பரீட்சை – 99
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன் உயிரை
துடிக்க வைத்து
கொடுமை
செய்தவரை
உயிரோடு
இத்தனை நாள்
விட்டு வைத்த
பாவத்திற்காய்
என்னை நானே
வெறுக்கிறேனடி
இளங்கிளியே..
உயிரை பிரியும்
வலியது
எப்படி இருக்கும்
என
உணர வைத்து
அவர்களை
கொல்வேனடி
என் உயிரானவளே..
#####################
உயிரானவளே..!!
அருண் மீண்டும் ஏதோ சொல்வதற்கு வாயை திறக்கும் போது சரியாக பழச்சாறு நிறைந்த குவளையை அவனிடம் கொண்டு வந்து நீட்டினாள் வைஷூ..
“சார்.. என்னை என்ன திட்டணுமோ.. என்ன கிண்டல் செய்யணுமோ.. எல்லாம் இந்த ஜூஸ் குடிச்சிட்டு அப்புறம் பண்ணுங்க.. ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு மூச்சு வேற வாங்க ஆரம்பிச்சுருச்சு.. இதை குடிச்சா கொஞ்சம் ஸ்ட்ரென்த் கிடைக்கும்”
அவனும் அதை வாங்கி குடித்தான்.. குடித்துவிட்டு காலி குவளையை அவளிடம் தந்தவன் அவள் கண்கள் சிவந்து இருந்ததை பார்த்து “அழுதியா?” என்று கேட்க “நான் எதுக்கு சார் அழறேன்? அதெல்லாம் ஒன்னும் இல்லை.. கண்ல ஏதோ தூசி விழுந்துடுச்சு.. இந்த மாதிரி எவ்வளவு கேஸ் பார்த்து இருக்கேன் நான் என் ப்ரொஃப்பஷன்ல.. இந்த மாதிரி ஜூஜூபி மேட்டருக்கு எல்லாம் அழறவ இல்ல இந்த வைஷூ..”
அருணுக்காக அப்பட்டமாய் பொய் சொன்னவளை பாவமாய் பார்த்தான் ராம்..
“பாத்தீங்களா..? நான் சொல்லல..” என்று சிரித்த அருணை வியப்பாக பார்த்தான் ராம்.. மற்ற எல்லோரையும் சரியாக அளவிட்டிருந்த அருண் வைஷு விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விட்டான் என்று அவனுக்கு புரியவில்லை..
நிஜமாகவே அவள் விளையாட்டு பெண் என்று நினைக்கிறானா? இல்லை அப்படி சொன்னால் தான் அவள் தன் நினைப்பிலிருந்து மனதை மாற்றிக் கொள்வாள் என்று அதையே திரும்பத் திரும்ப அழுத்தமாய் அவள் மனதில் பதியும் வண்ணம் சொல்லிக் கொண்டு இருக்கிறானா என்று புரியவில்லை ராமிற்கு..
“சரி.. அன்னைக்கு நாங்க எல்லாம் கிளம்பி வந்தப்பறம் என்ன நடந்துச்சு? அதை சொல்லுங்க முதல்ல” ராம் ஆர்வமாய் கேட்க “ம்ம் ம்ம்.. சொல்றேன்.. சொல்றேன்..” என்று தலையாட்டிக் கொண்டே சொன்னவன் மெல்ல அன்று நிகழ்ந்ததை சொல்ல தொடங்கினான்..
அருண் பள்ளத்தாக்கில் விழுந்த பிறகு போலீஸூக்கு விஷயத்தை சொல்லிவிட்டு அவர்கள் வரும்வரை காத்திருந்து நிகழ்ந்ததை அவர்களுக்கு விளக்க விஷ்வாவை அங்கே விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாரும் அங்கே இருந்து சென்றுவிட்டனர்..
அந்த மலை மேல் விஷ்வாவும், நித்திலாவும் காத்திருக்க சரண் மயங்கிய நிலையில் இருந்தான்.. சிறிது நேரத்தில் சரணுக்கு லேசாக மயக்கம் தெளிய தொடங்கவும் அவன் அருகே அமர்ந்த நித்திலா.. “சரண்.. எழுந்திட்டியா? இரு.. நம்ம உடனே ஹாஸ்பிடல்க்கு போயிடலாம்.. உனக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு..” உண்மையான தோழியாய் கரிசனத்தோடு சொன்னாள்..
