அடியே என் பெங்களூர் தக்காளி…(24)

4.7
(21)

அத்தியாயம் 24

 

“என்ன ராகவ் என் கிட்ட பேச மாட்டேங்கிறீங்க” என்ற சாம்பவியிடம், “கொஞ்சம் தலை வலிக்குது சாம்பவி” என்று கூறிய ராகவ் “அப்பா கிளம்பலாமா?” என்றான்.

 

“கிளம்பலாம் ராகவ்” என்ற சிவச்சந்திரன் தன் குடும்பத்துடன் கிளம்பி விட வாசுதேவன் அவர்களை வழியனுப்பி வைத்தார்.

 

“என்ன ராகவ் வீட்டுக்கு வந்ததில் இருந்து இந்த ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடக்க” என்றார் சிவச்சந்திரன். “மனசு சரியில்லை அப்பா” என்ற ராகவ், “உங்களுக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரியுமா? அப்பா” என்றான் ராகவ்.

 

“நீ என் பையன் டா உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன” என்றார் சிவச்சந்திரன். “இல்லைப்பா உங்களுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியாது” என்ற ராகவ் கண்கள் கலங்கிட, “ராகவ் ஏன் டா அழற என்னாச்சுப்பா” என்றார் சிவச்சந்திரன்.

 

அவரைக் கட்டிக் கொண்டு அழுதவன் “எனக்கு எல்லாமே தெரியும் அப்பா” என்று கூறி அழுதான். “என்ன தெரியும்” என்ற சிவச்சந்திரனிடம், “சாம்பவி” என்று தயங்கியவன், “நீங்களும், வாசுதேவன் அங்கிளும் பேசிக்கிட்ட விஷயம் எனக்கு தெரியும்” என்ற ராகவ் கூற ஆரம்பித்தான்.

 

 

“என்ன வாசு ஏதோ பேசணும்னு வரச் சொல்லிட்டு அமைதியா இருக்க” என்ற சிவச்சந்திரனின் கையைப் பிடித்துக் கொண்ட வாசுதேவன், “என்னை மன்னிச்சிடு சிவா என்னால சத்தியமா உனக்கும், உன் குடும்பத்திற்கும் துரோகம் பண்ண முடியாது” என்று அழுதார்.

 

“என்ன சொல்லுற வாசு நீ என்ன துரோகம் பண்ண போற” என்ற சிவச்சந்திரனிடம், “நான் வாழ்க்கையில் பண்ணின பெரிய தப்பு வைதேகியை கல்யாணம் பண்ணி சாம்பவின்னு ஒரு சாக்கடையை பெத்தது தான்” என்ற வாசுதேவன் பல்லவி கூறிய விஷயங்களை நண்பனிடம் கூறினார்.

 

அனைத்தையும் கேட்டு முடித்த சிவச்சந்திரன், “ஏன் வாசு சாம்பவியோட புத்தி இவ்வளவு சாக்கடையா இருக்கு. உன் கிட்ட இருக்கிற ஒரு நல்ல குணம் கூட அவள் கிட்ட இல்லையா? பல்லவி யாரு அவளோட சொந்த அக்கா அவளோட வாழ்க்கையை கெடுக்க ச்சே இவ்வளவு கீழ்த்தரமான ஒரு வேலையை பார்த்து வச்சுருக்காள். என்னை மன்னிச்சிடு வாசு கண்டிப்பா சாம்பவியை என் மருமகளா ஏத்துக்க மாட்டேன் இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்றார் சிவச்சந்திரன்.

 

“சிவா அவள் பண்ணினது மன்னிக்கவே முடியாத தப்பு தான் நான் மறுக்கவே இல்லை. ஆனால் அவள் ஒரு பொண்ணு கல்யாணத்திற்கு முன்னே இழக்க கூடாத ஒன்றை இழந்துட்டாள். இனி ராகவ் தவிர அவளை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க இப்படி எல்லாம் நான் கேட்க மாட்டேன் சிவா. ராகவ் கிட்ட இந்த உண்மையை சொல்லுவோம் அவன் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்றார் வாசுதேவன்.

