அந்தியில் பூத்த சந்திரனே – 25

4.8
(10)

ஹர்ஷாவின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்ற ஆணையை பார்த்து பதறி போக, ஹர்ஷாதான் “இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி பயப்படுறீங்க?. என்னோட ஃப்ரெண்ட் சூர்யா லாயர்தான? நான் அவன்கிட்ட உடனே பேசுறேன்” என்றான். 

“அவனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு ஹர்ஷா. இது குழந்தை சம்பந்தப்பட்ட விஷயம். நாங்களும் அவன் சொல்றதை நேர்ல கேக்கணும். இல்லைனா எங்களுக்கு நிம்மதியே இருக்காது” என்றார் பார்த்திபன். மற்றவர்களும் அதையே கூற, “சரி” என்று தலையசைத்த ஹர்ஷா சூர்யாவின் எண்ணிற்கு அழைப்பை விடுத்தான். 

மறுபுறம் அழைப்பை ஏற்ற சூர்யாவோ, “ஹேய்.. ஹர்ஷா… என்னடா ரொம்ப நாளா ஆளையே காணோம்? உனக்கு இப்போதான் என் ஞாபகம் வந்ததா?” என பேசிக்கொண்டே போக,

“சூர்யா.. ஒரு முக்கியமான விஷயம்டா. உடனே வீட்டுக்கு கிளம்பி வா” என்று கூற, அவன் குரலில் உள்ள பதற்றத்தை புரிந்து கொண்டவன்,

“என்னடா? என்னாச்சு? ஏன் ஏதோ மாதிரி பேசுற?” 

“நீ முதல்ல கிளம்பி வீட்டுக்கு வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்..” 

“சரிடா.. நான் உடனே கிளம்பி வரேன்” என்றதும் அழைப்பை துண்டித ஹர்ஷா, அவன் தந்தையின் புறம் திரும்பி, “வரேன்னு சொல்லிருக்கான்பா. கொஞ்ச நேரத்துல வந்துடுவான்” என்றான்.

அனைவரும் சூர்யாவின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினர். ஒவ்வொருவர் முகத்திலும் பதட்டம் கவலை மட்டுமே தெரிந்தது. கூறியடியே சிறிது நேரத்திலே ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சூர்யா. 

அவனிடம் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, பெருமூச்சு விட்ட சூர்யாவோ, “அந்த தாரிக்கா பிரச்சனை உன் வாழ்க்கைல முடியவே மாட்டேங்குதேடா. சரி பாத்துக்கலாம் விடு. குழந்தை இரண்டு வருஷமா அம்ருதாகிட்டதான வளர்ந்திருக்கா. கோர்ட்ல நம்ம பக்கம் இருக்கும் நியாயத்தை பேசுவோம்” என்றான்.

“ஏன்பா.. கண்டிப்பா தீர்ப்பு நமக்கு சாதகமாதானே வரும்?” என்றார் கீர்த்தனா. 

“குழந்தைக்கு அப்பா ஹர்ஷா. அம்ருதா குழந்தையை இரண்டு வருஷமா நல்லாதானே வளர்த்திருக்காங்க. தாரிக்காவுக்கும், குழந்தைக்குமான சம்பந்தம் அந்த லீகள் பேப்பர்ஸ் மட்டும்தான். கண்டிப்பா நம்ம பக்கம்தான் தீர்ப்பாகும். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.என்றான் சூர்யா.

அதே தருணம், தாரிக்காவின் வக்கீலும், நண்பனுமான மோகன் அவளுக்கு நம்பிக்கை வார்த்தை கூறி கொண்டிருந்தான்.

“தாரிக்கா.. கவலையை விடு.. நம்மகிட்ட லீகல் பேப்பர்ஸ் இருக்கு. ஸ்ட்ரெஸ்ல இருந்ததால அப்போ குழந்தையை வாங்க முடியலைன்னு டாக்டர் சர்டிஃபிகேட் இருக்கு. அப்புறம் என்ன? எல்லாம் நமக்கு சாதகமாதான் நடக்கும்.” என்றான் மோகன்.

