அந்தியில் பூத்த சந்திரனே

5
(12)

முருகன் கோவிலில் ஏற்கனவே திருமணத்திற்க்கான முன்பதிவு நடை பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஐயர் மந்திரங்கள் சொல்ல அதை திரும்ப சொன்னபடியே பட்டு வேட்டி பட்டு சட்டையில் பேரழகனாக அமர்ந்திருந்தான் ஹர்ஷா. 

மிதமான ஒப்பனையுடன் மிக நேர்த்தியாக புடவை கட்டி, தங்க ஆபரணங்கள் அணிந்து கல் வைத்த பொட்டு வைத்து பார்த்து கொண்டே இருக்கலாம் போன்ற அழகில் தயாராகி இருந்தாள் அம்ருதா. அவளுக்கான புடவையும் நகையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்திருந்தான் ஹர்ஷ மித்ரன். 

ஐயர் பெண்ணை அழைத்து வர கூற, அம்ருதாவை அழைத்து வந்து ஹர்ஷாவின் அருகில் அமர வைத்ததும் அனைவரது பார்வையும் ரசனையாக ஒரு முறை அவர்கள் இருவரையும் தொட்டு மீண்டது.

ஹர்ஷா தனது அருகில் அமர்ந்திருக்கும் அம்ருதாவை கண்டதும் ‘இவள் என்னவள்’ என்ற உணர்வு தானாகவே எழத் தொடங்கியது.

ஹர்ஷாவின் அன்னை கூட ஒருமுறை இருவரது ஜோடி பொருத்தத்தையும் பார்த்து மெச்சி கொண்டார். அவர் மனதில் இருவரையும் சேர்த்து மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டிருக்கும் தருணம் ஆத்யா வந்து அம்ருதாவின் மடியில் அமர, அவரது மனது மீண்டும் பிடித்தமின்மைக்குள் வந்துவிட்டது. சட்டென முகத்தை திருப்பி கொண்டார். 

அதிக பட்சம் நூறு பேர் கொண்ட திருமணம் மிகவும் எளிமையாக ஆனால் மணமக்கள் மனம் முழுவதும் நிறைவாக நடந்து கொண்டிருந்தது. 

ஐயர் மங்கள நாணை எடுத்து ஹர்ஷாவின் கரத்தில் கொடுக்க, அதை வாங்கி அம்ருத்தாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக ஏற்று கொண்டான் ஹர்ஷ மித்ரன். 

இரு குடும்பத்தாரும், சொந்தங்கள், நண்பர்களும் என அனைவரும் மன நிறைவுடன் ஆசீர்வதிக்க நிரஞ்சனா மட்டும் வெறுப்போடு அர்ச்சதையை தூக்கி இருவருர் மீதும் வீசினாள். ஹர்ஷா தனது கரத்தினால் அவளை சுற்றி அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க, அதை தொடர்ந்து இருவரும் அக்கினியை வலம் வந்தனர். நிழற்படங்களும், நிகழ்படங்களும் படம்பிடிக்கபடும் போது தேவையற்ற அளவுக்கு அதிகமான நெருக்கத்தை தவிர்த்தான் ஹர்ஷா.

அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹர்ஷாவின் உணவகத்திலிருந்தே வித விதமான உணவுகள் வரவழைக்கப்பட்டு தலைவாழை இலை போட்டு பந்தியில் பரிமாறினர். உண்டு முடித்து வெகு நேரம் ஆகியும் உணவின் சுவை நாவிலேயே இருப்பதாக உணர்ந்தவர்கள் ஹர்ஷாவிடம் சென்று மனதார பாராட்டினர். திருப்தியாக அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவறாக விடைபெற்று மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

இத்தனை நாள் தன் குடும்பத்துடன் இருந்த இனிமையான நிகழ்வுகள் யாவும் அம்ருதாவின் மனக்கண்ணில் தோன்றி மறைய, தன் குடும்பத்தாரை பிரியும் வேதனை மனதில் அப்பி கொண்டது. விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்க, தாயும் தந்தையும் சமாதானம் செய்யும் போது நிரஞ்சனாவின் மனமோ ‘ம்க்கும்.. இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்’ என்று எண்ணி கொண்டது. 

