அந்தியில் பூத்த சந்திரனே – 21

4.9
(9)

அம்ருதாவின் குடும்பத்தினருக்கும் ஹர்ஷாதான் ஆத்யாவின் தந்தை என்ற விடயம் தெரிந்ததும் காவேரி, ஆறுமுகம் இருவருக்கும் மகிழ்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. எத்தனையோ நாட்கள் அமுருதாவின் பழைய வாழ்க்கையை பற்றி அறிந்தால் மாப்பிள்ளை என்ன நினைப்பரோ.

மற்றவர்களை போல இவரும் தன் மகளை சந்தேகிப்பாரா?, இல்லை பணத்துக்காக இப்படியெல்லாம் செய்தாயா? என்று கேவலமாக எண்ணி விடுவாரா என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு இப்போ மனதில் இருந்த அத்தனை கவலையும் காணாமல் போனது.

அலைபேசியில் அம்ருத்தாவுடன் பேசிகொண்டிருந்த இருவருக்கும் மகிழ்ச்சியில் கண்ணீர் ஊற்றெடுக்க, நடந்த அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் தாரிக்காவை நினைத்து சற்றே அச்சமாகவும் இருந்தது.

“என்னடி சொல்ற? அந்த தாரிக்கா பிள்ளையை என்கிட்ட கொடுங்க, இல்லனா நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம்னு சொன்னாளா? இவளெல்லாம் மனுஷியா டி?” என்றார் காவேரி.

“நானும் ரொம்ப பயந்துட்டேன் மா. எங்க பிள்ளையை வாங்கிட்டு போய்டுவாளோ இல்ல இங்கேயே இருந்துடுவாளோன்னு ரொம்ப பயமா இருந்துச்சு. இதுல எது நடந்து இருந்தாலும் சத்தியமா என்னால தாங்கிக்கவே முடியாது. நல்ல வேளையா ஹர்ஷா அவளை வெளிய அனுப்பிட்டாரு.

ஆனா போறதுக்கு முன்னாடி என் பிள்ளையை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும்னு சொல்லிட்டு போறா. அதை நெனச்சாதான் என்னால நிம்மதியாவே இருக்க முடியல.” என்று அம்ருதா பயமும், கவலையும் நிறைந்த குரலில் சொல்ல,

“எங்களுக்கும் அப்படிதான்டி இருக்கு. இத்தனை நாள் எங்கையோ தொலைஞ்சு போனாளே. அப்படியே போயிருக்க கூடாதா. இப்படி திரும்ப வந்து நம்ம நிம்மய்தியை கெடுக்குறளே” என்று மகள் வாழ்க்கையை நினைத்து ஆதங்கமாய் பேசினார் காவேரி.

“விடு காவேரி. மாப்பிள்ளை அப்படியெல்லாம் விட்டுட மாட்டார். ஹாஸ்பிடலுக்கு அந்த தாரிக்கா வரவே இல்ல. இரண்டு வருஷமா ஆத்யாவை நம்மதான் வளர்திருக்கோம். எது நடந்தாலும் பார்த்துக்கலாம் நீ பயப்படாத என்று ஆறுமுகம் தன் மனைவிக்கு தைரியம் சொன்னாலும் அவருக்குள்ளும் பயம் இருக்காத்தான் செய்தது.

இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த நிரஞ்சனாவுக்கோ, ‘ச்சே.. இந்த தாரிக்கா பிள்ளையை வாங்கிட்டு அம்ருதாவை வீட்டை விட்டு விரட்டி விடுவான்னு பார்த்தா இப்படி பிரச்சனை மட்டும் பண்ணிட்டு விட்டுட்டு போய்ட்டாளே’ என்று மனதுக்குள் புலம்பினாள். ‘சரி அதுதான் என்னவோ பண்ணுறேன்னு சொல்லிருக்காளே. என்னதான் பண்ணுவான்னு பார்க்கலாம்’ என்று எண்ணிக்கொண்டாள்.

இங்கு தாரிக்கா தன்னுடைய வீட்டிற்கு சென்றதும், ஹாண்ட் பேக்கை தூக்கி வீசியவள் மெத்தையில் பொத்தென அமர்ந்தாள். அவளுக்கு முதுகு காட்டி உறங்கி கொண்டிருந்த பாலாவோ சோம்பல் முறித்த படி திரும்பி அவளை பார்க்க,

கன்னத்தில் ஹர்ஷா அடித்த கைவிரல்களின் அச்சு அப்பட்டமாக தெரிய, ‘ப்ச்.. திரும்பவும் அவன்கிட்ட போய் அடி வாங்கிட்டா’ என்று எண்ணி கொண்டவன் சலிப்புடன் மீண்டும் அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்.