“விஷ்வா.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்.. இவனை ஹாஸ்பிடல்க்கு கூட்டிகிட்டு போயிடலாம்” பதட்டமாய் சொன்னவளிடம் “என்ன.? ஹாஸ்பிடலா? இப்ப போலீஸ் வந்துருவாங்க.. அவங்களுக்கு யாரு விஷயம் எல்லாம் சொல்றது?”
பதட்டமே இல்லாமல் கேட்டவனை எரித்து விடுவதை போல் பார்த்தாள் நித்திலா..
“ஏய்.. அவனுக்கு ரொம்ப அடிபட்டு நெறைய ரத்தம் போயிருக்கு.. அவனை உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போலன்னா அவன் உயிருக்கே ஆபத்தா ஆயிடலாம்.. ப்ளீஸ்.. ஹெல்ப் பண்ணு..” கெஞ்சி கேட்டுக் கொண்டு இருந்தாள் நித்திலா..
அவன் எதுவும் சொல்வதற்கு முன் அவள் பின்னிருந்து ஒரு குரல் கேட்டது.. “அவன் உயிரை காப்பாத்தறது இருக்கட்டும்.. முதல்ல உன் உயிரை யார் காப்பாத்த போறா?” கேட்டுக்கொண்டே வைஷூவோடு மிடுக்காய் அவர்களை நோக்கி நடந்து வந்தான் அருண்..
தன் கண்களையே நம்பமுடியாமல் “ஹே.. அருண்.. நீயா? நீ அந்த.. அந்த” என்று அதிர்ச்சி நிறைந்த குரலில் அவன் விழுந்த பள்ளத்தாக்கை காட்டியபடி தடுமாறி கேட்டு கொண்டிருந்தவளிடம் “ஆமாம்.. நான் அந்த பள்ளத்தாக்குல விழுந்தேன்..” என்றவன் தலையை இடவலமாக ஆட்டினான்..
“ஹான்.. ஹான்.. ஹான்.. தப்பு.. தப்பு.. தப்பு.. பள்ளத்தாக்குல குதிச்சேன்.. உங்களை எல்லாம் நம்ப வெக்கறதுக்காக.. இப்ப முழுசா திரும்பி வந்துருக்கேன்.. போனமுறை விழுந்தப்போ பயங்கர சேதாரம் இருந்துச்சு எனக்கு.. ஆனா இந்த முறை ஒரு சின்ன கீறல் கூட இல்லை.. என்ன அப்படி பார்க்கற நித்திலா செல்லம்.. ஒன்னுமே புரியலயா? தலை மேல அப்படியே..*ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்..*”
பாடியபடி அவளை சுற்றி வந்தவன் “அப்படின்னு பாட்டு கேக்குதா? இல்லை ஒருவேளை நான் ஆவியோன்னு பயமா இருக்கா? பேய் குணம் இருக்கிறவங்களுக்கு எல்லாம் உயிரோட இருக்கற மனுஷங்களை பார்த்தா கூட அப்படித்தான் தோணுமாம்.. ஆனா நான் பேய் இல்லை.. பயப்படாதே.. நான் மனுஷன் தான்.. இது எல்லாமே ஒரு டிராமா..” அவன் இதழோரம் வளைத்து புன்னகை புரிந்து கொண்டே அலட்சியமாக சொன்னான்..
“அடப்பாவி.. எதுக்குடா இப்படி ஒரு டிராமா? இப்ப என் உயிருக்கு ஏதோ ஆபத்துன்னு சொல்லிட்டு வந்தே.. என்ன..? என்னை கொல்லப் போறியா?” அவனை கூர்ந்து நோக்கியபடி கேட்டாள் நித்திலா..
“இனிமே நான் எதுக்கு உன்னை கொலை பண்ணனும்..? அதுக்கான வேலை எல்லாம் ஏற்கனவே செஞ்சாச்சு.. இப்பவே உன் உயிர் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு தான் இருக்கு..”
அவன் நிதானமாய் சொல்ல நித்திலா படபடப்பாய் “என்னடா சொல்ற?” என்று புரியாமல் கேட்டாள்..
“நான் என்ன சொல்றேன்னா உன் உடம்புல கலந்திருக்கிற விஷம் இவ்வளவு நேரம் உன் பாதி உயிரை ஏற்கனவே எடுத்து இருக்கும்.. உனக்கு இன்னும் இந்த பூமியில் வாழறதுக்கு கொஞ்சம் தான் டைம் இருக்குன்னு சொல்றேன்.. புரியுதா?” அவளை தீவிரமாய் முறைத்துக் கொண்டு சொன்னான்..
