அத்தியாயம் 12
“என்ன சொல்லுற தம்பி எட்டு வருசமா லவ் பண்றீங்களா! அப்பறம் ஏன் அவள் கல்யாணம் பண்ணிக்க பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரும் போது எல்லாம் எதுவுமே சொல்லவில்லை” என்றாள் சங்கவி.
“அக்கா அந்த கல்யாணம் எல்லாம் பொண்ணு பார்க்க வந்ததோடு ஸ்டாப் ஆகிருச்சே” என்ற திலீப், “என் லவ் அவ்வளவு ஸ்ட்ராங்க் அதனால் தான் ராகவ் கூட என்கேஜ்மென்ட் வரை வந்து ஸ்டாப் ஆயிருச்சு” என்ற திலீப்பை பார்த்து சிரித்த சங்கவி , “அவளை கல்யாணம் பண்ணி வச்சா நல்லா பார்த்துப்பியா?” என்றாள்.
“என் உயிரை விட பத்திரமா பார்த்துக்கிறேன் என்னை நம்பலாம் அக்கா” என்றான் திலீப். “கவலையே படாதே உன் மாமா அதான் என் கணவர் இரண்டு நாளில் வந்துருவாரு அவர்கிட்டேயும் பேசிட்டு மாமா கிட்ட பேசி உன் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றாள் சங்கவி.
“தேங்க்ஸ் அக்கா” என்ற திலீப்பிடம் , “அக்காவுக்கு யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா இது என்னோட கடமை தம்பி” என்ற சங்கவி, “சரி ,சரி இந்த விசேஷத்தை இப்போ முடிக்கலாம்” என்றாள்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்க திலீப் அத்தாச்சிகிட்ட போயி என்ன சொல்லி வச்ச என்னை முறைச்சுட்டே இருக்காங்க” என்று கேட்ட பல்லவியிடம், “நம்ம காதல் கதையை சொன்னேன் டீ செல்லம்” என்றான் திலீப்.
அவனை முறைத்தவள் ஏதோ சொல்ல வர, “நானும், நீயும் எட்டு வருசமா லவ் பண்றோம்னு மட்டும் தான் சொன்னேன் வேற எதுவும் சொல்லவில்லை” என்ற திலீப் , “பவி என்னைக்கோ நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் அதை உன் மனசுல வச்சுக்கிட்டு இன்னைக்கு என்னை தண்டிக்காதேடீ இந்த உலகத்தில் உன்னை விட்டால் எனக்குனு யாருமே இல்லை” என்று கூறி விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “சரி போயி பங்சனை கவனிப்போம்” என்றான்.
அவன் சொன்ன வார்த்தை அவள் மனதை அழுத்திக் கொண்டே இருக்க இதை யாரிடம் கேட்பது என்று அவள் யோசித்துக் கொண்டே வர ரஞ்சித் அவள் கண்களில் பட்டான்.
அவனை நெருங்கி “ரஞ்சித்” என்ற பல்லவியிடம், “சொல்லு பல்லவி” என்றான் ரஞ்சித். “திலீப்போட பேரன்ட்ஸ் ராகவ் ஃபேமிலிக்கு நல்ல பழக்கம் தானே” என்றாள் பல்லவி. “ஆமாம்” என்ற ரஞ்சித்திடம், “அப்பறம் ஏன் அவங்க யாரும் என்கேஜ்மென்ட்டுக்கு வரவில்லை” என்றாள் பல்லவி.
“உயிரோட இருந்தால் தானே வர முடியும்” என்ற ரஞ்சித் , “அவங்க ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டாங்க” என்றான் .
“எப்போ , எப்படி?”என்ற பல்லவியின் கண்கள் கலங்கிட , “அது ஆச்சு ஏழு வருஷம்” என்று ரஞ்சித் கூறிட, “ஏன் என் கிட்ட நீ கூட சொல்லவில்லை” என்றாள் பல்லவி.
“இதோ பாரு பல்லவி உனக்கும், திலீப்க்கும் நடுவில் என்ன இருக்குனு எல்லாமே எனக்கு தெரியும். அன்னைக்கு அவன் பண்ணினது தப்பு தான் நான் மறுக்கவே இல்லை ஆனால் அவனுக்கு இப்போ உன்னை தவிர யாரும் இல்லை அவனை நீ மன்னிக்கலாமே” என்றான் ரஞ்சித்.
அவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க, “பல்லவி” என்று அவன் மேலும் ஏதோ சொல்ல வர , “ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை” என்றாள் பல்லவி. “அவன் இருந்த மைண்ட் செட் அப்பறம் நீ இருந்த மைண்ட் செட் எல்லாம் யோசிச்சு தான் உன் கிட்ட எதுவும் சொல்லவில்லை” என்ற ரஞ்சித், “திலீப் ரொம்ப நல்லவன் பல்லவி அவனை புரிஞ்சுக்கோ” என்றான்.
