ஆதித்யா கோபத்தில் பேசிய வார்த்தைகளை கேட்ட அல்லி நேராக ஆதித்யா அருகில் சென்றவள்..
“ஆதி.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்.. எனக்கும் அந்த மாலன் அங்கிள் தான் இதை செஞ்சு இருக்கார்னு புரியுது.. ஆனா அதுக்காக நீங்க எங்க அப்பாவை மரியாதை இல்லாம பேசறதை என்னால பாத்துட்டு இருக்க முடியாது.. ஆமா.. கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களே.. ஒரு வார்த்தை எங்க அப்பா கிட்ட கேட்டுட்டு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணவே இல்லையா? எரிஞ்சது அவரோட கடை.. அவரை ஒரு வார்த்தை கூட கேட்காம உங்க இஷ்டத்துக்கு நீங்க பாட்டுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்து இருக்கீங்க.. அதை கேட்டா கோவம் வேற வருதா உங்களுக்கு?”
அவள் அவனை தீயாய் முறைத்தப்படி கேட்க அவனைக் கேள்வி கேட்டதில் அவனுடைய இறுமாப்பு சீண்டப்பட அவனும் அவளை எரிப்பது போல் முறைத்திருக்க இருவருக்கு இடையிலும் எரிபொருள் இல்லாமலேயே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது..
செழியனும் தாமரையும் சைலேந்திர வர்மனும் அவர்களுக்குள் ஏற்பட்டு இருந்த பதற்ற நிலையை பார்த்து கலக்கம் கொண்டனர்..
இப்படியே போனால் இந்த கல்யாணம் நடப்பதே பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்று உணர்ந்த சைலேந்திரர் அவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்தார்..
“அம்மாடி… கொஞ்சம் இருடா.. நான் அவன் கிட்ட பேசுறேன்..” என்று அல்லியை பார்த்து சொன்னவர் ஆதித்யாவை பார்த்து
“டேய்.. அந்த பொண்ணு கேக்கறதுல என்னடா தப்பு? நீ அவங்களுக்கு நல்லது தான் பண்ற.. இல்லன்னு சொல்லல.. நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறங்கறதனால அவங்க கடை மேல அக்கறை எடுத்து இவ்வளவு தூரம் அங்க என்ன நடந்ததுன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு உண்மையை கண்டுபிடிச்ச வரைக்கும் ஓகே.. ஆனா அந்த மனுஷனை பற்றி கம்ப்ளைன்ட் கொடுக்கணுமா வேண்டாமான்னு டிசைட் பண்ண வேண்டியது அல்லியோட அப்பா.. அது அவரோட இஷ்டம்.. அவரை கேட்காம உன் இஷ்டத்துக்கு நீ பாட்டுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்து இருக்கே.. ரெண்டு பேரும் ஒரே இடத்தில வியாபாரம் பண்றவங்கடா.. நாளை பின்ன ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எப்படி ஃபேஸ் பண்ணிப்பாங்க.. இன்னைக்கு ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டாரு.. அதுக்காக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து அவரை ஜெயில்ல வைப்பியா?”
சைலேந்திரர் ஆதித்யாவை ஒரு கண்டிப்பான பார்வை பார்த்து கேட்க “பின்ன.. அவரை கூட்டிட்டு வந்து அவர் செஞ்ச வீரதீர செயலுக்கு விருது குடுக்கணுமா? என்னப்பா பேசறீங்க? ரெண்டு பேரும் ஒரே இடத்துல வியாபாரம் நடத்துறவங்களாச்சேன்னு அவர் யோசிச்சாரா?”
அவன் கண்களில் கோபம் மின்ன கேட்க “டேய்.. நீ சொல்றது சரிதான்டா.. ஆனா அவர தண்டிச்சு தான் ஆகணும்னு அவசியம் இல்லையே.. அவங்களை மன்னிச்சும் விடலாம் இல்ல? ஒருவேளை செழியன் அப்படித்தான் பண்ணி இருப்பாரோ என்னவோ?”
