ஜீப்பிலிருந்து முதலில் இன்னுழவன் இறங்க, இறங்காது அமர்ந்திருந்தாள் மேக விருஷ்டி.
அவளுக்கோ அவன் உடையில் இருப்பது ஒருவித சங்கடம்.
“ஹேய் ஏஞ்சல் என்ன இறங்குறதா ஐடியா இல்லையா?” கேட்டபடி அவள் புறம் வந்து நின்றான் இன்னுழவன்.
“ப்ச்… உழவா இந்த ட்ரெஸோட நான் எப்படி உள்ள வருவேன். எனக்கு ஒரு மாதிரி இருக்கு அத்தை, பாட்டி, மாமா எல்லாரும் இருப்பாங்க இல்ல என்ன நினைப்பாங்க” என சிணுங்கினாள் அவன் மார்பில் அடித்து.
“ஏன் நீ முன்ன பின்ன இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணாதே இல்லையா ஏஞ்சல்?”
“அதெல்லாம் பண்ணிருக்கேன் உழவா, ஆனா…”
“ஆனா என்னப்பா…”
“யாராவது தப்பா நினைச்சிட்டா, என்ன இன்னுழவன் பொண்டாட்டி இப்பிடி ட்ரெஸ் பண்ணிருக்கான்னு” மேலும் அவள் தயங்கினாள்.
நகர வாழ்க்கையில் நவ நாகரிக உடை சாதாரணம் என்றாலும், கிராம புறத்தில் எப்பிடி எடுத்துக் கொள்வார்கள் என மன சங்கடம் மேக விருஷ்டியிடம்.
பின் அவளை புரிந்தவனாய், “இங்க பாரு ஏஞ்சல் இங்க ஆணோ, பெண்ணோ கண்ணுக்கு கவர்ச்சியா தனக்கும் தன்னவனுக்கும் மட்டுமே காட்ட வேண்டியத எல்லாருக்கும் காட்டுற மாதிரி உடை அணிஞ்சா தான் தப்பு.
அதுமட்டும் இல்லாம பொண்ண பார்த்தா மண்ண பார்த்து நடக்குற மண்ணு. கட்டுனவள தவிர மத்தவங்க கண்ண பார்த்து தான் இங்க பேசுவாங்க. இது இன்னுழவன் கோட்டை.
நம்ம ஜனங்களும் சரி நம்ம வீட்டுல இருக்குறவங்களும் சரி தப்பா நினைக்க கூடியவங்க கிடையாது.
ஒரு பய இங்க வாலாட்டவும் முடியாது” என்றவன் அறியாது போனான் தன் வீட்டிலே ஒரு களை உள்ளது என்று.
“ஸோ ஏஞ்சல் நீ எப்போதும் போல உனக்கு எப்பிடி இருக்க பிடிக்குதோ அப்பிடி இரு” அவள் கன்னம் கிள்ளியவன்,
“எல்லாத்துக்கும் மேல என் பொண்டாட்டிக்கு எங்க எப்பிடி இருக்கணும் நடந்துக்கணும்னு ரொம்ப நல்லாவே தெரியும் ஓகேவா” என்றான் இன்னுழவன் விழி சிமிட்டி.
உடையவன் பேச்சிலும் அறிவுரையிலும் தயக்கத்தை துறந்தவள், “ஓகே புருஷா… இப்ப உள்ள போலாமா” என அவன் கையை பற்றி விழி சிமிட்டினாள் தன்னவனை போல்.
இன்னுழவனோ “அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டாங்க ஏஞ்சல். இந்நேரம் அப்பா வெளிய போயிருப்பாரு. அப்பிடியே அவரு இருந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்பத்தாவும் அம்மாவும் தான் இருப்பாங்க. அப்பதாவே எல்லாதையும் சமாளிச்சுக்கும் நீ வா டி” என ஜீப்பில் இருந்து அலெக்காக தூக்கி கீழே இறக்கி விட்டிருந்தான் இன்னுழவன்.
மேக விருஷ்டியும் இன்னுழவன் அணைப்பிலேயே உள்ளே சென்றாள்.
எதிரே கோதாவரி வர… “போச்சு போச்சு அத்தை வராங்க, கேக்க போறாங்க” என மேலும் அவன் பின்னோடவள் வெக்கத்தில் ஒன்றினாள்.
