அந்தியில் பூத்த சந்திரனே – 8

4.9
(10)

ஒரு குழந்தையுடன் இருக்கும் பெண்ணை தனது மகன் திருமணம் செய்ய நினைக்கிறான் என்பதை ஏற்று கொள்ளவே முடியாத கீர்த்தனா. “அப்போ இந்த பொண்ணு வேண்டாம் ஹர்ஷா, வேற பொண்ணை பார்க்கலாம்..” என்றதும் உணவு தட்டிலிருந்த ஹர்ஷாவின் கரம் அசைவின்றி அப்படியே நின்றது.

 

“ஏன் வேண்டாம்?”

 

குழந்தையோட இருக்க பொண்ணு நமக்கெதுக்கு? நீ அவளை கல்யாணம் பண்ணினா அவள் குழந்தையும் கூட்டிட்டு தானே வருவா? யாரோ பெத்த பிள்ளைக்கு நம்ம எதுக்கு செலவு பண்ணனும்? நம்ம ஏன் பொறுப்பேத்தத்துக்கணும்?” என்றவரை புரியாத பார்வை பார்த்தான் ஹர்ஷா.

“என்னம்மா பேசுறீங்க? இதுவே எனக்கு ஒரு குழந்தை இருந்திருந்தா இப்படித்தான் பேசுவீங்களா?” என்றதும்,

“நீ ஆம்பள புள்ள. உனக்கு குழந்தை இருந்தாலும் பிரச்சனை இல்லை.”

மெல்லிதாக புன்னகையித்தவன், “அது என்னம்மா ஆணுக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயம்? எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை படறேன். அவங்களதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.” என்றதும் இவ்வளவு உறுதியாக சொல்லும் தன் மகனை மாற்ற முடியாது என்று அறிந்தவர் சற்றே சிந்தித்த பிறகு,

“சரி ஹர்ஷா, உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா அந்த குழந்தைய அவுங்க தாத்தா பாட்டி வளக்கட்டும். அவ மட்டும் இங்க வந்தா போதும்.”

“இல்லம்மா. நான் அவளோட குழந்தைய என்னோட குழந்தையா பார்த்துப்பேன்னு சொல்லிருக்கேன். அம்ருதா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்க. இனிமேல் ஆத்யா என்னோட சொந்த குழந்தைதான். அவளுக்கு நான்தான் அப்பாவா இருந்து எல்லாமே செய்ய போறேன். அம்ருதா கூட ஆத்யாவும் இங்கதான் வருவா” என்று திட்டவட்டமாக கூறிவிட,

கீர்த்தனாவுக்கு மனமெல்லாம் எரிய துவங்கியது. ஏதோ சொல்ல வாய் திறந்தவரின் கரத்தை இறுக பற்றி வேண்டாம் என்பதுபோல் தலையசைத்தார் பார்த்திபன். அதில் எதுவும் பேசாமல் கீர்த்தனா அமைதி ஆகிவிட,

“சரிப்பா உன் இஷ்டம். நீ கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டதே எங்களுக்கு சந்தோஷம்தான். ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம அவங்க வீட்டுக்கு போய் பேசுவோம்” என்றார் பார்த்திபன்.

“ஓகேப்பா… எனக்கு ரெஸ்டாரண்ட் போக டைம் ஆகிடுச்சு. நான் கிளம்பறேன்.” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட,

கீர்த்தனாவோ “ஏன் இப்படி பண்ணுனீங்க? எதுக்காக என்னை தடுத்தீங்க? நான் அவனுக்கு சொல்லி புரிய வச்சிருப்பேன்ல?” என்றதும்,

“இதுல புரிஞ்சுக்க வேண்டியது நீதான் கீத்து. அவன் ஏற்கனவே முடிவு பண்ணிட்டான். அவன் பேசினதுல இருந்தே உனக்கும் புரியலையா? அந்த பொண்ணுகிட்ட அவன் ஆல்ரெடி எல்லாமே பேசி முடிவும் பண்ணிட்டான்.

நம்மகிட்ட பர்மிஸ்ஸன் கேக்கல. இந்த பொண்ணை பிடிச்சிருக்கு, இவளைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இன்ஃபர்மேஷன் கொடுக்குறான் அவ்வளவுதான்.

அந்த குழந்தையை அவனே பாத்துகிறதா அந்த பொண்ணுகிட்ட வாக்கு கொடுத்திருக்கான். இனிமேல் அதை மீறுவான்னு உனக்கு தோணுதா?” என்றதும்,

“இல்லங்க.., அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா “

போதும் என்பது போல் தனது ஒரு கரத்தை உயர்த்தி காட்டியவர்,

“நம்மளா இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறதுதான் நமக்கு மரியாதை. இல்லனா அவனா கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா நம்ம என்ன செய்ய முடியும்? அவன் என்ன சின்ன பையனா நீ சொல்றப்படியெல்லாம் கேட்டு நடக்க?” என்றதும் முகம் கோபமும் வருத்தமுமாக சுருங்கி போனது கீர்த்தனாவிற்கு.

