நேர்காணல் அறைக்கு வந்த ஆதித்யா இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்..
அருண் மனதுக்குள் “இன்னையோட என் வாழ்க்கை முடிஞ்சது.. இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு பாஸ் என்னை நிச்சயமா போட்டு தள்ளிடுவாரு..” யோசனையுடனும் ஒரு வித கலக்கத்துடனும் உள்ளே சென்றவனை ஆதித்யா முறைத்து பார்த்தான்..
“பாஸ் அது வந்து..” என்று இழுக்க “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. எனக்கு மனசு சரியில்ல.. இந்த இன்டர்வியூவை நீயே நடத்தி முடி.. நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்..”
அவனிடம் எரிச்சலோடு சொல்லிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டான்..
அவன் கார் சென்று நின்ற இடம் ஒரு நடுத்தர வீட்டின் முன்னால்…
அது அவன் நண்பன் சத்ரேஷின் வீடு…
இவன் பெண்களை வெறுப்பதற்கு சத்ரேஷின் வாழ்க்கையும் ஒரு காரணம்.. சத்ரேஷும் அவனைப் போல பெரிய பணக்காரனாக இருந்தவன் தான்.. அவன் தொழில் ஆரம்பித்த புதிதில் அவன் தொழில் நன்றாக வளர்ந்து பல மடங்கு பரவி பெரும் பணத்தோடு இருந்தவனிடம் பழகி தன் காதலை சொல்லி தன் வசப்படுத்தினாள் மயூரா..
அவளோடு உண்மையான காதல் கொண்ட சத்ரேஷ் அவளை திருமணம் செய்து கொள்ள எண்ணி திருமண ஏற்பாட்டையும் செய்து விட்டான்.. ஆனால் திடீரென அவன் நிறுவனத்தின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.. பெரும் இழப்பு ஏற்பட்டு அவன் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டான்.
இது தெரிந்த மயூரா அவனை பலவாறு கீழ்த்தரமாக பேசிவிட்டு அவனை திருமணம் செய்து கொண்டால் அவளை எப்படி காப்பாற்றுவான் என்று கேட்டு இப்போது அவன் இருக்கும் நிலைமையில் தன்னைப் போன்ற பணக்கார வீட்டு பெண்ணை எல்லாம் ஆசைப்படக்கூடாது என்றும் அவனுக்கு ஏற்றார் போல் ஒரு ஏழை பெண்ணை பார்த்து மணமுடிக்குமாறு சொல்லிவிட்டு அவனை விட பணம் படைத்த இன்னொருவனை தேடி போனாள்..
அதில் நொறுங்கிப் போன சத்ரேஷ் தற்கொலைக்கு முயற்சி செய்ய ஆதித்யா அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து அவனை அந்த மன வேதனையில் இருந்தும் துன்பத்திலிருந்தும் மெல்ல மெல்ல மீட்டு வெளியே கொணர்ந்தான்..
அந்த வேதனையில் இருந்து மீண்டு வந்தவன் இப்போது ஓரளவுக்கு சிறிய வீட்டில் இருந்தாலும் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று நிம்மதியாக இருக்கிறான்.. மீண்டும் சிறிய வியாபாரம் ஒன்றை அவன் தொடங்கி இருக்கிறான்..
ஆதித்யா உதவி செய்கிறேன் என்று சொல்லும்போது கூட வேண்டாம் என்று சொல்லி தன் காலிலேயே நிற்க வேண்டும் என்று முடிவு செய்து அவனிடமே சிறு தொகை கடன் வாங்கி சிறியதாக ஒரு சோப்பு தயாரிக்கும் தொழில் கூடத்தை ஏற்பாடு செய்திருக்கிறான்… அதில் அவனை தவிர இன்னும் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள்…
இதே போல் ஆதித்யா கல்லூரியில் படிக்கும் போது அவனிடம் வந்து காதல் சொல்லிய ஒரு பெண்ணை பலவாறு திட்டி அனுப்ப அந்தப் பெண் அடுத்த நாளே இன்னொரு மாணவனோடு சிரித்து பேசி அவனை அவளுடைய பாய் ஃப்ரெண்ட் ஆக்கி இருந்தாள்..
