அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5

4.8
(19)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

முதல் தோல்வி..!!

மாலையில் வேலை முடித்த அல்லி தன் வீட்டுக்கு வந்தாள்.. வரும்போது மறக்காமல் பக்கத்து வீட்டு பாட்டி கேட்ட தைலத்தை வாங்கிக் கொண்டு வந்து அதை அவருக்கு தேய்த்தும் விட்டு அவருடைய ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு வந்தாள்..

வீட்டிற்குள் வந்தவள் நேரே சமையலறைக்கு சென்று அங்கு சமைத்துக் கொண்டிருந்த தன் அன்னையை பின்னிருந்து கட்டிக்கொண்டு “என்னம்மா பண்ற? ஏதோ இன்ட்ரஸ்டிங்கா பண்ணிட்டு இருக்க போல இருக்கே?” என்றபடி எட்டிப் பார்த்தாள்.

அவள் அம்மா பக்கோடா செய்து கொண்டிருக்க செய்து வைத்த பக்கோடாவில் ஒன்றை எடுக்க அவள் கையை நீட்டினாள்..

தாமரை அவள் கையிலையே ஒன்று போட்டு “அல்லி.. முதல்ல போய் கை கால் எல்லாம் கழுவிட்டு வா.. வெளியில இருந்து வந்து நேரா சாப்பாட்டில கை வெக்காத.. போ” என்றபடி அவளை விரட்ட “ஏன்மா.. மத்தியானம் போனவ இப்பதான் வீட்டுக்கு வந்து இருக்கேன்.. வேலை தேடி போனேனே.. என்ன ஆச்சு.. ஏதாச்சுன்னு ஏதாவது கேக்குறியா?” முகத்தை சுருக்கிக் கொண்டு  கேட்டாள் அவள்…

“ஏய்.. உன்னை பத்தி எனக்கு தெரியும்டி… நீ போனா வேலை கிடைக்காம இருக்குமா? உன்னை வேணாம்னு சொன்னா அந்த முதலாளிக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லன்னு அர்த்தம்.. என் பொண்ணு எவ்வளவு கெட்டிக்காரின்னு எனக்கு தெரியும்.. உனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு… அது மட்டுமில்லாம இன்னைக்கே வேலையில சேர்ந்துட்டேன்னு நீ வர லேட் ஆனதை வெச்சே தெரிஞ்சுக்கிட்டேன்..”

தன் அம்மாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளி முத்தம் கொடுத்தவள் “தாமரை.. நீ எங்கேயோ போயிட்ட? எப்படி என்னை இப்படி புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கே?” என்று கேட்டவளை ” ம்ம்.. எப்படி பேரை கூப்பிடுறா பாரு.. இவ தான் வச்சா மாதிரி.. சரி.. ரொம்ப பசிக்கப்போகுது.. வேலை செஞ்சிட்டு வந்து இருக்கே.. டயர்டா இருப்ப.. போய் கை கால் கழுவிட்டு.. மூஞ்சி கழுவிட்டு வா..” என்று அதட்டினாள்.

கை கால் கழுவிவிட்டு வந்தவள் வாசலில் இருந்து தன் தந்தையும் உள்ளே வந்து கொண்டிருந்ததை பார்த்து “ஹாய்ப்பா.. அப்பா எனக்கு வேலை கிடைச்சிருச்சுப்பா.. மாசம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம்.. சேர்மன் பி. ஏ. எம். ஜே. குரூப் ஆஃப் கம்பெனிஸ்ல..” உற்சாகத்தோடு சொன்னாள் அல்லி…

“எம்.ஜே. குரூப் ஆஃப் கம்பெனிஸா? காலைல நீ கெளம்பும்போது வேற ஏதோ கம்பெனிக்கு இன்டர்வியூக்கு போறதா தானே சொன்ன என்கிட்ட?” புருவம் சுருக்கி யோசனையாய் கேட்டார் அவர்.