 

“சரி. என்னவோ பண்ணுங்க. ஆனா இதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல” என்றவர் முழுதாக உண்டு முடிக்காமல் பாதி உணவிலேயே எழுந்து விட்டார்.

 

இதை பார்த்த பார்த்திபனுக்குதான் எந்த பிரச்சனையும் இல்லாமல் தன் மகன் திருமணம் நடந்து முடிந்தால் போதும் என்று இருந்தது.

 

இங்கு அம்ருதாவின் அறைக்கு வந்த காவேரி அவள் ஏதோ ஆழமான சிந்தனையில் இருப்பதை கண்டவர்,

“என்னமா? என்ன யோசிச்சுட்டு இருக்க?”

 

“அது.. ஹர்ஷா கால் பண்ணிருந்தாருமா. நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்” என்றதும் காவேரியின் முகம் பளிச்சிட்டது.

 

“ஆனா.. அம்மா நான் ஏதும் அவசர பட்டு முடிவு எடுக்கிறேன்னா? நிரஞ்சனா அப்படியெல்லாம் பேசினதுனால எமோஷனலா முடிவு எடுத்துட்டேனா? உண்மையிலேயே இது சரியா வருமான்னு ஏகப்பட்ட கேள்வி மனசுல வந்து வந்து போகுது மா.” என்றதும் தனது மகளின் தலையை வருடி கொடுத்தவர்,

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா. நீ எடுத்த முடிவு சரிதான். அந்த தம்பி ஆத்யாவையும் நல்லா பார்த்துப்பேன்னு தான சொல்லியிருக்கு. எந்த பிரச்சனையும் வராது.

அப்படியே வந்தாலும் கூட இது வரைக்கும் எவ்வளவோ விஷயங்களை தாண்டி வந்துட்ட. இனிமேல் என்ன நடந்தாலும் நீ கண்டிப்பா சமாளிச்சுடுவ. தைரியமா இரு.” என்று தன் மகளுக்கு தைரியம் சொன்னவர்,

“நல்லதே நடக்கும்னு நம்புவோம். கண்டிப்பா இனிமேல் உன் வாழ்க்கை நல்லாருக்கும்” என்று கூறிவிட்டு மனம் முழுவதும் மகிழ்ச்சியும், நிம்மதியுமாக அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

 

ஒரு வாரத்திற்கு பிறகு,

ஹர்ஷா தனது குடும்பத்துடன் இன்று அம்ருதா வீட்டிற்கு வருவதாக காவேரியிடம் கூறி இருந்தான். இந்த ஒரு வார காலத்தில் அம்ருதாவுடன் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. காவேரியின் வீடு பரபரப்பாக இருந்தது. வீட்டை முந்தைய நாளில் இருந்தே ஒழுங்கு படுத்தி, அவர்களை வரவேற்க தயாராகி காத்திருந்தனர்.

அம்ருதா சாதாரண காட்டன் புடவையில், தலை முடியை பின்னலிட்டு, அளவாக பூ வைத்து ஒப்பனைகள் ஏதுமின்றி நெற்றியில், புருவத்துக்கு மத்தியில் ஒரு பொட்டு மட்டும் வைத்திருந்தாள். அதுவே அவளுக்கு எடுப்பாக அழகாக இருந்தது.

 

நிரஞ்சனா ஜீன்ஸ் பேண்ட், அதற்கேற்ற டாப் அணிந்து முழு ஒப்பனையுடன் நவீன மங்கையாக அவள் வயதுக்கே உரிய அழகுடன் இருந்தாள்.

வெளியில் கார் வந்து நிற்கும் அரவம் கேட்க, ஆறுமுகமும் காவேரியும் வாசல் வரை சென்று அவர்களை வரவேற்றனர். கீர்த்தனா வீட்டிற்குள் நுழைந்ததும் விழிகளை சுழல விட்டவர் பார்வையாலேயே வீட்டினை அளந்தார்.

அவர்களுக்கு பின்னால் வந்த ஹர்ஷாவை பார்த்த நிரஞ்சனா, விழிகள் விரிய அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.

‘ஏற்கனவே விவாகரத்து ஆனவன், இரண்டாம் தாரமாக தன் அக்காவை கேட்டு வருபவன் ஏதோ வயதான தோற்றத்தில், அரை கிழவனை போன்ற ஒருவன்தான் வர போகிறான்’

என்று எண்ணி இருந்தவளுக்கு இப்படி அட்டகாசமாய், ஆண்மைக்கே இலக்கணமாய் ஒருவன் வந்து நிற்பான் என்று நினைக்கவே இல்லை.

விழிகள் விரிய அவனை பார்த்தவள் மனமோ ‘அம்ருதாவுக்கு இப்படி ஒருவனா??’ என்று எண்ணி கொண்டது.

ஆறுமுகம் அனைவரையும் சோபாவில் அமர வைத்தவர் பொதுவாக சில வார்த்தைகளை பேசி விட்டு அம்ருதாவை அழைத்து வரும்படி காவேரியிடம் கூற, அனைவருக்கும் காஃபியை எடுத்து கொண்டு அவளது அறைக்கு சென்றவர் அவளிடம் அதை கொடுக்க கையில் காஃபியுடன் வெளியில் வந்தாள் அம்ருதா.

