மற்ற நேரங்களில் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் வலம் வரும் ஆதித்யா இப்போது ஒரு சிறிய சிறுவனாய் மனதளவில் மாறிப் போய் இருப்பதை பார்த்து அல்லியின் மனதிற்குள் ஏதோ செய்தது..
தன் அம்மாவிற்காக எவ்வளவு ஏங்கிப் போயிருக்கிறான்.. நிறைய அவமானங்கள் பட்டிருக்கிறான்.. அதன் விளைவுதான் அவன் இப்படி இரவுகளில் பிதற்றுவது…
நினைத்துக் பார்த்தவளுக்கு அவன் மீது இரக்கமே பிறந்தது.. அவனுடைய உண்மையான முகம் இதுதான் என்றும்.. பகலில் அவன் போடுவது அத்தனையும் வேஷம் என்றும்.. புரிந்து கொண்டாள்..
அவன் பெண்களிடம் பேசாதது கூட பேசி பழகினால் எங்கு தன் அம்மா தன்னை விட்டு பிரிந்ததால் தனக்கு ஏற்பட்ட துன்பம் போல இன்னொரு துன்பம் ஏற்படுமோ என்ற அச்சத்தினால் தான் பேசாமல் இருக்கிறான் என்றும் அவளுக்கு இப்போது புரிந்தது..
அவன் ஒரு வளர்ந்த குழந்தை.. அம்மாவின் அன்பிற்காக ஏங்கும் குழந்தை.. அந்த குழந்தைக்கு அன்பை கொடுத்து விட்டால் அவன் மனம் கொண்ட அத்தனை துன்பங்களும் சரியாகிவிடும்.. அவனுடைய அத்தனை பிரச்சனைகளும் அந்த அன்பிலேயே கரைந்து விடும்.. அதன் பிறகு அவன் எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனாக வாழ முடியும் என்று அவளுக்கு புரிந்தது..
அவன் தலையை வருடி கொடுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டு இருந்தவளின் மார்பில் முகத்தை நன்கு புதைத்துக் கொண்டவன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அவளும் அவனுடைய நிம்மதியான உறக்கத்தை கலைக்க மனம் இல்லாமல் அப்படியே உறங்கிப் போனாள்..
காலையில் முதலில் கண்விழித்த ஆதித்யா.. தான் அல்லியின் மேல் தலை வைத்து படுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து சடாரென அவளிடம் இருந்து எழுந்தான்.. அவன் எழுந்த வேகத்தில் அவளும் விழித்துக் கொண்டாள்..
“ஏய்….நீ எப்படீ இங்க வந்து படுத்த?” என்று கேட்டவன் “என்ன தைரியம் இருந்தா என் பக்கத்துல வந்து என்னை கட்டிக்கிட்டு படுப்ப?” என்று அவளை கேட்டுவிட்டு மனதிற்குள்
“அவ தான் கட்டிட்டு படுத்தான்னா எனக்கு எங்க போச்சு அறிவு? நான் என்ன அவளை கட்டிக்கிட்டு அவ மேல படுத்துகிட்டு தூங்கிட்டு இருக்கேன்.. ஆதித்யா உனக்கு என்னடா ஆச்சு?” தன்னைத்தானே நொந்து கொண்டான் அவன்..
“ஆதித்யா.. அது வந்து”
அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும் “வாயை மூடுடி.. உன் பிளான் எல்லாம் எனக்கு தெரியாதுனு நெனச்சியா? ஏதேதோ செஞ்சு என்னை மயக்கி மாத்தப் பார்க்கறே… எங்கடி கத்துக்கிட்ட இந்த மயக்கற வேலையெல்லாம்.. உனக்கு பணம் தானே வேணும்..? அதுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிட்டு இருக்க.. இப்படியெல்லாம் பண்ணினா இந்த சொத்தை விட்டுட்டு போகாம இப்படியே என்னோட நிரந்தரமா தங்கிடலாம்னு பிளான் பண்றியா? ஆதித்யா மூச்சு இருக்கிற வரைக்கும் அது நடக்காது.. ஒரு பொண்ணை அவன் வீட்டை ஆள விடவே மாட்டான் இந்த ஆதி.. இப்படி என்னை மயக்கி என் கூடயே இருந்து இந்த பணத்தை சுருட்டிக்கிட்டு அப்புறம் இன்னும் பணக்காரனா வேற ஒருத்தன் கிடைச்சா அவனோட ஓடிடலாம்னு நீ போட்டிருக்கற மாஸ்டர் பிளான் எல்லாம் என்கிட்ட நடக்காதுடி.. இப்படி எல்லாம் செய்யறதுக்கு நீ வேற ஏதாவது பண்ணலாம் டி”
அவன் சொன்னதை கேட்டு அப்படியே காதை மூடி கொண்ட அல்லி “ஆதித்யா.. அதோட நிறுத்துங்க.. நைட்டு நீங்க ஏதோ கனவு கண்டு உளறினீங்க.. அதனாலதான் நான் வந்து உங்களை எழுப்ப வந்தேன்.. ஆனா எழுப்ப வந்த என்னை இழுத்து கட்டிக்கிட்டு நீங்க தான்..” உண்மையாய் நடந்ததை சொல்லி கொண்டு இருந்தவளை சொல்லி முடிக்கக்கூட விடவில்லை..