“இங்கே எல்லோருமே நல்லவங்க தான் ரஞ்சித் அவங்கவங்களுக்கு. ஈசியா அவன் பண்ணினது தப்பு தான் மறந்துருன்னு சொல்லுறீங்க வலியை அனுபவிச்சது நான் தானே உயிரை கொலை பண்ணுறது மட்டும் கொலை இல்லை மனசை கொல்லுறதும் கொலை தான். என்னால மறக்க முடியலை அவனை நேசிச்சதையும், அவன் கொடுத்த ஏமாற்றத்தையும் மறக்கவே முடியலை. என்னைக்கோ செத்துப் போன என் மனசை அவன் என்ன பண்ணினாலும் சரி பண்ண முடியாது” என்ற பல்லவி சென்று விட்டாள்.
ராகவ்வை முறைத்துக் கொண்டே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான் ரஞ்சித். ராகவ் பல்லவியை விரும்புவதாக சொன்னதை அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பல்லவியை விரும்பினாலும் சாம்பவியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதை தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “பல்லவி கூட என்கேஜ்மென்ட் நடக்க இருந்தப்போ சாம்பவியை லவ் பண்றேன்னு சொன்னான். இப்போ சாம்பவி கூட என்கேஜ்மென்ட் நடக்க போகுது இப்போ ஐ லவ் பல்லவினு சொல்லுறான். இவன் என்ன முட்டாளா?” என்று தான் யோசித்தான் ரஞ்சித்.
“என்ன மச்சி ஏதோ பலமா யோசிக்கிற” என்று வந்தான் திலீப் வர்மன். “உன் ஆளு உன்னை ஏன் செருப்பால அடிக்கலைனு யோசிக்கிறேன்” என்றான் ரஞ்சித்.
“ஏன் டா ஏன் விட்டால் அவள் கையில் செருப்பை எடுத்துக் கொடுத்து என்னை அடிக்க சொல்லுவ போல” என்றான் திலீப் வர்மன்.
“சொன்னால் என்ன தப்பு கொழுப்பெடுத்த நாயே ப்ராங்க் பண்ணுறேன்னு அந்த புள்ளையை அன்னைக்கு வெறுப்பேத்தி விட்டுட்டு எட்டு வருசமா தப்பிச்சோம், பிழைச்சோம்னு வெளிநாட்டுக்கு ஓடிட்டு இப்போ வந்து என்னை கட்டிக்கோனு சொல்லி அவளை லவ் பண்ணுறது மட்டும் இல்லாமல் உன் இத்துப் போன காதலுக்கு என்னை வேற ஹெல்ப் பண்ண சொல்லி உயிரை வாங்குறீயேடா” என்றான் ரஞ்சித்.
“உனக்கு வேற வழி இல்லை மச்சி தோள் கொடுப்பான் தோழன், தோள் மட்டும் இல்லை சமயத்தில் உயிரை கூட கொடுப்பான் நான் என்ன உன்னை உயிரையா கொடுக்க சொல்றேன் என் ஆளை கரைக்ட் பண்ணுறதுக்கு ஹெல்ப் தானே பண்ண சொல்றேன். ஒரு சின்ன அங்கிள் ஆஃப் இந்தியா வேலை தானே” என்றான் திலீப் வர்மன் கூலாக.
“ஏன்டா நாயே உன்னை” என்று அவனை விரட்ட ஆரம்பித்தான் ரஞ்சித்.
“என்னாச்சு ராகவ் ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்ற புவனேஸ்வரியிடம், “ஒன்றும் இல்லையே” என்று சமாளித்தான் ராகவ்.
“அன்னைக்கு பல்லவியை பிடிக்கலைன்னு சொன்னது போல இன்னைக்கு சாம்பவியையும் பிடிக்கலைனு சொல்லிராதே” என்ற புவனேஸ்வரியிடம், “இல்லைம்மா அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்” என்றான் ராகவ்.
“உன்னை நம்ப முடியலையே டா” என்று கூறிய புவனேஸ்வரி தன் கணவன் சிவச்சந்திரனோடு சபையில் அமர்ந்தார்.
வாசுதேவன், வைதேகி தம்பதியர் ஒருபுறம் அமர்ந்திருக்க எதிர் புறமாக சிவச்சந்திரன், புவனேஸ்வரி தம்பதியர் அமர்ந்திருந்தனர். நிச்சயதார்த்த ஓலை வாசிக்க இரண்டு தம்பதியரும் தட்டுத் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். சங்கவி, திலீப் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த பல்லவியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவ்.
திலீப் ஏதோ வம்பு செய்ய அவனை தன் முட்டைக் கண்களை உருட்டி உருட்டி முறைத்துக் கொண்டு இருந்தாள் பல்லவி. திலீப் அவளுடன் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்ட ராகவ்விற்கு உள்ளுக்குள் புகைச்சலாக தான் இருந்தது. “அன்று மட்டும் நான் என் முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் பல்லவி என் மனைவியாக இருந்திருப்பாள்” என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்க அவனை முறைத்த சாம்பவி அவனது விரலில் மோதிரம் அணிவித்தாள்.
