அம்ருதா குளித்து முடித்து வெளியே வந்தவள் ஹர்ஷாவை பார்க்க அவன் எதிர் புறம் திரும்பி எதையோ வெறித்த வண்ணமே நின்றிருந்தான். இரவு நடந்த விடயங்களை எண்ணி பார்த்தவளுக்கு அவனை நேருக்கு நேர் சந்திக்கவே முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.
கூந்தலை பின்னலிட்டு, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அழகாக தயாராகி முடித்ததும் அவன் புறம் திரும்பி பார்க்க, அவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல தெரிந்தது. அவனை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியேறியவள் ஆத்யாவை காண காவேரியின் அறைக்கு சென்றிருந்தாள்.
குழந்தை இன்னும் உறங்கி கொண்டிருப்பதை பார்க்கையில் அழகாக உதடு பிரித்து தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை காண்கையில் அம்ருதாவின் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. அதில் அவள் அருகில் படுத்துக்கொண்ட அம்ருதா ஆத்யாவின் கன்னத்தை வருடியபடி இருந்தாள்.
“தூங்குற குழந்தையை ரசிக்க கூடாது அம்ருதா. உனக்கு எத்தனை முறை சொல்றது? ” என்றபடியே உள்நுழைந்தார் காவேரி. “என் பிள்ளை தூங்கும் போது கூட அவ்வளவு அழகு. எப்படி ரசிக்காம இருக்குறது?” என்றதும்,
“சரி நீ பார்த்த வரைக்கும் போதும், மாப்பிள்ளைக்கு போய் காபி போட்டு கொடு போ. அப்படியே அவருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சுக்கோ. அதைவே சமைச்சுடலாம்.” என்றதும் “சரிமா. நீங்க ஆத்யாவை பார்த்துக்கோங்க நான் இதோ வந்துடுறேன்” என்றவள் சமையலைறைக்கு சென்று அவனுக்கான காபியை தயாரித்தாள்.
பின் அதை எடுத்து கொண்டு அறைக்குள் சென்றவள் இன்னும் அவன் அசைவின்றி அப்படியே நிற்பதை பார்த்ததும் சற்றே குழம்பி போனாள். அவனிடம் நெருங்கியவள் “என்னாச்சுங்க? என்னவோ தீவிரமா யோசிச்சுட்டே இருக்கீங்க?” என்றதும் தனது எண்ணவோட்டத்திலிருந்து வெளி வந்தவன் “அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்ருத்தா” என்றவனது குரலிலும் சிறிய வித்யாசம் இருந்தது. அதை கவனித்தவள் “நிஜமா ஒன்னும் இல்லையா?” என்று கேட்க,
“நிஜமா ஒன்னும் இல்ல அம்ருதா. என்று அவளை பார்த்து புன்னகையித்தான். “அதன் பிறகே நிம்மதி அடைந்தவள் அவனிடம் கொண்டுவந்த காபியை நீட்டினாள். அதை வாங்கி கொண்டதும் “உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்னு சொல்லுங்க. காலைல டிபன் பண்ண அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க” என்றாள்.
“எனக்காக எதுவும் ஸ்பெஷலா செய்யறேன்னு கஷ்டபட்டுக்க வேண்டாம். சிம்பிளா சமைச்சா போதும். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். எனக்காக லஞ்ச் எதுவும் செய்ய வேண்டாம். ரெஸ்டாரண்ட்ல வேலை இருக்கு நான் அங்கேயே சாப்ட்டுக்குவேன்.” என்றதும் “அப்படியா..? ம்ம்ம்… சரி.” என்றவள் அவன் முகம் பார்த்து,
“ஈவினிங் நாம வெளில போவோமா.? ஆத்யாவை வெளில கூட்டிட்டு போய் ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. உங்களுக்கு வேலை இருந்தா வேண்டாம்.” என்றவளை காதலுடன் பார்த்தவன் “வேலை முடிஞ்சதும் சீக்கிரம் வந்துடுறேன். நீங்க ரெடியா இருங்க நாம போலாம்” என்றான். அவள் முகம் மலர “சரி” என்றதும் அவளை ஒரு முறை அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தவன் குளியலறை நோக்கி சென்று விட்டான்.
