அத்தியாயம் 29
“அவளை விடு இப்போ ராகவ் மனநிலை எப்படி” என்றாள் பல்லவி. “என் மனநிலையில் எந்த பிரச்சனையும் இல்லை பல்லவி இன்னும் சொல்லப்போனால் இன்னைக்கு நீங்க பார்த்தது எனக்கு ஒன்றும் புதுசு இல்லை. அந்த சதீஷ் கூட சாம்பவிக்கு ரொம்ப நாளாவே தொடர்பு இருக்கு” என்று ரஞ்சித் காட்டிய புகைப்படத்தை காட்டினான் ராகவ். “ச்சே என்ன பொண்ணு இவள் கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாமல் துரோகி. அவள் யாருக்குமே உண்மையா இருக்கவில்லை” என்ற பல்லவி, “ஸாரி ராகவ்” என்றாள்.
“நீ ஏன் பல்லவி ஸாரி கேட்கிற ஐ டிசர்வ்ட் இட். உண்மை எது , பொய் எதுன்னு தெரியாமல் அவளை நம்பினேன் பாரு அதற்கு கிடைத்த பரிசு” என்றவன் , “சரி நீங்க அதைப் பற்றி யோசிக்காமல் உங்க கல்யாண வேலையை பாருங்க” என்றான் ராகவ்.
“மாமா என் மேல நீங்க கோபமா இருப்பீங்கனு எனக்கு தெரியும். நான் பண்ணினது பெரிய தப்பு தான். என் அக்கா பொண்ணு மேல நான் உயிரையே வச்சுருக்கேன். அவளுக்கு புத்தி கெட்டுப் போய் இருக்கு. ஆனால் அதெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன் அதனால் சாம்பவியை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?” என்றான் சதீஷ்.
“அந்த தருதலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சதீஷ். அவளையும், அவளைப் பெத்த புண்ணியவதியையும் நான் தலை முழுகிட்டேன். அவளுக்கு சேர வேண்டிய பங்கை நான் கொடுத்துடுறேன் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறதைப் பற்றி உன் அக்கா கிட்ட தானா பேசிக்க. எனக்கு உன் மேல கோபம் இருக்கு ஆனால் நீ அவளோட முகத்திரையை கிழிச்சு என் பொண்ணு பல்லவி வாழ்க்கையில் சிக்கல் இல்லாமல் காப்பாத்தி இருக்க அதனால் உனக்கு ரொம்ப நன்றி” என்றார் வாசுதேவன்.
“வாசு என்ன பேசிட்டு இருக்க தப்பு பண்ணினாலும் சாம்பவி நீ பெத்த பொண்ணு. அவளோட கல்யாணத்தில் ஒரு அப்பாவா நீதான் கன்னிகாதானம் செய்து வைக்கனும்” என்று செல்வராணி கூறிட , “அக்கா ப்ளீஸ் நீங்க சொல்லி நான் ஒரு விஷயத்தை மறுத்ததா இருக்க வேண்டாம். இந்த விஷயத்தில் என்னை கட்டாயப் படுத்தாதீங்க” என்றார் வாசுதேவன்.
“என்ன டீ இன்னும் என்ன கூத்து எல்லாம் பண்ண காத்துட்டு இருக்க” என்ற வைதேகியிடம், “அம்மா ப்ளீஸ் என்னால உன் தம்பியை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் சாம்பவி. “ஏன் ,ஏன் முடியாது இன்னும் உனக்கு அந்த திலீப் மேல மோகம் குறையவில்லையா?” என்ற வைதேகியிடம், “அம்மா அசிங்கமா பேசாதீங்க” என்றாள் சாம்பவி.