ஒருவழியாக சமாதானம் செய்த அம்ருதாவின் தாயும், தந்தையும் அவளை ஹர்ஷாவின் காரில் ஏற்றி அனுப்பி வைக்க, அவர்களுக்கு முன்பாக சற்று இடைவெளி விட்டு புறப்பட்டு சென்றது பார்த்திபன், கீர்த்தனா செல்லும் கார்.

 

போகும் வழியெங்கும் ‘இனி என் வாழ்க்கை எப்படி இருக்குமோ?’ என்ற பயம் தொற்றி கொள்ள, அதில் உளன்று கொண்டிருந்தவளின் சிந்தனையை கலைத்தது ஆத்யாவின் குரல். 

“ம்மா.. இப்போ நாம எங்கம்மா போதோம்?”

அதற்க்கு அம்ருதா பதில் கூறும் முன்னரே ஆத்யாவை தூக்கி தன் மடியில் அமர வைத்தவன், “அப்பா வீட்டுக்கு வரீங்க பட்டு பாப்பா. இனிமேல் நாம எல்லாரும் ஒரே வீட்ல ஒண்ணாதான் இருக்க போறோம்” என்றான்.

‘அவன் தன்னை முதன் முதலில் அப்பா என்று அறிமுகம் செய்து கொள்கிறான். குழந்தை என்னவென்று நினைப்பளோ? அவளுக்கு ஏதாவது புரியுமா? நன்றாக வாய்பேசும் குழந்தை, ஏதேனும் கேட்டு விடுவாளோ?’ என்றெல்லாம் அம்ருதா நினைத்து கொண்டிருக்கையில்,

“அப்பாவா? எனக்குதான் அப்பாவே இல்லையே அங்கிள்..” என்றாள் பாவமாக.

ஆத்யாவை மேலும் தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டவன் அவளின் மிருதுவான கன்னத்தில் முத்தமிட்டு, “நான்தான் உன்னுடைய அப்பா. இனி நீ என்னை அப்பான்னுதான் கூப்பிடனும். கூப்பிடுவியா?” என்று புன்னகை முகமாய் கேட்டதும்,

குழந்தைக்கு எல்லையற்ற ஆனந்தம். ஆனாலும் ஒரு நொடி முகத்தை சுருக்கியவள் “நீங்கதான் என்னோட அப்பான்னா ஏன் என்னை இத்தனை நாள் பாக்க வதல?” என்றாள் சற்று கோபம் நிறைந்த குரலில்.

அவள் நாசியை பிடித்து செல்லமாக ஆட்டியவன், “அப்பாவுக்கு நிறைய வேலை இருந்துச்சுமா. இனிமேல் எப்போதுமே உன் கூடவே இருப்பேன். உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்றதும்,

“ப்தாமிஸ்? ” என்று தனது குட்டி கரத்தை நீட்டி சத்தியம் கேட்க,

அவள் கரத்தின் மீது தன்னுடைய வலிமையான கரத்தை பதித்தவன், “ப்ரோமிஸ். இனி எப்போதும் உன் கூடவே இருப்பேன்” என்றான். 

இவர்களின் உரையாடலை பார்த்த அம்ருதாவிற்கு மனது நிறைவாக இருந்தது. மனதில் ஏற்பட்ட பயம் சிறிது விலகி சற்றே நிம்மதி கிட்டியது. அதே தருணம் அவர்கள் கார் வீட்டின் முன்பு நிறுத்தபட, வாட்ச்மேன் வந்து கேட்டை திறந்ததும்,

இவர்களுக்கு முன்னால் பார்த்திபன், கீர்த்தனா தம்பதியர் சென்ற கார் முதலில் உள்நுழைய, இவர்களது கார் பின் தொடர்ந்தது. இரண்டு அடுக்குகள் கொண்ட, பழங்காலத்து பாரம்பரிய முறைப்படி கட்டிய அழகான வீடு. இரண்டு புறமும் அழகுக்காக வளர்க்கப்பட்ட செடிகள் இருக்க நடுவில் கார் தாராளமாக செல்லும் அளவிற்கு பாதை இருந்தது. பாதைக்கு இரு புறமும் தோட்டம் அமைக்கப்பட்டிருக்க, பழமரங்களும், பூச்செடிகளும் விழிகளுக்கு விருந்தாகின.

