ஆதித்யாவும் மிதுனும் ஏலத்தை அறிவிப்பவரை கவனித்துக் கொண்டிருக்க எப்போதும் போல ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கே டெண்டர் காண்ட்ராக்ட் கிடைத்துவிட மிதுனின் முகம் சுருங்கி போனது..
ஆதித்யா எழுந்து நேராக மிதுனிடம் சென்று “என்னப்பா தம்பி.. இந்த முறையும் ஊத்திக்கிச்சா..? ஏண்டா எவ்வளவு தடவை தான் முட்டிட்டு முட்டிட்டு தலையை காயப்படுத்திட்டிருப்ப? உனக்கு மூளையே வராதா? நீ எவ்வளவு தடவை என்னோட போட்டி போட்டாலும் நீ தோக்கத்தான் போறே.. உனக்கு ஏன் இந்த வேலை? பேசாம கிடைக்கிற சில்லறை காண்ட்ராக்டை வச்சிக்கிட்டு உன் கம்பெனியை ஓட்டறதுக்கு ட்ரை பண்ணு.. என்னோட மோதி மோதி ஒவ்வொரு முறையும் அடி வாங்காத.. எனக்கே போர் அடிக்குது உன்னை அடிச்சு அடிச்சு… ஓகேவா தம்பி?”
ஒரு ஏளன சிரிப்போடு அவன் கன்னத்தில் தட்டி விட்டு சத்ரேஷை அழைத்துக் கொண்டு சென்றான் ஆதி..
சத்ரேஷ் “டேய் ஆதி.. ஒரு நிமிஷம்..அது எப்படிடா? அவன் கோட் பண்ற அமௌன்ட்டை விட ஒரு ரூபா கம்மியா ஒவ்வொரு வாட்டியும் கோட் பண்ற? ஏதோ ஒரு முறைன்னா பரவால்ல.. எப்பவுமே இப்படித்தான் நடக்குது ஒவ்வொரு முறையும்… அது எப்படிடா சாத்தியம்?” ஆச்சரியமாக கேட்டான் அவன்..
“அது தான்டா என் வியாபார தந்திரம்.. அவன் கம்பெனியில அவனுக்கே தெரியாம என்னோட ஸ்பை ஒருத்தன் இருக்கான்.. அவன் ஒவ்வொரு முறையும் அவங்க என்ன அமௌன்ட் கோட் பண்றாங்கங்கறதை பார்த்து சொல்லிடுவான்.. அதை வெச்சு நான் ஒரு ரூபா கம்மியா கோட் பண்ணி ஒவ்வொரு முறையும் ஜெயிச்சுட்டு வரேன்.. இது தெரியாம அந்த மிதுன் என்னடான்னா ஒவ்வொரு முறையும் வந்து என்கிட்ட நோஸ்கட் வாங்கிட்டு போறான்.. இதுவரைக்கும் நான் தான் வின் பண்ணேன்.. அதே மாதிரி இனிமேலும் எல்லா காண்ட்ராக்ட்டும் எனக்கு தான் கிடைக்கும்..” என்று கூறியவன் சிறிது தூரத்தில் மிதுன் நின்று கொண்டு இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டு இருந்ததை பார்க்கவில்லை..
“டேய் ஆதி.. இப்படித்தான் நீ ஒவ்வொரு வாட்டியும் ஜெயிக்கிறியா? முதல்ல அந்த கருப்பு ஆடு யாருன்னு கண்டுபிடிக்கறேன்.. அவனை கண்டு புடிச்சு அதுக்கப்புறம் நான் என்ன பண்றேன்னு பாரு..” கருவினான் மிதுன் மனதுக்குள்..
இதையெல்லாம் கவனிக்காத ஆதி
நேரே நடந்து சென்று தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..
########
ஆதியின் அலுவலகத்திலிருந்து கோபத்துடன் தன் வீட்டுக்கு வந்த அல்லி தன்னை மறந்து அவனை நினைத்துப் பார்த்தாள்.. அவள் மனம் முழுதும் அவன் மேல் வெறுப்பே நிறைந்து இருந்தது..
