ஹர்ஷாவின் கோரிக்கையை அவள் ஏற்றக் கொண்டதற்க்கு அடையாளமாக அவன் அலைபேசியில் அறிவிப்பு பகுதியில் “அம்ருதா அக்ஸப்டெட் யுவர் ரெக்வஸ்ட்” என்று இருக்க அதை பார்த்தவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்தது.
ஆனால் இங்கு அம்ருதாவின் மனநிலையோ அதற்க்கு நேர்மாறாக இருந்தது. காவேரி அம்ருதாவிடம் கோபமாக பேச ஆரம்பித்து இருந்தார். “இதோ பாரு அம்ருதா இதுக்கு மேல பொறுமையா இருக்க என்னால முடியாது. உனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கும் நாங்க கல்யாணத்தை பண்ணனும். ஏதோ வாழ்க்கைல ஒரு தப்பு நடந்துடுச்சுனு அதைவே பிடிச்சுகிட்டு நான் இனிமேல் வாழ்க்கை முழுக்க இப்படித்தான் இருக்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டிட,
“என்னோட வாழ்க்கையையும் நிரஞ்சனாவோட கல்யாணத்தையும் சம்பந்த படுத்தி பேசாதீங்கமா. அதுவும் இல்லாம அவள் சின்ன பொண்ணு. இப்பதான் படிச்சுட்டு இருக்கா. அவ கல்யாணத்தை பத்தி இப்போ ஏன் பேசுறீங்க? என்றாள் அம்ருதா.
“ஹ்ம்ம்.. சின்ன பொண்ணு..” என்று கூறியப்படியே வெறுப்பான புன்னகையை அவர் உதிர்க்க, அதற்கான அர்த்தம் அப்போது அவளுக்கு புரியவில்லை.
“சரி அவளை விடு, ஹர்ஷ மித்ரன்னு ஒருத்தர் மேட்ரிமோனி சைட்ல ரெக்வஸ்ட் அனுப்பியிருந்தாரு. அவரும் விவாகரத்து ஆனவர்தான். அவரோட ப்ரொபைல் டீடெயில்ஸ் ஃபுல்லா படிச்சேன். நல்ல ப்ரொபைல்தான். அதனால உன்னை கேக்காமலே அக்ஸப்ட் கொடுத்துட்டேன். தயவு செஞ்சு அவர்கிட்ட பேசி பாரு.” என்றதும், அம்ருதா அவள் அன்னையை முறைத்தபடியே இருக்க, “சும்மா முறைச்சுட்டே இருக்காதடி. இப்போவும் சொல்றேன். நான் உன்னை வற்புறுத்தல. பேசி பாருன்னு மட்டும்தான் சொல்றேன்.”
“எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். திரும்ப திரும்ப நீங்க பேசி பாருன்னு சொல்லிட்டே இருக்கீங்க?”
இதுவரை அமைதியாக இருந்த அவள் தந்தை ஆறுமுகமும் “அம்ருதா, அம்மா சொல்றதை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருடா. உன் நல்லதுக்காகதான சொல்றாங்க?” என்றதும்,
“ப்ளீஸ் பா… நீங்களாவது என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க” என்ற கூறிய தன் மகளின் தலையில் அன்பாக கரம் பதித்தவர்,
“நீயும் கொஞ்சம் நிதர்சனத்தை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு மா. இப்படியே இருந்து என்ன சாதிக்க போற? அந்த ராஜேஷ் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலையா? கோர்ட்லருந்து விவாகரத்து கிடைச்ச அடுத்த மாசமே இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான். நீ மட்டும் ஏண்டா இப்படியே வாழணும்னு நினைக்கிற?”
“அப்பா என் பொண்ணு…” என்று ஆரம்பிக்கும்போதே,
“இதோ பாரு அம்ருதா. அப்பா சொல்றதை கேளு. நம்ம ஆத்யாவை யார் மனசார ஏத்துக்குறாங்களோ அவுங்களையே நீ கல்யாணம் பண்ணிக்கோ. அதைவிட்டுட்டு வர எல்லாரையும் இப்படி வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்காம கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுனுதான் சொல்றோம்.”
