அன்னமே 36 37

4.9
(17)

அத்தியாயம் 36 37

தலை வலி அதீதமா இருக்க, ஒரு மாத்திரைய வாயில போட்டு முழுங்கினார் டாக்டர்.

அவரும் ஒரு மணிநேரமா எல்லா வகையிலும் எடுத்து சொல்லிட்டாரு அவன்கிட்ட. அன்னம் அப்சர்வேசன்ல இருக்கணும். குளிக்க புடிக்க சாப்பிட கூட தெம்பிருக்காது. ஒரு வாரத்துக்கு தூக்கமும் மயக்கமாவுமே போவும்னு.

ஆனாக்கா சத்தியசீலன் எதையுமே கேக்கல.

வீட்டுக்கு போயே ஆவணுமுன்னு நின்னுட்டான் புடிவாதமா.

“நா பாத்துக்கறேன் டாக்டர். நீங்களா விடுங்க. இல்லன்னா தூக்கிட்டுப் போயிட்டே இருப்பன் பாத்துக்கங்க” மெரட்டினான் அவரையே.

“சார் விட்டிருங்க. அவங்க பாடு. என்னவோ பண்ணட்டும். சீக்கிரம் பஞ்சாயத்த முடிங்க தலைவலி பாரமா இருக்குது” சிஸ்டரும் வெறுத்துப்போய் மாத்திரை ஒன்னை முழுங்கினார்.

விட்டா இங்க இருக்க எல்லாத்தையும் தலை வலி மாத்திரை போட வைப்பானாட்டம் இருக்குன்னு நெனச்ச டாக்டர் “அவங்க மனசுக்கு என்ன புடிக்குதோ அதை பண்ணிக் கொடுங்க. திரும்ப இப்படி தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு கூட்டிட்டு போயிடாதீங்க” டாக்டர் சத்தியசீலனை உட்கார வச்சு புத்திமதி சொன்னார்.

எதுக்க பேப்பர் மேல இருக்க கல்லை எடுத்து அவர் நெத்திய ஒரே அடியில் உடைக்கட்டான்னு அவன் வலது கை துடிக்க, இடது கையால் அதை பற்றி தடுத்தான். இப்பத்தான் கோக்குமாக்கா பேசி இங்கிருந்து கெளம்ப சரின்னு சொல்லியிருக்காரு. போதா குறைக்கு போலீசு கேசும் ஆவாம காப்பாத்திட்டாரு.

அப்படி ஆகி இருந்திச்சு ஊரு மூச்சூடும் இவன்தான் புள்ளைய கொல்ல பாத்துருப்பான்னு தன்னைத்தான் கைகாட்டும் என்பதில் திண்ணம் அவனுக்கு. பொண்டாட்டி தனக்கு சாட்சி சொல்ற நிலையிலா இருக்கா அவ எந்திருச்சு நல்லவன்னு சொல்ல வரைக்கும் ஊருக்குள்ள பேரு நாறிப் போயிருக்கும். ஏற்கனவே ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிட்டு இருக்கானுங்க நம்மை. அதனால் அந்த ஒரு நன்றிக்காகவே டாக்டரின் உயிர் தப்பியது அன்னிக்கு.

“முழுசா குணமாகற வரைக்கும் வேலை வாங்கிட்டு இருக்காதீங்க. ஓய்வெடுக்கட்டும்” டாக்டர் மாத்திரை மருந்துகளை எப்படி பயன்படுத்தரதுன்னு சொல்லிக் கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்து சேர, “மவராசி காருல இருந்து இறங்கி வா. ஊட்டுக்குள்ள கூட கால வைக்கல அம்பதாயிரம் செலவு வச்சுட்டா. உம் மேல ஆசப்பட்ட பாவத்துக்கு இன்னும் என்ன என்னல்லாம் பாக்க போறனோ கெரகத்த” குத்தல் பேச்சால் அவளை இடித்துவிட்டு காருக்குள் இருந்த துணிப்பைகளை எடுத்தான்.

