அத்தியாயம் 11
“என்ன யோசனை பல்லவி” என்று சங்கவி கேட்டிட , “ஒன்னும் இல்லை அத்தாச்சி” என்று கூறிய பல்லவி, “எனக்கு தூக்கம் வருது” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
அவன் கொடுத்த புடவையை பார்த்துக் கொண்டே இருந்தாள். எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரிய வில்லை.
சங்கவி அவளது அறைக் கதவை தட்டிய பிறகே அவள் கண் விழித்து எழுந்தாள். அவசரமாக அந்த புடவையை மறைத்து விட்டு கதவைத் திறந்தாள் பல்லவி.
“என்ன பவி கதவை திறக்க இவ்வளவு நேரமா” என்ற சங்கவியிடம், “தூங்கிட்டேன் அத்தாச்சி” என்று அவள் கூறிட, “சரி சரி போயி குளிச்சிட்டு ரெடியாகு மண்டபத்துக்கு போகனும்ல” என்றாள் சங்கவி.
“இதோ கிளம்புறேன் அத்தாச்சி” என்று அவள் கூறிட , “ஏய் பல்லவி ஒரு நிமிஷம்” என்ற சங்கவி அறைக்குள் நுழைந்தாள். பல்லவி சரியாக மறைத்து வைக்காத புடவை அவள் கண்ணில் பட்டது. “இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு பவி இதையே நீ கட்டிக்கோ” என்று கூறினாள் சங்கவி.
“இல்லை அத்தாச்சி” என்று அவள் ஏதோ சொல்ல வர , “நான் தான் சொல்றேன்ல இது உனக்கு ரொம்ப அழகா இருக்கும் இதை தான் நீ கட்டுற” என்று சொல்லி விட்டு சங்கவி சென்று விட பல்லவி குளியலறைக்குள் நுழைந்தாள்.
“என்ன பங்காளி இன்னும் ரெடியாகாமல் என்ன பண்ணுற” என்று வந்தான் திலீப் வர்மன். “மாப்பிள்ளை நீயா? அவனா? நீ என்னமோ மாப்பிள்ளை மாதிரி வந்திருக்க” என்ற ரஞ்சித்திடம் , “துணை மாப்பிள்ளைடா” என்றான் திலீப். “நடத்து, நடத்து” என்ற ரஞ்சித், “ஏன் டா நீ என்ன எதையோ பரிகொடுத்தவன் போல உட்கார்ந்து இருக்க” என்றான் ராகவ்வை பார்த்து.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே” என்ற ராகவ் கிளம்ப ஆரம்பித்தான்.
“அம்மா நான் எப்படி இருக்கேன்” என்ற சாம்பவியிடம் , “என் பொண்ணு அழகி இல்லையா நீ தேவதை மாதிரி இருக்க” என்ற வைதேகி மகளுக்கு நெற்றி வழித்து சொடுக்கிட்டவர் , “சரி சரி நேரம் ஆச்சு கிளம்பலாம்” என்று கூறிட சாம்பவியும் கிளம்பினாள்.
“பவி செமையா இருக்க டீ இந்த புடவையில்” என்ற சங்கவி, “இந்த புடவை எங்கே எடுத்த” என்றிட பல்லவி திறு திறுவென முழிக்க ஆரம்பித்தாள்.
“என்ன டீ இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்கீங்க” என்று வந்த செல்வராணி , “அம்மு” என்று மருமகளை அழைத்தார். “ரொம்ப அழகா இருக்க அம்மு” என்று மருமகளைக் கொஞ்சினார் செல்வராணி.
“சரி, சரி நேரமாச்சு கிளம்புங்க” என்று செல்வராணி கூறிட பல்லவி, சங்கவி இருவரும் கிளம்பினர்.
சொந்த பந்தங்கள் நிறைந்து வழிந்தனர் அந்த மண்டபத்தில். “என்ன தம்பி இது இத்தனை பேருக்கு சொல்லி இருக்க” என்ற செல்வராணியிடம் , “நான் எங்கே சொன்னேன் அம்மாவும், மகளும் தான் மாப்பிள்ளைகிட்ட சொல்லி பத்திரிக்கை அடிச்சு இத்தனை பேருக்கு சொல்லி இருக்காங்க” என்றார் வாசுதேவன்.
“செலவு எல்லாம் என்ன அம்மாவும், மகளுமா செய்யுறாளுங்க” என்ற செல்வராணியிடம், “விடுங்க அத்தை அவங்க ஆசைப் பட்டு இதெல்லாம் செஞ்சுருக்காங்க” என்றாள் பல்லவி.