“இப்படி ஒரு மிருகம் கூட உலகத்தில் இருக்குமா? பொண்ணுங்களை பத்தி எவ்வளவு கேவலமா பேசறான்..? பணக்காரன்னா பெரிய இவனா இவன்? பொண்ணுங்களை கீழ்த்தரமா பேசறதுக்கு இவனுக்கு யார் உரிமை கொடுத்தது? இவனை நிச்சயமா ஏதாவது பண்ணனும்… என்ன திமிரு? என்ன தெனாவட்டு? தான் என்னவோ இந்த ஊருக்கே பெரிய ராஜா மாதிரி நினைச்சுகிட்டு இருக்கான்… இப்படியே போயிட்டு இருந்தா இவனுக்கு இருக்கிற திமிருக்கும் தெனாவட்டுக்கும் அழிஞ்சி தான் போவான்”
மனம் முழுக்க அவன் மீது கசப்பான ஒரு உணர்வு வந்திருக்க அவன் கைகள் அழுத்திய கழுத்தில் இன்னும் லேசாய் வலி இருந்ததை உணர்ந்தாள்..
தன் கைபேசி எடுத்து வழக்கம்போல் இளையராஜா பாடல்களை கேட்க ஆரம்பித்தாள்.. அவள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் வருத்தமாக இருந்தாலும் அந்த பாடல்களை கேட்டால் அத்தனையும் மறந்து சிரித்து விடுவாள்.. கண்ணை மூடி கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்..
சிறிது நேரம் கழித்து எழுந்தவள் மறுபடியும் செய்தித்தாளை எடுத்து வேறு ஏதாவது வேலை இருக்குமா என்று தேடிப் பார்த்தாள்.. அதில் எம் ஜே குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற கம்பெனியில் சேர்மனுக்கு பிஏ வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்..
மணி 12 ஆகியிருந்தது.. நேர்காணல் மதியம் இரண்டு மணிவரை நடப்பதாக போட்டிருந்ததால் அந்த முகவரியை குறித்துக் கொண்டு பையைத் தூக்கிக்கொண்டு தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு உடனே கிளம்பினாள் அந்த நிறுவனத்தை நோக்கி..
எம் ஜே குரூப் ஆஃப் கம்பெனிஸ் வளாகத்துக்குள் சென்றவள் தான் வேலைக்கான நேர்காணலுக்கு வந்திருப்பதாக சொல்லவும் அந்த வரவேற்பு அறையில் இருந்த பெண்மணி தன் தொலைபேசி மூலம் மிதுனை தொடர்பு கொண்டு நேர்காணலுக்காக ஒரு பெண் வந்திருக்கிறார் என்று சொல்லவும் அவன் உடனே அவளை உள்ளே அனுப்ப சொன்னான்..
மிதுனின் அறையின் வாசலில் இருந்த நாற்காலியில் அவளை அமரச் சொன்னார் அந்த கம்பெனியின் பியூன்..
அந்த அலுவலகத்தில் பணியாளர்கள் யாருமே அவர்கள் இருக்கையில் இருக்கவில்லை..
எல்லோரும் ஒட்டு மொத்தமாக எங்கே சென்றிருப்பார்கள் என்று அவள் சற்று குழப்பத்தில் உட்கார்ந்து இருந்தாள்.. ஆனால் அத்தனை பேரும் மிதுன் அறையில் அவனுடைய சந்தேக கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்..
“சொல்லுங்க.. உங்கள்ல யாரு என்கிட்ட சம்பளம் வாங்கிட்டு ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கு வேலை செய்யறது? நீங்களா சொல்லிட்டீங்கன்னா பெட்டர்.. நானா தெரிஞ்சுக்கிட்டேன்னா விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும்..”
அவன் மிரட்டும் தொனியில் கூறிக் கொண்டிருக்க அங்கு இருந்த ஒவ்வொருவரும் “அது அவர்கள் இல்லை” என்று பயந்த குரலுடன் சத்தியம் செய்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்..
“சரி.. நீங்க எல்லாரும் உங்க சீட்டுக்கு போலாம்”
அவன் அவர்கள் எல்லோரையும் அனுப்ப.. அவன் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டாக இருக்கும் தினேஷ் “ஏன் சார்… எல்லாருமே நாங்க கிடையாதுன்னு சொல்றாங்க? ஒருவேளை ஆதி சும்மா சொல்லி இருப்பானோ?” என்று கேட்டான் சந்தேகமாக..