அன்னம் பொழைச்சுட்டான்னு டாக்டர் சொன்னதும் அக்கடான்னு சித்த நேரம் படுத்து எந்திரிக்கலாமுன்னு படுத்தவன் ராத்திரி முழுக்க ஆஸ்பத்திரி வராண்டாவுலயே படுத்துட்டான். அவசர சிகிச்சை பிரிவுல இருந்ததால இன்னும் ரூம் தரலை அன்னத்துக்கு.

காத்தால எந்திரிச்சவன் கையில நர்ஸ் அன்னம் கட்டியிருந்த சேலை நகை நட்டுன்னு கொடுத்தார்.

“இதெல்லாம் அவங்க போட்டிருந்த துணிங்க. பத்திரமா வைங்க காணோமுன்னு அவங்ககிட்ட வள்ளுன்னு உழுந்து திரும்ப மாத்தரையை முழுங்க வச்சுடாதீங்க. அடுத்த தடவ இப்படி ஆச்சு களிதான் திங்கணும்” சொல்லிவிட்டு போனதும் அதுக்கும் அதிசயமா அமைதியாத்தான் போனான்.

“இந்த கிறுக்கச்சி ஊட்டுக்கு வந்தா போட்டுக்க துணி வேணுமே” நெனச்சவன் அவ போட்டுக்கிட்டு இருந்த துணி அளவுலயே எல்லாத்தையும் வாங்கிட்டு ஜாக்கெட் தைக்க கையில அவளோட ஜாக்கெட்டும் இருந்ததால அதையும் கொடுத்துட்டு தச்சு வாங்கிட்டான் அந்த நாளுக்குள்ள.

அதை தைச்சு வாங்கறதுக்குள்ள கடை ஓனர்கிட்ட வீரத்தை முழுசா காட்ட வேண்டிய கட்டாயம் அவனுக்கு வந்தது. டெய்லர் கடையில இருக்க மொத்த பொண்ணுங்களும் இவன் கொடுத்த துணிய தச்சு கொடுத்து அடுத்த முறை இங்க வராதீங்க அண்ணான்னு சொல்லியே அனுப்பினார்கள்.

அவன் பேச்சையெல்லாம் காதுல வாங்கின அன்னத்துக்கு அவன் பேசறது அத்தனையும் சரிதான்னு தெரிஞ்சாலும் கண்கள் கலங்கியது.

“இங்கயே இரு உள்ள போவாத” போனவளை நிறுத்தினான்.

“எதுக்கு போவ கூடாது?” ரோசத்தில் முன் வைத்த கால் பின்வாங்க கண்ணீர் சிந்த அவனை பார்த்தாள்.

இவ ஒண்ணு பொட்டு பொட்டுன்னு கண்ணுல தண்ணிய கொட்டுறா “ஆஸ்பத்திரி போயிட்டு அப்படியே உள்ள போவ கூடாது புள்ள. தலைக்கு தண்ணி ஊத்திட்டு அப்புறமா ஊட்டுக்குள்ளாற போவலாம். போய் அந்த திண்ணையில உக்காரு இல்ல படு” சொல்லிட்டு காய்ஞ்சுக்கிட்டு இருந்த துண்டை உருவிட்டு போனான் தண்ணி தொட்டிக்கு.

போனவன் கால் மணிநேரமாவியும் இன்னும் வராம இருக்க கண்டவள், “எங்க போனாப்ல?” தேடினவளுக்கு கண்ணு அசந்துச்சு.

உட்கார்ந்த கிடையில் அப்படியே சாய்ந்து படுத்தாள் அன்னம்.

குளிச்சுட்டு வந்த சத்தியசீலன், மூணு கல்லை தூக்கி ஓரமாக போட்டான். அதன் மீது ஓரு பெரிய அண்டாவை வைத்து நெறக்க தண்ணியை ஊத்தினான். காய்ந்த தென்னம்மட்டைகளை வைத்து அடுப்பை பற்ற வைத்தவன் தண்ணியை காயட்டும்னு விட்டுவிட்டு கடை வீதிக்கு கிளம்பிப் போனான்.

