனாளியாய் இருக்கக் கூடாது என்பதற்காகவும் எப்படி உழைத்திருக்கிறான் என்று எண்ணி ராமுக்கு பிரமிப்பாய் இருந்தது..
“நீங்க அவ்ளோ மோசமான கண்டிஷன்ல இருந்தப்போ எப்படி உங்களால இவ்ளோ விகரஸா ஒர்க் பண்ண முடிஞ்சது..? அதனால உங்க உடல் நிலை இன்னும் மோசமா ஆகலையா..?” என்று கேட்டான் ராம்..
“ம்ம்ம்ம்.. ராத்திரியும் பகலுமா நேரம் காலம் பார்க்காம என் உடம்புல அவ்வளவு பிரச்சனையை வெச்சுக்கிட்டு வெறி பிடிச்ச மாதிரி உழைச்சேன்னா உடம்பு மோசம் ஆகாம இருக்குமா? ஆச்சு.. அதுக்கேத்த மாதிரி என் மருந்தோட டோஸேஜூம் ஏறிகிட்டே போச்சு..” என்றான் அவன்..
“ஆனா எப்படி இருந்தாலும் கூடிய சீக்கிரம் என் உயிர் ஒரு நாள் போகத்தான் போகுதுன்ற நினைப்புல என்னை நானே கஷ்டப்படுத்திக்கறதை பத்தி கவலைப்படல.. நான் கஷ்டப்பட்டதோட விளைவா ஆறே மாசத்துல ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி பண்ற சின்ன வர்க் ஷாப் ஆரம்பிக்கிற அளவுக்கு மூலதனம் சேர்ந்துச்சு.. அதை வச்சு அந்த வர்க் ஷாப்பை ஆரம்பிச்சேன்.. நல்ல குவாலிட்டியில் ஸ்பேர் பார்ட்ஸ் பண்ணி வித்ததுனால அடுத்த ரெண்டு மாசத்துக்குள்ள இந்த கம்பெனி பிசினஸ் நல்லா போச்சு.. அடுத்த ஆறு மாசத்திலேயே நாங்க எங்க கம்பெனியோட ஏஜென்சியை ரெண்டு பேரு எடுக்கிற அளவுக்கு கம்பெனி பெருசா ஆச்சு.. அப்போ யூ எஸ் ல போய் கம்பெனி ஆரம்பிக்கிறதா இருந்த என் ஃப்ரெண்ட் நிலவழகன் என்கிட்ட பேசினான்.. அவனோட சேர்ந்து இந்த கம்பெனியை ஆரம்பிக்க முடியுமானு கேட்டான்.. அவனும் கொஞ்சம் பணம் இன்வெஸ்ட் பண்ணான்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து யூ எஸ் ல ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனி ஒன்னு ஆரம்பிச்சோம்..” என்றான் அருண்..
அவனை பிரமிப்பாய் பார்த்த ராம் “உங்களால இவ்ளோ ஃபாஸ்டா இவ்வளவு குறைவான டைம்ல ஒரு கம்பெனியை முன்னுக்கு கொண்டுவர முடியும்னா உங்களுக்கு அவ்ளோ காண்டாக்ட்ஸ் இருந்ததுன்னா நீங்க முன்னாடியே அந்த ஆசிரமத்தை விட்டு வந்தவுடனேயே இந்த கம்பெனியை ஆரம்பிச்சு இருக்கலாமே.” என்று கேட்டான்..
“ம்ம்ம்ம்.. ஆரம்பிச்சு இருக்கலாம் தான்.. ஆனா அப்போ எனக்கு லைஃப்ல எந்த பிடிப்பும் இல்லை.. சம்பாதிக்கணும் அப்படின்னு எந்த மோட்டிவ்வும் இல்லை.. ஆனா அந்த ஆக்சிடென்ட் ஆனதுக்கப்புறம் என் வாழ்க்கை எதையோ நோக்கி போயிட்டு இருந்தது.. அதுவும் என்னுடைய வாழ்நாள் ரொம்ப கம்மின்னு தெரிஞ்சப்போ நான் வேகமா உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என் கழுத்தை நெறிச்சுது..” என்று அருண் சொல்ல ராமுக்கு அவன் நிலை புரிந்தது..
