நிரஞ்சனா இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றாலும் சமாளித்து கொள்ளும் அளவில் இருக்க சற்று தடுமாறிய படியே அம்ருத்தாவை பிடித்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள் நிரஞ்சனா.
அம்ருதாவின் குடும்பத்தினருடன் ஹர்ஷா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பாலாவின் பெயரில் கற்பழிப்பு முயற்சி, போதை பொருள் கலந்தது என்று இரண்டு விதமாக புகார் அளிக்க அதை ஏற்று கொண்ட போலீசார் உடனடியாக பாலா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப். ஐ. ஆர்) பதிவு செய்தனர். பாலாவை தேடி அவனது வீட்டிற்கு இரண்டு போலீசார் செல்ல அங்கு பாலா இல்லை. தாரிக்கா மட்டுமே இருந்தாள்.
நிரஞ்சனாவை அவளது வீட்டிற்கு அழைத்தது தாரிக்காதான் என்பதால் அவளை விசாரிக்க காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்தனர்.
போகும் வழியிலேயே தாரிக்கா தன்னுடைய வழக்கறிஞருக்கு அழைத்து விவரத்தை கூறியதால் அவரும் அவள் வரும் முன்னரே காவல் நிலையத்திற்கு வந்து காத்திருந்தார்.
அவருடன் சேர்ந்தே உள்ளே வந்த நிரஞ்சனாவிடம் சென்ற தாரிகா ஒன்றுமே அறியாதவள் போல், “நிரஞ்சனா என்ன ஆச்சு? போலீஸ்காரங்க என்னென்னவோ சொல்றாங்களே? எனக்கு எதுவுமே தெரியாது. உனக்கு ஒன்னும் ஆகலையே?” என்று கேட்க, பதிலுக்கு அவளை முறைத்து தள்ளினாள் நிரஞ்சனா.
தாரிக்காவை அழைத்த இன்ஸ்பெக்டர் அவளிடம் விசாரணை நடத்த, “நான் அந்த நேரத்துல வீட்டிலேயே இல்ல சார். வெளியில போயிருந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது வீடு கலைந்து கிடந்தது. நான் பாலாவுக்கு கால் பண்ணினா அவனும் எடுக்கல. நானே என்னவோ எதோன்னு பயந்துட்டுதான் இருந்தேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது சார்” என்று கூறிவிட்டாள்
நிரஞ்சனாவை அழைத்து விசாரித்தபோது அவளும் அந்த நேரத்தில் தாரிகா வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய, வக்கீலுடன் வந்திருந்ததால் போலீசாரும் அதிகபட்ச கேள்விகளை கேட்காமல் முக்கியமான கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு “எப்போ கூப்பிட்டாலும் வரனும். உங்க மேல சந்தேகம் இருக்கு. நிரூபிச்சா உங்களுக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஹர்ஷா அம்ருதாவின் குடும்பத்தினரை அழைத்து சென்று அவர்களின் வீட்டில் விட, நிரஞ்சனாவோ ஹர்ஷாவை கண்ணீருடன் பார்த்தவள், “தேங்க்ஸ் மாமா. இதுவரைக்கும் நான் உங்ககிட்டகூட மரியாதையா கூட நடந்துகிட்டது இல்ல. ஆனாலும் அதை எதையுமே மனசுல வச்சுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்தி இருக்கீங்க.” என்று கண்ணீர் சிந்த,
“விடு நிரஞ்சனா. நீ இனிமேலாவது உன் அக்காவை புரிஞ்சு நடந்துக்கோ. அதுவே எனக்கு போதும்” என்றதும் அம்ருதாவை சென்று அணைத்து கொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ்க்கா. ரொம்ப சாரியும் கூட” என்றதும் அம்ருதாவிற்கு சிறு வயதில் இருந்த நிரஞ்சனா திரும்ப கிடைத்த உணர்வு. அதில் தானும் அவளை அணைத்து கொண்டவள் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறினாள்.
சிறிது நேரம் அமர்ந்து பேசியவர்கள் அனைவரும் சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே, அம்ருதா தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை கூற ஒவ்வொருவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. காவேரி வீட்டிலிருந்த இனிப்பை எடுத்து வந்து அனைவரிடமும் கொடுத்து மகிழ்ந்தார்.
“சரிம்மா.. மாமாவும் அத்தையும் இன்னும் நாங்க வரலையேன்னு அப்போவே கேட்டாங்க. நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்று அம்ருதா கூற,
“சரிமா.. பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க. என்றவர்கள் வாசல் வரை வந்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
இருவரும் தன்னுடைய வீட்டிற்கு சென்றதும் வாசலுக்குள் நுழையும்போதே ஆத்யா ஓடி வந்து தாவி சென்று “அப்பா..” என்று ஹர்ஷாவை அணைத்துக் கொள்ள அவளை தூக்கி கொஞ்சியபடியே உள்ளே நுழைந்தான் ஹர்ஷா.
