அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 96🔥🔥

5
(5)

பரீட்சை – 96

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

தனக்கு கிடைக்காத 

காதலுக்காக

கடல் தாண்டி 

வந்து 

கண் கட்டி 

வித்தையாய் 

காரியங்கள் பல 

செய்து..

 

கேடு கெட்டவன் 

என்று தனக்கு 

கேவலமான பட்டம் 

கிடைக்கும் என்று 

தெரிந்தும் 

அதை பற்றி 

சிறிதும் 

கவலைப்படாமல்..

 

தன் காதலியின் 

களிப்பான முகத்தை 

பார்ப்பது ஒன்றையே 

கவனத்தில் 

கொண்டிருந்தான்..

அவள் 

மனதில் இருந்த

முன்னாள் காதலன்..

 

####################

 

முன்னாள் காதலன்..!!

 

ராம் ஒரு சிறு யோசனையுடனேயே கைப்பேசியின் அழைப்பை ஏற்க கைபேசியின் அந்த பக்கம் “ஹலோ ராம்.. எங்க இருக்கீங்க? எவ்வளவு நேரம் ஆச்சு? எங்க போனீங்க? ஹலோ ராம்.. நான் பேசறது கேக்குதா இல்லையா? என்ன பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க?” என்று மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் தேஜு..

 

“தேஜு இரு.. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? ஒன்னும் இல்ல.. அந்த ட்ரக் டீலர் பத்தி ஏதோ இன்ஃபர்மேஷன் கிடைச்சுதுன்னு போலீஸ் கிட்டருந்து ஃபோன் வந்தது.. அதான் தூங்குற உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு சொல்லாம கிளம்பி வந்தேன்.. கொஞ்சம் போலீஸ் கூட அலைஞ்சுகிட்டு இருக்கேன்மா.. நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றான்..

 

“மணி காலைல நாலாகுது.. என்கிட்ட பத்து நிமிஷம் வெளியில போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவரு.. நாலு மணி வரைக்கும் ரூமுக்கு வரலையேன்னு வெளியில் வந்து பார்த்தா உங்களை ஆளையே காணோம்.. நான் என்னன்னு நினைக்கிறது..? அப்படியே வெளியில போனீங்கன்னா என்கிட்ட சொல்லிட்டு போக மாட்டீங்களா? நான் தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி சொல்லி இருக்கலாம்..இல்ல? எனக்கு எவ்ளோ கவலையா ஆயிடுச்சு தெரியுமா?” என்றாள்..

 

“சரி சரி.. தப்புதான்.. சாரிடா.. ஏதோ அன்னைக்கு நடந்ததை பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு  ஒரு ஆர்வத்துல அவசரமா வந்துட்டேன்.. குழந்தைங்க எல்லாம் எழுந்திரிச்சுட போறாங்க.. நீ போய் படுத்து தூங்கு..” என்றான்..

 

“ஆமா.. அந்த அருண் பத்தி ஏதாவது விஷயம் தெரிஞ்சுதா? அவர் உயிரோடு தானே இருக்கிறாரு..? அவர் எங்க இருக்காருன்னு ஏதாவது தெரிஞ்சுதா உங்களுக்கு..? அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து வந்து இருக்க கூடாதுங்க.. நான் உங்க வைஃப்னு தெரிஞ்சப்பறமும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவர் நினைச்சது தப்பு தான்.. ஆனா அவர் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு நான்… அதனால ஏதோ முட்டாள்தனமா இப்படி எல்லாம் பண்ணிட்டார்.. அதுக்காக கடவுள் அவர் உயிரை எடுக்கிற அளவுக்கு அவருக்கு பெரிய தண்டனையா எதுவும் கொடுத்திருக்க கூடாதுங்க.. அவர் எங்கேயாவது உயிரோட இருக்கணும்.. அந்த ட்ரக் டீலர் கிட்ட இருந்து அவர் எங்க இருக்காருன்னு ஏதாவது விஷயம் தெரிஞ்சுதாங்க?” என்று தேஜு கேட்க ராமுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்..