கீர்த்தனா ஆரத்தி தட்டை எடுத்து வந்து புதுமண தம்பதிகளுக்கு சுற்றி விட்டு, அவர்கள் நெற்றியில் திலகமிட்டு, “வலது காலை எடுத்து வச்சு உள்ள வாம்மா” என்றதும்,

ஆத்யா இருவரது கரத்தையும் பற்றியவாரு அவர்களுக்கு இடையில் இருக்க, மூவரும் ஒரே நேரத்தில் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தனர். தயாராக இருந்த பூஜை அறையில் அம்ருதா விளக்கேற்றியதும், அடுத்தடுத்த திருமணத்திற்கு பின்னரான சடங்குங்களும் நிறைவேற்றப்பட்டன. 

கீர்த்தனாவின் நெருங்கிய சொந்தத்தில் பெண் ஒருத்தி, “பொண்ணு பார்க்க ரொம்ப அழகாதான் இருக்கா. ஆனா குழந்தையோட இருக்கிறவதான் உங்களுக்கு கிடைச்சாளாக்கா? நம்ம ஹர்ஷா இருக்குற அழகுக்கு எத்தனையோ கல்யாணம் ஆகாத பொண்ணுங்களே கிடைச்சிருப்பாங்களே? இவளை ஏன் கட்டுனீங்க?” என்று கேட்டு வைக்க முகம் சுருங்கி போனது கீர்த்தனாவிற்க்கு. 

“ஹர்ஷாவுக்கு இந்த பொண்ணைதான் பிடிச்சுது. உனக்கே தெரியும்ல? நாங்க எவ்வளவு போராடி அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சோம். ஆனா அவன் அப்போ கூட முழு மனசோட பொண்ணு பார்க்க ஒத்துக்கல. எங்களுக்காக மட்டும்தான் சம்மதிச்சான். ஆனா அவனே இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு இவளை கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டதால எங்களால மறுக்க முடியலை. 

ஏற்கனவே நாங்க பார்த்த பொண்ணை கட்டி வச்சுதான் என்னென்னவோ நடந்து போய்டுச்சு. இந்த முறை அவனா பிடிச்சிருக்குன்னு சொல்லும்போது நாங்க என்ன செய்யுறது சொல்லு?” என்றதும்.

“ஹ்ம்ம்ம்… என்னவோ சொல்றீங்க… அவனுக்கு பிடிச்சா சரிதான்” என்று சற்றே சலிப்பாக கூறிவிட்டு விலகி சென்றாள். கீர்த்தனா திரும்பி பார்க்கையில் ஹர்ஷாவுடைய கரங்களில் ஆத்யா இருப்பதை பார்த்தவருக்கு மனது வலிக்கத்தான் செய்தது. ‘யாரோ பெற்ற பிள்ளைக்கு என் பிள்ளை தந்தையாக வேண்டுமா?’ என்ற எண்ணங்கள் பிறந்தாலும் ‘இனி வேறு வழி இல்லையே?’ என தன்னை தானே தேற்றி கொள்ள முயற்சி செய்தார்.

அடுத்தபடியாக வீட்டினில் மிக நெருங்கிய சொந்தங்கள் பத்து பேர் மட்டுமே இருக்க, அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் நடந்தேறிய நிலையில் அவர்களும் விடைபெற்று சென்றனர்.

இரவினில் சரியாக தூக்கம் இல்லாது போனதினாலும், காலையிலிருந்து அலைச்சல் அதிகமாக இருந்ததாலும் அனைவருக்குமே சற்று களைப்பாக இருக்க, “கொஞ்ச நேரம் அந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கமா.” என்றதும் “சரி” என்றவள் ஆத்யாவுடன் அறைக்குள் சென்றுவிட்டாள். அனைவரும் அவரவர் அறையில் ஓய்வெடுத்தனர்.