“நீ இப்படியே ஏமாளியா இரு” என்று கூறிய செல்வராணி ஏதோ சொல்ல வர, “ஏன் மதனி இதுவே பல்லவிக்கு இப்படி ஆடம்பரமா நிச்சயதார்த்தம் பண்ணினால் செலவு பற்றி பேசுவீங்களா? சாம்பவி கூட உங்க தம்பிக்கு பிறந்த பொண்ணு தான் அவளோட ஆசையை தயவு செய்து தப்பு சொல்லாதீங்க” என்று வைதேகி கூறிட , “ஏய் அவங்க என் அக்கா” என்றார் வாசுதேவன்.
“வாசு விடு” என்ற செல்வராணி , “போயி சம்பந்தி வீட்டுக்காரங்களை கவனி” என்று கூறி விட்டு ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள அவருடனே சங்கவி, பல்லவி இருவரும் அமர்ந்தனர்.
“எங்கே நம்ம ஆளைக் காணோம்” என்று பல்லவியை தேடிக் கொண்டு இருந்தான் திலீப் வர்மன். அவள் தன் அத்தை செல்வராணியின் அருகில் அமர்ந்திருந்தாள். “இங்கே தான் இருக்கியா” என்று நினைத்தவன் செல்வராணியின் அருகில் வந்தான்.
“ஹாய் அம்மா” என்று அவன் கூறிட , “வா தம்பி எப்படி இருக்க” என்றார் செல்வராணி. “நல்லா இல்லைம்மா” என்ற திலீப்பிடம், “ஏன் என்னாச்சுப்பா” என்றார் செல்வராணி.
“பின்னே என்ன நான் நேற்றே உங்க கிட்ட என்ன சொன்னேன் என்னை உங்க பையனா நினைச்சு உங்க தம்பி பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னேன்ல அது பத்தி என் மாமனார் கிட்ட பேசுனீங்களா?” என்றான் திலீப் வர்மன்.
“மாமனாரா!” என்ற செல்வராணியிடம், “அதான் உங்க தம்பி பல்லவியோட அப்பா” என்றான் திலீப் வர்மன்.
“திலீப் என்ன பேசிட்டு இருக்க” என்ற பல்லவியிடம், “இதோ பாரு பவி நான் உன் கிட்ட பேசவில்லை என் அம்மாகிட்ட என் கல்யாணம் விசயமா பேசிட்டு இருக்கேன்” என்றான் திலீப் வர்மன்.
“உன் அம்மா வா அவங்க என் அத்தை என்றாள் பல்லவி. உனக்கு அத்தைனா எனக்கு அம்மா தான் உறவு முறை எல்லாம் கரெக்டா தானே சொல்றேன்” என்றான் திலீப் வர்மன்.
“திலீப்” என்று அவள் பற்களைக் கடித்திட, “வெறும் பல்லை கடிக்காதே பவி நான் வேணும்னா முறுக்கு வாங்கித் தரேன் அதைக் கடி” என்று அவன் கூறிட அவனை மேலும் முறைத்தாள் பல்லவி.
“அத்தை அவன் உங்க கிட்ட ப்ராங்க் பண்ணிட்டு இருக்கான். இவனுக்கு வேற வேலையே இல்லை இவன் சொல்லுவதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க” என்ற பல்லவி , “திலீப் என் கூட வா” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“என்ன டா உன் பிரச்சினை” என்ற பல்லவியிடம், “எனக்கு என்ன பிரச்சினை உனக்கு தான் பிரச்சினை இருக்கும் போல அதுவும் மூளையில்” என்றான் திலீப் வர்மன்.
அவனை அவள் முறைத்திட, “என்னடீ ஓவரா பண்ணிட்டு இருக்க சும்மா சும்மா ப்ராங்க் ப்ராங்க்னு சொல்லிட்டு இருக்க ப்ராங்க் எது நிஜம் எதுன்னு கூட உனக்கு புரியாதா” என்றான் திலீப்.
“திலீப் எனக்கு உன்னை பிடிக்கவில்லை தயவு செய்து என்னை விட்டுரு தொல்லை பண்ணாதே” என்றாள் பல்லவி. “அப்படியா பிடிக்கலையா பரவாயில்லை கல்யாணம் பண்ணி வாழ ஆரம்பித்தால் தானா பிடிச்சுறப் போகுது” என்றான் திலீப் கூலாக.
“இதோ பாரு பவி எப்பவோ நடந்த விஷயங்களை நினைச்சுக்கிட்டு நம்ம ஃப்யூச்சரை ஸ்பாயில் பண்ணாதே திரும்ப திரும்ப சொல்றேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ.
அப்பறம் இந்த புடவையை கட்ட மாட்டேன்னு சொன்ன ஏன் கட்டிருக்க அப்போ என்னை பிடிக்கலைனு சொன்னது பொய் தானே” என்றான் திலீப்.