அவர் சொன்ன அடுத்த நிமிடம் அவரையும் செழியனையும் ஆழமாய் பார்த்தவன் “இந்த மாதிரி தப்பெல்லாம் மன்னிச்சு மன்னிச்சு தான் இவங்களுக்கு எல்லாம் மேலே மேலே தப்பு செய்ய தைரியம் வருது.. தப்பு செஞ்சவங்களை மன்னிக்கிறது தான் இருக்கறதிலேயே பெரிய தப்பு.. அப்படி மன்னிக்கறவங்களுக்கு தான் முதல்ல மன்னிக்காம தண்டனை கொடுக்கணும்..”
அவனுக்கு ஏனோ அந்நேரம் அவனுடைய தாயின் நினைவு வந்தது.. கண்களில் வெறியோடு சொன்னவனை பார்த்து கொஞ்சம் பயந்து தான் போனார்கள் அங்கு இருந்த நால்வரும்..
“ஆதி.. அது உன்னோட ஸ்டாண்டுடா.. எப்படி பார்த்தாலும் இதுல டெசிஷன் எடுக்க வேண்டியது நீ இல்ல.. செழியனை கோவமா பேசினதுக்கு மொதல்ல அவர்கிட்ட மன்னிப்பு கேளு..”
சைலேந்திரர் சொல்ல அதைக் கேட்டவன் “நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? நான் என்ன தப்பு பண்ணேன்? நான் பேசுனதெல்லாம் நியாயம் தான்..” என்றவன் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டான்..
“நீ பேசுனது செஞ்சது எல்லாமே நியாயம்னாலும் பெரியவங்க கிட்ட அதை சொல்றதுக்குன்னு ஒரு முறை இருக்கு.. இப்படியா எடுத்தெறிஞ்சு பேசுவ? நீ இப்ப மன்னிப்பு கேட்க போறியா.. இல்லையா?”
அவர் மறுபடியும் கேட்க அவனோ முகத்தை திருப்பிக்கொண்டு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது போல் இறுகிய சிலையாய் நின்று இருந்தான்..
அல்லியோ அவனை முறைத்தப்படி “இவனாவது மன்னிப்பு கேட்கறதாவது? ராட்சசன்..” அவள் முணுமுணுக்க அதுவும் அவன் காதில் தெளிவாய் விழுந்து தொலைத்தது..
அவளையும் முறைத்தவன் அப்படியே அமைதியாய் நின்றிருக்க சைலேந்திர வர்மன் “சரி.. நீ மன்னிப்பு கேட்க மாட்டேன்னா அப்போ நான் தான் கேக்கணும்.. நானே அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன்”
அவர் செழியன் பக்கம் போக செழியனோ “ஐயோ சம்பந்தி.. அதெல்லாம் வேண்டாம்.. சொன்னா கேளுங்க..”
அவர் சொல்ல சொல்ல அதை கண்டு கொள்ளாமல் அவரிடம் மன்னிப்பு கேட்க போனவரின் கையைப் பிடித்து நிறுத்தியவன் “அப்பா.. எதுக்குப்பா மன்னிப்பு கேட்கணும்? நான் என்னப்பா தப்பு பண்ணேன்? தப்பு செஞ்சவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தேன்.. நானும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. நீங்களும் கேக்க கூடாது..”
அவருக்கு ஏதோ கட்டளை இடுவது போல் சொன்னான் ஆதி..
“இங்க பாரு.. முடிஞ்சா நீ மன்னிப்பு கேளு.. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல.. உன்னால கேட்க முடியாதுன்னா உன்னை மாதிரி ஒரு கோவக்கார பிள்ளையை பெத்ததுக்காக நானே அவர்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. நீயே டிசைட் பண்ணிக்கோ.. மன்னிப்பு நீ கேக்குறியா? இல்ல நான் கேட்கட்டுமா?”