“அதை ஏன் கேக்குறீங்க? அந்த இன்டர்வியூக்கு போயிட்டு திரும்பி வரும்போது உங்க பொண்ணு அவ்ளோ கோவமா வந்தா.. அப்புறம் என்னடான்னு பார்த்தா ஒரு ஒரு மணி நேரத்துக்கெல்லாம் வந்து நான் இன்னொரு இன்டர்வியூக்கு போறேன்னு கிளம்பினா.. இப்போ அந்த ரெண்டாவது இன்டெர்வியூவிலதான் அவளுக்கு வேலை கிடைச்சிருக்குனு நினைக்கிறேன்..” தாமரை சொல்லிக் கொண்டே தட்டில் பக்கோடா எடுத்துக்கொண்டு வந்தாள்..

“ஏம்மா மலர்… என்ன ஆச்சு..? காலையில போன இன்டர்வியூல வேலை கிடைக்கலையா?” அவள் தலையை ஆதுரமாக தடவி கேட்டார் செழியன்..

“அதை ஏன்பா கேக்குறீங்க? அந்த இன்டர்வியூக்கு ஏன் போனோம்னு ஆயிடுச்சு..” என்று சொன்னவள் அங்கு நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் தன் தந்தையிடம் சொல்லி முடித்தாள்.. அவள் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது ஆதித்யாவை நினைத்து.

“பெரிய இவனாட்டம் வந்து என் கழுத்தை புடிக்கிறான் ராஸ்கல்..” என்றவளை “சரி விடுமா.. துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாங்க.. இனிமே அவன் கிட்ட எந்த வம்பும் வச்சுக்காத.. நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இரு.. இப்பதான் உனக்கு வேற ஒரு நல்ல வேலை கிடைச்சிருச்சு இல்ல? எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இந்த வேலையில நீ மேல மேல நல்லா வருவமா” என்றார் அவர்..

“தேங்க்ஸ்பா.. சரி.. நீங்களும் போய் ஃபிரஷ் ஆயிட்டு வாங்க… நாம ஒண்ணா உக்காந்து பக்கோடா சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு அவள் அன்னை கொண்டு வந்த பக்கோடாவை கபளீகரம் செய்ய ஆரம்பித்தாள்..

அடுத்து வந்த இரண்டு நாட்களும் வேலைக்கு சென்று அந்த டெண்டர் விஷயமாக அத்தனை கோப்புகளையும் பார்த்து அதை பற்றி தெரிந்து கொண்டு டெண்டருக்கான கொட்டேஷனை அனுப்பினாள்..

அன்று முழுவதும் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தவள்.. மறுநாள் காலை நேரத்தில் கிளம்பி அலுவலகத்துக்கு சென்று விட்டாள்.. அங்கே மிதுன் காத்துக் கொண்டிருந்தான்…

“வாங்க மிஸ்.அல்லிமலர்.. நம்ம இன்னைக்கு அந்த டெண்டர் மீட்டிங் போகணும்.. நிச்சயமா இந்த காண்ட்ராக்ட் நமக்கு கிடைச்சிடும் இல்ல?”

அவன் கேட்கவும் “நிச்சயமா கிடைச்சிடும் சார்.. கவலைப்படாதீங்க” என்றவள் அவனுடன் கிளம்பி சென்றாள்…

எப்போதும் போலவே அங்கு ஆதித்யாவும் வந்திருந்தான்.. இவளை மிதுனுடன் பார்த்தவுடன் அவன் முகம் மாறியது..

“இந்த திமிரு புடிச்சவ இவனோட போய் சுத்திக்கிட்டு இருக்காளா? ரெண்டும் சேர்ந்தா உருப்பட்ட மாதிரி தான்.. விளங்கிடும்..” என்று நினைத்தவன் நேராக சென்று மிதுனிடம் “ஏன்டா நீதான் ஒரு வெத்துவேட்டுன்னு பார்த்தா நீ உன்னோட சேர்த்துகிற ஆளும் அப்படித்தான் இருப்பாங்களா? போயும் போயும் இந்த திமிர் பிடிச்சவளை உன் கம்பெனியில வேலைக்கு எடுத்திருக்க.. கொஞ்சநஞ்சம் ஓடிட்டு இருக்கற உன் கம்பெனியையும் இழுத்து மூட போற இவளால.. ரெடியா இரு.. “

அல்லியையும் மிதுனையும் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தான் ஆதி..