 

“சாம்பவியோட எண்ணம் என்ன பல்லவி கூட ராகவ்க்கு கல்யாணம் நடக்க கூடாது அது தானே நாம ஏன் பல்லவிக்கும், ராகவ்க்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது” என்று சிவச்சந்திரன் கூறிட, “எனக்கும் ஆரம்பத்தில் அந்த எண்ணம் தான் இருந்துச்சு சிவா ஆனால் பல்லவி மனசுல ராகவ் மேல பயங்கர வெறுப்பு இருக்கு. நேற்று நைட்டு திலீப் கிட்ட பல்லவி பேசிட்டு இருந்ததை கேட்டேன் அவளைப் பொறுத்தவரை ராகவ், சாம்பவி இரண்டு பேருமே துரோகிகள் தான்னு நினைக்கிறாள்” என்ற வாசுதேவன் , “அது மட்டும் இல்லை பல்லவி திலீப்பை காதலிக்கிறாள் அவளோட சந்தோஷத்தை என்னால கெடுக்க முடியாது சிவா” என்றார் வாசுதேவன்.

 

“எனக்கு புரியுது வாசு சரி திலீப், பல்லவி கல்யாணம் நல்லபடியாக முடியட்டும் அப்புறம் ராகவ் கிட்ட சாம்பவி பற்றி சொல்லுவோம் ஒருவேளை அவன் கிட்ட இப்போவே சொன்னால் பல்லவியோட கல்யாணத்தில் அவன் எதுவும் பிரச்சினை பண்ணிட்டால் அதனால் முதலில் பல்லவி, திலீப் கல்யாணம் முடியட்டும்” என்று சிவச்சந்திரன் கூறிட வாசுதேவன் நண்பனிடம் இருந்து விடைபெற்று சென்று விட்டார்.

 

எதார்த்தமாக ஜாக்கிங் சென்ற ராகவ் அவர்கள் பேசுவதைக் கேட்டு உடைந்து விட்டான்.

 

“அது மட்டும் இல்லை அப்பா திலீப் வீட்டில் நீங்க பேசியதையும் கேட்டேன். என்னை நீங்களும் புரிஞ்சுக்கவில்லை, ரஞ்சித்தும் புரிஞ்சுக்கவில்லை. பல்லவி என் மேல கோபமா இருக்காள்னா அவளோட வலி அப்படி. ஆனால் நீங்க கூட என்னை புரிஞ்சுக்கவில்லையே பல்லவி வைரம் தான் நான் மறுக்கவே இல்லை அந்த வைரத்தை நான் தொலைச்சுட்டேன் அது திரும்ப எனக்கு எப்பவுமே கிடைக்காது ஆனால் அதை நான் வேணும்னு தான் தொலைச்சேன்.

 

அவள் சாமிப்பா நான் அழுக்கு , எச்சில் இலை என்னை அந்த சாமிக்கு படைக்க கூடாதுப்பா அதனால் தான் அன்னைக்கு நிச்சியதார்த்தம் நடக்கும் போது அவளைக் காயப் படுத்தினேன். அவளைப் பிடிக்கவில்லைனு சொல்லி அவளே என்னை வெறுக்கும் படி செய்தேன். நான் நினைச்சதை விட அதிகமாகவே அவள் என்னை வெறுத்துட்டாள். சாம்பவி பண்ணினது தப்பாவே இருந்தாலும் அந்த பொண்ணை நான் தானே கெடுத்தேன். அவளே வேணும்னு பண்ணி இருந்தாலும் என்னால தானே. நீங்க தானே சொல்லி இருக்கீங்க பெண் பாவம் பொல்லாததுன்னு அதனால் தான் சொல்கிறேன் இப்போவும் நான் சாம்பவியை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்தில் தான் இருக்கிறேன். அவளைப் பற்றி தெரிந்த பிறகு கூட நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறதில் உறுதியா இருக்கேன் அப்போ அன்னைக்கு நான் அவளை பிடிச்சுருக்குனு சொன்னதில் தப்பு எதுவும் இருக்காப்பா?” என்றான் ராகவ்.