“யூ எஸ் ல அந்த கம்பெனி ஆரம்பிக்கிறதுக்காக அங்க போனப்போ நிலவன் தான் என்னை கம்பெல் பண்ணி அங்க இருந்த ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்க வச்சான்.. அப்போ அங்க இருந்த டாக்டர் ரிஸ்க் எடுத்து ஒரு சர்ஜரி பண்ணினா என் தலையில இருக்கிற ஹீமரேஜை சரி பண்ண முடியும்ன்னு நம்பிக்கை கொடுத்தார்.. ஆனா அவரு 40% நம்பிக்கை தான் கொடுத்தார்.. ஒருவேளை அது ஃபெயிலியர் ஆனா நான் இறந்து போகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னார்.. நான் அந்த சர்ஜரியை ஒரு வருஷத்துக்கு தள்ளிப் போட்டேன்.. என்ன வந்தாலும் என் தாத்தாவுக்கு அந்த பணத்தை கொடுத்துட்டு தான் நான் அந்த சர்ஜரி பண்ணிக்கணும்ன்றதுல உறுதியா இருந்தேன்.. நான் நெனைச்ச மாதிரி எங்க கம்பெனி நல்லா வளர்ந்துச்சு..” என்றான்…
“நீங்க ஏன் உங்க தாத்தாவை கடைசி வரைக்கும் மன்னிக்கவே இல்ல..? அவர் முதல்ல இருந்து உங்களை பாத்துட்டு இருந்தாரு தானே.. அவருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுத்திங்க?”
“அவர் ஊர் உலகத்துக்கு முன்னால என்னை அவரோட பேரன்னு சொல்லிட்டு அப்புறம் அந்த ஆஷ்ரமத்திலயே என்னை தங்க வச்சு வளர்த்திருந்தா கூட நான் அவர் பணத்தை ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன்.. ஆனா கடைசி வரைக்கும் அவர் என்னை அவர் பேரன்னு சொல்லிக்கவே விரும்பல.. அப்படி இருக்கிறப்போ எந்த உரிமையில அவர் எனக்கு ட்ரீட்மென்ட்க்கு பணம் செலவு பண்றதை நான் ஏத்துக்க முடியும்? ஒருவேளை அந்த பணத்தை ஏத்துட்டு இருந்தா எனக்கு தான் அது தண்டனையா இருந்திருக்கும்..” என்றான் அருண்..
அவன் சொல்வதில் இருந்த நியாயம் ராமுக்கு புரிந்தது.. அருண் தொடர்ந்தான்..
“சின்ன பையனும் அவன் படிப்பை முடிச்சான்.. +2 ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி இருந்தான்.. அவனை யூ எஸ் கூட்டிட்டு போய் அங்க இருந்த பெஸ்ட் காலேஜ்ல அவனை படிக்க வெச்சேன்.. அப்படி படிக்கும் போது தான் ஒரு நாள் நிவேதாவோட அவன் ஃபோன்ல பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன்.. அவன் பேசின விதத்தை பார்த்தப்போ எனக்கு ஏதோ தோணுச்சு.. ஆனா நான் அவன்கிட்ட அதை பத்தி கேட்கல.. அப்ப அதை பத்தி ஏதாவது கேக்க போய் படிப்பிலிருந்து அவன் டிஸ்டர்ப் ஆயிடுவானோன்னு தோணிச்சு.. அதனால அவன்கிட்ட எதுவும் கேட்காம அவன் படிச்சு முடிக்கட்டும்னு விட்டுட்டேன்.. அதுக்கப்புறம் எனக்கு அந்த சர்ஜரியும் நடந்தது..” என்று அவன் சொன்னதும் ராமுக்கு அவன் அதன் பிறகு உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்தாலும் அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவனுக்கு என்னவெல்லாம் துன்பம் நேர்ந்ததோ என்று கொஞ்சம் பதைப்பதைப்புடனே அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்..