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப கையும் களவுமா மாட்டின உடனே நான் கனவு கண்டேன்னு கதை சொல்றியா? என் மேலேயே திருப்பி விடுறியா நீ செஞ்ச தப்பை? நீ என்ன தான் சதி பண்ணாலும் இந்த ஆதித்யா கிட்ட அது நடக்காது.. இதுக்கு தான் உன்னை இந்த ரூம்லயே விடக்கூடாதுன்னு நான் நெனச்சேன்.. எங்கப்பாக்காக தான் உன்னை இந்த ரூம்ல சகிச்சுக்க வேண்டி இருக்கு.. உன்னால அந்த சோஃபால படுக்க முடியும்ன்னா படு.. இல்ல நீ சுகமா கட்டில்ல தான் படுத்துக்கணும்னா நான் போய் சோஃபாவுல படுத்து தொலையறேன்.. ஆனா நிச்சயமா உனக்கு என்னிக்குமே என் பொண்டாட்டிங்கிற உரிமை எல்லாம் தர மாட்டேன்.. இதை மட்டும் மனசுல வச்சுக்கோ..” என்றான் அவன்..
“போதும் நிறுத்துங்க ஆதித்யா..”
அல்லியின் கண்கள் எரிதணலாய் மாறி அவனை பார்வையாலேயே எரித்து கொண்டு இருந்தன..
“என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க..? வாய்க்கு வந்த படி பேசறீங்க.. நான் உருவாக்கின கம்பெனி அங்க இருந்த பொண்ணுங்க இவங்களுக்காக மட்டும் தான் இந்த கல்யாண நாடகத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்கறதை என்னிக்கும் மறந்துடாதீங்க.. நீங்க நெனைக்கற மாதிரி பொண்ணு நான் இல்லை.. இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க.. இனிமே நீங்களே வந்து என் கைய புடிச்சு இழுத்து இந்த கட்டில்ல படுத்துக்கணும்னு சொன்னாலும் நான் படுக்க மாட்டேன்.. இந்த ரூம்ல இருக்கிறதுக்கு கூட எனக்கு பிடிக்கல.. நான் இங்க இருக்கேனா அதுவும் மாமாவுக்காக தான்..” என்றவள்
“எனக்கு அஞ்சு நிமிஷம் குடுங்க.. நான் குளிச்சிட்டு கீழே போயிடுறேன்.. அதுக்குப்புறம் நைட்டு வந்து அந்த சோஃபால படுத்துக்கிறேன்… அந்த சோஃபாவை சுத்தி இருக்கிற ஒரு அடியை தாண்டி இங்க வரமாட்டேன்..” அழுகையோடு சொல்லிவிட்டு மாற்று துணியை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள் அல்லி..
“இவ பெரிய இவ.. நான் கனவு கண்டேனோம்.. வந்து என்னை எழுப்பினாளாம்.. நான் இவளை கட்டிக்கிட்டு படுத்துக்கிட்டேனாம்.. என்னம்மா கதை விடுறா.. இவளோட பிளான் எல்லாம் எனக்கு தெரியாதா? நான் என்ன சின்ன குழந்தையா..? இவளை கட்டிக்கிட்டு அழறத்துக்கு?”
தான் இரவு செய்தது சுத்தமாக ஞாபகம் இல்லாமல் அவளை வசைப்பாடிக் கொண்டிருந்தான் அவன்..
அன்று மாலை திருமண வரவேற்பு ஏற்பாடு செய்திருக்க இருவரும் வழக்கம் போல் மற்றவர்கள் எதிரே சிரித்து நடித்து அந்த வரவேற்பை இனிதாக முடித்தார்கள்..
காலையில் அவளை அதிரடியாக வசை பாடி கொண்டிருந்தவன் மாலையில் அவள் ஒரு அழகு தேவதையாக தன் அருகில் நின்று கொண்டிருக்க அவளிடம் இருந்து பார்வையை விலக்க முடியாமல் அவஸ்தை பட்டு போனான்..
