அருணுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. எப்போதும் ‘ஐ அம் தி ஆதித்யா’ என்று சொல்லிக்கொண்டு ஒருவித திமிருடன் திரியும் கம்பீரமான ஆதியை மட்டுமே அவன் பார்த்திருக்கிறான்.
பெண்களின் பக்கம் தவறியும் திரும்பாதவன்.. அவர்களைப் பார்த்தால் முகத்தை சுளிப்பவன்.. ஒரு பெண்ணை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருப்பதை பார்க்க அவனுக்கு தான் பூமியில் தான் இருக்கிறோமா என்ற நம்ப கூட முடியவில்லை. அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.
அல்லி தன்னை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கும் ஆதித்யா என்னும் குழந்தையின் தலையை கோதி “ஆதி..!! அப்பாக்கு ஒன்னும் ஆகாது. கவலைப்படாதீங்க. நான் கடவுள் கிட்ட ப்ரே பண்ணி இருக்கேன். நிச்சயமா அப்பாக்கு சரியாயிடும். ஒன்னும் இருக்காது.” என்று ஆறுதல் சொன்னாள்.
அவளுடைய அந்த மெல்லிய வருடல் அவனுக்கு சொல்ல முடியாத ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. அன்னையின் அன்பை கண்டிராதவன் அவளுடைய அரவணைப்பில் அதை முழுதுமாய் உணர்ந்து கொண்டான்..
மருத்துவர் வெளியே வரவும் ஆதி அல்லியிடமிருந்து விலகி நேராக அவரிடம் சென்று “டாக்டர்!! எங்க அப்பா எப்படி இருக்காரு? அவருக்கு ஒன்னும் இல்லல்ல?” என்று கேட்டான்.
“ஆதி உங்க அப்பாக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லணும்னு தான் எனக்கும் ஆசை. ஆனா அவருக்கு வந்தது ஹார்ட் அட்டாக். இது ஃபர்ஸ்ட் அட்டாக். இப்போதைக்கு அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிட்டாருன்னு சொல்லலாம்.”
அவர் சொல்லவும் “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்று தழைந்த குரலில் சொன்னான் அவன்.
“உங்க தேங்க்ஸை இதோ நிக்கிறாங்களே உங்க வைஃப்.. அவங்க கிட்ட சொல்லுங்க. அவங்க மட்டும் இன்னைக்கு டைம்க்கு அவரை கூட்டிட்டு வரல்லைன்னா கொஞ்சம் லேட்டாகியிருந்ததுனா கூட ரொம்ப விபரீதமா ஆகி இருந்திருக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு. உங்க அப்பா கொஞ்சம் க்ரிட்டிகலா கூட இருந்திருப்பாரு.” என்றார்.
ஆதி நீர் தளும்பிய கண்களுடன் நன்றி உணர்ச்சியோடு அல்லியை பார்த்தான். மறுபடியும் அந்த மருத்துவர் தொடர்ந்தார்.
“நாங்க அவருக்கு ஏஞ்சியோகிராம் பண்ணி பார்த்தாதான் அவருக்கு ஏதாவது பிளாக் இருக்கா? அவருக்கு ஏதாவது சர்ஜரி பண்ண வேண்டி இருக்குமா? இதெல்லாம் தெரியும். இப்போதைக்கு அவர் அபாய கட்டத்தை தாண்டிட்டாருன்னு சொல்லலாம். ஆனா இன்னொரு அட்டாக் வராம தடுக்கணும்னா உடனே என்ஜியோ பண்ணிடறது பெட்டர்.” என்றார் அவர்.
“டாக்டர் எப்படியாவது அவருக்கு எல்லாத்தையும் சரி பண்ணிடுங்க ப்ளீஸ். அவருக்கு எதுவும் ப்ராப்ளமே இருக்கக்கூடாது. அவர் நல்லபடியா இருக்கணும்.” என்றான் அவன்.
“நாங்களும் அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம் மிஸ்டர்.ஆதித்யா. நாங்க எங்களால என்ன முடியுதோ அதை பண்ணிட்டு தான் இருக்கோம். எனக்கு தெரிஞ்சு ஒன்னும் பிராப்ளம் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். லெட்ஸ் பீ பாசிட்டிவ் என்ட் ஹோப் ஃபார் த பெஸ்ட்…” சொல்லியவர் அங்கே இருந்து போய்விட்டார்.
அல்லியை நோக்கி திரும்பிய ஆதித்யா அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டான்.
இறுக்கமாய் அவளை உணர்ச்சி மிகுதியால் அணைத்தவன் “தேங்க்ஸ்.. அல்லி. தேங்க் யூ சோ மச். நீ எனக்கு உயிரையே கொடுத்திருக்க. நீ எனக்கு என்ன பண்ணி இருக்கேன்னு… என்னால வார்த்தையில சொல்லி புரிய வைக்க முடியாது. ரொம்ப தேங்க்ஸ் அல்லி.”