 

பிறகு சுதாரித்தவன், “இல்லம்மா.. ஒன்னும் தெரியல.. அவர் எங்கேயோ உயிரோட தான் இருப்பார்ன்னு தோணுது.. ஆனா கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவாங்க.. நீ இதை பத்தி எல்லாம் கவலைப்படாதே.. நீ நல்லா படுத்து ரெஸ்ட் எடு.. ஏற்கனவே இப்பதான் எல்லா டென்ஷனும் முடிஞ்சு கொஞ்சம் நிம்மதியா இருக்கே.. இப்ப எதுக்கு இது பத்தி எல்லாம் யோசிச்சு உன் உடம்பை நீயே கெடுத்துக்குற..? முதல்ல நீ படுத்து ரெஸ்ட் எடு.. நல்லா தூங்கு.. நான் இன்னும் ஒரு டூ த்ரீ ஹவர்ஸ் வந்துருவேன்..” என்று சொன்னான் ராம்..

 

“ஓகே ராம்.. அப்ப நான் வச்சிடறேன்.. ரொம்ப லேட் பண்ணாதீங்க.. நைட் ஃபுல்லா முழிச்சிட்டிருந்து இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க.. வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. இப்படியே தூங்காம அலைஞ்சுட்டு இருந்தா உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போயிடும்..” என்று அக்கறையாக சொன்னவள் அதன் பிறகு கைபேசி இணைப்பை துண்டித்தாள்..

 

ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவனுக்கு ஏனோ அவள் அருண் பற்றி விசாரித்தது சிறிது மகிழ்ச்சியை கொடுத்தது.. “அவ மனசுல அருணை பத்தி கெட்டவன்னு நினைக்கல.. சூழ்நிலை காரணமா தப்பு பண்ணிட்டதா தான் நெனைச்சிட்டு இருக்கா.. அவ அருணை கெட்டவன்னு நினைச்சிருந்தா எனக்கு ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்.. கடவுள் அவ மனசுல அப்படி ஒரு எண்ணத்தை விதைக்கலை.. அது வரைக்கும் சந்தோஷம்..” என்று நினைத்தான் அவன்..

 

அதன் பிறகு ஒரு அரை மணி நேரம் கழிந்தது.. வைஷூவுடன் அவள் பத்திரிகைத்துறை சாகசங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தான் ராம்.. அப்போது அருண் லேசாக அசைந்து கொடுத்து பின் கண் விழிக்க தன் எதிரே இருந்த ராமை பார்த்து சினேகமாய் புன்னகைத்தான்..

 

“நான் எழுந்திருக்கறதுக்குள்ள நீங்க கிளம்பி போயிருப்பீங்களோன்னு நெனச்சேன்.. போயிருந்தீங்கன்னா வைஷு கிட்ட சொல்லி உங்களை ஃபோன் பண்ணி கூப்பிட சொல்லி இருப்பேன்.. உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னாதான் நான் நிம்மதியா இந்த உலகத்தை விட்டு போக முடியும்..” என்று அவன் சொல்ல ராம் அவனை முறைத்தான்..

 

“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது உங்களுக்கு.. உங்க நல்ல மனசுக்கு எந்த கெட்டதும் நடக்காதுன்னு எனக்கு தோணுது.. நீங்க நல்லபடியா இருப்பீங்க.. நீங்க இப்படி சாகுறதை பத்தி பேசாதீங்க..” என்றான்..

 

விரக்தியாய் ஒரு சிரிப்பை சிரித்த அருண் “நான் கூடிய சீக்கிரம் செத்துப் போயிடுவேன்னு தெரிஞ்சும் இப்படி ஆதரவா எனக்கு நம்பிக்கை தர்ற மாதிரி பேசுறதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ராம்.. ஆனா உண்மைனு ஒன்னு இருக்குல்ல..? அதை யாரும் மாத்த முடியாது.. நடந்த விஷயங்களை நான் உங்களுக்கு சொல்லி முடிச்சிடுறேன்.. என்னால இன்னும் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும்னு தெரியல.. மறுபடியும் மூச்சு வாங்குறதுக்குள்ள நான் உங்ககிட்ட எல்லா விஷயமும்  சொல்லி முடிச்சுடணும்..” என்றான்..