அதில் முகம் சிவந்தவள், ஒரு நிமிடம் அவன் முத்தத்திலும் அணைப்பிலும் லயித்து இருந்தாள். பிறகு அவனுக்கான உணவை காவேரியும், அம்ருதாவும் சேர்ந்து சமைத்து முடித்து அவனுக்கு பரிமாற, காலை உணவை முடித்து கொண்டு ஆத்யாவுடன் சிறிது நேரம் செலவழித்தவன் பிறகு அனைவரிடமும் கூறிவிட்டு ரெஸ்டாரண்டிற்கு கிளம்பினான்.
வழக்கம் போல் தன்னுடையை வேலைகளை தொடங்கியவன். ‘அம்ருதா முதல் முறையா வெளியே கூட்டிட்டு போக சொல்லி கேட்டிருக்கா. முடிஞ்ச வரைக்கும் வேகமாக வேலைய முடிக்கனும்.’ என்று ஓய்வின்றி தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
இங்கு தாரிகாவோ தன்னுடைய காதலன் பாலாவுடன் நெருக்கமாக இருந்த தருணம், “என்ன ஆச்சு? உன்னோட முன்னாள் புருஷன்கிட்ட நேத்து மிரட்டி பணம் வாங்க போறேன்னு சொன்ன? இதுவரைக்கும் அதை பத்தி எதுவுமே பேசலையே என்று கேட்க, அதில் ஹர்ஷாவின் கடுமையான முகமும் தன் கன்னம் பழுக்க அறைந்ததும் தன் கண் முன்னே தோன்றி மறைய, அவனை விட்டு விலகியவள்,
“அவன் முன்ன மாதிரி இல்ல. ரொம்ப மாறிட்டன்.” என்றாள் எரிச்சலாக,
“மாறிட்டனா? என்ன அர்த்தம். அப்போ உன்னால அவன்கிட்ட இனிமேல் பணம் வாங்க முடியாதுன்னு சொல்ல வரியா?” என்று கோபமாக கேட்டிட,
“இப்போ அதுல உனக்கு என்ன பிரச்சனை? கோபமெல்லாம் வருது. அவன் ஜீவனாம்சமா கொடுத்த ஐம்பது லச்சத்தையும் உன்கிட்டதானே கொடுத்தேன். இப்போ எல்லாத்தையும் காலி பண்ணிட்டு இன்னும் அவன்கிட்ட போய் நிக்க சொல்ற?”
” ஏய்.. நிறுத்து, நிறுத்து. என்னவோ நான் மட்டும் எல்லாத்தையும் செலவு பண்ணின மாதிரி பேசுற? மேடம் பியூட்டி பார்லர் போயே பாதி பணத்தை காலி பண்ணிட்டீங்க. மீதி பணம், ஷாப்பின், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டின்னர்னு காலி ஆச்சு” என கூறி கொண்டிருக்கும்போதே சலித்து கொண்டவள்,
“சரி நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டியதுதான?” என்றாள்.
“எதே..! நான் வேலைக்கு போகணுமா? நான் வேலைக்கு போய் உன்னை காப்பாத்த நான் என்ன உன் புருஷனா? நம்ம லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். யாரோட காசுலையை யாரும் வாழ கூடாது. பிடிச்ச வரைக்கும் வாழுவோம், பிடிக்கலைன்னா யாரும் இன்னொருத்தரை தொந்தரவு பண்ண கூடாது. இதுதான நம்ம டீல்? நீ என்ன அதையெல்லாம் மறந்த மாதிரி பேசுற?” என்று கேட்டிட,
“ப்ச்.. என சலித்து கொண்டவள். எல்லாம் ஞாபகம் இருக்கு. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ போய் உன் வேலையை பாரு” என்றதும்
அவளிடமிருந்து விலகியவன் தனது ஆடையை எடுத்து அணிந்தவரே ” இதோ பாரு தாரிகா, அடுத்த மாசத்துல இருந்து இரண்டு பேருமே செலவுகளை ஷேர் பண்ணிக்கணும். இந்த மாசமே நான் பார்க்க வேண்டியாதா போச்சு. நீ அவன் கிட்ட காசு வாங்குவியோ இல்ல, நீயே வேலைக்கு போவியோ அது உன் இஷ்ட்டம். ஆனா கண்டிப்பா உன் தேவையை நீதான் பார்த்துக்கணும்” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.
