தாரிக்காவிற்கு பாலா கூறிய வார்த்தைகளில் இருந்து வெளிவரவே முடியவில்லை. ‘என்ன இவன் கொன்னுடுவேன்னு மிரட்டுறான்? ஒரு வேலை செஞ்சாலும் செஞ்சுடுவானோ?’ என்று அதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தவளை பார்த்த பாலாவோ அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்ன தாரிக்கா நான் அப்போ பேசினதையே இன்னும் நெனச்சுட்டு இருக்கியா?” என்றதும் அவன் புறம் திரும்பியவள் மௌனமாக அவனை பார்த்தாளே தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவள் மனதை புரிந்து கொண்டவன்,
“இதோ பாரு தாரிக்கா, நீ என்னை ஏமாத்துறேன்னு தெரிஞ்சதும் ஏதோ கோபத்துல அந்த மாதிரி எல்லாம் பேசிட்டேன். மத்தபடி ஒன்னும் இல்ல. உன்னை போய் கொலை பண்ணுவேனா? நீயே சொல்லு?” என்றதும் அவளிடத்தில் மீண்டும் மௌனம். இது சரிப்பட்டு வராது. நாம நேரா விஷயத்துக்கே போயிடுவோம் என்று எண்ணியவன்,
“நம்ம ஒரு டீல் பேசுவோமா?” என்று கேட்க,
‘என்ன டீல்?’ என்பது போல் அவன் முகத்தை எரிட்டவளை பார்த்து,
“நீ எப்படியும் அந்த ஹர்ஷாகூட வாழணும்னு முடிவு பண்ணிட்ட, நீ முடிவு பண்ணினா அதை செஞ்சுடுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன்னோட முடிவுல நான் குறுக்க வர மாட்டேன். ஆனா…” என்று இழுக்க..
“என்ன ஆனா?”
“நீ அந்த நிரஞ்சனாவை எப்படியாவது எனக்கு செட் பண்ணி கொடுக்கனும்.” என்றதும்
“என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” என்று கொந்தளித்தவள், இவனிடம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகாது என்பதை அறிந்து கொண்டு, தன் குரலை தாழ்த்திக் கொண்டு,
“கொஞ்சமாவது அறிவோடதான் பேசுறியா? நீயும் நானும் ஒண்ணா வாழ்ந்துட்டு இருக்கோம்னு அவளுக்கு நல்லாவே தெரியும். அதுவும் இல்லாம அவ வேற யாரையோ லவ் பண்ணிட்டு இருக்கா. அப்படி இருக்கும்போது அவளை செட் பண்ணி கொடு, செட் பண்ணி கொடுன்னா? என்னால என்ன பண்ண முடியும்?” என்றாள் தாரிக்கா.
அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்றதுமே பாலாவின் முகத்தில் இறுக்கமும், எரிச்சலும் அதிகரித்தது. அதில்,
“உண்மையா அவ வேற ஒருத்தனை லவ் பண்றாளா?” என்று பாலா நம்பமாட்டாமல் மீண்டும் கேட்க,
“ஆமா. உண்மையாதான் சொல்றேன். நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்லனும்?”
என்றதும் பாலாவின் முகமோ சுருங்கி போனது. காலையில் நிரஞ்சனாவை இங்கு பார்த்ததிலிருந்து, ‘எப்படியாவது அவளுடன் சிறிது நாட்களாவது வாழ்ந்து விட வேண்டும்’ என்று எண்ணி இருந்தவனுக்கு இப்போது அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்ற செய்தி தெரிந்ததில், இது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது நன்றாக புரிந்து போனது.
மனதுக்குள், ‘தாரிக்காவும் அந்த ஹர்ஷாவுக்கு சொந்தமானவளா இருக்கும்போது இவளை கரெக்ட் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன். ரொம்ப நல்லவானா நடிக்க வேண்டி இருந்தது. அப்போ நான் என்னை சிங்கிள்னு காமிச்சுகிட்டேன். அதனால எல்லாமே ஓரளவு ஈஸியா முடிஞ்சுது.