பார்த்திபனிடமும், கீர்த்தனாவிடமும் நடந்த அனைத்தையும் கூற, இருவரும் பதறிப்போயினர்.
“அந்த தாரிக்காவுக்கு எவ்வளவு திமிர் இருந்தா இப்படியெல்லாம் பண்ணி இருப்பா?” என்றார் பார்த்திபன்.
“அவளும் ஒரு பொண்ணுதானே? நிரஞ்சனாவுக்கு இப்படி ஒரு விஷயத்தை பண்ண அவளுக்கு எப்படி மனசு வந்தது?” என்று ஆதங்கப்பட்டார் கீர்த்தனா.
“சரிவிடுங்கம்மா. அதுதான் கம்பளைண்ட் கொடுத்திருக்கோமே. பார்த்துக்கலாம்” என்றான் ஹர்ஷா. பிறகு அம்ருதா கர்ப்பமாக இருக்கிறாள் என்ற விடயத்தை ஹர்ஷா கூற அதை கேட்ட இருவருக்கும் எல்லை இல்லாத ஆனந்தம்.
இருவருக்கும் வாழ்த்து கூறியவர்கள் ஆத்யாவை தூக்கி கொண்டு, “உனக்கு ஒரு குட்டி தம்பியோ இல்லை தங்கச்சி பாப்பாவோ வர போறாங்கடா..” என்று கூற, “ஐ.. ஜாலி…” என்று துள்ளி குதித்தாள் ஆத்யா
ஆத்யாவின் கஸ்டடி கேசில் அடுத்த வாய்தா நாளைதான் என்பதை அனைவருமே மறந்து விட்டிருக்க, பார்த்திபன்தான் நினைவு கூர்ந்தவர், “நாளைக்கு கோர்ட்டுக்கு போகணும் சீக்கிரம் போய் எல்லாரும் தூங்குங்க” என்று கூற, அம்ருத்தாவும் ஹர்ஷாவும் ஆத்யாவுடன் தனது அறைக்கு சென்றனர்.
உள்ளே நுழைந்ததும் அம்ருதாவை மெத்தையில் அமர வைத்த ஹர்ஷா அவளது மடியில் படுத்துக்கொண்டான். அம்ருதா அவனது தலை முடியை வருடி விட்டவாறே,
“என்ன ஹர்ஷா.. என்ன ஆச்சு?” என்று கேட்டிட,
“இன்னைக்கு நடந்த பிரச்சனைல நீ என்னை சுத்தமா மறந்துட்ட அம்மு” என்றான் ஹர்ஷா.
“நானா..?? நான் என்ன பண்ணினேன்? ஏன் அப்படி சொல்றீங்க?”
“ஒருத்தன் என் கண்ணுல மிளகாய் பொடிய அடிச்சானே.. என்ன ஏதுன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு? ” என்று கேட்க
மெல்லிதாய் புன்னகையித்தவள், “நான் அப்பவே உங்க டாக்டர் ஃப்ரண்டு கார்த்திக்கிட்ட மருந்து வாங்கிட்டேன்” என்றவள் தன்னுடைய கைப்பைக்குள் கரத்தை விட்டு மருந்தை எடுத்து அவனது விழிகளை திறக்க சொல்லி கவனமாக மருந்தை விட்டாள்.
அதன் பிறகு இன்று ஹர்ஷா செய்த உதவிகள் அனைத்திற்கும் நன்றி கூற, “ஓவரா பண்ணாதடி பொண்டாட்டி. இந்த தேங்க்ஸ் சொல்ற வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கா போய் தூங்கு” என்றதும் சிரித்து கொண்டவள் ஆத்யாவை உறங்க வைத்து விட்டு ஹர்ஷாவின் கை வளைவிற்குள் தானும் உறங்கி போனாள்.
அடுத்த நாள் காலை அனைவரும் சரியான நேரத்திற்கு நீதிமன்றத்தில் ஆஜராகி நின்றிருக்க, ஹர்ஷாவின் தரப்பு வழக்கறிஞரான சூர்யா எழுந்து தனது வாதத்தை முன்வைத்தான்.