அவர் அப்படி கேட்டதில் அல்லியை வெறுப்பான பார்வை பார்த்தவன் செழியன் அருகில் சென்று “ஐ அம் சாரி அங்கிள்.. நான் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்.. ஆனா உங்களுக்கு என்னோட அட்வைஸ்.. அந்த ஆளு ஜெயில்ல இருக்க வேண்டியவன்.. அவனுக்கு தண்டனை கொடுக்கிறதை நீங்க நிறுத்திடாதீங்க.. அவன் தண்டனை அனுபவிச்சா தான் அடுத்த முறை இந்த மாதிரி வேற யாருக்கும் தப்பு பண்ண மாட்டான்.. உங்களை மாதிரி இன்னொரு அப்பாவி பாதிக்கப்படக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா இதை இப்படியே விட்டுடுங்க..”
செழியனுக்கோ அவன் அப்படி சட்டென மன்னிப்பு கேட்டது மனதில் நிறைவை கொடுத்தது.. என்னதான் அவன் கோபக்காரனாக இருந்தாலும் தன் தந்தைக்காக யாரிடமும் பணிந்து போக தயாராக இருந்தான்.. அந்த பாசம் அவனை நிச்சயம் நல்வழிப்படுத்தும் என்று அவர் மனதிற்குள் எண்ணி தன் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றிய பயத்தை கைவிட்டார்..
அவரிடம் மன்னிப்பு கேட்டவன் அல்லியை தீவிரமாய் முறைத்தபடி “அடி சண்டி ராணி.. திரும்பவும் உங்க அப்பா கிட்ட என்னை மன்னிப்பு கேட்க வச்சு தோக்கடிச்சிட்ட இல்ல..? இதையும் கணக்குல வச்சுக்கறேன்டி” என்று மனதில் கருவி கொண்டான்..
செழியனோ “இல்ல மாப்ள.. பரவால்ல.. நீங்க சாரி கேட்கணும்னு நான் நினைக்கல.. ஆனா கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை.. எங்க கிட்ட எல்லாம் கோபப்பட்டா உங்க நல்ல குணம் தெரிஞ்சதனால நாங்க எல்லாம் உங்களை தப்பா நினைக்க மாட்டோம்.. ஆனா வெளியே இருக்கிறவங்க அப்படி இருக்க மாட்டாங்க மாப்பிள்ளை… உங்க கோபத்தினால நாளைக்கு உங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்ததுனா உங்களை கல்யாணம் பண்ணிக்கிற என் பொண்ணுக்கு தான் கஷ்டம்..”
அவர் ஏதோ ஆயிரம் காலத்துப் பயிராய் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாய் எண்ணி ஆதித்யாவுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்..
அவன் அவர் சொன்னதற்கு எதுவும் பதில் சொல்லாமல்.. “அப்புறம் இது உங்க கடையோட இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்றதுக்கான ஃபார்ம்.. இதுல உங்க சைன் வேணும்.. இன்னும் பத்து நாள்ல உங்களுக்கு உங்க கடையோட வேல்யூல 50% கிடைச்சுரும்.. அதுக்கப்புறம் மிச்சத்தை அந்த மாலன் கிட்ட நஷ்ட ஈடா வாங்கிக்கலாம்.. மிச்சம் பணம் மட்டும் இல்ல.. அந்த மாலன் எக்ஸ்ட்ரா பணமே கொடுக்க வேண்டி இருக்கும்.. சரி.. நீங்க சைன் பண்ணி குடுங்க” என்று அவரிடம் ஒரு பேனாவையும் கொடுத்தான்..
அவரோ அவன் செயல்படும் வேகத்தை எண்ணி அப்படியே அரண்டு போய் நின்று இருந்தார்.. “ஹலோ அங்கிள்.. இந்தாங்க சைன் பண்ணுங்க..”