அவளை அணைத்த படி கண்களில் கண்ணீர் வழிய சொன்னவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திண்டாடினாள் அல்லி.
அவன் தலை கோதி அவள் சொல்ல அவனோ அல்லி மட்டும் இல்லாமல் போயிருந்தால் தன் தந்தைக்கு என்னவாகி இருக்குமோ என்ற நினைப்பிலேயே அவளுக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
பிறகு தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து அவளை விட்டு விலகினான்.
அல்லி அவனிடம் “மாமா உங்களுக்கு மட்டும் உயிர் இல்லை.. எனக்கும் அப்படித்தான். என்னை முதல் முதல்ல எங்க வீட்டுக்கு வந்து அவர் பார்த்த அன்னைக்கே எனக்கு இன்னொரு அப்பா ஆயிட்டாரு அவரு. அவர் உயிருக்கு ஒரு ஆபத்துன்னா நிச்சயமா என்னால சும்மா இருக்க முடியாது. அவருக்கு ஒன்னும் ஆகாது ஆதித்யா. தைரியமா இருங்க.” அவன் கன்னத்தில் கை வைத்து ஆறுதல் சொன்னாள்…
கவலையுடன் மறுபடியும் இருக்கையில் அமர்ந்த ஆதித்யாவின் தலையை கோதி “ஆதித்யா!! மாமாவுக்கு எல்லாம் சரியா போயிடும். இப்பதான் வலி எதுவும் இல்லைன்னு சொல்றாங்க இல்ல? அந்த டெஸ்டெல்லாம் பண்ணிட்டு வரட்டும். இப்பதான் நம்ப எல்லாரும் மாமா கூட இருக்கோம் இல்ல? நம்ம மாமாவை நல்லபடியா பாத்துக்கலாம். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.” என்றாள் அவள்.
அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு கண்களில் அவனையுமறியாமல் கண்ணீர் சுரந்து கொண்டிருக்க படுத்திருந்தான் அவன்.
அவன் பக்கத்தில் அமர்ந்து அல்லி அவனை தன் தோளில் சாய்த்து கொண்டு தலையை கோதியபடி அமர்ந்திருந்தாள்.
விஷயத்தை கேள்விப்பட்டு சத்ரேஷும் மருத்துவமனைக்கு வந்திருந்தான். அவனும் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.
அன்று மதியத்திற்குள் சைலேந்திர வர்மனுக்கு அஞ்சியோகிராம் செய்து முடித்தார்கள். அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதை நீக்க ஏஞ்சியோ ப்ளாஸ்டி என்னும் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார் மருத்துவர்.
அடுத்த நாள் அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக இருந்தது. தன் தந்தைக்கு நடந்த இந்த கலவரத்தில் ஆதித்யா மற்ற எல்லாவற்றையும் மறந்து போனான். அங்கேயே மருத்துவமனையிலேயே தவம் கிடந்தான்.
அல்லியும் அவனை விட்டு நகரவில்லை. அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு அங்கேயே இருந்தாள். அருணும் சத்ரேஷும் அவர்கள் கூடவே இருந்தனர்.
இதற்கு நடுவில் அல்லி விஷயத்தை தன் அன்னை தந்தையிடம் சொல்லிவிட அவர்களும் மருத்துவமனைக்கு வந்து சைலேந்திர வர்மனை பார்த்துவிட்டு போனார்கள். அல்லி வீட்டிற்கு செல்ல ஆதித்யாவும் சத்ரேஷும் இரவு மருத்துவமனையிலேயே இருந்து கொண்டனர்.
அதன் பிறகு மறுநாள் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. சத்ரேஷ் அவன் வேலைக்கு சென்றுவிட அருணை கம்பெனி வேலைகளை செய்ய அனுப்பி வைத்து விட்டான் ஆதித்யா.
அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு சைலேந்திர வர்மனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அல்லி அவரை விட்டு ஒரு நிமிடம் அந்த பக்கம் இந்த பக்கம் நகராமல் அவரை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டாள்.
அவருக்கு கொடுக்க வேண்டிய சாப்பாடு, மருந்துகள் எல்லாவற்றையும் மருத்துவரிடம் கவனமாய் கேட்டுக் கொண்டு வந்தவள் அவர் சொன்னபடியே முழுவதுமாய் பின்பற்றி அவருக்கு கொடுத்து நன்றாக கவனித்துக் கொண்டாள்.
அல்லி தன் தந்தைக்கு அவள் தந்தைக்கு செய்வது போன்று பணிவிடை செய்வதை பார்த்து ஆதித்யாவின் மனம் கொஞ்சம் உருகி தான் போனது.
‘இவ இவ்வளவு நல்லவளா இருக்காளே.. நம்ம இவளுக்கு ரொம்ப கொடுமை தான் செஞ்சிட்டோமோ? என்னை ஒரு முறை பிஸினஸ்ல தோக்கடிச்சுட்டாங்கறதுக்காக நிறைய தண்டனை கொடுத்துட்டோம். இவ என் அப்பாவுக்கு செஞ்சதுக்கு ஈடா நான் எதுவுமே அவளுக்கு திருப்பி செய்ய முடியாது.’ என்று நினைத்தான்.