அல்லிமலரும்  மிதுனும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தார்கள்.. அல்லிமலரை மிதுனுடன் பார்க்கும் போது ஆதித்யாவுக்கு என்னவோ போல் இருந்தது.. அவனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை.. உள்ளுக்குள் ஏதோ ஒரு கோவம் தீயாய் கொழுந்து விட்டு எரிந்தது..‌ அதன் வெளிப்பாடுதான் அவன் அவர்களிடம் சென்று இப்படி பேசி விட்டு வந்தது.. ஏன் தனக்குள் இப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது என்பது அவனுக்கே ஒரு புரியாத புதிராக இருந்தது..

இதில் மிதுன் வேறு அவ்வப்போது அவள் புறம் தன் காமப்பார்வையை வீசிக் கொண்டிருக்க ஆதிக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது..

“பெரிய இவ மாதிரி பேசுனா.. போயும் போயும் இந்த மாதிரி ஒரு ஆள் கூட போய் சேர்ந்திருக்கா ராட்சசி.. அவன் என்னடான்னா இவளை பார்த்து நல்லா வழிஞ்சிகிட்டு இருக்கான்.. அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கான் புள்ள.. இவனை எல்லாம்…” பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு இருவரையும் பார்த்து முறைத்தபடி தன் கையை இறுக்கினான் ஆதி..

அறிவிப்பாளர் வந்து கொட்டேஷன்களில் இருந்த தொகையை ஒன்றொன்றாக அறிவிக்க எம் ஜே குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று ஒரு தொகையை அறிவித்தவர்… ஆனால் ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் இதைவிட ஒரு ரூபா கம்மியா கோட் பண்ணி இருக்காங்க.. என்று அந்த தொகையையும் அறிவித்தார்..

ஆதித்யா சட்டென எப்போதும் போல் தனக்கு காண்ட்ராக்ட் கிடைத்துவிட்டது.. என்று மிதுனையும் அல்லிமலரையும் பார்த்து கேலியாய் சிரிக்க.. அந்த அறிவிப்பாளரோ “ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸை விட ஒரு ரூபா கம்மியா கோட் பண்ணி இருக்காங்க எம் ஜே பர்னிச்சர்ஸ்.. சோ.. இந்த டெண்டர் காண்ட்ராக்ட் அவங்களுக்குத்தான் போகுது..” என்று அவர் கூறவும் ஆதித்யா பல்லைக் கடித்துக்கொண்டு அல்லிமலரின் பக்கம் திரும்பினான்..

மிதுனுக்கு முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷமும் பெருமையும் அளவே இல்லாமல் கூத்தாடியது..

“மிஸ்.அல்லி மலர்.. யு ஹவ் டன் எ வெரி கிரேட் ஜாப்.. நீங்க எங்க கம்பெனிக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.. இப்ப அந்த ஆதித்யாவோட முகத்தை பார்க்கறதுக்கு எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு நேராக ஆதித்யாவிடம் சென்றான்..

“டேய் ஆதித்யா.. இப்ப என்னடா பண்ண போற? என்னவோ அல்லிமலரை என் கம்பெனில சேர்த்துகிட்டத்துனால நான் உருப்படவே மாட்டேன்.. அப்படி இப்படின்னு சொன்னே… இப்ப பார்த்தியா? உன் சரித்திரத்தையே மாத்தி எழுதிட்டோம்‌.. முதல் முறையா இந்த காண்ட்ராக்டை நான் ஜெயிச்சு நீ தோத்து இருக்கே.. மனசுக்கு அவ்வளவு நல்லா இருக்குடா.. நீ இப்படி கோவமா பார்க்கிறதை பார்த்தா அப்படியே என்னை அடிச்சு துவம்சம் பண்ணனும்னு தோணுது இல்ல உனக்கு? ஆனா அதெல்லாம் பண்ண முடியாது.. ஒவ்வொரு வாட்டி காண்ட்ராக்ட் எடுக்கும்போதும் நீ எவ்வளவு என்னை பேசி இருக்க.. ஏன் இப்ப வாயை மூடிட்டு இருக்க.. பேசுடா.. ஏதாவது சொல்லு.. அவ்வளவு திமிரா பேசுவ.. எங்க போச்சு அந்த திமிர் எல்லாம்??”