“அதுக்காக ஒவ்வொருத்தர்கிட்டயும் நான் பேசி பார்க்க முடியுமாப்பா?” என்று அவள் கேட்டிட,
“அப்படி இல்ல, இப்படியே இருக்காம முதல் அடியை எடுத்துவைன்னுதான் சொல்றோம். ப்ரொஃபைல் பாரு. உனக்கே யார்கிட்ட பேசி பாக்கணும்னு தோணுதோ அவர்கிட்ட மட்டும் பேசு. என்று கூறி கொண்டிருக்கும் போதே ஆத்யா அழைக்கும் சத்தம் கேட்க அதில் அனைவரது கவனமும் திரும்பியது.
அம்ருதா குழந்தையை தூக்கி கொண்டவள் அவள் அறையை நோக்கி செல்ல, மகள் புரிந்து கொள்ளாத வருத்தத்துடனே ஆறுமுகம் பள்ளிக்கு சென்றுவிட்டார்.
அறைக்குள் நுழைந்ததும் “அம்மா.. ஏம்மா எல்லாரும் சண்டை போதுறீங்க?” என்று ஆத்யா கேட்க, “சற்றே தடுமாறியவள், அ.. அது… சண்டை இல்ல பாப்பா. சும்மாதான் பேசிகிட்டு இருந்தோம்” என்று சமாளித்தவள், உணவை எடுத்து வந்து குழந்தைக்கு விளையாட்டு காண்பித்தபடியே உணவை ஊட்டி முடித்தாள். ஆத்யாவுடனே நேரம் செலவிட்டவள் பகலில் குழந்தை உறங்கும் நேரம் நெருங்கியதால் குழந்தைக்கு கதை சொல்லி உறங்க வைத்தாள்.
பிறகு தாகம் எடுக்கவே தண்ணீர் குவளையை திறந்து பார்க்க அது காலியாக இருந்தது. சரி சமையலறைக்கு சென்று எடுத்து வரலாம் என்று சமையலறை நோக்கி சென்றாள்.
இதுவரை அம்ருதாவின் திருமண விடயத்தில் தலையிடாத நிரஞ்சனா தன் தாய் சமையலறையில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து,
“எல்லாம் நீ கொடுக்குற இடம்தான் மா. எப்படி போனா என்னனு அந்த ராஜேஷ் கூடவே வாழட்டும்னு விட்டிருந்தா இவ இப்படி பேசுவாளா?” என்று பேசிகொண்டிருக்க,
இது தண்ணீர் எடுக்க வந்த அம்ருதாவின் காதில் நன்றாகவே விழுந்தது. அவள் பேச்சில் உள்ளே போகாமல் சட்டென அப்படியே நின்று விட்டாள்.
“பிரச்சனை ஆரம்பிக்கும்போதே நீ அவளை நாலு கெட்ட வார்த்தையிலாவது திட்டி, அவுங்க வீட்லதான் இருந்தாகனும், வாழ்ந்தாலும் செத்தாலும் அங்கதான் கிடக்கணும்னு சொல்லி மிரட்டி விட்டிருந்தா அவ வந்து இங்க இருப்பாளா?
இரண்டாம் தாரமா இவளை கல்யாணம் பண்ணிக்க கேக்குறதே பெருசு, அதுவும் ஒரு குழந்தையோட இருக்கிறவள எவன் கல்யாணம் பண்ணிப்பான். அதையும் மீறி ஏதோ கொஞ்சம் அழகா இருக்காளேன்னு இவளை கேக்குறானுங்க. கல்யாணம் பண்ணிக்க என்ன கஷ்டம் இவளுக்கு?