“என் உடம்புல விஷமா? என்னடா உளர்ற? நான் எப்ப விஷம் குடிச்சேன்?” அவள் குழப்பத்துடன் கேட்க அவனோ பெரிதாக சிரித்தான்..
“நீ வெஷத்தை குடிக்கலம்மா.. அதை சாப்பிட்ட.. காலைல நீ சாப்ட இல்லை ? ப்ரேக்ஃபாஸ்ட்.. அதில கொஞ்சூண்டு விஷம் கலந்திருந்தது .. அவ்வளவு தான்.. ஒரே ஒரு டீஸ்பூன்தான்..” தன் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து கண்ணை சுருக்கி கொஞ்சமாக என்பது போல் ஜாடை செய்து காட்டியவன் அவள் முகத்தில் மேலும் குழப்பம் கூடுவதை பார்த்து இன்னும் சத்தமாக சிரித்தான்..
“நீ எப்படி வெஷம் கலந்து இருக்க முடியும்? காலையிலிருந்து நீ அந்த பக்கம் கூட வரலையே.. அந்த ஹோட்டல்ல எனக்கு கொடுத்த ப்ரேக்ஃபாஸ்ட்ல விஷம் கலந்திருக்க சான்ஸே இல்ல.. சும்மா என்கிட்ட பொய் சொல்லாதே..” முகத்தில் பல மடங்கு பதற்றத்துடன் அவன் பொய் தான் சொல்லி இருக்க வேண்டும் என்ற ஆசையோடு சொன்னாள் நித்திலா..
“த்சு.. த்சு..த்சு..த்சு..” என்று உச்சு கொட்டியவன்.. “நீ ரொம்ப தப்பா நினைச்சுகிட்டு இருக்கே கண்ணு.. இந்த மாதிரி வேலை எல்லாம் இந்த அருண் என்னிக்கும் யாருக்கும் பண்ண மாட்டேன்.. இதெல்லாம் செஞ்சா என் கை அழுக்கா ஆயிடும் இல்ல.. சே..சே.. இதை செஞ்ச ஆளு யாருன்னு கேட்டா அப்படியே ஷாக்ல இன்னும் கொஞ்ச நேரத்துல போக வேண்டிய உன் உயிரு இப்பவே பட்டுனு போனாலும் போயிடும்.. அதான் அது யாருன்னு சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கறேன்..” அவன் சொன்னதை கேட்டு அவளுக்குள் இன்னும் பதட்டம் கூடியது..
“யாருடா அது? சொல்லு.. யாரு..?” என்று அருணின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்டவளின் கையை தன் இரு விரலால் பிடித்து ஏதோ தீண்ட தகாதவள் தன்னை தீண்டி விட்டாற் போல் அவள் கையை தன் சட்டையிலிருந்து அப்புறப்படுத்தியவன்.. தன் சட்டையில் அவள் பிடித்திருந்த இடத்தை தன் கைக்குட்டை எடுத்து துடைத்தவன் “நீ எல்லாம் என் சட்டையை கூட தொடக்கூடாது.. உன்னை மாதிரி ஒருத்தி கை பட்டா உன் மனசுல இருக்கற அழுக்கெல்லாம் என் மேலயும் ஒட்டிக்கும்.. இன்னொரு முறை என் மேல கையை வெச்ச.. கையை வெட்டிடுவேன்.. ஜாக்கிரதை” அவளை தீவிரமாய் முறைத்தபடி எச்சரித்தான்..
“உனக்கு விஷம் குடுத்தது யாருன்னு தானே தெரியணும்.. சொல்றேன்.. மனசை ஸ்ட்ராங்கா வெச்சுக்கோ.. இவ்வளவு நேரம் ஹாஸ்பிட்டலுக்கு போகலைன்னா அவன் உயிருக்கே ஆபத்தாயிடும்னு ஒருத்தனை பத்தி உருகி உருகி கவலை பட்டுக்கிட்டு இருந்தியே.. அவன் தான்.. அவனே தான்.. இந்த சரண் தான் உன் ப்ரேக்ஃபாஸ்ட்ல விஷம் கலந்தான்..” சரணை பார்த்தபடி அருண் சொன்னதை நம்பவே முடியவில்லை நித்திலாவால்.. அப்படியே இடிந்து போய் அங்கிருந்த ஒரு பாறையில் பொத்தென அமர்ந்தாள்..