கிண்டலாக கேட்டவன் “இனிமே ஒவ்வொரு காண்ட்ராக்ட்டும் நான் தான் ஜெயிக்கப் போறேன்… கூடிய சீக்கிரம் உன் சாம்ராஜ்யத்தை அழிச்சுக் காட்டுறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

ஆதித்யாவின் அருகில் சென்ற அல்லிமலர் “புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. ஒரு பொண்ணு நினைச்சா என்ன எல்லாம் செய்ய முடியும்னு… நீ வச்சிருக்கியே ஒரு ஸ்பை அவன் எம் ஜே குரூப் ஆஃப் கம்பெனிஸ்ல என்ன கொட்டேஷன் கொடுக்குறாங்கன்னு மட்டும் தான் பார்த்தான்… ஆனா மிதுன் சாருக்கு எம் ஜே பர்னிச்சர்ஸ்னு இன்னொரு கம்பெனி இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேனா..? அந்த கம்பெனியோட கொட்டேஷனை கம்மி அமௌன்ட் போட்டு இந்த காண்ட்ராக்ட்டை அவருக்கு கிடைக்கிற மாதிரி பண்ணிட்டேன்.. இப்பவும் பொண்ணுங்களால எதுவும் முடியாதுனு நினைக்கிறியா? உனக்கு வாழ்க்கையில முதல் தோல்வியை கொடுத்திருக்கேன்.. இதை நல்லா பார்ட்டி வச்சு என்ஜாய் பண்ணு.. வரட்டா?”

அவன் முகத்திற்கு நேராய் சொடக்கிட்டு சொல்லியவள் அங்கிருந்து செல்ல முனைந்தாள்..

ஆதித்யாவோ அவள் கையை இறுக்கிப்பிடித்தவன் தனக்கு நேரே அவளை இழுத்து “என்னடி.. ஏதோ இந்த காண்ட்ராக்ட்ல வேற கம்பெனிக்கு கொட்டேஷன் போட்டு என்னை ஏமாத்திட்டன்னு ரொம்ப ஆடறியா? அடுத்த காண்ட்ராக்ட்க்கு நீ என்ன பண்றன்னு நானும் பார்க்கிறேன்.. ஆனா அடுத்த காண்ட்ராக்ட் நடக்கிற வரைக்கும் உன்னை அந்த மிதுன் உருப்படியா விட்டு வெச்சிருக்கிறானான்னு பாரு.. அவன் பாக்குற பார்வையே சரியில்லை.. அதைக்கூட புரிஞ்சிக்க தெரியல..‌‌ பெருசா கான்ட்ராக்ட்டை ஜெயிக்க வந்துட்டா.. போடி..”

அவள் கையை சடார் என விட்டதும் அந்த வேகத்தில் இரண்டு அடி தள்ளி போய் தடுமாறி நின்றாள்.. அவனை முறைத்து விட்டு மிதுன் பின்னே சென்றாள் அல்லி..

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் “ம்ம்ம்ம்.. பரவாயில்லை.. நீ அந்த மிதுன் மாதிரி அடி முட்டாள் இல்ல.. என் தகுதிக்கு ஏத்த எதிரி தான் நீ.. உன் புத்திசாலித்தனத்துனால இந்த முறை நீ என்னை.. இந்த ஆதியை ஜெயிச்சுட்ட.. கங்க்ராஜூலேஷன்ஸ் பேபி.. ஆனா இந்த ஆதிக்கு முன்னாடி நீ எல்லாம் குழந்தை தான்..  இதுதான் உனக்கு கிடைக்கிற கடைசி வெற்றி.. இனிமே வாழ்க்கை முழுக்க உனக்கு தோல்வி மட்டும் தான் கிடைக்கும்.. அந்த தோல்வியை எல்லாம் உனக்கு கொடுக்க போறவன் இந்த ஆதித்யவர்மன் த கிரேட்.. ஏன் தான் இந்த ஆதித்யவர்மனோட போட்டி போட்டு ஜெயிச்சோமோன்னு ஒவ்வொரு நாளும் உன்னை ஃபீல் பண்ண வைப்பேன்.. கெட் ரெடி ஃபார் த பேட்டில் மிஸ். அல்லி மலர்..”