“வா இன்னு… வா மா… மேல போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க சாமி கும்பிட்டு சாப்பிடலாம்.” என இருவரின் கன்னத்தையும் தட்டி நெகிழ்வான புன்னகை உதித்து அவ்விடம் விட்டு நகர்ந்து கொண்டார் கோதாவரி.
இருவரும் வந்து நிற்கும் கோலத்தைக் கொண்டே இருவரின் இல்லற வாழ்க்கையும் மிகச் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது என்பதை யூகித்தவராய்.
இன்னுழவன் விடுத்து வேகமாக மேக விருஷ்டி படியில் ஏறி ஓடிச் செல்ல, எதிர்க்கே வந்தார் அம்பிகாமா.
“என்னடி சீலை என்னாச்சி…” இடை மறித்தவர் கேட்க,
“ஹான் கிழிஞ்சி நாலு ஆச்சி” என அவரை இடையை இடித்து தள்ளி ஓடினாள் வெட்கத்துடன் கன்னம் சிவக்க.
மென்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டே படியேறி வந்த இன்னுழவன் முன் நின்று அவன் கன்னம் உருவி முத்தம் பதித்தவர்,
“அப்பிடியே உன் தாத்தன மாதிரியே இருக்க டா… சந்தோஷமா இருக்கு.. சந்தோஷமா இருங்க…” என ஆசிர்வதித்து அவரும் அவ்விடமிட்டு நகர்ந்து கொண்டார். மேலும் பேசி அவனுக்கு சங்கடம் கொடுக்காது.
அடுத்து வந்து சிறிது நேரத்தில் அனைவரும் டைனிங் டேபிளில் குலுமியிருக்க, அகரனும் அங்கு வந்திருந்தான்.
எப்பொழுதும் போல் சக்திவேல் முகத்தை உர்றென்று வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார் கோதாவரி.
இன்னுழவன் அருகில் அமர்ந்திருந்த மேக விருஷ்டியோ, “நீங்களும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடுங்க அத்தமா” என்றாள் பாசமாக.
“இல்லடா நீங்க எல்லாரும் சாப்பிடுங்க உங்களுக்கு பரிமாறிட்டு நான் சாப்பிடுறேன்” கோதாவரி சாட…
“ப்ச்… எழுந்தவள் அத்தமா முதல்ல நீங்களும் உட்காருங்க. எல்லாமே பக்கத்துல கை எட்டுற தொலைவுல தான இருக்கு. அவரவருக்கு தேவையானது அவரவர் எடுத்து போட்டு சாப்பிட போறாங்க.
இதுக்கு நீங்க தனியா வேற நின்னு பரிமாறணுமா. எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்” என கோதாவரியை பிடித்து அமர வைத்த பின்னே விட்டாள் மேக விருஷ்டி.
அதில் சட்டென்று சக்திவேல் அவளை முறைத்து விழிக்க… அதனை கண்டு கொண்ட மேகவிருஷ்டி “உழவா நான் தப்பா ஏதும் சொல்லிட்டேனா?” என்றாள் சத்தம் இல்லாது அவன் காதோடு.
“தப்பா எல்லாம் சொல்லல விருஷ்டி நீ… சரியா தான் சொல்லி இருக்க. எல்லாருக்கும் கை இருக்கு, எல்லாமே முன்னாடி இருக்கு. எதுக்கு தனியா நின்னு பரிமாறணும்.
அவரவருக்கு தேவையானத அவங்களே எடுத்து போட்டு சாப்பிடட்டும். எத்தனை நாளைக்கு தான் எல்லாருக்கும் சேவகம் பண்ணிட்டு இருக்க முடியும்” என்று அவள் சத்தம் இல்லாத கேட்டதை சக்திவேல் கேட்க இவனோ சத்தமாக பேசி வைத்தான்.
“சேவகம் பண்றதுக்கு இங்க தகுதியானவங்க இருக்கிறாங்களா என்ன பேராண்டி” அவனுக்கு ஏதுவாக ஒத்து ஓதினார் அம்பிகாமா.
மேக விருஷ்டி இருவரையும் பார்த்து முறைக்க, “ஆத்தா கொஞ்ச நேரம் அமைதியா இருந்து சாப்பிடு ஆத்தா. அப்பாகிட்ட வம்பிழுக்காம உனக்கு பொழுதடங்காதே” என பல்லை கடித்து அடக்கி வாசிக்க சொன்னான் அகரன் அம்பிகாமாவிடம்.