“அசிங்கமா பேசுறேனா நீ அசிங்கமா தானே டீ நடந்துக்கிற பொண்ணா லட்சணமா நடந்துக்கோடீனு எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன் ஆனால் நீ” என்ற வைதேகி, “அந்த ராகவ் கூட அழகா உன்னோட கல்யாணம் நடந்து இருக்கும் தேவை இல்லாமல் பல்லவி வாழ்க்கையை கெடுக்கப் போறேன்னு சதீஷ் கூட ச்சீ சொல்லவே வாய் கூசுது என்ன பொண்ணு டீ நீயெல்லாம். இப்போ உன் வாழ்க்கை தான் சீரழிஞ்சு கிடக்குது இப்போவாச்சும் என் பேச்சைக் கேட்டு ஒழுங்கா சதீஷை கல்யாணம் பண்ணிக்கோ. இனி நம்ம இரண்டு பேரையும் உன் அப்பா ஏத்துக்கவே மாட்டாரு உன் வாழ்க்கை சீரழிஞ்சு போயிரும் மரியாதையோட வாழனும்னு நினைத்தால் தயவு செய்து சதீஷை கல்யாணம் பண்ணிக்கோ இல்லை முடியாதுன்னு முரண்டு பிடிச்சன்னா உன் அம்மாவை நீ உயிரோட பார்க்க முடியாது சொல்லீட்டேன்” என்றார் வைதேகி.
“அம்மா” என்ற சாம்பவியிடம், “தயவு செய்து இனிமேலாவது என் பேச்சை கேளுடீ உன் காலில் கூட விழறேன்” என்று வைதேகி கெஞ்சிட, வேறு வழி இல்லாமல் அவளும் சதீஷை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னாள்.
“என்ன இது எல்லோரும் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க இது கல்யாண வீடு கொஞ்சம் ஆட்டம், பாட்டம்னு கலகலப்பாக இருக்க வேண்டாமா” என்ற ராகவ் , “மச்சி வாடா ஒரு டான்ஸ் பண்ணலாம்” என்று ரஞ்சித்தை அழைத்திட, அவனும் இறுக்கமான சூழ்நிலையை மாற்ற எண்ணி நண்பனுடன் சேர்ந்து ஆட்டம், பாட்டு என்று இருக்க அவர்களோடு திலீப்பும் சேர்ந்து கொண்டான். அவன் ஆடிக் கொண்டே பல்லவியையும் இழுத்து தன்னோடு ஆட வைத்திட ஓரளவு எல்லோரும் இயல்பாக கல்யாண வேலையை கவனிக்க ஆரம்பித்தனர்.
“பொண்ணு மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கனும் எல்லா ஏற்பாடுகளும் பண்ணியாச்சா சங்கவி” என்ற செல்வராணியிடம், “எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டேன் அம்மா” என்றாள் சங்கவி.
“ஆமாம் மாப்பிள்ளை எங்கே” என்ற செல்வராணியிடம், “பல்லவி கல்யாணத்தை பார்க்க அத்தை வர்றாங்க. கூடவே பார்கவி, பைரவி இரண்டு பேரும் வர்றாங்க அவங்களை அழைச்சிட்டு வரப் போயிருக்காரு” என்ற சங்கவி, “நான் போயி பல்லவியை அழைச்சிட்டு வரேன்” என்றாள்.
“என்ன நாத்தனாரே ரெடியா” என்ற சங்கவியிடம் , “ரெடி அத்தாச்சி” என்றாள் பல்லவி. அவள் முகத்தில் வெட்கத்தின் ரேகைகள் தெரிய அதைக் கண்டு புன்னகைத்த சங்கவி அவளை அழைத்துக் கொண்டு வந்தாள்.
“டேய் கல்யாண மாப்பிள்ளை நீ தான் டா” இன்னும் ரெடியாகாமல் இருக்க என்ற ரஞ்சித்திடம், “ரெடியா தானே டா இருக்கேன்” என்றான் திலீப் வர்மன்.
“சட்டை போடாமல் வெறும் பனியனோட இருக்க” என்ற ரஞ்சித்தின் தலையில் குட்டு வைத்தவன், “பைத்தியம் நலங்கு வைக்க எதற்குடா சட்டை மஞ்சள் பட்டு சட்டை எல்லாம் கறையாகிறும்னு அம்மா தான் இப்படி ரெடியாக சொன்னாங்க” என்றான் திலீப்.