“இதோ பாரு மோகன்.. இதுலதான் என் வாழ்க்கையே அடங்கி இருக்கு. சோ.. நம்ம ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்த்து பார்த்துதான் வைக்கணும்” என்றாள்.

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ நிம்மதியா போய்ட்டு வா” 

“என்னமோ சொல்ற.., உன்னைத்தான் நம்பி இருக்கேன்.. பார்த்துக்கோ.” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் தாரிக்கா.

இங்கு நிரஞ்சனாவோ அப்பாவிடம் அடி வாங்கி கன்னம் வீங்கி போய் அமர்ந்திருக்க, காதலனும் பேசுவதில்லை, அப்பாவும், அம்மாவும் கூட தன்னிடம் பேசாமல் இருக்கவே, முதன் முதலாக தனிமையை உணர்ந்தாள். 

அழுது, அழுது சோர்ந்து போனவள் அப்படியே உறங்கி போக, ஆறுமுகமும், காவேரியும்தான் ‘இந்த விஷயத்தை அம்ருதாவிடம் சொல்லலாமா? வேண்டாமா?’ என்று சிந்தித்த படியே அமர்ந்திருந்தனர்.

காவேரியின் அலைபேசி ஒலி கேட்க, யார் என்று எடுத்து பார்த்தவருக்கு அம்ருதா அழைத்திருப்பது தெரிந்தது. அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டவர், “சொல்லு அம்ருதா..” என்றதும் மறுபக்கத்திலிருந்து அம்ருதா அழு குரல் கேட்டது.

அவர்களுக்கு புரிந்து போனது, ‘என்ன நடந்திருக்கும்?’ என்று. இவை அனைத்திற்கும் காரணமான நிரஞ்சனாவை, ‘என்ன செய்தால் தகும்?’ என்று கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்தி கொண்டு அம்ருதாவிற்கு ஆறுதல் வார்த்தை கூறி கொண்டிருந்தனர். 

நீண்ட நேரம் பேசியவர்களுக்கு நிரஞ்சனா செய்து வைத்த வேலையை பற்றி கூற வேண்டும் என்று இருந்தாலும் அது அம்ருதாவை மேலும் மேலும் காயப்படுத்தும் என்பதால் அமைதியாக கூறாமல் இருந்து விட்டனர். அதுமட்டுமின்றி ‘மாப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?’ என்று எண்ணியவர்கள் அந்த எண்ணத்தை முழுவதுமாக கைவிட்டனர்.

நாட்கள் கடந்து போனது. நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. ஹர்ஷாவின் குடும்பம், அம்ருதாவின் தாய், தந்தையர், தாரிக்கா என அனைவரும்  காலை ஒன்பது முப்பது மணிக்கெல்லாம்  குடும்ப நல நீதிமன்றம் வாசலில் வந்து நின்றனர்.

கோர்ட் கிளார்க் அவர்களது பெயரை அழைக்கும் சத்தம் கெட்டது. வழக்கு என்னை குறிப்பிட்டு அதனை தொடர்ந்து, ஹர்ஷா, அம்ருதா, தாரிக்கா பெயரை சொல்லி அழைத்தவர் குழந்தை காவல் மனு என்பதையும் குறிப்பிட்டார். 

இரு தரப்பு வழக்கறிஞர்களும் அமர்ந்திருக்க, நீதிபதி முன்பு தாரிக்கா தரப்பில் மோகன் பேச ஆரம்பித்தான். 

“யுவர் ஆனர், மனுதாரர் தாரிக்காதான் குழந்தைக்கு சட்டப்படி தாய். சரகசி ஆக்ட்க்கு உட்பட்டுதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த காலகட்டத்தில் எனது மனுதாரர்  மனநிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். அவரால் அந்த தருணத்தில் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்க்கான மருத்துவ சான்றிதல்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம். 

இப்போது தாரிக்கா பூரண குணம் அடைந்துள்ளார். அதற்கான மருத்துவ சான்றிதல்களையும் சமர்ப்பித்துள்ளோம். இதனால் குழந்தை மீது சட்டரீதியான முழு உரிமையும் உள்ள தாரிக்காவிடம் குழந்தையை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டு கொள்கிறோம். தட்ஸ் ஆல் மை லார்ட்..” என்றவன் தனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, அடுத்ததாக சூர்யா தனது வாதத்தை முன் வைத்தான்.