“இல்ல.. அவன் சொன்னதை பார்த்தா சும்மா சொன்ன மாதிரி இல்லை.. ஒருவேளை என்கிட்ட சொல்லி இருந்தான்னா எனக்கும் அந்த சந்தேகம் வந்திருக்கும்.. ஆனா அவன் சொன்னது அவனோட க்ளோஸ் ஃபிரண்டு கிட்ட… அதனால நிச்சயமா அது உண்மையா தான் இருக்கணும்.. சரி பரவால்ல.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. நானே கண்டுபிடிக்கிறேன்..” என்று சொன்னவன் “அப்புறம் இன்டர்வியூக்கு யாரோ வந்திருக்காங்கன்னு சொன்னாங்க.. அவங்களை வெளியில் உட்கார வெக்க சொன்னேன்… அவங்களை உள்ள அனுப்பிட்டு போங்க நீங்க உங்க சீட்டுக்கு..” என்றான் தினேஷிடம்..
“ஓகே சார்..” என்றவன் வெளியே வந்து அல்லி மலரை உள்ளே போக சொன்னான்.. அல்லி மலர் உள்ளே நுழைந்தவுடன் அவளை பார்த்த மிதுனுக்கு அவளிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.. “அட.. இவ்வளவு அழகா ஒரு பொண்ணா? இவதான் என் பி.ஏ” என்று முடிவெடுத்துக் கொண்டவன் “மிஸ். அல்லி மலர்” என்றான்.
“எஸ் சார்”
“உட்காருங்க ப்ளீஸ்”
அவள் அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும் “உங்க சர்டிஃபிகேட்ஸை கொடுக்குறீங்களா?” அவளை நோட்டமிட்டபடியே கேட்டான்…
அவள் தன்னுடைய சான்றிதழ்களை அவனிடம் கொடுக்க அதை வாங்கும் போது அவன் விரல் அவள் விரல் மீது படுமாறு வாங்கிக் கொள்ள சட்டென தன் கையை இழுத்துக் கொண்டாள் அல்லி…
“ஓ.. சாரி தெரியாம பட்டுடுச்சு”
மன்னிப்பு கோரியவன் சான்றிதழ்களை வாங்கி அதை பார்ப்பது போல் அவ்வப்போது மேல் கண்ணால் அல்லியை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.. அல்லியின் கண்ணுக்கும் அது தப்பவில்லை..
மனதிற்குள் “இவன் நடவடிக்கையே சரி இல்லையே.. என்னடா இது?” என்று யோசித்தவள் “அவன் என்னதான் சொல்கிறான் பார்ப்போம்” என்று காத்திருந்தாள்..
பேருக்கு அவள் சான்றிதழ்களை பார்த்தவன் “மிஸ்.அல்லிமலர்.. உங்க குவாலிஃபிகேஷன் எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கு.. நான் உங்களை அப்பாயின்ட் பண்றேன்.. நீங்க என்னோட பி.ஏ.. சோ இதே ரூம்ல அதோ ரைட் சைடு இருக்கற அந்த டேபிள் சேர்தான் உங்களோட ஒர்க் ஸ்டேஷன்… நீங்க அங்க தான் இருக்கணும்.. என்னோட அப்பாயின்மென்ட், ஷெட்யூல்ஸ் எல்லாத்தையும் நீங்க நோட் பண்ணி சொல்லணும்.. மத்தபடி வேற என்னென்ன வேலை இருக்குன்னு அக்கவுண்ட்டன்ட் தினேஷ் உங்களுக்கு சொல்லுவாரு..”
அவன் சொன்னதும் அவன் கொடுத்த தன்னுடைய சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை கையில் வாங்கிக் கொண்டவள் வெளியே போக எத்தனிக்க “பைதவே.. உங்களுக்கு கரெக்டா தான் பேரு வச்சிருக்காங்க.. நீங்க அல்லிப்பூ மாதிரி ரொம்ப அழகா தான் இருக்கீங்க..” அவன் அவளை மேலும் கீழுமாய் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே சொல்லவும் அவளும் அவன் பார்வை பிடிக்காமல் நெளிந்தாள்..
தேங்க்ஸ் சார் என்று ஒரு செயற்கை புன்னகையோடு சொன்னவளை மறுபடியும் அழைத்தவன், “மிஸ்.அல்லி.. உங்களால இன்னிலேருந்தே ஜாயின் பண்ண முடியுமா இந்த வேலையில?” என்று கேட்டான்..
அவளை அப்போதிலிருந்தே தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.. நாள் முழுதும் அவள் அழகை பக்கத்திலிருந்தே ரசித்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற ஆசையில் அவளை அப்போதே வேலையில் சேர்க்க துடித்துக் கொண்டிருந்தான்..