“ஓ அப்படியா சரி, சரி வா” என்ற ரஞ்சித்திடம் , “ராகவ் எங்கே” என்றான் திலீப். “உன் மாமா அவரோட சிஸ்டர்ஸ், அப்பறம் அம்மா மூன்று பேரையும் ரிசீவ் பண்ணி அழைச்சிட்டு வரச் சொன்னார் அதான் பஸ் ஸ்டாண்ட் வரை போயிருக்கான் நீ வா” என்று திலீப்பை அழைத்துச் சென்றான் ரஞ்சித்.
“ஆண்ட்டி நீங்க சிந்தாமணி ஆண்ட்டி தானே” என்று ராகவ் கேட்டிட, “ஆமாம் தம்பி நீங்க” என்றார் சிந்தாமணி. “ஆதித்யன் மாமா உங்களை பிக் அப் பண்ணி கூட்டிட்டு வரச் சொன்னாரு” என்றான் ராகவ்.
“ஓ மாம்ஸ் நீங்களா நாங்க தான் உங்க மச்சினிச்சிங்க” என்றாள் பைரவி. “மாம்ஸ் நீங்க இவ்வளவு ஹேன்ட்சமா இருக்கீங்களே பேசாமல் என் அக்கா பல்லவியை கழட்டி விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பைரவி.
“ஏய் வாயாடி வாயை மூடு டீ” என்று மகளை அடக்கிய சிந்தாமணி, “தம்பி தப்பா எடுத்துக்காதீங்க அக்காவை கட்டிக்க போற மாமான்னு கிண்டல் பண்ணுறாள்” என்றார் சிந்தாமணி.
“ஆண்ட்டி நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க நான் ராகவ் உங்க மாப்பிள்ளை திலீப்போட ஃப்ரெண்ட்” என்றான் ராகவ்.
“ஐய்யய்யோ ஸாரிங்க என் மாமான்னு நினைச்சு வம்பு பண்ணிட்டேன்” என்றாள் பைரவி. “நீங்க சாம்பவியை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளையா?” என்றாள் பார்கவி.
“என்கேஜ்மென்ட் வரை போச்சு பட் கல்யாணம் நின்று போச்சு” என்றான் ராகவ். மூவரும் காரில் அமர்ந்தனர்.
“அம்மா உங்களுக்கு சார் யாருன்னு தெரியலையா நம்ம பல்லவி கூட என்கேஜ்மென்ட் வரை போயி பல்லவியை பிடிக்கவில்லை சாம்பவியை பிடிச்சிருக்குனு அக்காவை அசிங்கப் படுத்துனாரே அந்த மகான் தான். ஏன் சார் சாம்பவி கூட என்கேஜ்மென்ட் நடந்துச்சே அதுவும் ஸ்டாப்பா” என்று கத்தினாள் பார்கவி.
“கவி கொஞ்சம் அமைதியா இரு” என்ற பைரவியிடம், “எப்படி பைரவி அமைதியா இருக்கிறது .எல்லாம் நம்ம அண்ணனை சொல்லனும் அவரால் வர முடியலைன்னா ஒரு ஆட்டோ பிடிச்சு வந்துருங்கன்னு சொல்லுறதுக்கு என்னவாம். இப்போ தான் இவரை அனுப்பி வச்சுருக்காரு” என்று பற்களைக் கடித்தாள் பார்கவி.
“பார்கவி அமைதியா வா” என்ற சிந்தாமணி, “தம்பி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அவளுக்கு பல்லவி மேல பாசம் ஜாஸ்தி அதான் இப்படி பேசுகிறாள்” என்றார்.
“பரவாயில்லை ஆண்ட்டி” என்ற ராகவ் அமைதியாக காரை இயக்கினான்.
