அத்தியாயம் 30
“விஷப் பூச்சி இது இல்லைடா இது கூட ஒன்னு வந்திருக்கு இதுக்கு அக்காவா , தங்கச்சியான்னு தெரியலை என்னா கிழி கார் ஓட்டிட்டு வர முடியலைடா அவ்வளவு பேச்சு. பாவம் அதை கட்டிக்கப் போறவனோட நிலைமையை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. கார் ஓட்டும் போது என் மைண்ட்ல ஓடுன ஒரே விஷயம் இந்த கிழி கிழிக்கிறாளே எந்த ஊருக்காரியா இருப்பாள் இது தான் டா” என்று பாவமாக கூறினான் ராகவ்.
“திருநெல்வேலிக் காரி” என்ற குரலில் அதிர்ந்து போய் திரும்பினான் ராகவ். “ஆத்தி இந்த மாரியாத்தா பார்கவி நிற்கிறாளே” என்று எச்சில் விழுங்கிய ராகவ்வின் அருகில் வந்தாள் பார்கவி.
“ஸாரிங்க உங்க கிட்ட ரொம்ப கோபமா பேசிட்டேன்” என்றாள் பார்கவி . இமைக்கவும் மறந்து அவளையே நம்பலாமா? வேண்டாமா? என்று பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவ்.
“என்னடா காரில் வரும் போது அவ்வளவு பேச்சு பேசினாள். இப்போ அமைதியா பேசுறாளே இவளை நம்பலாமா? வேண்டாமான்னு தானே பார்க்கிறீங்க. நம்பலாம் இப்போ சண்டை போட வரவில்லை. எனக்கு அப்போ எந்த விஷயமும் தெரியாது இப்போ அண்ணி தான் சொன்னாங்க நீங்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்ப ஏமாந்து போயிருக்கீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன் மன்னிச்சுருங்க” என்றாள் பார்கவி.
“இட்ஸ் ஓகேங்க” என்ற ராகவ், “என்ன பொண்ணு டா இவள் அவ்வளவு திட்டு திட்டினாள் இப்போ அவள் மேல் தான் தப்புன்னு மன்னிப்பு கேட்கிறாள்” என்று சிரித்தான் ராகவ்.
“என்ன இங்கே இருந்த ரஞ்சித்தை காணோம்” என்று நண்பனைத் தேடினான் ராகவ்.
“என்ன தேடுறீங்க” என்ற பார்கவியிடம், “என் ஃப்ரெண்ட்” என்றான் ராகவ். “அதோ அங்கே என் சிஸ்டர் பின்னாடி போயிட்டாரு” என்று சிரித்தாள் பார்கவி.
“உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா?” என்ற ராகவ்விடம், “ஹலோ என்ன கொழுப்பா நான் என்ன ரோபோவா மனுஷி தானே அப்போ சிரிக்கவும் தெரியும் உங்களை அடிக்கவும் தெரியும் அடிக்கட்டா” என்று புருவம் உயர்த்தி கேட்டாள் பார்கவி.
“ஐய்யய்யோ வேண்டாம் தாயே ஆளை விடுங்க” என்று ஓடியே விட்டான் ராகவ். அவனைப் பார்த்து புன்னகைத்த பார்கவி சென்று விட்டாள்.
“என்ன பண்ணுறீங்க சார்” என்ற ராகவ்விடம், “எனக்கு ஒரு ஜோடியை பிடிச்சுட்டேன் மாப்பிள்ளை” என்றான் ரஞ்சித். “நிஜமாவா” என்ற ராகவ்விடம், “ஆமாம் எத்தனை நாள் தான் நானும் சிங்கிளாவே சுத்துறது எனக்கும் கல்யாண வயசு வந்துருச்சுடா அதான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான் ரஞ்சித்.
“நீங்க முடிவு பண்ணிட்டீங்க சரி அவங்க” என்ற ராகவ்விடம், “அங்கேயும் கிரீன் சிக்னல் தான்” என்றான் ரஞ்சித். “எப்படி டா” என்ற ராகவ்விடம், “நீ அவளோட அக்கா கிட்ட பேசிட்டு இருந்தியே அப்போ என் பச்சைக் கிளி க்ராஸ் பண்ணி போயிட்டு இருந்துச்சு. அதான் நானும் விரட்டிட்டே போயி என் காதலை சொல்லிட்டேன்” என்றான் ரஞ்சித்.
“எதே காதலை சொல்லிட்டியா? என்னடா சொல்லுற” என்றான் ராகவ்.