 

“நான் எப்படிப்பா பல்லவி வாழ்க்கையை கெடுப்பேன்னு நினைச்சுட்டீங்க பல்லவியை நான் இன்னும் நேசிக்கிறேன் அப்பா. அவள் எங்கே இருந்தாலும் சந்தோஷமா வாழனும் அது மட்டும் தான் என்னோட எண்ணம். அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தால் அன்னைக்கே நான் நிச்சயதார்த்தத்தை தடுத்து இருக்க மாட்டேனே” என்று அழுதான் ராகவ்.

 

அவனை அணைத்துக் கொண்ட சிவச்சந்திரன், “ஸாரி ராகவ் ரொம்ப, ரொம்ப ஸாரி டா அப்பா உன்னை புரிஞ்சுக்கவே இல்லை என்னை மன்னிச்சுருப்பா” என்று கண் கலங்கினார்.

 

“என்னை புரிஞ்சுக்கிட்டீங்க தானே அப்பா சத்தியமா சொல்றேன் அப்பா பல்லவியோட கல்யாணத்தில் என்னால எந்த பிரச்சனையும் வராது அதே நேரத்தில் சாம்பவியைத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான் ராகவ். “சரி ராகவ்” என்ற சிவச்சந்திரன் மகனை அணைத்துக் கொண்டார்.

 

“என்னம்மா உன் புருசனோட பொண்ணுக்கு சந்தோஷமா நிச்சயதார்த்தம் பண்ணி வச்சுட்ட போல” என்றாள் சாம்பவி. “வாய்த் திமிரா பேசாதே சாம்பவி அவர் என் புருஷன் மட்டும் இல்லை உன்னை பெத்த உன் அப்பா, அப்பறம் பல்லவி உன்னோட அக்கா அதை மறந்து விடாதே” என்றார் வைதேகி.

 

“அக்காவா அந்த குண்டச்சியா அவள் என்னை பொறுத்தவரை வேலைக்காரி அவ்வளவு தான். அவளுக்கு அந்த திலீப் கூட கல்யாணம் நடக்கவே கூடாது நான் நடக்கவும் விட மாட்டேன்” என்று பற்களைக் கடித்தாள் சாம்பவி.

 

“பைத்தியம் மாதிரி பேசாதே சாம்பவி கெடுவான் கேடு நினைப்பான் உன்னோட கல்யாணம் நடக்குமா? நடக்காதான்னு நானே கவலையில் இருக்கேன் நீ என்னடான்னா பல்லவி கல்யாணத்தை நடத்த விட மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க” என்ற வைதேகி, “எந்த தப்பும் பண்ணாதே சாம்பவி உன் கல்யாணம் முடியும் வரை” என்றார்.

 

“இவங்க இப்படித் தான் எதுனாலும் சொல்லுவாங்க அந்த பல்லவியோட கல்யாணத்தில் பிரச்சினை பண்ணனும்னா நம்மளால தனியா முடியாது. அந்த திலீப் ரொம்ப உஷாரான ஆளு போல தெரிகிறான். ராகவ் மாதிரி இளிச்சவாயன் கிடையாது” என்று யோசித்த சாம்பவி, “இதுக்கு அவரு தான் சரியான ஆளு” என்று முடிவு செய்து யாருக்கோ ஃபோன் செய்தாள்.

 

“என்ன சொல்லுற பவி ராகவ் உன் கிட்ட பேசணும்னு சொன்னானா” என்ற திலீப்பிடம் , “ஆமாம் திலீப் நீயும் என் கூட வாயேன்” என்றாள் பல்லவி.