இப்படி ஆதித்யா பார்த்த ஒவ்வொரு பெண்ணும் பெண்ணின் மேல் அவனுக்கு இருந்த வெறுப்பை அதிகப்படுத்துவது போல் இருந்தார்களே தவிர பெண்ணின் மேல் மதிப்பை ஏற்படுத்தி காதலை பற்றிய அவனுடைய தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு ஏற்றார் போல் அவன் வாழ்வில் இதுவரை ஒரு பெண்ணும் வரவில்லை.. அல்லியை அவன் சந்திக்கும் வரை..
ஆனால் இப்போதுதான் உண்மையான அன்பு கொள்ளும் ஒரு பெண்ணை அவன் சந்தித்து இருக்கிறான்… முதன் முதலில் ஒரு பெண்ணை தீண்டி இருக்கிறான்.. முதன் முதலில் ஒரு பெண்ணை அந்த பெண்ணின் கண்ணுக்குள் கண் வைத்து பார்த்திருக்கிறான்.. அது வெறும் ஐந்து நிமிடங்களுக்காய் இருந்தாலும் அவனுக்குள் அந்த வித்தியாசமான தீண்டல் ஏதேதோ உணர்வுகளை கிளப்பி விட்டிருந்தது… இதனால் தான் எந்த வேலையும் செய்ய ஓடாமல் அலுவலகத்தில் இருப்பு கொள்ளாமல் தன் நண்பனை சந்திக்க வந்திருந்தான்..
தனக்கு குழப்பம் நேரும் போதெல்லாம் சத்ரேஷ் அந்த குழப்பத்தை தெளிவித்து அவனுக்கு நல்ல தீர்வும் சொல்லி மீட்க வல்லவன்.. எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த வீட்டுக்குள் சென்றவன் சத்ரேஷ் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்ததை பார்த்தான்..
“கம்பெனிக்கு கிளம்பிட்டியாடா?” என்றபடி உள்ளே சென்றவனை “ஹேய் ஆதி.. என்னடா இந்த டைம்ல கம்பெனியில இல்லாம நீ இங்க வந்து இருக்க? ஏதாவது ப்ராப்ளமா?” சத்ரேஷ் முகத்தில் வியப்போடு கேடடான்..
சத்ரேஷூம் ஆறடி உயரத்தில் ஆணழகனாய் தான் இருந்தான்.. ஆனால் அவன் முகத்தில் எப்போதும் ஒரு அமைதி குடி கொண்டு இருந்தது.. அவன் வாழ்க்கையில் பலவற்றை இழந்து அதனால் ஏற்பட்ட முதிர்வு அவனுக்கு கொடுத்து இருந்த அமைதி அது..
“உன்கிட்ட ஒரு 15 மினிட்ஸ் பேசணும் டா.. இப்போ டைம் இருக்கா உனக்கு? இல்லன்னா ஈவினிங் பேசிக்கலாம்.. ஒன்னும் பிராப்ளம் இல்ல..” ஏற்கனவே இறுக்கமாக இருந்த முகத்தில் இன்னும் இறுக்கத்தை கூட்டி சொன்னான் ஆதித்யா..
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா.. நான் எப்படியும் இன்னிக்கி கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு லேட்டா வர்றதா சொல்லி இருந்தேன்..“
அவன் நெற்றியில் சட்டென தன் புறங்கையை வைத்து சோதித்தான் ஆதி.. “உடம்பு சரியில்லையா ? என்னடா உடம்புக்கு?”
அவன் நண்பன் மேல் இருந்த அக்கறையில் கேட்க “உடம்பு சரியில்லைன்னு சொல்றதை விட மனசு சரி இல்லன்னு தான் சொல்லணும்.. திடீர்னு மயூரா ஞாபகம் வந்துருச்சு… என்ன இருந்தாலும் நான் அவளை உண்மையா காதலிச்சேன்டா.. சில சமயங்கள்ல அவளோட நான் ஸ்பென்ட் பண்ணின அழகான நேரங்களை நெனைச்சு பார்க்கிறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குடா..”
அவன் பேசியதை கேட்டு கொண்டு இருந்தவனுக்கோ அடுத்த நொடி உடல் முழுதும் இறுக்கம் சூழ்ந்து விறைத்து போனது.. அதுவரை இவனிடம் பேசினால் தன் மனம் சமாதானம் ஆகிவிடும் என்று எண்ணி வந்திருந்த ஆதித்யாவுக்கு மயூரா பேரை கேட்டதும் இன்னும் கோவமும் வெறியும் தலைக்கேறியது..