 

அவளை பார்த்த ஹர்ஷாவின் விழிகள் அதன் பின்னர் வேறு எங்கும் திரும்பவே இல்லை. அம்ருதா அழகானவள் என்பது தெரியும், ஆனால் இன்று தன்னவளாக அவளை காணுகையில் பேரழகியாகவே தெரிந்தாள்.

ஒவ்வொருவர் முன்பும் சென்று காஃபியை நீட்ட, அதை எடுத்து கொண்டதும் இறுதியாக ஹர்ஷாவின் முன்பு வந்து கொடுக்கும்போது ஆத்யா “அம்மா..” வென்று அழைக்க அதில் சற்றே திரும்புகையில் எதிர் பாராத விதமாக ஹர்ஷாவின் மீது சிறிது காஃபியை சிந்தி விட்டாள்.

சூடாக மேலே பட்டதும் “ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று முகத்தை சுருக்கியவனை பார்த்து “அச்சச்சோ… சாரி… சாரி” என்று பதற்றமாக அம்ருதா கூறிட,

 

“என்னம்மா நீ பார்த்து கொடுக்க கூடாதா..?” என்றார் காவேரி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. விடுங்க ஆன்ட்டி, தெரியாம தானே நடந்துச்சு.?” என்றதும் ஆத்யா ஓடி வந்து ஹர்ஷாவின் கால்களை பற்றி கொண்டாள்.

 

அவளை தூக்கி தன் மடிமீது அமர வைத்தவன் “ஹாய் பேபி.. எப்படி இருக்கீங்க?”என்று கேட்டிட,

“நான் நல்லா இதுக்கேன் அங்கிள். நீங்க என்னை பாக்கவா வந்தீங்க?” என்றாள் ஆத்யா.

 

“ஆமாம் பாப்பா.. நான் உன்னை பார்க்கதான் வந்தே. இங்க பாரு சாக்லேட்..” என்று தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து குழந்தையிடம் நீட்ட ஆத்யா திரும்பி அம்ருதாவை பாத்தாள்.

“வாங்கிக்கோ” என்றதும் “தேங்க்கூ அங்கிள்” என்றுவிட்டு அழகாய் புன்னகையித்த படி ஹர்ஷாவின் கன்னத்தில் முத்தமிட்டு திரும்பி அறைகுள்ளேயே ஓடி சென்று விட்டாள்.

 

“சட்டை கரை ஆகிட போகுது தம்பிக்கு ஹெல்ப் பண்ணுமா” என்று காவேரி கூற “வாங்க..” என்று ஹர்ஷாவை அழைத்து கொண்டு பின்புறம் தண்ணீர் குழாய் இருக்கும் இடத்திற்கு சென்றாள் அம்ருதா.
கீர்த்தனாவுக்குதான் நடக்கும் எதுவும் பிடிக்கவில்லை. பார்த்திபனோ மகனுக்கு பிடித்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருந்தார்.

 

தனது சட்டையில் உள்ள கரையை நீர் கொண்டு கழுவியவன், திரும்பி அம்ருதாவை பார்த்து “ரொம்ப அழகா இருக்கீங்க அம்ருதா’ என்றுவிட்டு ஒரு நொடியும் நிற்காது அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான். அம்ருதாவோ அவன் கூறிய வார்த்தையில் ஒரு நிமிடம் படபடத்து போனவள், பிறகு தன்னை சமன் செய்துகொண்டு உள்ளே சென்று அனைவரிடமும் சேர்ந்து நின்று கொண்டாள்.

 

அன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலம் கழித்து திருமணம் செய்யலாம் என திருமண தேதியும் முடிவானது.

மறுமணம் என்பதால் சாதாரணமாக நடந்தால் போதும் என்ற முடிவுக்கு இரு வீட்டாரும் வந்தனர்.

மிக நெருங்கிய சொந்தம் மட்டுமே இருந்தால் போதும் என்றும் முடிவு செய்ய பட்டது.

 

கீர்த்தனாவிற்கு நிரஞ்சனாவை பார்க்கும்போது இந்த பெண்ணை திருமணம் செய்ய கேட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணமும் வந்து போனது. குழந்தையுடன் இருப்பவளை மருமகளாக ஏற்க ஏனோ மனம் ஒப்பவில்லை அவருக்கு.

 

நிரஞ்சனாவிர்கோ தன் காதலன்தான் பெரிய உத்யோகத்தில் இருக்கிறான் என்று எண்ணி இருந்தவளுக்கு அம்ருதாவின் வருங்கால கணவன் ஹர்ஷ மித்ரன் ரெஸ்டாரெண்ட் ஓனர் என்றதும் மேலும் அடிவயிறு வரை எரிய துவங்கியது.

‘அவசர பட்டு நம்மளே சண்டை போட்டு இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய விட்டுட்டோமோ? நம்மள விட கம்மியா இருந்தாலும் பரவால்ல ஆனா இப்படி ஒரு ஹேண்ட்சம், ரிச் லுக், வசதியான மாப்பிள்ளை அம்ருதாவுக்கா?’ என்று எண்ணியவளுக்கு அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!