அல்லியின் முதுகுக்கு பின்னால் கைகளை கட்டம் போடுவது போல் வைத்து அவளை நோக்கி இரு விரலை நீட்டி சுடுவது போல் பாவனை செய்தவன் விரல் நுனியை அலட்சியமாய் ஊதி விட்டான்..

அன்று மாலை மிதுன் பெரிய பார்ட்டி ஒன்று கொடுத்திருந்தான்.. தன் அலுவலக பணியாளர்கள் அத்தனை பேருக்கும்..

அந்த பார்ட்டியில் “ஹாய் கைஸ்.. முதல் முறையா ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸைத் தோக்கடிச்சு நம்ம இந்த காண்ட்ராக்ட்டை ஜெயிச்சிருக்கோம்.. இதுக்கு முழு காரணம் நம்ம அல்லிமலர்தான்” என்றவன் பக்கத்தில் இருந்த அல்லிமலரின் தோளில் கைகளை வைக்க அவள் நெளிந்து கொண்டே அவன் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “தேங்க்யூ சார்” என்று கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள்..

“இந்த சந்தோஷமான விஷயம் நடந்ததுனால உங்க எல்லாருக்குமே அடுத்த மாசம் இன்கிரிமெண்ட் உண்டு..” என்று அவன் கூறவும் எல்லோரும் ஆரவாரமாக கைதட்டினார்கள்.. “என்ஜாய் த பார்ட்டி” என்று சொல்லி அவன் நேரே சென்று மது அருந்த ஆரம்பித்தான்..

அங்கே அந்த பார்ட்டியில் மது அருந்த அனுமதி உண்டு என்று தெரிந்திருந்தால் அல்லி அதற்கு வரவே சம்மதித்திருக்கமாட்டாள்.. ஏதோ ஒரு காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்திருப்பாள்.. ஆனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவள் திடீரென ஏதோ தோன்ற நேரே மிதுனிடம் சென்று “சார்.. ஒரு நிமிஷம்..” என்றாள்.

“மிஸ்.அல்லி மலர்.. சொல்லுங்க.. என்ன விஷயம்.. உங்களுக்கு ஏதாவது ட்ரிங்க்ஸ் வேணுமா?” என்று அவன் வாய்குழறியபடி கேட்டான்..

“அய்யய்யோ.. இல்ல சார்.. எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.. எனக்கு உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு.. நான் கிளம்பி வீட்டுக்கு போயிட்டு வரேன் .. நாளைக்கு யூஷ்வல் டைமுக்கு வேலைக்கு வந்துடறேன் ..” தலையில் கையை வைத்து படி சொன்னாள் அவள்..

“ஓ.. மிஸ்.அல்லி.. உடம்பு சரியில்லையா உங்களுக்கு?” இன்று அக்கறையாய் கேட்பது போல் கேட்டவன் அவள் தலையில் தன் கையை பார்க்க சட்டென பின்னே நகர்ந்தாள் அல்லி..

“அது ஒன்னும் இல்ல சார்.. பெருசா ஒன்னும் இல்ல.. லேசா தலை வலிக்குது.. அதான்..” அவள் அங்கிருந்து எப்படியாவது கிளம்பி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒரு சாக்கு சொன்னாள்..

“எப்படி தனியா போவீங்க? வெயிட் பண்ணுங்க.. 10 மினிட்ஸ்ல நானே உங்களை கொண்டு போய் விட்டுடறேன் உங்க வீட்ல” என்றான் மிதுன்…

அல்லியோ “கிழிஞ்சுது.. இவன்கிட்டேருந்து தப்பிக்கறதுக்குதான் நான் வீட்டுக்கு போறேன்னே சொல்றேன்.. இவன் கொண்டுவிட்டான்னா நான் உருப்படியா வீட்டுக்கு போன மாதிரிதான்..”