“என்ன அவ்ளோ டென்ஷனா பாக்கறீங்க ராம்? உங்களுக்கு என்ன கேட்கணும்னு தோணுதுன்னு எனக்கு தெரியும்.. இந்த முறை நான் கோமாக்கு போனேனா? எவ்வளவு நாள் கோமாவில இருந்தேன்..? அதானே கேட்கணும்னு நினைக்கிறீங்க?” என்று தான் நினைத்ததை அவன் சரியாக கேட்க ராம் மேலும் கீழுமாய் தலையாட்டி ஆமோதித்தான்..
“இந்த முறை நான் கோமால போகல ராம்.. சர்ஜரி நல்லபடியா முடிஞ்சு நான் கண் முழிச்சேன்.. என் பிரச்னையை சரி பண்ணி இருந்தாலும் ஒரு வருஷம் நான் கண்டினியூயசா மருந்து மாத்திரைகள் எடுத்தா தான் எனக்கு இம்ப்ரூவ்மெண்ட் தெரியும்னு டாக்டர் சொல்லி இருந்தாரு.. அதுபடியே மருந்து மாத்திரை எடுத்துட்டேன்.. ஒரு வருஷத்துல கம்பெனி வேலைகளையும் கவனிச்சுக்கிட்டு என்னையும் கவனிச்சுக்கிட்டு இருந்தான் நிலவழகன்.. சின்ன பையனும் அவனுக்கு குறைஞ்சவன் இல்ல.. அவன் படிப்பையும் கவனிச்சுக்கிட்டு என்னையும் கவனிச்சுக்கிட்டு சைடு பை சைடு நிவேதா கிட்டயும் தவறாம கடலை போட்டுக்கிட்டு இருந்தான்..” என்று சிரித்தபடியே சொன்னான் அருண்..
“அடுத்த ஒரு வருஷத்துல எனக்கு எல்லாம் சரியா போச்சு.. அந்த சம்பவம் நடந்து நாலு வருஷம் கழிச்சு அஸ்வினியை பார்த்து அவளோட சந்தோஷமா வாழலாம்னு மனசு நிறைய சந்தோஷத்தோட வந்தேன்.. அஸ்வினியோட அப்பாவோட அட்ரஸை கண்டுபிடிச்சு அங்க போய் அவர் கிட்ட கேட்டப்போ அவரு என் தலையில இடியை இறக்கினார்..” என்று அவன் சொல்ல ராமுக்கோ தனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் அவன் தலையில் இடியாய் இறங்கி இருந்ததை எண்ணி வருத்தமாய் இருந்தது.. தான் தேஜூவின் வாழ்க்கையில் ஏன் வந்தோமோ என்று ஒரு சிறிய குற்ற உணர்ச்சியும் அவன் மனதில் தோன்றியது..
“நான் உயிரோட இல்லன்னு அவசரப்பட்டு நான் ஹாஸ்பிடல்ல சொல்ல சொன்னதே எனக்கு வெனையா முடிஞ்சது.. அதைக் கேட்டு அவர் அஷ்வினிகிட்ட என்னை பத்தி எதையுமே சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதா சொன்னப்போ முழுசா இடிஞ்சு போயிட்டேன்.. அந்த நிமிஷம் நான் எதுக்கு வாழனும்னு தோணுச்சு எனக்கு.. ஆனா எனக்கு அப்போ உடம்பு சரி ஆயிடுச்சி.. எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கல.. உயிர் இருந்தா வாழ்ந்து தானே ஆகணும்.. தற்கொலை பண்ணிக்கறதுக்கு நான் கோழை இல்லை.. என் அஷ்வினி இனிமே எனக்கு கெடைக்க மாட்டான்னு தெரிஞ்சப்புறம் என்னை சுத்தி இருந்த மத்த நல்ல மனசு உள்ளவங்களுக்காக வாழனும்னு நான் நினைச்சேன்..” என்று அருண் சொல்ல அவன் மற்றவர்களிடம் வைத்த அன்பே அவன் உயிரை நிறுத்தி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தான் ராம்..