கருணா கடைக்கே போனவன், தேவையானதை வாங்கி ஒரு பையில் போட்டான். திரும்ப வரும் பாதையில் அருக்காணி அவனை பாத்துவிட, கைநீட்டி, “தம்பி நில்லுங்க நில்லுங்க” ரோட்டுக்கே வந்துட்டாள்.

“பைத்தியம் உள்ள பாஞ்சுடுமாட்ட இருக்கு. ஏற்கனவே நா தாலி கட்டுன கிறுக்கச்சியால கொலை கேசுல உள்ள போவ இருந்து தப்பிச்சு வந்திருக்கன். இப்ப அடுத்த சனி புடிக்க பாக்குது”

பைக்கை நிறுத்திய சத்தியசீலன் “கருப்பு பன்னி குடும்பந்தா அரைபைத்தியமா திரியுதுன்னா அங்கிட்டு வேலை பாக்குற நீயும் மெண்டலாவிட்டியாக்கா” அருக்கானியை முறைத்தான்.

“தம்பி எங்கயோ டூர் போவறேன்னு சொல்லிட்டு இருந்தீயாமா. கருப்பன் தம்பி சொல்லுச்சு?” அருக்கானிக்கு ஹனிமூன்னு சொல்ல வரவில்லை.

“சனிமூன்தான் போவணுமக்கா. கிறுக்கச்சி மண்டபத்துலயே தூக்க மாத்தரைய முழுங்கித் தொலைச்சுட்டா. ரெண்டு நாளா ஆஸ்பத்திரிலயே கெடந்தோம் பாத்துக்க”

“அதுக்குள்ள உட்டுட்டாங்களா தம்பி” அருக்காணி அன்னத்த பத்திதான் அவன் சொல்றான்னு உணராம ஊர் நியாயம் கேட்டாள் கன்னத்துல கையை வச்சுக்கிட்டு.

“அதையேன் கேக்குற. டாக்டரு இருக்கத்தான் சொன்னாப்புல. நாந்தான் அருவாளை காட்டி மெரட்டி புள்ளைய கூட்டிட்டு வந்துட்டேன். இருக்க வச்சு அதுக்கு தனியா பணத்தை புடுங்குவான்” சத்தியசீலன் எரிச்சலா சொன்னான்.

“நல்லாருக்குதா இப்ப?” அருக்காணி கேட்டாள்.

“அவளுக்கென்ன மவராசி. கட்டிக்கிட்டு ஊட்டுக்குள்ள கூட கால வைக்கல ஆம்பதாயிரத்த யானையாட்டம் முழுங்கிட்டா. சுலோச்சனா மவன்னா சும்மாவா”

சுலோச்சனான்னதும்தான் அருக்கானிக்கு விஷயம் புரிஞ்சது.

“என்ன தம்பி இந்நேரம் வரைக்கு அன்னத்த பத்தியா பேசிட்டு இருந்த?” அதிர்ச்சியில் நின்னுட்டார்.

“இந்நேரம் வரைக்கும் அதத்தான சொல்லிட்டு இருக்கன். புதுசா கேக்காத எதையும் சொல்லுறதுக்கு தெம்பு இல்ல பாத்துக்க” எரிச்சலா பாத்தான்.

“அய்யய்யோ என்ற சாமி தங்கம். என்ன காரியம் பண்ணிப்புட்டா” அவரு கூப்பாடு போட.

“இந்தா வாய மூடு. அந்த எருமை நல்லாத்தேன் இருக்கு. எனக்குத்தா சனி புடிச்சு ஆட்டுது”

“அப்படி சொல்லாத தம்பி. மவராசிய நல்லா பாத்துக்க” ன்னு அருக்காணி கண்ணை துடைக்க.