“என்னங்க நீங்க இங்கே இருக்கீங்க அத்தையை கூப்பிட்டு வர போகலையா?” என்று கேட்டாள் சங்கவி. “ராகவ் போயிருக்கான் சங்கவி. இங்கே சித்தப்பா மட்டும் தனியா எவ்வளவு வேலை பார்ப்பாரு” என்ற ஆதித்யனிடம், “ராகவ் போயிருக்கானா ஐய்யய்யோ ராகவ் செத்தான்” என்றாள் சங்கவி.
“ஏன் அப்படி சொல்லுற” என்ற ஆதித்யனிடம், “பார்கவி கிட்ட மட்டும் ராகவ் தான் யாருன்னு சொன்னால் அவ்வளவு தான் அவனை அம்மியில் வச்சு தேங்காய் சில்லை நசுக்குறது போல நசுக்கிருவாளே” என்று அவள் கூறிட, “அட ஆமாம் டீ நான் மறந்தே போயிட்டேன்” என்று ஆதித்யன் கூறிட கார் வீட்டு வாசலில் நின்றது.
ராகவ்வை முறைத்துக் கொண்டு இறங்கினாள் பார்கவி.
“வாங்க மதனி” என்ற வாசுதேவனிடம், “நான் இங்கே வந்தது உங்க கூட பழைய உறவை புதுப்பிக்க இல்லை. என் தங்கச்சி பொண்ணு அதுவும் தாய் இல்லா பிள்ளை அவள் புருஷன் வீட்டுக்கு போகும் போது அம்மா ஸ்தானத்தில் அவள் அம்மாவோட அக்கா நான் நிற்கனும்னு தான் வந்தேன்” என்றார் சிந்தாமணி முகத்தில் அடித்தாற் போல.
“விடு வாசு அவங்க குணம் தெரிஞ்சது தானே” என்று தம்பியை சமாதானம் செய்த செல்வராணி, “வா சிந்தாமணி” என்றார்.
அவரைப் பார்த்து தலையசைத்த சிந்தாமணி, “மதனி என் மகளுக்கு நலங்கு வச்சாச்சா” என்றார் .
“இல்லை அத்தை இனிமேல் தான் வாங்க” என்று சங்கவி தன் மாமியாரை அழைத்துச் சென்றாள். “பவிமா” என்று சிந்தாமணி அழைத்திட , “பெரியம்மா” என்று ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள் பல்லவி.
அவளது நெற்றியில் முத்தமிட்ட சிந்தாமணி, அவளது கன்னத்தில் நலங்கு வைத்தார். அவளுக்கு முடிந்த பிறகு திலீப்பிற்கும் நலங்கு வைத்தார்.
“இவர் தான் உங்க மாமா” என்று ராகவ் பைரவியிடம் கூறிட, “உங்களை விட எங்க மாமா ரொம்ப ஹேன்ட்சமா இருக்காரு ராகவ் சார்” என்ற பைரவி, “மாம்ஸ் பேசாமல் என் அக்காவை கழட்டி விட்டுட்டு என் கூட வந்துருங்க” என்று கிண்டலாக கூறிட, “உன் அக்காவையும் கூட்டிட்டே வரேன்” என்றான் திலீப்.
“ஏங்க நீங்க வேற அவன் ஒரு பொண்டாட்டி தாசன் நீங்க வேணும்னா என்னை ட்ரை பண்ணுங்க நான் வெட்டியா தான் இருக்கேன்” என்றான் ரஞ்சித். “என்னது வெட்டியானா இருக்கீங்களா எந்த சுடுகாட்டில்” என்று நக்கலடித்தாள் பைரவி.
“உனக்கு இது தேவையா ஒழுங்கா வாயை மூடிட்டு இருந்திருக்கலாம்ல” என்ற ராகவ்விடம், “பொண்ணு பார்க்க சப்பியா அழகா இருக்கே நூலு விட்டு பார்ப்போம்னு நினைச்சேன் இது ஒரு விஷப்பூச்சியா இருக்கும் போல” என்றான் ரஞ்சித்.
(…. அடியே..)