அல்லி தான் சொன்னபடி இரவு வீட்டுக்கு வந்ததும் நேரே வந்து அந்த சோஃபாவில் முடங்கியவள் அதை விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் அசையவில்லை…
அன்றைய நாள் இனிதே முடிந்து அடுத்த நாள் கிழக்கினில் கதிரவன் ஜகத்ஜோதியாக எழுந்தான்..
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ஆதி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க அல்லி மட்டும் எழுந்து குளித்துவிட்டு கீழே வந்தாள்… நேரே சமையலறைக்கு சென்றவள் மாமனாருக்கு காஃபி கலந்து கொடுத்து தானும் காஃபியை குடித்தாள்..
பிறகு வேகமாக காலைச் சிற்றுண்டி சமைத்தவள் அதை எடுத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜை மேல் மணி அண்ணாவை வைக்க சொன்னாள்..
அப்போது கீழே வந்த ஆதி அவளை பார்க்க அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் நேரே உள்ளே சென்று அவனுக்கு காஃபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்..
“ம்ம்ம்ம்.. ஸ்மார்ட்.. தட்ஸ் லைக் மை கேர்ள்.. அப்புறம் அல்லி.. நாளைக்கு குழந்தை விஷயமா நடக்க போற ப்ரொசீஜருக்காக காலையில 8:00 மணிக்கு டாக்டர் கிட்ட செக்கப்புக்கு போறோம்.. ஞாபகம் வச்சுக்கோ..” என்றான் அவன்..
அவள் “சரி” என்று ஆமோதித்து தலையை ஆட்டினாள்..
காலை உணவை உண்டவன் அதன் பிறகு தன் தந்தையிடம் சென்று “டேட்.. நான் கோல்ஃப் க்ளப் வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரேன்.. ரொம்ப நாளாச்சு..” என்று அவன் சொல்லவும் “சரிப்பா போயிட்டு வா” என்றார் அவர்..
அல்லி மணி அண்ணாவிடம் “அண்ணா அவர் லன்ச்க்கு வீட்டுக்கு வருவாரான்னு கொஞ்சம் கேளுங்க..” என்று சொல்ல மணி அண்ணா ஆதித்யாவிடம் சென்று “சார்.. மேடம் நீங்க லஞ்சுக்கு வருவீங்களான்னு கேக்கறாங்க” என்று கேட்கவும் “ஏன் உங்க மேடம்க்கு பேச வராதா? ஊமையா?” எகத்தாளமாக கேட்டான் அவன்..
ஒரு பெருமூச்சை விட்டவள் நேரே அவனிடம் வந்து “ஆதித்யா.. சொல்லுங்க… லஞ்சுக்கு வருவீங்களா நீங்க? வருவீங்கன்னா உங்களுக்கும் சேர்த்து சமைப்பேன். இல்லைன்னா எனக்கும் மாமாக்கும் மட்டும் சமைச்சுப்பேன்.. அதுக்கு தான் கேட்கிறேன்..” என்றாள் அவள்..
“நான் கோல்ஃப் க்ளப் போய்ட்டு மதியம் வந்துருவேன்.. லஞ்சுக்கு இங்க தான் இருப்பேன்..” என்று சொல்லிவிட்டு புன்னகைத்துக் கொண்டே போனான் அவன்..
அதன் பிறகு அல்லி சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென வரவேற்பறையில் ஏதோ விழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தாள்.. அங்கே சைலேந்திரவர்மன் தன் மார்பை பிடித்துக் கொண்டு எதிரே இருந்த மேஜையில் சாய்ந்திருந்தார்..
” மாமா மாமா.. என்ன ஆச்சு மாமா..?” என்று அவள் கேட்கவும் “அம்மா நெஞ்சு பயங்கரமா வலிக்குதுமா.. என்னால முடியல..”
அவர் சொல்லிக் கொண்டே இருக்கும்போதே அவருக்கு பயங்கரமாக வியர்க்க ஆரம்பித்தது..
அவர் வாந்தி எடுக்க மணி அண்ணாவை கூப்பிட்டவள்.. “அண்ணா.. கொஞ்சம் இதை கிளீன் பண்ணிட்டு மாமாவுக்கு சட்டை மாத்தி விடுங்க” என்று சொல்லிவிட்டு “ஒன்னும் இல்ல.. மாமா.. ஒரு நிமிஷம்..”