“புள்ளய பாக்குறேன் கரையேத்துறேன்னு எவனாச்சும் வீட்டுப் பக்கம் காலை வைச்சுராதீங்க. ஒரே சீவி சீவித் தள்ளிடுவேன் பாத்துக்க” மெரட்டினான்.

“அதெப்புடி வராம இருப்பாங்க. புள்ள சாவ பாத்துட்டு வந்துருக்கு. பெத்த மனசு பதறும் தம்பி. வளத்த எனக்கே நெஞ்சு பதறுது” அருக்காணி கண்ணீரோடு கேட்டார். வளத்தின பாசம் அவருக்கு.

“வாசல்ல கன்னி வெடி வச்சுருக்கேன். என்ன மீறி ஒரு நாயும் உள்ள வரப்படாது பாத்துக்க” சொல்லிவிட்டு அவளை தாண்டி கிளம்பினான்.

அருக்காணி கருப்பன் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமா போனாள்.

வீட்டுக்கு போன சத்தியசீலன், அடுப்பங்கரையில் அடுப்பை பத்தவச்சு குக்கரில் ரெண்டு பேருக்கு ஆக்கற அளவுக்கு சாதம் வச்சு. இன்னொரு குக்கரில் பருப்பை போட்டு வேக விட்டவன் வெளியே வந்தான்.

பைக்கில் இருந்த பைகளை எடுத்து வந்து திண்ணை மேல வீசினான். ஏற்கனவே எடுத்து வச்ச துணிப்பையில இருந்து உருட்டி புரட்டி ஒரு நைட்டியை எடுத்தான். சோப்பு, சீயக்காய் தூள், பேஸ்ட்டு பிரஷ் எல்லாம் எடுத்து வந்தவன் வாய்க்கா தண்ணி போகும் பாதையில் கிடந்த துவைக்கும் கல் மேல வைத்தான்.

மஞ்சள் கிழங்க கல்லில் போட்டு நசுக்கி அரைத்தான்.

தூக்கத்தில் சொருகிய கண்ணை இழுத்துப் பிடித்து அவன் சித்து விளையாட்டை வேடிக்கை பார்த்தாள் அன்னம். அவள் வீட்டில கருப்பன்தான் இது மாதிரி எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்வான்.

ஆனால் இதுமாதிரி வேலையை அவனும் பண்ணியதில்ல. அப்பத்தாவே பாத்துக்கும் வீட்டு வேலையை.

அவளுக்கு வேடிக்கை பாக்க நல்லாவும் இருந்ததால அரைக்கண் திறந்து பாத்துக்கிட்டே இருந்தாள்.

இங்கே வேலையை முடிச்சவன் விசில் வரவும் உள்ளே போய் அடுப்பை அனைத்தவன்,

வெறுமனே சீரகம் மிளகா பூண்டு ரெண்டு கறிவேப்பிலை போட்டு தாளிச்சு உப்பு பருப்பு செய்தான்.

இவளுக்கோ அதன் மனம் நாவின் சுவை மொட்டுக்களை ஈர்க்க எப்ப சோறு கண்ணுல காட்டுவான் ரெண்டு வாய் திங்கலாம் என ஆனது.

அளவான சூட்டில் அண்டாவை அப்படியே தூக்க அன்னத்தின் விழிகள் பயம் பிரமிப்பு இரண்டும் ஒட அவனை வெறித்தது. இத்தனை தெம்பு அவன்கிட்ட இருக்கான்னு.

அத்தியாயம் 37

நெல்லு அவிக்கற அண்டா அது. கருப்பா கிடந்தது. ரெண்டு கையிலும் தூக்கிட்டு போய் குளிக்கற இடத்துல வச்சான்.

“அம்மாடியோவ் எப்படி முகத்த சுளிக்காம எடுத்து வைக்கறாரு. கணமா இல்லையா?” தன்னிடமே கேட்டாள்.

“இந்தாம்மா மகாராணி எந்திருச்சு வா. குளிச்சுட்டு சோத்த கொட்டிக்க. மாத்திரை போடனுமில்ல” அங்கிருந்தே அழைத்தான்.