அல்லியோ “இவன் பார்வையே சரியில்ல.. ஆனால் நம்மளை மீறி நம்மளை இவன் ஒன்னும் செஞ்சிட முடியாது.. இப்போதைக்கு வேலையில் சேர்ந்துடுவோம்.. ரொம்ப கஷ்டமா இருந்ததுன்னா அப்புறம் வேலையை விட்டுக்கலாம்..” என்று எண்ணியவள் “ஓகே சார்.. நான் இன்னிலேருந்தே ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று ஒப்புதல் தந்தாள்..
“அப்படின்னா நான் தினேஷை உங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் போட்டு தர சொல்லிடறேன்.. வெளியில போய் வாங்கிட்டு அவர்கிட்ட உங்க வேலையெல்லாம் கேட்டுட்டு நீங்க உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்.. இன்னைக்கு ஈவினிங் 5 ஓ கிளாக் வரைக்கும் இருங்க.. நாளைக்கு காலைல இருந்து எட்டு மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும்..” என்றவன் “நைஸ் டு ஹேவ் யூ இன் மை கம்பெனி”
அவன் தன் கையை நீட்ட அவள் கை இரண்டையும் குவித்து ” தேங்க்யூ சார்” என்று சொல்லி அங்கிருந்து வெளியே வந்தாள்.
அவளைப் பார்த்த தினேஷ் “வாம்மா.. இப்பதான் சார் சொன்னாரு.. உனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போட்டு கொடுத்துடறேன்.. மத்தபடி சாரோட அப்பாயின்மென்ட், ஷெட்யூல்ஸ் எல்லாத்தையும் உனக்கு சொல்லிடறேன்.. இனிமே அதெல்லாம் நீ தான் கவனிச்சுக்கணும்.. அதுக்கு அப்புறம் அவரு டெண்டர் காண்ட்ராக்ட் எடுக்க போகும்போதும் மத்த மீட்டிங்க்கு போகும்போதும் நீயும் கூட போக வேண்டி இருக்கும்.. அங்க என்ன நடக்குதுனு நோட் பண்ணிட்டு அப்பப்ப அவருக்கு ரிமைண்ட் பண்ண வேண்டியது உன்னுடைய வேலை தான்.. சரி.. வா.. மத்த ஸ்டாஃப்க்கு எல்லாம் உன்னை இன்ட்ரடியூஸ் பண்ணி விடுறேன்”
அவளை அழைத்துக் கொண்டு போய் மற்ற பணியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தான் தினேஷ்..
எல்லோருடைய முகமும் சிறிது வாடியிருந்தது.. அவளுக்கு ஏன் என்று புரியவில்லை.. அவள் வெளியே உட்கார்ந்திருந்தபோது அத்தனை பேரும் அந்த அறைக்கு சென்று வந்ததை அவள் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்..
“சார் நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே..” என்று அவள் கேட்கவும் தினேஷ் “கேளுமா.. நான் தப்பா நினைக்கிற அளவுக்கு அப்படி என்ன கேக்க போற நீ?” என்றார்..
“ஏன் சார் இவங்க எல்லார் முகமும் சோகமா இருக்கு.. எல்லாரும் சாரோட ரூம்ல இருந்து வந்தாங்களே.. ரொம்ப திட்டிட்டாரா எதுக்காகவாவது..?”
“ஆமாம்மா.. எங்களோட காம்படிட்டர் ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் எம்.டி அவரோட ஸ்பை இந்த கம்பெனியில் இருக்காங்கன்னு சொல்லி இருக்காரு.. அது யாருன்னு தெரியாம பாஸ் முழிச்சுட்டு இருக்காரு.. அவங்களை எல்லாம் கூப்பிட்டு அதை பத்தி கேட்டு ரெய்டு விட்டாரு.. கொஞ்சம் திட்டவும் செஞ்சாரு.. மிரட்டவும் செஞ்சாரு.. அதனாலதான் அவங்களும் கொஞ்சம் சோகமா இருக்காங்க.. இந்த பிரச்சனை யார் தலையில் வந்து விடிய போகுதோன்னு எல்லாருக்கும் டென்ஷன்.. என்னை உட்பட..” வருத்தத்துடன் சொன்னார் அவர்..
“ஓ..அதானா..?”