இதோ பாரும்மா என்னோட லவ்வர் வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அவன் எவ்வளவு பெரிய ஐடி கம்பெனியில வேலை பாக்குறான் தெரியுமா? அவுங்க குடும்பத்துக்கு இவ இப்படி வாழா வெட்டியா இருக்குறது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?
அய்யயோ.. அப்படி மட்டும் நடக்கவே கூடாது. அதுக்கு முன்னாடியே இவளுக்கு எவனையாவது பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பிடு. இவளால என்னோட வாழ்க்கைல பிரச்சனை வந்தா என்னால ஏத்துக்க முடியாது.”
என நிரஞ்சனா பேசி கொண்டே போக இதற்க்கு மேல் பொறுக்க முடியாத காவேரி அவளை திட்டுவதர்க்காக வாய் திறக்க போகும் நேரம் அம்ருதா அங்கு நிற்பதை கவனித்து விட்டார். ஆனால் பார்க்காதது போல் திரும்பி கொண்டவர் நிரஞ்சனாவின் பேச்சை தடுக்கவில்லை. இவள் பேசுவதை அம்ருதா கேட்கட்டும். தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றியும் அவள் தெரிந்து கொள்ளட்டும் என அமைதி காத்தவர் நிரஞ்சனாவை பேச விட்டு வேடிக்கை பார்த்தார்.
மேலும் மேலும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியவளை பார்த்த அம்ருதாவிற்கு இந்த நிரஞ்சனா புதியவள். எப்போதும் அக்கா, அக்காவென்று சிறு பிள்ளைப்போல் சுற்றி திரியும் நிரஞ்சனாவை தான் அவள் பார்த்திருக்கிறாள். அப்படிப்பட்டவள் தன்னையே இவ்வாறு பேசுவாள் என்று அம்ருத்தா கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.
உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்தினர், ஏன் சில தோழிகள்கூட அம்ருதாவை ஏளனமாகவும், அவள் மீதே தவறு என்பது போலவும் பேசிவிட, யார் என்ன சொன்னால் என்ன? தனக்காக தன் குடும்பம் இருக்கிறது என்பதே பெரும் தைரியத்தை கொடுத்தது அவளுக்கு. இப்போது அவளது மனமோ,
“நீயுமா நிரஞ்சனா?” என்று நினைக்க உடைந்து போனவளாய், கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.
இதற்க்கு மேலும் ஒரு வார்த்தையும் கேட்க விரும்பாதவள் தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டாள்.
நிரஞ்சனா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டு தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியில் கிளம்பிவிட்டாள். காவேரிக்கு மனம் வலித்தது. இதை கேட்டு நிச்சயம் அம்ருதா அழுவாள் என்பது அவருக்கு தெரியும். ‘சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொண்டாளாவது அவள் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதம் சொன்னால் போதும்’ என்று நினைத்தவர் அவளுக்கு ஆறுதல் கூற கூட செல்லவில்லை. அவளுக்கு யோசிக்க தனிமை கொடுத்து விலகி இருந்தார்.
இவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை கதறலாக வெளிப்பட குழந்தை உறங்கி கொண்டிருந்ததால், தனது இரு கரங்களால் வாயை பொத்தி கொண்டவள் கண்ணீர் பெருக்கெடுக்க விம்மி வெடித்து சத்தமின்றி அழ துவங்கினாள்.
நிமிர்ந்து பார்த்த அம்ருதாவின் பார்வையில் பட்டது அவள் விருப்ப தெய்வமான முருகனின் புகைப்படம். அவரின் புன்னகையித்த முகத்தை பார்த்தப்படியே இருந்தவள் தானாக பேச துவங்கினாள்.
என் குழந்தை மட்டும் இல்லைன்னா என்னைக்கோ நான் தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்திருப்பேன். புருஷனை பிரிஞ்சு வந்த எனக்கே இந்த நிலமைனா.. ஏற்கனவே அப்பாவும் இல்லாம இப்போ அம்மாவான நானும் இல்லாம போனா என் பிள்ளையோட நிலை என்னாவது? இந்த ஒரே காரணத்துக்காகதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்.