ஆனா இப்போ நிரஞ்சனாவும் கமிட்டேட். என்னையும் தாரிக்காகூட சேர்த்து வச்சு பார்த்துட்டா. அப்போ அவளை மடக்குறது அவ்வளவு ஈசி இல்ல. அதுவும் போக அவ்வளவு எஃபோர்ட் போடுற அளவுக்கு அவ ஒர்த்தா? என்று சிந்தித்து பார்த்தவன், ஒரு முடிவு எடுத்தவனாக,
“நீ சொல்றதும் சரிதான். ஆனா நான் அவ மேல ஆசைப்பட்டுட்டேனே? அவளை அடையாம எனக்கு நிம்மதி கிடையாது. அதனால ரொம்ப நாள் வேண்டாம். ஒரு நாள், ஒரே ஒரு நாள் அவளை அனுபவிச்சா மட்டும் போதும். அதுக்கு மேல அவ எனக்கு தேவையே இல்ல.” என்றதும்
அவனை ஏற இறங்க கேவலமான பார்வை பார்த்தாள் தாரிக்கா.
“என்னடி..? அப்படி பாக்குற? நீ இதை செஞ்சுதான் ஆகணும். நீ முடியாதுன்னு சொன்னா அந்த ஹர்ஷாவே உன்னை திரும்ப ஏத்துக்கிட்டாலும், நான் உன்னை விட மாட்டேன். என்கிட்டருந்து உனக்கு விடுதலையே கிடையாது. நான் சொன்ன மாதிரி செஞ்சா நீ ஹர்ஷா கூட போ, நான் வேற ஒரு பொண்ணை தேடிக்கிறேன்.” என்று தன் தோள்களை குலுக்கியவன், என்ன டீலா? என்றதும்
ஒரு நிமிடம் சிந்தித்தவள், ‘இவன் சொன்னதை நாம செய்யலனா நிச்சயமா இவன் என்னை அந்த ஹர்ஷாகூட சேரவே விட மாட்டான். அவளை ரொம்ப நாள் கமிட் ஆக கேட்டாதான பிரச்சனை? ஒரு நாள் தானே? ஏதாவது யோசிச்சு நிரஞ்சனாவை இவன்கிட்ட விட்டுட்டு நம்ம ஹர்ஷாவை அடையுற வழியை பார்ப்போம். யார் எப்படி போனா நமக்கென்ன? நம்ம சொகுசா வாழ்றதுதான் நமக்கு முக்கியம்’ என்று எண்ணி கொண்டவள்
“சரி பாலா. ஒரு நாள்தானே? நான் எப்படியாவது அவளை உன்கூட இருக்க வச்சுடுறேன். அதுக்கப்புறம் நீ சொன்ன மாதிரி என்னை எந்த தொல்லையும் பண்ண கூடாது” என்றவளை பார்த்து, “இந்த பாலா சொன்னதை செய்வான். கண்டிப்பா பேச்சு மாற மாட்டேன்” என்றதும்
“அப்போ சரி டீல்..” என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டியவள், நிரஞ்சனாவிற்கான தனது திட்டத்தை வகுக்க தொடங்கினாள்.
இங்கு நிரஞ்சனாவோ கல்லூரியை விட்டு மதிய வேளையே வெளியேறியவள் தனது காதலன் தினேஷை சந்திக்க கிளம்பியிருந்தாள். கல்லூரியிலிருந்து சற்று தொலைவில் அவளுக்காக தன்னுடைய பைக்கில் காத்து கொண்டு நின்றிருந்தவன் அவள் தன்னை நோக்கி வருவதை பார்த்ததும் அவளை நோக்கி வண்டியை கிளப்பி இருந்தான்.
