அந்தியில் பூத்த சந்திரனே – 18

4.5
(11)

கீர்த்தனாவுக்கும் ஹர்ஷாவுக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் கைத்தட்டும் ஓசையுடன் உள் நுழைந்தாள் தாரிக்கா.

தாரிக்காவை பார்த்த அம்ருதாவிற்கோ உடல் நடுக்கமுற செய்தது. ஒரு காலத்தில் ‘தாரிக்காவை பார்த்துவிட மாட்டோமா? என்று பதற்றத்துடன் தேடி அலைந்த நாட்களும் உண்டு. ஆனால் இன்று எல்லாம் சரியாகி நன்றாக போய்கொண்டிருக்கும் தருணத்தில்  வரக்கூடாத நேரத்தில் வந்திருக்கிறாளே. இவள் எதற்காக இப்போது இங்கே வந்தாள்?’ என்ற கேள்வியும், கோபமும், பயமும், அழுகையுமாக பலவிதமான உணர்வுகளோடு அவளை ஏறிட்டாள்.

உள்ளே நுழைந்த தாரிக்கவோ அம்ருதாவை ஏளன பார்வை பார்த்துவிட்டு ஹர்ஷாவை நோக்க, அவளை நெருங்கி வந்தவன், “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் வீட்டுக்கே வந்திருப்ப? அன்னைக்கு ஆஃபீஸ் ரூம்ல வாங்கின அடி பத்தலையா?” என்று கடுமையான முகத்துடன் அழுத்தமான கோபக் குரலில் அவன் கேட்க,

இப்போது அம்ருதா குழம்பி போனாள். ‘தன்னை காணத்தான் தாரிக்கா வந்திருக்கிறாள்’ என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு ஹர்ஷா பேசுவது மிகவும் குழப்பமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ‘எனில்? ஹர்ஷாவுக்கு தாரிக்கவை ஏற்கனவே தெரியுமா?’ என்று அதிர்ந்து பார்த்தாள்.

“வெயிட் ஹர்ஷா. எதுக்கு இவ்வளவு கோபம்? முதல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னு கேளு” என்றதும் கீர்த்தனாவும் பார்த்திபனும் அவர்களுக்கு இடையில் வந்தவர்கள் “நீ எதுவுமே சொல்ல வேண்டாம். என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ணினது வரைக்கும் பத்தாதா? உன்னை கல்யாணம் பண்ணி என் மகன் வாழ்க்கையே அழிஞ்சு போச்சு. அதான் விவாகரத்து வாங்கிட்டீல? இப்போ எதுக்குடி இங்க வந்த? முதல்ல இடத்தை காலி பண்ணு” என்று விரட்ட,

அம்ருதாவோ தாரிக்காதான் ஹர்ஷாவின் முன்னாள் மனைவி என்பதில் அதிர்ந்து போய் விழிகள் விரித்து அவனை பார்த்தாள். அவளால் இதை கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை.

தாரிக்கா நக்கல் தோணியில், “அட என்னங்கடா நீங்க? நான் வரதுக்கு முன்னாடி வரைக்கும் சத்தம் வீட்டுக்கு வெளில வர கேக்குற அளவுக்கு சண்டை போட்டுக்கிட்டீங்க? இப்போ நான் வந்ததும் எல்லாரும் ஒன்னு கூடிட்டீங்க? ஹ்ம்ம்ம்.. சரி.. அது எதுக்கு எனக்கு?  நான் வந்த விஷயத்தை சொல்லிடுறேன். அப்புறமா நான் வெளில போறதா இல்ல இங்கயே இருக்குறதான்னு பார்ப்போம்” என்றதும் அனைவருக்கும் அதீத கோபம் அவள்மேல் எழுந்தது.

அதில் பேச வாயை திறக்கும் முன்னமே, “கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன ஹர்ஷா நீ? அது உன்னோட குழந்தைனுதான? வாழ்க்கையிலேயே

இன்னைக்குதான் சரியா ஒரு விஷயம் பேசியிருக்க ஹர்ஷா. ரொம்ப சரியா சொன்ன..  அவ உன்னோட பொண்ணுதான்.” என்றதும் அனைவருக்கும் அவள்மீதான கோபத்தையும் தாண்டி, ‘என்ன சொல்கிறாள் இவள்?’ என்ற குழப்பமே மேலிட்டது.