தப்பு பண்ணின ராஜேஷ் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கான். எந்த தப்புமே செய்யாத நான் இங்க இத்தனை பேரோட மோசமான வார்த்தைகளையும், மத்த ஆண்களோட கேவலமான பார்வைக்கும் ஆளாகுறேன்.
இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தா நான் என்ன செய்வேன் முருகா? நானும் எத்தனை நாளைக்குதான் என்னை தைரியமானவளா எதற்கும் கலங்காதவளா காட்டிக்க முடியும்? அதுவும் என் தங்கச்சியே இப்படி பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல. வலிக்குது, தாங்க முடியலை.” என்றவள் வெறும் தரையில் தலை வைத்து படுத்து விட்டாள்.
ஏதேதோ எண்ணங்களில் உளன்று கொண்டிருந்தவள்,
எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் முருகா. நாங்க இரண்டு பேரும் இருந்தாதான எல்லாருக்கும் பாரம்? பேசாம என் குழந்தையும் கொன்னுட்டு நானும் செத்துட்டா..? எல்லா பிரச்சனையும் முடிஞ்சுடும்ல? என்று எண்ணியவள் ஒரு முடிவு எடுத்தவளாய் உறங்கி கொண்டிருக்கும் தன் குழந்தையை நோக்கி தன் பார்வையை திருப்ப,
அழகான பூக்குவியளாய், ஒன்றுமே அறியாத பால் மனம் மாறாத குழந்தையாய் உறங்கி கொண்டிருக்கும் தன் மகள் ஆத்யாவை கண்டவளுக்கு ஒரு நிமிடம் நான் என்ன செய்ய நினைத்தேன் என்றவள் மனம் திடுக்கிட்டது.
‘அய்யோ என் பிள்ளையை நானே கொல்ல பார்த்தேனா? இப்படி ஒரு எண்ணம் எனக்கு எப்படி வந்துச்சு? எனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சா?” என்று எண்ணி பதறி கொண்டிருக்கும் அதே நேரம் கதவு தட்டப்படும் ஓசை கேட்க,
அவசர அவசரமாக தன் விழி நீரை துடைத்தவள் “ஆங்.. வரேன்” என்றபடியே குளியலறை சென்று முகத்தை நீரால் அடித்து கழுவியவள் முகத்தில் உள்ள ஈரத்தை அவசர அவசரமாக துவாலையில் துடைத்து விட்டு கதவை திறக்க, ஹாலில் நின்றிருந்தான் ஹர்ஷ மித்ரன்.
அவனை தன் வீட்டில் பார்த்ததும் அதிர்ந்து விழித்தவள் முகத்தில் எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் அவள் அழுததற்க்கு அடையாளமாக கண்களில் சோர்வும், பால் போன்ற முகம் வீங்கி சிவந்து இருந்ததிலும் நன்றாகவே தெரிந்தது.
அவள் அழுதிருக்கிறாள் என்றதும் ஹர்ஷாவின் மனம் ஏனோ இனம் புரியாத வலியை உணர்ந்தது. பெருமூச்சுடன் அவளை பார்த்த காவேரி அம்மாவோ ஹர்ஷாவின் புறம் திரும்பி,
“தம்பி நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா கொஞ்ச நேரம் வெளில வெயிட் பண்ண முடியுமா? ப்ளீஸ்…” என கேட்க, அவனும் புரிந்து கொண்டவனாய் சிறு தலையசைப்புடன் வீட்டிலிருந்து வெளியேறியவன், தனது காருக்குள் சென்று அமர்ந்து கொண்டான். அவனது மனம் ஏனோ அழுத முகத்துடன் இருந்தவளை பார்த்ததில் இருந்து நிலைகொள்ளாமல் தவித்து கொண்டிருந்தது.