தலையில் முக்காட்டிட்டு முகத்தை தன்னுடைய துப்பட்டாவால் மூடி மறைந்திருந்தவள் அவன் தன்னருகில் வந்து வண்டியை நிறுத்தியதும் சட்டென ஏறி அமர்ந்தவள் “போ.. போ… வேகமா போடா..” என்று விரட்டினாள்.
“இருடி.. போய்ட்டு தானே இருக்கேன். ஏன் இப்படி பயப்படுற? அதுதான் முகத்தை ஃபுல்லா மறைச்சுதான வச்சிருக்க” என்று கேட்க,
“இருந்தாலும் யாரவது பார்த்து எங்க வீட்ல சொல்லிட்டா? அவ்வளவுதான். எங்க வீட்ல அதுக்கு மேல என்னை காலேஜ்க்கே அனுப்ப மாட்டாங்க.”
“அதுதான் உங்க அம்மாவுக்கு நம்ம லவ் மேட்டர் தெரியுமே. அப்புறம் என்னடி?”
“தெரிஞ்சாலும் காலேஜ் கட் அடிச்சுட்டு இப்படி ஊர் சுத்தலாம் விட மாட்டாங்க” என்று பேசிக்கொண்டே போனவர்கள் அருகில் இருக்கும் பூங்காவிற்கு வந்து சேர்ந்தனர்.
அதிக நேரம் அலைபேசியிலும், அடிக்கடி நேரிலும் பேசிக்கொள்வதால் தினமும் என்ன நடந்தது? என்று பேசி கொள்வது அவர்களுக்குள் வழக்கமானதாக இருந்தது. ஆனால் அம்ருதாவிற்கு எதிராக ஆதாரங்களையும், அவளது மருத்துவ சான்றிதல்களையும், எடுத்து கொண்டு போய் தாரிக்காவிடம் கொடுத்ததை மட்டும் தெளிவாக மறைத்து வைத்திருந்தாள் நிரஞ்சனா.
இதெல்லாம் தினேஷிற்கு சுத்தமாக பிடிக்காது, தெரிந்தால் பெரிதாக கோபப்படுவான் என்று அறிந்து வைத்திருந்தவள் இத்தனை நாளும் மறைத்து வைத்திருந்ததை இன்று பேச்சு வழக்கில் உளறி கொட்டியிருந்தாள்.
“இப்போ என்ன சொன்ன நீ? நீதான் உங்க அக்காவோட ஃபைல் எடுத்துட்டு போய் அந்த தாரிக்காகிட்ட கொடுத்தியா?” என்று கோபமாக கேட்டிட,
“அய்யயோ.. உளறிட்டோமோ? என்று திருத்திருவென விழித்தவள் “அது.. அது வந்து…” என்று இழுக்க,
“என்னடி.. வந்து போயின்னு இழுத்துட்டு இருக்க? ஒழுங்கா சொல்லு. ஆமாவா? இல்லையா?” என்று அதட்ட,
அதில் கோபம் கொண்டவள் மனதுக்குள் எனக்கென்ன பயமா? என்று எண்ணிக்கொண்டு,
“ஆமா.. நான்தான் கொடுத்தேன். இப்போ என்ன அதுக்கு?” என்று கூறி முடிக்கையில் அவள் கன்னத்தில் “பளார்..” என்று அறைந்திருந்தான் தினேஷ்.
ஒரு நாளும் தன்னிடம் அதிர்ந்து கூட பேசாதவன் இன்று தன் காதுமடல் கிழியும் அளவிற்கு அறைந்ததில் வலியைவிட அதிர்ச்சி மேலிட்டது நிரஞ்சனாவிற்கு.
அதில், “ஹௌ.. டேர்.. யூ.. தினேஷ்..” என்று தனது மூரல்களை நரநரவென கடித்தவள் அவனை அதீத கோபத்துடன் நோக்க,
“ஏய்… நீ பண்ணி வச்சுருக்க காரியத்துக்கு என்னை முறைக்க வேற செய்வியா நீ?” என்றவன் உனக்கு நான் ஒன்றும் சலைத்தவன் அல்ல என்பது போல் அவனும் நிரஞ்சனாவின் செயலில் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்.