 

ராமுக்கோ அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தலையை குனிந்து தன் விரல்களால் நெற்றியை நீவி விட்டு கொண்டான்..

 

பிறகு அருண் சிரித்தபடி தொடர்ந்தான்.. 

 

“அந்தப் பார்ட்டில அவங்க எல்லாம் அன்னைக்கு நித்திலாவை கேள்வியால குடைஞ்சு எடுத்தப்போ அவ எதோ மழுப்பி பதில் சொல்லிட்டு போயிட்டா.. ஆனா எனக்குள்ள ஒரு கவலை ஆரம்பிச்சது.. இவ தேஜூ வாழ்க்கையில என்ன பண்ண போறாளோன்னு எனக்குள்ள டென்ஷன் ஆரம்பிச்சப்ப தான் அவ எதுவும் பண்றதுக்கு முன்னாடி அஸ்வினி உயிருக்கு எந்த பாதகமும் வராம அவளுக்கு பழைய விஷயங்களை எல்லாம் தெரிய வெக்கணும்னு நெனைச்சேன்.. அதே சமயம் அந்த நித்திலாக்கு நீங்க எப்பேர்பட்டவர்னும் புரிய வைக்கணும்னு நினைச்சேன்..” என்றான்..

 

அவன் சொன்னதை கேட்டு ராம் “என்னை பத்தி புரிய வைக்கணும்னு நினைச்சீங்களா? என்னை பத்தி அவளுக்கு என்ன புரிய வைக்கணும்?” என்று கேட்டான்..

 

அவன் கேட்டதை நினைத்து மெலிதாக இதழ் விரித்த அருண் “அவ உங்ககிட்ட அஷ்வினியோட பழைய காதல் வாழ்க்கை பத்தி சொன்னா நீங்க அவளை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிடுவீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தா.. ஆனா உங்களை பார்த்த அந்த ஒரு மாசத்துல உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சிடுச்சு.. நீங்க என் அஸ்வினியை எவ்வளவு விரும்புறீங்கன்னு.. அவளை பத்தி அவ ஒரு விபச்சாரின்னு யாராவது வந்து உங்க கிட்ட சொல்லி இருந்தா கூட நீங்க அதை நம்பி இருக்கவும் மாட்டீங்க.. கவலைப்பட்டும் இருக்க மாட்டீங்க.. அது தெரிஞ்சதுனால தான் நான் நித்திலா உங்க கிட்ட வந்து அஷ்வினியோட பழைய வாழ்க்கையை பத்தி சொல்றதை நெனைச்சு கவலையே படல.. ஆனா அவளுக்கும் இது தெரிஞ்சிருக்கும் போல.. அதனால தான் அவ உங்க கிட்ட சொல்றதோட நிறுத்தாம அஸ்வினி கிட்டயும் இதை சொல்லி ஞாபகப்படுத்துவேன்னு சொன்னா.. அதுதான் எனக்கு ரொம்ப பயத்தை கொடுத்துச்சு..” என்றான் அருண்..

 

ராம் அவன் சொன்னது புரிந்தது போல தலையாட்ட “ஏன்னா எனக்கு அஸ்வினியை பத்தி நல்லாவே தெரியும்.. அவ மனசுல உங்களைத் தவிர இன்னொரு ஆள் இருந்திருக்கான்னு தெரிஞ்சா அவ மனசு எவ்வளவு நொறுங்கி போகும்ன்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.. அவளுக்கு நித்திலா மூலமா பழைய விஷயங்கள் தெரிஞ்சுதுன்னா அவ அவளையே அழிச்சுக்குவான்னு எனக்கு தெரியும்..” என்றான் அருண்..

 

ராமின் கண்களோ அருண் சொன்ன படி நிகழ்ந்திருந்தால் தன் தேஜூவின் நிலை என்னாகி இருக்கும் என  நினைத்து கலங்கின..  