“என்ன குழப்பமா இருக்கா? அந்த குழந்தைக்கு உண்மையான அப்பாவே நீதான். அவளுக்கு லீகள் மதர் நான்தான்” என்றதும்,

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? என்ன உளறிட்டு இருக்க?” என்றான் ஹர்ஷா.

“நான் ஒன்னும் உளறல. நான் சொன்னாதான் நீங்க யாரும் நம்ப மாட்டீங்க. நான் சொல்றதெல்லாம் உண்மையா இல்லையானு இதோ இங்க நிக்கிறாளே அம்ருதா அவளையே கேளு” என்றதும் அனைவரது பார்வையும் அம்ருதாவின் மீது கேள்வியாக பதிந்தது.

அவளோ தலை குனிந்து நிற்க அதிலேயே புரிந்து போனது தாரிக்கா கூறுவதில் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்று. அவளை தனியே அழைத்து சென்று விசாரிக்க நினைத்த ஹர்ஷா, கீர்த்தனாவின் புறம் திரும்பி, “நான் இப்போ அம்ருதாகிட்ட கொஞ்சம் தனியா பேசணும், அது வரைக்கும் இவளை ஒழுங்கா வாயை மூடிட்டு இருக்க சொல்லுங்க” என்றவன், அம்ருதாவின் கரத்தை பற்றி கொண்டு தனது அறைக்கு அழைத்து சென்றான்.

அறைக்குள் நுழைந்ததும், “அவ என்னென்னவோ பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கா. நீ ஏன் அம்ருதா எதுவுமே பேசாம அமைதியா இருக்க?” என்று கேட்க,

“அவ உளறலங்க. உண்மையைதான் சொல்றா. ஆத்யாவுக்கு  நீங்கதான் அப்பா. ஆனா அந்த விஷயம் எனக்கே இப்போதான் தெரியும்.” என்றாள் கலங்கிய விழிகளுடன். அதை கேட்ட ஹர்ஷா மொத்தமாக குழம்பி போனான்.

“இப்போ நீ என்ன உளறிட்டு இருக்க அம்ருதா? அது எப்படி சாத்தியம்?” என்று கேட்க,

“நான் ஆரம்பத்துல இருந்து எல்லாத்தையும் சொன்னாதான் உங்களுக்கு புரியும்” என்றவள் தனது கடந்த காலத்தை பற்றி கூற தொடங்கினாள்.

“என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் ராஜேஷை கல்யாணம் பண்ணி கொஞ்ச நாளுலயே பிஸ்னஸ்ல பிரச்சனைனு என்கிட்ட வந்து நின்னாரு. உன் நகையை கொடு, அடகு வச்சுட்டு ப்ரோப்லம்லாம் சரி ஆனதும் திரும்ப கொடுத்துடுறேன்னு கேட்டாங்க. நானும் கஷ்ட படுறாறேன்னு கொடுத்துட்டேன். எல்லா நகையும் அவரோட பேர்லதான் அடகும் வச்சாரு.

அடுத்த கொஞ்ச நாளுலயே பிஸ்னஸ் டெவலப் பண்ணனும், ஏற்கனவே என் பேர்ல லோன் இருக்கு அதனால வாங்க முடியாது. உன்னோட பேர்ல லோன் வாங்க ஏற்பாடு பண்ணிருக்கேன். டாக்குமெண்ட்ல சைன் பண்ணு. எனக்கு ஒரு இடத்துலருந்து பணம் வர வேண்டி இருக்கு, அது வந்ததும் முதல் வேலையா உன் பேர்ல இருக்க கடனை அடைச்சுடுறேன்னு” பாவம் போல கேட்டு நின்னாரு.

நானும் நம்ம ஹஸ்பண்டுக்கு தானே உதவி பண்ணுறோம். அதான் வர வேண்டிய பணம் வந்ததும் முதல் வேலையா அடைச்சுடுறேன்னு சொல்றாறேன்னு, லோன் வாங்க எல்லா டாக்குமெண்ட்லையும் கையெழுத்து போட்டேன். அதை வச்சு என்பேர்ல ஏகப்பட்ட கடன் வாங்கிட்டாரு.