“அட போடா இவன அப்பிடின்னா உன் அப்பன முதல்ல மூடிட்டு திங்க சொல்றா. இவன் பெரிய சண்டியன் கண்ணாலேயே மிரட்டுறானாம்” என அகரன் காலில் ஓங்கி ஒரு மிதியை கொடுத்து சாப்பிட்டார் அப்பத்தா.
சரியாக அந்நேரம் பார்த்து இன்னுழவனுக்கு அலைபேசி அடிக்க அவன் போனோடு பேச…
சக்திவேல் புறமிருந்த சாம்பார் பாத்திரத்தை மேக விருஷ்டி எடுக்க முயற்சிக்க…
அதுவோ அவள் கைநழுவி கீழே விழுந்து மொத்தமும் கவிழ்ந்து இருந்தது சக்திவேல் மீது.
“ஐயோ!” என அதிர்ச்சியுடன் மேக விருஷ்டி எழுந்து நிற்க, “என்னங்க!” என கோதாவரி எழும்ப..
“ஏய் தாழ் சாதிக்கு பிறந்தவளே…” என ஆக்ரோஷமாக எழுந்த சக்திவேலின் எச்சில் கரம் மேக விருஷ்டி கன்னம் நோக்கி சென்றது காற்றை கிழித்து.
மேலும் அவளோ அதிர்ந்து விழிகளை மூடி நிற்க, “மிஸ்டர் சக்திவேல்” என குரல் உயர்த்தி கதிரையில் இருந்து எழுந்து கர்ஜித்திருந்தான் இன்னுழவன்.
அவன் கர்ஜனையில் சக்திவேலின் கரம் மேக விருஷ்டி கன்னத்திற்கு ஒரு காத இடைவெளியில் நெருங்கி அந்தரத்தில் நின்று போக..
அதிர்ந்து விழிகள் மூடி மேனி நடுங்க நிற்கும் தன்னவளை இழுத்து தன்னுக்குள் பூட்டியவன்,
“என்ன இறக்குங்க… ” என்றான், விழிகளில் செவ்வரி ஏற உயர்ந்து நிற்கும் அவர் கரத்தைக் காண்பித்து.
தந்தை என பேருக்காகவாது அவ்வளவு நாள் இழுத்து கட்டி வைத்த மரியாதையை காற்றில் பறக்க விட்டவனாய்.
“டேய் இன்னு அப்பாடா… மரியாதை இல்லாம…” என கோதாவரி முன் வர, ஐவிரல் விரித்து அவரை ஒரு பார்வை தான் பார்த்தான். அதில் அவரின் அடுத்த வார்த்தை தொண்டை குழி கடக்க மறுத்தது.
அப்பத்தாவோ “டேய் அகரா அந்த உளுந்த வடையும் சட்டினியையும் எடு டா… சூடு ஆறிட போகுது…” என எழுந்து நின்ற அகரனை இடித்தார்.
முகம் கோண, “யாருடா இவன் டொமட்டோ. உன் அப்பன் வாயில சனிய வச்சிட்டு சுத்துறான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். என் பேரன் இப்ப எப்பிடி விலாசு விலாசுன்னு விலாசுவான் பாரு. நீ எடுத்து வைடா அந்த வடைய” என அம்பிகாமா நடப்பதை ஆர்வமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிட்டார் வழக்கம் போல்.
(சண்டையோ சமாதானமோ நமக்கு சோறு தான் முக்கியம் பிகிலு)
அப்பொழுதே சக்திவேல் மகனின் ஆக்ரோஷ கர்ஜனையில் கையை கீழே இறக்க…
இப்பொழுது அவர் முன் ஒற்றை விரல் நீட்டியிருந்தான் இன்னுழவன் கனல் கக்கும் விழிகளுடன்.
“இந்த வீட்டுக்குள்ள ஏன் இந்த ஊருக்குள்ளயே இந்த வார்த்தை வரக்கூடாதுனு இருக்குறவன் நான்.
அப்பிடி இருக்கும் போது என் பொண்டாட்டிய பார்த்து ஹான்… இனியும் சாதி… பிறப்புனு தப்பா ஏதும் வார்த்தை வந்துச்சு இப்படி பேசிகிட்டு இருக்க மாட்டேன்.