 

அருண் தொடர்ந்தான்.. “அப்பதான் நான் திட்டம் போட்டு அஸ்வினியை கடத்தி அவ உயிருக்கு பாதகம் இல்லாம ஒவ்வொரு நிமிஷமும் அவ உயிரை காப்பாத்திக்கிட்டே அவளோட பழைய கதையை அவளுக்கு தெரிய வெச்சேன்.. இப்போ அவ பழைய கதையை தெரிஞ்சுகிட்டா.. ஆனாலும் உயிரோட இருக்கா.. இனிமே நீங்க அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பீங்கன்றதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை..” என்று சொன்ன அருணை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் ராம்..

 

“அதுக்காக தான் அந்த நித்திலாவை அங்க அந்த மலை கோயிலுக்கு கூப்பிட்டு இருந்தீங்களா?” என்று ராம் கேட்க “ஆமா அவளுக்கு நிலவழகன் கிட்ட சொல்லி ஒரு மெசேஜ் அனுப்ப வெச்சேன்.. அவ ஆள் மூலமாவே இந்தியால இப்படி ஒன்னு நடக்குதுன்னு அவளுக்கு தெரியப்படுத்தினேன்.. உடனே அவ இந்தியாக்கு வந்துட்டா.. இங்க கொடைக்கானலுக்கு வந்தப்பறம் அவளோட நான் ஃபோன்ல பேசினேன்..” என்றான் அருண்..

 

எவ்வளவு துல்லியமாக எல்லோரையும் புரிந்து வைத்திருக்கிறான் அவன் என்று வியப்பாக இருந்தது ராமுக்கு..

 

“அவளும் கொடைக்கானலுக்கு வந்தா.. அஸ்வினியை இங்க இருக்குற எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போயிட்டு ஒரு ஹோட்டல்ல சாப்பிட போனோம்.. நாங்க சாப்பிட போன அந்த ஹோட்டல்ல நித்திலா அஷ்வினியை மீட் பண்ணப்போ அவ சொன்ன விஷயங்கள் அஷ்வினிக்கு எந்த அதிர்வையும் கொடுக்கல.. அதுல அவ பயங்கரமா டிஸ்ஸப்பாயின்ட் ஆயிட்டா.. எப்படியாவது அஸ்வினி கிட்ட அவ பழைய கதையை சொல்லி அவளை ஃபீல் பண்ணவாவது வைக்கணும்னு நினைச்சவ அஸ்வினி கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்லாததை பார்த்து ரொம்பவே ஏமாந்து போயிட்டா.. அப்பவே நான் ஜெயிச்சிட்டதா எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்தது… அந்த சமயத்தில அவ முகத்தில இருந்த ஏமாற்றத்தை பாக்கணுங்கறது தான் என்னோட குறிக்கோளா இருந்தது.. ஒருத்தர் வாழ்க்கையை கெடுக்கணும்னு அவ நினைச்சது நடக்காம போய் அந்த ஏமாத்தத்தில அவ செத்துப் போயிருந்தா கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன்..” என்றான் கண்களில் கோவம் மின்ன..

 

“அதுக்கப்புறம் அந்த அம்மன் கோவில்ல நம்ப எல்லாரும் ஒண்ணா வர்றதை பார்த்து அவளுக்கு அப்படியே ஆதியில இருந்து அந்தம் வரைக்கும் ஆடி போயிடுச்சு.. அன்னைக்கு என்ன என்ன பண்ணனும்னு அதுக்கு முதல் நாளே நான் பிளான் பண்ணி வச்சிருந்தேன்.. நான் சில அடியாளுங்களை எல்லாம் ஏற்பாடு பண்ணி அங்க நடக்க வேண்டியதை அவங்ககிட்ட ஃபோன்ல சொல்லிட்டிருந்தப்போ வைஷூ நான் பேசுறதை கேட்டுட்டா..” என்றவன் இடவலமாய் தலையாட்டி புருவத்தை உயர்த்தி வைஷூவை பார்த்து ஏளனமாய் சிரித்தவன் “ஆனா இந்த அரை கிறுக்கியை சமாளிக்கிறது ரொம்ப ஈஸியா தான் இருந்தது எனக்கு..” என்றான் புன்னகை முகமாய்..

 

வைஷூவோ உதட்டை சுழித்து அவனை கோவமாக முறைத்தாள்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!