அவள் முடிப்பதற்குள் மணி அண்ணா அவரை சுத்தம் செய்து சட்டை மாற்றிவிட “அண்ணா.. போயி ஒரு ஆட்டோ கூட்டிட்டு வந்துடுங்க.. ஆதிக்கு ஃபோன் பண்ணி அவர் வர்றதுக்கு லேட் ஆயிடும்…”
அவரை அனுப்பிவிட்டு ஆதித்யாவுக்கு கைபேசி மூலம் அழைத்தாள்.. ஆனால் அவனோ கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தவன் கைப்பேசியை வெளியே வைத்திருந்தான்..
பிறகு அருணை அழைத்தவள் “மாமாக்கு உடம்பு சரியில்லை.. அவருக்கு நெஞ்சுவலியா இருக்கு.. ஆதித்யாவும் இல்லை.. நீங்க கொஞ்சம் வர முடியுமா? நான் மாமாவை **************** ஹாஸ்பிடல்க்குதான் கூட்டிட்டு போறேன்.. ” என்றாள்..
“ஓ மை காட்.. நான் உடனே வரேன்..” என்று சொல்லி அருண் அடுத்த நிமிடம் தன் காரை எடுத்திருந்தான்..
சைலேந்திர வர்மனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கூட்டி சென்றாள் அல்லி.. மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்..
அதற்குள் அருண் மருத்துவமனைக்கு வந்துவிட மறுபடியும் ஆதித்யாவுக்கு அருண் அழைத்தான்..
இந்த முறை ஆதித்யா அழைப்பை ஏற்க விஷயத்தை சொன்னான்.. விஷயத்தைக் கேட்டு அப்படியே அதிர்ந்து உறைந்து நின்றான் ஆதி..
அவனுக்கு கையும் ஓடாமல் காலும் ஓடாமல் எப்போது கிளம்பினோம்.. எப்போது வந்து சேர்ந்தோம்.. என்று தெரியாமல் காரில் ஏறி வேகமாய் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்..
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் வாசலில் அல்லி கண்ணில் தாரைதாரையாய் கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க அமர்ந்து இருந்ததை பார்த்தவன்.. நேரே சென்று “அல்லி.. அப்பாக்கு என்ன ஆச்சு..? என்ன ஆச்சு?” என்று படபடப்புடன் கேட்கவும் அல்லி தன் இருக்கையில் இருந்து எழுந்து அவனை அதில் அமர வைத்தாள்..
“முதல்ல உக்காருங்க.. ஆதித்யா.. அப்பாக்கு நெஞ்சு வலி வந்துருச்சு.. ரொம்ப முடியல அவரால… உங்களை ரீச் பண்ண ட்ரை பண்ணேன்.. ஆனா உங்க ஃபோனை நீங்க எடுக்கல.. அதனால தான் நான் அருணுக்கு கால் பண்ணி அவரை வர சொன்னேன்.. எல்லாம் சரியாயிடும் ஆதித்யா.. அப்பாக்கு சரியாயிடும்.. கவலை படாதீங்க.. டாக்டர் உள்ள ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காரு… ஒன்னும் இருக்காது அப்பாக்கு…”
அவள் சொல்லவும் அவன் கண்களில் அப்படியே கண்ணீர் கொட்டியது..
அன்று இரவு அழுதவன் சுயநினைவோடு இருக்கையில் மற்றவர் எதிரில் குழந்தை போல் கண்ணீர் விட்டு அப்போது தான் பார்க்கிறாள் அவள்.. வித்தியாசமாய் தெரிந்தான் அந்த ஆதி.. அன்புக்கு அடிமையானவனாய் பாசத்துக்கு கட்டுப்பட்டவனாய் உறவுக்கு ஏங்குபவனாய் அருணும் அல்லியும் முதன் முதலில் பார்க்கிறார்கள் அவனை..
உடல் நடுங்க பயத்தில் வியர்க்க தொடங்கியது அவனுக்கு..
கண்களில் அருவியாய் கண்ணீர் பெருகி கொண்டிருக்க தன் தந்தைக்கு ஏதாவது விபரீதமாய் நடந்துவிடுமோ என்று ஒரு வித அச்சமும் பதட்டமும் அவன் முகத்தில் சூழ்ந்திருக்க
அவள் இடையை பிடித்து அவள் வயிற்றில் முகம் புதைத்து சின்ன குழந்தை போல் “எனக்கு என் அப்பா வேணும் அல்லி.. அவர் இல்லைன்னா என்னால உயிரோட இருக்க முடியாது.. ஏற்கனவே வேற யாரும் இல்லை எனக்கு.. அ… அப்பா வேணும் அல்லி.. எ..என் அ.. அப்பா எங்கிட்ட வந்துடுவாரு இல்ல..? அவருக்கு ஒன்னும் ஆகாது இல்ல..?” என்று கதறி அழ ஆரம்பித்தான் ஆதித்ய வர்மன் என்னும் வளர்ந்த குழந்தை..