அவன் பேச்சுல ரோசம் பொத்துக்கிட்டு வந்துச்சு. ஆனாக்கா அதைக் காட்டிகிட்டு நிக்க இது நேரமில்லைன்னு புரிஞ்சது. அவன் உதவி இருந்தாத்தான் இப்போதைக்கு அரை உசுரையாவது காபந்து பண்ண முடியுமுன்னு ஆவ. அவனோட குறை சொல்லுக்கு பல்லை வெறுவிக்கிட்டு பேசாம நின்னாள். மீறி ரோசத்த காட்டுனா தண்ணி தொட்டிக்குள்ள கல்லை கட்டி அமுத்தவும் தயங்க மாட்டான் பாவிப்பையன்னு நினைச்சவளுக்கு முதல்ல அவன்கிட்ட இல்ல ஆமான்னு ஒத்த வார்த்தையை பேசக்கூட நாக்கு அசைய மறுத்தது.

எந்திருச்சு நின்னாவே தள்ளாடிச்சு, தூக்க கலக்கம் போவாமையே போதை போட்ட கணக்கா ஆவிப்போவ, எதுக்கு சாவ நெனச்சோமுன்னு லட்சம் தடவையா நெஞ்சுக்குள்ள நெருடுச்சு அவளுக்கு காலம் கடந்த அறிவுன்னு பட தன்னை நெனைச்சு அவமானமாவும் போச்சு அவளுக்கு.

எந்திரிக்க முடியாம தடுமாறி நின்ன அன்னத்தை பார்த்த சத்தியசீலன், “இவ என்னடா குடிகாரி மாதிரியே கரம் ஆடுறா. இன்னும் எம்புட்டு நாளுக்கு இதை கண்ணுல பாக்கனுமுன்னு தெரியல” அவ பக்கமா போனான்.

மெதுவா கையை ஊனி எந்திருச்சவள் நிக்க தடுமாற அதைப் பார்த்து பக்கத்தில் ஓடுனவன் புடிச்சுக்கிட்டான் ஆறுதலா.

“பயமா இருக்குதுய்யா. என்னமாச்சும் பண்ணு நடக்கவே முடியமாட்டுது” அவன் தோளில் சாய்ந்தாள்.

“சரி சரி ஒண்ணுமில்ல வா” அவளை குளிக்கும் இடத்துக்கு கூட்டுட்டு போனவன், “இந்த துண்டை இடுப்போட கட்டிக்க. நானே தலைக்கு ஊத்திவிடறேன். அப்பத்தான் வெடுக்குன்னு இருக்கும் ஒடம்புக்கு” சொன்னான்.

அவன் குளிப்பாட்டுறேன்னு சொன்னதுக்கு வேண்டாமுன்னு சொல்ல தெம்பில்ல அவளுக்கு.

“திரும்பி நில்லு துண்டை கட்டிக்கறேன்” சொன்னவள் அவன் திரும்ப.

நைட்டியை கழட்டி போட்டுட்டு துண்டை மார்போடு முடிச்சிட்டு கட்டிக்கிட்டு பெரிய கல்லு மேல உட்கார்ந்தாள்.

சாம்பு சோப்பு மஞ்சள் சகிதம் அவளை குளிப்பட்டியவன் “கொஞ்சம் தண்ணி இருக்குது. துண்டை கழட்டிட்டு சும்மா மேலுக்கு ஊத்திட்டு புதுதுணிய போட்டுக்கிட்டு வா. நா சோத்த எடுத்து வைக்கறேன் வந்து தின்னு” போனான் அங்க இருந்து.

காத்து விசுவிசுன்னு வீச அவன் ஊட்டிவிட சாப்பிட்டவள் கையை கழுவினாள்.

“இப்ப வா உள்ள போவலாம்” அவளை கூட்டிட்டு போனான் பூஜை ரூமுக்கே.