அப்புறமா மகன் கையால அப்பா அடி வாங்கினாருன்னு பேச்சு தான் ஊருக்குள்ள நடமாடும் உங்களுக்கு முன்னாடி” என்றான் அனல் பறக்க.
“பெத்த அப்பன்னு கூட பாக்காம இவ முன்னாடின்னா என்ன அவமானப்படுத்தி பேசுற இல்ல. இதுக்கெல்லாம் சேர்த்து நீ அனுபவிப்ப.. அனுபவிக்க வைப்பேன்டா” என சக்திவேல் சவாலுடன் நகர.
“ஓவரா சலமப்பாம முதல்ல போய் குளிச்சி தொலடா. அடியேய் இவள ரெண்டு இட்டிலிய வை டி… அடேய் அகரா மச மசன்னு நிக்காம அந்த வடைய எடுத்து வை டா…” என்றார் அம்பிகாமா.
அகரனோ “ஆஆ… ஆத்தா… இந்தா தின்னு தீரு…” என மொத்த வடையையும் கொட்டி இருந்தான் அப்பத்தா தட்டில்.
“என்னப்பா இன்னு…” கோதாவரி கவலை கொள்ள, “அம்மா உங்க ஒருத்தருக்காக தான் நான் அவர பொறுத்துக்கிட்டு இருக்கேன். ஆனா எல்லா நாளும் பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டேன்” என அழுத்த திருத்தமாக கூறியவன், “இனிதுழனி…” என கத்தியிருந்தான்.
இவ்வளவு அலப்பறைலயும் மேடம் இவ்ளோ நேரம் இங்க தான் உட்கார்ந்து இருந்தாங்க.
நிவர்த்தனன் சொல்லி சென்றதை எண்ணிய படி சாப்பிட மனம் இல்லாது கோதாவரி வற்புறுத்தலில் அமர்ந்திருந்தவளுக்கு, காதலன் நினைவில் வலையில் சிக்கிய மீனாய் தத்தளித்தவளுக்கு சுற்றி நடக்கும் அனைத்தும் காணாது போனது காதல் உலகில் மனம் கனத்தவளாய்.
இப்பொழுதே சகோதரன் குரலில் நிகழ்வுலகுக்கு வந்தவள் அதுவரை என்ன நடந்தது என்று கூட அறியாது வழி தெரியாத காட்டில் விழித்து நிற்பது போல் நின்றவளை விழி குறுகி பார்த்தான் இன்னுழவன்.
தங்கை முகத்தில் பொலிவு இல்லாது மாறாக கவலை குடி கொள்ள ஏதோ மனதை அலைக்கழிக்கும் பாரம் ஏறியிருக்கிறது என்பதை அறிந்தவனாய்.
ஆனால் ஏன் இந்த கவலை என்ற அவன் உள்மன கேள்விக்கு கேள்வி குறியாக வந்து நின்றது என்னவோ நிவர்த்தனன் தான்.
அவளோ விழி கலங்க என்ன என்னும் விதமாய் இன்னுழவனை பார்க்க…
“இன்னும் அரை மணி நேரத்துல சென்னை கிளம்பனும் போய் ரெடி ஆகு” என்றான் இன்னுழவன்.
அவளோ டாக்டர் எல்லாம் வேண்டாம். என் வாழ்க்கை இப்பிடியே பேச்சு இல்லா அமைதியான வாழ்க்கையா இந்த பிறவில இருந்துட்டு போகட்டுமே ” என்றவள் சாட…
அதற்கு எல்லாம் சற்றும் அசைந்து கொடுக்காது ஏதும் பேசாது காரமாக இன்னுழவனிடம் இருந்து வந்தது ஒரே ஒரு பார்வை தான்.
அத்துடன் ஏதும் அடுத்து பேசாது சென்று புறப்பட ஆயத்தமானாள் இனிதுழனி.
“அகரா நீ கார் செட்டுல இருந்து வெளிய எடுத்து வை கிளம்பலாம்” என அவ்வளவு நேரம் தன் கை அணைப்புக்குள் நின்ற தன்னவளை அழைத்துக் கொண்டு மேலே சென்றான் இன்னுழவன்.