இதில் தாரிக்காவிற்குதான் எரிச்சாலும், கோபமும் வர அவன் முதுகுலேயே பொத் பொத்தென அடித்தவள்,

“இங்க ஒருத்தி இவ்வளவு டென்ஷனா உக்காந்திருக்கேன். என்ன எதுன்னு ஒரு வார்த்தை கேட்டியாடா?” என்று கேட்டிட,

“அதான் பாத்தாலே தெரியுதே. அந்த ஹர்ஷா உன் மூஞ்சிலயே பொளீர்ன்னு ஒன்னு விட்டிருக்கான் போல. இதை கேக்க வேற செய்யணுமா?” என்றதும் மேலும் மேலும் எரிச்சல் கூடி போனது தாரிக்காவிற்கு.

அதில் “ச்சே… உன்கிட்ட போய் பேசினேன் பாரு, என்னை சொல்லணும்” என்றவள் அங்கிருந்து எழுந்து செல்ல,

“சரி.. சரி.. சொல்லு. என்ன நடந்துச்சு?”என்றதும் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்ததும் அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான் பாலா.

“என்னடா..? அப்படி பாக்குற?”

“இல்ல.. என்கிட்ட மிரட்டி பணம் வாங்க போறதாதான சொன்ன? இப்போ என்னவோ அவனை உன்கூட திரும்பவும் சேர்ந்து வாழ சொல்லி கேட்டிருக்க? சரியில்லையே? என்ன உன்னோட ப்ளான்னு?” என்றதும்,

‘அச்சச்சோ.. அவசர பட்டு உளறிட்டாமோ?’ என்று எண்ணியவள், “அ.. அது… அப்படி சொல்லி மிரட்டினதுக்கு அப்புறம் முடியாதுன்னா பணம் கொடுன்னு கேக்கலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்குள்ள என்னை பேச விடாம வீட்டை விட்டு வெளில தள்ளி கதவை சாத்திட்டான்.” என்றாள்.

“என்னவோ சொல்ற… ம்ம்ம்… பாக்கலாம்” என்றவன் எழுந்து குளியல் அறைக்குள் சென்று விட்டான்.

தாரிக்காவின் மனதிலோ, ‘நான் இவனை நம்பி அந்த ஹர்ஷாவை விட்டு வந்திருக்கவே கூடாது. அப்போ இவன் மேல இருந்த மயக்கத்துல தப்பு பண்ணிட்டேன். என்னைவே வேலைக்கு போக சொல்றான்?  இவன் நமக்கு சரிபட்டு வரமாட்டான்.

எப்படியாவது அந்த ஹர்ஷா கூடவே சேர்ந்திடனும். இல்லனா போக போக நம்ம நிலைமைதான் மோசமாகிடும். அதுக்கு அந்த குட்டி பிசாசு ஆத்யா தான் எனக்கான ஆயுதம். அவளை விட்டுடவே கூடாது’ என்றெண்ணியவள், ‘அடுத்ததாக என்ன செய்யலாம்?’ என சிந்திக்க தொடங்கினாள்.

விடிந்தாள் ஆத்யாவுக்கு பிறந்த நாள். ஹர்ஷாவும் அம்ருதாவும் நாளைய தினத்தை எப்படி கொண்டாடலாம்? என்று தனது அறையில் சிந்தித்து கொண்டிருக்க,

கீர்த்தனாவோ அவரது அறையில் கண்ணீர் சிந்திய வண்ணம் அமர்ந்திருந்தார். பார்த்திபனிடம் எத்தனையோ முறை மகனின் அறைக்கு அழைத்து சென்று சமாதானம் செய்து வையுங்கள் என்று கேட்டு பார்த்து விட்டார்.

ஆனால் “உனக்கு வேணும்னா நீயே போய் பேசு. உன்னோட மகனும், மருமகளும்தான? அவுங்ககிட்ட உனக்கும் என்ன ஈகோ? நானெல்லாம் வர மாட்டேன்” என்றவர் இரவு பத்து மணி ஆனதில் உறங்கி போனார்.

‘இவருக்கு ஏன் புரியவே மாட்டேங்குது? நான் என்ன ஈகோவா பாக்குறேன்? ஏதேதோ அளவுக்கு மீறி பேசிட்டேன். இப்போ எப்படி போய் பேசுறது? தயக்கமா இருக்கே?’ என்று விரல்களை பிசைந்தபடியே அமர்ந்து கொண்டிருக்க, நேரம்தான் போனதே தவிர, அவரால் தயக்கத்தை விட்டு வெளிவர முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவரும் உறங்கி விட்டார்.

அடுத்த நாள் காலை விடிந்து மாலை பொழுதும் நெருங்கி இருந்தது. வீடே பரபரப்பாக இருக்க, பிறந்தநாளுக்காக வீட்டை அலங்கரிப்பதற்காக வந்த வேலையாட்கள் அவர்களது வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அம்ருதாவின் வீட்டிலிருந்தும் மூவரும் பரிசு பொருட்களுடன் தனது பேத்தி பிறந்த நாள் விழாவுக்காக ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு இவ்வளவு விமர்சையாக தன் பேத்தி பிறந்தநாள் கொண்டாடபடுவதில்  மனது முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது.