“மருமவ வந்தா விளக்கு போடணுமாமா. கருணா அண்ணன் சொல்லி அனுப்புச்சு. நீ விளக்கு போடு புள்ள சாமிக்கு. எம்புட்டு நாளாச்சு இங்க விளக்கெறிய பாத்து. எங்கம்மா இருக்கையில எந்நேரமும் விளக்கு எறிஞ்சமேனிக்கே இருக்கும் பாத்துக்க” நெகிழ்ந்து நின்றான்.

அவன் சொன்னதை தட்டாம அவன் உதவியோட செஞ்சவள் அவனோடு சேர்ந்து சாமிய கையெடுத்துக் கும்பிட்டாள். சாமிகிட்டஎன்ன கேக்கன்னு தெரியல மசமசன்னு வந்துச்சு மண்டைக்குள்ள அவன் சொன்னதுக்காக கையை கூப்பி நல்லா வச்சிரு எங்களைன்னு கேட்டுகிட்டாள். அப்பத்திக்கு அதான் முடிஞ்சது அவளுக்கு.

“போ போய் படு புள்ள. நானும் சித்த நேரத்துல வரேன். எனக்கும் உறங்கணும். அலைச்சலா போச்சு” சொன்னவனுக்கும் ஆச்சா போச்சான்னு ஆகிப்போச்சு இத்தன நாளா.

தயங்கி நின்னவள் அவன் முறைக்க பார்த்து அஞ்சி படுக்க போனாள்.

அறைக்குள் விசாலமாக இடம் இருக்க ஆடம்பரம் இல்லைன்னாலும் நவீன ரக டிவி ஒண்ணு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்தது. ஜன்னல்கள் சிறியதாக இல்லாமல் பெரியதாக இருந்து அதற்கு வெட்டிவேரால ஆன நெட் கொசு வராம இருக்க போட்டிருந்தான்.

மின்விசிறி தலைக்கும் மேல ஓடினாலும் சுத்தியும் மரம் இருக்கறதால காத்துக்கு பஞ்சமில்ல அங்க.

பாத்துக்கிட்டே இருந்தவளுக்கு தூக்கம் கண்ணை சொக்கிட்டு வர கண்ணசந்தாள். நொட்ட சொல்லு சொன்னாலும் ஆறுதலா இருந்தான் அவகிட்ட அதனாலயே பொறந்த வீட்டு நெனப்பு வந்தாலும் பெருசா பாதிக்கல அவளுக்கு. உடம்பு நல்லானா போதுமேன்னு ஆச்சு அவளுக்கும்.

ராமாயி உடம்பும் மனசும் தேவலையா இருக்கப் போவ, படுக்கையை விட்டு எந்திருச்சு வாசலில் வந்து அங்க போட்டிருந்த நாட்காலியில் உட்கார்ந்தார். படுத்தே கிடந்தவருக்கு வெளியே காத்து வாங்கனுமுன்னு இருக்க வேறு பக்கம் போகல.

அருக்கானி வந்த வேகத்த பாத்தவருக்கு “இவ என்ன இம்புட்டு வேகமா ஓடி வரா. நாய் தூரத்துதாக்கும்” அருக்கானிக்கு பின்னால் எட்டி பாத்தார் சந்தேகமா.

“அம்மா உங்ககிட்ட ஒண்ணு சொல்லோணும்” மூச்சு வாங்க வாசலில் உக்காந்த அருக்கானி விவரத்த சொல்ல, நெஞ்சை புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டார் அந்த எடத்துலயே.

“என்னடி சொல்ற. எம்பேத்தி தற்கொலை பண்ணிக்க பாத்துருக்காளா?” கேட்டார் நம்பாம.

“ஆமாம்மா. சத்யா தம்பி இன்னைக்குத்தான் புள்ளய வம்பா கூட்டிட்டு ஆஸ்பத்திரியில இருந்து வந்துருக்குது. கடைக்கு போயிட்டு திரும்பயில நா நிப்பாட்டி கேட்கவும்தான் விவரம் தெரிஞ்சுது”

“ஐயோ எந்தங்கமே இப்படி பண்ணிட்டாளே” ராமாயி தாங்க முடியாம சத்தம் போட்டே அழுதார்.