ஏதோ நினைத்தவள் அருண் ஏதோ விளையாடுகிறானோ என நம்பாமல் அவனை பார்த்தாள்.. “என்ன? நான் சொல்றதில உனக்கு நம்பிக்கை இல்லையா? அவனையே கேளு.. அவனே சொல்லுவான்..” அருண் ஏளன குரலில் சொல்ல நித்திலா கேள்வியாய் சரணை திரும்பி பார்த்தாள்.. அப்போதுதான் தன் மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்து அமர்ந்தவன் அவர்கள் பேசியதை கேட்டு தலை குனிந்து அமர்ந்திருந்தான்..
நேராக சென்று அவன் சட்டையை பிடித்தவள் ஆக்ரோஷமாக அவனிடம் கத்தி கத்தி கேட்டாள்.. “நீ என் சாப்பாட்டுல விஷம் கலந்தியா? சொல்லுடா.. விஷம் கலந்தியா?” அவள் சத்தமாக கேட்க தலை குனிந்தபடியே “ஆமா நித்திலா.. ஐ அம் சாரி.. எனக்கு வேற வழி தெரியல.. நான் தான் உன் சாப்பாட்டுல விஷம் கலந்தேன்..”
அவன் சொன்னதை நம்பமுடியாமல் அப்படியே அவன் எதிரே சிலையாக அமர்ந்தாள்.. “ஏன்டா.. ஏன்.. எதுக்குடா இப்படி செஞ்ச? நான் உனக்கு என்னடா தப்பு பண்ணேன்..” கண்கள் கலங்க “ஏன்டா இப்படி செஞ்ச? ஏன் இப்படி செஞ்ச?” கத்தி அழுதபடியே மாறி மாறி அவனை கன்னத்திலும் மார்பிலும் அடித்து தீர்த்தாள் நித்திலா..
“அடப்பாவி.. இப்படி துரோகம் செஞ்சுட்டியே எனக்கு.. எதுக்குடா..? ஏன்டா.. இப்படி செஞ்ச..? நீ கேட்டது எல்லாம் செஞ்சு கொடுத்தேனே நான்.. நீ தேஜூவை விரும்புறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக தானடா.. உனக்காக தானடா.. இது எல்லாமே பண்ணேன்.. இப்படி என்னை ஏமாத்திட்டியே..” என்று அவனை மீண்டும் அடிக்க கையை ஓங்க அவள் கையை இறுக்கமாய் பிடித்தான் அவன்..
“என்னடி செஞ்ச எனக்காக நீ..? அருணையும் தேஜூவையும் கொல்றதுக்கு நீ அவங்களை பழி வாங்கறதுக்கு நீ என்னை யூஸ் பண்ணிக்கிட்ட.. ஆமாம்.. தேஜூவை அடையறதுக்காக எனக்கு ஐடியா கொடுத்த.. ஆனா நான் நெனச்சபடி எதுவுமே நடக்கலயே.. அதுல மாட்டிக்கிட்டு நான் ஜெயிலுக்கு போனப்புறம் ஒரு நாளாவது நீ என்னை வந்து பார்த்தியா? நான் என்ன ஆனேன்? ஜெயிலுக்குள்ள என்ன கஷ்டப்பட்டேன்? ஏதாவது உனக்கு தெரியுமா? உங்க அப்பா பிசினஸ்ஸை பாத்துக்கிட்டு உன் பாட்டுக்கு நீ ஜாலியா போயிட்டே.. ஆனா இப்போ அருண் வந்துதான் என்னை வெளில எடுத்தான்.. அது மட்டும் இல்லாம அந்த கேஸ்ல இருந்து என்னை முழுசா வெளில கொண்டு வரேன்னு சொல்லி இருக்கான்.. அதோட எனக்கு அஞ்சு கோடி கொடுக்கறேன்னு சொன்னான்.. ஜெயில்லருந்து வெளில வந்தா எனக்கு எப்படியும் யாரும் எந்த வேலையும் கொடுக்க மாட்டாங்க.. அவன் கொடுக்குற அஞ்சு கோடியை வெச்சு பிசினஸ் பண்ணலாமேன்னு நான் நினைச்சேன்.. ஆனா இதுக்கெல்லாம் அவன் என்கிட்ட இருந்து எதிர்பார்த்தது உன் சாப்பாட்டில விஷம் கலக்கணும்கறது மட்டும் தான்.. அதான் வேற வழி இல்லாம என் உயிரை காப்பாத்திக்கணுங்கறதுக்காக உன் சாப்பாட்டில விஷத்தை கலந்துட்டேன்.. ஐ அம் சாரி நித்திலா..” என்றவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் நித்திலா..
தொடரும்..