“அதானே.. அத்த சொல்லு.. இவளுக எல்லாரும் திமிரு புடிச்சவளுங்க… ஆம்பளைங்களை நிம்மதியா வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு நம்ம வாழ்க்கைக்கு உள்ள வந்து நம்மளை மொத்தமா அழிக்கறதுக்குன்னே பொறந்தவளுக.. ப்ளடி பி**ஸ்..!! அவளுக வந்து மாயாஜால வித்தை எல்லாம் காட்டி நம்மளை மயக்கி மொத்தமா கவுத்துட்டு எவன் கூடவோ சந்தோஷமா போயிடுவாளுங்க.. நம்ம தான் அவளுக நெனைப்புல நம்ம வாழ்க்கையை அழிச்சுக்கிட்டு பைத்தியக்காரனுங்க மாதிரி திரியுறோம்.. அவளோட நெனைப்பு வந்துருச்சாம்.. இவரு அப்படியே சோக கடல்ல முழுகிட்டாரு தேவதாஸ் மாதிரி..”
சத்ரேஷை முறைத்த படி தலையில் அடித்துக் கொண்டான் ஆதி.. “இன்னிக்கு கூட ஒருத்தி வந்தா என் கம்பெனிக்கு… என்ன ஆட்டம் ஆடுறா..? அங்க வந்து எ..ன் கம்பெனியில் நின்னுகிட்டு எ..ன..க்க்கே அட்வைஸ் பண்றாங்க அந்த மகாராணி.. எவ்..வளவு திமிரு இருக்கணும்?”
அவன் பேசிக் கொண்டே போக “டேய்.. இரு இரு இரு… உன் கம்பெனிக்கு ஒரு பொண்ணு வந்தாளா? ஆச்சரியமா இருக்கு.. யாருடா அந்த வீராங்கனை?” கிண்டலாக கேட்டான் சத்ரேஷ்…
“டேய் என்கிட்ட செமையா அடி வாங்குவ நீ… என்னை வெறுப்பேத்தாத.. இன்னைக்கு பேப்பர்ல கொடுத்த இன்டெர்வ்யூ ஆடெ ஒழுங்கா படிக்காம இன்டர்வியூ அட்டென்ட் பண்றேன்னு வந்து என் கிட்ட பொண்ணுங்களுக்கு மதிப்பு குடு.. பொண்ணுங்களுக்கு மண்ணாங்கட்டிய குடுன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கா ஓவரா.. பத்தாததுக்கு நான் யாரை பத்தி நினைக்க கூடாதுன்னு நினைக்கிறேனோ அந்த….” பல்லை நறநறவென கடித்தபடி “என்னை பெத்து போட்டுட்டு போனாளே ஒருத்தி அவளை பத்தி வேற பேசிகிட்டு..”
கையை அங்கிருந்த மேஜை மேல் ஓங்கி குத்தி அவன் உருமியதைப் பார்த்து “டேய் முதல்ல நீ கொஞ்சம் உட்காரு… நான் உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்… நீ இப்படி தலையும் இல்லாம வாலும் இல்லாம சொன்னா எனக்கு ஒண்ணுமே புரியாது.. இன்னைக்கு என்ன நடந்ததுன்னு நிதானமா உக்காந்து சொல்லு..” அமைதியாக சொல்லி அவனை சமாதானப்படுத்தி அமர்த்திவிட்டு உள்ளே சென்று அவனுக்கு பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தான் சத்ரேஷ்..
அந்தப் பழச்சாற்றை பருகிக் கொண்டே ஆதித்யா தன் நிறுவனத்தில் அன்று நடந்த அத்தனையையும் அவனுக்கு விளக்கி கூற “டேய் நீ ஏன்டா இப்படி இருக்க? இங்க பாரு.. நான் உனக்கு முன்னாடியே சொல்லி இருக்கேன்… உன் வாழ்க்கையில நடந்ததும் என் வாழ்க்கையில நடந்ததும் நம்ம சந்திச்ச பொண்ணுங்களும் வித்தியாசமானவங்க.. எல்லா பொண்ணுங்களும் அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாதுடா.. நல்ல பொண்ணுங்க.. அன்பான பொண்ணுங்க.. உண்மையா காதலிக்கிற பொண்ணுங்க.. இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க… தன் புருஷனுக்காக உயிரையே கொடுக்குற எவ்வளவோ பொண்ணுங்க இருக்காங்கடா… நீ ரொம்ப தப்பா நினைச்சுட்டு இருக்கேடா ஆதி.. இது உனக்கு நல்லதே இல்லை… தயவு செஞ்சு பொண்ணுங்களை இவ்வளவு கீழ்த்தரமா நடத்தாதடா.. அவங்க சாபம் உன்னையே அழிச்சிடும்.. அதுவும் நீ சொல்றதை கேட்டா இன்னிக்கு வந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருப்பான்னு தோணுது..”