அவன் மறுபடியும் அழைத்து சொல்ல அவனை பார்த்து புன்னகைத்தவர் அவன் கையில் இருந்த அந்த பேனாவை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்..
“நீங்க எனக்கு மாப்பிள்ளையா வரிங்களே தவிர ஒரு புள்ளையா செய்ய வேண்டியது எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செய்ய ஆரம்பிச்சிட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ் மாப்ள.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எனக்கு புள்ள இல்லன்னு வருத்தமாகவே இல்லை.. ஆனா உங்க கிட்ட ஒரே ஒரு ரிக்வெஸ்ட் இருக்கு..”
அவர் சொல்ல அவன் கேள்வியாய் அவரை பார்க்க “என்னை அங்கிள்னு கூப்பிடாம மாமானு கூப்பிடுறீங்களா? ப்ளீஸ்..”
அவர் கேட்க அவனால் முடியாது என்று சொல்லவே முடியவில்லை..
“ஓகே மாமா.. நான் எல்லா ப்ரொசீஜரையும் முடிச்சிட்டு அப்புறம் என்ன நடக்குதுன்னு ஃபாலோ பண்ணிக்கிறேன்.. நீங்க கவலை இல்லாம கல்யாண வேலைய பாருங்க..” சொன்னவன் வேகமாய் அந்த அறையில் இருந்து வெளியே வந்து விட்டான்..
சைலேந்திரர் செழியனிடம் “அப்புறம் சம்பந்தி.. இன்னொரு விஷயம்.. கல்யாணத்துக்கு ரொம்ப நாள் கடத்த வேண்டாம்.. சீக்கிரமே வெச்சிடலாம்னு நானும் என் பிள்ளையும் பிரியப்படறோம்.. அதனால ஐயர் கிட்ட கேட்டோம்.. இந்த வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குன்னு சொன்னாரு.. அன்னிக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆஃபீஸ் போய் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டு கோவிலுக்கு போய் கல்யாணம் முடிச்சுட்டு வந்துடலாம்” என்றார் அவர்..
“சரிங்க… ரொம்ப சந்தோஷம்.. நல்லபடியா எல்லாம் நடக்கட்டும்..” என்று கைகொடுத்த செழியன் வாசல் வரை வந்து அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு உள்ளே வந்தார்…
“அம்மா அல்லி.. மாப்பிள ரொம்ப அழகாவும் இருக்காரு.. நல்லவராவும் இருக்காரு.. என்ன..? கொஞ்சம் கோபக்காரரா இருக்காரு.. ஆனா கோபம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும்ன்னு சொல்லுவாங்க.. இவர் விஷயத்துல அது ரொம்ப சரியா இருக்கு.. உனக்கு ஏத்த ஜோடியா இருக்காரு.. என்ன தாமரை..? நான் சொல்றது சரிதானே?”
அவர் கேட்கவும் தாமரையும் சந்தோஷமாக “ஆமாங்க.. நானும் அதைத்தான் சொல்லலாம்னு நினைச்சேன்” என்றாள்..
“அல்லி மகாராணி மாதிரி இருக்க போறா.. எவ்ளோ பெரிய வீட்டிலிருந்து சம்பந்தம் வந்து இருக்கு.. பாரு.. மாப்பிள்ளைய விட அவங்க அப்பா எவ்வளவு தன்மையா பேசுறாரு.. நிச்சயமா அந்த வீட்ல என் பொண்ணு சந்தோஷமா இருப்பாங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை..” நம்பிக்கையோடு சொன்னார் அவர்..
வெளிப்பார்வைக்கு எல்லாமே சந்தோஷமாக நிகழ்வது போல் இருந்தாலும் உள்ளுக்குள் இதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று அல்லிக்கு மட்டும்தானே தெரியும்.. தன் அறைக்கு சென்றவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க தன் வாழ்க்கையை நினைத்து அப்படியே அழுது கொண்டே உறங்கிப் போனாள்..