அவர் சத்தங்கேட்டு வெளியே வந்தார்கள் மகனும் மருமவளும்.

அப்பா காலம் சென்றதுல இருந்து இன்னைய தேதி வரைக்கும் ராமாயி அழுது யாருமே பாத்தது இல்ல அங்க. அப்படிப்பட்டவர் நெஞ்சுல அடிச்சுக்கிட்டு கதற.

“என்ற தங்கமே. மகாலட்சுமியாட்டம் தங்கம் பொன்னுன்னு பூட்டி பாத்து அழகு பாத்தவ கண்ணை மறைச்சுப் போட்டியே சாமி. சாமி செலையா அழகு பாத்த கண்ணால சவமா பாத்தா நெஞ்சு தாங்குமா. அதுக்கு மொத நா சாவோனும்” நெஞ்சுல அடிச்சுட்டு அழுதுட்டாரு ராமாயி.

பெத்தவ கதறலை காதுல கேட்ட தயாளன் கையில இருந்த போனை தவறவிட்டு அம்மா பக்கமா ஓடினார்.

“என்னாச்சும்மா எதுக்கு இம்புட்டு சத்தம்” பக்கத்துல உக்கார்ந்தாரு தயாளன்.

“எப்பா சாமி எம் பேத்தி மணமேடையில இருக்கப்ப தூக்க மாத்திரைய முழுங்கிட்டாடா முழுங்கிட்டா. அப்பவே எம்னசுக்கு பட்டுச்சு. புள்ள முகத்துல கல்யாண கலையே இல்லையே இடி விழுந்தாப்புடி இருக்காளேன்னு நெனச்சுக் கேட்டா ஒண்ணுமில்ல அப்பத்தான்னு சொல்லிட்டா பாவி மவ. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு போட்டு இன்னைக்கு சாவுற கதையையும் அப்படியே முழுங்கிட்டாளே அழுத்தக்காரி” தலையில அடிச்சுட்டே கதறினவரு மவன் நெஞ்சுல தலையை சாச்சுக்கிட்டாரு.

சத்தம் கேட்டு அங்கிட்டு வந்த பொண்டாட்டியை பாக்கவும் ஆவேசமா எழுந்தாரு தயாளன். மொத்த கோவமும் அவ மேல விழுந்துச்சு. ரெண்டு நாளா தலையில ஒவ்வொரு இடியா விழுந்துட்டே இருக்க தாங்க முடியலை அவருக்கு.

“எல்லாம் உன்னால வந்துச்சிடி. என்ற சொந்தம் உட்டு போவ கூடாது, படிச்ச மாப்பிள்ளைன்னு ஆடிட்டு போன. அப்பவே காலை வெட்டிப் போட்டிருந்தா ஆவிருக்கும். உம்பட இஷ்ட மயிருக்கு ஆட விட்டுப்போட்டு இப்ப தலையில இடியா உழுவுது பாத்துக்கோ” சுலோச்சனா கன்னத்துல ஒரு அடிய இறக்கினார் தயாளன்.

“ஒரு வார்த்தை சொல்லியிருந்தா கண்ணை மூடிட்டு கல்யாணத்தை நிப்பாட்டியிருப்பமே. இம்புட்டு தூரத்துக்கு கொண்டு வந்துட்டாளே” நெஞ்சு உறைய அழுத ராமாயி நெஞ்சைப் புடிச்சுக்கிட்டு அப்படியே மண்ணுல சாஞ்சுட்டார்.

நேத்து காத்தால இருந்து மனசே சரியில்லாம இருந்துட்டு இப்ப இடிமாதிரி இப்படியொரு விஷயத்தைக் கேக்க அவருக்கு தாங்க முடியாம போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!