மதியம் வரை வீட்டிலேயே சுற்றி கொண்டிருந்தார் கீர்த்தனா. ஆனால் மூன்று மணியிலிருந்து ஆளை காணவில்லை. ஹர்ஷா தன் தந்தையிடம் கேட்க அவருக்கும் தெரியவில்லை. மாலை ஆறு மணிக்க்கு வீட்டிற்கு வந்தவர் ஒரு முடிவு எடுத்தவராக ஹர்ஷாவின் அறைக்கு சென்றார். கதவை தட்டிவிட்டு கடகடவென உள்ளே நுழைந்தவர்

“ஹர்ஷா.. நான் என் மருமககிட்ட தனியா பேசணும். நீ வெளில போ..” என்றார் அதிகாரமாக. ஹர்ஷாவுக்கு தன் அன்னை ‘ஏன் இப்படி பேசுகிறார்?’ என்ற கேள்வி எழுந்தாலும் அம்ருதாவோ ‘நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்’ என்று சைகை செய்ததில் சரி என்று தலை அசைத்தவன்  அறையை விட்டு வெளியேறினான்

கதைவை சாற்றிவிட்டு அம்ருதாவிடம் நெருங்கி வந்த கீர்த்தனாவோ, “இதோ பாரு அம்ருதா, நான் பேசினதெல்லாம் தப்புதான். அதுக்காக என்னால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. இவ என்னோட பேத்தி. என்னோட பேத்தினு தெரிஞ்சதுக்கு அப்புறமும் என்னால தள்ளியெல்லாம் நிக்க முடியாது. புரியுதா?” என்றவர் அம்ருதாவின் இடையில் அமர்ந்திருந்த ஆத்யாவை பார்த்தார்.

குழந்தையோ தன் அன்னையிடம் குரல் உயர்த்தி பேசுபவரை புரியாத பார்வை பார்த்தவள் அம்ருதாவையும், அவள் பாட்டியையும் மாறி மாறி பார்த்தாள்.

கீர்த்தனாவிற்க்கோ மனது பிசைய தொடங்கியது. ‘தன் பேத்தியை கையில் ஏந்தி மார்போடு அணைத்து கொஞ்சாமல் போனால் நெஞ்சு வெடித்தே இறந்து விடுவேன்.’ என்பதுபோல் இருந்தது அவருக்கு.

“என்னை சுயநலவாதினோ, இல்ல நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கிற ஆள்னோ நீ என்னை எப்படி வேணும்னாலும் நெனச்சுட்டு போ. என் பேத்தியை முதல்ல என்கிட்ட கொடு” என்று இரு கரங்ககளையும் ஏந்தி கேட்டிட அம்ருதாவின் விழிகளில் நீர் ததும்பியது.

அவளும் பார்த்து கொண்டிதானே இருக்கிறாள். இத்தனை நாட்களில் அவளது மாமனார் கூட சில சமயங்களில் ஆத்யாவை தூக்கி இருக்கிறார். ஆனால் ஒருநாளும் தன் குழந்தையை தொட்டு தூக்காமல் விலகியே நின்றவர் இன்று தன் குழந்தைக்காக இப்படி கையேந்தி நிற்பதை கண்டதும் அம்ருதாவிற்கும் அனைத்தும் மறந்து போனது.

மகிழ்ச்சியுடன் குழந்தையை கீர்த்தனாவிடம் கொடுக்க, பயந்த முக பாவனையுடனே அவரிடம் சென்றாள் ஆத்யா. பூ குவியலாய் தன்னிடம் வந்த ஆத்யாவை அள்ளி அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டவர் தன்னுடைய பல வருட ஏக்கத்தை தீர்க்கும் வகையில் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவர் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

“என் தங்கம், என் பட்டு, என் செல்லம்” என்று கொஞ்சி கொண்டே இருக்க, புதிதாக இவ்வளவு உரிமையாக நடந்து கொள்வதில் குழந்தை உதடு பிதுக்கி அழ தயாரானாள். ‘அழுதால் எங்கே அம்ருதா தன்னிடமிருந்து ஆத்யாவை வாங்கி கொள்வாளோ?’ என்று அஞ்சியவறாக, கதவை திறந்து கொண்டு ஆத்யாவை தூக்கி கொண்டு வேக வேகமாக வெளியே சென்றவர் கார் பின் பக்க கதவை திறந்தார். அதில் முழுவதும் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் என கார் முழுவதும் நிறைந்து இருந்தது.

பார்த்திபன் அவரோ தள்ளி நின்று இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருக்க, ‘என் பேத்தியை நானே போய் வாங்கிட்டு வந்துட்டேன். உங்க உதவி ஒன்னும் எனக்கு தேவை இல்ல’ என்பது போல் உதட்டை சுழித்தவர், குழந்தையோடு குழந்தையாக விளையாட தொடங்கி விட்டார். இதை பார்த்து கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் மனது நிறைந்து போனது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!