இரவு பகல் தூக்கம் இல்லாமல் அவள் தன் தந்தையை கவனித்துக் கொள்வதை பார்த்து அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன் மனதில் தோன்றிற்று. அதை அவளிடமே கேட்கலாம் என்று அவளை அழைத்தான்.
“அல்லி!! நீ எனக்கு வாழ்க்கையில இருக்கிறதுலையே பெரிய பரிசா எங்க அப்பாவோட உயிரை காப்பாத்தி கொடுத்து இருக்கே. இதுக்கு பதிலா உனக்கு என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியல. உனக்கு என்ன வேணும்னாலும் கேளு. ஆனா ஒரு விஷயம். தயவு செஞ்சு இந்த குழந்தை பெத்து கொடுக்க முடியாதுன்னோ இல்ல விவாகரத்து பண்ண முடியாதுன்னோ சொல்லிடாத. இந்த ரெண்டை தவிர வேற என்ன வேணும்னாலும் கேளு. ஏன்னா இந்த குழந்தை எங்க அப்பாவோட ஆசை. விவாகரத்து என்னோட கட்டாயம். என்னால ஒரு பொண்ணை சகிச்சுகிட்டு காலம் பூரா வாழ முடியாது. ஏதோ ஒரு ஸ்டேஜ்ல என்னோட அம்மாவை நெனச்சேன்னா நான் அந்த பொண்ணை அந்த நிமிஷமே வெறுத்துடுவேன். அதனால இது ரெண்டு தவிர உனக்கு என்ன வேணும்னு என்கிட்ட கேளு. நான் அதை கொடுக்க தயாரா இருக்கேன்.” என்றான் அவன்..
“நிச்சயமா கேட்கிறேன் ஆதித்யா” என்றாள் அவள் ஒரு சிறு உற்சாகத்தோடு.
‘என்ன கேட்க போகிறாள் ?’ என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.
அவள் முகம் மலர்ந்திருந்ததை பார்த்து இருந்தவனுக்கு அவள் கேட்கப் போகும் விஷயம் அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்கும் என்று புரிந்து கொண்டான். அப்படி அவள் வரமாய் என்ன கேட்க போகிறாள் என்று கேட்க காத்திருந்தான் ஆதித்யா.
அவள் மெல்ல ஒரு சிறு தயக்கத்துடனே வாய் திறந்தாள்.
“ஆதி நீங்க சொன்ன ரெண்டு விஷயத்தையும் நான் கேட்க மாட்டேன். ஆனா அது இல்லாம எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரு விஷயம் வேணும். கொடுப்பீங்களா?” என்று கேட்டாள் அவள்.
“நான்தான் அந்த ரெண்டு விஷயங்களை தவிர நீ என்ன வேணா என்னை கேளுன்னு சொல்லிட்டேனே. அப்பறம் என்ன தயக்கம் உனக்கு? நீ தாராளமா உனக்கு என்ன வேணுமோ கேளு. எதுவாயிருந்தாலும் நான் உடனே செஞ்சிடுவேன்.” என்றான் அவன்.
அவள் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயம் குழந்தையை பெற்ற பிறகு அந்த குழந்தையை தினமும் ஒரு முறையாவது தான் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான்.
அவன் சொன்ன இரண்டு விஷயங்களையும் அவள் கேட்க போவதில்லை என்றாலும் அந்தக் குழந்தையை தினமும் பார்க்கும் சாக்கில் அவள் அந்த வீட்டோடு விவாகரத்துக்கு பிறகும் தொடர்பில் இருப்பாள் என்ற விஷயம் ஆதிக்கு கோவத்தை வரவழைத்து விடுமோ என்று ஒரு சிறு சந்தேகமும் அச்சமும் இருந்தது அவளுக்குள்.
அது மட்டுமின்றி அந்த விவாகரத்து பத்திரத்தில் குழந்தை பெற்ற பிறகு அவளுக்கும் அந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டு இருக்க அவள் அதில் கையெழுத்தும் போட்டு இருக்கிறாள். இப்போது ஒரு வார்த்தை கொடுத்துவிட்டு அதிலிருந்து பின் வாங்குகிறாயா என்று அவன் கேட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
இப்படி அவனிடம் அந்த விஷயத்தை பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளை பார்த்த ஆதித்யாவுக்கு இவ்வளவு யோசனை செய்யும் அளவுக்கு.. இவ்வளவு தயங்கும் அளவுக்கு.. அவள் அப்படி என்னதான் கேட்கப் போகிறாள் என்று ஒரு சிறு பதட்டம் மனதினுள் தோன்றி மறைந்தது.
அந்தப் பதட்டத்துடனேயே அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தான்.