இதுவரை அவனுடனான இந்த வாழ்வு இனித்திருக்க தன்னிடம் பணம் இல்லை என்றதும் அவன் பேசும் விதமும், நடந்து கொள்ளும் முறையும் மாறுபடவே முதன் முறையாக கசந்து போனது.
இதற்கு எல்லாம் ஹர்ஷா மீது அர்த்தமற்ற கோபம் தோன்றியது அவளுக்கு. ‘நான் நெனச்சது மட்டும் சரியாக நடந்திருந்தா, இந்நேரம் இவன் இப்படியெல்லாம் பேசுவானா? நான் இங்க இப்படி கஷ்ட படுறேன், நீ மட்டும் உன் புது பொண்டாட்டியோட சந்தோஷமா இருப்பியா? விடமாட்டேன் ஹர்ஷா.. உன் வாழ்க்கையை நரகம் ஆக்காம விடமாட்டேன்’ என்று வன்மத்தை மனதிற்குள் வளர்த்து கொண்டாள்.
இங்கு அம்ருதாவோ ஹர்ஷா சென்றதிலிருந்து அவன் நினைவாகவே இருக்க எப்போது மாலை பொழுது வரும்? எப்போது அவனை காண்போம்? என்று அடிக்கடி கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு நேரம்தான் நகரவே மாட்டேன் என்பது போல இருந்தது. எப்படியோ பொழுதை கடினப்பட்டு நகர்த்த நேரம் ஐந்தை நெருங்கியதும் ஹர்ஷாவின் கார் வாசலில் நிற்கும் அரவம் கேட்டதும. உடனே மனம் துள்ளி குதிக்க அறையை விட்டு வெளியேறியவள், அவனை தேடி ஆசையாக வாசல் வரை ஓடி சென்றாள்.
அவன் தன்னை நெருங்கியதும் அவனுடைய மடிக்கணினியை தான் வாங்கி கொண்டு அவனுடன் சேர்ந்தே நடந்தாள்.
தன்னை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிய, இதுவரை இருந்த கேள்விகள், குழப்பங்கள் அனைத்தையும் மறந்து அவள் குழந்தைதனத்தை ரசித்தவாரு அறையை நோக்கி நடந்தான் ஹர்ஷா.
அறையினுள் சென்றதும் என்னை ரொம்ப தேடினியா அம்மு? என்றவன் அவளது முடி கற்றையை காதின் பின்னால் ஒதுக்கி விட்டவாறே கேட்க, ஆம் என்று தலையாட்டியவளை அள்ளி கொஞ்ச வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு. ஆனால் ஆத்யா இவர்களை பார்த்தப்படியே இருக்க தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டவன் “நானும்தான்” என்றதும் அம்ருதாவின் மனதிற்குள் அடை மழைதான்.
அவன் ஆத்யாவை நோக்கி சென்றுவிட்ட சிறிது நேரத்திலே தயாராகி மூவரும் வெளியே வர, “பாட்டி.. நான் அப்பா அம்மாகூட வெளில போக போதேன்.. ஜாலி..” என்று காவேரியிடம் ஆத்யா கூறியதும் காவேரிக்கு அவள் முகத்தில் உள்ள சந்தோஷத்தை கண்டதும் மனதே உருகி விட்டது.