ஆரம்பத்துல இருந்தே அவர் என்கிட்ட நெருங்கவே இல்ல. எனக்கு அவரோட பழக, அவரை புரிஞ்சுக்க டைம் கொடுக்க நினைக்கிறாரு போலன்னு நானா நெனச்சுக்கிட்டேன். ரொம்ப நாள் கழிச்சுதான் ராஜேஷ்க்கு பொண்ணுங்களையே பிடிக்காதுன்ற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு.” என்று தயங்கியப்படியே கூறினாள் அம்ருதா.

ஹர்ஷாவின் மனதில் ‘அப்போ பீச்ல ஒருத்தன் அம்ருதாவோட ஹஸ்பண்ட் ஒரு கே (gay)ன்னு சொன்னது உண்மைதான் போல’ என்று எண்ணி கொண்டான்.

அம்ருதா மேலும் தொடர்ந்தவள் “நான் கேக்காமலேயே ஒருநாள் அவர் வாயலயே அவரை பத்தின உண்மைகளை ஒத்துக்கிட்டார். அப்புறம் எதுக்காக என்னை கல்யாணம் பண்ணுனீங்கன்னு கேட்டு அழுதேன்.

எங்க குடும்பத்துக்கு இது எதுவுமே தெரியாது. அப்படி தெரிஞ்சா எங்க குடும்பமும் இந்த சமுதாயமும் பாக்குற பார்வையை என்னால பொறுத்துக்க முடியாதுன்னு சொன்னார். அப்படியே கொஞ்ச நாள் போச்சு. நான் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கலாமானு கேட்டேன். அங்கேதான் முதல் பிரச்சனை ஆரம்பிச்சது.

அவர் முடியாதுன்னு சொல்ல, என்னாலையும் இப்படியே வெறுமையா வாழ முடியாது. ஒரு குழந்தை தத்தெடுத்தே ஆகணும்னு கட்டாய படுத்தினேன். ஆனா அப்படி பண்ணிட்டா எங்க அவரை பத்தின உண்மைகள் வெளில தெரிஞ்சு போய்டுமோனு பயந்து அவர் வேற மாதிரி யோசிச்சு எனக்கெதிரா ப்ளான் பண்ணிட்டார். அது தெரியாம முட்டாளா நான் இருந்திருக்கேன்” என்று அழ ஆரம்பிக்க

“அழாத அம்மு.” என்று அவள் தலையை வருடி விட்டவன் “என்ன நடந்துச்சுனு முழுசா சொல்லு” என்று கேட்டிட,

“நான் நைட் தூங்கினதுக்கு அப்புறம் அவரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்க்கு என்னோட ஃபோன்ல இருந்து அவரே மெசேஜ் பண்ணிருக்காரு. பகல் நேரத்திலும் அப்பப்போ நான் கவனிக்காதப்போ என் ஃபோன் யூஸ் பண்ணி நான் ச்சேட் பண்ற மாதிரி, அவன் கூட இல்லீகள் ரிலேஷன்ஷிப்ல இருக்க மாதிரி, மோசமான வார்த்தைகளால ச்சேட் பண்ணிருக்காரு.

இதெல்லாம் கோர்ட் ல சப்மிட் பண்ணி, அவனையும் கூட்டிட்டு வந்து பொய் சாட்சி சொல்ல வச்சு என்மேல எல்லா தப்பும் இருக்க மாதிரி மோசமான பழியை போட்டாங்க. இப்படி ஒருத்தன்கூட இனி வாழவே கூடாதுன்னு முடிவு பண்ணி நானும் டிவோர்ஸ் கொடுத்துட்டேன். ஆனா அந்த க்ளோஸ் ஃப்ரெண்ட் கூடாதான் அவர் வாழுறாருன்னு எனக்கு அப்புறமாதான் தெரிஞ்சது.