“அடேய் கொஞ்ச நாளா ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு கிட்ட சாட் பண்ணிட்டு இருந்தேன் டா அது வேற யாரும் இல்லை பைரவி தான். சரி நேர்ல பார்த்தாச்சு லவ்வை சொல்லிடலாம்னு சொன்னேன் அவளும் அக்சப்ட் பண்ணீட்டாள். கண்டதும் காதல் எல்லாம் கிடையாது லைட்டா ஒரு காதல் கோட்டை படம் எங்களுக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு இப்போ நேரில் பார்த்தாச்சு என்ன அவளோட ட்வின் சிஸ்டர் பார்கவி கல்யாணம் முடியும் வரை கொஞ்சம் வெயிட் பண்ணனும்” என்றான் ரஞ்சித்.
“வாழ்த்துக்கள் மச்சி” என்ற ராகவ்விடம், “நீ இப்போ சிங்கிள் தானே பேசாமல் அந்த பார்கவியை நீ கரெக்ட் பண்ணினால் என்ன” என்ற ரஞ்சித்தை முறைத்தவன், “என் மனசுல பல்லவி தவிர வேற யாருக்கும் இடம் இல்லை” என்றான் ராகவ்.
“பைத்தியம் மாதிரி பேசாதே விடிஞ்சதும் பல்லவி திலீப்போட மனைவியாகிருவாள்” என்றான் ரஞ்சித். “அதனால் என்ன இதோ பாரு ரஞ்சித் காதல் ஒரு அழகான உணர்வு அது என் மனசுல பல்லவி மேல தான் இருக்கு. அவள் இன்னொருத்தனுக்கு சொந்தமான பிறகு அவளை அடையனும்னு நினைக்கிறது தான் தப்பே தவிர அவளை நினைக்கிறது இல்லை. என் ஆயுள் முழுக்க அவளை இந்த மனசுல சுமந்துட்டு தான் இருப்பேன்” என்றான் ராகவ்.
“அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமல் இருப்பியா? உன் அம்மா, அப்பாவுக்கு நீ ஒரே ஒரு பையன்” என்ற ரஞ்சித்திடம், “கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. ஒருவேளை ஃபியூச்சர்ல வரலாம் அப்போ பார்த்துக்கலாம்” என்ற ராகவ், “நீ கேட்கலாம் பல்லவியை காதலிக்கிறவன் சாம்பவியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னீயே. ஒருவேளை உங்க கல்யாணம் நடந்து இருந்தால் சாம்பவி கூட சேர்ந்து வாழ தானே செஞ்சுருப்பனு. கண்டிப்பா வாழ்ந்திருப்பேன் அதற்கு காரணம் என்னால அந்த பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போச்சுங்கிற குற்றவுணர்ச்சியால தானே தவிர வேற எதுவும் இருந்திருக்காது” என்றான் ராகவ்.
“ஸாரி டா” என்ற ரஞ்சித்திடம், “எதுக்கு டா” என்றான் ராகவ். “நான் உன்னோட காதலை புரிஞ்சுக்கவே இல்லை” என்றான் ரஞ்சித்.
“அட விடுடா” என்ற ராகவ் நண்பனுடன் சென்று விட அவர்களது உரையாடலை மறைந்திருந்து கேட்ட பார்கவிக்கு ஏனோ ராகவ்வின் காதல் பிடித்திருந்தது.
“என்ன திலீப் எதுக்கு என்னை பார்க்கனும்னு வரச் சொன்ன” என்ற பல்லவியிடம், “இதுக்கு தான்” என்று அவளது கன்னத்தில் மஞ்சள் பூசி விட்டான் திலீப் வர்மன்.
அவளோ புன்னகைத்து விட்டு அவனது முகத்தை கைகளில் பிடித்து தன் கன்னத்தில் இருந்த மஞ்சளை அவன் கன்னத்தில் தன் கன்னத்தால் தேய்த்து பூசி விட்டாள்.
“என் பொண்டாட்டிக்கு நான் மஞ்சள் பூசி விட்டுட்டேன். அவளும் எனக்கு மஞ்சள் பூசி விட்டுட்டாள். இப்போ இந்த சடங்கு சிறப்பா முடிஞ்சுருச்சு” என்ற திலீப் அவளது கையை எடுத்து தன் இதயத்தில் வைத்தவன், “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பவி. என் பவி எனக்கு கிடைக்கப் போகிறாள். ஐ லவ் யூ ஐ லவ் யூ சோ மச்” என்ற திலீப்பின் தோளில் சாய்ந்து கொண்டவள், “ஐ லவ் யூ டூ திலீப்” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
“பல்லவி” என்று யாரோ அழைத்திட, அவளைப் பிரிந்தவன் “போ உன்னைத் தேடுறாங்க” என்றான். “யாரு தேடினாலும் சரி நான் உன் கூட தான் இருப்பேன் எனக்கு மனசு ஒரு மாதிரி படபடன்னு அடிச்சுக்குது ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதே நேரத்தில் உன்னை இழந்துருவேனோன்னு பயமா வேற இருக்கு காலையில் நீ என் கழுத்தில் தாலி கட்டும் வரைக்கும் நான் உன் கூடவே இருக்கட்டுமா?” என்றாள் பல்லவி.