அதன் பிறகு அந்த வெள்ளிக்கிழமையும் வந்தது..
ஆதித்யா பட்டு வேட்டி பட்டு சட்டையில் மாப்பிள்ளையாய் பதிவாளர் அலுவலகம் வந்திருக்க அல்லிமலரோ மஞ்சள் நிற பட்டில் தங்கமாய் ஜொலித்தாள்…
வந்ததிலிருந்து ஆதித்யாவால் அவளிடமிருந்து தன் கண்களை பிரித்து எடுக்க முடியவில்லை..
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென சத்ரேஷ் “போதும்டா பார்த்தது.. கண்ணு வெளில வந்து விழுந்துடும் போல இருக்கு..” என்று சொல்வதைக் கேட்டு “அதெல்லாம் ஒண்ணும் இல்லடா.. இவ பெரிய ரதி.. இவளை பார்த்து அப்படியே மயங்கி போயிட்டாங்க.. போடா..” என்றான் ஆதி..
“டேய்.. நீ பொண்ணுங்களை பார்க்கவே மாட்டே.. அப்படியே பார்த்தாலும் எவ்வளவு நேரம் பார்ப்பே.. எவ்வளவு கோவமா வெறுப்போட பார்ப்ப.. இதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஆனால் இந்த பொண்ணை அவ வந்ததிலிருந்து நீ 15 நிமிஷமா கண்ணெடுக்காம ரசனையோட பார்த்துகிட்டு இருக்கே.. ஆனா என்கிட்ட பேசும் போது பாரு.. என்னவோ அவ மேல இன்டெரெஸ்ட்டே இல்லைங்கிற மாதிரி பேச வேண்டியது… உன்னை விட உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்டா… என்கிட்டயேவா?” என்றான் அவன்..
அவனோ அப்போதும் அவனுக்கு பதில் சொல்லாமல் தொண்டையை செருமியபடி வேறு புறம் திரும்பிக்கொள்ள “ம்க்கும்.. அவ்வளவு ஈஸியா ஒத்துக்கமாட்டானே..” முணுமுணுத்தான் சத்ரேஷ்..
அதன் பிறகு இருவரையும் சார்பதிவாளர் கூப்பிட அங்கே வந்து நின்றவர்கள் அவர் காட்டிய இடத்தில் கையெழுத்து போட அதன் பிறகு சாட்சி கையெழுத்தை அல்லிக்கு அவளுடைய அப்பாவும் ஆதித்யாவுக்கு அவனுடைய அப்பாவும் போட்டார்கள்..
அதன் பிறகு அங்கிருந்து கோவிலுக்கு சென்றவர்கள் சுவாமி சன்னதியின் முன்னால் ஹோமம் வளர்க்கப்பட்டிருக்க இருவரும் அமர.. அவர்களுக்கென கொடுத்த மாலையை மாற்றிக் கொண்டனர்..
மாலை போட்ட பிறகு இன்னும் அழகாய் தெரிந்தவளைப் பார்த்து ஆதித்யா அப்படியே மயங்கி போனான்.. அதன் பிறகு அவனை செய்ய சொன்னதை ஒரு எந்திரன் போல தான் செய்தான் அவன்..
அவளினின்று கண்களை அகற்றாமல் அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டி முடித்தவன் அவள் நெற்றியில் பொட்டை வைக்க சொல்லவும் அவர்கள் கொடுத்த குங்குமச்சிமிழை வாங்கி அதனின்றும் குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்து விட்டான்..
அல்லிக்கு இந்த திருமணம் இருமனம் கலந்து வாழ்வில் ஒருமிக்க போகும் திருமணம் இல்லை என்று தெரிந்தாலும் இரு குடும்பங்களுக்கும் முன்னே அது முறையாக நடந்தது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியையே அளித்தது..
எல்லோரும் அக்ஷதை தூவ அவர்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது..