முதலில் அறைக்கு செல்லாமல் தயங்கியப்படி அங்கேயே நின்றவள் ‘எப்படியும் போய்தானே ஆகனும்?’ என்று எண்ணி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து படியேறி செல்ல துவங்கினாள்.
அறை கதவை தட்ட நினைத்து கதவின் மீது தனது கரத்தை பதிக்க, கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே நுழையும்போதே ஆத்யா, ஹர்ஷாவின் பேச்சு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. கதவை தாழிட்டு விட்டு திரும்பி என்னவென்று பார்க்க ஆத்யாவிற்கு வன விலங்குகளை வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான் ஹர்ஷா. “ம்மா… நீங்களும் வாங்க.. அப்பா நல்லா கத சொல்தாங்க” என்றதும் முதன் முறையாக அவள் அப்பா என்று அழைத்ததில் இருவருமே உள்ளம் மகிழ்ந்து போயினர்.
ஹர்ஷாவோ “என் பட்டு குட்டி என்னை அப்பா சொன்னீங்களா? திரும்ப சொல்லுங்க” என்று கேட்க, மீண்டும் “அப்பா..” என்றதும் அவளை இழுத்து அணைத்து அவளது கன்னம் கொஞ்சி, தனது கதையை தொடர்ந்தான். இருவரையும் பார்த்த அம்ருதாவிற்க்கு மனம் நிறைவாக இருந்தது.
ஆத்யாவோ, அவன் மடிமீது அமர்ந்து தோளில் வாகாக சாய்ந்து கொண்டு “ம்ம்.. ம்ம்…” என கேட்டு கொண்டே இருந்தவள், கதை முழுதாக முடிவதற்கு முன்னமே உறங்கி போனாள்.
இங்கு அம்ருதாவின் விழிகளோ அறையை சுற்றி வட்டமிட்டது. மிக பெரிய படுக்கை அறை. நான்கு பேர் தாராளமாக தூங்கும் அளவிலான கட்டில். வெண்மை நிற பஞ்சு போன்ற மெத்தை. சுவற்றில் அழகான ஓவியங்கள், சோபா, ஸ்மார்ட் டிவி, சுவற்றிலேயே பதிக்கப்பட்ட கப்போர்டுகள் என அனைத்தும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. தன் பார்வையை சுழல விட்டவளை பார்த்தவன், ஆத்யாவை மெத்தையின் மீது படுக்க வைத்துவிட்டு தூக்கம் கலையாமல் அவளிடமிருந்து விலகினான்.
“வாங்க அம்ருத்தா. ஏன் நிக்கிறீங்க? வந்து இப்படி உக்காருங்க” என்றதும் அவள் மனதிலே பய பந்து உருள தொடங்க, பதற்றமும் தானாகவே தொற்றி கொண்டது.
அவள் தயங்குகிறாள் என்பது புரிய, “ஃபீல் ஃப்ரீ அம்ருதா. இனிமேல் இதுதானே உங்க ரூம்?” என்றவன் அவளை சகஜம் ஆக்கும் பொருட்டு தன்னுடன் அழைத்து கொண்டு அதே அறைக்கு இருக்கும் மற்றைய அறைக்கு கூட்டி சென்றான்.
“இது என்னோட ஸ்டடி ரூம்” என்று திறந்து காண்பிக்க அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அங்கேயும் சோபா, டேபிள் என்று இருக்க, கபோர்டை திறந்து “இதுல என்னோட ரெஸ்டாரண்ட், அஃபிஸியல் டீடெயில்ஸ் எல்லாம் இருக்கும்” என்றான்.
“புரிந்தது” என்பதுபோல் தலையாட்டியவள், அவனை பின்தொடர, அவளை அழைத்து கொண்டு அடுத்த அறைக்கு சென்றான். “இது ட்ரெஸ்ஸிங் ரூம். உங்களோட ட்ரெஸ், ஆத்யாவோட ட்ரஸ் எல்லாத்தையும் இங்க தனி தனி கப்போரட்ல வச்சுக்கோங்க. இந்த பக்கம் என்னுடைய ட்ரெஸ் இருக்கும்” என்றான். அதற்கும் “சரி” என தலையாட்டினாள் அம்ருதா.
அடுத்ததாக பால்கனிக்கு சென்றவன் “இதுதான் என்னுடைய பேவரட் ப்ளேஸ்” என்றான். அதை தன் விழிகளால் அளந்தாள் அம்ருதா.அழகுக்காக செடிகள் வைக்கப்பட்டு இருக்க, ஒரு மேஜையும் அதனை சுற்றி நான்கு மெத்தை நாற்காலிகளும் இருந்தன. அங்கிருந்து பார்ப்பதற்க்கு தோட்டம் மிக அழகாக தெரிந்தது.
காற்றினில் பரவி வரும் பூக்களின் மணம் நாசியை தொட்டு நுரையீரலை சென்றடைய, இருவரது மனமும் இதமான சூழ்நிலைக்கு சென்றது. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தனர். குளிர்ந்த காற்று வேகமாக வீச தொடங்க, “அம்ருதா.. இந்த காத்து உடம்புக்கு ஒத்துக்காது. கோல்டு பிடிக்கும். வாங்க உள்ள போலாம்” என்றுவிட்டு அவன் முன்னேறி செல்ல, சிறிது இடைவெளி விட்டு அவனை பின் தொடர்ந்தாள் அம்ருதா.
அவன் சட்டென திரும்பி ஏதோ சொல்ல வர, அவன் இப்படி திரும்புவான் என்று சற்றும் எதிர் பாராத அம்ருதாவோ அவன் மீதே மோதி தடுமாறி கீழே விழ போக, ‘எங்கே விழுந்து விடுவோமோ?’ என்ற பயத்தில் தன்னிச்சையாக அவன் சட்டையை இறுக பற்றி இழுக்க, நொடி பொழுதில் அவனும் நிலை தடுமாறி அவள் மீதே சரிந்து விழுந்தான்.
அதில் அவன் தடித்த அதரங்களும், அவளது மென்மையான இதழ்களும் மோதி கொள்ள, அவசரகதியாக அங்கே அரங்கேறியது ஒரு இதழ் முத்தம். அதில் இருவருக்குமே உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. இருவரின் விழிகளும் அதிர்ச்சியில் விரிய, விழும் முன்னரே அவளுக்கு அடிபடாமல் இருப்பதர்காக, அவள் முதுகுக்கு ஒரு கரத்தையும், பின்தலைக்கு ஒரு கரத்தையும் கொடுத்து பிடித்ததால் இப்போது முழுவதுமாக ஹர்ஷாவின் அணைப்புக்குள் இருந்தாள் அம்ருதா.
இருவரின் உடலும் முழுவதுமாக மோதி கொண்டதில், தற்போது உள்ள நெருக்கத்தில் உணர்ச்சி மிகுதியில் இருவருக்குமே மூச்சு தடுமாற தொடங்கியது. அவளது விழிகளில் தனது விழிகளை கலக்க விட்டவன் பார்வை அடுத்ததாக,
அவள் வெண்சங்கு கழுத்தின் மேல் தாபமாக படற தான் கட்டிய தாலி அவள் கழுத்தில் இருப்பதை கண்டவனுக்கோ, ‘இவள் என்னவள்’ என்ற உரிமை தானாகவே பிறந்தது.
அந்த உரிமையில் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அதற்கு குட்டி குட்டி முத்தங்களை வழங்கினான். அவன் ஈர உதடுகளும், சூடான மூச்சு காற்றும் தன் மேனியில் பட்டதும் சிலிர்த்து போக விழிகளை மூடிக்கொண்டாள் அம்ருதா.
அவன் மேலும் முன்னேற சென்ற நொடி தன்னிலை அடைந்தவள் திடீர் நெருக்கத்தில் ஒன்றும் புரியாது தன்னிடமிருந்து அவனை விலக்கி தள்ள நினைக்க, அவளால் அசைக்க கூட முடியவில்லை.
ஆனால் அவனோ அவளை விட்டு விலகவும் முடியாமல், அவள் அனுமதி இன்றி தொடரவும் முடியாமல் தவித்து போனான். தன்னை கடின பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன் சற்றே விலகி, “சா.. சாரி.. நீங்க விழ போனீங்க அதான் உங்களை விழாம பிடிக்க போய்..” என்றவன் அதற்க்கு மேல் கூற முடியாமல் “சாரி அகைன்” என்றதும் அம்ருதாவிற்கோ சங்கடம் ஆகி போனது. “நான்தான் கீழ விழுந்துடுவேனோன்னு பயந்து உங்க சட்டையை பிடிடுச்சு இழுத்துட்டேன். சாரி..” என்ற அம்ருதா அதற்க்கு மேல் ஒரு நொடியும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்.
இருவருக்குமான நெருக்கம் ஒரு சில விநாடிகளே நீடித்து இருந்தாலும், அதன் தாக்கம் இருவருக்குமே அதிகமாக இருந்தது. அம்ருதாவோ ‘தான் நடந்து கொண்டது தவறோ? என்ன நினைத்திருப்பார்?’ என்று எண்ணியவாறே நின்று கொண்டிருக்க, பால்கனியில் நின்றவனுக்கும் அதே எண்ணங்களே ஓடி கொண்டிருந்தன.
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவன் அம்ருதாவை பார்க்க, ஒரே கட்டிலில் உறங்க தயக்கம் காட்டி அவள் சேலையின் நுனியை பிடித்து சுழற்றிய வண்ணம் இருந்தாள். அதை புரிந்து கொண்டவன் ஆத்யாவை நடுவில் படுக்க வைத்துவிட்டு,
“நீங்க அங்க படுத்துக்கோங்க நான் இங்க படுத்துக்கிறேன்” என்றவன் அறையின் விளக்கை அணைத்து விட்டு, மெல்லிய ஒளி வீசும் விளக்கை ஒளிர விட்டவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான். இருவருக்கும் தூக்கம் தொலை தூரமாகி போனது. நீண்ட நேரத்திற்கு பிறகே இருவரும் உறக்கத்தை தழுவி இருந்தனர்.
காலை சூரியன் முகத்தில் படும் நேரம் விழிகளை சுருக்கி இமைகளை திறந்து பார்க்க, அவனது விழிகளுக்கு முன்பே ஆத்யாவும் அம்ருதாவும் தெரிந்தனர். தன்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்ற முடிவில் இருந்தவனுக்கு தன் கண்முன்பே இருக்கும் இரு உயிர்களை காண்கையில் மீண்டும் வாழ ஆசை தோன்றியது.
சூரிய வெளிச்சம் கண்ணில் பட்டு இருவரது உறக்கமும் கலையாமல் இருக்க, திரைசீலையை இழுத்து விட்டவன் தன்னுடைய உடற்பயிற்சி அறையை நோக்கி சென்றான்.
அவன் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு தூக்கம் கலைந்து எழுந்தவள், “அச்சச்சோ.. இவ்வளவு நேரம் ஆகிடுச்சே?” என்று பதறியப்படி குளியலைறைக்குள் செல்ல முயன்ற நேரம், தன்னுடைய உடைமைகளை நேற்று கீழ் அறையில் வைத்தது நினைவில் வந்தது. சட்டென அறை கதவை திறந்து வேக வேகமாக கீழே செல்ல, கீர்த்தனா சமையல் அறைக்குள் நின்றிருந்தார்.
அறைக்குள் புகுந்து தங்களுடைய ஆடை நிறைந்த பையினை எடுத்து கொண்டவள் திரும்ப தங்களது அறைக்கே சென்று பையினை கீழே வைத்து விட்டு, தனக்கான ஆடையுடன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். பிறகு தன்னை சுத்தப்படுத்தி கொண்டு ஆடை மாற்றி வெளியே வர ஹர்ஷாவும் உள் நுழைந்தான்.
கையில்லாத பனியனுடன் உடற்பயிற்சி செய்ததன் மூலம் வந்த வியர்வை தேகம் முழுவதும் நனைந்து, திடமான உடல் அமைப்போடு உள் நுழைபவனை பார்க்கவே அத்தனை அழகாக இருந்தான். தன் பர்வையை கடினப்பட்டு திருப்பியவள் அங்கிருந்து சென்று ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் புகுந்து கொண்டாள். போகும் அவளையே சில நொடிகள் நின்று பார்த்தவன், அவள் தன் பார்வையை விட்டு மறைந்த பின்னரே குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
தன்னை முழுவதுமாக தயார் படுத்தி கொண்டவள் குழந்தை கீழே விழாமல் இருக்க சுற்றிலும் தலையணை வைத்துவிட்டு கீழிறங்கி சென்றாள். சமையலறைக்குள் நுழைந்தவளை பார்த்த கீர்த்தனா “ஹர்ஷா எழுந்துட்டானா?” என்று கேட்க,
“எழுந்துட்டாரு அத்த. குளிக்க போயிருக்காரு” என்றதும் அடுத்ததாக, “உன் பொண்ணு எழுந்துட்டாளா?” என்ற கேள்வியில் “உன் பொண்ணு” என்பதை அழுத்தி கூறியதில் அம்ருதாவிற்கு நன்றாக புரிந்து போனது அவர் தன் குழந்தையை ஏற்வில்லை என்பது. அதோடு அன்று காஃபி ஷாப்பில் ஹர்ஷா சொன்னதும் அவள் நினைவில் வந்து போனது.
‘நீங்க என்னை நம்பி வந்தா, உங்களுக்கும் ஆத்யாவுக்கும் நான் பொறுப்பு. நீங்க சம்மதிச்ச அடுத்த நிமிஷம் ஆத்யா என்னோட பொண்ணுதான். ஆனா என்னை சுத்தி உள்ளவங்களும் ஏத்துக்கணும்னு நீங்க நெனச்சா அதுக்கு இப்போ என்கிட்ட எந்த பதிலும் இல்லை.
ஆனா என்னால ஒன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும். யாராலையும் ஆத்யாவுக்கும், உங்களுக்கும் எந்த மன கஷ்டமும் வராம நான் பார்த்துப்பேன்’
அவன்தான் அன்றே தெளிவாக கூறியிருந்தானே. இதற்க்கு மேலும் எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணி கொண்டியிருந்தவளை கலைத்தது கீர்த்தனாவின் குரல்.
“உன்னை தான்மா கேட்டேன். உன் பொண்ணு எழுந்துட்டாளா?” என்று மீண்டும் கேட்கவும்,
“இன்னும் இல்ல அத்த. இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவா.”
“சரி. நீ என்ன குடிப்ப? காபியா? டீயா?”
“ஏலக்காய் டீ” என்றதும் வேலைக்கார பெண்ணிடம் அவள் கேட்டது போல டீ போட சொன்னவர், காபியை அவரே தயாரித்தார். “என் பையனுக்கு நான் காஃபி போட்டாதான் பிடிக்கும்” என்றபடியே தயார் செய்ய,
“டீ ரெடி ஆனதும் இரண்டையும் எடுத்துக்கிட்டு ரூம்க்கு போ. இங்க வேலை எல்லாம் எதுவும் இல்ல. நீ உன் பொண்ணு எழுந்ததும் அவளை ரெடி பண்ணிட்டு ஹர்ஷா கூட கீழ வந்தா போதும்” என்றவர் சிறிது நேரம் கழித்து அவள் கரத்தினில் காஃபி, டீ என இரண்டு கோப்பைகளையும் கொடுத்தவர் “நீ கிளம்பு” என்றார். “சரிங்க அத்த” என்றவள் தங்களது அறையை நோக்கி செல்ல துவங்கினாள்.
Post Views: 630