“என் கூடவே இருந்தீனா நேற்று நமக்குள்ள நடந்ததா நீ சொன்னது நிஜத்தில் நடக்கும் ஓகே வா” என்றான் திலீப் வர்மன். “என்ன நடக்கும்” என்று பல்லவி கேட்டிட, “நம்ம ஃபர்ஸ்ட் நைட்” என்று அவன் கூறிட, “பொறுக்கி” உன்னை என்று அவள் அவனை அடிக்க ஆரம்பிக்க , “ஏய் பவி வலிக்குது டீ விடு” என்று அவன் கூறிட , அவளோ விடாமல் அடித்திட அவன் அவளது இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அவளது இதழில் தன் இதழைப் பதித்தான்.
அவனது இந்த திடீர் முத்தத்தில் அவள் அதிர்ந்து போனாள். அந்த கள்வனோ அவளது இதழில் தேனை பருகிட மங்கை அவளோ வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்.
அவளை விடுவித்த திலீப் அவளைப் பார்த்து கண்ணடித்திட அவளோ வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள். “என்ன செல்லம் வெட்கம் எல்லாம் வருது” என்று அவளை அவன் கிண்டலடிக்க அவளோ அவனை விட்டு ஓடிச் சென்றாள்.
“நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டேன்ல இப்போ கூட நீ எனக்காக அந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டியா?” என்றாள் சாம்பவி.
“நீ இவ்வளவு பட்டும் திருந்தவே மாட்டியா சாம்பவி” என்றார் வைதேகி. “அம்மா நீங்க வாயை மூடுங்க நான் மாமா கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றாள் சாம்பவி.
“என்னால என் மாமாவுக்கு துரோகம் பண்ண முடியாது சாம்பவி. சோத்துக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்த என் குடும்பத்திற்கு சோறு போட்டவரு அவரோட பொண்ணு வாழ்க்கையை என்னால அழிக்க முடியாது நாளைக்கு பல்லவிக்கு கல்யாணம் நடக்கப் போற அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் நம்ம கல்யாணம் நடக்கும் அதற்கு தயாரா இரு. அதை விட்டுட்டு பல்லவி வாழ்க்கையை கெடுக்க எதுனாலும் திட்டம் போட்ட உன்னை கொன்று புதைச்சுருவேன் ஜாக்கிரதை” என்று எச்சரித்து விட்டு சென்று விட்டான் சதீஷ்.
“உன் தம்பி என்ன சொல்லீட்டு போறான் அப்போ என்னை விட அந்த பல்லவி தான் எல்லோருக்கும் உசத்தி அப்படித் தானே அவள் இருந்தால் தானே இந்த கல்யாணம் நடக்கும். ஒன்று அவள் சாகனும், இல்லையா அந்த திலீப் சாகனும். அவங்க ரெண்டு பேரில் ஒருத்தரை கொன்னுட்டால் அந்த கல்யாணம் நின்று போயிரும் தானே” என்று பேய் போல சிரித்தாள் சாம்பவி. கையில் ஒரு கூர்மையான கத்தியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து கிளம்பினாள்.
“என்ன சதீஷ் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்க” என்ற வாசுதேவனிடம், “நாளைக்கு எனக்கும், சாம்பவிக்கும் நம்ம முருகன் கோவிலில் கல்யாணம் மாமா அதை உங்க கிட்ட சொல்லத் தான் வந்தேன். முதல் முகூர்த்தத்தில் பல்லவி கல்யாணம் முடிஞ்சுரும். இரண்டாவது முகூர்த்தத்தில் தான் எங்க கல்யாணம் என்றவன் அக்கா மேல உங்களுக்கு கோபம் நிறையவே இருக்கு ஆனால் உங்க பொண்ணு கல்யாணத்திற்கு அக்கா இல்லாமல் இருக்க கூடாது. உங்களுக்கு நான் புத்தி சொல்லக் கூடாது அதனால் அக்காவை வரச் சொல்லட்டுமா” என்றான் சதீஷ்.
(…அடியே….)