பகல் முடிந்து இரவு துவங்கி இருக்க அம்ருதாவை குளித்து முடித்து வேறு உடைக்கு மாற சொன்னவர் அனைவருக்கும் உணவு எடுத்து வைத்தார். அம்ருதா தயாராகி குழந்தையோடு வெளி வர, அதை பார்த்தவர் குழந்தைக்கும் உணவு எடுத்து வைக்க அம்ருதா அதை ஆத்யாவிற்கு ஊட்டி விட்டாள். குடும்பத்தில் அனைவரும் இரவு உணவை உண்டு முடித்த பின்னர் தனது பேச்சை ஆரம்பித்தார் கீர்த்தனா. 

“ஆத்யாவுக்கு தனி ரூம் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கேன். இனிமேல் அதுதான் அவ ரூம். அவ அங்கேயே தூங்கட்டும்” என்றதும்,

“என்னது? இவ்வளவு சின்ன குழந்தைக்கு தனி ரூம்மா?” என்று அதிர்ந்தாள் அம்ருதா.

“என்னம்மா சொல்லறீங்க? அவ சின்ன குழந்தை. அவ எப்படி தனி ரூம்ல இருக்க முடியும்? ஆத்யா எங்க கூடதான் இருப்பா ” என்றான் ஹர்ஷா.

“நீ புரிஞ்சுதான் பேசுறியா ஹர்ஷா? இன்னைக்குதான் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு. இன்னைக்கு நைட் உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணியிருக்கோம். ஆத்யாவை எப்படி உங்க கூட அனுப்ப முடியும்?”

“இதோ பாருங்கம்மா. ஆத்யா இன்னைக்கு மட்டும் இல்ல, எப்பவுமே எங்கக்கூடாதான் தூங்குவா. நீங்க தேவை இல்லாம எதையாவது பேசிட்டு இருக்காதீங்க. என்றவன் அங்கேயே நின்றால் தன் அன்னை மீண்டும் ஏதாவது பேச ஆரம்பிப்பார் என்று எண்ணி ஆத்யாவை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

கீர்த்தனாவுக்குதான் கோபம் கோபமாக வந்தது. ‘ஆனாலும் தன் மகன் இவர்களுக்கு இவ்வளவு செய்ய வேண்டாம்’ என்று எண்ணியவர் திரும்பி அம்ருதாவை முறைக்க அவள் செய்வதறியாது தலையை குனிந்து கொண்டாள். 

பார்த்திபன் கீர்த்தனாவை அழைத்து கொண்டு தங்களுடைய அறைக்கு சென்றவர், “விடு கீத்து. அவனே அப்படி சொல்லும்போது நாம என்ன செய்ய முடியும்?” என்றார்.

“அவன் சந்தோஷமா இருக்கத்தானே கல்யாணம் பண்ணி வச்சது? என்னவோ இவங்க இரண்டு பேரையும் பார்த்துக்குறதுக்காக மட்டுமே கல்யாணம் பண்ணின மாதிரி ஓவரா பண்றான்?”

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவர், “போக போக எல்லாம் சரியாகிடும். விடு மா.” 

“என்னவோ போங்க..” என்றவருக்கு மனதே ஆறவில்லை. வெளியே வந்து பார்க்கயில் அம்ருதா அதே இடத்தில் கைகளை பிசைந்த படி நிற்க, சமையலறைக்கு சென்றவர் காய்ச்சி வைத்த பால் செம்பினை எடுத்து வந்து அவள் கரத்தில் திணித்து, “மேல ரைட் சைடு இரண்டாவது ரூம் ஹர்ஷாவோடது.” என்றுவிட்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மனதினில் மீண்டும் பயம் தொற்றி கொள்ள ‘அவனுடன் தனித்து ஒரு அறையில் இருக்க வேண்டுமா?’ என்று நினைக்கையில் கால்கள் நகர மறுத்தன. ‘எப்படியும் போய்தானே ஆக வேண்டும்?’ என்று எண்ணியவள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து படியேறி செல்ல துவங்கினாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!