“மை லார்ட்.., குழந்தையை இரண்டு வருடமாக என்னுடைய கட்சிக்காரர் அம்ருதாதான் வளர்த்துள்ளார். குழந்தை பிறந்த நேரத்தில் குழந்தையை வாங்க தாரிக்கா வரவில்லை. ஆத்யா அம்ருதாவைதான் தனது தாயாக நினைத்து வளர்ந்து வருகிறாள். அம்ருதாவும் நன்றாகவே பராமரித்து வளர்த்துள்ளார்.

குழந்தை நல வாரியத்தினர் அம்ருதாவுடன் ஆத்யா வளர்ந்த தருணத்தில், முதல் வருடத்தில் இரண்டு முறையும், இரண்டாவது வருடத்தில் ஒரு முறையும் குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள் என்று ஆய்வு செய்த சான்றிதல்களையும்  தங்களது பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம். 

அதனால் குழந்தையின் மன நிலையையும் கருத்தில் கொண்டு ஆத்யாவை, அம்ருதாவிடமே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தட்ஸ் ஆல் மை லார்ட்..” என்றவன் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். 

இரு தரப்பினருக்கும் நோட்டிஸ் சரியாக அனுப்பப்பட்டதா, இரண்டு பக்கத்தினரும் வந்திருக்கிறார்களா? என்று நீதிபதி ஒரு முறை சரிபார்த்து கொண்டிருக்கும்போதே இடையில் வந்த தாரிக்கா, 

“அவங்க என்னோட குழந்தையை சட்ட விரோதமா வச்சிருக்காங்க. உடனே என்னோட குழந்தையை வாங்கி என்கிட்ட கொடுத்துடுங்க. இது வரைக்கும் நான் என்னோட குழந்தையை பிரிஞ்சு இருந்தது போதும். எனக்கு என் ஆத்யா வேணும்.. ப்ளீஸ் என்கிட்டயே வாங்கி கொடுத்துடுங்க” என்று கண்ணீர் மல்க நீதிபதியிடம் வேண்டி நிற்க, 

அவர் அமைதியாக, “கோர்ட்க்கு தேவையான விசாரணை நடந்த பிறகு முடிவு செய்வோம். அது வரைக்கும் பொறுமையா இருங்க” என்றவர் அடுத்த கட்ட விசாரணையை இருபது நாட்களுக்கு பிறகு ஒத்தி வைத்தார். 

இவள் நடிப்பை பார்த்து அம்ருதாவின் பெற்றோருக்கும், ஹர்ஷாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் எரிச்சல் வர, பார்ப்பவர்கள் உடனே நம்பிவிடும் அளவிற்கு அழுது நாடகம் நடத்திவிட்டு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறியவள் அம்ருதாவையும், ஹர்ஷாவையும் ஒரு முறை நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள். 

ஆறுமுகமும், காவேரியும் ஹர்ஷாவிடம் வந்தவர்கள், “என்ன மாப்பிள்ளை, அந்த தாரிக்காவோட வக்கீலும், தாரிக்காவும் ஏதேதோ சொல்றாங்களே? எங்களுக்கு பயமா இருக்கு. ஆத்யா உங்க பொண்ணுதான? நம்ம அதை சொன்னா குழந்தையை நம்மகிட்ட கொடுத்துட மாட்டாங்களா?” என்று கேட்க,

“அடுத்த விசாரனைல எல்லாமே கேப்பாங்க மாமா. இன்னைக்குதானே முதல் நாள். பார்த்துக்கலாம் விடுங்க மாமா. நீங்க எதுவும் பயப்படாதீங்க அத்த” என்று ஹர்ஷா இருவருக்கும் ஆறுதல் கூறிய பிறகே அவர்கள் மனம் சற்று அமைதி அடைந்தது. 

அம்ருதா குழந்தையுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட எங்கு ஆத்யாவை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது. அதை அவள் முகமே காட்டி கொடுக்க, யார் எவ்வளவு கூறினாலும் அவளால் இயல்பாக, தைரியமாக இருக்க முடியவில்லை. 