“அவங்களுக்காக அவங்களை வாழ வெச்சு சந்தோஷப்படணும்னு நினைச்சு தான் அதுக்கப்புறம் என் வாழ்க்கையை தொடர்ந்தேன்.. ஆனா இங்கே இருந்து திரும்பி போறதுக்கு முன்னாடி ஒரு தடவை என் தேவதையை பார்த்துட்டு போகணும்னு எனக்கு தோணுச்சு.. சத்தியமா சொல்றேன்.. உங்க வீட்டு கிட்ட வந்து அவளை ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்த்தப்போ அப்படியே ஓடி வந்து அவகிட்ட உண்மை எல்லாம் சொல்லி இந்த வாழ்க்கையை விட்டுட்டு என்னோட வந்துருன்னு சொல்லணும்னு தோணுச்சு.. நானும் மனுஷன் தானே?” என்று சொல்ல ராமுக்கோ குற்ற உணர்ச்சி அதிகமாகியது.. தலையை குனிந்து இரு கைகளையும் கோர்த்து தன் உள்ளங்கையை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்..
“ஆனா உங்களோட என் தேவதை எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தான்னு நான் பார்த்தேன்.. அவ முகத்தில ஒரு சின்ன சுளிப்பு கூட இல்லை.. கிட்டத்தட்ட ரெண்டு மாசம் நான் மறைஞ்சிருந்து மறைஞ்சிருந்து அந்த வீட்டுக்கு வெளியில உங்களோட அவ இருந்த பல நேரங்கள்ல பார்த்து இருக்கேன்.. உங்க அம்மா அப்பா அவ குழந்தைங்க அவங்களோடயும் அவ எவ்வளவு சந்தோஷமா இருந்தான்னு நான் பார்த்தேன்.. அந்த சந்தோஷத்தை பார்த்து நிஜமா சொல்றேன் ராம்.. எனக்கு உள்ளுக்குள்ள எழுந்த ஒரு சொல்லமுடியாத உணர்வு… ஒரு திருப்தி.. ஒரு நிறைவு.. அதுக்கு ஈடே கிடையாது.. என்னை பொறுத்த வரைக்கும்.. என் அஸ்வினி சந்தோஷமா இருக்கா.. அதை பார்த்துட்டு அதுக்கப்புறம் அவ சந்தோஷமா இருக்கான்ற நினைப்பிலேயே என்னால வாழ்ந்துட முடியும்னு நினைச்சேன்.. அப்படியே தள்ளி இருந்து அவளை பாத்துக்கிட்டே இருக்கலாம்ன்னு தோணிச்சு.. ஆனா தப்பி தவறி அங்கே இருக்கிற தெரிஞ்சவங்க யாராவது என்னை பார்த்து உங்க கிட்ட வந்து என்னை பத்தி ஏதாவது சொல்லிட போறாங்களேன்னு பயந்து அவ சந்தோசம் எந்த விதத்திலும் கெட கூடாதுன்னு நினைச்சு தான் நான் மறுபடியும் யுஎஸ்கே வந்துட்டேன்..” என்று சொல்லி ஒரு பெருமூச்சை விட்டான்..
“இப்படி முடிவெடுத்த நீங்க எதுக்கு திரும்பவும் இங்க வந்து..” என்று ராம் தன் கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன் அருண் ” அதுதான் விதி.. மறுபடியும் என் அஸ்வினியோட வாழ்க்கையில என்னை நுழைய வச்சுது.. யூ எஸ்க்கு போனப்புறம் என் கம்பெனிக்கு நிறைய நாடுகள்ல பிரான்சஸ் ஓபன் பண்ணினேன்.. அப்போ நான் ஒரு பிசினஸ் கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ண வேண்டி இருந்தது.. நல்லா வளர்ந்த பிசினஸ் பீப்பிள் அந்த கான்ஃபரன்ஸ்ல கலந்துக்கிட்டு இருந்தாங்க.. அதுக்கு நித்திலாவும் அவ அப்பாவும் வந்து இருந்தாங்க..” என்று அவன் சொல்ல அதிர்ந்து போனார்கள் அங்கிருந்த மற்ற இருவரும்..
தொடரும்..