கோர்ட்ல என்னோட வீட்ல போட்ட நகையை திரும்ப கேட்டப்போ அப்படியெல்லாம் நான் எதுவும் வாங்கவே இல்லன்னு பொய் சொல்லிட்டான். எல்லா நகையும் அவனோட பெயர்லையே அடகு வச்சதுனால என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லாம போய்டுச்சு. பேங்க்ல வாங்கின மொத்த கடனும் என்மேலயே விழுந்துடுச்சு. கல்யாணத்துக்காக அப்பாவும் வீட்டு மேல கடன் வாங்கினாதுனால மொத்த பிரச்சனையும் சேர்த்து எங்க குடும்பத்தையே ஒரு வழி ஆக்கிடுச்சு. என்னால இந்த அளவுக்கு கடன் சுமையை தாங்க முடியல.

அந்த நேரம்தான் தாரிக்கா என்னோட வாழ்க்கையில வந்தா. அவ காலேஜ்ல என்னோட க்ளாஸ் மேட். என்னோட நிலைமை பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட பேச வந்தா.

அவள் கற்பப்பைல பிரச்சனை இருக்கிறதாவும் ஒரு குழந்தையை தாங்குற சக்தி தனக்கில்லைனும் சொல்லி என்னை சரகசி மதரா இருக்க முடியுமான்னு கேட்டா. என்னோட பிரச்சனை மொத்தமும் தீரும் அளவுக்கு பணம் தரதா சொன்னா. வர வருமானம் மொத்தமும் வட்டி கட்டவே  சரியா இருந்துச்சு. கடங்காரங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கிறதும், என்னை வேற மாதிரி பாக்குறதும், பேசுறதும் என்னால சகிச்சுக்கவே முடியல. அதனால நானும் வாடகை தாயாய் இருக்க சம்மதிச்சேன்.” என்றவள் கண்களில் இருந்து உவர்நீர் கோடாய் வழிய அதை ஹர்ஷா துடைத்து விட்டான். இப்போதே அவனுக்கு ஓரளவுக்கு உண்மைகள் புரிய ஆரம்பித்தது.

அம்ருதா ஹர்ஷாவின் தோள்மீது சாய்ந்து கொண்டாள். அவளை வாகாக அணைத்து கொண்டவன் “மேல சொல்லு அம்மு..” என்றான்.

“அவ ஃப்ரன்டோட ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் எனக்கு ஒரு குழந்தையை சுமக்குற தகுதி இருக்கான்னு செக் பண்ணினா. அப்புறமா திரும்ப இன்னொருநாள் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ஃபோர்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சு பேப்பர்ஸ்ல சைன் வாங்கினாங்க. அதுல குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எனக்கும், பிறக்க போற குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னும், குழந்தைக்கு லீகல் மதர் தாரிக்கா மட்டும்தானும் இருந்துச்சு. மனசை கல்லாக்கிக்கிட்டு அப்போ அந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணிட்டேன்.

அதுக்கு அப்புறமா அவளோட ஹஸ்பண்டோட உயிரனுக்களை எடுத்து எனக்கு செலுத்தினாங்க. ஆனா அவ ஹஸ்பண்ட் நீங்கதான்னு அப்போ எனக்கு தெரியாது ஹர்ஷா.. ஆத்யா உங்க குழந்தை. நம்ம குழந்தை” என்று அழுதவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

‘முதன் முதலில் ஆத்யாவை பார்த்ததிலிருந்து இன்று வரை அவள்மீது இனம் புரியாத பாசம் ஏன் ஏற்பட்டது?’ என்பது இப்போது அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்து போனது. ஆத்யாவை தன்னுடைய குழந்தையாக பார்த்தவனுக்கு இன்று அவள் உண்மையிலேயே தன் குழந்தைதான் என்பதில் இந்த தருணம் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஆண்மகனாக தன்னை உணர்ந்தான். எல்லையற்ற ஆனந்தத்தில் இருந்தவனுக்கும் விழிகளில் இருந்து வழிந்தது ஆனந்த கண்ணீர்.

அம்ருதாவோ “தாரிக்கா இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை” என்றவள் அதன் பிறகு என்ன நடந்தது? என்பதையும் கூற தொடங்கினாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!