“மை லார்ட், குழந்தையை இரண்டு வருடம் அம்ருதா நன்றாக வளர்த்துள்ளார், அவருடைய கருமுட்டையையும் ஹர்ஷாவின் உயிரணுவையும் வைத்து தான் குழந்தை பிறந்திருக்கிறது. இப்போது இருவரும் முறையாக திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் தாரிக்காவோ லிவின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். அவருடன் வாழும் பாலாவின் நடத்தையும் சரியில்லை. நேற்று அம்ருதாவின் தங்கை நிரஞ்சனாவிடம் பழச்சாரில் போதை பொருளை கலந்து கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். ஹர்ஷா சென்று காப்பாற்றும் முயற்சியில் ஈடுபாடும்போது தப்பித்து ஓடியவர், தலைமறைவாகிவிட்டார். இதனால் குழந்தை தாரிகாவிடம் இருப்பது பாத்துகாப்பானது அல்ல.
பாலாவின் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் நிரஞ்சனாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர் கொடுத்த சான்றிதலையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றவன் ஆதாரங்களை சமர்ப்பிக்க,
தாரிக்கா தரப்பில் மோகன் தனது வாதத்தை முன் வைத்தான். “மை லார்ட், இது பாலாவின் மீது வேண்டும் என்றே சுமத்தப்பட்ட பழி. குழந்தை கஸ்டடி கேஸ்க்காக இவர்கள் அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். தாரிக்கவிற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குற்றம் இன்னும் நிரூபிக்கபடவில்லை. எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்தபோதும் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
பாலா தலைமறைவாகினாரா இல்லை வேறு எதுவும் பிரச்சனையா என்பதும் முழுதாக தெரியவில்லை. ஒருவேளை இது உண்மை என்றால் தாரிக்கா பாலாவை விட்டு தனியாக வாழவும் தயாராக இருக்கிறார். அதனால் இந்த வழக்கில் பாலாவை ஒரு காரணமாக காட்ட வேண்டாம்.
அம்ருதா குழந்தையை பெற்று தாரிக்கவிடம் தருவதாக ஒப்புக்கொண்டு தான் கையெழுத்து இட்டார். இதில் கருமுட்டை யாருடையது என்ற வாதமும் தேவை அற்றது. இங்கு சட்டபூர்வமான தாய் யார் என்பது மட்டுமே முக்கியம்” என்று உரைக்க,
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மீண்டும் வழக்கை பதினைந்து நாட்களுக்கு தள்ளி வைத்தார்.
அனைவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற, மோகன் தாரிக்கவிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். அம்ருதா குடும்பத்தினரும், ஹர்ஷா குடும்பத்தினரும் ஆத்யாவுடன் ஒன்றாக நிற்க, ஹர்ஷாவும் அம்ருதாவும் மட்டும் தனியாக நின்று பேசி கொண்டிருந்தனர்.
தாரிக்காவின் மனமோ, ‘இந்த பாலா வேற மாட்டிக்கிட்டா இந்த கேஸ் அவங்களுக்கு சாதகமா போய்டுமோ?’ என்று பயந்தவள், பிறகு ஒரு முடிவு எடுத்தவளாக, தாரிகா ஹர்ஷாவிடம் சென்றாள்.
“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஹர்ஷா, ஒரு அஞ்சு நிமிஷம் தனியா வர முடியுமா?” என்று அம்ருதாவை பார்த்தப்படியே கேட்க, “எதுவாயிருந்தாலும் அம்ருதா முன்னாடியே சொல்லு” என்றான் ஹர்ஷா.
“ஓகே.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று தன் தோள்களை குலுக்கியவள், “எனக்கு பணத்தேவை நிறைய இருக்கு, இப்போ நீ எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தீனா, நான் இந்த கேஸ்ச வாபஸ் வாங்கிக்கிறேன். எனக்கு தேவை பணம், உங்களுக்கு தேவை ஆத்யா. என்ன சொல்ற?” என்று கேட்க,
அதில் அவளை பார்த்து கேலியாக புன்னகையித்தவன், “உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். பணத்தை வாங்கிக்கிட்டாலும், நீ கேசையே வாபஸ் வாங்கினாலும், உன்னால எந்த நேரமும் பிரச்சனை வரும்.
இந்த கேஸ் எப்படி முடிக்கணும்னும் எனக்கு தெரியும். நான் எதுவா இருந்தாலும் சட்டபூர்வமா பார்த்துக்கிறேன். உன்னை நம்பி பணம் கொடுக்க நான் தயாரா இல்லை.” என்று ஹர்ஷா கூற,
தாரிக்கா அடுத்த வார்த்தை பேச முயல, “போதும்” என்பது போல் தன் ஒற்றை கரத்தை நீட்டியவன், அம்ருதாவை அழைத்து கொண்டு அங்கிருந்து விலகி சென்றான்.
இவர்களிடம் வந்து தாரிக்கா பேசுவதை பார்த்த குடும்பத்தினர், இருவரிடமும் என்னவென்று விசாரிக்க, தாரிக்கா பேசியதை கூற, அனைவருக்குமே கோபம் எல்லையை கடந்தது.