“ஆமா.. இன்னும் ரெண்டு நாள்ல இன்னொரு டெண்டர் கூட வருது.. பெரிய கான்ட்ராக்ட்.. எஸ்கே ஏஜென்சிஸ்னு ஒரு கம்பெனி.. அந்த கம்பெனியில இந்த டெண்டர் காண்ட்ராக்ட் விடறாங்க.. நிச்சயமா அதுவும் அந்த ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கு தான் போகப் போகுது.. இது தெரிஞ்ச கதைதான்.. இன்னைக்கு மாதிரியே அன்னைக்கும் வந்து டென்ஷனா கத்த போறாரு.. இப்படியே தான் போகுதுமா எங்க பொழப்பு.”
அவர் புலம்ப “இதுக்கு நான் ஒரு வழி பண்றேன் சார்.. நீங்க கவலைப்படாதீங்க.. நான் சார் கிட்ட பேசுறேன்..” என்று சொன்னவள் நேரே தன் இருக்கைக்கு போனாள்.. சிறிது நேரத்தில் மிதுனிடம் சென்று “எக்ஸ்க்யூஸ் மீ சார்” எனவும் அவன் நிமிர்ந்து பார்த்தான்…
“சொல்லுங்க மிஸ் அல்லி மலர்” என்று அவளை பார்த்து இளித்துக் கொண்டே சொன்னான்..
அவன் செய்வதை பார்த்து சிறிது எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டு “சார் தப்பா நினைச்சுக்காதீங்க.. இங்க எல்லாரும் ஒரு மாதிரி டல்லா இருந்தாங்க.. நான் அதான் தினேஷ் சார்கிட்ட ஏன்னு கேட்டேன்.. அவரு இந்த டெண்டர் எடுக்கறதுல இருக்குற பிரச்சினை பத்தி சொன்னாரு..உங்களுக்கு ஆட்சேபணை இல்லனா இந்த முறை டெண்டர் அமௌண்ட்ட நான் கோட் பண்றேன் சார்.. இந்த ரெண்டு நாள்ல நான் எல்லா பேப்பர்ஸும் ஸ்டடி பண்ணிட்டு அதுக்கப்புறம் டிசைட் பண்றேன்.. என்னை நம்பி இந்த ஒரு தடவை இந்த டெசிஷன் எடுக்கற ரெஸ்பான்சிபிலிட்டியை கொடுக்கிறீங்களா? நிச்சயமா இந்த முறை உங்களுக்கு இந்த காண்ட்ராக்ட்டை கிடைக்க வெக்க வேண்டியது என்னோட பொறுப்பு”
“இதை மட்டும் நீங்க சக்ஸஸ்ஃபுல்லா பண்ணீங்கன்னா உங்களுக்கு அடுத்த மாசமே சேலரில டபுள் இன்க்ரிமென்ட் போட்டு கொடுக்கிறேன்.. அந்த திமிரு புடிச்ச ஆதித்யாவை நான் ஒரு தடவையாவது ஜெயிக்கணும்”
அவனை பார்த்து சிரித்தவள் மனதிற்குள் “அந்த ஆதித்யாவோட எனக்கும் ஒரு கணக்கு இருக்கு.. அவனுக்கு நிச்சயமா நான் ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கணும்.. இந்த டெண்டர் மூலமா நிச்சயமா அவனுக்கு பெரிய பாடம் ஒண்ணு சொல்லிக் கொடுப்பேன்.. தன்னை யாருமே ஜெயிக்க முடியாதுனு நினைச்சுக்கிட்டு இருக்கான் இல்ல? இந்த அல்லி மலர் நினைச்சா அது முடியும்னு அவனுக்கு நான் காட்டணும்.. பொண்ணுங்களை எவ்வளவு கேவலமா நினைச்சுட்டு இருக்கான்.. ஒரு பொண்ணு நினைச்சா அவன் அஸ்திவாரத்தையே அசைச்சு ஆட்டம் காண வெக்கமுடியும்னு அவனுக்கு தெரியணும்.. அவனுக்கு கெடைக்கற முதல் தோல்வி என்னை மாதிரி ஒரு பொண்ணு கிட்டேயிருந்துதான் கெடைக்கணும்.. அப்பதான் அவன் நினைச்சுட்டு இருக்குற மாதிரி பொண்ணுங்க ஆம்பளைங்களோட ஒட்டிட்டிருக்கறது மட்டும் இல்ல வேற என்னல்லாம் பண்ணுவாங்கன்னு அவனுக்கு புரியும்..”
மனதிற்குள் எண்ணிக்கொண்டே அவள் “ஓகே சார் நான் போய் அதுக்கான வேலைகளை எல்லாம் பார்க்கிறேன்..” என்றபடி தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்..