அவன் ஆதித்யாவுக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.. ஆனால் அது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காய் வீணாய் போனது..
“ஆமா.. அந்தப் பொண்ணை பார்க்காமயே இவருக்கு தெரிஞ்சிருச்சு அவ ஒரு நொள்ள பொண்ணுனு.. அட நீ வேற.. வாய மூடுடா.. அவ வந்ததுல இருந்து எகிறிக்கிட்டே இருக்கா.. மத்த பொண்ணுங்க எல்லாம் குழைவாளுக.. இவ கோவமா பேசுறா.. அவ்வளவுதான் வித்தியாசம்… ஆனா எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான்.. இவ முதல்ல கோவமா பேசிட்டு அப்புறம் கொழைவாளா இருக்கும்.. இவளுங்களை பத்தி எனக்கு தெரியாதா.. என்ன?” அவன் எப்போதும் பாடும் பாட்டையே பாடிக்கொண்டிருந்தான்..
“சரி.. உன்னை திருத்த முடியாது.. இப்ப அதை விடு.. ஆமா இன்னைக்கு அந்த கெவின் கே கம்பெனியோட டெண்டர் மீட்டிங்குக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தியே.. எத்தனை மணிக்குடா?” பேச்சை மாற்றினான் சத்ரேஷ்..
“ஆமா.. இன்னைக்கு இன்டர்வியூ முடிச்சிட்டு 12 மணிக்கு அங்க போகணும்னு நெனைச்சிட்டு இருந்தேன்.. எங்க..? அந்த ராட்சசி வந்து என் மண்டை காய பேசி பேசியே என்னை மூட் ஆஃப் பண்ணி எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டா..” என்று சொல்லி அலுத்து கொண்டவன் அந்த ஏலத்திற்கு தன் கார் சாவியை பாக்கெட்டில் இருந்து எடுத்தபடி கிளம்பினான்.
“சரி வா.. நானும் உன்னோட வரேன்… எனக்கும் கொஞ்சம் டைவர்ஷனா இருக்கும்”
சத்ரேஷூம் அவனோடு கிளம்ப “சரி.. வா போலாம்..” அவனையும் அழைத்துக் கொண்டு ஏலம் நடக்கும் இடத்திற்கு போனான் ஆதி..
இவன் போய் சேர்வதற்குள் அங்கே ஏற்கனவே எம்.ஜே.க்ரூப் ஆஃப் கம்பெனீஸின் எம்.டி. மிதுன் அமர்ந்திருந்தான்.. இந்த மிதுன் தான் ஆதியின் அன்னை அந்த குடும்பத்தை விட்டு போய் சேர்ந்து கொண்ட ஜெகனின் மகன்..
இந்த இருவருக்குள்ளும் ஒவ்வொரு முறையும் டெண்டர் காண்ட்ராக்ட் எடுப்பதற்கும் வியாபாரத்திலும் அவ்வளவு போட்டி இருந்தது.. ஆதித்யாவை பொறுத்தவரை மிதுனை அழிப்பதே அவன் குறிக்கோள்.. மிதுனை பொறுத்தவரை ஆதித்யாவை தோற்க்கடிப்பதே அவன் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது..
ஆனால் ஒவ்வொரு முறையும் ஆதித்யாதான் ஒவ்வொரு காண்ட்ராக்டையும் தன் வசப்படுத்தி அவனை தோற்கடித்துக் கொண்டே இருந்தான்.. வியாபார உலகத்தை பொறுத்தவரை தன்னை எவரும் எந்த நிலையிலும் தோற்கடிக்க முடியாது என்று இறுமாப்போடு இருந்தான் ஆதித்யா..
இன்றும் இருவரும் அங்கு வந்திருக்க ஆதித்யா அவன் எதிர்பக்கம் சென்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு தன்னுடைய கூலர்ஸை கொஞ்சம் முன்னே தள்ளி அவன் பக்கம் பார்த்து புருவத்தை உயர்த்தி ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டான்..