இத்தனை நாள் ‘அப்பா இல்லாமலே ஆத்யா வளர வேண்டுமா? தன்னுடைய மகளின் வாழ்க்கை என்னகுமோ?’ என்றெல்லாம் எண்ணி கவலை கொண்ட காவேரிக்கு மனம் மகிழ்ச்சியில் நிறைந்து போனது. அதுவும் ஹர்ஷாவை போன்ற ஒருவன் தன் மகளை திருமணம் செய்ததில் இனி இவர்கள் எதிர்காலத்தை பற்றிய கவலையே இல்லாமல் போனது அந்த தாய்க்கு.
அதில், “போய்ட்டு வாடா செல்லம். பத்திரமா இருக்கணும், அப்பா அம்மாவை தொல்லை பண்ண கூடாது” என்று அறிவுரை கூறி புன்னகையோடு வழி அனுப்பி வைத்தார் காவேரி.
காரினுள் ஏறியதும் “எங்க போகணும் என் பட்டு பாப்பாவுக்கு?” என்று ஹர்ஷா கேட்க,
“அப்பா பீச்க்கு போலாம்பா..” என்றாள் ஆத்யா.
“ஓகே… என் பட்டு பாப்பா இஷ்ட்டப்படியே பீச்க்கே போவோம்” என்றவன் நேராக கடற்கரையை நோக்கி காரை செலுத்தினான்.
கடற்கரையை வந்தடைந்ததும் நடுவில் ஆத்யாவை நடக்க விட்டு அவளின் இரண்டு கரங்களையும் பிடித்து கொண்டவர்கள் அவளுடன் சேர்ந்தே நடக்க தொடங்கினர். கரையை நெருங்கியதும் ஆத்யா மணலில் அமர்ந்து விளையாடி கொண்டிருக்க, அவளுடன் இருவரும் சேர்ந்து கொண்டனர். “அப்பா ஐஸ் கீம்” என்று தன் ஒற்றை விரலை நீட்டி ஆத்யா ஐஸ் கிரீம் கடையை காட்ட, “உடனே வாங்கிட்டு வரேன் இளவரசி” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.
அவன் கடையில் ஐஸ் க்ரீம் வாங்க காத்திருக்க அவனின் மகிழ்ச்சியான மன நிலையை கலைத்தது அவர்களின் குரல். அம்ருதாவிடம் அன்று இதே கடற்கரையில் தவறாக பேசி பதிலுக்கு நன்றாக வாங்கி கட்டி கொண்டவன். இப்போதுதான் வந்தான் போலும், அம்ருதாவுடன் இவ்வளவு நேரம் ஹர்ஷா இருந்ததை கவனித்திருக்கவில்லை.
“டேய்.. இவ அன்னைக்கு நீ சொன்ன அதே பொண்ணுதான?” என்றான் ஒருவன்.
அவன் கை காட்டிய திசையை நோக்கி பார்த்தவனோ “ஆமா மச்சி. அவளேதான். அம்ருதா” என்றவன் அவளை ஆராய்ச்சியாக நோக்க, “கல்யாணம் ஆகிருச்சு போலருக்கே. கழுத்துல மஞ்சள் கயிறு இருக்கு. ஹ்ம்ம்ம்.. எந்த இளிச்சவாயன் வந்து மாட்டினானோ?” என்றதும்,
“ஏண்டா அப்படி சொல்ற?”
“அதுவா? அன்னைக்கு பெரிய இவளாட்டம் என்கிட்ட பேசினாள்ல அப்போவே அவளை பத்தி விசாரிச்சேன். அவ புருஷன் ஒரு கே (gay) வாம்டா. அப்புறம் எப்படி குழந்தை? அப்போ வேற எவன்கூடயோ இருந்து புள்ளைய வாங்கிருப்பா. அதான் விஷயம் தெரிஞ்சதும் புருஷன் விவாகரத்து பண்ணி தொரத்தி விட்டுட்டான்.” என்று அவன் பேசியதை கேட்டதும் முகம் இறுகி போனது ஹர்ஷாவுக்கு. ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனை மேலும் மேலும் குழப்பிவிடும் விதமாக இருந்தது அவனுடைய வார்த்தைகள்.
Post Views: 735