“ராகவ் எங்கே பார்த்துட்டு இருக்கீங்க” என்று அடிக்குரலில் மெல்லமாக அவனிடம் சீறினாள் சாம்பவி. “திலீப்” என்று அவன் ஏதோ சமாளிக்க அவன் முன் தன் விரலை நீட்டினாள் சாம்பவி.
அவளது விரலில் மோதிரம் அணிவித்தவனது பார்வை மீண்டும் பல்லவி மீது விழ, “அங்கே என்ன பார்வை” என்றான் ரஞ்சித் நண்பனின் காதில்.
“சும்மா” என்று ராகவ் சமாளிக்க, “பிச்சுருவேன் ஒழுங்கா சாம்பவியை மட்டும் பாரு” என்று ரஞ்சித் நண்பனை எச்சரிக்க அவன் கஷ்டப்பட்டு பார்வையை திருப்பினான்.
“சாப்பிட போகலாமா டீ” என்று சங்கவி கேட்டிட, “போகலாம் அத்தாச்சி” என்று பல்லவி எழுந்து கொள்ள, “என்னை விட்டுட்டு போறீங்க இரண்டு பேரும்” என்றான் திலீப்.
“நீயும் வா தம்பி” என்ற சங்கவியிடம், “நீங்க கூப்பிடுறீங்க பவி கூப்பிட மாட்டேங்கிறாளே” என்ற திலீப்பை முறைத்தாள் பல்லவி.
“பாருங்க அக்கா எப்படி முறைக்கிறாள்னு” என்ற திலீப்பை பார்த்து புன்னகைத்த சங்கவி, “பவி அவனை கூப்பிடு டீ” என்று கூறிட, “அவளும் தலையசைத்து விட்டு திலீப் வா சாப்பிட போகலாம்” என்று அழைத்தாள் பல்லவி.
“வரேன் பவி” என்ற திலீப் அவளது கையை பிடித்துக் கொள்ள, “தம்பி இன்னும் உங்க லவ் பற்றி நான் மாமா கிட்ட பேசலை கொஞ்சம் அடக்கி வாசிப்பா” என்றாள் சங்கவி.
“சரிங்க அக்கா” என்ற திலீப் அமைதியாக அவர்களுடன் சாப்பிட சென்றான்.
“ராகவ் வாடா சாப்பிட போகலாம்” என்று ரஞ்சித் அழைத்திட சாம்பவியுடன் சென்றான் ராகவ்.
அங்கேயும் திலீப் பல்லவியிடம் வம்பு செய்து கொண்டே சாப்பிட அவர்களைக் கண்ட சாம்பவிக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது. ராகவ்விற்கோ மனம் வலித்தது.
“என்ன பண்ணுற திலீப்” என்ற பல்லவியிடம், “உனக்கு லட்டு பிடிக்காது தானே டீ அதான் உன் இலையில் இருந்து லட்டை நான் எடுத்துக்கிட்டேன். இந்த லட்டு உன் கன்னம் மாதிரி சாஃப்ட்டா இருக்கு” என்று கூறிய திலீப் அவளைப் பார்த்து கண்ணடிக்க பல்லவி தான் கடுப்பாகினாள்.
“சரி ,சரி முறைக்காதே இலையை பார்த்து சாப்பிடு” என்ற திலீப் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.
“என்ன வாசு இங்கே வந்து நின்னுட்டு இருக்க” என்ற செல்வராணியிடம், “சாம்பவியோட கல்யாணம் முடிவாகிருச்சு அதே போல பல்லவியோட கல்யாணமும்” என்று வருந்தினார் வாசுதேவன். “நம்ம பல்லவியை உண்மையா நேசிக்கிற ஒருத்தனுக்கு அவளை கட்டிக் கொடுப்பியா வாசு” என்று செல்வராணி கேட்டிட, “அப்படி ஒருத்தன் இருக்கானா? அக்கா” என்றார் வாசுதேவன்.
“பல்லவியை கல்யாணம் பண்ணி கொடுங்க என் உசுரை விட பத்திரமா பார்த்துக்கிறேன்னு சொல்லுற ஒரு மாப்பிள்ளை நான் பார்த்திருக்கேன்” என்றார் செல்வராணி.
“யாருக்கா அது” என்ற வாசுதேவனிடம், “நம்ம பவியோட ஃப்ரெண்ட் அந்த திலீப் தம்பி தான்” என்றார் செல்வராணி.
“அந்த பையனா?” என்று அதிர்ந்த வாசுதேவன், “இந்த கல்யாணம் நடக்காது” என்றார் கோபமாக.
(…அடியே…)