ஹர்ஷா அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவளது கரத்தை ஆறுதலாக பற்றி கொள்ள, ஹர்ஷாவின் புறம் திரும்பியவளோ,

“ஆத்யாவை மட்டும் என்கிட்டருந்து பிரிச்சுட்டா, நான் செத்தே போவேன். என்னால ஒரு நிமிஷம் கூட அவ இல்லாம உயிர் வாழ முடியாது”என்று அவள் கூறிய வார்த்தைகள் ஹர்ஷாவின் மனதை திடுக்கிட செய்தது.

‘என்ன வார்த்தை சொல்லி விட்டாள்?’ என்று மனம் துடிக்க, “நீ என்னை நம்பலையா அம்மு? நான் அப்படியே விட்டுடுவேனா?” என்று கேட்டவனிடம்,

“உங்களை நம்பாம இல்ல, ஆனா அந்த தாரிக்காவை நான் காலேஜ் படிக்குற காலத்துல இருந்து பார்த்துட்டு இருக்கேன். அவளுக்கு ஒன்னு வேணும்னா அதை அடையுறதுக்காக எந்த இல்லைக்கும் போவா. அதுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றவள் மனதில் பாரம் கூடிக்கொண்டே போக, 

“வாங்க வீட்டுக்கு போகலாம். இங்க இருக்கவே எனக்கு பிடிக்கலை” என்றவள் உறங்கும் ஆத்யாவை தூக்கி கொண்டு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டாள். 

தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் தாரிக்கா நிரஞ்சனாவிற்கு அழைத்து விடயத்தை கூறுவோம் என்று அழைப்பு விடுக்க, மறுமுனையில் அழைப்பு ஏற்கபட்டதும்,

“ஹலோ.. நிரஞ்சனா.. இன்னைக்கு கோர்ட்ல உங்க அக்கா முகத்தை பார்க்கணுமே எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்று கூறி கொண்டிருக்கும்போதே,

“தாரிக்கா.., எங்க வீட்ல எல்லாருக்கும் நான்தான் உனக்கு ஹெல்ப் பண்ணினேன்னு தெரிஞ்சு போய்டுச்சு. இது வரைக்கும் என்னை அதிர்ந்து கூட பேசாத என்னோட அப்பா அன்னைக்கு என்னை ரொம்ப அடிச்சுட்டாரு. எங்க அம்மா என்கிட்ட இப்போல்லாம் சரியா பேசுறது கூட இல்ல. அதனால இனிமேல் எனக்கு கால் பண்ணாத” என்றதும்,

அதில் திடுகிட்டவள், “ஹேய்.. என்னாச்சு உனக்கு? ஏதோ சொன்னா சந்தோஷ படுவியேன்னு சொல்ல வந்தா, நீ என்னடான்னா இப்படியெல்லாம் பேசுற? அப்பா அம்மா கோப படுறதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்கெல்லாம் ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்ற? ஃப்ரியா விடு..” என்றாள் தாரிக்கா. ‘இவள வச்சு என்னென்னவோ ப்ளான் பண்ணினா இவ என்னடான்னா கால்லே பண்ண வேண்டாம்னு சொல்றாளே?’ என்று யோசிக்க தொடங்கினாள் தாரிக்கா.

“இல்ல தாரிக்கா. எனக்கு அம்ருதாவைதான் பிடிக்காது. ஆனா என்னோட அப்பா, அம்மாவை ரொம்ப பிடிக்கும். நான் அவுங்களை பத்தியும் கொஞ்சம் யோசிச்சு இருக்கணும். இந்த பிரச்சனையால என்னோட தினேஷ் கூட இப்போ என்கிட்ட பேசுறது இல்ல. இப்படி ஒரு நிலை எனக்கு இதுக்கு முன்னாடி வந்ததே இல்ல. 

வேண்டாம் தாரிக்கா. இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். நீ என்ன பண்ணுவியோ அது உன் இஷ்டம். நான் அதுல தலையிட மாட்டேன். ஆனா இனிமேல் எனக்கு கால் பண்ணாத.” என்றவள் தாரிக்காவின் பதிலுக்காக காத்திருக்காமல் உடனே அழைப்பை துண்டித்து விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!