இப்படி மனதில் நினைத்தவள் அதை வெளியில் சொல்ல முடியாமல் “இல்லை சார்.. பரவால்ல.. நீங்க ஃபுல் பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க.. நான் ஆட்டோல போய்க்கிறேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்று சொல்லி சமாளித்து அவனிடம் இருந்து சட்டென விலகி கிளம்பி விட்டாள்..

மணி அப்போதே இரவு 7 மணி ஆகி இருந்தது.. வெளியே வந்து நின்றவளுக்கு ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை..

ஓலா ஊபர் என்று அத்தனை செயலிகளிலும் முயற்சி செய்து அதிலும் கிடைக்காமல் போகவே “என்ன பண்ணறது இப்போ.. சரி பஸ் புடிச்சு போலாம்..” என்று எண்ணிக்கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

சிறிது தூரம் நடந்து இருப்பாள்..

அந்த தெருவின் முனையில் பல நாள் அழுகடைந்த தாடியும் பரட்டை தலையும் கொண்டு கிழிந்த உடைகள் அணிந்த ஒரு மனநிலை சரியில்லாத நபர் அவள் அருகில் வந்தார்..

“நீ என்னை விட்டு போயிருவியா? சொல்லு.. நீ என்னை விட்டு போயிடுவியா?”

அவர் அவளை நெருங்கி வர அவரை பார்க்க பாவமாய் இருந்தாலும் அப்போது இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறிது பயந்துதான் போனாள் அல்லி..

ஆனாலும் தைரியத்தை  வரவழைத்துக்கொண்டு “ஐயா நீங்க யாரு? இங்க என்ன பண்றீங்க? நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே” குரலில் சிறு நடுக்கத்துடனே கேட்டாள் அவள்..

அந்த ஆள் அவள் தோள் இரண்டையும் பிடித்துக் கொண்டு “வா போலாம் வீட்டுக்கு.. நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்.. நீ என்னை விட்டு எங்கேயும் போயிராத” என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுக்க அவளுக்கு நிஜமாகவே பயம் பிடித்துக் கொண்டது..

என்ன செய்வது என்று புரியாமல் கலவரப்பட்டவள் அவர் கையை எடுத்து விட அவர் அவளை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு “என்னை விட்டு ஓட பார்க்கிறாயா?” என்று அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்..

இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் “ஐயா..சொன்னா கேளுங்க.. நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லை.. என்னை விட்டுடுங்க..” பயத்தில் உடல் நடுங்க அவள் அவருக்கு புரிய வைக்க முயல அந்த ஆளுக்கு இன்னும் வெறியேறியது..

அவள் திமிற திமிற அவள் தோள் இரண்டையும் இறுக்க பிடித்து அவளை அணைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தார் அந்த மனநிலை சரியில்லாதவர்.. “உன்னை விடவே மாட்டேன்.. விடவே மாட்டேன்.. இனிமே என்னை விட்டு நீ போகவே முடியாது” என்று சொல்லி அவளை பலவந்தமாய் கட்டி அணைக்க முயன்று கொண்டு இருந்தான்..

அப்போது தங்களை கடந்து ஒரு கார் செல்லவும் அவள் “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று சத்தமாக கத்த ஆரம்பித்தாள்.‌.

சிறிது தூரம் முன்னே சென்று நின்ற கார் மறுபடியும் அவர்களை நோக்கி வந்ததும் நிச்சயம் உதவி கிடைத்துவிடும் என்று நம்பி அந்த காரை  பார்த்தாள்..

ஆதித்யா அந்த காரினிலிருந்து இறங்கி வெளியே வரவும் உதவி கிடைக்கப் போகிறது என்று எண்ணி மலர்ந்திருந்த அவள் முகம் வாடிய மலராய் கூம்பி போனது..

தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!