“ஏதோ உங்க அக்காமேல இருக்க பொறாமைல, கோபத்துல லூசு மாதிரி ஏதேதோ பேசிட்டு, பண்ணிட்டு இருக்க, எல்லாம் போக போக சரியாகிடும், சொல்லி திருத்திக்கலாம்னு நெனச்சா இவ்வளவு கேவலமான வேலை பார்த்து வச்சிருக்க?”
என்றதும் புசுபுசுவென கோபம் வந்தது நிரஞ்சனாவிற்கு. அதில், “கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியே அமுக்குனி மாதிரி இருந்தவ, அந்த ஹர்ஷாவை கல்யாணம் பண்ணின அப்புறம் என்னைவே கன்னத்துல அறைஞ்சுட்டா..!! என்னை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா?” என்றதும்
“நீ பேசின பேச்சு தாங்க முடியாம ஒருமுறை அறைஞ்சதுக்காவா இப்படியெல்லாம் பண்ணின? அவங்களும் எத்தனை நாள்தான் உன்னை பொறுத்துக்கிட்டு போவாங்க? அது மட்டும் இல்லாம அவங்க ஏன் உன் பேச்சையெல்லாம் பொறுத்துக்கணும்?” என்றவன் அதற்கு அவள் பதில் சொல்லும் முன்னமே,
“அப்படி பார்த்தா இப்போ நான் கூடத்தான் உன்னை அறைஞ்சேன். அதுக்காக இப்போ நீ எனக்கு எதிரா என்ன வேணாலும் செய்வியா நீ? என்று அவன் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம்” பதில் சொல்ல முடியாமல் திணறியவள்,
“டேய்.. நீயும் அவளும் ஒன்னாடா? ஏன் இப்படியெல்லாம் பேசுற?” என்று கேட்க,
“இல்ல நிரஞ்சனா.. நீ திருந்துவ, எப்படியும் உன்னை திருத்திடலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு நிரூபிச்சுட்ட. உன்னோட கூட பிறந்த அக்காவையே இப்படியெல்லாம் பண்ற நீ, நாளைக்கு எங்க குடும்பத்துல யாரையாவது பிடிக்காம போனா இதைவிட பெருசா ஏதாச்சும் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என்று கேட்க
அவன் கேள்வியில் ஒரு நிமிடம் அதிர்ந்து அடங்கியவள் அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திணறியப்படி நிற்க, பிறகு தன்னை சுதாரித்து கொண்டு,
“நான் ஏன்டா அப்படியெல்லாம் பண்ண போறேன்? இது வேற, அது வேறடா” என்றவளை பார்த்து,
“உன்னோட குணம் மாறாத வரைக்கும் இங்க எதுவுமே மாறாது. உன்னோட வாழணும்னு நினைக்கவே பயமா இருக்கு. சாரி ட்டு சே திஸ். ஒன்னு நீ உன்னோட குணத்தை மாத்திக்க, இல்லைன்னா என்னை ஆளை விடு. கண்டிப்பா எங்க குடும்பத்துல உன்னால வாழ முடியாது. அது உனக்கும் கஷ்டம் எங்க குடும்பத்துக்கும் கஷ்டம்” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
இதுவரை அதிர்ந்து கூட தன்னிடம் பேசாத தினேஷ் இன்று தன்னை அடித்ததும், கோபமான வார்த்தைகளை வீசிவிட்டு செல்வதும் நிரஞ்சனாவின் மனதிற்குள் அழுகையையும், கோபத்தையும் ஒருசேர வரவழைக்க, அவன் கூறி சென்ற வார்த்தைகளிலேயே உழன்று கொண்டிருந்தாள். கல்லூரி முடியும் நேரம் வரை அதே பூங்காவில் தனித்திருந்தவள் பிறகு தனது வீட்டை நோக்கி புறப்பட்டாள்.