“பிடிக்காதவன் வாங்கி கொடுத்த புடவையை எந்த பொண்ணும் கட்டிக்க மாட்டாள்” என்ற திலீப், “எவ்வளவு அழகா இருக்க தெரியுமா சத்தியமா சொல்றேன் டீ பெங்களூர் தக்காளி போல இருக்கிற உன் கன்னத்தை கடிச்சு சாப்பிடனும் போல இருக்கு” என்றான் திலீப்.
அவனை முறைத்தவள் ஏதோ சொல்ல வர, “அடுத்த முகூர்த்தத்தில் உன் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குதோ இல்லையோ நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் வரட்டா” என்றவன் அக்கம் பக்கம் பார்த்து விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு சென்று விட்டான். அவளுக்கு தான் ஐயோ என்று இருந்தது.
“அக்கா” என்று அவன் அழைத்திட திரும்பி பார்த்தாள் சங்கவி. “வாங்க திலீப்” என்று சங்கவி கூறிட , “என்ன வாங்க திலீப்பா நான் உங்களை பாசமா அக்கான்னு கூப்பிடுறேன் நீங்க என்னடான்னா வாங்க திலீப்னு சொல்லுறீங்க வாடா தம்பினு உரிமையா கூப்பிட மாட்டீங்களா” என்றான் திலீப் வர்மன்.
அவனைப் பார்த்து புன்னகைத்த சங்கவி “சரிடா தம்பி சாப்பிட்டியா” என்றாள். “இது இப்போ தான் என் அக்கா” என்ற திலீப் “சாப்பிடவில்லை அக்கா. கவனிப்பே சரியில்லை. ஒரு வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை சபைக்கு வந்தால் விழுந்து விழுந்து கவனிப்பாங்கனு பெயர். இங்கே என்னன்னா என்னை யாருமே கண்டுக்கவே இல்லை” என்று அவன் கூறிட “என்ன மூத்த மாப்பிள்ளையா!” என்று அதிர்ந்தாள் சங்கவி.
“என்ன ஆச்சரியமா கேட்கிறீங்க இந்த தக்காளி ஸாரி ஸாரி இந்த பல்லவி உங்க கிட்ட எதுவுமே சொல்லலையா” என்றான் திலீப்.
“எதைப் பற்றி தம்பி அவள் எதுவுமே சொல்லலையே” என்றாள் சங்கவி. “பாருங்கக்கா அவளுக்கு கொழுப்பை நைட்டு அவளைப் பார்க்க பைப் எல்லாம் ஏறி வந்து புடவையை கொடுத்துட்டு நம்ம லவ் மேட்டர் பற்றி வீட்டுல பேசுடீனு சொல்லிட்டு வந்தேன் பாதகத்தி உங்க கிட்ட கூட சொல்லாமல் ஏமாத்திட்டாளேக்கா” என்று வராத கண்ணீரை சுண்டி விட, “அடப்பாவி அப்போ அந்த புடவையை நீ தான் வாங்கிக் கொடுத்தியா? அந்த பல்லவி அதான் புடவையை மறைச்சு வச்சுருந்தாளா எங்கே அவள் இருக்கட்டும் அவளை வச்சுக்கிறேன்” என்றாள் சங்கவி. “அக்கா அவளை நீங்களே வச்சுக்கிட்டால் தப்பா போயிரும் கல்யாணம் பண்ணி என் கூட அனுப்பி வைங்க காலம் பூராவும் கண் கலங்காமல் நான் வச்சுக்கிறேன்” என்று திலீப் கூறிட சங்கவி கலகலவென சிரித்து விட்டாள்.
“நீங்க எவ்வளவு நாளா காதலிக்கிறீங்க” என்ற சங்கவியிடம், “எட்டு வருசமா லவ் பண்ணுறோம்க்கா” என்று திலீப் கூறிட, “என்னது எட்டு வருசமா லவ் பண்றீங்களா” என்று அதிர்ந்து போனாள் சங்கவி.
“என்ன ராகவ் உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாதது போல இருக்க” என்ற ரஞ்சித்திடம் , “சத்தியமா விருப்பம் இல்லை டா ஆனால் வேற வழி இல்லை நான் சாம்பவியை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான் ராகவ்.
“பைத்தியமா நீ விருப்பம் இல்லைனு சொல்லிவிட்டு ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்கனும் பல்லவியை ரிஜெக்ட் பண்ணுனது போல சாம்பவியை ரிஜெக்ட் பண்ண வேண்டியது தானே” என்றான் ரஞ்சித்.
“என்னடா குத்திக் காட்டுறீயா” என்ற ராகவ்விடம், “கண்டிப்பா இல்லை. சீரியஸா தான் சொல்லுறேன்” என்ற ரஞ்சித் , “நீ சாம்பவியை லவ் பண்ணுற தானே அப்பறம் ஏன் கல்யாணம் பிடிக்கவில்லை” என்றிட, “ஐ லவ் பல்லவி டா” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டான் ராகவ்.
(…அடியே…)