 

“நான் எதுக்கு டீ என்ற திலீப்பிடம் நமக்குள்ள எந்த ரகசியமும் இருக்க கூடாதுனு நினைக்கிறேன் திலீப் அது மட்டும் இல்லை ராகவ் கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை ஆனால் அவரை அவாய்ட் பண்ணவும் முடியாது ஸோ நீ என் கூட வா திலீப் ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிட, “சரி, சரி வரேன்” என்று கூறிய திலீப், “வந்தால் எனக்கு என்ன தருவ” என்றான்.

 

“குச்சி மிட்டாய், குருவி ரொட்டி வாங்கித் தரேன் சாப்பிடு” என்றாள் பல்லவி. “எனக்கு என் தக்காளி தான் வேண்டும்” என்று அவளது கன்னத்தில் கிள்ளினான் திலீப் வர்மன்.

 

“ஆ ஆ வலிக்குது டா” என்று அவள் கூறிட, “வலிக்கட்டும், வலிக்கிற கன்னத்தில் ஒத்தடம் கொடுத்தால் சரியா போயிரும்” என்றான் திலீப் வர்மன். “ஒத்தடமா” என்று அவள் கேட்டிட, அவளது கன்னத்தில் முத்தமிட்டவன், “இது தான் என் ஒத்தடம்” என்று சிரித்தான்.

 

“பொறுக்கி பொறுக்கி கேப் கிடைக்கும் போதெல்லாம் கிடா வெட்டுவான் ராஸ்கல்” என்றாள் பல்லவி.

 

“சரி, சரி சாப்பிட வா உனக்காக இன்னைக்கு மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 எல்லாம் செஞ்சி வச்சுருக்கேன்” என்றான் திலீப் வர்மன்.

 

“டேய் இதெல்லாம் நான் சமைக்கனும்” என்ற பல்லவியிடம், “உனக்கு தான் சமைக்க வராதே அப்பறம் என்ன” என்றான் திலீப் வர்மன்.

 

“எனக்கு சமைக்க கத்துக் கொடுடா” என்ற பல்லவியிடம், “நீ ஏன் டீ சமைக்கனும் அதான் நான் இருக்கேன்ல” என்ற திலீப் ,அவளுக்கு உணவினை பரிமாறினான்.

 

“கல்யாணத்திற்கு அப்புறமும் நீ வீட்ல உட்கார்ந்து எனக்கு சமைச்சு போட்டுட்டு இருப்பியா?” என்ற பல்லவியிடம் , “சமைச்சு வச்சுட்டு ஆஃபீஸ் போறேன் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” என்ற திலீப்பை முறைத்தாள் பல்லவி.

 

“இதோ பாரு பவி உன்னை நான் ராணி மாதிரி பார்த்துப்பேன் என்னோட ராணி என்னை அதிகாரம் பண்ணனும், அவளுக்கு அவளோட ராஜா தான் சேவகம் பண்ணனும்” என்று கூறினான் திலீப் வர்மன்.

 

“சரி நெக்ஸ்ட் என்ன பண்ணுறதா ப்ளான்” என்ற பல்லவியிடம், “நான் ஃபாரின்ல சம்பாதிச்ச பணம் இருக்கு. அது போக அப்பா, அம்மா விட்டுட்டு போன ஐந்து வீட்டில் இருந்து மாசா மாசம் ரென்ட் வருது. எதுனாலும் பிசினஸ் பண்ணலாம்னு யோசிக்கிறேன்” என்றான் திலீப் வர்மன்.

 

“அப்போ அதற்கான வேலையை பார்க்கலாமே” என்ற பல்லவியிடம், “முதலில் நம்ம கல்யாணம் முடியட்டும் அப்பறம் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம் என்னோட பார்ட்னர் நீதான்” என்றான் திலீப் வர்மன்.

 

“அப்போ என்னோட பிசினஸ்”

என்று அவள் கூறிட , அவனோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.

 

 

(…அடியே…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!